16/12/2020

அன்னைத்தமிழ் வளர்த்த அற்புதப் புலவர்கள் - 2

-பொன்.பாண்டியன்


பகுதி- 1


5 நாரதனார்


தேவரிஷி நாரதர், திரிலோக சஞ்சாரி. இவர் தலைச்சங்கத்தில் கலந்துகொண்டு  'பஞ்ச பாரதீயம்' என்னும் இசைத்தமிழ் நூல் ஒன்று இயற்றிச் சமர்ப்பித்துள்ளார்.


"நாரதன் வீணைநயம் தெரிபாடல்" என்று சிலப்பதிகாரத்தில் கடலாடுகாதை 18-ஆம் வரி, நாரதரின் யாழ்நூல் குறித்துப் பேசுகிறது.

இந்நூலின் அடிப்படையிலேயே பிற இசைத்தமிழ் நூல்கள் பிறந்தன. இதுகுறித்து 'அபிதானசிந்தாமணி' யிலும் தமிழறிஞர் நா. கதிரைவேற்பிள்ளை அவர்களின் 'தமிழ்மொழி அகராதியிலும்' குறிப்பிடப்பட்டுள்ளது.


***

6 நிதியின் கிழவன்


நிதியின் கிழவன் எனப் படுபவர் 'குபேரன்' ஆவார். சிவபெருமான், முருகவேள், அகத்தியர், முரஞ்சியூர் முடிநாகராயர் ஆகியோருடன் தென்மதுரை தலைச்சங்கத்தில் அமர்ந்து தமிழ் வளர்த்தவர். இவர் சிவபிரானின்தோழர். இலங்கையை ஆட்சி செய்தவர்.

சங்கநிதி, பதுமநிதி எனப் பெருஞ்செல்வத்துக்கு அதிபதி ஆவார். பாரதத்தின் வடக்குப்பகுதியில் வாழ்ந்திருந்த இவரது தம்பி இராவணன் தமது பராக்கிரமத்தால் குபேரனை இலங்கையிலிருந்து விரட்டினான். அவருடைய புஷ்பக விமானத்தையும் பறித்துக்கொண்டான்; இலங்கையை ஆக்கிரமித்துக் கொண்டான்.

சிவபிரான் குபேரனைச் சமாதானப்படுத்தி அவரை வடதிசைக்கு அதிபதி ஆக்கினார். இவருடன் தலைச்சங்கத்தில் 4,449 புலவர்கள் இடம்பெற்றிருந்தனர்​. "பல பரிபாடல்கள், முதுநாரை, முதுகுருகு போன்ற இசைநூல்கள், களரியாவிரை போன்ற நூல்களும் அவர்களால் இயற்றப்பட்டன" என இறையனார் களவியல் உரை குறிப்பிடுகிறது.



***
7 அகத்தியர்


தமிழ் நெடுங்கணக்கின் முதலெழுத்து அகரம் முதலாவதாகவும் இறுதி எழுத்து னகரமெய் இறுதியாகவும் தமது பெயரில் பெற்றவர் நமது தமிழ் முனிவர் அகத்தியர் ஆவார்.

அகத்தியர் பாரத தேசஅளவில் அகஸ்தியர் என அழைக்கப்படுகிறார். இவர்தம் தந்தையார் மித்ராவருணர் என்னும் தவசீலர் ஆவார். இவர் தமது தவஆற்றல் மூலம் குடமாகிய கும்பத்திலிருந்து இவரைப் பெற்றெடுத்தார். அதனால் இவருக்கு கும்பமுனி- குடமுனி-கும்பஸம்பவர் என்றெல்லாம் பெயர்கள் உண்டு. 

இவர் பாண்டிய மன்னனுக்குப் பட்டாபிஷேகம் செய்த நிகழ்வை வேள்விக்குடிச் செப்பேடு தனது வடமொழிப்பகுதியில்  “கும்பஸம்பவ கரப்ராப்த அபிஷேகக்ரிய” என்று தெரிவிக்கிறது.

ஓசை- ஒலி எனக் கலந்திருந்த மொழியை ஒலிகளைத் தனியாகவும் ஓசைஒலிகளாகத் தனியாகவும் வகுத்து, முறையே தமிழ் வடமொழி என இறையனார் உலகிற்கு வழங்கினார். "ஓசை, ஒலி எலாம் ஆனாய் நீயே" என அப்பரடிகள் இறையனாரைப் பாடுவது யாவரும் அறிந்ததே.

“வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கிணையாத்
தொடர்புடைய தென்மொழியை உலகமெலாம் தொழுதேத்தும் 
குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப்பாகர்” 

-என்று ஒரு பழம்பாடல், சிவனார் அகத்தியருக்குத் தமிழ் பயிற்றுவித்ததைத் தெரிவிக்கிறது.

அகத்தியர் சிறந்த அந்தணர் ஆவார். ரிக்வேதம்1- 115 -116-இல்அகத்தியர் "கேரலப்புரோஹித....." என்று குறிப்பிடப்படுகிறார் என வடமொழி இலக்கிய வரலாறு கூறுகிறது.

புரோ என்றால் முன்புறம்; ஹித என்றால் வழிநடத்துபவர் எனப்பொருள்படும். கேரல எனப்படுவது சேரநாடு உள்ளிட்ட தமிழ்நாடு ஆகும்.

வியாஸ பாரதம்- ஸ்வயம்வர பர்வம், பார்த்திப ப்ரக்யாபநம் பகுதியில்,

“பாண்ட்யா சேரல சோலேந்த்ரா
தஸ்த்தூரேதக்ஷிணாயோயதுவ
....................அகஸ்த்யமா: ஸுதாநை”

-என்று குறிப்பிடப்படுகிறது.

இதன் கருத்துயாதெனில், “சேர, சோழ, பாண்டியர் மூவரும் அகத்தியரின் வேள்வியில் ஆகமனீயம், காருகபத்தியம், தக்ஷிணாக்கினீயம் என்ற முத்தீபோல ஜொலிக்கின்றனர் என்பதாகும்.

இதுபோலவே ஔவையார் புறநானூற்றுப்பாடல்-367-ல்,

“ஒன்றுபுரிந்துஅடங்கிய இரு பிறப்பாளர்
முத்தீப்புரைய காண்தக இருந்த
கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்திர்”

-என்று அவர்களைக் குறித்துப் பாடுகின்றார்.

அகத்தியர் தேவசபையில் அநாகரிகமாக நடந்துகொண்ட ஊர்வசியையும் இந்திரன் மகன் சயந்தனையும் சபித்தார். அதன்படி சயந்தன் விந்தியமலைக் காட்டில் மூங்கிலாகப் பிறந்து தலைக்கோல் ஆனான். ஊர்வசி காஞ்சிபுரத்தில் கணிகையர்குல மகளாக மாதவி என்னும் பெயரில் தோன்றினாள். இவளே சிலப்பதிகாரத்தில் வரும் மாதவியின் குலமுதல்வி ஆவாள்.

விண்ணுலகில் பாயும் ஆகாயகங்கை மண்ணுலகில் வடபாரதத்தில் பாகீரதியாகப் பாய்ந்தோடுகிறாள். அவளே அகத்தியரின் அருளால் தமிழகத்தில் தவழ்ந்தோடுகிறாள் என்பதை மணிமேகலை தனது பதிகப் பாட்டில்,

“அமரமுனிவன் அகத்தியன் தராது
கரகங் கவிழ்த்த காவிரிப்பாவை”

-எனச் சுட்டுகிறது.

-அக்குறுமுனியின் அருளால் தமிழிலக்கியங்கள் பல படைத்த ஒரு புண்ணியநதி நமக்குக் கிடைத்தது. தொடர்ந்து நடந்த கடல்ஊழிகளால் தென்புலத்திருந்த மக்கள் புலம்பெயர்ந்து பற்பல குழுவினராக வடதிசை நோக்கி வரலாயினர்.

“மலிதிரையூர்ந்து தன்மண்கடல் வவ்வலின் 
மெலிவின்றி மேற்சென்றுமே வார்நாடிடம்பட
புலியொடுவில் நீக்கிப்புகழ் பொறித்தகிளர் கெண்டை
வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்”

-என்றுகலித்தொகையில்​ முல்லைக்கலியின் 4 ஆவது பாடல் தெற்கிலிருந்து வடக்காகப் புலம்பெயர்ந்ததைக் குறிப்பிடுகிறது.

வடபாரதத்தில் பூபாரம்தாங்க இயலாமல் போயிற்று. எனவே நிலைமையைச் சமன்செய்ய சிவபிரான் அகத்திய முனிவரைத் தென்பாரதத்திற்கு அனுப்பி வைத்தார். அகத்தியர் தென்னகம் வரும்வழியில் விந்தியனை வென்று, தென்பாண்டி நாட்டில் மலயமாகிய பொதிகைமலையில் நிலைபெற்றார்.

பொதுவாக ரிஷி, முனிவர்கள், பிராமணர்கள் ஓரிடத்தில் நிலையாகத் தங்குவதில்லை. பாரத தேசம் முழுவதும் பயணித்துக் கொண்டே இருப்பர். எனவே அவர்களுக்கு 'ப்ருஹத் சரணர்' (பெரும் பயணியர்) என்று பெயர் ஏற்பட்டது. ஆனால் பாரத தேசத்தைத் தாண்ட மாட்டார்கள்.

இவ்விஷயத்தில் அகத்தியர் விதிவிலக்கானவர். மலயத்தில் நிலையாகத் தங்கிவிட்டார். மலயம் என்றால் இரண்டு மலைகளைத்தான் குறிக்கும். ஒன்று பொதிகை மற்றொன்று ஹிம மலயம் அதாவது ஹிமாலயம்; ஹிமம் என்றால் பனி எனப் பொருள்படும். அகத்தியர் வாழும் தமிழகத்தை "அகஸ்திய திக்" என்று ஸமஸ்க்ருதப் பனுவல்கள் குறிக்கின்றன.

***

8 முரஞ்சியூர் முடிநாகராயர்




இன்றைக்குப் பன்னீராயிரம் ஆண்டுகட்கு முன்பு கடல்கொண்ட தென்மதுரையில் திரிபுரம் எரித்த விரிசடைக்கடவுளும், குன்றம் எறிந்த குமரவேளும், அந்தணச்செம்மல் அகத்திய முனிவரும், நிதியின் கிழவனான குபேரனும் தலைச்சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்தனர்.

சிவபிரான் அதன் தலைவர் ஆவார். அவர்களுடன் முரஞ்சியூர் முடிநாகராயர் என்னும் புலவரும் பங்கேற்று இருந்ததாக, இறையனார் களவியல் உரைகூறுகிறது. அவர்நாகர்மரபினராகஇருக்கலாம். தலையில் நாகத்தின் உருவை அணிந்து இருந்திருக்கலாம். இவர் இயற்றியதாக எந்த ஒரு நூலும் குறிப்பிடப்படவில்லை.

தலைச்சங்கம் இராமாயண காலத்துக்கும் முந்தையது. பின் ஒரு கடல்கோள் நிகழ்ந்ததில் தென்மதுரை கடலில் மூழ்கிவிட்டது. பின்பு அதற்கு வடதிசையில் இருந்த ‘கபாடபுரம்’ என்னும் நகரில் இரண்டாம் தமிழ்ச்சங்கம் அமைக்கப்பட்டது. அகத்தியர் அதன் தலைவரானார்.

அதன் ஆரம்பம் இராமாயண காலமாகவும் இறுதி மஹாபாரத காலமாகவும் அமைந்துள்ளது.

கபாடபுரம் பற்றி இராமாயணத்திலும் மஹாபாரதத்திலும் குறிப்புகள் உள்ளன. இந்த கடைச்சங்க காலத்தின் இறுதியிலும், ஒரு முரஞ்சியூர் முடிநாகராயர் என்ற புலவர் இருந்திருக்கிறார். அவர் தலைச்சங்கப் புலவரின் வழித்தோன்றலாக இருக்கலாம். இவர் ஒரேயொரு செய்யுள் இயற்றியுள்ளார். அது புறநானூற்றின் இரண்டாம் பாடல் ஆகும்.

இவர் பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதனைக் குறித்துப் பாடியுள்ளார். இப்பாடல் தேசிய சிந்தனையை அழகாகப் பொதிந்துவைத்துள்ள பாடல்ஆகும். அதன் விளக்கத்தை இங்கு காணலாம்...

பூமி வானத்தில் உள்ளது; காற்று வெளியில் மிதக்கிறது; காற்று தீயைப் பற்றுகிறது; நீர் தீயைத் தணிக்கிறது. இந்த ஐந்து பூதங்களின் தன்மை போல வலிமை, திறன், கொடை ஆகியவற்றை உடையவன் நீ.

கதிரவன் கிழக்குக்கடலில் எழுந்து மேற்குக்கடலில் மறைகிறது. அவ்வளவான பரப்பளவில் உன்ஆட்சி நிலைபெற்றுள்ளது.

பஞ்சபூதங்கள் அனைவருக்கும் பொதுவானவை அதுபோல நீயும் பாண்டவர்படைக்கும் கௌரவர்படைக்கும் பொதுவாக இருந்து அனைவருக்கும் உணவு வழங்கி உதவி செய்தாய். பால் புளித்தாலும், கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும், வேதநெறிகள் மாறினாலும் நிலைமாறாதவன் நீ.

மகரிஷிகள் வளர்க்கின்ற வேள்வித்தீயின் முச்சுடர்களின் ஒளியில் கண்கவரும் பொதிகைமலையும் இமயமலையும் போல நீ வாழ்வாயாக!


-என்று சேர மன்னன் பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதனை வாழ்த்துவதோடு, தேசிய ஒருமைப்பாட்டையும் பாரத தேசத்தையும் முன்நிறுத்துகிறார் முரஞ்சியூர் முடிநாகராயர்.

(தொடர்கிறது)






No comments:

Post a Comment