16/08/2020

தமிழன் இதயம் (கவிதை)

-நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை



தமிழன் என்றோர் இனமுண்டு;
தனியே அவற்கொரு குணமுண்டு;
அமிழ்தம் அவனுடைய வழியாகும்;
அன்பே அவனுடை மொழியாகும்.

அறிவின் கடலைக் கடைந்தவனாம்;
அமிர்தத் திருக்குறள் அடைந்தவனாம்;
பொறியின் ஆசையைக் குறைத்திடவே
பொருந்திய நூல்கள் உரைத்திடுவான்.

கவிதைச் சுவைகளை வடித்தெடுத்தான்;
கம்பன் பாட்டெனப் பெயர்கொடுத்தான்;
புவியில் இன்பம் பகர்ந்தவெலாம்
புண்ணிய முறையில் நுகர்ந்திடுவான்.

‘பத்தினி சாபம் பலித்துவிடும்’
பாரில் இம்மொழி ஒலித்திடவே
சித்திரச் சிலப்பதி காரமதைச்
செய்தவன் துறவுடை ஓரரசன்.

சிந்தா மணி,மணி மேகலையும்,
பத்துப் பாட்டெனும் சேகரமும்,
நந்தா விளக்கெனத் தமிழ்நாட்டின்
நாகரி கத்தினை மிகக் காட்டும்.

தேவா ரம்திரு வாசகமும்
திகழும் சேக்கி ழார்புகழும்
ஓவாப் பெருங்கதை ஆழ்வார்கள்
உரைகளும் தமிழன் வாழ்வாகும்.

தாயும் ஆனவர் சொன்னவெலாம்
தமிழன் ஞானம் இன்னதெனும்;
பாயும் துறவுகொள் பட்டினத்தார்
பாடலும் தமிழன் பெட்பெனலாம்.

நேரெதும் நில்லா ஊக்கமுடன்
நிமிர்ந்திட அச்சம் போக்கிவிடும்
பாரதி என்னும் பெரும்புலவன்
பாடலும் தமிழன் தரும்புகழாம்.

கலைகள் யாவினும் வல்லவனாம்
கற்றவர் எவர்க்கும் நல்லவனாம்
நிலைகொள் பற்பல அடையாளம்
நின்றன இன்னும் உடையோனாம்.

சிற்பம் சித்திரம் சங்கீதம்
சிறந்தவர் அவனினும் எங்கேசொல்?
வெற்பின் கருங்கல் களிமண்போல்
வேலைத் திறத்தால் ஒளிபண்ணும்.

உழவும் தொழிலும் இசைபாடும்;
உண்மை; சரித்திரம் அசைபோடும்;
இழவில் அழுதிடும் பெண்கூட
இசையோ டழுவது கண்கூடு.

யாழும் குழலும் நாதசுரம்
யாவுள் தண்ணுமை பேதமெலாம்
வாழும் கருவிகள் வகைபலவும்
வகுத்தது தமிழெனல் மிகையலவாம்.

‘கொல்லா விரதம் பொய்யாமை
கூடிய அறமே மெய்யாகும் ;
எல்லாப் புகழும் இவைநல்கும்’
என்றே தமிழன் புவிசொல்லும்.

மானம் பெரிதென உயிர்விடுவான்;
மற்றவர்க் காகத் துயர்படுவான்;
தானம் வாங்கிடக் கூசிடுவான்;
‘தருவது மேல்’ எனப் பேசிடுவான்.

ஜாதிகள் தொழிலால் உண்டெனினும்
சமரசம் நாட்டினில் கண்டவனாம்;
நீதியும் உரிமையும் அன்னியர்க்கும்
நிறைகுறை யாமல் செய்தவனாம்.

உத்தமன் காந்தியின் அருமைகளை
உணர்ந்தவன் தமிழன்; பெருமையுடன்
சத்தியப் போரில் கடனறிந்தான்;
சாந்தம் தவறா துடனிருந்தான்!

***

தேசியக் கவிஞர்- ஓர் அறிமுகம்

நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை
நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை 

நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை (1888 அக்டோபர் 19 – 1972 ஆகஸ்ட் 24) தமிழறிஞரும்  கவிஞரும் ஆவார்.

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுதுபோன்ற தேசபக்திப் பாடல்களைப் பாடிய இவர் தேசியத்தையும், காந்தியத்தையும் போற்றியவர். ஆரம்பத்தில் பால கங்காதர திலகர் போன்றவர்களின் தீவிர தேசிய உணர்வால்  ஈர்க்கப்பட்ட இவர், மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்ட பின்னர், அறப் போராட்டத்தால் மட்டுமே விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர். இவரது கவிதைகள் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி இருந்ததால், இவர் காந்தியக் கவிஞர் என்றும் தேசியக் கவிஞர் என்றும் வழங்கப்படுகிறார்.

இராமலிங்கம், (பழைய சேலம் மாவட்டம்) தற்போதைய நாமக்கல் மாவட்டம், மோகனூரில் வெங்கடராமன்- அம்மணியம்மாள் தம்பதிக்கு பிறந்தார். அவரது தந்தை மோகனூரில் காவல் துறையில் பணிபுரிந்து வந்தார். இவரது தாய் ஒரு பக்தியுள்ள பெண்மணி ஆவார். இவர் தங்கள் பெற்றோருக்கு எட்டாவது குழந்தை ஆவார்.

நாமக்கல், கோயம்புத்தூரில் பள்ளிக் கல்வி பயின்றார். 1909 இல் பி.. படிப்பை திருச்சியில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரியில் பயின்றார். இவர் ஆரம்பகாலத்தில் நாமக்கல் தாசில்தார் அலுவலகத்தில் எழுத்தராகவும் பின்னர் தொடக்கப் பள்ளி ஆசிரியராகவும் பணியாற்றினார்.

திருச்சிராப்பள்ளி மாவட்ட காங்கிரசின் செயலாளராகவும், கரூர் வட்டார  காங்கிரஸ் தலைவராகவும், நாமக்கல் வட்டார காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றியவர். தேசபக்தி மிக்க தமது பேச்சினால் பல இளைஞர்களை தேசத் தொண்டர்களாக மாற்றியவர். அரசின் தடையுத்தரவையும் மீறி, கூட்டங்களில் சொற்பொழிவாற்றியவர். 1930-இல் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றவர்.

தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடாஎன்கிற வீரநடைப் பாடலுக்கு வித்திட்ட அவர் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் நினைவில்லமாக அமைக்கப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலகப் பத்து மாடிக் கட்டிடத்திற்கும் இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

நாமக்கல்லாரின் படைப்புகள்:

இசை நாவல்கள் - 3

கட்டுரைகள் - 12

தன் வரலாறு - 3

புதினங்கள் - 5

இலக்கிய திறனாய்வுகள் - 7

கவிதை தொகுப்புகள் - 10

சிறுகாப்பியங்கள் - 5

மொழிபெயர்ப்புகள் – 4

எழுதிய நூல்களில் சில:

மலைக்கள்ளன் (நாவல்)

காணாமல் போன கல்யாணப் பெண் (நாவல்)

பிரார்த்தனை (கவிதை)

நாமக்கல் கவிஞர் பாடல்கள்

திருக்குறளும் பரிமேலழகரும்

திருவள்ளுவர் திடுக்கிடுவார்

திருக்குறள் புது உரை

கம்பனும் வால்மீகியும்

கம்பன் கவிதை இன்பக் குவியல்

என்கதை (சுயசரிதம்)

அவனும் அவளும் (கவிதை)

சங்கொலி (கவிதை)

மாமன் மகள் (நாடகம்)

அரவணை சுந்தரம் (நாடகம்)

கவிஞரின் நாட்டுப் பற்றைப் போற்றும் வகையில் மாநில அரசு அவரை அரசவைக் கவிஞராகவும், பின்னர் தமிழக சட்ட மேலவை உறுப்பினராகவும் நியமித்துச் சிறப்பித்தது. மத்திய அரசு அவருக்கு பத்ம பூஷன் விருதளித்துப் போற்றியது. சாஹித்ய அகாதெமியில் தமிழ்ப் பிரதிநிதியாகவும் பொறுப்பு வகித்திருக்கிறார். இவரது ‘மலைக்கள்ளன்’ நாவல்  இதே பெயரிலேயே திரைப்படமாக வந்தது.

தமிழ்நாடு அரசு இவர் வாழ்ந்த நாமக்கல்லிலுள்ள இல்லத்தை நாமக்கல்கவிஞர் இராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லம்’ ஆக்கியுள்ளது. இதில் நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. மேலும் சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலக பத்து மாடிக் கட்டிடத்துக்கு இவரது பெயர் சூட்டியுள்ளது. தட்டாரத் தெரு என்று அழைக்கப்பட்டு வந்த இவர் வாழ்ந்த தெரு கவிஞர் இராமலிங்கம் தெரு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதுசேலம் அருங்காட்சியகத்தில் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அவர்களின் உடைமைகள் காட்சிக்கு வைக்கப்பெற்றுள்ளன.


.

No comments:

Post a Comment