15/05/2021

வைகாசி- 2021 மின்னிதழ்

 உள்ளடக்கம்


1. அமுதமொழி -17

-சேக்கிழார்

2. அத்வைதம்

-காஞ்சி பரமாச்சாரியார்

3. திருவாசிரியம் (கவிதை)

-நம்மாழ்வார்

4. வைகாசித் திங்கள்: ஆன்றோரும் சான்றோரும் (2021)

-ஆசிரியர் குழு

5. அன்னைத்தமிழ் வளர்த்த அற்புதப் புலவர்கள்- 10

-பொன்.பாண்டியன்

6. அன்னைத்தமிழ் வளர்த்த அற்புதப் புலவர்கள் -11

-பொன்.பாண்டியன்

7. கூத்தன் (கவிதை)

-கவிஞர் நந்தலாலா

8. அன்புக்குரியவர்களுக்கு... (கரோனா விழிப்புணர்வுத் தகவல்கள்)

-ஆசிரியர் குழு

9. வழிகாட்டிக்கு அஞ்சலி!

-ஆசிரியர் குழு

10. கவியோகி சுத்தானந்த பாரதியார்

-தஞ்சை வெ.கோபாலன்

11. மூன்று கடல் பயணங்கள்

-திருநின்றவூர் இரவிக்குமார்

12. மூன்று மகத்தான ஆசார்ய பரம்பரையினரின் புனித சங்கமம்

-ஜடாயு

13. To Swami Omkaranandaji - A Tribute

-Swami Suddhananda

14. ஸ்ரீ குருஜி (கவிதை)

-சேக்கிழான்

15. பண்டிட் தீனதயாள் உபாத்யாய - பொன்மொழிகள்

-பேரா.பூ.தர்மலிங்கம்

16. திருநீற்றுப் பதிகம் (கவிதை)

-திருஞானசம்பந்த நாயனார்

17. முருக பக்தி பரப்பிய துறவி

-சீனிவாசன் ஜானகிராமன்
அமுத மொழி- 17உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்!

-சேக்கிழார்

அத்வைதம்

-காஞ்சி பரமாச்சாரியார்‘அத்வைதம்’ என்பதே ஆதி சங்கர பகவத்பாதர்கள் நிலைநாட்டிய சித்தாந்தம் என்று எல்லோருக்கும் தெரியும். ‘அத்வைதம்’ என்றால் என்ன? 

‘த்வி’ என்றால் இரண்டு. two என்பது அதிலிருந்து வந்ததுதான். ‘த்வி’யிலுள்ள த் (d) என்பதே ‘டூ’ வில் ‘ட்’ (t) ஆகிவிட்டது. உச்சரிப்பில் ‘டூ’ என்று சொன்னாலும், ஸ்பெல்லிங்கில் t-க்கு அப்புறம் w வருகிறது w- வுக்கு ‘வ’ சப்தமே உண்டு. ‘த்வி’யில் உள்ள ‘வ’ தான் இங்கே w – ஆகிவிட்டது. ‘த்வி’தான் two – இரண்டு. ‘த்வைதம்’ என்றால் இரண்டு உண்டு என்று நினைப்பது. ‘அ-த்வைதம்’ என்றால் ‘இரண்டு இல்லை’ என்று அர்த்தம்.

எந்த இரண்டு இல்லை? இப்போது ஸ்வாமி என்று ஒருத்தர் இருக்கிறார். அவருக்கு இரண்டாவதாக ஜீவர்கள் என்ற நாம் இருக்கிறோம் என்று நினைக்கிறோம் அல்லவா! இப்படி இரண்டு இல்லவே இல்லை. ஸ்வாமி (பிரம்மம்) என்கிற ஒரே சத்திய வஸ்துக்குப் புறம்பாக எதுவுமே இல்லை. அது தவிர, இரண்டாவது வஸ்து எதுவுமே இல்லை. அந்த ஒன்றேதான் மாயா சக்தியினால் இத்தனை ஜீவர்கள் மாதிரியும் தோன்றுகிறது. இதெல்லாம் வெறும் வேஷம்தான். 

ஒரு நடிகன் பல வேஷம் போட்டாலும் உள்ளேயிருக்கிற ஆள் ஒருத்தன்தான் என்பதுபோல் இத்தனை ஜீவராசிகள் இருந்தாலும் அவற்றுக்கு உள்ளேயிருக்கிற ஆள் ஸ்வாமி ஒருத்தன்தான். ஜீவாத்மா பரமாத்மா என்று விவகார தசையில் பிரித்துச் சொன்னாலும் வாஸ்தவத்தில் உள்ளது ஒரே ஆத்மாதான். ‘நாம் மாயையைத் தாண்டி இந்த ஞானத்தை அநுபவத்தில் அடைந்துவிட்டால், அப்புறம் எத்தனையோ குறைபாடுகள் உள்ள ஜீவர்களாக இருக்க மாட்டோம்; ஒரு குறையுமில்லாத, நிறைந்த நிறைவான சத்தியமாகவே ஆகிவிடுவோம்’ என்பதுதான் ஆசாரியாள் உபதேசித்த அத்வைத தத்துவம்.

திருவாசிரியம் (கவிதை)

-நம்மாழ்வார் (ஆசிரியப்பா)

2578 

செக்கர்மா முகிலுடுத்து மிக்க செஞ்சுடர்ப்
பரிதிசூடி, அஞ்சுடர் மதியம் பூண்டு
பலசுடர் புனைந்த பவளச் செவ்வாய்
திகழ்பசுஞ் சோதி மரகதக் குன்றம்
கடலோன் கைமிசைக் கண்வளர் வதுபோல்
பீதக ஆடை முடிபூண் முதலா
மேதகு பல்கலன் அணிந்து, சோதி
வாயவும் கண்ணவும் சிவப்ப, மீதிட்டுப்
பச்சை மேனி மிகப்ப கைப்ப
நச்சுவினைக் கவர்தலை அரவினமளி யேறி
எறிகடல்நடுவுள் அறிதுயில் அமர்ந்து
சிவனிய னிந்திரன் இவர்முத லனைத்தோர்
தெய்வக் குழாங்கள் கைதொழக் கிடந்த
தாமரை யுந்தித் தனிப்பெரு நாயக
மூவுல களந்த சேவடி யோயே. 1

வைகாசித் திங்கள்: ஆன்றோரும் சான்றோரும் (2021)

-ஆசிரியர் குழு

அன்னமாச்சார்யார்


வைகாசி மாதம் அவதரித்த, உலகு நீங்கிய ஆன்றோர், சான்றோரின் நினைவிற்குரிய நாட்கள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.


ஸ்ரீ பிலவ வருடம், வைகாசித் திங்கள் 
(15.05.2021 - 14.06.2021)

அன்னைத்தமிழ் வளர்த்த அற்புதப் புலவர்கள் - 10

 -பொன்.பாண்டியன் 


மாங்குடியில் நிறுவப்பட்டுள்ள
மாங்குடி மருதனார் நினைவுத் தூண்

காண்க: முந்தைய பகுதிகள்


19. மாங்குடி மருதனார்

 பொதுவாக, புலவர்கள் மன்னரைப் புகழ்ந்து பாடுவது வழக்கம். மன்னர்களாலும் சில புலவர்கள் பாடப்பட்டும் புகழப்பட்டும் உள்ளனர். அப்படிப்பட்ட புலவர்களுள் மாங்குடி மருதனார் குறிப்பிடத்தக்கவர்.


தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் புறநானூறு 72-2இல், தன்னை மலிவாகக் கருதி ஏளனம் செய்து வெற்றுரை பேசும் வேந்தரை வென்று அழிப்பேன் இல்லையேல்,

“ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடிமருதன் தலைவன் ஆக
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைகஎன் நிலவரை”

என்று தனது அரசவைப் புலவர்களின் தலைவரான மாங்குடி மருதனாரைக் குறிப்பிட்டு சூளுரைத்ததிலிருந்து மாங்குடி மருதனாரின் மகத்துவம் நமக்குத் தெரிய வருகிறது.

மாங்குடி மருதனார் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளசங்கரன் கோவில் அருகில் மாங்குடியில் தோன்றினார். இவர் வேளாண் மரபினர் ஆவார். கல்வி, கேள்விகளில் சிறந்திருந்தார். இவரை மாங்குடிக் கிழார், மதுரைக்காஞ்சிப் புலவன், காஞ்சிப்புலவன் என்றெல்லாம் அழைப்பர். இவர் அகத்திணையிலும் புறத்திணையிலும் பாடல்கள் பாடியுள்ளார்.

இவர்தம் பாடல்கள் தாய்த்தமிழ் மீதும், ஸநாதன ஹிந்து தத்துவங்கள் மீதும் பெருமிதம், நம்பிக்கை, மதிப்பு ஆகியவற்றை உண்டாக்குகின்றன.

அன்னைத்தமிழ் வளர்த்த அற்புதப் புலவர்கள் - 11

-பொன்.பாண்டியன் 


காண்க: முந்தைய பகுதிகள்20. காக்கைப்பாடினியார் நச்செள்ளையார்


நமது பாரத தேசத்து அன்னையர் வீரம், தியாகம் இரண்டிலும் இணையற்றவர்கள் என்பதற்குப் பின்வரும் புறநானூறு 278-ஆம் பாடல் சான்றாகும்.

“நரம்புஎழுந்து உலறிய நிரம்பா மென்தோள்
முளரி மருங்கின் முதியோள் சிறுவன்
படைஅழிந்து மாறினன் என்றுபலர் கூற
மண்டமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்டஎன்
முலைஅறுத் திடுவென், யான்எனச் சினைஇக்
கொண்ட வாளொடு படுபிணம் பெயராச்
செங்களம் துழவுவோள் சிதைந்துவே றாகிய
படுமகன் கிடக்கை காணூஉ
ஈன்ற ஞான்றினும் பெரிதுஉவந் தனளே”

ஒன்பது அடிகளில் ஒரு பெரும் வீரகாவியத்தையே படைத்துவிட்டார் காக்கைப்பாடினியார் நச்செள்ளையார் என்னும் கவிமாது.

இப்பாடலுக்குப் பொருள் உணர உணர வீரம் பெருகும் என்பதில் ஐயமில்லை. புறநானூற்றில் ஒரே பாடல் என்றாலும் அஃது மாதரின் வீர, மறத் திண்மையைப் போற்றும் ஓர் உச்சம் தொட்ட பாடல்.

கூத்தன் (கவிதை)

-கவிஞர் நந்தலாலா


உடுக்கில் பிறந்தது ஓசை.
ஓசையிலிருந்து
பொறுக்கி எடுத்த
உயிரொலியும்
மெய்யொலியும்
உயிர் மெய்யொலியும்
முறைப்படிப் புணர
பிறந்தது மொழி.

பின் மொழியின் ஜாலத்தில் பிறந்தன
கவிதை, கதை, காவியம்.

அன்புக்குரியவர்களுக்கு…

-ஆசிரியர் குழு

தனித்திரு! விழித்திரு!


கரோனா விழிப்புணர்வுத் தகவல்கள் 

கரோனா தொற்றின் (COVID-19) இரண்டாம் அலையில் நாம் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இது பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை. அவர்களுக்காக…

1. நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் கரோனா நம்மை தாக்காது என்று பலர் எண்ணுகிறார்களே உண்மையா?


இல்லவே இல்லை. நீங்கள் எப்பேர்ப்பட்ட அசகாய சூரர் என்றாலும் தகுந்த சூழ்நிலைக்கு நீங்கள் உட்படவில்லை என்று அர்த்தமே தவிர நீங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர் என்று அர்த்தம் இல்லை. (Suitable Condition for Virus Exposure) அதாவது கரோனா வைரஸ் உங்கள் உடலுக்குள் செல்லும் தருணம் அமைந்தால் உங்களை அது தாக்கத்தான் செய்யும். அந்த தகுந்த சூழ்நிலை, அதாவது கரோனா பாதிக்கப்பட்ட நபர் தும்மிய இடத்துக்கு நீங்கள் சென்று இருந்தாலோ அவரின் எச்சின் திவலைகள் காற்றில் இருக்கும் போது அதை சுவாசித்திருந்தாலோ பாதிப்பு ஏற்படவே செய்யும்).

வழிகாட்டிக்கு அஞ்சலி!

-ஆசிரியர் குழு

தஞ்சை வெ.கோபாலன்
(1936 ஜூலை 15-  2021 மே 06)


பேச்சிலும் எழுத்திலும் தேசியமே சிந்தனையாகக் கொண்டு இலங்கியவர்; இளம் எழுத்தாளர்களுக்கு வழிகாட்டியாக விளங்கியவர்; தஞ்சையின் அடையாளமாக இருந்த எழுத்தாளர்; தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநில துணைத் தலைவர் திரு. தஞ்சை வெ.கோபாலன் ஐயா மண்ணுலகை விட்டு மறைந்தார்.

மகாகவி பாரதியின் மகா பக்தர்; பாரதி புகழ் பரப்புவதற்காகவே,  ‘திருவையாறு பாரதி இயக்கம்’, ‘பாரதி இலக்கியப் பயிலகம்’ என்ற அமைப்புகளை நடத்தியவர். தஞ்சையில் இருந்தபடியே, தனியொருவராக பாரதி இலக்கியப் பயிலகம் மூலமாக அஞ்சல்வழியில் பாரதி பாடங்களை 20 ஆண்டுகளுக்கு மேலாகக் கற்பித்து வந்தவர் கோபாலன் ஐயா.  

(தற்போதைய) நாகை மாவட்டம், தில்லையாடியில் 1936 ஆம் ஆண்டு பிறந்த இவர், தஞ்சாவூர்,  மருத்துவக் கல்லூரி சாலை, எல்.ஐ.சி. காலனி, 5ஆவது குறுக்குத் தெருவில் வசித்து வந்தார்.  

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு, தனது மக்களுடன் செல்லாமல் தஞ்சையிலேயே தனியே தங்கி அந்த மண்ணில் தேசிய, தெய்வீகப் பணி வளர்த்தவர். அகில இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக சம்மேளனத்தின் தஞ்சைக் கோட்டப் பொறுப்பாளராகவும் செயல்பட்டுள்ளார்.

கவியோகி சுத்தானந்த பாரதியார்

-தஞ்சை வெ.கோபாலன்


கவியோகி சுத்தானந்த பாரதி
(1897 மே 11 - 1990 மார்ச் 7)


கவியோகி சுத்தானந்த பாரதியார் குறித்து நினைவுப் படுத்திக் கொள்ள வேண்டுமென்றால் அந்தக் காலத்தில் டி.கே.பட்டம்மாள் பாடிய “எப்படிப் பாடினரோ அடியார் - அப்படிப் பாட நான் ஆசை கொண்டேன் சிவனே!’’ என்ற பாடலை நினைத்துப் பார்க்கலாம்.

அல்லது எம்.எம்.தண்டபாணி தேசிகர் பாடி பிரபலமான இந்தப் பாடலை நினைவுப் படுத்திக் கொள்ளலாம். அது:- "இல்லையென்பான் யாரடா? என் அப்பனைத் தில்லையிலே பாரடா! கல்லும் கசிந்துருகக் கனிந்த முறுவலுடன் காட்சியளிக்கும் அந்தக் கருணைச் சுடரொளியை, இல்லையென்பான் யாரடா?" இந்தப் பாடலும் நமக்கு கவியோகியை நினைவு படுத்தும்.

மற்றொரு பாடல் "அருள் புரிவாய் கருணைக் கடலே, ஆருயிர் அனைத்தும் அமர வாழ்வு பெறவே, அருள்புரிவாய் கருணைக் கடலே" என்பது. அடுத்தது "ஜகஜ்ஜனனீ சுகவாணி கல்யாணி", "ஜங்கார ஸ்ருதி செய்குவாய்", “சகல கலா வாணியே, சரணம் தாயே!" என்றொரு பாடல்.

இது அந்தக் காலத்தில் பல பள்ளிக்கூடங்களில் காலையில் பள்ளி தொடங்கும் போது பாடப்படும் கடவுள் வாழ்த்துப் பாடலாகத் திகழ்ந்திருக்கிறது. இப்படி அந்தக் காலத்தில் கவிதை உலகில் கொடிகட்டிப் பறந்தவர் கவியோகி சுத்தானந்த பாரதியார்.

இவற்றிலெல்லாம் மிகச் சிறந்தது என்று அனைவராலும் பாராட்டப்பட்டது  'பாரத மகாசக்தி காவியம்' எனும் படைப்புதான். இவரது படைப்புக்கள் பலப்பல. இவர் ஒரு சிறந்த இலக்கிய வாதி. ஆன்மீக உலகத்திலும் கொடிகட்டிப் பறந்தவர்.

மகாத்மா காந்தி விரும்பிய "உலகமே ஒரு குடும்பம்" என்பது யோகியின் பார்வை. இவருக்கு ஜாதி, மதம், இனம், நாடு என்ற எல்லைகள் கிடையாது. சுத்த ஆன்ம யோக நெறிமுறைகளே இவரது வாழ்க்கை. எட்டு வயதிலேயே சில மகான்களின் கருணையால் குறிப்பாக இவரது உறவினரும் மாபெரும் யோகியுமான பூர்ணானந்தர் என்பவரால் பேரின்பப் பாதையை அறிந்து கொண்டவர்.

இவர் சந்தித்தப் பெரியோர்கள் அனேகர். அவர்கள் மகாத்மா காந்தி, பாரதியார், வ.வே.சு.ஐயர், அரவிந்தர், திலகர், வ.உ.சி., கல்கி இப்படி பற்பல பெயர்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆன்மீகத் தூண்களான ஷீரடி பாபா, ரமண மகரிஷி, சேஷாத்ரி சுவாமிகள், அரவிந்த அன்னை, ஞானானந்தகிரி சுவாமிகள் ஆகியோரின் தொடர்பும் இவருக்கு இருந்தது.

சுத்தானந்த பாரதியார் ஒரு பன்மொழிப் புலவர். தமிழில் கவிதை, இசைப்பாடல்கள், சிறுகதை, கட்டுரை, நாவல் முதலியன இவரது புகழ் மிக்க படைப்புகள். மொழிபெயர்ப்புப் பணியிலும் இவர் தனி முத்திரை பதித்தவர். "பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்" எனும் மகாகவி பாரதியின் வாக்கைச் செயல்படுத்திக் காட்டியவர்.

பல அயல்நாட்டு அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றை இவர் எழுதி வெளியிட்டிருக்கிறார். இத்தாலிய மகாகவி தாந்தே வரலாறு, அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மன் வரலாறு, பிரெஞ்சு இலக்கிய மேதை விக்டர் ஹியூகோவின் அற்புதமான நாவலான "லே மிசரபிளே', "லாஃபிங் மேன்" போன்றவற்றைத் தமிழில் மொழி பெயர்த்து எழுதியிருக்கிறார்.

விக்டர் ஹியூகோவின் 'லே மிசரபிளே'தான் பட்சிராஜா பிலிம்ஸ் நாகையா நடித்த ‘ஏழை படும் பாடு’ எனும் படமாக வெளிவந்தது. 'லாஃபிங் மேன்" கதையை’இளிச்சவாயன்’ என்று மொழிபெயர்த்து எழுதினார்.

மூன்று கடல் பயணங்கள்

- திருநின்றவூர் இரவிக்குமார் 


வீர சாவர்க்கர்
(28 மே 1883 - 26 பிப். 1966)(வீர சாவர்க்கர் ஜெயந்தி - மே 28 - சிறப்புக் கட்டுரை)


முதல் பயணம் - வலிமையே வாழ்வு

சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவுக்குச் செல்ல கப்பலில் பயணித்தார். அதே கப்பலில் பயணித்த ஒரு பாதிரி அவரது தலைப்பாகை, உடையை கேலியும் கிண்டலும் செய்தார். ஆரம்பத்தில் அலட்சியம் செய்த விவேகானந்தர் போகப்போக, அவர் இந்து மதத்தை தாக்குவதாகவும் அதற்கு பிற பயணிகள் ஆதரவு தருவதையும் கண்டு கொண்டார்.

ஒரு நாள் மேல் தளத்தில் இருந்த பாதிரியிடம் சென்று சட்டையைப் பிடித்து உலுக்கித் தூக்கினார். “இனி என்னுடைய மதத்தையோ சன்யாச ஆடையையோ கேலி செய்தால், கப்பலிலிருந்து கடலில் தூக்கி எறிந்து விடுவேன்” என்று கடுமையான குரலில் எச்சரித்தார். பாதிரி பயந்து விலகினார். கூடியிருந்த கும்பலும் கரைந்தது. இது விவேகானந்தர் இலக்கியங்களில் உள்ள ஒரு பதிவு.

மூன்று மகத்தான ஆசாரிய பரம்பரையினரின் புனித சங்கமம்

-ஜடாயுபூஜ்யஸ்ரீ சுவாமி ஓம்காரானந்தருக்கு அஞ்சலி!

நமது காலகட்டத்தில் தமிழ்நாட்டின் புகழ்மிக்க வேதாந்த ஆசாரியராகவும் ஆன்மிகத் தலைவராகவும் திகழ்ந்த பூஜ்யஸ்ரீ சுவாமி ஓங்காரானந்தர் மே 10, 2021 மாலை, மதுரையில் சித்தியடைந்தார். கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு மருவத்துமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சுவாமிகளின் மறைவு தமிழ் இந்துக்களுக்கு ஈடுசெய்ய இயலாத மிகப் பெரிய இழப்பாகும்.

1956ஆம் ஆண்டு கோவை மாவட்டத்தில் பேரூரில் பரம்பரையான வைதிக அந்தணர் குடும்பத்தில் வைத்தியநாத கனபாடிகள் – அலமேலு அம்மாள் தம்பதியர்க்கு மகனாகப் பிறந்தவர் சுவாமிகள். அவரது பூர்வாசிரமப் பெயர் கோஷ்டேசுவர சர்மா. வேத நிஷ்டையும் வறுமையும் கலந்த குடும்பச் சூழல்.

இளம்வயதிலேயே வேதபாடசாலை வழி பாரம்பரியமாக வேத, சாஸ்திரங்களை நன்கு கற்றுத் தேர்ந்தார். சுவாமி சித்பவானந்தரின் நூல்களைத் தொடர்ந்து வாசித்து வந்ததால், ஆன்மிக நாட்டமும், ஸ்ரீராமகிருஷ்ணர் - விவேகானந்தர் குறித்த பரிச்சயமும் அவருக்கு ஏற்பட்டது.

இல்லறத்தில் புக விரும்பாமல் துறவு வாழ்க்கையையே அவர் மனம் நாடியதால், குடும்பத்தினர் திருமணப் பேச்சை எடுப்பது குறித்த செய்தி தெரியவந்தபோதே, வெளியூரில் இருக்கும்போது சூரியனை சாட்சியாக வைத்து சன்னியாசம் ஏற்றுக்கொண்டதாகவும், பின்பு திருப்பராய்த்துறைக்கு வந்து சுவாமி சித்பவானந்தரை குருவாக அடைந்ததாகவும் 2020ம் ஆண்டு ஓர் உரையில் அவரே குறிப்பிட்டிருக்கிறார். “ஓங்காரானந்த” என்ற தீட்சா நாமத்தை அளித்தவர் சுவாமி சித்பவானந்தர் தான். 

பின்னர், பூஜ்ய சுவாமி தயானந்த சரஸ்வதியுடன் தொடர்பு ஏற்பட்டு அவரது சீடரான சுவாமி பரமார்த்தானந்தரை சாஸ்திர குருவாகக் கொண்டு வேதாந்த சாஸ்திரங்களை ஆழமாகவும், விரிவாகவும் முறையாகக் கற்றார். அதன்பின், சதாசிவ பிரம்மேந்திரர் வழிவந்த அத்வைத அவதூத மரபைச் சார்ந்த புதுக்கோட்டை புவனேஸ்வரி பீடத்தின் பீடாதிபதியாகவும் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

இங்ஙனம் மூன்று மகத்தான ஆசாரிய பரம்பரையினரின் புனித சங்கமமாக விளங்கியவர் சுவாமி ஓங்காரானந்தர்.

To Swami Omkaranandaji - A Tribute

-Swami Suddhananda


Tomorrow, the 11th May morning Sun will not see the Son of the Sages rising from sleep to do the Pratah Smaranam, the Dhyanam, the soulful chanting of the ancient Veda mantras. Nor shall it see the Glorious Son of the Sages doing the elaborate worship of the Dakshinamurthy, the Adi Guru of the Creation and then move around the antebasis , the loving, adoring Ashram residents and crowds, to offer them not only the Prasad of the God, but also sharing the wisdom of the Ancients with a smile that is innocent and a laughter that is in the words of Kalidasa, धूर्जटेः अट्टहास्यः, the laughter of Shiva!

That Son of the Sages IS very near and dear Swami Omkaranandaji, who Was and Shall Be Eternally Present in the land He walked, the river in which He bathed, the air He breathed, the space that held Him, the trees He planted, the shelters He built and most importantly the lives of the people He touched and shaped - ALWAYS and all with a perpetual smile!

ஸ்ரீ குருஜி (கவிதை)

-சேக்கிழான்


குருஜி மாதவ சதாசிவ கோல்வல்கர்


டாக்டர்ஜி நிறுவிய
அஸ்திவாரத்தில்
பிரமாண்டமான
சங்க மாளிகையை எழுப்பிய
விஸ்வகர்மா.

மோட்சம் தேடிய
துறவிகள் மத்தியில்
தேசம் நாடிய
தேவ விரதர்.

பண்டிட் தீனதயாள் உபாத்யாய - பொன்மொழிகள்

 -பேரா. பூ.தர்மலிங்கம் 

பண்டிட் தீனதயாள் உபாத்யாய


Dharma is the repository of the nation’s soul. If Dharma is destroyed, the Nation perishes. Any one who abandons Dharma, betrays the nation…… Since Dharma is supreme, our ideal of the State has been Dharma Rajya…… What constitutes the good of the people, Dharma alone can decide. Therefore a democratic government Jana Rajya must also be rooted in Dharma i.e. a Dharma Rajya…

***

If one has to understand the soul of Bharat, one must not look at this country from the political or economic angle but from the cultural point of view.

***

திருநீற்றுப் பதிகம் (கவிதை)

-திருஞானசம்பந்த நாயனார்மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே… (1)

வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு வுண்மையி லுள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே… (2)

முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திருஆல வாயான் திருநீறே… (3)

முருக பக்தி பரப்பிய துறவி

-சீனிவாசன் ஜானகிராமன்பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்

பாம்பன் சுவாமிகள் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த உன்னத துறவியாவார். முருகன் பால் அன்பு பூண்டு கவிகள் பல பாடி கனவிலும, நனவிலும் ஆறுமுகப் பெருமானை தரிசித்தவர். சுவாமிகளின் தமிழ் ஞானம் அளவிடற்கரியது. சுவாமிகள் உலகம் உய்ய பல அருள் நூல்களை அருளிச் செய்துள்ளார். சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு இங்கு சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது.

பிறப்பு

ராமேஸ்வரம் அருகிலுள்ள பாம்பன் என்னும் ஊரில் பாம்பன் சுவாமிகள் பிறந்தார். அடிகளாரது தந்தையார் சாத்தப்ப பிள்ளை, தாயார் செங்கமல அம்மையார். அடிகளாரது பிள்ளைத் திருநாமம் அப்பாவு. சுவாமிகள் பிறந்த ஆண்டு உறுதியாக அறியப்படவில்லை. 1850 முதல் 1852 ஆண்டுக்குள் இருக்கலாம் என நம்பப்படுகிறது.