15/05/2021

மூன்று கடல் பயணங்கள்

- திருநின்றவூர் இரவிக்குமார் 


வீர சாவர்க்கர்
(28 மே 1883 - 26 பிப். 1966)



(வீர சாவர்க்கர் ஜெயந்தி - மே 28 - சிறப்புக் கட்டுரை)


முதல் பயணம் - வலிமையே வாழ்வு

சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவுக்குச் செல்ல கப்பலில் பயணித்தார். அதே கப்பலில் பயணித்த ஒரு பாதிரி அவரது தலைப்பாகை, உடையை கேலியும் கிண்டலும் செய்தார். ஆரம்பத்தில் அலட்சியம் செய்த விவேகானந்தர் போகப்போக, அவர் இந்து மதத்தை தாக்குவதாகவும் அதற்கு பிற பயணிகள் ஆதரவு தருவதையும் கண்டு கொண்டார்.

ஒரு நாள் மேல் தளத்தில் இருந்த பாதிரியிடம் சென்று சட்டையைப் பிடித்து உலுக்கித் தூக்கினார். “இனி என்னுடைய மதத்தையோ சன்யாச ஆடையையோ கேலி செய்தால், கப்பலிலிருந்து கடலில் தூக்கி எறிந்து விடுவேன்” என்று கடுமையான குரலில் எச்சரித்தார். பாதிரி பயந்து விலகினார். கூடியிருந்த கும்பலும் கரைந்தது. இது விவேகானந்தர் இலக்கியங்களில் உள்ள ஒரு பதிவு.


இரண்டாம் பயணம் - ஒற்றுமையே வலிமை

1906 ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி, பெர்சியா என்ற கப்பலில் ஹர்நாம் சிங் என்ற இளைஞன் இங்கிலாந்துக்கு படிக்கப் பயணித்தான். ஆரம்பத்தில் கடல் பயணத்தில் அனைவருக்கும் ஏற்படும் குமட்டல் நோயால் சில நாட்கள் அறையிலேயே முடங்கிப் போனான். அவனுடன் அதே அறையில் தங்கியிருந்த இன்னொருவர் அவனுக்கு உதவிகள் செய்து அவனது உடல்நலம் தேற்றினார்.

அதே கப்பலில் இன்னும் இரண்டு இளம் பஞ்சாபிகள் பயணித்தனர். அதில் ஒருவர் மிக நவ நாகரிகமானவர். ‘மிஸ்டர் நவநாகரிகம்’ என்று நண்பர்கள் அவரைக் கூப்பிடலானார்கள். இன்னொருவருக்கும் ஒரு புனைப்பெயர் இருந்தது.

ஹர்நாம் சிங் உடல்நலம் தேறிய பிறகு கப்பல் மேல்தளத்தில் உலாவப் போனபோது, கப்பலில் இருந்த ஆங்கிலேயர்களும் அவர்களது மனைவிமார்களும் குழந்தைகளும் அவனது சீக்கிய தலைப்பாகையை கேலி செய்து சிரித்தார்கள். சில குழந்தைகள் பொல்லாதவை. ஹர்நாம் சிங்கிடமே வந்து சட்டையை பிடித்து இழுப்பது, தலைப்பாகையை தட்டிவிட எகிறுவது என்று வம்பு செய்தன. அவர்களின் அன்னையரும் குழந்தைகளைக் கண்டிக்காமல் அவர்களை உற்சாகமூட்டும் விதமாக சிரித்துக் கொண்டிருந்தனர். சிங்குக்கு வேதனை; அறையில் அடைத்து கொண்டான்.

அறையில் அவனுடன் உடன் தங்கிய சகபயணி அவனைத் தேற்ற, அப்போது அறைக்கு வந்தார் ‘மிஸ்டர் நவநாகரிகம்’. மற்றவரும் உடன் வந்தார்.  “பசங்கள் கிண்டல் செய்வது நியாயம்தானே? நாம் வெளிநாட்டுக்குப் போகிறோம். அங்குள்ள பழக்கவழக்கங்களையும் நடை உடை பாவனைகளையும் மேற்கொள்வது சரிதானே? மாறாக ஆண்கள் தலைமுடியை நீளமாக வளர்த்துக் கொள்வது, அதனை கொண்டை போட்டுக் கொண்டு தலைப்பாகையால் மறைப்பது எப்படி சரியாகும்? நாமும் முடியை வெட்டிக் கொண்டு தொப்பி போட்டுக் கொள்வது தான் சரி” என்றார் மிஸ்டர் நவநாகரிகம்.

ஹர்நாமின் நண்பர் சொன்னார்: 

“நம் பழக்கவழக்கங்கள் காலத்துக்கு ஒவ்வாதவையாகவும் சில நேரங்களில் தீங்கானவையாகவும் இருக்கின்றன. அவற்றை விட்டுவிட வேண்டும் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை.  ஆனால் ஐரோப்பியர்கள் கேலி செய்கிறார்கள், சிரிக்கிறார்கள் என்பதற்காக நம்முடைய பாரம்பரியத்தை நாம் கைவிடுவது கோழைத்தனம் இல்லையா? நீங்கள் கவனித்துப் பாருங்கள், அவர்கள் தொப்பியோ குப்பைக் கூடையை தலையில் கவிழ்த்து வைத்தது போல இருக்கிறது. தலைப்பாகையோ வண்ணமயமாக வசீகரமாக இருக்கிறது. அது மட்டுமன்றி தலைப்பாகை என்பது சீக்கியர் வாழ்க்கையில் முக்கியமான ஒரு விஷயம். மற்றவர்கள் சிரிக்கிறார்கள் என்பதற்காக நாம் அதைக் கைவிடுவது என்பது என்னைப் பொறுத்த வரையில் ஒரு தேசிய அவமானமாக கருதுகிறேன்...

 “ஆரம்பத்தில் ஆங்கிலேயர்கள் நம் நாட்டிற்கு வந்தபோது நம்மோடு தரையில் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது, சாப்பிடும் உணவு என பல விஷயங்களில் சிரமங்களுக்கும் கேலிக்கும் உள்ளாகி இருப்பார்கள். அவை உள்நோக்கமற்ற சிரிப்புகள்தான். ஆனால் இப்போது அவர்கள் நம்மைப் பார்த்து சிரிப்பது சாதாரணமான கிண்டலும் கேலியும் அல்ல. தங்கள் ஆணவத்தையும் அவர்கள் நம்மை வெறுப்பதையும் வெளிப்படுத்தும் சிரிப்பு அது. தாங்கள் ஆட்சியாளர்கள். எனவே தங்களது பாரம்பரியமும் பழக்க வழக்கங்களும் நம்மைவிட உயர்வானவை என்பதைக் குத்திக்காட்டும் சிரிப்பு அது....

 “ஆங்கிலேயர்களைப் பின்பற்றி அவர்களைப்போல கிறிஸ்தவ மதத்துக்கு மாறிச் சென்று அவர்களது பழக்க வழக்கங்களைப் பின்பற்றும் இந்தியர்களை அவர்கள் கருப்பர்கள் என்றுதானே இழிவு படுத்துகிறார்கள்? அவர்களைப் போலவே வெள்ளை நிறமும் மதமும் கலாச்சாரமும் கொண்ட அயர்லாந்துக் காரர்களையும் அவர்கள் தங்களுக்கு சமமாகக் கருதாமல் அடக்கித் தானே வைத்திருக்கிறார்கள்?  எனவே அவர்களைப் போலி செய்வது நம் நாட்டுக்கும் நம் அரசியல் விடுதலைக்கும் எந்த வகையிலும் உதவாது.

 “மாறாக, ஜப்பானியர்கள் 1904 /05 ரஷ்யக் கடற்படையை அடித்து நொறுக்கினார்கள். உடனே அந்த குள்ளமான, சப்பை மூக்கு கொண்டவர்களுடன் ஆங்கிலேயர்கள் நட்புக் கரம் நீட்டினர். எனவே வலிமையே வாழ்வு. ஒற்றுமையே வலிமை வழி என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

வேண்டுமானால் ஒன்று செய்யலாம், நாம் அனைவருமே தலைப்பாகை அணிந்துகொண்டு மேல் தளத்திற்குச் செல்வோம். நாம் ஒற்றுமையாக இருப்பதைப் பார்த்தால் ஐரோப்பியர்கள் தங்கள் கேலி, கிண்டல்களை நிறுத்திக் கொள்வார்கள். அல்லது குறைத்துக் கொள்வார்கள்” 

-என்றார் நம் கதாநாயகர்.

மிஸ்டர் நவ நாகரிகம்,  “ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான். நாளை நாம் அனைவரும் தலைப்பாகையுடன் ஹர்நாமுடன் மேல் தளத்துக்கு உலாவப் போகலாம்”  என்று சொல்லி துள்ளிக் குதித்தார்.

அடுத்த நாள் அனைவரும் திட்டமிட்டபடியே ஒரே மாதிரியான (சீக்கிய) தலைப்பாகையுடன், ஒற்றுமையாக கப்பலின் மேல் தளத்திற்குச் சென்றனர். எதிர்பார்த்தபடியே வெள்ளையர்கள் இவர்களைப் பார்த்து பம்மினர். மிஸ்டர் நவநாகரிகமும் அவரது நண்பர்களும் மகிழ்ந்தனர் என்பதை சொல்லவும் வேண்டுமா?

நம் கதாநாயகர் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு,  “நாம் இப்பொழுது மட்டுமல்ல, எப்போதும் இதுபோல ஒன்றுபட்டு சிந்திக்கவும், சேர்ந்து செயல்படவும் வேண்டும். அதற்காக ஒரு அமைப்பைத் தொடங்க வேண்டும்” என்றார்.

நண்பர்களும், சரிதான் அதற்கு என்ன பெயர் வைக்கலாம், என்று யோசிக்கலானார்கள். சிறிது நேரம் கழித்து நம் கதாநாயகர்  ‘அபிநவ பாரத்’ என்ற பெயர் எப்படி இருக்கிறது என்றார். எல்லோரும் நன்றாக இருக்கிறது என்று ஏற்றுக் கொண்டார்கள்.

அமைப்பில் சேர ஒரு உறுதிமொழி தயாரானது. தேச விடுதலைக்காகவும் தேசத்தின் உயர்வுக்காகவும் தியாகங்கள் செய்யவும் கஷ்டங்களை ஏற்கவும் தயார் என்று அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

அதன்பிறகு, நம் கதாநாயகர்,  “நீங்கள் உறுதிமொழியையும் ரகசியக் காப்பும் ஏற்றுக்கொண்டபடியால் உங்களிடம் ஒரு விஷயத்தைச் சொல்கிறேன்.  ‘அபிநவ பாரத்’ என்ற அமைப்பு ஏற்கனவே பாரத நாட்டில் தொடங்கப்பட்டு விட்டது. அதில் நூற்றுக்கணக்கானோர் உறுப்பினர்களாக உள்ளனர்” என்றார்.

‘அபிநவ பாரத்’ என்ற பெயரைப் படித்தவுடன் நீங்கள் நம் கதாநாயகரின் பெயரை யூகித்திருப்பீர்கள். அது சரிதான். அவர் தான் சுதந்திர வீரர் என்று போற்றப்படும் விநாயக தாமோதர சாவர்க்கர். 

பின்னாளில் அவரை இங்கிலாந்தில் கைது செய்த ஆங்கிலேய அரசு அவரை பாரதம் கொண்டுவரும் வழியில், அவர் கப்பலில் இருந்து தப்பி கடலில் குதித்து நீந்தி பிரெஞ்சு மண்ணில் ஏறியதும், அங்கு பிரெஞ்சு காவலர்களுக்கு லஞ்சம் கொடுத்து ஆங்கிலேய அரசு அவரை மீண்டும் பிடித்துக்கொண்டு பாரதம் வந்ததையும், அதனால் சர்வதேச அளவில் ஒரு பரபரப்பான விவாதமும் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கும் நடந்ததையும் வாசகர்கள் அறிந்திருப்பார்கள்.

மூன்றாவது பயணம்- விஸ்வம் வந்தே ஆர்யம்


வேத ரிஷிகளின் பரம்பரையில் வந்த விவேகானந்தரின் வீரமொழியை நடைமுறையில் பிரதிபலித்த சுதந்திர வீரரின் செயல்பாட்டைக் கண்டோம்.  ‘அபிநவ பாரத்’ புரட்சிகரப் பாதையில் பயணித்த விடுதலைப் போராளிகளின் அமைப்பாக இருந்தது. வெகுஜனங்களிடையே - கட்சி அரசியலில் சிக்காமல் அதற்கு அப்பாற்பட்டு - தொடர்ந்து இந்த வலிமை மந்திரத்தை, ஒற்றுமை மந்திரத்தை சமுதாயத்தில் எதிரொலிக்க என்ன வழி ?

ஒவ்வொரு ஊரிலும் நாலு நல்லவர்கள் கூடி, அந்த ஊரைப் பற்றியும் அதன் பிரச்னைகள் பற்றியும் அதைத்  தீர்ப்பதற்கு என்ன வழி என்று சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்றார் கவிஞர் பட்டுக்கோட்டையார். ஆனால் அதை முன்கை எடுத்துச் செய்வது யார்?

சாவர்க்கரின் சமகாலத்தவரான டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் அதற்கு ஒரு வழி கண்டுபிடித்தார். அதுதான் ஆர்.எஸ்.எஸ். தினசரி ஒரு மணி நேரம் சந்திப்பு (ஷாகா) என்பது அதன் அடிப்படை. ஆர்.எஸ்.எஸ். இன்று, வளர்ந்து கிளை அமைப்புகலுடன் விழுது விட்டு உறுதியுடன் நிற்கும் வட விருட்சம் (ஆல மரம்).

நாடு விடுதலை அடைந்து நம்மவர்களே ஆங்கிலேயரின் வழியைப் பின்பற்றி அதுபோலவே ஆட்சி செய்து கொண்டிருந்த காலம். வியாபார விஷயமாக நடுத்தர வயதுள்ள ஒருவர் ஆப்பிரிக்காவுக்கு கடல்வழியாகப் போனார். ஒரு நாள் கப்பலின் மேல்தளத்தில் உலாவும்போது ஒரு இளைஞனைப் பார்த்தார். ஏதோ மனதில் தோன்றி அவரிடம் பேச்சுக் கொடுத்தார். கொஞ்ச நேரத்திலேயே இருவருக்கும் தெரிந்துவிட்டது தாங்கள் ஸ்வயம்சேவகர்கள் (ஆர்.எஸ்.எஸ்.ஸின் தன்னார்வத் தொண்டர்கள்) என்று. மகிழ்ச்சி அடைந்தனர். கப்பலின் மேல் தளத்தில் பிரணாம் ஸ்திதியில் சேர்ந்தே சங்கப் பிரார்த்தனை பாடினார்கள்.

கப்பலில் இருந்து இறங்கிச் செல்லும் முன், தாங்கள் செல்லும் இடத்தில் சங்கத்தின் கிளையை ஆரம்பிக்கவும் முடிவு செய்தனர். இப்படித்தான் பாரதத்துக்கு வெளியே, தான்சானியாவில் முதல் ஆர்.எஸ்.எஸ். கிளை ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் பல நாடுகளில் துவங்கப்பட்டது. இந்து ஸ்வயம்சேவக சங்கம் (ஹெச்.எஸ்.எஸ்.) என்று பெயரிடப்பட்டது. பல நாடுகளிலும் இந்து உணர்வையும் இந்து வாழ்வியலையும் இன்றும் வளர்த்து வருகிறது.

பல ஆண்டு காலமாக ஹெச்.எஸ்.எஸ்.ஸின் பணியை பாரத அரசுகள் கண்டுகொள்ளவில்லை. மாறாக, சில நேரங்களில் அரசியல் சாயம் பூசி அவமதிக்கவும் செய்தனர். இப்போதுள்ள நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு வெளிநாடுகளில் வாழும் பாரதீயர்களின் சக்தியை நன்றாகத் தெரிந்துகொண்டு பயன்படுத்தியது. அதன் நேர்மறையான, நல்ல விளைவுகளை, நாம் பாகிஸ்தானுடனான மோதல், சீனாவுடனான எல்லை விவகாரம், கொரானா தொற்று போன்ற பிரச்னைகளில் காண முடிகிறது.

 ‘உலகிற்கு நல்வழி காட்டக் கூடிய தகுதி உள்ள ஒரே நாடு பாரதம். அதுவே உலகின் குரு’ என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். அந்த நிலையை அடைவதற்கான ஒளிக்கீற்றுகள் இப்பொழுது லேசாகத் தெரிய ஆரம்பித்துள்ளன.


No comments:

Post a Comment