17/10/2020

ஐப்பசி 2020 மின்னிதழ்



உள்ளடக்கம்


1. அமுதமொழி- 10

-சகோதரி நிவேதிதை

2. ஐப்பசித் திங்கள்- ஆன்றோரும் சான்றோரும்

-ஆசிரியர் குழு

3. சிவஞானபோதம் (கவிதை)

-மெய்கண்டார்

4. சகோதரி நிவேதிதை வழிபட்ட பாரத அன்னை

-பேராசிரியர் சாது. வே.ரங்கராஜன்

5. வையத் தலைமை கொள் (பகுதி- 6, 7)

-சேக்கிழான்

6. சேத்திரத் திருவெண்பா (கவிதை)

-ஐயடிகள் காடவர்கோன் நாயனார்

7. தேசியக் கல்வி

-மகாகவி பாரதி

8. திருமந்திரம்- கடவுள் வாழ்த்து (கவிதை)

-திருமூலர்

9. பாரத அன்னைக்கு நிவேதனமான சகோதரி நிவேதிதை

-ராதிகா மணாளன்

10. பிராமண எதிர்ப்பு மூடத்தனம்!

-ஜெயகாந்தன்

11. மகத்தான மூவருக்கு கண்னீர் அஞ்சலி!

-ஆசிரியர் குழு

12. கல்வியே கடவுளாகும்! (கவிதை)

-பொன்.பாண்டியன்




அமுதமொழி- 10

 


இந்தியா, பிரிக்க முடியாத, பிளக்க முடியாத ஒரே நாடு என நான் நம்புகிறேன்.

தேசிய ஒருமைப்பாடு என்பது, நம் அனைவரது பொது எண்ணத்தாலும், அனைவர் மீதான அன்பாலும், நம் அனைவரது இல்லங்களாலும் கட்டமைக்கப்பட்டது.

இன்றைய இந்தியாவானது, தனது பழம்பெரும் சரித்திரத்தில் ஆழ வேர்விட்டு நிற்கிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன். பாரத அன்னை வருங்காலத்தில் ஒளிமயமாக பிரகாசிப்பாள் என்று, அதைவிட உறுதியாக நம்புகிறேன்.

-சகோதரி நிவேதிதை



ஐப்பசித் திங்கள்- ஆன்றோரும் சான்றோரும்

  -ஆசிரியர் குழு


சீரடி சாய்பாபா


ஐப்பசி மாதம் அவதரித்த, உலகு நீங்கிய
ஆன்றோர், சான்றோரின் நினைவிற்குரிய நாட்கள் 
இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன:

ஸ்ரீ சார்வரி வருடம், ஐப்பசித் திங்கள்  (17.10.2020 - 15.11.2020)

சிவஞானபோதம் (கவிதை)

-மெய்கண்டார்

சிறப்புப் பாயிரம்

நேரிசை ஆசிரியப்பா

மலர்தலை உலகின் மாயிருள் துமியப்
பலர்புகழ் ஞாயிறு படரின் அல்லதைக்
காண்டல் செல்லாக் கண்போல் ஈண்டிய
பெரும்பெயர்க் கடவுளிற் கண்டுகண் இருள்தீர்ந்து
அருந்துயர்க் குரம்பையின் ஆன்மா நாடி
மயர்வுஅற நந்தி முனிகணத்து அளித்த
உயர்சிவ ஞான போதம் உரைத்தோன்
பெண்ணைப் புனல்சூழ் வெண்ணெய்ச் சுவேதவனன்
பொய்கண்டு அகன்ற மெய்கண்ட தேவன்
பவநனி வன்பகை கடந்த
தவரடி புனைந்த தலைமை யோனே. 

சகோதரி நிவேதிதை வழிபட்ட பாரத அன்னை

-பேராசிரியர் சாது வே.ரங்கராஜன்


சகோதரி நிவேதிதை


பாரதியின் ஞானகுரு

தாய்த்திருநாட்டை மகாசக்தியின் வடிவமாக வழிபடும் பண்பாடு, ஆன்மீகத்துடன் இணைந்த தேசியம் மற்றும் தேசபக்தி மார்க்கத்தின் ஒப்பற்ற திருவுருவமாகத் திகழ்ந்த சகோதரி நிவேதிதை, அயர்லாந்து நாட்டில் ஒரு கிறிஸ்தவப் பாதிரியின் மகளாக- மிஸ் மார்கரட் நோபிளாக -பிறந்து, சுவாமி விவேகானந்தரின் வேதாந்த முழக்கங்களால் ஆட்கொள்ளப்பட்டு, பாரதம் வந்து, பாரத அன்னையின் சரணாரவிந்தங்களில் தன்னையே அர்ப்பணமாக்கிக் கொண்டு அவளது அருட்புதல்வியாக மாறியவராவர். “இதுதான், மற்றேதுமல்ல நமது தாயகம்! நாம் ஒவ்வொருவரும் பாரதியனே!” என்று பெருமையுடன் முழங்கினார். அவரை தமது ஞானகுருவாக ஏற்றுக் கொண்ட தேசபக்தக் கவிஞர் மகாகவி பாரதியார்,

அருளுக்கு நிவேதனமாய் அன்பினுக்கோர் 

கோயிலாய் அடியேன் நெஞ்சில்

இருளுக்கு ஞாயிறாய் எமதுயர் நாடாம் 

பயிர்க்கு மழையாய் இங்கு

பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப் 

பெரும் பொருளாய்ப் புன்மைத்தாதச்

சுருளுக்கு நெருப்பாக விளங்கிய தாய்  

                                              நிவேதிதையைத் தொழுது நிற்பேன்


-என்று பாடியுள்ளார்.

வையத்தலைமை கொள்! (பகுதி- 6, 7)

 -சேக்கிழான்


(புதிய பார்வையில் புதிய ஆத்திசூடி)

6. எடுத்த காரியம் யாவினும் வெற்றி!

 இளைஞர்கள் எவ்வாறு இருக்க வேண்டும்; அவர்கள் தங்கள் குணத்தை, வலிமையை, அறிவை, சமூக உணர்வை, நடையழகை, எண்ணத்தை எவ்வாறு வளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் சொன்ன பாரதி, அவற்றின் மூலமாக செய்ய வேண்டிய கடமைகளையும் பட்டியலிட்டுள்ளார்.

 தனி மனித வளர்ச்சியானது அவனது குடும்பத்துக்கும், ஊருக்கும், அவன் பிறந்த நாட்டுக்கும், அதனால் இந்த உலகிற்கும் நன்மை தருவதாக அமைய வேண்டும். இதுவே பாரத பாரம்பரியம். அந்தக் கண்ணோட்டத்துடன் தான் கீழ்க்கண்ட அறிவுரைகளை பாரதி வழங்குகிறார்:

 எத்தகைய துயரம் வந்தாலும் தருமன் போல, ஹரிசந்திரன் போல, தனது சுயதர்மத்தைக் கைவிடாமல், கேட்டினை எதிர்த்து நிற்க வேண்டும் (20); கொடுமை நிகழும்போது அதை வேடிக்கை பார்ப்பதோ, கண்டும் காணாமல் செல்வதோ தகாது. அதனை எதிர்த்து நிற்க வேண்டும் (22); மனிதரிடத்து அன்பு பரவுவதை எப்பாடுபட்டேனும் காத்தல் வேண்டும் (41); இந்தத் தேசம் உன்னுடையது. இதனைக் காப்பாற்ற வேண்டியது உனது கடன் (49); நாம் இருக்கும் நாட்டையோ, நமக்கு உரிமையான பூமியையோ இழக்க சம்மதித்தல் கூடாது (70); உழைப்பால் நாம் பெற்ற பயன்களை விட்டுத்தரக் கூடாது (24); சூரியன் போல ஓய்வின்றி எல்லா நாளும் கடமையாற்ற வேண்டும் (55); எந்த ஒரு செயற்களத்திலும் முதன்மையானவனாக நிற்க வேண்டும். போர்முனையில் நிற்கத் தயங்குதல் கூடாது (79);

 பதினாறு பேறுகள் என்று சொல்லப்படும் அனைத்து வகைச் செல்வங்களையும் முயற்சியால் வென்று இனிதே வாழ வேண்டும் (44); பெண்களைச் சிறப்பிக்க வேண்டும். சகதர்மினியான மனைவியின் மாண்பை உயர்த்த வேண்டும். பெண்ணடிமைத்தனம் கூடாது (50); ஊக்கமுடைய வெளிநாட்டவர்கள் சாதனை படைப்பது போல, மனம் தளராது, இடையறாது முயற்சிக்க வேண்டும் (86); இவ்வுலகம் இயங்கக் காரணமான இல்லற வாழ்வில் ஈடுபட்டு லௌதீகச் செயல்களில் முழுமை பெற வேண்டும் (102); நல்ல விளைவுக்குத் தேவையான நல்ல விதைகளைத் தேர்வு செய்து விதைக்க வேண்டும் (105);

சேத்திரத் திருவெண்பா (கவிதை)

-ஐயடிகள் காடவர்கோன்



ஓடுகின்ற நீர்மை ஒழிதலுமே உற்றாரும்
கோடுகின்றார் மூப்புங் குறுகிற்று -நாடுகின்ற
நல்லச்சிற் றம்பலமே நண்ணாமுன் நன்னெஞ்சே
தில்லைச்சிற் றம்பலமே சேர் 1


கடுவடுத்த நீர்கொடுவா காடிதா என்று
நடுநடுத்து நாவடங்கா முன்னம் - பொடியடுத்த
பாழ்கோட்டஞ் சேராமுன் பன்மாடத் தென்குடந்தைக்
கீழ்க்கோட்டஞ் செப்பிக் கிட 2


குந்தி நடந்து குனிந்தொருகை கோலூன்றி
நொந்திருமி ஏங்கி நுரைத்தேறி - வந்துந்தி
ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே
ஐயாறு வாயால் அழை 3

தேசியக் கல்வி

-மகாகவி பாரதி



ஓரு தேசம் என்பது கோடானுகோடி குடும்பங்களின் தொகுதி. குடும்பங்கள் இல்லாவிட்டால் தேசம் இல்லை. தேசம் இல்லாவிடில் தேசியக் கல்வியைப் பற்றி பேச இடமில்லை. தமிழ் நாட்டில் தேசியக் கல்வி என்பதாக ஒன்று தொடங்கி, அதில் தமிழ் பாஷையைப் பிரதானமாக நாட்டாமல், பெரும்பான்மைக் கல்வி இங்கிலீஷ் மூலமாகவும், தமிழ் ஒருவித உப பாஷையாகவும் ஏற்படுத்தினால் அது  ‘தேசியம்’ என்ற பதத்தின் பொருளுக்கு முழுதும் விரோதமாக முடியுமென்பதில் ஐயமில்லை. 

தேச பாஷையே பிரதானம் என்பது தேசியக் கல்வியின் ஆதாரக் கொள்கை. இதை மறந்துவிடக் கூடாது. தேச பாஷையை விருத்தி செய்யும் நோக்கத்துடன் தொடங்கப்படுகிற இந்த முயற்சிக்கு நாம் தமிழ் நாட்டிலிருந்து பரிபூர்ண ஸஹாயத்தை எதிர்பார்க்க வேண்டுமானால், இந்த முயற்சிக்குத் தமிழ் பாஷையே முதற் கருவியாக ஏற்படுத்தப்படும் என்பதைத் தம்பட்டம் அறைவிக்க வேண்டும். 

இங்ஙனம் தமிழ் பிரதானம் என்று நான் சொல்லுவதால், டாக்டர் நாயரைத் தலைமையாகக் கொண்ட திராவிடக் கக்ஷியாருக்கு நான் சார்பாகி, ஆர்யபாஷா விரோதம் பூண்டு பேசுகிறேன் என்று நினைத்துவிடலாகாது. தமிழ்நாட்டிலே தமிழ் சிறந்திடுக! பாரத தேசமுழுதிலும் எப்போதும் போலவே வடமொழி வாழ்க. இன்னும் நாம் பாரத தேசத்தின் ஐக்கியத்தைப் பரிபூர்ணமாகச் செய்யுமாறு நாடு முழுவதிலும் வடமொழிப் பயிற்சி மேன்மேலும் ஓங்குக! எனினும் தமிழ்நாட்டில் தமிழ்மொழி தலைமை பெற்றுத் தழைத்திடுக! 

திருமந்திரம்- கடவுள் வாழ்த்து (கவிதை)

-திருமூலர்




ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தானிருந் தான்உணர்ந் தெட்டே. 1


போற்றிசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனை
நாற்றிசைக் கும்நல்ல மாதுக்கும் நாதனை
மேற்றிசைக் குள்தென் திசைக்கொரு வேந்தனாம்
கூற்றுதைத் தானையான் கூறுகின் றேனே. 2


ஒக்கநின் றானை உலப்பிலி தேவர்கள்
நக்கனென்று ஏத்திடும் நாதனை நாள்தொறும்
பக்கநின் றார்அறி யாத பரமனைப்
புக்குநின்று உன்னியான் போற்றிசெய் வேனே. 3

பாரத அன்னைக்கு நிவேதனமான சகோதரி நிவேதிதை

-ராதிகா மணாளன்

சகோதரி நிவேதிதை
(1867 அக். 28- 1911 அக். 13)

 

  “எனக்கு ஒரு கடிகையிலே, மாதாவினது மெய்த்தொண்டின் த்ன்மையையும், துறவுப் பெருமையையும் சொல்லாமல் உணர்த்திய குருமணியும், பகவான் விவேகானந்தருடைய தர்மபுத்திரியும் ஆகிய ஸ்ரீமதி நிவேதிதாதேவிக்கு இந்நூலை ஸமர்ப்பிக்கின்றேன்

-இது, தனது ‘ஜன்மபூமி’ நூலில் (1908) மகாகவி பாரதி எழுதியுள்ள ஸமர்ப்பண முன்னுரை. தமிழகம் தந்த தேசியகவியான மகாகவி பாரதியால் குருமணி என்று போற்றப்பட்டவர் சகோதரி நிவேதிதை. பாரதிக்கு மட்டுமல்ல, விடுதலைப் போரில் ஈடுபட்ட பல முன்னணித் தலைவர்களுக்கு வழிகாட்டிய பெருந்தகை சகோதரி நிவேதிதை.

சுவாமி விவேகானந்தரின் தர்ம புத்திரியாக, அன்னை சாரதா தேவியின் செல்ல மகளாக, பாரதத்துக்கு அயர்லாந்து தேசம் வழங்கிய புரட்சிப் பெண்ணாக, மகரிஷி அரவிந்தருக்கு அக்னிக்கொழுந்தாக, தாகூருக்கு லோகமாதாவாக விளங்கியவர் சகோதரி நிவேதிதை.  

பிராமண எதிர்ப்பு மூடத்தனம்!

-ஜெயகாந்தன்

ஜெயகாந்தன்
(1934 ஏப்ரல் 24  - 2015 ஏப்ரல் 8)


1959-ல், திருச்சியில் தமிழ் எழுத்தாளர் சங்க மாநாடு, தேவர் ஹாலில் நடைபெற்றது. அதன் திறப்பாளரான ஈ.வெ.ராமசாமி மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அவர் தனது வழக்கமான தோரணையில் நமது இதிகாச புராணங்களையும், இந்து மதத்தையும், பிராமணர்களையும் கடுமையாகக் கண்டனம் செய்தும்,  ‘நான் பார்ப்பனனின் எதிரியா? நான் பார்ப்பனீயத்தையே எதிர்க்கிறேன்!’ என்றெல்லாம் அவர் தனது வாழ்நாளில் கைக்கொண்டிருக்கிற கொள்கைகளை விளக்கி முக்கால் மணி நேரம் பேசி முடித்து அமர்ந்தார்.

அடுத்துப் பேசிய இளம் எழுத்தாளர் திரு. ஜெயகாந்தன் பேசியதன் சுருக்கம் இது...

மாநாட்டின் திறப்பாளராய் வீற்றிருக்கிற நாத்திகப் பெரியார் திரு. ஈ.வே.ரா.அவர்களே,

நமது காட்டுமிராண்டித்தனத்துக்கோ, நாம் மூடர்களாய் இருப்பதற்கோ, நமது வறுமைக்கோ பிராமணர்கள் காரணமல்ல; பிராமண தர்மங்களும் காரணமல்ல; நமது மதங்களும் காரணமல்ல; நமது கோயில்களும் புராணங்களும் காரணமல்ல. தெளிவாகச் சொன்னால் இந்தப் பொதுவான வீழ்ச்சிக்குப் பிராமணர்களும் பலியாகியே இருக்கிறார்கள். அதன் காரணமாகப் பலரின் வசைக்கு அவர்களும் ஆளாகியிருக்கிறார்கள்.

பிராமண தர்மங்களிலிருந்து அவர்கள் வழுவிப் போனதனாலேயே நமக்குக் கேடு சூழ்ந்தது என்று பாரதியார் பிராமணர்களைச் சாடுகிறார். எனக்கும் ‘பிராமண எதிர்ப்பு’ உண்டு. அது பாரதியார் வழி வந்தது. ‘பார்ப்பனக் குலம் கெட்டழிவெய்திய பாழ்பட்ட கலியுகம்’ என்று தனது சுய சரிதையில் பாரதி குறிப்பிடுகிறான். அந்நியருக்கு ஏவல் புரிந்த ஆங்கிலக் கல்விமான்களாய், ஆங்கில அரசாங்கத்தின் அதிகாரிகளாய், அறிவற்ற விதேசி மோகிகளாய் வாழ்ந்த பிராமணர்களை மிகக் கடுமையாக எதிர்த்தான் பாரதி. 

ஆயினும் பிராமணீயத்தின் சார்பாகவே எதிர்த்தான். நான் பிராமணர்களை எதிர்க்க வேண்டுமெனில், அதற்குக் காரணம் அவர்கள் பிராமணர்களாக இருப்பதற்காக அல்ல; பிராமணத்துவத்தை அவர்கள் இழந்ததற்காகவே எதிர்ப்பேன்.

நமது சமூகம் புதுமையுற வேண்டும். அதற்குப் பொருள், ஆங்கில பாணியில் அதனை மாற்றுவது அல்ல. நமது பழமையை நாம் அறிந்து கொள்ளாமல், முன்னர் நாடு திகழ்ந்த பெருமையையும், மூண்டிருக்கும் இந்நாளின் இகழ்ச்சியையும் பிரித்து அறிந்தாலன்றிப் ‘பின்னர் நாடுறு பெற்றி’யை நாம் உணர முடியாது.

மகத்தான மூவருக்கு கண்ணீர் அஞ்சலி!

 -ஆசிரியர் குழு



கொடிய கொரோனா கிருமியால் உலகமே தத்தளிக்கும் வேளையில், நாம் நமது பிரியத்துக்குரிய மூவரை இழந்திருக்கிறோம். தேசிய சிந்தனைக் கழகத்தின் நலனில் அக்கறை கொண்ட மூன்று நல்லுள்ளங்கள் கடந்த இரு மாதங்களில் கொரோனாவால் நம்மிடமிருந்து விடைபெற்றுள்ளன. இம்மூவரும் தமிழகத்தில் தேசியத்தின் வளர்ச்சிக்காக இல்லற வாழ்வைத் துறந்து, தங்கள் வாழ்வையே அர்ப்பணித்தவர்கள். இவர்களது மறைவானது, தேசிய நலனில் அக்கறை கொண்ட அனைவருக்கும் பேரிழப்பே.

கல்வியே கடவுளாகும்! (கவிதை)

 -பொன்.பாண்டியன்



பல்லவி

கல்வியே அனைத்து மாகும்- என்றும்

        கற்பதே  கடமை யாகும்!


அனுபல்லவி

அறம், பொருள், இன்பம், வீடு

        அளித்திடும் ஆன்ற கல்வி!