17/10/2020

மகத்தான மூவருக்கு கண்ணீர் அஞ்சலி!

 -ஆசிரியர் குழு



கொடிய கொரோனா கிருமியால் உலகமே தத்தளிக்கும் வேளையில், நாம் நமது பிரியத்துக்குரிய மூவரை இழந்திருக்கிறோம். தேசிய சிந்தனைக் கழகத்தின் நலனில் அக்கறை கொண்ட மூன்று நல்லுள்ளங்கள் கடந்த இரு மாதங்களில் கொரோனாவால் நம்மிடமிருந்து விடைபெற்றுள்ளன. இம்மூவரும் தமிழகத்தில் தேசியத்தின் வளர்ச்சிக்காக இல்லற வாழ்வைத் துறந்து, தங்கள் வாழ்வையே அர்ப்பணித்தவர்கள். இவர்களது மறைவானது, தேசிய நலனில் அக்கறை கொண்ட அனைவருக்கும் பேரிழப்பே.

வீரத்துறவி ஸ்ரீ. இராம.கோபாலன்


தமிழத்தில் நாத்திகமும், திராவிட சிந்தனையும், பிரிவினை அரசியலும் கோலோச்சிய காலக்கட்டத்தில், ‘தமிழகம் என்றும் தேசியத்தின் பக்கம்’ என்று நிலைநாட்டப் போராடியவர் ஸ்ரீ. இராம.கோபாலன். அன்னாரால்தான், தமிழகத்தில் தேசிய சிந்தனையை வலுப்படுத்த ‘தேசிய சிந்தனைக் கழகம்’ 1970-களில் நிறுவப்பட்டது. திருச்சி, தேசிய கல்லூரிப் பேராசிரியர் ஸ்ரீ. ராதாகிருஷ்ணனுடன் இணைந்து தே.சி.க. அமைப்பை அவர் நிறுவினார்.

சீர்காழி அருகிலுள்ள சட்டநாதபுரத்தில் 1927 செப். 19-இல் திருவாளர்கள் ராமசமி- செல்லம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் ஸ்ரீ. ராம.கோபாலன். இளம் வயதிலேயே தேசப்பற்று காரணமாக அரசுப் பணியை உதறிவிட்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் முழுநேர ஊழியர் ஆனவர்; சங்கத்தில் துவக்க நிலையிலிருந்து மாநில அமைப்பாளராக உயர்ந்தவர்; 1981-இல் இவர் இந்து முன்னணி அமைப்பைத் துவக்கினார். தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா மக்கள் விழாவாக மாற்றம் பெற இவரே காரணம்.

சுமார் 75 ஆண்டுகள் இயக்க வளர்ச்சிக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்; இந்துக்களின் உரிமைகளை மீட்டெடுக்க பல போராட்டங்களை நடத்தியவர்; கடைசி மூச்சு வரை தேசநலனையே சிந்தனையாகக் கொண்டிருந்தவர்  ‘கோபால்ஜி’ என்று அனைவராலும் பாசத்துடன் அழைக்கப்பட்ட இராம.கோபாலன்.

தனது மகன் உயர்வடையும்போது தந்தை அடையும் அதே உவகையை தே.சி.க.வின் வளர்ச்சியால் கோபால்ஜி அடைவதைக் கண்டு மகிழ்ந்திருக்கிறோம். நமது அமைப்புக்கு முன்னோடியாகவும்,  வழிகாட்டியாகவும், திசைகாட்டியாகவும், தூண்டுகோலாகவும், ஆசி வழங்கும் பிதாமகராகவும் அவர் விளங்கினார். அவரது மறைவு (2020 செப். 30) நிச்சயமாக ஈடு செய்ய இயலாத இழப்பே. அன்னாரது ஆசி நமக்கு என்றும் இருக்கும்.

ஓம் சாந்தி!

நெல்லை ம.வீரபாகு


திருநெல்வேலியில் 1949 ஜன. 17-இல் மகாதேவன் என்பாரது மைந்தனாகப் பிறந்தவர் ஸ்ரீ. நெல்லை. ம.வீரபாகு. இவரும் இளம் வயதிலேயே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முழுநேர ஊழியராக தனது வாழ்வை ஒப்படைத்துக் கொண்டவர். தமிழகத்தின் பல பகுதிகளில், சங்கத்தின் பல நிலைகளில் பணிபுரிந்த ம.வீரபாகு, வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் மூலவர் இல்லாமல் இருந்த குறையைப் போக்கியவர். அதற்காக அவர் நடத்திய சமர், தமிழக வரலாற்றின் பொன்னேடுகளில் பொறிக்கப்பட வேண்டியதாகும்.

வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்வதற்காக மக்கள் இயக்கம் துவங்கியதோடு, தேசத்திலேயே முதல் கரசேவையாக, மக்கள் எழுச்சியின் உதவியுடன் கோயிலில் ஜலகண்டேஸ்வரரை 1981-இல் ஸ்தாபித்தார் ம.வீரபாகு. பின்னாளில் இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்புகளில் மாநில அமைப்பாளராகச் செயல்பட்டார். கடைசி பத்தாண்டுகளில் ‘விஜயபாரதம்’ வார இதழின் ஆசிரியராகச் செயல்பட்டார்.

சுமார் 52 ஆண்டுகள் இயக்க வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்தவர்; தே.சி.க.வின் புத்தக வெளியீடுகளும், ‘காண்டீபம்’ மும்மாத இதழும் சிறப்புற வெளியாக பல உதவிகளைச் செய்தவர் ஸ்ரீ. ம.வீரபாகு.  நமது அமைப்பின் நல் ஆலோசகராக அவர் தொடர்ந்து இருந்து வந்தார். அன்னாரது மறைவு (2020 செப். 19) கண்டிப்பாக நமக்கும், தேசிய உள்ளங்களுக்கும் பேரிழப்பே. வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில் உள்ள வரை, தமிழக மக்களின் மனங்களில் அவர் வாழ்வார்.

ஓம் சாந்தி!

ஸ்ரீ.  ‘கிசான்’ க.கோபி


வேலூரில் 1963 டிச. 21-இல் கண்ணன் என்பாருக்கு மகனாகப் பிரந்தவர் ஸ்ரீ. க.கோபி. இவரும் இளம் வயதிலேயே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முழுநேர ஊழியராக தனது வாழ்வை தியாகம் செய்தவர்; சுமார் 35 ஆண்டுகள் இயக்க வளர்ச்சிக்காக தனது வாழ்வை அளித்தவர். 

தமிழகத்தின் பல பகுதிகளில் பல நிலைகளில் பணிபுரிந்த க.கோபி, கடைசியாக ‘பாரதீய கிசான் சங்கம்’ என்னும் விவசாயிகள் சங்கத்தில் மாநில அமைப்பாளராகச் செயல்பட்டு வந்தார். பழக இனியவர்; எளியவர். தே.சி.க.வின் நலனில் அக்கறை கொண்டவர்.

அன்னாரது மறைவு (2020 ஆக. 24), விவசாயிகளின் ஒருங்கிணைப்புப் பணிக்கும், தேசியவாதிகளுக்கும் மாபெரும் இழப்பே. அவரது எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் கூடுதலான முனைப்புடன் செயல்படுவதே அவருக்கு ஆகச் சிறந்த அஞ்சலியாக இருக்கும்.

ஓம் சாந்தி!

மருத்துவத்துக்கு சவால் விடுத்துக் கொண்டிருக்கும் கொரோனா நுண்கிருமிக்கு உலகம் முழுவதும் லட்சக் கணக்கானோர் மாண்டுள்ளனர். நமக்கு மிகவும் நெருக்கமாக இருந்த பலரும் இந்தக் காலக்கட்டத்தில் நம்மைப் பிரிந்துள்ளனர். அவர்கள் அனைவரது ஆன்மாவும் நற்கதி அடையப் பிரார்த்திக்கிறோம்!

மிக விரைவில் கொரோனாவுக்கு மருந்து கண்டறியப்பட இறைவனைப் பிரார்த்திப்போம்!



No comments:

Post a Comment