16/09/2021

புரட்டாசி- 2021 மின்னிதழ்


உள்ளடக்கம்


1. அமுதமொழி - 21
-ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்

2. சந்தனம் எங்கள் நாட்டின் புழுதி! (கவிதை)

-ஒரு தேசபக்தர்

3. புரட்டாசித் திங்கள் - ஆன்றோரும் சான்றோரும் (2021)

-ஆசிரியர் குழு

4. தமிழரசுக் கழகம் கண்ட தேசியவாதி


-வைஷ்ணவிப்பிரியன்

5. தே.சி.க. செயல்வீரர் பயிற்சி முகாம்

-ம.கொ.சி.இராஜேந்திரன்

6. தேவி சூக்தம் (தமிழாக்கம்)
-ஜடாயு

7. முன்னோர்கள்‌ முட்டாள்கள் அல்லர்

-டி.எஸ்.தியாகராசன்

8. கொன்றைவேந்தன் - விளக்கவுரை (பகுதி - 1)

-பத்மன்

9. தமிழ் இலக்கியத்தில் அர்ஜுனன்

-பா.இந்துவன்

10. சிறையிலும் சம உரிமை கோரிய புரட்சியாளர்

-சி.எம்.அமிர்தேஸ்வரன்

11. முன்னோடிப் போராளி கஸலு லட்சுமிநரசு செட்டி

-அரவிந்தன் நீலகண்டன்

12. தேசம் என்பது என்ன ?
-கவிஞர் நந்தலாலா

13. கொங்கு நாட்டில் சுதந்திரப் போராட்டம்: பகுதி- 1

-சேக்கிழான்

14. கொங்கு நாட்டில் சுதந்திரப் போராட்டம்: பகுதி- 2

-சேக்கிழான்

15. கொங்கு நாட்டில் சுதந்திரப் போராட்டம்: பகுதி- 3


-சேக்கிழான்

16. கவி அரவிந்தரும் பத்திரிகையாளர் அரவிந்தரும்

-திருநின்றவூர் இரவிக்குமார்

17. பண்டிட் தீனதயாள் உபாத்யாய - பொன்மொழிகள் - 4

-பேரா. பூ.தர்மலிங்கம்

18. தியாகத் திருவுருவம் வ.உ.சி.

-வானதி ஸ்ரீனிவாசன்

19. வ.உ.சி.க்குப் புகழாரம்: தமிழக அரசுக்கு நன்றி!

-ஆசிரியர் குழு

20. வ.உ.சி. வாழ்வே வேள்வி (பகுதி -1)

- திருநின்றவூர் இரவிக்குமார்

  • ***

மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்பிதழ்:


21. குயில் பாடிய குயில் (கவிதை)

-கவியரசு கண்ணதாசன்

22. இத்தேசத்தின் ஞானச்சித்தன்

-ஸ்டான்லி ராஜன்

23. பாரதி நினைவு நூற்றாண்டு - தமிழக அரசின் அறிவிப்புகள்

-ஆசிரியர் குழு

24. பாரத தேசம் (கவிதை)
- மகாகவி பாரதி

25. காட்சி‬ (வசன கவிதை)
-மகாகவி பாரதி

26. சுதேசமித்திரன் பத்திரிகையும் தமிழ்நாடும்

-மகாகவி பாரதி

27. பகவத் கீதை - முன்னுரை
-மகாகவி பாரதி

28. சமூகம் - பறையரும் பஞ்சமரும்

-மகாகவி பாரதி

29. ஒரு கோடி ரூபாய் (திலகர் சுயராஜ்ய நிதி)

-மகாகவி பாரதி

30. சின்னச் சங்கரன் கதை
-மகாகவி பாரதி

31. Andal: The Vaisnava Poetess
- C.S.Bharathi


அமுதமொழி - 21



நான் ஏறிக்கொண்டே இருக்கிறேன். 
எங்கு இருக்கிறது லட்சிய சிகரம், என் இறைவா?

நான் தோண்டிக்கொண்டே இருக்கிறேன்
எங்கு இருக்கிறது அறிவுப் புதையல், என் இறைவா?

நான் பெருங்கடலில் நீந்திக்கொண்டே இருக்கிறேன்
எங்கு இருக்கிறது அமைதித் தீவு, என் இறைவா?

இறைவா, நூறு கோடி மக்கள்
லட்சிய சிகரத்தையும் 
அறிவுப் புதையலையும்
இன்ப அமைதியையும் 
உழைத்தடைய அருள் புரிவாயாக!

-ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்

சந்தனம் எங்கள் நாட்டின் புழுதி! (கவிதை)

-ஒரு தேசபக்தர்


(பாரத  சுதந்திரத்தின் 75 ஆண்டு சிறப்புப் பதிவு)

 

சந்தனம் எங்கள் நாட்டின் புழுதி 
கிராம மனைத்தும் தவ பூமி! 
சிறுமிய ரெல்லாம் தேவியின் வடிவம்! 
சிறுவ ரனைவரும் ராமனே! 
சிறுவ ரனைவரும் ராமனே! 

புரட்டாசித் திங்கள் - ஆன்றோரும் சான்றோரும் (2021)

 -ஆசிரியர் குழு  


புரட்டாசி மாதம் அவதரித்த, உலகு நீங்கிய
ஆன்றோர், சான்றோரின் நினைவிற்குரிய நாட்கள்
இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன:

ஸ்ரீ பிலவ வருடம், புரட்டாசித் திங்கள் (17.09.2021 - 17.10.2021)

 

தமிழரசுக் கழகம் கண்ட தேசியவாதி

-வைஷ்ணவிப்பிரியன்



‘சிலம்புச்செல்வர்’ 
ம.பொ.சிவஞானம் கிராமணியார்
(1906 ஜூன் 26 – 1995 அக். 3)


மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது, தமிழ்நாட்டின் பல பகுதிகள் ஆந்திரப்பிரதேசத்துக்கு தாரை வார்க்கப்படாமல் காத்தவர், ம.பொ.சி. எனப்படும், மயிலை பொன்னுசாமி சிவஞானம் கிராமணியார்.

மூன்றாம் வகுப்புவரை மட்டுமே படித்திருந்த ம.பொ.சி., பல முனைவர் பட்டங்களைப் பெறக் கூடிய அளவுக்கு தகுதியை வளர்த்துக் கொண்ட கல்வியாளர். அன்றைய தமிழ் உணர்வுள்ள இளைஞர்களை கவர்ந்திழுத்து வைத்திருந்த ம.பொ.சி.யின் மேடைப்பேச்சு கேட்போரைக் கவர்ந்திழுக்கும் காந்தசக்தி மிக்கது.

தமிழகத்தில், முதன்முதலில் ‘உயிர் தமிழுக்கு; உடல் மண்ணுக்கு’ என்றும், ‘மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி’ என்றும், ‘தலைகொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்’ என்றும் குரல் கொடுத்து சென்னையை தமிழ்நாட்டுக்குத் தக்கவைத்துக் கொள்ளவும் பாடுபட்டவர். (இவரது இந்த முழக்கங்களைத் தான் திமுக தற்போது தனதாக்கிக்கொண்டு முழங்கி வருகிறது).

தமிழிலக்கியத்தில் சிலப்பதிகாரம் காப்பியத்தை பட்டிதொட்டிகளில் எல்லாம் ம.பொ.சி. பிரசாரம் செய்த பலன், இன்று அந்தக் காப்பியம் தமிழர் நாவிலெல்லாம் மணம் வீசுகிறது. இவர் நடத்திய ‘செங்கோல்’ வார இதழும், ‘தமிழரசு’ இதழும் தேசியத் தமிழ் வளர்க்கும் அரும்பணியை ஆற்றின.

தே.சி.க. செயல்வீரர் பயிற்சி முகாம்

-ம.கொ.சி.இராஜேந்திரன்

அனைவருக்கும் வணக்கம்! 

 தமிழகத்தில் தேசிய, தெய்வீக சிந்தனைகளை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு பணிகளைச் செய்துவரும் நமது தேசிய சிந்தனைக் கழகத்தின் சார்பில்  ‘காரியகர்த்தர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம்’ ஏற்பாடாகியுள்ளது.

இந்தப் பயிற்சி முகாமில், கல்வியாளர்களின் வழிகாட்டுதல்கள், கலந்துரையாடல்கள், அருங்காட்சியகம் பார்வையிடல், சிந்தனையரங்குகள் ஆகிய நிகழ்வுகள் ஏற்பாடாகி உள்ளன.

இதில் கலந்து கொண்டு பயன்பெற்றிட அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

தேவி சூக்தம் (தமிழாக்கம்)

-ஜடாயு




(ரிக்வேதம் 10.125)

ருத்திரர்களுடன், வசுக்களுடன் சஞ்சரிக்கிறேன் நான்.
ஆதித்யர்களுடன், உலகத் தேவர் அனைவருடனும் உலவுகிறேன்.
வருணனை மித்திரனை
இந்திரனை அக்னியை
இரட்டையர் அசுவினி தேவரை
நான் தாங்குகிறேன். (1)

பொங்கி எழும் சோமனை சுமப்பவள் நான்.
த்வஷ்டாவை, பூஷனை, பகனைத் தாங்குபவள்.
ஆகுதி சொரிந்து சோமரசம் பிழிந்து வேண்டுவோர்க்கு
செல்வமளிப்பவள். (2)

நான் தலைவி
உலகின் வளங்களைத் திரட்டுபவள்
அனைத்தும் அறிந்தவள்
தெய்வ முதல்வி.
பல உருவில் பல வழிகளில் பிரவேசிப்பவள்.
என்னையே தேவர்கள் எங்கணும் நிறுவினர். (3)

மானுடர் உண்பதும் காண்பதும் சுவாசிப்பதும்
சொல் கேட்பதும் எல்லாம் என்னால்.
அதை அறியார் ஆயினும்
அவர்கள் என் உள் உறைபவரே.
சிரத்தையுடைய அன்பனே
சொல்கிறேன் கேள். (4)

இவை எல்லாம் நானே என்று சொல்கிறேன்.
என்னையே போற்றுவர் தேவரும் மனிதரும்.
நான் உக்கிரமாக விரும்புபவனை
பிரம்ம நிலையினன் ஆக்குகிறேன்.
ரிஷியாக, சிறந்த மேதையாக ஆக்குகிறேன். (5)

ருத்திரனின் வில்லை நானே வளைக்கிறேன்.
நன்மையை வெறுப்போரை அம்பெய்து அழிக்கிறேன்.
மக்களுக்காக நானே போர் புரிகிறேன்
மண்ணிலும் விண்ணிலும் நானே புகுந்து நிறைகிறேன். (6)

இதன் உச்சியில் தந்தையாகிய வானம் நான் செய்தது
ஆழ்கடலின் உள்ளே நீரில் எனது யோனி
அதனால் உலகில் உயிரெங்கிலும் நிறைந்து நிற்கிறேன்
அதுபோல வானையும் உடலால் தொடுகிறேன். (7)

அனைத்துலகும் உயிர்தரிக்கையில்
நானே மூச்சுக் காற்று.
மேலான பூமிக்கும் அப்பாலானது
வானத்திற்கும் அப்பாலானது
எனது மகா மகிமை. (8)
***

முன்னோர்கள்‌ முட்டாள்கள் அல்லர்

-டி.எஸ்.தியாகராசன்

நாளந்தா பல்கலைக்கழகம்


அண்மைக்காலமாக சில மதப் பிரசங்கிகள் இந்தியர்கட்கு கல்வியை, விஞ்ஞானத்தை, நாகரிகத்தைக் கற்றுக் கொடுத்தது ஆங்கிலேயர்களே, கிறித்துவ மதமே என்று மேடைதோறும் முழங்குகிறார்கள். ஏசுபிரான் தம்மை சிலுவையில் அறைந்தபோது  “பிதாவே இவர்கள் தெரியாது செய்கின்ற பிழையை மன்னியுங்கள்” என்றதுபோல, நாமும் இவர்கள் தெரியாது செய்யும் பிழையை மன்னிக்க வேண்டுவோம்.

கல்வியைப் பொருத்த வரை 11-ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில்தான் இங்கிலாந்து நாட்டில் பள்ளிகள் தோற்றமெடுத்தன. ஆக்ஸ்போர்டு என்ற ஊரில் 1096-இல் தொடங்கப்பட்டதுதான் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது 1209-ஆம் ஆண்டில்தான். ஆனால் பாரதத்தில் 18-ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் 7,32,000 உண்டு உறைவிட குருகுலங்கள் இருந்தன.

குருகுலக் கல்வியின் பாடப்பிரிவுகளில் கணிதம், வானவியல், மருத்துவத்தில் ரண சிகிச்சை, மாற்று உறுப்பு சிகிச்சை, நீர் மேலாண்மை, வேளாண்மை, நெசவு, காடு வளர்த்தல், தோட்டப் பயிர் காத்தல், உலோகவியல், இயந்திரவியல், கப்பல் தயாரித்தல், வானூர்திகள் வடிவமைத்தல், போர்க்கருவிகள் செய்தல், கட்டடக் கலை, சிற்பம், ஓவியம், சோதிடம் போன்ற 64 கலைகளையும் கற்றுணர்ந்தார்கள்.

கொன்றைவேந்தன் - விளக்கவுரை (பகுதி - 1)

-பத்மன்

ஔவையார்


கடவுள் வாழ்த்து

கொன்றை வேந்தன் செல்வன் அடியினை

என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே! 

விளக்கம்:

கொன்றைப்பூ மாலையை அணிந்த சிவபெருமானின் செல்வனாகிய பிள்ளையாரை என்றும் போற்றி வணங்குவோம்.

இங்கே பிள்ளையார் என்பது விநாயகரைக் குறிக்கும். அவர்தம் சகோதரரரான முருகப்பெருமானையும் பிள்ளையார் எனப் பழந்தமிழ் இலக்கிய உரைகள் கூறுகின்றன.

இது இடைக்கால ஔவையார் இயற்றியது. சங்ககாலத்தில் விநாயகரைக் குறிக்கும் பாடல் எதுவும் இல்லை எனத் தெரிய வருகிறது. தெற்கிலே விநாயகர் மூத்தவர், கந்தன் இளையவர் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் வடக்கிலே ஸ்கந்தன் மூத்தவர், கணபதி இளையவர்; ஸ்கந்தன்தான் பிரமச்சாரி. கணபதிக்கு சித்தி- புத்தி என இருதேவியர்.

வினைகளை வேரறுக்க இறையருளும் வேண்டும், நமது நுண்ணறிவும் வேண்டும் என்பதே இதன் உட்பொருள்.

கடவுள் வாழ்த்தில் கொன்றைவேந்தன் எனத் தொடங்கியதால் இந்நூல் ‘கொன்றைவேந்தன்’ எனப் பெயர் பெற்றது.

சிவபெருமானுக்கு ஏன் கொன்றைவேந்தன் எனப் பெயர்?

கொன்றை அகண்டபாரதப் பகுதியில் மட்டுமே காணப்படும் அபூர்வப்பூ. சாலையோரங்களில் பூத்துக் குலுங்கும் எளிய பூ.

ஆண்டின் தொடக்கமாகிய சித்திரை மாதத்தில் மஞ்சள் நிறத்தில் கொத்துக்கொத்தாகப் பூக்கத் தொடங்கும்.

மூவா முதல்வன், மங்களகரமானவன், பக்தருக்கு எளியவன் என்பதைக் குறிக்கும் வகையில் சிவபெருமான் கொன்றைப்பூவைச் சூடி கொன்றைமாலை அணிகிறார்.

அக்காலத்தில் பகைவரைக் கொன்று வெற்றியோடு திரும்பும் வீரர்களுக்கு கொன்றைப்பூ தூவியும் சூடியும் வரவேற்பதுண்டு. முத்தீமைகளான திரிபுர அசுரர்களைக் கொன்றவன் என்பதால் சிவனது பூஜையில் கொன்றைப்பூ சிறப்பு பெறுகிறது எனப் பெரியோர் கூறுவர்.

வைத்தீஸ்வரனான சிவனுக்கு உகந்த கொன்றைப்பூ, சருமநோய், இதயநோய், மூலம் ஆகிய நோய்களைத் தீர்க்கும் மருத்துவ குணம் கொண்டது.

***

தமிழ் இலக்கியத்தில் அர்ஜுனன்

-பா.இந்துவன்

அர்ஜுனன் தவம்  சிற்பம் (மாமல்லபுரம்)

மகாபாரத இதிகாசம் குறித்து பழந்தமிழ் இலக்கியங்களில் ஆதாரம் உள்ளதா என்று நண்பர் ஒருவர் கேட்டிருந்தார்.  

மகாபாரத நிகழ்வுகள் பலவும் சங்க இலக்கியங்களில் கொட்டிக் கிடக்கும்போது, மகாபாரதத்தின் கதாநாயகனான  ‘வில்லுக்கு விஜயன்’ என்று  இளங்கோவடிகளால் புகழப்பட்ட அர்ச்சுனனைப் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் எப்படி இல்லாமல் போகும்? 

சங்க இலக்கியங்களில் ஒன்றான  ‘சிறுபாணாற்றுப்படை’ என்ற ஆற்றுப்படை நூலில் அர்ச்சுணன் காண்டவ வனத்தை அழித்து அக்னி தேவனின் பசியை ஆற்றிய செய்தி இடம்பெற்றுள்ளது. இதே நிகழ்வை இளங்கோவடிகளும் சிலப்பதிகாரத்தில் பதிவு செய்துள்ளார்.

சிறையிலும் சம உரிமை கோரிய புரட்சியாளர்

-சி.எம்.அமிர்தேஸ்வரன்


ஜதீந்திரநாத் தாஸ்
(
1904 அக். 27 - 1929 செப். 13)


ஜதீந்திர நாத் தாஸ், வங்க மாகாணம், கொல்கத்தாவில் பங்கிம் பிஹாரி, என்பவருக்கு 1904, அக். 27-ஆம் தேதி மகனாகப் பிறந்தார். சிறு வயதிலேயே, புரட்சி இயக்கமான ‘அனுசீலன் சமிதி’யில் சேர்ந்தார். 1921-ல் காந்தியடிகள் தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்திலும் பங்கேற்றார்.

கொல்கத்தாவில் உள்ள வித்யாசாகர் கல்லூரியில் பயின்று வந்தபோது, அரசியல் நடவடிக்கைகளுக்காக 1925, நவம்பரில் கைது செய்யப்பட்டு மைமேன் சிங் சிறைச்சாலையில் அடைக்கப் பட்டார். அந்த சிறைச் சாலையில் அடைக்கப் பட்டிருந்த காலத்தில் சிறைக் கைதிகள் மனிதாபிமானமற்ற முறைகளில் நடத்தப்படுவதைக் கண்டித்து உண்ணாவிரதம் இருந்தார். இவருடைய உண்ணாவிரதம் 20 நாட்கள் தொடர்ந்த நிலையில் சிறை அதிகாரி (சூப்பிரண்டெண்ட்) மன்னிப்புக் கேட்க உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.

முன்னோடிப் போராளி கஸலு லட்சுமிநரசு செட்டி

-அரவிந்தன் நீலகண்டன்

கஸலு லட்சுமிநரசு செட்டி (1806–1868)

 

மேன்மை தங்கிய கவர்னர் துரையாரின் சிவந்த முன்வழுக்கை மண்டையில் வியர்வைத் துளிகள் அளவுக்கு அதிகமாகவே உருவாகியிருந்தன என்பதற்கு மெட்ராஸின் வெப்பநிலை மட்டுமே காரணம் அல்ல. கனம்பொருந்திய கவர்னர் துரையாரின் பெயர் வெகு நீளமாக ‘ஜியார்ஜ் ஹே ட்வீட்டேலின் எட்டாம் மார்க்யுஸ்’ என்று இருந்தாலும் அதை ட்வீட்டேல் என்றே அழைப்பது வழக்கம்.

கவர்னரின் மனது அன்று அடைந்த விரக்தியான கோபம் சொல்லத் தரமானதன்று. ‘கறுப்புத் தோல் இந்திய முட்டாள்களா இதைச் செய்தார்கள்?’ என்று எண்ணும்போதெல்லாம் அவர் கொதிநிலை உச்சத்தை அடைந்தது. ஆட்சி செய்வது பெயருக்குத்தான் கும்பெனி என்பது அவருக்குத் தெரியும். உண்மையான ஆட்சி பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தால் நடத்தப்பட்டது. எனவே நடந்திருப்பது பிரிட்டிஷ் அரசுக்கே விடப்பட்ட சவால். இந்த சவாலுக்கு பின்னால் இருப்பவர் யாரென்பதும் கவர்னர் பெருமகனாருக்குத் தெரிந்திருந்தது.

மெட்ராஸ் பல்கலைக்கழகம் அன்றைக்கு ஆங்கிலமும், குமாஸ்தா வேலைக்கான தயார்படுத்தலும் அளிக்கும் ஒரு கல்விச் சாலை. கும்பனி உருவாக்கிய அரசு இயந்திரத்துக்கு சேவகம் செய்ய மதராஸ்வாசிகள் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் பிள்ளைகளை அனுப்பிய நிறுவனம். அங்கே ‘பண்பாடற்ற’ இந்த இந்தியர்களின் பண்பாட்டை உயர்த்த, என்றென்றைக்குமான சாம்ராஜ்ஜியத்துக்குள் நுழைய, விக்கிர ஆராதனையை அடியோடு ஒழிக்க, எல்லாவற்றுக்கும் மேலாக ராஜ விசுவாசமுள்ள பிரஜைகளாக்க விவிலியத்தைக் கட்டாய பாடமாக்க முடிவு செய்த கவர்னரின் ஆலோசனைக் கூட்ட தாஸ்தாவேஜு ஒரு பத்திரிகையில் பிரசுரமாகித் தன்னை பிரச்சினைக்குள் ஆளாக்கும் என நினைத்திருப்பாரா துரைமகனார்?

பத்திரிகையின் பெயர் ‘மதியம்’. ஆங்கிலத்தில் ‘கிரெஸண்ட்’. பத்திரிகையின் ஆதார சக்தி செட்டி – கஸலு லட்சுமிநரசு செட்டி.

தேசம் என்பது என்ன ?

-கவிஞர் நந்தலாலா



தேசம் என்பது என்ன ? ஒரு கொற்றக்குடையின் நிழல் வட்டத்தில் அடங்கிய நிலமா ?

இது எம் நிலம் என்று மனங்கள் ,தம் சிறகால் மூடிய உணர்வுத் தலமா?

ஒரு மொழி பரவிக்கிடக்கும் வெளியா?

கலாச்சாரம் தான் அதை அளந்து கூறும் அளவு கோலா?

சிங்கமும் புலியும் இதுவரை என் எல்லை
என்று சிறு நீரால் எழுதிச் செல்லும் எல்லையா?

ஓரின மக்களின் ஒற்றைக் கூரையா?

தேசம் பற்றிய கருத்து யாவும் உத்தேசமானதுதான்.

கொங்கு நாட்டில் சுதந்திரப் போராட்டம்: பகுதி- 1

-சேக்கிழான்
விருப்பாச்சி பாளையக்காரர்
கோபால நாயக்கர்


இந்திய சுதந்திரப் போராட்டம் என்பது ஏதோ, 1920க்குப் பிறகு காங்கிரஸ் கட்சியும் மகாத்மா காந்தியும் மட்டுமே நடத்தியது போன்ற ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அது முழுமையானதல்ல; அதுபோலவே, ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி படைகளுக்கு எதிராக 1857-இல் நடைபெற்ற சிப்பாய்களின் போரே விடுதலைப் போரின் முதல் படியென்று கருதப்படுவதும் சரியல்ல. இவை இரண்டும் முழு உண்மையல்ல என்பதற்கு, கொங்குநாட்டில் நிகழ்ந்த மாபெரும் புரட்சிப் போர் சான்றாகும்.

கொங்குநாடு என்பது, தற்போதைய தமிழகத்தின் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருந்தது. பொ.யு. 1300இல் சோழப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, பெரும்பாலும் குறுநில மன்னர்கள், பாளையக்காரர்களால் ஆங்காங்கே சிறு பிரதேசங்களாக ஆளப்பட்டு வந்த பகுதி கொங்குநாடு. இதே நிலைதான் நாயக்கர்கள் மதுரையை ஆளும்வரை தமிழகம் முழுவதும் காணப்பட்டது.

ஆங்கிலேய அரசுக்கும், அதற்கு முன்னதாக கிழக்கிந்திய கம்பெனி படைக்கும் எதிராக பல வீரச்சமர்களை நிகழ்த்திய பகுதி கொங்குநாடு. அதனை மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கலாம்:

1. 1757 - 1885:

கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவின் கால் பதித்த 1757 முதல் இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்ட காலமான 1885 வரையிலான காலகட்டத்தை குறுநில மன்னர்களின் போராட்டம் என்று வகைப்படுத்தலாம். இதில்தான் பாரத அளவிலேயே முன்னோடியான போர்களை, கொங்குநாட்டு வீரர்கள் சாதித்துக் காட்டியுள்ளனர்.

2. 1885 - 1920:

அடுத்து, 1885 முதல், மகாத்மா காந்தி காங்கிரஸ் கட்சியின் தவிர்க்க முடியாத சக்தியாக மாறத் துவங்கிய 1920 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தை, தீவிர தேசியவாதிகளின் காலமாக வகைப்படுத்தலாம். இதிலும் கொங்குநாடு பெரும் பங்களிப்பை நல்கியுள்ளது.

3. 1920 - 1947: 
இறுதியாக, 1920 முதல் 1947 வரையிலான இறுதிக் காலகட்டம், சுதந்திர இந்தியாவின் ஜனநாயகத்தை வடிவமைப்பதில் பெரும் பங்காற்றியது.  ‘காந்தி யுகம்’ என்று குறிப்பிடப்படும் இந்தக் காலகட்டத்திலும், கொங்குநாடு மிகவும் அர்ப்பணிப்பான, மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் பலரை நாட்டிற்கு அளித்துள்ளது.

கொங்கு நாட்டில் சுதந்திரப் போராட்டம்: பகுதி- 2

-சேக்கிழான்


சே.ப.நரசிம்மலு நாயுடு


-பகுதி 1


கொங்குநாடு என்று அழைக்கப்படும் நிலவியல் பகுதி தமிழகத்தின் தற்போதைய மேற்கு மண்டலத்தைக் குறிப்பதாகும். தற்காலத்தில் மாநிலத்தின் வளர்ச்சியில் இப்பகுதி பெரும் பங்களிப்பது போலவே, சுதந்திரப் போராட்டக் காலத்திலும் அரும் பணியாற்றி இருக்கிறது. குறிப்பாக, மகாத்மா காந்தியின் செல்வாக்கு துவங்குவதற்கு முன்னதாகவே, தேசிய சுதந்திர இயக்கமாக உருவான காங்கிரஸ் பேரியக்கத்தில் பலர் பாடுபட்டுள்ளனர்.

(கட்டுரையின் இப்பகுதி, 1885 முதல் 1920 வரையிலான காலகட்டத்தில், குறிப்பாக கொங்குநாட்டில் நிகழ்ந்த சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னோடித் தலைவர்கள் சிலரை சுட்டிக் காட்டுகிறது.)

கொங்கு நாட்டில் சுதந்திரப் போராட்டம்: பகுதி- 3

-சேக்கிழான்

கோவை ‘கதர்’ அய்யாமுத்து கவுண்டர்


மகாத்மா காந்தி தலைமையிலான அஹிம்சை வழியிலான சுதந்திரப் போராட்டம் நாடு முழுவதும் தீவிரமானபோது, கொங்குநாடு பகுதியிலும் அதன் தாக்கம் வலுவாக இருந்தது. அப்போது பல முன்னணித் தலைவர்கள் இப்பகுதியில் உருவானார்கள்.

(கட்டுரையின் இப்பகுதி 1920 முதல் 1947 வரையிலான காலகட்டத்தில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் குறிப்பிடத்தக்க சிலரை அறிமுகம் செய்கிறது).

கோவை ‘கதர்’ அய்யாமுத்து கவுண்டர்:

கோவை ’கதர்’ அய்யாமுத்து கவுண்டர் (1898 - 1975 ), தமிழ் எழுத்தாளர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்; சர்வோதய இயக்கத்தின் தலைவர்களில் ஒருவர். காந்தியுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தவர். ஈ.வெ.ராமசாமியின் நண்பராக இருந்தவர். இவரது ’எனது நினைவுகள்’ என்ற தன்வரலாற்று நூல் தமிழக அரசியல் வரலாற்று ஆவணமாக விளங்குகிறது.

அய்யாமுத்து, அன்றைய கோவை மாவட்டம், காங்கயத்தை அடுத்த பரஞ்சேர்வழி கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவர் மாணவராக இருக்கையில் வ.உ.சி.யையும் சுப்பிரமணிய சிவாவையும் போலீஸார் விலங்கிட்டு தெருவில் இழுத்துச்சென்றதைக் கண்டு சுதந்திர ஆர்வம் கொண்டார். 1918ல் முதல் உலகப்போரின்போது ஐரோப்பியப் படையில் சேர்ந்தார். பஸ்ரா, மெஸபடோமியா போன்ற நாடுகளில் பணியாற்றியிருக்கிறார்.

1921ல் கிணத்துக்கடவைச் சேர்ந்த கோவிந்தம்மாளை மணம் செய்துகொண்டார். 1921ல் கோவைக்கு வருகை தந்த காந்தியின் உரை கேட்டு தம்பதியர் காங்கிரஸில் இணைந்தார்கள். இருவரும் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் பணியாற்றினர். இருவரும் 1923இல் கோவையில் குடியேறினார்கள்.

காந்தியின் ஆணைப்படி கதரியக்கத்தை கோவையில் ஆரம்பித்தார். கோவையில் அகில பாரத சர்க்கா சங்கத்தின் கதர் உற்பத்திசாலையை நிறுவினார். 1931இல் போலீஸ் குடியிருப்பில் தண்ணீர் எடுக்க ஒரு தலித் போலீஸ் காவலரை மற்ற ஜாதிகளைச் சேர்ந்த போலீசார் அனுமதிக்கவில்லை. இதைக் கேள்விப்பட்ட அய்யாமுத்து தன் மனைவியுடன் அங்கு சென்று அந்தத் கிணற்றுக்கு அவரை அழைத்துச் சென்று தண்ணீர் இறைக்கச் செய்தார். அன்றிலிருந்து ஹரிஜன இயக்கத்தில் ஆர்வம் கொண்டு பணியாற்றினார். இக்காலத்தில் ஈ.வெ.ராமசாமியுடன் நட்புக்கொண்டார். எனினும் அவரது நாத்திக, திராவிட இயக்கக் கருத்துகளை அய்யாமுத்து ஏற்கவில்லை.

1924ல் வைக்கம் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைசென்றார். பின்னர் சுசீந்திரம் ஆலயப்பிரவேசப் போராட்டத்திலும் தீவிரமாகப் பங்கேற்றார்.

1926ல் பாரத சர்க்கா சங்கத்தின் தமிழ்நாட்டு செயலாளர் எஸ்.ராமநாதன் வேண்டுகோளை ஏற்று எர்ணாகுளம் வஸ்திராலயத்தை வழிநடத்தினார். 1933ல் திருப்பூர் கதர் வஸ்திராலயத் தலைவரானார். 1936இல் தமிழ்நாடு சர்க்கா சங்கத் தலைவரானார். 1940 வரை கதர் இயக்கத்தின் தீவிர வெற்றிக்குக் காரணமாக இருந்தனர். ‘கதர்’ அய்யாமுத்து என்றே அவரை அக்காலகட்டத்தில் அழைத்தார்கள்.

கவி அரவிந்தரும் பத்திரிகையாளர் அரவிந்தரும்

-திருநின்றவூர் இரவிக்குமார்


(அரவிந்தம்-150)

------------------------------------------------------------------------------------------

கவி அரவிந்தர்

ஆரம்பத்தில் மனிதன் மின்னலையும் இடியையும் மழையையும் ஆழ்ந்து விரிந்த நதியையும் கண்டு பயந்தான். அவற்றை துதித்தான். அவ்வாறான துதி பாடல்களே வேதங்கள் என்று மூடர்கள் பேசுவதை கேட்டிருக்கலாம். நம் முன்னோர்கள் அஞ்சவில்லை. இயற்கையை புரிந்து கொண்டனர். வியந்தனர். அதை வெளிப்படுத்த அவர்கள் மேற்கொண்ட வழி கவித்துவமானது.

ரிஷி மரபு

வேத ரிஷிகள் ஞானிகள் மட்டுமல்ல கவிஞர்களும் கூட. ரிஷி மரபில் வந்த ஸ்ரீ அரவிந்த மகரிஷியும் படைப்பாற்றல் மிக்க கவிஞர்தான். இதை

 “கீழை ஞானத்தின் மேன்மையையும் ஐரோப்பிய அறிவையும் பொருத்தமாக இணைத்து பரிபூரணமாக்கிய மகான் ஸ்ரீ அரவிந்தர். பாரத ரிஷிகளின் பரம்பரையில் கடைசியாக வந்த அவர், படைப்பாற்றல் என்னும் வில்லை தன் கரத்தில் உறுதியாக பிடித்துள்ளார்”

-என்கிறார் ரொமெயின் ரோலந்து என்ற ஜெர்மானிய அறிஞர்.

இதை வேறுவிதமாகச் சொல்கிறார் துவிஜேந்திர குமார் ராய் என்ற வங்கமொழி இலக்கியவாதி. அரவிந்தர் இந்தியத் தொடர்பே இல்லாமல் ஆங்கிலச் சூழ்நிலையில் இங்கிலாந்தில் வளர்ந்து, பின்பு பாரதம் திரும்பிய போது அவருக்கு வங்கமொழி கற்பித்தவர் திரு. ராய்.

 “ஸ்ரீ அரவிந்தர் இவ்வுலகை சார்ந்தவர் அல்லர். அவர் ஏதோ சாபத்தால் விண்ணுலகிலிருந்து மண்ணுலகிற்கு இறங்கிவந்த ஒரு தேவனாக இருக்கலாம்”

-என்பது அவர் அரவிந்தர் பற்றிக் கூறிய பல விஷயங்களில் ஒன்று.

பண்டிட் தீனதயாள் உபாத்யாய - பொன்மொழிகள் - 4

-பேரா. பூ.தர்மலிங்கம்



***
எது தேவை?  

மேற்கத்திய அறிவியல் மற்றும் மேற்கத்திய வாழ்க்கை முறை இரண்டும் வெவ்வேறு விஷயங்கள். அதேசமயம், மேற்கத்திய அறிவியல் உலகளாவியது. நாம் முன்னோக்கிச் செல்ல விரும்பினால் அதை நாம் உள்வாங்க வேண்டும். ஆனால் மேற்கத்திய வாழ்க்கை முறைகளுக்கும் விழுமியங்களுக்கும் இது பொருந்தாது. உண்மையில், மேற்கத்திய முறைகளை எந்தவித சிந்தனையுமின்றி பின்பற்றுதல் அறவே தவிர்க்கப்பட வேண்டும். 

தியாகத் திருவுருவம் வ.உ.சி.

-வானதி ஸ்ரீனிவாசன்


ஒப்பே கூற முடியாத செந்தமிழ் அறிவுச்செல்வன்...

தமிழகத்தின் பாலகங்காதர திலகர் வ.உ.சிதம்பரம் பிள்ளை...

வங்காளத்தில் விபின் சந்திரபால், பஞ்சாபில் லாலா லஜபதிராய், மராட்டியத்தில் பாலகங்காதர திலகர் என்றால், தமிழகத்தில் வ.உ.சி. என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை. 

வ.உ.சி.யின் பெயரைக் குறிப்பிடாமல் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றை யாராலும் எழுதிவிட முடியாது. அந்த அளவுக்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்தவர் வ.உ.சி.

1872 செப்டம்பர் 5-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் என்ற ஊரில் உலகநாதப் பிள்ளை - பரமாயி அம்மாள் தம்பதியினருக்கு மூத்த மகனாகப் பிறந்தவர். பாலகனாக இருந்த போதே படிப்பில் ஆர்வம் காட்டிய வ.உ.சி., தந்தையைப் போலவே வழக்கறிஞராக பட்டம் பெற்றார். வழக்கறிஞராக தொழில் செய்தாலும் அவரது மனம் தத்துவத்திலும், ஆன்மிகத்திலும் திளைத்தது.

இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு உத்வேகமூட்டியவர் சுவாமி விவேகானந்தர். மகாத்மா காந்தி உள்ளிட்ட பலரும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டவர்களே. தமிழகத்தில் மகாகவி பாரதி, வ.உ.சி., சுப்பிரமணிய சிவா ஆகிய மூன்று தேச பக்தர்களும் சுவாமி விவேகானந்தரின் ஆன்மிக, தேசியக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டவர்கள்.

வ.உ.சி.க்குப் புகழாரம்: தமிழக அரசுக்கு நன்றி!

-ஆசிரியர் குழு

வேளாளன் சிறைபுகுந்தான் தமிழகத்தார்
    மன்னனென மீண்டான் என்றே
கேளாத கதைவிரைவிற் கேட்பாய் நீ
    வருந்தலைஎன் கேண்மைக்கோவே!
தாளாண்மை சிறினுகொலோ யாம்புரிவேம்
    நீஇறைக்குத் தவங்கள் ஆற்றி,
வேளாண்மை நின் துணைவர் பெறுகெனவே
    வாழ்த்துதிநீ வாழ்தி! வாழ்தி!

-மகாகவி பாரதி 



(ஆங்கிலேய அரசால் தனது உற்ற தோழர் வ.உ.சி. 1907இல் கைது செய்யப்பட்டபோது, மகாகவி பாரதி எழுதிய கவிதை வாழ்த்து இது).

வ.உ.சி. வாழ்வே வேள்வி (பகுதி -1)

- திருநின்றவூர் இரவிக்குமார்


(வ.உ.சிதம்பரம் பிள்ளையின்
150வது பிறந்ததின ஆண்டை ஒட்டி
வெளியாகும் சிறப்புப் பதிவு)

***


யார் கற்றவர்?

அமரர் வ.உ.சிதம்பரம் பிள்ளை ‘செக்கிழுத்த செம்மல்’ என்று, ‘கப்பலோட்டிய தமிழன்’என்றும் அனைவரும் அறிவார்கள். அது மட்டுமல்ல, அவர் சிறந்த தமிழ் அறிஞர். சைவ சமய இலக்கியங்களில் ஆழ்ந்த அறிவுள்ளவர். பல சைவ தத்துவ நூல்களுக்கு விளக்கவுரை எழுதியுள்ளார். பல ஆங்கில நூல்களை மொழியாக்கம் செய்துள்ளார். பல நூல்களைப் பதிப்பித்துள்ளார். அவரே பல நூல்களை இயற்றியுள்ளார். சுய சரிதையும் எழுதியுள்ளார்.

சிதம்பரம் பிள்ளை, திருவள்ளுவரின் புகழை செல்லும் இடமெல்லாம் செப்பியவர். திருக்குறள்- மணக்குடவர் உரையையும் தொல்காப்பியம்-  இளம்பூரணர் உரையையும் ஆராய்ந்து பதிப்பித்தவர். அவரது தமிழ்ப் பற்றுக்கு அளவே இல்லை.

அவரது தமிழ்ப்பற்று பேச்சிலும் எழுத்திலும் (பதிப்பு) செயலிலும் மட்டுமே வெளிப்பட்டதன்று. தன்னுடைய தமிழ் அறிவை மாணாக்கர் பலர் மூலம் பரவிடச் செய்தார். அவரிடம் தமிழ் கற்றவர் பலர். திருக்குறளைக் கற்றவர்கள் பலர்.

அவர் ஒரு கண்டிப்பான ஆசிரியர். தாம் சொல்லிக் கொடுத்தவற்றை மறுநாள் தவறின்றிச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பார். அப்படி இல்லையென்றால் வேறு பாடத்திற்குச் செல்ல மாட்டார். காரணம், அவர் தமிழின்மீது கொண்ட பற்று. எனவே சிலருக்கு அவரிடம் பாடம் கற்பது எளிதாக இருக்கவில்லை.

குயில் பாடிய குயில் (கவிதை)

-கவியரசு கண்ணதாசன்



(மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 9)

ஓராயிரம் குயில்கள்
    உட்காரும் சோலையிலே
ஒருகுயில் கண்டானடி- பாரதி
    உடன் குயிலானானடி!

தேராயிரம் தவழும்
    செந்தமிழ் வீதியிலே
தேரொன்று கொண்டானடி- பாரதி
    சிலையென் றமர்ந்தானடி!

இத்தேசத்தின் ஞானச்சித்தன்

-ஸ்டான்லி ராஜன்



(மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 10)

சித்தர்களும் சில வரம்பெற்ற மனிதர்களும் இந்து மதத்தில் அடிக்கடி தோன்றுவார்கள்; அவர்களின் காலத்தில் அவர்களைப் புரிந்துகொள்வார் யாருமிலர். பிரிதொருநாளில் அவர்களைத் தேடும்பொழுது அவர்கள் இருக்க மாட்டார்கள்.

100 வருடங்களுக்கு முன் அப்படி ஒரு சித்தன் இருந்தான். அவன் பிரபஞ்சத்தில் கரைந்த பெரும் ஞானியாய் இருந்தான். சாதாரண மனிதரில் இருந்து அவன் வேறுபட்டு இருந்தான்.

‘ஞானிக்கு வேந்தன் துரும்பு’ என்பதில் சரியாக இருந்தான். ராஜாதிராஜன் என்றாலும் அவன் தள்ளிப்போ என்றான்; பணமோ இதர உலக மாயைகளோ அவனை மயக்க முடியவில்லை.

அவனுக்கு தேசநிலை புரிந்தது; இந்துமத நிலை புரிந்தது; எதிர்காலம் தெரிந்தது. அவன் மானிடரை நேசித்தான்; இந்த மண்ணை அதைவிட அதிகமாக நேசித்தான்.

அவன் எல்லா மொழிகளும் படித்தான்; தமிழை நேசித்தான்.  எல்லா நாட்டையும் கவனித்தான்; பாரதத்தைக் கொண்டாடினான். அவன் எல்லா மதத்திலும் நுழைந்தான்; சக்தியின் பக்தனாய் ஹிந்துவாய் நின்றான்.

அந்த ஞானச்சித்தன், தான் உணர்ந்ததை சித்தன் போல எழுதி வைத்தான், காவியமாய்ப் பாடலாய் செதுக்கி வைத்தான்.

விவேகானந்தர் எனும் மாபெரும் மகானுக்கும் பாரதி எனும் சித்தனுக்கும் ஒரு வித்தியாசம் காண முடியாது, அந்த ஞானப் பரதேசிகள் இந்நாட்டின் தத்துவ சிகரங்கள்.

இந்தியாவில் தேசாபிமானிகள் குறைவு;  அதுவும் மிக அறிவார்ந்த சிந்தனை மிக்க தேசியவாதிகள் குறைவு;  அதிலும் தன்னலமற்ற சிந்தனைவாதிகள் அபூர்வம்.

ஆனால் ஒரு விளக்கு ஓராயிரம் விளக்கினை ஏற்றிவைக்கும் என்பது போல அந்தச் சிறு கூட்டம் பேரொளியினை இங்கு ஏற்றியது. அவர்கள் கொடுத்த வீச்சும் ஏற்றிவைத்த புரட்சித் தீயும் கொஞ்சமல்ல‌.

ஒருவன் காலமான பின்னும் அவனுக்கு எது எஞ்சி நிற்கின்றதோ அதுதான் அவன் வாழ்ந்த வாழ்வின் அடையாளமும், அவன் வாழ்வின் தத்துவமும். அப்படி இங்கு புகழோடு வீற்றிருப்பவர் வெகு சிலரே.

அதில் ஒருவன் எங்கள் பாரதி. நெல்லை மண் கொடுத்த எங்கள் சிங்க நிகர் பாரதி.

பாரதி நினைவு நூற்றாண்டு - தமிழக அரசின் அறிவிப்புகள்

-ஆசிரியர் குழு


(மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 11)

மகாகவி பாரதி மறைந்த நூற்றாண்டின் நினைவாக அவரது பெருமையைப் போற்றும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். 

இந்த அறிவிப்புகளுக்காக, தமிழக அரசுக்கு தேசிய சிந்தனைக் கழகம் நன்றி தெரிவிக்கிறது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 2021 செப். 10-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது...

***
 “பாட்டுக்கொரு புலவன் பாரதியடா
அவன் பாட்டைப் பண்ணோடு ஒருவன் பாடினானடா
அதைக் கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனடா”

- என்று கவிமணி தேசிக விநாயகம் பாடினார்.

இப்படி  கவிமணிகளையே பாடவைத்த பெரும்புலவன் பாரதியின் பெருமையைப் போற்றும் அறிவிப்புகளை வெளியிட விரும்புகிறேன்...

பாரத தேசம் (கவிதை)

- மகாகவி பாரதி


(மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 12)

.
(ராகம் - புன்னாகவராளி)

பல்லவி

பாரத தேசமென்று பெயர்சொல்லு வார் - மிடிப்
பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லு வார்.

சரணங்கள்

வெள்ளிப் பனிமலையின் மீதுலாவு வோம் - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்!
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம்- எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம். 

(பாரத)

காட்சி‬ (வசன கவிதை)

-மகாகவி பாரதி

(மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 13)


முதற்கிளை: இன்பம்

1

இவ்வுலகம் இனியது. 
இதிலுள்ள வான் இனிமையுடைத்து; காற்றும் இனிது. 
தீ இனிது. நீர் இனிது. நிலம் இனிது.
ஞாயிறு நன்று; திங்களும் நன்று. 
வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன. 
மழை இனிது. மின்னல் இனிது. இடி இனிது.
கடல் இனிது. மலை இனிது. காடுநன்று. 
ஆறுகள் இனியன.
உலோகமும், மரமும், செடியும், கொடியும், 
மலரும், காயும், கனியும் இனியன.
பறவைகள் இனிய. 
ஊர்வனவும் நல்லன. 
விலங்குகளெல்லாம் இனியவை. 
நீர் வாழ்வனவும் நல்லன.
மனிதர் மிகவும் இனியர்.
ஆண் நன்று. பெண் இனிது.
குழந்தை இன்பம். 
இளமை இனிது.முதுமை நன்று.
உயிர் நன்று. சாதல் இனிது.

2

உடல் நன்று. புலன்கள் மிகவும் இனியன. 
உயிர் சுவையுடையது.
மனம் தேன். அறிவு தேன். உணர்வு அமுதம். 
உணர்வே அமுதம். 
உணர்வு தெய்வம்.

பகவத் கீதை - முன்னுரை

-மகாகவி பாரதி

(மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 15)

1.

புத்தியிலே சார்பு எய்தியவன், இங்கு நற்செய்கை, தீச்செய்கை இரண்டையுந் துறந்துவிடுகின்றான். ஆதலால் யோக நெறியிலே பொருந்துக, யோகம் செயல்களிலே திறமையானது (கீதை, 2-ஆம் அத்தியாயம், 50-ஆம் சுலோகம்)

இஃதே கீதையில் பகவான் செய்யும் உபதேசத்துக் கெல்லாம் அடிப்படையாம். புத்தியிலே சார்பு எய்தலாவது, அறிவை முற்றிலுந் தெளிவாக மாசுமறுவின்றி வைத்திருத்தல், தெளிந்த புத்தியே மேற்படி சுலோகத்திலே புத்தி சொல்லப்படுகிறது. அறிவைத் தெளிவாக நிறத்திக் கொள்ளுதலாவது யாதென்றால், கவலை நினைப்புகளும் அவற்றுக்குக்காதாரமான பாவ நினைப்புகளுமின்றி அறிவை இயற்கை நிலைபெறத் திருத்துதல்.

 “நீங்கள் குழந்தைகளைப் போலானாலன்றி, மோக்ஷ ராஜ்யத்தை எய்த மாட்டீர்கள்” என்று இயேசு கிறிஸ்து சொல்லியதும் இதே கருத்துக் கொண்டுதான்.

 ‘குழந்தைகளைப் போலாய்விடுங்கள்’ என்றால், உங்களுடைய லௌகிக அனுபவங்களை யெல்லாம் மறந்து விடுங்கள்; நீங்கள் படித்த படிப்பையெல்லாம் இழந்துவிடுங்கள்; மறுபடி சிசுக்களைக் போலவே தாய்ப்பால் குடிக்கவும், மழலைச் சொற்கள் பேசவுந் தொடங்குங்கள்' என்பது கொள்கையன்று.  ‘ஹிருதயத்தைக் குழந்தைகளின் ஹிருதயம்போல நிஷ்களங்கமாகவும் சுத்தமாகவும் வைத்துக் கொள்ளுங்கள்’ என்பது கருத்து.

சுதேசமித்திரன் பத்திரிகையும் தமிழ்நாடும்

-மகாகவி பாரதி




(மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 14)

வடக்கே, ஸ்ரீ காசியினின்றும், தெற்கே தென்காசியினின்றும், இரண்டு தினங்களின் முன்னே, இரண்டு கடிதங்கள் என் கையில் சேர்ந்து கிடைத்தன.  அவை யிரண்டும் சிறந்த நண்பர்களால் எழுதப்பட்டன. அவற்றுள் ஒன்று  ‘பஹிரங்கக் கடிதம்’. மற்றது ஸாதாரணக் கடிதம். ஆனால் இரண்டிலும் ஒரே விஷயந்தான் எழுதப்பட்டிருக்கிறது; ஒரே விதமான கேள்விதான் கேட்கப் பட்டிருக்கிறது. அதே கேள்வியைச் சென்னையிலுள்ள வேறு சில நண்பர்கள் என்னிடம் நேராகவும் கேட்டனர். இந்த நண்பர்களுக் கெல்லாம் இங்கு பொதுவாக மறுமொழி யெழுதிவிடுதல் பொருந்து மென்றும், அவர்களுக்கு இஃது திருப்தி தருமென்றும் நினைக்கிறேன். இவர்களெல்லாரும் என்னிடம் கேட்கும் கேள்வியின் சுருக்கம் பின்வருமாறு:

“ஒத்துழையாமை விஷயத்தில் உம்முடைய முடிவான கொள்கை யாது? சுதேசமித்திரன் பத்திரிகை ஒத்துழையாமையை பகிரங்கமாகவும் முடிவாகவும் எதிர்க்காவிடினும், அதில் உள்ளூர அபிமான மில்லாதது போல் காணப்படுகிறதே? அப்படியிருக்க, நெடுங்காலத்து தேசாபிமானியாகிய நீர் இந்த ஸமயத்தில் அப்பத்திரிகையில் வேலை செய்ய அமர்ந்தது நியாயமா?” என்று கேட்கிறார்கள்.

இவர்களுக்கு நான் தெரிவிக்கும் உத்தரம் பின் வருமாறு. 

சமூகம் - பறையரும் பஞ்சமரும்

-மகாகவி பாரதி

சுவாமி சகஜானந்தர்

(மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 16)

.

பறையர்

‘பறையர்’ என்பது மரியாதை உள்ள பதம் இல்லை என்று கருதி இக்காலத்தில் சிலர் பஞ்சமர் என்ற சொல்லை அதிகமாக வழங்குகிறார்கள். நானும் சில சமயங்களில் பஞ்சமர்என்ற சொல்லை வழங்குவது உண்டு. ஆனால் பறையர் என்பதே மேற்படி ஜாதியாருக்குத் தமிழ்நாடில் இயற்கையாக ஏற்பட்ட பெயர். பறை என்பது பேரிகை. பூர்வகாலத்தில் நமது ராஜாக்கள் போர் செய்யப் போகும்போது ஜய பேரிகை கொட்டிச் செல்லும் உத்தமமான தொழில் இந்த ஜாதியார் செய்து வந்தபடியால் இவர்களுக்கு இப்பெயர் வழங்குவதாயிற்று. ‘இது குற்றமுள்ள பதமில்லை’ யென்பதற்கு ருஜூ வேண்டுமானால், மேற்படி கூட்டத்தாரால் சென்னையில் நடத்தப்படும் சபைக்கு ‘பறையர் மஹாசபை’ என்று பெயர் வைத்திருப்பதைக் காண்க. அவர்களை மிருகங்களைப்போல் நடத்துவது குற்றமேயொழிய  ‘பறையர்’ என்று சொல்லுவது குற்றமில்லை.

ஒரு கோடி ரூபாய் (திலகர் சுயராஜ்ய நிதி)

-மகாகவி பாரதி



(மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 17)

ஸெப்டம்பர் மாஸத்துக்குள் ஸ்வராஜ்யம் கிடைப்பதற்கு ஒரு கோடி ரூபாய் இன்றியமையாத தென்றும், அது கொடுக்காவிட்டால் இந்திய தேசத்து ஜனங்கள் ஸ்வராஜ்யத்தில் விருப்பமில்லாத தேசத் துரோகிகளே யாவார்களென்றும் ஶ்ரீமான் காந்தி முதலியவர்கள் சொல்லிக்கொண்டு வந்தனர்.

ஜனங்கள் ஒரு கோடி ரூபாய் கொடுத்து விட்டார்கள், அந்தத் தொகை எங்ஙனம் செலவிடப்படுகிறது? எப்போது செலவு தொடங்கப் போகிறார்கள்? ஒரு மாஸத்திலோ, இரண்டு மாஸங்களிலோ, அன்றி இன்னும் ஒரு வருஷத்துக்குள்ளேயோ, ஸ்வராஜ்யம் கிடைக்க வேண்டுமாயின், அந்தத் தொகை ஏற்கெனவே செலவு தொடங்கியிருக்க வேண்டுமன்றோ?

“ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் தான் ஸ்வராஜ்யம் வரும்” என்று சொல்லப்பட்ட வார்த்தைக்கு ஒரு பொருள் தான் உண்டு. அதாவது, அந்தப் பணம் ப்ரசாரத் தொழிலிலே செலவிடப்படவேண்டும். நாமோ பலாத்கார முறையை அனுஸரிச்கவில்லை. எனவே, அந்தக் கோடி ரூபாயை ஸைந்யச் செலவுக்கு உபயோகப்படுத்துவதென்ற ஆலோசனைக்கு இடமில்லை. எனவே, ப்ரசாரத் தொழில் ஒன்றுதான் கதி. மேற்படி, தொகையில் ஒரு பகுதிக்கு ராட்டினங்கள் வாங்கி ஜனங்களுக்குக் கொடுக்க வேண்டுமென்று கருதினால் அங்கனம் தாராளமாகச் செய்யலாம். வேறு எத்தனை வகைகளில் செலவு செய்ய விரும்பினாலும் செய்யலாம். ஆனால் அத்தனைக்கும் ஆதாரமான மூலவழி ப்ரசாரந் தான் என்பதை மறந்துவிடக்கூடாது.

சின்னச் சங்கரன் கதை

-மகாகவி பாரதி


(மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 18)
------------------------------------------------------------------------------

முதலாவது குட்டி யத்தியாயம்: 
படிப்பவர்களுக்கு ஒரு வார்த்தை

நமது நாட்டுக் கதைகளிலே பெரும்பாலும் அடி தொடங்கிக் கதாநாயகனுடைய ஊர், பெயர், குலம், கோத்திரம், பிறப்பு, வளர்ப்பெல்லாம் கிரமமாகச் சொல்லிக்கொண்டு போவது வழக்கம்.

நவீன ஐரோப்பியக் கதைகளிலே பெரும்பகுதி அப்படியல்ல. அவர்கள் நாடகத்தைப் போல கதையை நட்ட நடுவில் தொடங்குகிறார்கள். பிறகு போகப் போக கதாநாயகனுடைய பூர்வ விருத்தாந்தங்கள் தெரிந்து கொண்டே போகும்.

எங்கேனும் ஒரு காட்டில் ஒரு குளக்கரையில் ஒரு தனி மேடையில் இவன் தனது காதலியுடன் இருப்பான். இல்லாவிட்டால், யாரேனுமொரு சிநேகிதனுடன் இருப்பான். அப்போது கதையின் ஆரம்பங்களை எடுத்து விரிப்பான். இது அவர்களுடைய வழி.

நான் இக்கதையிலே மேற்படி இரண்டு வழிகளையும் கலந்து வேலை செய்யப் போகிறேன்.

சின்ன சங்கரன் - நம்முடைய கதாநாயகன் - விருத்தாந்தங்களை மாத்திரம் பூர்வத்திலிருந்து கிரமமாகவே சொல்லிவிட்டு, கதையில் வரும் மற்றவர்கள் விஷயத்தில் கொஞ்சம் ஐரோப்பிய வழியைத் தழுவிக்கொண்டு செல்லக் கருதுகிறேன். சர்வகலாநிதியாகிய சரஸ்வதி தேவி எனது நூலில் கடைக்கண் வைத்திடுக.

***

Andal: The Vaisnava poetess

- C.S.Bharathi


(மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 19)

Preoccupied from the earliest times with divine knowledge and religious aspiration the Indian mind has turned all forms of human life and emotion and all the phenomena of the universe into symbols and means by which the embodied soul may strive after and grasp the supreme. Indian devotion has especially seized upon the most intimate human relations and made them stepping stones to the supra-human relations and made them stepping stones to the supra – human. God the Guru, God the Master, God the Friend , God the Mother, God the Child, God the Self, each of these experiences-for to us there are more than merely ideas, - it has carried to its extreme possibilities. But none of them has it pursued, embraced, sung with a more exultant passion of intimate realization than the yearning for God the Lover, God the Beloved. It would seem as if this passionate human symbol were the natural culminating-point for the mounting flame of the soul’s devotion; for it is found wherever that devotion has entered into the most secret shrine of the inner temple. We meet it in Islamic poetry; certain experiences of the Christian mystics repeat the forms and images with which we are familiar in the East, but usually with a certain timorouess foreign to the Eastern temperament. For the devotee who has once had this intense experience it is that which admits to the most profound and hidden mystery of the universe; for him the heart has the key of the last secret.