16/09/2021

கொங்கு நாட்டில் சுதந்திரப் போராட்டம்: பகுதி- 3

-சேக்கிழான்

கோவை ‘கதர்’ அய்யாமுத்து கவுண்டர்


மகாத்மா காந்தி தலைமையிலான அஹிம்சை வழியிலான சுதந்திரப் போராட்டம் நாடு முழுவதும் தீவிரமானபோது, கொங்குநாடு பகுதியிலும் அதன் தாக்கம் வலுவாக இருந்தது. அப்போது பல முன்னணித் தலைவர்கள் இப்பகுதியில் உருவானார்கள்.

(கட்டுரையின் இப்பகுதி 1920 முதல் 1947 வரையிலான காலகட்டத்தில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் குறிப்பிடத்தக்க சிலரை அறிமுகம் செய்கிறது).

கோவை ‘கதர்’ அய்யாமுத்து கவுண்டர்:

கோவை ’கதர்’ அய்யாமுத்து கவுண்டர் (1898 - 1975 ), தமிழ் எழுத்தாளர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்; சர்வோதய இயக்கத்தின் தலைவர்களில் ஒருவர். காந்தியுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தவர். ஈ.வெ.ராமசாமியின் நண்பராக இருந்தவர். இவரது ’எனது நினைவுகள்’ என்ற தன்வரலாற்று நூல் தமிழக அரசியல் வரலாற்று ஆவணமாக விளங்குகிறது.

அய்யாமுத்து, அன்றைய கோவை மாவட்டம், காங்கயத்தை அடுத்த பரஞ்சேர்வழி கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவர் மாணவராக இருக்கையில் வ.உ.சி.யையும் சுப்பிரமணிய சிவாவையும் போலீஸார் விலங்கிட்டு தெருவில் இழுத்துச்சென்றதைக் கண்டு சுதந்திர ஆர்வம் கொண்டார். 1918ல் முதல் உலகப்போரின்போது ஐரோப்பியப் படையில் சேர்ந்தார். பஸ்ரா, மெஸபடோமியா போன்ற நாடுகளில் பணியாற்றியிருக்கிறார்.

1921ல் கிணத்துக்கடவைச் சேர்ந்த கோவிந்தம்மாளை மணம் செய்துகொண்டார். 1921ல் கோவைக்கு வருகை தந்த காந்தியின் உரை கேட்டு தம்பதியர் காங்கிரஸில் இணைந்தார்கள். இருவரும் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் பணியாற்றினர். இருவரும் 1923இல் கோவையில் குடியேறினார்கள்.

காந்தியின் ஆணைப்படி கதரியக்கத்தை கோவையில் ஆரம்பித்தார். கோவையில் அகில பாரத சர்க்கா சங்கத்தின் கதர் உற்பத்திசாலையை நிறுவினார். 1931இல் போலீஸ் குடியிருப்பில் தண்ணீர் எடுக்க ஒரு தலித் போலீஸ் காவலரை மற்ற ஜாதிகளைச் சேர்ந்த போலீசார் அனுமதிக்கவில்லை. இதைக் கேள்விப்பட்ட அய்யாமுத்து தன் மனைவியுடன் அங்கு சென்று அந்தத் கிணற்றுக்கு அவரை அழைத்துச் சென்று தண்ணீர் இறைக்கச் செய்தார். அன்றிலிருந்து ஹரிஜன இயக்கத்தில் ஆர்வம் கொண்டு பணியாற்றினார். இக்காலத்தில் ஈ.வெ.ராமசாமியுடன் நட்புக்கொண்டார். எனினும் அவரது நாத்திக, திராவிட இயக்கக் கருத்துகளை அய்யாமுத்து ஏற்கவில்லை.

1924ல் வைக்கம் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைசென்றார். பின்னர் சுசீந்திரம் ஆலயப்பிரவேசப் போராட்டத்திலும் தீவிரமாகப் பங்கேற்றார்.

1926ல் பாரத சர்க்கா சங்கத்தின் தமிழ்நாட்டு செயலாளர் எஸ்.ராமநாதன் வேண்டுகோளை ஏற்று எர்ணாகுளம் வஸ்திராலயத்தை வழிநடத்தினார். 1933ல் திருப்பூர் கதர் வஸ்திராலயத் தலைவரானார். 1936இல் தமிழ்நாடு சர்க்கா சங்கத் தலைவரானார். 1940 வரை கதர் இயக்கத்தின் தீவிர வெற்றிக்குக் காரணமாக இருந்தனர். ‘கதர்’ அய்யாமுத்து என்றே அவரை அக்காலகட்டத்தில் அழைத்தார்கள்.
1932இல் காந்தி சிறைப்பிடிக்கப்பட்டதை எதிர்த்துப் போராடியதால் ஆறுமாத கடுங்காவல் தண்டனை பெற்றார் அய்யாமுத்துவின் மனைவி. கிட்டத்தட்ட ஆறாண்டுகள் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக சிறையில் இருந்திருக்கிறார் அய்யாமுத்து.

இவர் எழுதிய நச்சுப்பொய்கை அல்லது நாரியர் வேட்கை என்னும் நாடகத்தை மதுரை தேவி பாலவிநோத சபை நிகழ்த்தக் கூடாது என்று 1934ஆம் ஆண்டில் சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் சில மாதங்கள் தடைவிதித்திருந்தார்.

சுதந்திரத்திற்குப் பின்னர் கதரியக்கத்திலும் கிராம நிர்மாணத்திலும் பணியாற்றினார். ராஜாஜியின் அரசியல் வழியைப் பின்தொடர்ந்தார். 1950இல் நாசிக் காங்கிரஸ் மாநாட்டுக்குப் பின் தீவிர அரசியலை விட்டு ஒதுங்கினார். 1960லிருந்து 1967 வரை சுதந்திராக் கட்சியில் பணியாற்றினார்.

கதர் இயக்கத்துக்காக ‘குடிநூல்’ என்னும் இதழை நடத்தி வந்தார். 1951ல் கிணத்துக்கடவு அருகே கோதவாடி என்னும் ஊரில் 23 ஏக்கர் நிலம் வாங்கி ‘காந்தி பண்ணை’ என்று பெயரிட்டு வேளாண்மை செய்து வந்தார். 1975இல் காலமானார்.

தி.சு.அவிநாசிலிங்கம் செட்டியார்:


திருப்பூர் சுப்பிரமணிய அவிநாசிலிங்கம் செட்டியார் (1903- 1991) , வழக்கறிஞர், அரசியல்வாதி, ஆன்மிகவாதி, விடுதலைப் போராட்ட வீரர், காந்தியவாதி, கல்வியாளர் எனப் பல முகங்களை உடையவர்.

அவிநாசிலிங்கம் செட்டியார், திருப்பூரின் கே.சுப்பிரமணியச் செட்டியாருக்குப் பிறந்தவர். திருப்பூர், கோவை, சென்னையில் கல்வி பயின்ற அவிநாசிலிங்கம், சென்னைச் சட்டக் கல்லூரியில் சட்டத்தில் பட்டம் பெற்றவர். இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் போன்ற போராட்டங்களில் பங்கெடுத்தார். இந்திய ராஜாங்க சட்டமன்றத்திலும் பின்னர் இந்திய நாடாளுமன்றத்திலும் உறுப்பினராக இருந்தவர்.

காந்தியக் கொள்கைகளில் தீவிரப் பற்றுடையவர். சமுதாய சீர்திருத்தங்களில் ஈடுபாடு மிக்கவர். ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தைப் பின்பற்றியவர்.

1934ஆம் ஆண்டு அரிசன நலவாழ்வு நிதிக்காக நன்கொடைகள் திரட்ட தமிழகம் வந்த காந்திக்கு ரூ. 2.5 லட்சம் நிதி திரட்டிக் கொடுத்தார். சுதந்திரப் போராட்டக் காலத்தில் 1930, 1932, 1941, 1942 ஆகிய ஆண்டுகளில் நான்குமுறை சிறை சென்றார். 1946ஆம் ஆண்டு சென்னை சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1946 முதல் 1949 வரை தங்குதுரி பிரகாசம், ஓ. பி. ராமசாமி ரெட்டியார் ஆகியோர் முதல்வர்களாக இருந்த சென்னை மாகாண அரசில் கல்வி அமைச்சராகப் பணியாற்றினார். அப்போது உயர்நிலைப் பள்ளிகளில் தமிழை பயில்மொழியாகக் கொண்டுவந்தது இவரது முக்கிய பங்களிப்பாகும். 1946ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சிக் கழகத்தை நிறுவினார். 1954 மற்றும் 1968 ஆண்டுகளுக்கிடையே தமிழில் முதன்முறையாக ஓர் பத்து பாகங்கள் கொண்ட கலைக் களஞ்சியத்தை, பெரியசாமி தூரனை பொறுப்பாசிரியராகக் கொண்டு வெளியிட்டார். நூலகங்களை சீரமைத்தார். விடுதலைப் போராட்ட வீரரும் கவிஞருமான சுப்பிரமணிய பாரதியின் பாடல்களை தேசியமயமாக்கினார். ஆறாம் படிவத்திலிருந்து திருக்குறளை பாடத்திட்டத்தின் ஓர் அங்கமாக்கினார்.

தமது இளம் வயதில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தைச் சேர்ந்த சுவாமி சிவானந்தர், சுவாமி பிரமானந்தர் ஆகியோருடனான தொடர்பால், ராமகிருஷ்ணர் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டார். 1930ஆம் ஆண்டு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ராமகிருஷ்ணா வித்யாலயா பள்ளியைத் துவக்கினார். பின்னர் பெரியநாயக்கன்பாளையத்தில் 300 ஏக்கர் பரப்பில் அமைந்த வளாகத்திற்கு பள்ளியை மாற்றினார். அங்கு ஹரிஜன மக்களின் நல்வாழ்வுக்குப் பாடுபட்டார். விதவை மறுமணம் குறித்தும் போராடி வந்தார். பெண்கள் கல்விக்காக கல்லூரி ஒன்றையும் (தற்போதைய அவிநாசிலிங்கம் மனையியல் நிகர்நிலை பல்கலைக்கழகம்) 1957ஆம் ஆண்டு தொடங்கினார்.

1952 முதல் 1957 வரை திருப்பூர் தொகுதி மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார் . 1958 முதல் 1964 மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். 1991இல் மறைந்தார்.

திருப்பூர் குமரன்:


உயிர் போகும் வகையில் தடியடி பெற்றபோதும் தேசியக் கொடியை விடாமல் போராடி கொடி காத்த குமரன் என்று பெயர் பெற்ற சுதந்திரப் போராட்ட தியாகி திருப்பூர் குமரன் (1904 அக். 4 - 1932 ஜன. 11) என்கிற குமாரசாமி.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் கைக்கோள முதலியார் சமூகத்தைச் சேர்ந்த நாச்சிமுத்து முதலியார் – கருப்பாயி தம்பதியினருக்கு மூன்றாவது மகனாகக் குமரன் பிறந்தார்.

குடும்பச் சூழ்நிலை காரணமாக பள்ளிப் படிப்பை ஆரம்பப் பள்ளியிலேயே முடித்துக் கொண்டார். கைத்தறி நெசவுத் தொழிலை செய்து வந்த குமரன், 1923 இல் ராமாயியைத் திருமணம் முடித்தார். காந்தியின் கொள்கையில் அதிக ஈடுபாடு கொண்ட குமரன், நாட்டு விடுதலைக்காக காந்தி அறிவித்த போராட்டங்களில் கலந்து கொண்டார்.

1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, 1932 ஜன. 10 ஆம் தேதியன்று கையில் தேசியக் கொடியை (ராட்டை பொறிக்கப்பட்ட மூவர்ணக் கொடி) ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்ட்தில் பலத்த காயம் அடைந்தார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஜன. 11இல் உயிர் துறந்தார்.

ஆர்.கே.சண்முகம் செட்டியார்:

கோவையின் சுதந்திரப் போராட்ட வரலாற்றில், மிக முக்கியமான இடம் பிடித்தவர், ஆர்.கே.சண்முகம் செட்டியார் (1892- 1953). காசநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஆர்.கே.எஸ்., மருத்துவர்களின் ஆலோசனைப்படி சில மாதங்கள், உதகையிலுள்ள அவரது பங்களாவில் தங்கியிருந்தபோது, ‘தி இந்து’ ஆங்கில நாளிதழின் நிறுவனர் கஸ்தூரிரங்க ஐயங்காருடன் தொடர்பு ஏற்பட்டது. சிறிய வயதிலேயே, மிகுந்த அறிவும், பரந்த தொலைநோக்கும், அழகான ஆங்கில உச்சரிப்பும் கொண்டிருந்த ஆர்.கே.எஸ்.சைக் கண்டு அதிசயித்த ஐயங்கார், அவரைப் பற்றி காந்தியிடம் கூற, அதன்பின், இருவருக்குமிடையில் நட்பு மலர்ந்தது.

கோவையில் மட்டுமின்றி, தமிழக அளவிலும், தேசிய அளவிலும் நடந்த பல்வேறு விடுதலைப் போராட்டங்களிலும் ஆர்.கே.எஸ்.சின் பங்களிப்பு அதிகம். காந்தி, ஈ.வெ.ரா., தாகூர், ராஜாஜி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களிடமும் நட்புக் கொண்டிருந்த ஆர்.கே.சண்முகம் செட்டியார், தேசத்துக்காக அனைவரையும் இணைக்கின்ற பாலமாகச் செயல்பட்டார்.

கோவை 'சுப்ரி':

மனைவி கமலத்துடன்
கோவை சுப்ரி

கோவை மாவட்டத்தில் கட்சிக்கு கிராமந்தோறும் கிளைகளைத் தோற்றுவித்தவர். 1921இல் நாகபுரியில் நடந்த கொடிப் போராட்டத்துக்கு இவர் சுமார் 12 தொண்டர்களோடு சென்று கலந்துகொண்டு ஓராண்டு சிறை தண்டனை பெற்றார்.

1924ஆம் ஆண்டில் கோவை மாவட்டத்தில் பயங்கர வறட்சி ஏற்பட்டது. மக்கள் பட்டினியால் மடிந்தனர். அரசாங்கம் இதைப் பொருட்படுத்தாமல் அலட்சியம் காட்டியது. ஆனால் சுப்ரி, அவிநாசிலிங்கம் செட்டியார், சி.பி.சுப்பையா ஆகியோர் சேர்ந்து பல நிவாரண உதவிகளைச் செய்து மக்கள் மாண்டு போகாமல் காத்தனர்.

1925இல் அகில இந்திய நூற்போர் சங்கம் திருப்பூரில் தொடங்கப்பட்டது. இதனைத் தொடங்குவதில் கதர் இயக்கத்தின் நாயகரான கோவை அய்யாமுத்துவுடன் சுப்ரியின் பங்களிப்பு முக்கியமானது. இந்த சங்கம் திருப்பூரில் தொடங்கப்பட்ட காலத்துக்குப்பின் கதர் உற்பத்தில் பல கிராமங்களிலும் அதிகரித்தது.

1930இல் மகாத்மா காந்தி தண்டி யாத்திரை மேற்கொண்ட போது அந்த போராட்டம் நடைபெற்ற அனைத்து நாட்களும் சுப்ரி கோவையில் ஊர்வலங்களை நடத்தினார். இந்தப் போராட்டத்தால் சுப்ரி ஓராண்டு கடுங்காவல் தண்டனை பெற்றார்.

1932இல் அந்நிய ஆங்கில அரசு இந்திய காங்கிரஸ் இயக்கத்தை சட்ட விரோதமானது என்று தடை செய்தபோது தலைவர்கள் அடக்குமுறைக்கு ஆளாகினர். அப்போது அந்த அடக்குமுறைச் சட்டத்தை எதிர்த்து போராடியதற்காக சுப்ரி, அவரது இளம் மனைவி கமலம், தாயார் பாகீரதி அம்மாள் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மூவருக்கும் ஆறுமாத கடுங்காவல் தண்டனை கிடைத்தது. இந்த காலகட்டத்தில்தான் திருப்பூரில் போலீசாரின் தடியடியில் குமாரசாமி எனும் தொண்டர் (திருப்பூர் குமரன்) காலமானார்.

1933இல் மறுபடியும் அந்நிய துணிக்கடை மறியலில் ஈடுபட்டு இவரது மனைவி கமலம், மற்ற தொண்டர்களான அம்புஜம் ராகவாச்சாரி, முத்துலட்சுமி, நாராயண சாஸ்திரி ஆகியோர் நான்கு மாத சிறை தண்டனை பெற்றனர். அதே ஆண்டில் ராஜாஜி தலைமையில் திருச்செங்கோட்டில் நடைபெற்ற ஊர்வலத்தில் கலந்து கொண்டமைக்காக சுப்ரி, திருமதி சுப்ரி, கோவிந்தம்மாள், அய்யாமுத்து, உடுமலை சாவித்திரி அம்மாள், பி.எஸ்.சுந்தரம், அவரது மனைவி, தாயார் ஆகியோர் கைதாகி ஆறுமாத தண்டனை பெற்றனர்.

சுப்ரி அகில இந்திய தலைவர்கள் பலரை அழைத்து வந்து கோவை, நீலகிரி மாவட்டங்களில் கூட்டங்களை நடத்தினார். ராஜாஜியுடன் இவர் வேலூர், கடலூர் சிறைகளில் இருந்திருக்கிறார். காந்தியின் சொற்பொழிவுகளை தமிழில் மொழிபெயர்க்கும் வேலையை இவர் செய்து வந்ததனால், இவரை 'மை லெளட் ஸ்பீக்கர்' என்றே காந்தி அன்போடு அழைத்தார்.

1941இல் ஜாலியன்வாலா பாக் தினத்தை அனுசரித்து கூட்டம் நடத்திய காரணத்துக்காக சிறைத் தண்டனை பெற்று பொள்ளாச்சி கொண்டு செல்லப்பட்டார். 1942இல் 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் இவர் பாதுகாப்புச் சட்டத்தின்படி கைது செய்யப்பட்டு வேலூர், தஞ்சாவூர் சிறைகளில் தண்டனை அனுபவித்தார். பிறகு இரண்டு ஆண்டுகள் சிறையில் கழித்தபின் விடுதலையானார்.

இவர் கோவை மாவட்ட காங்கிரஸ் செயலாளர், தமிழ்நாடு காங்கிரஸின் செயற்குழு உறுப்பினர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர், கோவை நகரசபை தலைவர்; 1947 - 1952 காலகட்டத்தில் சென்னை சட்டசபை உறுப்பினர் போன்ற பதவிகளில் பணியாற்றியிருக்கிறார். இவர் முருகப் பெருமானைக் குறித்து ஏராளமான பாடல்களையும் எழுதியிருக்கிறார். அதற்கு 'முருக கானம்' என்று பெயரிட்டார்.

மேலும் பல கோவை ரத்தினங்கள்:

என்.ஜி.ராமசாமி 
என்.ஜி.ராமசாமி (1912 -1943) கோவையில் பிறந்தவர். கோவை மாவட்டத்தின் முதல் சத்தியாகிரகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1937இல் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். கோவை பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தின் நிறுவனத் தலைவராக விளங்கியவர். கோவையில் இரு இடங்களில் சிலை இருக்கும் பெருமை இவருக்கு மட்டுமே.

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர்களுக்கு வாதாட, யாரும் முன்வராத காலத்தில், அவர்களுக்காக இலவசமாக வாதாடி, போராடியவர் சி.சுப்பிரமணியம். அது மட்டுமின்றி, அவர்களின் குடும்பங்களுக்கு உதவிகளையும் செய்தவர். பின்ளாளில் மத்திய அமைச்சரானார். இவரது சித்தப்பா தான் சுவாமி சித்பவானந்தர்.

சுதந்திரப் போராட்டத்தில் கோவை சுப்ரியுடன் இணைந்து செயல்பட்டவர் சி.வி.சுப்பையா; அனல் பறக்கும் பேச்சாளர். கொங்கு மண்டலத்தில் காங்கிரஸ் கட்சியை வளர்த்தெடுத்ததில் இவருக்கும் பெரும் பங்குண்டு.

வேதாரண்யம் நோக்கி, உப்பு சத்தியாகிரகத்தை ராஜாஜி நடத்தியபோது, கோவையைச் சேர்ந்த 16 வயது இளைஞர் ஒருவர் அதில் கலந்து கொண்டதோடு, அங்கிருந்த விடுதலைப் போரின் வீரியத்தை இங்கேயும் கொண்டு வந்து விதைத்தார். அவர்தான், பின்னாளில் கோவையின் முக்கிய தொழிலதிபரான ஜி.கே.சுந்தரம் (1914 - 2009). கோவையின் பிரதானத் தொழிலகமான லட்சுமி குழுமம் இவரது தந்தையால் உருவாக்கப்பட்டது தான்.

ஆசிரியராகப் பணியாற்றிய அப்துல் ரஹீம், மாணவர்களிடம் சுதந்திர வேட்கையைத் துாண்டியதால் ஆங்கிலேயே அரசால் கைது செய்யப்பட்டவர். ரெட்ஃபீல்ட்ஸ் – ரேஸ்கோர்ஸ் இடையிலான சாலைக்கு வைக்கப்பட்டிருப்பது இவரது பெயர்தான்.

பல ஆயிரம் ஏக்கர் நிலங்களைக் கொண்ட பெரும் நிலக்கிழாரான வெள்ளியங்கிரி கவுண்டர், சுதந்திரப் போரில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டதோடு, கள்ளுக்கடை ஒழிப்பில் அதீத அக்கறை காட்டியவர்.

தனிநபர் சத்தியாக்கிரகத்தை முன்னெடுத்த பழனிசாமி கவுண்டர், போராட்டங்களில் ஈடுபட்டு பல ஆண்டுகள் சிறையில் கழித்த சின்னத் தடாகம் வீரபத்ர கவுடர் என, கோவை மண்ணில் விடுதலைக்காகப் போராடியவர்கள் ஏராளம்.

வெடிமருந்து ரயில் கவிழ்ப்பு:

1930ல், திருச்சியிலிருந்து வேதாரண்யம் நோக்கி, உப்பு சத்தியாக்கிரகத்தை ராஜாஜி நடத்தியபோது, தமிழகத்தின் பல பகுதிகளில் அந்தப் போராட்டம் பரவியது; அப்போது, கோவையில் உள்ள வாலாங்குளத்தின் கரையில், உப்பு சத்தியாக்கிரகம் நடத்தப்பட்டது.

1942-இல் இரண்டாம் உலகப்போர் உச்சத்தில் இருந்தபோது, ஆங்கிலேய ராணுவத்துக்காக நீலகிரி, அருவங்காட்டில் வெடிபொருட்கள் தயாரிப்பு தீவிரமாக நடந்துவந்தது; அவற்றை ஏற்றிக்கொண்டு, கோவை வழியாக போத்தனுார் சென்ற சரக்கு ரயிலை வாலாங்குளத்தைக் கடக்கும்போது சுதந்திரப் போராளிகள் கவிழ்த்து விட்டனர். அதுதொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர்.

அக்காலத்தில், சூலுாரில் இருந்த விமான நிலையத்தைத் தாக்கவும், கள்ளுக்கடைகளுக்குத் தீ வைக்கவும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் முயற்சித்தனர்; ஆனால், போராட்டத்தை ஒருங்கிணைக்க சரியான தலைமை இல்லாததால், ஆங்கிலேய அரசுக்குச் சொந்தமான சில லாரிகளுக்கு தீ வைத்ததுடன், அந்தப் போராட்டம் முடங்கியது.

ஜி.எஸ்.லட்சுமண ஐயர்:

ஜி.எஸ்.லட்சுமண ஐயர் (1918 - 2011) இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், சமூகச் சேவரும், ஜாதியப் பாகுபாடு எதிர்ப்பாளரும் ஆவார். இவர் தற்போதைய ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையத்தில் பிறந்தார்.

இவர் காந்தியடிகளின் சத்தியாகிரக வழியை சுதந்திரப் போராட்டத்திற்கு மட்டும் பயன்படுத்தியவர் அல்ல. தனது வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் காந்தியடிகளின் கொள்கையை கடைபிடித்து வாழ்ந்தார்.

இவர் 1952 -1955 மற்றும் 1986 -1991 ஆகிய ஆண்டுகளில், கோபிசெட்டிப்பாளையம் நகராட்சித் தலைவராக இருந்தபோது நகராட்சியில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலையை தடை செய்தார். இந்தியாவிலேயே இந்தத் திட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் தான் முதன்முதலில் கொண்டு வரப்பட்டது.

1928ஆம் ஆண்டு தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தை காந்தியடிகள் அறிவித்த போது அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். அவரது பகுதியிலிருந்து ஆதிதிராவிட மக்களை அழைத்து சமபந்தி விருந்து நடத்தினார். அவரது வீட்டுக் கிணற்றிலிருந்து அனைத்துத் தரப்பு மக்களையும் தண்ணீர் எடுத்துச்செல்ல அனுமதித்தார். இதனால் தனது உறவினர்களாலேயே ஒதுக்கி வைக்கப்பட்டார். அவர் மட்டுமின்றி லட்சுமண அய்யரின் சகோதரியான ஆனந்தி லட்சுமியையும், அவரது புகுந்த வீட்டினர் பிறந்த வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டனர்.

திருமணத்திற்குப் பின்னர் லட்சுமண ஐயர் தனது மனைவி லட்சுமியையும், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடச் செய்தார். சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவருடைய சேவையால் கவரப்பட்ட காந்தி அடிகள் இவரை ‘ஹரிஜன சேவா சங்கத்தின்’ அமைப்புச் செயலாளராக நியமித்தார். தீண்டாமையால் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக காந்தியின் அழைப்பை ஏற்று அவர் பணி செய்தார். 2011 இல் இவர் காலமானார். தனது செல்வம் முழுவதும் எளிய மக்களின் நலனுக்காக செலவிட்ட பெருந்தகை இவர்.

கே.பி.சுந்தராம்பாள்:

கொடுமுடி கோகிலம் என்று அழைக்கப்பட்ட கே.பி.சுந்தராம்பாள் (1908 - 1980), காங்கிரஸ் பிரசாரங்களில் தவறாது ஈடுபட்டு வந்தார். கதர் இயக்கம், தீண்டாமை ஒழிப்பு, வெள்ளை ஏகாதிபத்திய எதிர்ப்பு தொடர்பான பாடல்களையும் பாடி வந்தார். 1958இல் தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னாளில் திரைப்பட நடிகையாகப் புகழ் பெற்றார்.

முதல்வரான போராளி ப.சுப்பராயன்:

பரமசிவ சுப்பராயன் (1889 –1962) சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வராவார். திருச்செங்கோடு அருகே உள்ள குமாரமங்கலம் கிராமத்தின் ஜமீன்தாராகிய இவர், தனது வாழ்நாளில் சென்னை மாகாணத்தின் உள்ளாட்சித் துறை அமைச்சர், கல்வி மற்றும் சட்ட அமைச்சர், உள்துறை அமைச்சர், சட்டமன்ற மேலவை உறுப்பினர், இந்தோனேசியாவுக்கான இந்தியத் தூதுவர், நாடாளுமன்ற லோக்சபா உறுப்பினர், ராஜ்யசபா உறுப்பினர், மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர், மகாராஷ்டிர மாநில ஆளுநர் போன்ற பல பதவிகளை வகித்தவர்.

சுப்பராயன் 1922-ஆம் ஆண்டு தென்மத்தியப் பிரதேச நிலச்சுவான்தார்களின் பிரதிநிதியாக சென்னை மாகாண சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார். பேரவையின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். ஆரம்பத்தில் நீதிக்கட்சிக்குச் சார்பாகச் செயல்பட்ட சுப்பராயன் பின்னர் சட்டமன்றத்தில் ஆளும் நீதிக்கட்சிக்கு எதிராகவே செயல்படத் தொடங்கினார்.

1926 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், நீதிக்கட்சி தோற்று சுயராஜ்யக் கட்சி (இந்திய தேசிய காங்கிரசின் அரசியல் பிரிவு) வென்றது. ஆனால் இரட்டை ஆட்சி முறையின் கீழ் ஆட்சி அமைக்க விருப்பமில்லாமல், பதவி ஏற்க மறுத்துவிட்டது. சுப்பராயன் இத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்றிருந்தார். அப்போது சென்னை ஆளுநரின் ஆலோசனைப்படி, சுப்பராயன் தலைமையில் சுயேச்சைகள் மற்றும் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட அரசு அமைந்தது. சுப்பராயன் முதல்வரானார்.

சுப்பராயனது ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் முதன்முறையாக அரசாங்க வேலைகளில் ஹரிஜனங்களுக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணை அமல்படுத்தப்பட்டது.

1930 தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நீதிக்கட்சியின் முனுசாமி நாயுடு முதல்வரான போது, சுப்பராயன் எதிர்க்கட்சித் தலைவரானார். தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். 1933 ஆம் ஆண்டு காங்கிரசில் முறையாக இணைந்தார்.

1937 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்திற்கு மாநில சுயாட்சி வழங்கப்பட்டபின், சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ராஜாஜி அமைச்சரவையில் சட்டம் மற்றும் கல்வித் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். 1939இல் ராஜாஜி அரசு ஆங்கிலேயரை எதிர்த்து பதவி விலகியது. 1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றார். 1946இல் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்டபோது, ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகப் பணியாற்றினார். 1947இல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய முதலாம் இந்திய நாடாளுமன்றத்தின் உறுப்பினராக இருந்தார். பின்னர் மத்திய அரசில் பல பணிகள் ஆற்றிய சுப்பராயன், 1962-இல் காலமானார்.

நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை:


நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை (1888 - 1972) தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். உப்பு சத்யாகிரஹத்தின்போது பிரபலமாகப் பாடப்பட்ட ‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’ போன்ற தேசபக்திப் பாடல்களைப் பாடிய இவர் தேசியத்தையும், காந்தியத்தையும் போற்றியவர்.

ஆரம்பத்தில் பாலகங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இவர் மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்ட பின்னர் அறப் போராட்டத்தால் மட்டுமே விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர். இவரது கவிதைகள் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி இருந்ததால் இவர் ‘காந்தியக் கவிஞர்’ என அழைக்கப்படுகிறார்.

ராமலிங்கனார் தற்போதைய நாமக்கல் மாவட்டம், மோகனூரில் பிறந்தார். அவரது தந்தை மோகனூரில் காவல்துறையில் பணிபுரிந்து வந்தார். நாமக்கல், கோயம்புத்தூரில் பள்ளிக் கல்வி பயின்றார். 1909 இல் பி.ஏ. திருச்சியில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரியில் பயின்றார். இவர் ஆரம்பகாலத்தில் நாமக்கல் தாசில்தார் அலுவலகத்தில் எழுதாளராகவும் பின்னர் தொடக்கப் பள்ளி ஆசிரியராகவும் பணியாற்றினார். திருச்சிராப்பள்ளி மாவட்ட காங்கிரசின் செயலாளராகவும், கரூர் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும், நாமக்கல் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றியவர். தேசபக்தி மிக்க தமது பேச்சினால் பல இளைஞர்களை தேசத் தொண்டர்களாக மாற்றியவர்.

அரசின் தடையுத்தரவையும் மீறி, கூட்டங்களில் சொற்பொழிவாற்றியவர். 1930 இல் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றவர். ‘தமிழ்நாட்டின் முதல் அரசவைக் கவிஞர்’ பதவியும்,  ‘பத்ம பூஷண்’ பட்டமும் பெற்றவர். சாகித்ய அகாதெமியில் தமிழ்ப் பிரதிநிதியாகவும் பொறுப்பு வகித்தவர்.

‘தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா’ என்கிற வீரநடைக்கு வித்திட்ட அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் நினைவில்லமாக அமைக்கப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலகத்திலுள்ள பத்து மாடிக் கட்டடத்திற்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ராஜரிஷி அர்த்தநாரீஸ்வர வர்மா:


சுதந்திரப் போராட்ட வீரர், கவிஞர், பத்திரிகையாளர் எனப் பண்முகங்களைக் கொண்டவர் அர்த்தநாரீஸ்வர வர்மா (1874- 1964). இவர் சேலத்தில் பிறந்தவர். திருப்பூந்துருத்தி மடத்தில் குருகுலக் கல்வியை முடித்த இவர், தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதத்தில் புலமை பெற்றவர். இவர் அர்தநாரீஸ்வர கவுண்டர், ராஜரிஷி என்றும் அழைக்கப்படுகிறார்.

சுதந்திரக் கருத்துக்களைப் பரப்புவதற்காக ‘சத்திரியன்’ என்ற பத்திரிகையை 1923லில், பி.மாணிக்கம் பிள்ளை என்பவரை பதிப்பாளராக வைத்து தொடங்கினார் வர்மா. 1931இல் ‘வீரபாரதி’ என்ற பத்திரிகையின் ஆசிரியரானார் வர்மா. இந்தப் பத்திரிகைக்கான நிதி ஆதாரத்தை காங்கிரஸ் கட்சி தந்தது.

இந்திய மொழி பத்திரிகைகளுக்கான தணிக்கைச் சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டுவந்தது அன்றைய ஆங்கிலேய அரசு. அரசுக்கு எதிரான வன்முறைகளை தூண்டிவிடும் பத்திரிகைகள் பட்டியலிடப்பட்டன. அதில், தமிழகத்திலிருந்து வெளிவந்த வீரபாரதி, விஷ்வ கர்நாடகா, காங்கிரஸ் பத்திரிகைகளும் இருந்தன. வர்மா, பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதி இருக்கிறார்.

சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்:


ராஜாஜி என்றும், சி.ஆர். என்றும் அழைக்கப்படும் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (1878 - 1972), வழக்கறிஞர், விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி, எழுத்தாளர் எனப் பன்முகங்களை உடையவர். தற்போதைய கிருஷ்ணகிரி மாவட்டத்தில் (பழைய சேலம் மாவட்டம்) ஓசூருக்கு அருகிlலுள்ள தொரப்பள்ளி கிராமத்தில் பிறந்தவர். சுதந்திரப் போராட்டத்தின்போது, காங்கிரஸ் கட்சியில் காந்தி, நேருவை அடுத்த மூன்றாவது தளபதியாக மிளிர்ந்தவர்.

இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக (1948 - 1950) பணியாற்றியவர். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர், சென்னை மாகாண முதமைச்சர் (1937- 40), சென்னை மாநில முதல்வர் (1952 - 1953), மேற்குவங்க ஆளுநர், மத்திய உள்துறை அமைச்சர் போன்ற பல பதவிகளில் பணியாற்றியுள்ளார். பாரதரத்னா விருதைப் பெற்றவர். பிற்காலத்தில் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 1959இல் சுதந்திரா கட்சியைத் தொடங்கினார்.

1900இல் வழக்கறிஞர் தொழிலை நன்கு நடத்தி வந்த ராஜாஜி, சேலம் விஜயராகவாச்சாரியாரின் அடியொற்றி பின்னர் அரசியலில் ஈடுபட்டார். 1917இல் சேலம் நகராட்சி உறுப்பினராகவும், நகராட்சித் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து சட்ட மறுப்பு இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், வைக்கம் சத்தியாகிரகம் போன்றவற்றில் ஈடுபட்டார். 1930 ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரையை ஒட்டி வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகம் நடத்தி சிறை சென்றார்.

ராஜாஜி தமது எழுத்தாற்றலால் ஆங்கில இலக்கியத்திற்கு பெரும் பங்களித்துள்ளார். தமிழிலும், சக்கரவர்த்தி திருமகன் (ராமாயணம்), வியாசர் விருந்து (மகாபாரதம்) ஆகிய உரைநடைக் காவியங்களை அழகிய தமிழில் எழுதியுள்ளார்.

இந்திய தேசிய காங்கிரஸின் கொள்கைகளில் ஒன்றான மதுவிலக்குக் கொள்கையில் ராஜாஜி ஈடுபாடு உடையவராக இருந்தார். அவர் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக 1937ஆம் ஆண்டில் பொறுப்பேற்ற பின்னர், அன்றைய சேலம் மாவட்டத்தில் மதுவிலக்கை அமல்படுத்தினார். அதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்ட 1939ஆம் ஆண்டில் விற்பனை வரியை விதித்தார். 1952ஆம் ஆண்டில் சென்னை மாகாண முதல்வராக இரண்டாம் முறை இருந்தபொழுது மாகாணம் முழுக்க மதுவிலக்கை அமல்படுத்தினார்.

(இன்னும் வரும்)




No comments:

Post a Comment