16/09/2021

தமிழ் இலக்கியத்தில் அர்ஜுனன்

-பா.இந்துவன்

அர்ஜுனன் தவம்  சிற்பம் (மாமல்லபுரம்)

மகாபாரத இதிகாசம் குறித்து பழந்தமிழ் இலக்கியங்களில் ஆதாரம் உள்ளதா என்று நண்பர் ஒருவர் கேட்டிருந்தார்.  

மகாபாரத நிகழ்வுகள் பலவும் சங்க இலக்கியங்களில் கொட்டிக் கிடக்கும்போது, மகாபாரதத்தின் கதாநாயகனான  ‘வில்லுக்கு விஜயன்’ என்று  இளங்கோவடிகளால் புகழப்பட்ட அர்ச்சுனனைப் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் எப்படி இல்லாமல் போகும்? 

சங்க இலக்கியங்களில் ஒன்றான  ‘சிறுபாணாற்றுப்படை’ என்ற ஆற்றுப்படை நூலில் அர்ச்சுணன் காண்டவ வனத்தை அழித்து அக்னி தேவனின் பசியை ஆற்றிய செய்தி இடம்பெற்றுள்ளது. இதே நிகழ்வை இளங்கோவடிகளும் சிலப்பதிகாரத்தில் பதிவு செய்துள்ளார்.
கா எரியூட்டிய கவர் கணைத் தூணிப்
பூ விரி கச்சைப் புகழோன் தன் முன்
பனி வரை மார்பன் பயந்த நுண் பொருள் 
பனுவலின் வழாஅப் பல் வேறு அடிசில்

- சிறுபாணாற்றுப்படை.

பொருள்: 

நெருப்புக் கடவுள் (அக்னி தேவன்) வேண்டியதால் காண்டவம் என்ற காட்டினை எரித்த அம்பையுடைய அம்புறாத்தூணியையும் பூக்கள் வரைந்த கச்சையை அணிந்த அர்ச்சுனனின் அண்ணனாகிய, பனியுடைய இமயத்தைப் போன்ற மார்பையுடைய வீமசேனன், எழுதிய நுண்மையான சமையல் குறிப்புகளுடைய நூல் சங்ககாலத்தில் இருந்ததை இந்த சிறுபாணாற்றுப்படை பதிவு செய்கிறது!

இந்நிகழ்வை சிலப்பதிகாரத்தின் வழியே கண்டால்,

கூல மறுகும் கொடித்தேர் வீதியும் 
பால்வேறு தெரிந்த நால்வேறு தெருவும் 
உரக்குரங்கு உயர்த்த ஒண்சிலை உரவோன் 
காவெரி யூட்டிய நாள்போற் கலங்க 
அறவோர் மருங்கின் அழற்கொடி விடாது 
மறவோர் சேரி மயங்கெரி மண்டக் கறவையும் 
கன்றும் கனலெரி சேரா

- சிலப்பதிகாரம்.

பொருள்: 

தானியம் விற்கும் கடைவீதி, கொடி கட்டிய தேர்கள் செல்கிற தேர்வீதி, பிராமணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற நால்வர்ணத்தவரும் வாழும் தெருக்கள் மதுரையானது, வலிமையான குரங்கான அனுமனை தன் கொடியில் வைத்திருந்த வில் ஆற்றலில் வல்லவனாகிய அர்ச்சுனன் காண்டவ வனத்தை தீயில் எரித்தபோது அந்த காடு தீயில் எரிந்தது போல முழுவதும் எரிந்து சாம்பலாகின. என்று மதுரை தீக்கிரையான தகவலை மகாபாரத்ததுடன் ஒப்பிடுகிறார் இளங்கோவடிகள்.

இந்தப் பழமையான இரு இலக்கியங்கள் வழியாக நாம் அறியப்பெறும் மகாபாரத கதாப்பாத்திரங்கள்:

1. அர்ச்சுனன்
2. பீமன்
3. அனுமன்
4. அக்னிதேவன்

இவ்வாறாக வில்லுக்கு விஜயனாகிய அர்ச்சுனனை இளங்கோவடிகள் முதல் சங்க இலக்கியங்கள் வரை புகழ்ந்து பேசுகின்றன. 


குறிப்பு:

திரு. பா.இந்துவன், முகநூலில் தீவிரமாக இயங்கும் இளைஞர். தேசியம் வளர்க்கும் சங்க இலக்கியங்கள் குறித்த இவரது பதிவுகள் பெரும் வரவேற்பு பெற்று வருகின்றன.



No comments:

Post a Comment