16/09/2021

கொன்றைவேந்தன் - விளக்கவுரை (பகுதி - 1)

-பத்மன்

ஔவையார்


கடவுள் வாழ்த்து

கொன்றை வேந்தன் செல்வன் அடியினை

என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே! 

விளக்கம்:

கொன்றைப்பூ மாலையை அணிந்த சிவபெருமானின் செல்வனாகிய பிள்ளையாரை என்றும் போற்றி வணங்குவோம்.

இங்கே பிள்ளையார் என்பது விநாயகரைக் குறிக்கும். அவர்தம் சகோதரரரான முருகப்பெருமானையும் பிள்ளையார் எனப் பழந்தமிழ் இலக்கிய உரைகள் கூறுகின்றன.

இது இடைக்கால ஔவையார் இயற்றியது. சங்ககாலத்தில் விநாயகரைக் குறிக்கும் பாடல் எதுவும் இல்லை எனத் தெரிய வருகிறது. தெற்கிலே விநாயகர் மூத்தவர், கந்தன் இளையவர் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் வடக்கிலே ஸ்கந்தன் மூத்தவர், கணபதி இளையவர்; ஸ்கந்தன்தான் பிரமச்சாரி. கணபதிக்கு சித்தி- புத்தி என இருதேவியர்.

வினைகளை வேரறுக்க இறையருளும் வேண்டும், நமது நுண்ணறிவும் வேண்டும் என்பதே இதன் உட்பொருள்.

கடவுள் வாழ்த்தில் கொன்றைவேந்தன் எனத் தொடங்கியதால் இந்நூல் ‘கொன்றைவேந்தன்’ எனப் பெயர் பெற்றது.

சிவபெருமானுக்கு ஏன் கொன்றைவேந்தன் எனப் பெயர்?

கொன்றை அகண்டபாரதப் பகுதியில் மட்டுமே காணப்படும் அபூர்வப்பூ. சாலையோரங்களில் பூத்துக் குலுங்கும் எளிய பூ.

ஆண்டின் தொடக்கமாகிய சித்திரை மாதத்தில் மஞ்சள் நிறத்தில் கொத்துக்கொத்தாகப் பூக்கத் தொடங்கும்.

மூவா முதல்வன், மங்களகரமானவன், பக்தருக்கு எளியவன் என்பதைக் குறிக்கும் வகையில் சிவபெருமான் கொன்றைப்பூவைச் சூடி கொன்றைமாலை அணிகிறார்.

அக்காலத்தில் பகைவரைக் கொன்று வெற்றியோடு திரும்பும் வீரர்களுக்கு கொன்றைப்பூ தூவியும் சூடியும் வரவேற்பதுண்டு. முத்தீமைகளான திரிபுர அசுரர்களைக் கொன்றவன் என்பதால் சிவனது பூஜையில் கொன்றைப்பூ சிறப்பு பெறுகிறது எனப் பெரியோர் கூறுவர்.

வைத்தீஸ்வரனான சிவனுக்கு உகந்த கொன்றைப்பூ, சருமநோய், இதயநோய், மூலம் ஆகிய நோய்களைத் தீர்க்கும் மருத்துவ குணம் கொண்டது.

***
கொன்றைவேந்தன்- 1

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

விளக்கம்:

தாயும் தந்தையுமே நாம் முதலில் அறியக்கூடிய தெய்வம்.

தெய்வம் என்பது தீ என்ற வேர்ச்சொல்லில் இருந்து உருவானது. தீ ஒளியாக இருக்கிறது, அச்சம் தரக் கூடியது; ஆக்குவதற்கும் அழிப்பதற்கும் பயன்படுகிறது. தெய்வத்தின் தன்மையும் அதுவே. ஒளிதான் அறிவு. வெப்பமே இயக்கம். ஆக்கும்- அழிக்கும் செயலை இறையே செய்கிறது. அன்பே வடிவானாலும் அச்சம் தரக்கூடியதுமாகும். அனைத்தையும் படைத்த அந்த இறையை அறிவது எப்படி?

தெரிந்த ஒன்றைக்கொண்டே தெரியாத ஒன்றைத் தேர முடியும்.

அவ்வகையில் நம்மைப் படைத்த நம் பெற்றோரே நாம் முதலாவதாக அறியக்கூடிய தெய்வம். அவர்கள் நம்மை இந்த உலகுக்கு அறிமுகப்படுத்தியோடு அறியாத பருவத்தில் நம்மை நன்கு வளர்ப்பதுடன் ஓரளவு அறியத் தொடங்கும்போது நம்மிடம் அன்போடு தேவையான கண்டிப்பையும் காட்டி சரியாக வழிநடத்துகிறார்கள்.

அவர்களைப் போன்றுதான் தெய்வமும். ஆகையால் நாம் முதலில் நன்றிக்கடன் பட்டுள்ள தெய்வம் பெற்றோரே. அவர்கள் தெய்வம் என்பதை முதலில் நாம் அறிந்துகொண்டால் அந்த இறையை அறிவது எளிது.

அதேநேரத்தில் அன்னை என்ற தமிழ்ச் சொல்லோடு பிதா என்ற சம்ஸ்கிருதச் சொல்லையும் ஔவையார் ஒருசேரப் பயன்படுத்தியுள்ளார். ஆகையால் தெய்வத்தை அறிய தமிழும் சம்ஸ்கிருதமும் தேவை. இரண்டுமே இறைமொழிகள், நிறைமொழிகள். தெய்வங்கள் என்று பிரித்துச் சொல்லாமல் தெய்வம் என்று ஒன்றாய் இணைத்துச் சொல்லியிருப்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

***
கொன்றைவேந்தன்- 2

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

விளக்கம்:

கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபடுவது மிகவும் நல்லது.

தனக்குள்ளேயே, வீட்டிலேயே இறைவனை வழிபட்டால் போதாதா? ஏன் ஆலயம் சென்று தொழ வேண்டும்?

இறைவனை வணங்குவது நல்லது. ஆலயம் சென்று வணங்குவதோ மிகவும் நல்லது. ஏன்?

ஏனென்றால் தனிமனிதனுக்கு சமுதாய உணர்வு மேலோங்குவதற்காக. ஆன்மிகம் என்பது தனிமனித ஒழுக்கம், உயர்வுக்காக மட்டுமல்ல, சமுதாய மேம்பாட்டுக்காகவும் தான்.

அதனால்தான் மகாகவி பாரதி சொல்கிறார்: “கோவில்எதற்காக? ஜனங்களுக்குள் ஐக்யம் ஏற்படுவதற்காக. ஒன்றுகூடி வணங்குவது ஆன்ம ஒருமையை உணர்வதற்காக. மிருக நிலையில் இருந்து மனிதரை தேவநிலைக்கு உயர்த்தும் தேவப் பள்ளிக்கூடங்களே கோவில்கள்.”

உண்மைதான். கோவிலுக்குச் சென்று இறையை தியானிப்பது மாபெரும் கூட்டத்திலும் தனித்திருப்பதற்கான மனப்பயிற்சி. பிராகாரம் சுற்றுவது நடைப்பயிற்சி. புராணத் தத்துவங்களைக் கேட்பதும், பேசுவதும் மொழி- இலக்கியப் பயிற்சி. பாசுரங்களை, ஸ்லோகங்களைப் பாடுவதுமொழி- இசைப் பயிற்சி.

சிற்பங்கள், சித்திரங்களைக் காணுவது, கலை, நாடகப் பயிற்சி. ஒன்றுகூடுவது கூடிவாழும் பயிற்சி. மரம், பூந்தோட்டம், குளம் உருவாக்கிக் காப்பதோடு ஆலயத்தூய்மை பேணுவது சுற்றுச்சூழல், ஆரோக்கியப் பயிற்சி.

இப்படி பல பயிற்சிகளை நமக்களிக்கும் அற்புதப் பள்ளிக்கூடங்கள் அல்லவோ ஆலயங்கள்?

ஆலயங்கள் அக்காலத்தில் அச்சு அசல் சமுதாய மையங்களாகவே திகழ்ந்தன. கோவில்களில் தானிய சேமிப்புக் கிடங்குகள் இருந்ததோடு பஞ்சக்காலத்தில் அவைமக்களுக்குப் பயன்பட்ட வரலாற்றுச் சான்றுகள் உண்டு. உள்ளூரில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டும் ஊர்ப் பஞ்சாயத்துகள் கோவில் வளாகங்களிலேயே நடந்தேறின.

பெரிய ஆலயங்கள் போர்க்காலத்தே பாதுகாப்புப் பாசறைகளாகவும் திகழ்ந்தன. இன்றும்கூட குலதெய்வ வழிபாடும் தீர்த்த யாத்திரைகளும் நமது பண்பாட்டு வேர்களைப் பாதுகாப்பதோடு, தேச ஒருமைப்பாட்டையும் வளர்க்கின்றன. கோவில் விழாக்கள் கலை, இலக்கிய, கலாசார வளங்களைப் பேணுகின்றன.மக்களின் மனத்தைச் செம்மைப்படுத்தி உயர்த்த ஆலயங்கள் பல்வேறு வழிகளில் உதவுகின்றன.

ஆகையால் ஆன்மிக, வாழ்வியல் வளர்ச்சிக்கூடங்களான ஆலயங்களில் சென்று தொழுவது மிகுந்த நன்மை தருவதாகும்.

***
கொன்றைவேந்தன்- 3

இல்லறம் அல்லது நல்லறம் அன்று

விளக்கம்:


இல்வாழ்க்கை வாழ்வதைவிட மிகச் சிறந்த அறம் வேறொன்றுமில்லை.

இல் அதாவது இல்லம் என்பது வெறும் வீட்டை மாத்திரம் குறிப்பது அல்ல, குடும்பமாக சேர்ந்து வாழ்வதற்கான இடம் என்பதையே குறிப்பாகக் குறிக்கிறது.

இதன் அடிச்சொல்லான ‘இல்’ என்ற சொல், முறையாகத் திருமணம் முடித்து கணவன்- மனைவி, பிள்ளைகள், பெற்றோர் என சேர்ந்து வாழ்வதைக் குறிக்கிறது. மானுட சமுதாயத்தின் அடிப்படையே குடும்ப வாழ்வு முறையாகும். அந்தக் குடும்ப வாழ்க்கை முறையை முறையாகக் கடைப்பிடித்து ஒழுகுவதற்குப் பெயர்தான் இல்லறம்.

அறம் என்றால் அறுக்கப்பட்டது, வரையறை செய்யப்பட்டது என்று பொருள். ஆகையால் இல்லறம் என்பது, இல்வாழ்க்கையை இவ்விதம் வாழ வேண்டும் என்ற குறிக்கோளோடு, நெறிமுறையோடு வாழுகின்ற உயரிய செயலாகும். எனவேதான் இல்லறத்தைவிடச் சிறந்த நல்லறம் வேறு எதுவும் இல்லை என்கிறார் ஔவையார்.

இல்லறத்தில் தான் எல்லாவகையான அறங்களையும் பேணுவது இயல்பாக நிகழ்ந்தேறுகிறது. இதனைத்தான் தென்புலத்தார் எனப்படும் முன்னோர், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தன் குடும்பத்தினர் என ஐவகையினருக்கும் உரிய கடமைகளை நிறைவேற்றுவது தலையாயது என்று கூறி, இல்லறத்தின் முக்கியத்துவத்தை நிலைநாட்டுகிறார் திருவள்ளுவர் (திருக்குறள்- 43).

இல்லறத்தின் பெருமையைப் பறைசாற்றுவதில் மகாகவி பாரதியின் ‘பகவத்கீதை - முன்னுரை’ மிகச் சிறந்த மணிமகுடம் ஆகும். பகவத்கீதையின் மையக்கருத்து கர்மயோகமே என்பதைச் சிறப்பாக எடுத்துரைக்கும் பாரதி, அதற்கு அடிநாதமாக இருப்பது இல்லறமே என்பதைத் தெளிவுபட நிறுவுகிறார்.

“பௌத்தம் ஜீவகாருண்யம், சர்வஜன சமத்துவம் ஆகியவற்றை ஊன்றச் செய்தபோதிலும், ஜகத்தின் ஒளிபோன்ற பத்தினியைத் துறந்தவர்களே மேலோர் என்று வைத்து உலகம் பொய்மயம், துக்கமயம் என்று கூறி, மனித நாகரிகத்தை நாசம் செய்ய முயன்றது” என்றும் குற்றம் சாட்டுகிறார். வேதகாலத்திலே ரிஷிகள் பத்தினிகளோடுதான் வாழ்ந்தார்கள் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

இறைத்தொண்டு, சமுதாய சேவைக்காக இல்லறத்தைத் துறந்து துறவறம் பூணுவது என்பது வேறு; உழைக்கச் சோம்பல்பட்டு, வாழ்க்கை இடர்களுக்கு பயந்து துறவுக்கோலம் கொள்வது வேறு. அவ்வகை துறவைத்தான் பாரதி சாடுகிறார்.

எல்லோருமே சாமியாராகப் போய்விட்டால் வாழ்க்கைக்குத் தேவையான இதர செயல்களைச் செய்வது யார்? நல்ல துறவிகளைக் காப்பாற்றவும், சேவையாற்றவும்கூட இல்லறத்தார் தேவை. இதுஒருபுறம்.

தற்காலத்திலே குடும்பச்சுமைகள் என்ற கற்பனை அச்சங்களால் தனித்து வாழ்வோரும், வெறும் உடல்சுகந்தானே இல்வாழ்க்கை எனக் கருதி, முறையான இல்வாழ்க்கையின்றி கூடிவாழ்வோரும் அதிகரித்து வருவது மறுபுறம். அக்காலத்திலும் உடன்போக்கு என்ற பெயரில் இது இருந்திருக்கிறது. இதனை அறமன்று எனச் சான்றோர்கள் கருதியதால் வதுவைமுறை வந்தது.

எனவே, இல்வாழ்க்கை இல்லாத தனிவாழ்க்கையோ, இணைவாழ்க்கையோ அறமாகாது, சிறப்புடையதாகாது என்பதையும் உணர்த்தும் வகையில்தான் இல்லறமல்லது நல்லறமன்று என மொழிந்துள்ளார் ஔவையார்.

***
கொன்றைவேந்தன்- 4

ஈயார் தேட்டை தீயார் கொள்வர்

விளக்கம்:


பிறருக்கு உதவாத கருமி சேர்த்துவைத்திருக்கும் செல்வத்தை தீயவர்கள் அபகரித்துக் கொள்வர்.

‘செல்வத்துப் பயனே ஈதல்’ என்கிறார் புறநானூற்றுப் பாடல் ஒன்றில் நக்கீரர்.

‘சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல் செல்வந்தான் பெற்றதால் பெற்ற பயன்’ என்று வலியுறுத்துகிறார் திருவள்ளுவர். நம்மிடம் செல்வம் சேர்ந்திருப்பது நமது சுற்றத்தார், நண்பர்கள், வறிய நிலையில் உள்ள பிறர் ஆகியோருக்கு உதவுவதற்காக என வாழ்வது மிகச் சிறப்புடடையது. எனவே, அவ்வாறு இல்லாமல், பூதம் காத்த புதையல் போல் பயனின்றிச் செல்வத்தைச் சேர்த்துவைத்தால் அச்செல்வம் தீயவர்கள் கவர்ந்துசெல்லவே துணைநிற்கும் என எச்சரிக்கிறார் ஔவையார்.

ஈயார் என்பதை இப்படியும் பார்க்கலாம். நம்மிடம் உள்ள அறிவுச்செல்வத்தை நம் சந்ததியினருக்கு ஈயாமல் வைத்திருந்தால் அதனைத் தீயவர்கள் களவாடியும் அபகரித்தும் தமக்கு உரிமை ஆக்கிக்கொள்வார்கள். திரித்துப் பொருள்கூறி நம்மையே ஏமாற்றுவார்கள்.

வேதம், இதிகாசங்கள், சங்க இலக்கியங்கள், தமிழ்ப்பாசுரங்கள், சித்த- ஆயுர்வேத மருத்துவ முறைகள் போன்றவற்றை மரபுவழியே சரியாக ஈயாததன் பலனை இப்போது நாம் அனுபவித்து வருகிறோம். ஆகையால் ஈதலே எவ்வகையிலும் இன்பம்.

***
கொன்றைவேந்தன்- 5

உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு

விளக்கம்:


உணவை அளவோடு உட்கொள்ளுதல் பெண்களுக்கு அழகு சேர்க்கும்.

பெண்களுக்கு உடல்பருமனால்தான் பல வியாதிகள் வருகின்றன. இதனைத் தடுக்க பெண்கள் தாங்கள் உட்கொள்ளும் உணவைச் சுருக்க வேண்டும் என்கிறார். இதைக் கேட்டவுடன், என்ன இது, ஆணாதிக்க மனோபாவம் எனக் குதிக்க வேண்டாம். இதனைச் சொன்னவர் பெண்பாற் புலவரான ஔவையார்.

பெண்கள் சாப்பிடவே கூடாது, மிகக் குறைவாகவே உண்ண வேண்டும் என அவர் கூறவில்லை. ‘உண்டி சுருங்குதல்’ என்பதன் உட்பொருள் உணவுக் கட்டுப்பாடு. இதனைத்தான் இன்றைய மருத்துவம் ‘டயட் மேனேஜ்மென்ட்’ என்கிறது. இயல்பாக நடக்க வேண்டிய உண்டி சுருங்குதல் இல்லாததால், ஊருக்கு ஊர் ஸ்லிம் சென்டர்கள் பெருகிவிட்டன. உணவைச் சுருக்குதல் என்றால் உடல்எடையை, அளவைப் பெருக்கக்கூடிய கொழுப்பு உணவுவகைகளைத் தவிர்த்துவிட்டு, அளவில் சிறிதாகவும் வலுவில் பெரிதாகவும் இருக்கும் ஊட்டச்சத்து உணவுவகைகளை பெண்கள் உட்கொள்ள வேண்டும் என்பதே பொருள். அழகாகத்தானே உரைத்திருக்கிறார் ஔவையார்!

இதிலே மற்றொரு மாற்றுக் கருத்தும் சொல்லப்படுகிறது. ‘உண்டி சுருங்குதல் பண்டிக்கு அழகு’ என்றுதான் ஒவையார் சொல்லியிருக்கிறார். அதுவே பெண்டிர்க்கு அழகு எனத் திரிந்துள்ளது - என்ற கருத்தே அது. பண்டி என்றால் வயிறு என்று பொருள். அதிக உணவைப் போட்டு அடைத்துக் கொள்ளாமல் சுருக்கமாக, மிதமாக உணவு உட்கொள்வது தொப்பை போடாமல் வயிற்றை அழகாக வைத்திருக்கும் அல்லவா?

ஆக, ஔவையார் கூறியதை உண்டி சுருங்குதல் பண்டிக்கு அழகு என எடுத்துக்கொண்டால், இருபாலருக்கும் அது பொருந்துமன்றோ!

***
கொன்றைவேந்தன்- 6

ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்

விளக்கம்:

ஊரில் உள்ள அனைவரையும் நாம் பகைத்துக்கொள்ள நேரிட்டால் அடியோ டுஅழிந்து போவோம்.

ஒருசிலரோடு பகை ஏற்படுவது இயல்பு. நம்மீது எத்தவறு இல்லாதபோதிலும் தவறான கண்ணோட்டத்தால் நம்மீது சிலர் பகைமை பாராட்டக்கூடும். அதுவேறு. ஆயின் ஊரே நம்மீது பகை என்றால், தவறுகளில் பெரும்பகுதி நம்மீதே இருக்கும். ஆகையால்தான் ஊருடன் பகைக்கின் என்று நேரடியாக நம்மைப் பார்த்து எச்சரிக்கிறார் ஔவையார்.

வேறு வகையில் சிந்தித்தால், ஊரில் பலரோடு நமக்குப் பகை ஏற்படும் பட்சத்தில் நட்புவேர், உறவுவேர், அன்புவேர், அந்த ஊருடனான பாசப்பிணைப்பு வேர் உடனடியாகக் கெட்டுப்போகத் தொடங்கிவிடும் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

ஆகையால் பகை கூடாது, அதிலும் ஊரிலே ஒட்டுமொத்தப் பகை, பெரும்பகை ஏற்படாதவகையில் நமது எண்ணமும் செயல்பாடும் இருக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார் ஔவையார்.

***
கொன்றைவேந்தன்-7

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்

விளக்கம்:


எண்கள் எனப்படும் கணிதமும், எழுத்து எனப்படும் இலக்கண, இலக்கியங்களும் கண்களைப்போல முக்கியமானவை; நமது அறிவுக்கண்களாக விளங்குபவை.

மேலும், அறிவியலுக்கு ஆதாரமான எண்களும், அறிந்துகொண்டவற்றைப் பிறர் அறியப் பயன்படும் எழுத்துகளும் கண்களைப்போல மதிக்கவும் காப்பாற்றவும் தகுந்தவை என்றும் கொள்ளலாம்.

நம் வாழ்வின் ஒவ்வோர் அசைவிலும் எண் உள்ளது. இந்த உலகமே எண்களின் விளையாட்டுத்தான். பூஜ்யத்தில் தொடங்கி ஒன்றாய், பலவாய்க் கிளைத்து, பின் மீண்டும் பூஜ்யத்துக்குள் நிறைவு பெறுகிறது பிரபஞ்சம். இந்த விளையாட்டில் அறிவியிலின்படி பிரபஞ்சக்கூறுகளான ஒவ்வொரு தனிமத்துக்கும் சேர்மத்துக்கும் நிறைஎண் உண்டு. அவை எழுதுகின்ற வேதியியல் விளைவுகளே வாழ்க்கை. வானியலிலும் எண்கள் உண்டு. வானியல் சார்ந்த ஜோதிடத்திலும் எண்கள் உண்டு. கோள்களின் சாரத்தால், சஞ்சாரத்தால் பொதுவாக உலகுக்கும் குறிப்பாக தனிமனிதருக்கும் ஏற்படும் சாதக பாதக விளைவுகளும் எண்களின் அடிப்படையிலேயே கணிக்கப்படுகின்றன.

இந்த உலகவாழ்க்கையை ஐயன் கையெழுத்து என்கிறோம். அவை கர்மவினைகளின் எண்ணிக்கையைப் பொருத்து இறைவனால் வடிக்கப்படுகின்றன. அவ்வாறு விதிக்கப்படுவது விதி ஆகிறது. விதி என்ற எழுத்து, எவ்வித நெறிமுறைகளையும் வகுத்துப் பரிபாலிக்கும் சட்டமாகவும் எழுகிறது. இலக்கியங்களும் அறிவியல், வரலாறு உள்ளிட்ட இன்ன பிற தகவல்களும் எழுத்துகளால் வாழ்வு பெறுகின்றன.

சாங்கிய தத்துவத்தின்படி 25 எண்கள் அதாவது தத்துவங்களே உலகின் அடிப்படை. பிரகிருதி, புருஷன், மஹத் முதலியவையே அவை. இவற்றை எண்ணிச் சிந்தித்து, பகுத்தறிந்து எழுவதன்மூலம் முக்தி சித்திக்கிறது.

பக்திவழி ஆன்மிகத்திலே எண்ணும் எழுத்தும் போற்றப்படுகின்றன. நமசிவாய -ஐந்தெழுத்து (பஞ்சாக்ஷரம்), சரவணபவ – ஆறெழுத்து (ஷடாக்ஷரம்), ஓம்நமோநாராயணாய - எட்டெழுத்து (அஷ்டாக்ஷரம்) என எண்ணும் எழுத்தும் இணைந்து மதிக்கப்படுகின்றன; துதிக்கப்படுகின்றன. (ஓம் என்பது ஏகாக்ஷரமாகவே ஒற்றை எழுத்தாகவே கருதப்படுகிறது).

இந்தப் புனித எழுத்துகளைக் குறிப்பிட்ட எண்ணிக்கையில் உச்சரிப்பது, தியானிப்பது பாராயணம் ஆகிறது.

வேதத்துக்கு ‘ஸ்ருதி’ எனப் பெயர். அது பிற்காலத்தில் வியாசரால் தொகுக்கப்பட்டு எழுதப்பட்டாலும் முற்காலத்தில் மனனமாகவே இவை நினைவில் வைக்கப்பட்டு வாய்மொழியாக போதிக்கப்பட்டன; கற்றுக்கொள்ளப்பட்டன. ஸ்ருதியின் உச்சரிப்பிலும் அக்ஷரங்களின் ஒலியளவாகிய எண்ணிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. ஸ்ருதி இவ்விதம் எண்ணை அடிப்படையாகக் கொண்டது. ஸ்ருதியை ஆதாரமாகக்கொண்டு எழுதப்பட்டவையே ஸ்மிருதிகளும் இதிகாச, புராணங்களுமாகும். இவை எழுத்துகளாகும்.

ஆக, எண்ணம் என்பது எண்ணிக்கையை மாத்திரமல்ல, எண்ணுகின்ற சிந்தனையையும் குறிக்கிறது. இந்தச் சிந்தனையே நம் வாழ்க்கையை எழுதச் செய்கிறது. ஆகையால் நம் வாழ்வின் அடிப்படையாகவும் இலக்குகளாகவும் திகழ்கின்ற எண்ணும் எழுத்தும் கண் எனப் போற்றத் தகுந்தவை என்கிறார் ஔவையார்.
***
கொன்றைவேந்தன்- 8

ஏவா மக்கள் மூவா மருந்து

விளக்கம்:  

ஒன்றைச் செய்யுமாறு கேட்டுக்கொள்ளாமலே குறிப்பறிந்து வேண்டியவற்றைச் செய்யும் நன்மக்கள்பேறு அமிருதம் போன்றதாகும்.

மூவா என்றால் மூப்படையச் செய்யாத என்று பொருள். இயற்கையான மரணம் நரை, திரை, மூப்புக்குப் பின்னேதான் வருகிறது. மூப்படையாமல் இளமையோடு இருந்தால் நீண்டகாலம் வாழலாம். அதற்கான மருந்து அமிருதம் ஆகும். மிருதம் என்றால் இறக்கக்கூடியது. அமிருதம் என்றால் இறவாமல் இருக்கச்செய்வது எனப் பொருள். ஆக மூவாமருந்து என்பது அமுதம் எனப்படும் அமிருதமாகும்.

நமது குறிப்பறிந்து வேண்டுவன செய்யும் பிள்ளைகள் இருந்துவிட்டால் மனஆரோக்கியத்தால் உடல்ஆரோக்கியமும் நீடிக்கும்.ஆகையால் வயது அதிகரித்தாலும் மூப்புத் தெரியாது. அதுவே அமிருதமாக நம்மை வாழச்செய்கிறது. பிள்ளைகளின் அலட்சியமே பெற்றோர்களுக்கும் பெரியோர்களுக்கும் மூப்பை அதிகரிக்கச் செய்கிறது. ஆகையால் ஏவாமலேயே சேவையாற்றும் பிள்ளைகள் இருந்துவிட்டால் அதுவே அமுதமாகும் என்கிறார் ஔவையார்.

மக்கள் என்பது தமக்குப் பிறந்த பிள்ளைகளையும் குறிக்கும், பொதுமக்களையும் குறிக்கும். நாம் வாழுகின்ற இடத்தில் உள்ள மக்கள் யாவரும் பிறர் ஏவாமலேயே தங்கள் செயல்களை, கடமைகளை நிறைவேற்றினார்கள் என்றால் அந்த இடம் சொர்க்கமாகி விடுமே! அந்த வாழ்க்கை, அமரர்கள் பெற்ற மூவாமருந்தாகிய அமுதத்துக்குச் சமானமாகுமே!

சொல்லாமல் செய்வார் மேலோர் (உத்தமர்), சொல்லிச் செய்வார் இடையோர் (மத்திமர்), சொல்லியும் செய்யார் கீழோர் (அதமர்) என்றொரு சொல்வழக்கு உண்டு. நல்லதை எடுத்துச்சொல்லி இவ்வாறு செய் என்று கட்டளை இடாமலேயே அவற்றைத் தானே உவந்து செய்யக் கூடியவர்கள் மேலோர். அத்தகைய உத்தமர்கள் இருந்துவிட்டால் அதுவே அமிருதமாகும் என்பதை ஔவையார் குறிப்பால் உணர்த்துகிறார் என்றும் பொருள் கொள்ளலாம்.

***
கொன்றைவேந்தன்- 9

ஐயம் புகினும் செய்வன செய்

விளக்கம்: 

பிச்சை எடுக்க நேரிட்டாலும் செய்ய வேண்டிய செயல்களைச் செய் என்கிறார் ஔவையார்.

இதற்குப் பலபொருள் கொள்ளலாம்.முதலாவதாக, பிச்சை எடுத்து வாழ நேரிடும் சூழ்நிலை ஏற்பட்டாலும் நீ செய்ய வேண்டிய கடமைகளைச் செம்மையாகச் செய் என அறியலாம். ஏறத்தாழ இதேபொருளில் பிச்சைபுகினும் கற்கைநன்றே என்கிறது அதிவீரராமபாண்டியனின் வெற்றிவேற்கை (நறுந்தொகை). எனவே, கல்வி கற்றல், தன்னை நம்பியிருக்கும் குடும்பத்தார் உயிரைக் காப்பாற்றுதல் போன்ற கடமைகளை ஆற்ற பிச்சையேற்பதும் தவறில்லை.

இரண்டாவது பொருள்: பலரிடம் யாசகம், தானம் பெற்றாவது செய்வதற்குரிய அரிய நற்செயல்களைச் செய்.

பல அறக்கட்டளை, தரும காரிய அமைப்புகளை இதற்கு உதாரணங்களாக எடுத்துக்கொள்ளலாம். இங்கே பிச்சை ஏற்பது பெருமைக்குரிய செயலாகிறது.

மூன்றாவது பொருள்: பிச்சை ஏற்க வேண்டிய சூழ்நிலை வந்தாலும்கூட செய்யக்கூடாத இழிசெயல்களை, தீயசெயல்களை, பாவச்செயல்களைச் செய்யாதே என எடுத்துக்கொள்ளலாம். பிச்சை எடுத்தாலும் நெறிபிறழாமல் வாழ வேண்டும் என்பது இதன் பொருள்.

ஆக பொருளாதாரத்தில் நம் நிலை தாழ்ந்தாலும்கூட அறம் பிறழாமல், வாழ்க்கைத்தரம் குறைந்தாலும்கூட வாழ்வின்தரம் குறையாமல்வாழ் என்கிறார் ஔவையார்.

***
கொன்றைவேந்தன்- 10

ஒருவனைப் பற்றி ஓரகத்திரு

விளக்கம்:


எல்லாம்வல்ல ஒருவனாகிய இறைவன் திருவடியைப் பற்றி, அந்த இறைவனை உன் அகத்திலே அதாவது உள்ளத்திலே இருத்திக்கொள் என்கிறார் ஔவையார்.

இதற்கு ஒருவனைக் கைப்பிடித்து அவனது வீடாகிய புக்ககத்திலேயே இரு என ஔவையார் சொன்னதாக சிலரால் பொருள் கூறப்படுகிறது. இது தவறான விளக்கம் என்றே எண்ணத் தோன்றுகிறது.

இது இடைக்கால ஔவையார் பாடியதாகக் கூறப்படுகிறது. அவரதுகாலம் 12ஆம் நூற்றாண்டாகக் கருதப்படுகிறது. அக்காலத்திலும்கூட பெண்களுக்கு இத்தகைய அறிவுரை கூறத் தேவை இருந்திருக்காது. இக்காலத்தில் மணமுறிவு அதிகமாகிவிட்டதே இப்போது பொருந்துமாஎனில், ஒருவரைப் பற்றி ஓரகத்தில் இருப்பது இருபாலருக்கும் தானே தேவை? அதுதானே சமூகஆரோக்கியம்!

ஆகையால் இங்கே ஒருவன் என்பதை இறைவனாகவும் ஓரகம் என்பதை நம் உள்ளமாகவும் பொருள் கொள்வதே எக்காலத்துக்கும், எப்பாலருக்கும் பொருந்தும்.

இருப்பினும் பெண்களுக்குத்தான் இந்த அறிவுரையை ஔவையார் கூறினார் என்பதில் யாரேனும் பிடிவாதமாக இருந்தால், அதை இவ்வாறு எடுத்துக்கொள்ளலாம்:

பெண்ணே, நல்லஆடவன் ஒருவனைக் கரம்பிடித்து, உனது உயர்ந்த குணங்களால், செயல்களால் அவனது உள்ளத்தில் எப்போதும் குடியிரு. என்ன, சரிதானே!

***
கொன்றைவேந்தன்- 11

ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்

விளக்கம்: 

வேதம் ஓதுகின்ற உயர்ந்த கடமையைச் செய்கின்ற வேதியர்களுக்கு அவ்விதம் ஓதுவதைவிட வேதம் உரைத்துள்ள அறஒழுக்கத்தைக் கடைபிடித்துச் செயலாற்றுவது கூடுதல் நன்மை தருவதாகும் என்கிறார் ஔவையார்.

வேதம் என்பது ‘வித்’ என்ற வேர்ச்சொல்லில் இருந்து உருவானது. வித் என்பது அறிவின் அடிப்படை, ஞானத்தின் பிறப்பிடம். வாழ்வுக்கு அடிப்படையான அறிவை உரைப்பதால் அது வேதம் எனப்பட்டது. வாழ்வதற்கான தர்மத்தையும் அவ்வாறு வாழ்ந்து முக்தி என்னும் மேலான பதத்தையும் அடைவதற்கான வழிமுறைகளையும் வேதம் விண்டுரைக்கிறது. அந்த ஞானத்தை அறிவது, ஓதுவது வெறும் சொல்லாடல்அல்ல, செயலாற்றலுக்கானது.

இதைத்தான் பெரியோர்கள் ‘சத்யம்வத; தர்மம்சர’ -உண்மையைச்சொல், அறத்தைக் கடைபிடி -என்றார்கள். இந்தக் கருத்தையே ஔவையார் ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம் என்றுரைத்திருக்கிறார். கடைபிடிக்காத அறஒழுக்கத்தால் என்ன நன்மை விளைந்துவிடப் போகிறது? ஓதுதல் என்றால் ஒப்பித்தல், உரைத்தல், போதித்தல் எனப் பலபொருள் உண்டு. ஊருக்குத்தான் உபதேசம் எனக்கல்ல என்று இருந்துவிடக் கூடாதல்லவா? உபதேசிப்பவர்கள் முன்னுதாரணமாக வாழ்ந்துகாட்ட வேண்டும் அல்லவா?அதனால்தான் அறத்தை ஓதுகின்ற வேதியர்க்கு அதனைவிட அறத்தை நடைமுறைப்படுத்துவது மேலானது என்று ஔவையார் வலியுறுத்தியுள்ளார்.

திருவள்ளுவர் இதனையே ‘பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்’ என்று எச்சரித்துள்ளார். ‘பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்’ என்று சொன்ன திருவள்ளுவர் எப்படி ‘பார்ப்பான் பிறப்பு’ என்று சிறப்பித்துச் சொல்லியிருக்கிறாரே என ஆச்சரியப்படுகிறீர்களா? அதன் பொருள் நுட்பமானது. பிராமணர்களுக்கு ‘துவிஜனர்கள்’ அதாவது இருபிறப்பாளர்கள் என்று பெயர். அவர்களும் எல்லா சாதியினரைப்போல சாதாரணமாகத்தான் பிறக்கிறார்கள். ஆனால், உபநயனம் செய்வித்து பிராமணன் என்ற தகுதியை அடைவது இரண்டாவது பிறப்பு. அத்தகைய உயர்ந்த பிறப்பானது, ஒழுக்கக்கேடு ஏற்பட்டால் கெட்டுப்போய் விடும், நீங்கிவிடும் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. இதன்மூலம் ஆதிகாலத்தில் பிராமணர் ஆவது பிறப்பின் அடிப்படையில் அல்ல, சிறப்பின் அடிப்படையில் அமைந்திருந்தது என்பது தெளிவாகிறது.

இதனால்தான் வேதம் ஓதுவதற்குரிய தகுதியைப் பெறுகின்ற ஒழுக்கம், ஓதுதலை விட மேலானது என்ற கருத்தின் அடிப்படையில், ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம் என்று மொழிந்துள்ளார் ஔவையார்.

***
கொன்றைவேந்தன்- 12

ஔவியம் பேசுதல் ஆக்கத்திற் கழிவு 

விளக்கம்:


பொறாமைப்பட்டுப் பேசுவது ஆக்கத்திற்கு அழிவை ஏற்படுத்திவிடும்.

ஆக்கம் என்பது ஆக்கிவைத்த பொருள் ஆகும். இதுசெல்வம், உற்பத்தி ஆகியவற்றைக் குறிக்கும். ஆகுதல் என்ற பொருளில் புகழ், வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றையும் குறிக்கும். பொறாமையால் இவையெல்லாம் அழிந்துவிடும் என எச்சரிக்கிறார் ஔவையார்.

அவர்கள் கண்பட்டது என் செல்வம் போயிற்று என்று பொதுவாகச் சொல்வது வழக்கம். பொறாமை பிறரது ஆக்கத்துக்கு அல்ல, நமது ஆக்கத்துக்கே அழிவை ஏற்படுத்திவிடும் என்றுதான் சான்றோர்கள் உரைக்கின்றனர்.

பிறர்மீது பொறாமைப்படுவதன் காரணமாக, பொறாமைப்படுவோரின் நிதானம், அறிவுக்கூர்மை, தன்னம்பிக்கை ஆகியவை மழுங்குகின்றன. ஆகையால் எதிராளியைவிட பொறாமைக்காரர்களுக்கே ஆக்கம் அழிய நேரிடும் என்றே ஔவையின் எச்சரிக்கைக்குப் பொருள்கொள்ள வேண்டும்.

‘அழுக்கா றெனவொரு பாவிதிருச் செற்று
தீயுழி உய்த்து விடும்’


-என திருவள்ளுவர் (குறள் - 161) எச்சரித்திருப்பதையும் இங்கே ஒப்புநோக்க வேண்டும்.

அழுக்காறு எனப்படும் பொறாமை என்ற பாவி, நமது செல்வத்தைத் துடைத்தெறிந்து தீயவழி என்ற நரகத்திலே தள்ளிவிடும் என்று எச்சரிக்கிறார் திருவள்ளுவர்.

அதே கருத்தையே பொறாமையைக் குறிக்கும் மற்றொரு சொல்லான ஔவியத்தைக் கொண்டு அறிவுறுத்தியுள்ளார் ஔவையார்.

***
கொன்றைவேந்தன்- 13

அஃகமும் காசும் சிக்கெனத் தேடு 

விளக்கம்:


அஃகம் என்றால் தானியம், காசு என்றால் பணம். இவை இரண்டையும் சிக்கனமாக இருந்து சேமிக்க வேண்டும் என்கிறார் ஔவையார்.

சிக்கென என்பதற்குத் தப்பிக்கவிடாமல் என்று பொருள். சிவபெருமானைச் சிக்கெனப் பிடித்தேன் என்கிறார் மாணிக்கவாசகர். ஆக நம்மிடமுள்ள தானியங்களையும் தனத்தையும் தவறாகவோ அவசியமின்றியோ செலவழித்துவிடாமல் இறுக்கமாக இருந்து பாதுகாத்து, அவற்றின் வளத்தைப் பெருக்க வழிவகை தேட வேண்டும் என்கிறார் ஔவையார்.

சிக்கனத்தைப் பற்றிப் பேசுவதால் இத்துடன் (சிக்கனமாக) முடித்துக் கொள்கிறேன்.

***
கொன்றைவேந்தன்- 14

கற்பெனப்படுவது சொல் திறம்பாமை 

விளக்கம்:


கற்பு எனப்படுவது சொல்லில் இருந்து பிறழாமல் நடத்தல் ஆகும் என்கிறார் ஔவையார்.

கற்பு என்றால் கல்போல உறுதியாக விளங்குதல் எனப் பொருள். கல் என்ற வேர்ச்சொல்லில் இருந்து உருவான கல்வியானது கற்ற ஒருவரை அறிவுத் தடுமாற்றமின்றி உறுதியாக விளங்கச் செய்கிறது. அதேபோல கல் என்ற வேர்ச்சொல்லில் இருந்து கிளைத்த கற்பு என்ற இன்னொரு சொல், ஒழுக்கத்தால் ஒருவர் நெறிமுறையில் உறுதியாக நிற்றலைக் குறிக்கிறது.

சொல் என்பது மூத்தோர் சொல், சான்றோர் சொல், மேலோர் சொல் ஆகியவற்றுடன் ஆதியில் எழுத்தாய் அன்றி சொல்லால் அமைந்த வேதத்தையும் குறிக்கிறது.

திறம்புதல் என்றால் பிசகுதல், வழிமாறி நடத்தல் எனப் பொருள்தரும்.

ஆக, சான்றோரும் வேதமும் எடுத்துரைக்கும் உயர்ந்த நெறிகளாகிய ஒழுக்கத்தில் இருந்து பிசகாமல் நடப்பதே கற்பு என்கிறார் ஔவையார்.

இந்தக் கற்பு ஆண்- பெண் என இருபாலருக்கும் பொருந்தும்.

இதைத் தான் ‘கற்புநிலையெனச் சொல்ல வந்தார் இருகட்சிக்கும் அஃதைப் பொதுவில் வைப்போம்’ என்றார் மகாகவி பாரதியார். அதைவிடுத்து, கணவன் சொல்லில் இருந்து பிறழாமல் நடப்பதே கற்புநிலை எனப் பெண்களுக்கு மட்டுமே போதிப்பது ஏற்புடையதல்ல. ஆண்கள் கற்புநிலையில் இருந்து தவறினால் அதன் காரணமாக பெண்களும் எவ்விதம் கற்புநிலை கெடக்கூடும் என்பதை காரண காரிய விளக்கங்களோடு ‘பதிவிரதை’ என்ற தலைப்பிலான கட்டுரையில் பாரதி எடுத்துரைத்திருப்பார்.

எனவே ஔவை கூறியதன் பொருளை, மேலோர் சொன்ன ஒழுக்கநெறியில் இருந்து பிறழ்ந்து விடாமல் உறுதியாக நடந்துகொள்ளுதலே கற்பென்பதாகும் என இருபாலரும் எடுத்துக்கொள்வதே சரி.

***
கொன்றைவேந்தன்- 15

காவல் தானே பாவையர்க்கு அழகு

விளக்கம்:

பாதுகாப்போடு இருத்தல் பெண்களுக்கு அழகு சேர்ப்பதாகும். அதாவது நன்மை தரக் கூடியதாகும்.

ஆண்களைவிடப் பெண்களுக்கு அபாயம் ஏற்படும் சூழல் அதிகம். ஆகையால் பெண்கள் முன்னெச்சரிக்கை உணர்வோடும், உரிய பாதுகாப்புகளோடும் இருப்பதுதான் அவர்களுக்கு நன்மை பயக்கும் என்கிறார் ஔவையார்.

‘நிர்பயா’ விவகாரங்கள் மலிந்துவிட்ட தற்காலச்சூழலில் இது மிகவும் ஏற்புடையதாகவே இருக்கிறது. காவல் என்பதற்கு வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைத்தல், முக்காட்டுக்குள் முடக்கிவைத்தல் போன்ற மூடத்தனமான அர்த்தத்தை எடுத்துக்கொள்ள வேண்டாம். புதுமைப்பெண்களாக அவர்கள் சாதிக்கின்ற போதிலும் பாதுகாப்பில் கூடுதல் கவனத்தோடு இருப்பது அவசியம் என்றே பொருள்கொள்ள வேண்டும்.

‘காவல்தானே’ என்று ஔவையார் ஏகரமாகக் கூறியிருப்பதால் பெண்கள் தாங்களாகவே மேற்கொள்ளும் பாதுகாப்புகள், கட்டுப்பாடுகள் ஆகியவை என்றும் பொருள்கொள்ளத் தகும். பிறரது காவல் என்ற பொருளில் இதைப் பார்த்தாலும்கூட அது அடக்குமுறைக் காவலாக அன்றி அனுசரணையான ஆதரவுக்காவலாக இருக்க வேண்டும்.

அதேநேரத்தில் ஆண்மை என்னும் அடக்கியாளும் திறனில் பிறரை மட்டுமல்ல தன்னைத்தானே அடக்கி ஆள்வது மிக மிக முக்கியம் என்பதை ஆண்கள் முழுமையாக உணர்கின்ற வரையில், குடும்பத்தையும் சமூகத்தையும் அன்பாலும் பண்பாலும் பேணுகின்ற பெண்களை உரிய காவலால் குடும்பமும் சமூகமும் பேணுகின்ற அவசியம் இருப்பதை மறுப்பதற்கில்லை.

***
கொன்றைவேந்தன்- 16

கிட்டாதாயின் வெட்டென மற 

விளக்கம்:


ஒரு பொருள் அல்லது விஷயம் நமக்குக் கிடைக்காது என்ற பட்சத்தில் அதனை உடனடியாக அப்படியே மறந்துபோய் விட வேண்டும் என்கிறார் ஔவையார்.

இது மிகப்பெரிய மனோதத்துவ அறிவுரை. நமக்கு அது கிடைக்கவில்லையே என்ற நினைப்பு ஏக்கமாகி, அதுவே தன்னிரக்கமாக மாறி, நமது தன்னம்பிக்கையையே சிதைத்துவிடும். வாழ்வின் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நம்மை நகரவிடாமல் முடக்கும். ஆகையால், கிடைக்காது என உறுதியான ஒன்றில் மனத்தைப் போட்டு அலட்டிக்கொள்ளாமல் இதுவும் கடந்துபோகும் என அடுத்த விஷயங்களில் மனத்தைச் செலுத்த வேண்டும். அதற்கு, கிட்டாத ஒன்றை நம் மனத்தில் இருந்து ஒரேவெட்டாக வெட்டி வீழ்த்தியெறிந்து விட வேண்டும்.

இது,

‘அருமை உடைத்தென்று அசவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்’


-என்ற திருக்குறளுக்கு (குறள்- 611) முரணாக இருக்கிறதே எனக் கருத வேண்டாம். எந்தவொரு விஷயத்திலும் வெற்றி பெற சோம்பல் இல்லாத முயற்சி அவசியம். அதையே இக்குறள் வலியுறுத்துகிறது. ஆயினும், கடும் முயற்சிகளுக்குப் பிறகும் ஏதோ ஒரு காரணத்தால் இது நமக்கு இல்லை எனப் புலப்பட்ட ஒரு விஷயத்தில் வீணே கிடந்து உழலுவதில் என்ன பயன்? அதை மறந்துவிட்டு உற்சாகமாக வேறு முயற்சிகளில் இறங்கவேண்டியது தான். அதைத்தான் ஔவையார் அறிவுறுத்துகிறார்.

இதையே வேறுவகையில் ’கர்மண்யே அதிகாரஸ்ச நபலந்தேஸு பார்த்திப:’ என்று பகவத்கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் உபதேசித்துள்ளார். “பார்த்திபனே, உனது செயல்பாட்டில்தான் உனக்கு அதிகாரம் உள்ளது; அதனுடைய பலன்கள் பல்வேறு காரணங்களால் மாறுபடும் என்பதால் பலனைப்பற்றி அலட்டிக் கொள்ளாமல் செயல்படு” என்கிறார். நமது செயல்பாட்டுக்கு நாம் நினைக்கும் பலன் கிடைக்கவில்லை எனில், எல்லாம் ஈசன் செயல் என நினைத்து அடுத்த முயற்சிகளில் இறங்கு என்பது தானே இதன் பொருள்?

செயலாற்றும் போது பலனையே கருத்தில் கொண்டிருந்தாலும் நமது கவனம் சிதறும், நடந்த செயலுக்கு உரிய பலன் கிடைக்கவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தாலும் நம் கவனம் சிதறுவதோடு செயல்திறனும் மழுங்கும்.

ஆகையால்தான் கிடைக்காத ஒன்றை வெடுக்கென மறந்துபோவதே மனத்துக்கு மாமருந்து என மொழிகிறார் ஔவையார்.

***
கொன்றைவேந்தன்- 17

கீழோராயினும் தாழ உரை

விளக்கம்: 

ஒருவர் நம்மைவிட ஏதேனும் ஒருவகையில் கீழ்நிலையில் இருப்பவர் என்ற போதிலும் அவர் போன்றோரிடமும் மென்மையாகப் பேசு என்கிறார் ஔவையார்.

கல்வி, செல்வம், பதவி, தகுதி, சமூகநிலை போன்ற பல்வேறு காரணங்களால் நம்மைவிடப் பிறர் கீழ்நிலையில் இருந்தபோதிலும் கூட, அத்தகையோரிடமும் நாம் நல்லதன்மையாகப் பேச வேண்டும். நாம் உயர்ந்தோர் என்ற ஆணவப்பேச்சு கூடாது. உத்தரவிடும் எஜமானராக இருந்தாலும் காட்டுக்கத்தல் வேண்டாமே! கறாராகப் பேசினாலும் குரூரமாகப் பேச வேண்டாமே!

கர்வத்தை தலைக்கு ஏற்றிக் கொள்ளாமல் சகமனிதர் என்ற பண்போடு பேசுதல் நலம்தானே! நாவடக்கத்துடன் பேசுதல் மிகச் சிறந்த காப்பு அல்லவா?

ஆகையால்தான் கீழோராயினும் தாழ உரை என்கிறார் ஔவையார்.

‘பணியுமாம் என்றும் பெருமை’ என திருவள்ளுவர் கூறியிருப்பதையும் ஒப்புநோக்க வேண்டும். எனவே பேச்சில் கடுமையும் கசப்புமின்றி, இனிமையும் தண்மையும் எப்போதும் வேண்டும்.

***
கொன்றைவேந்தன்- 18

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை 

விளக்கம்: 

பிறரது குற்றங்களையே பெரிதுபடுத்திப் பார்த்துக் கொண்டிருந்தால் சுற்றத்தார் என நமக்கு யாருமே இருக்க மாட்டார்கள் என எச்சரிக்கிறார் ஔவையார்.

இங்கே குற்றம் என்பது குறையைக் குறிக்கிறது. கடுகளவுகூட குறைஇல்லாதவர் என உலகிலே யாருமே இருக்க முடியாது. ஒருகோணத்தில் நிறையாகவோ, சரியாகவோ படுவதுகூட மறுகோணத்தில் குறையாகத் தெரியும். நிறைகுறைகளை அலசுவது முறையானது. ஆயினும் குறைகளை மட்டுமே நோண்டி, நுணுகிப் பார்த்துக் கொண்டிருப்பது முறையன்று. அப்படிப் பார்க்கத் தொடங்கினால் எல்லோருமே குற்றவாளிகளாகத் தென்படுவார்கள். அந்த நினைப்போடு பழகுவோரை யாரும் நெருங்கத் தயங்குவார்கள். அத்தகையோருக்கு நட்பு, சுற்றம் என எதுவும் அமையாது. இருக்கின்ற உறவும் ஏனோதானோ என இருக்கும்.

‘குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்’


-என்றுதான் வள்ளுவப் பெருந்தகை (குறள்- 504) கூறியிருக்கிறார். குற்றத்தை மட்டுமே காண் என்று கூறவில்லை.

குற்றத்தை மட்டுமே காண்போர் காலப்போக்கில் அனைவரின் கண்களுக்கும் குற்றவாளியாகவே தென்படுவர். இவரது கண்களுக்கும் அனைவரும் குற்றவாளிகளாகவே தோன்றுவார்கள். இதனால் பரஸ்பர அன்பு, நம்பிக்கை சிதையும். பின்னர் எப்படி அவர்களுக்கு சுற்றம் அமையப் பெறும்?

குற்றத்தை மட்டுமே காண்பது ஒருவித மனோவியாதி. குரங்கு கையிலே புண்வந்தால் ஆறட்டும் என விடாமல் நோண்டி நோண்டிப் பெரிதாக்கி நோகும். அதேபோல குற்றம்காணும் மனப்பான்மை சிறியதைப் பெரிதாக்கி நம்மையும் பிறரையும் ரணப்படுத்தும்.

ஆகையால்தான் குற்றத்தை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தால் சுற்றமின்றித் தவிக்க நேரிடும் என்கிறார் ஔவையார்.

***
கொன்றைவேந்தன்- 19

கூரம்பு ஆயினும் வீரியம் பேசேல் 

விளக்கம்:


ஆயுதபலம் இருக்கின்ற போதிலும் ஆணவப் பேச்சு பேசாதே, அழிவைத் தேடிக் கொள்ளாதே என்று அறிவுறுத்துகிறார் ஔவையார்.

அம்பின் கூர்மை பற்றிய ஆணவப்பேச்சு வீண்வம்பை வரவழைத்து அழிவுக்கு வழிவகுக்கும் என்கிறார்.

இன்றைய சில வல்லரசுகளுக்கும் ஆயுதபலத்தால் அச்சுறுத்த நினைக்கும் வேறு சில அரசுகளுக்கும் தீவிரவாத அமைப்புகளுக்கும் மிகப் பொருத்தமான எச்சரிக்கை இது.

அதேநேரத்தில் சாதாரண மக்கள் வாழ்விலே இதைப் பொருத்திப் பார்த்தால், ஒருவர் எவ்வளவுதான் பலசாலியாக இருந்தாலும், பணிவின்றி அகந்தையாகப் பேசக் கூடாது என்கிறார் ஔவையார்.

‘காரியம் பெரிதா, வீரியம் பெரிதா எனில் காரியமே பெரிது’ என கிராமப்புறங்களில் ஒரு சொல்வழக்குஉண்டு. ஒருவரிடம் என்னதான் பலம், திறமை, அறிவு, செல்வாக்கு உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தாலும் அவற்றின் சக்தி குறித்து வீண்ஜம்பப் பேச்சு பேசுதல் கூடாது. இந்த அலட்டல் ஆணவப்பேச்சு தேவையின்றி பல எதிரிகளை உருவாக்கி அவரது செயலைச் சிதைத்துவிடும். கர்வத்தைத் தலைக்கு ஏறவிட்டால் தலைக்கனத்தால் அறிவு தடுமாறி, நாமே அழிவைத் தேடிக் கொள்வோம்.

பல்வேறு சக்திவாய்ந்த அரக்கர்களும் வரலாற்று நாயகர்களும் தங்கள் ஆணவத்தாலேயே அழிய நேர்ந்ததை புராணங்களிலும் வரலாற்று நூல்களிலும் படித்திருப்போம்.

அதனால்தான் எத்தனை வலிமை இருந்தாலும் கர்வம் கொள்ளாதே என்கிறார் ஔவையார்.

***
கொன்றைவேந்தன்- 20

கெடுவது செய்யின் விடுவது கருமம்

விளக்கம்:


யாராவது ஒருவர் நமக்கு கெடுதல் செய்தால் அதை மன்னித்து விட்டுவிடுதல் நற்செயல் என்று பொதுவாக இதற்குப் பொருள் கொள்ளப்படுகிறது.

ஆனால் அதிமேதையான ஔவையார் மிக நுட்பமாக இந்தப் பாடலைப் பாடியுள்ளார். பல கோணத்தில் ஆராய்ந்து பார்க்க வேண்டிய கருத்து இது.

வேறு பொருள்களையும் இப்போது பார்ப்போம்.

நாம் கெடுதலான, அதாவது தீயசெயல் ஒன்றைச் செய்ய நேர்ந்தால், நல்வினையாற்றும் அறக்கடமையில் இருந்து விட்டுவிலகிப் போக நேரிடும்.

இதையே முரணாகப் பார்த்தால், நாம் அறிந்தும் அறியாமலும் ஏதேனும் தவறு செய்ய நேர்ந்தால், அதையே மனத்துக்குள் அழுத்தும் பாரமாக வைத்துக் கொண்டிராமல், அதற்குரிய பிராயச்சித்தங்களைச் செய்துவிட்டு, போகட்டும் கருமம் என்று விட்டுவிட வேண்டும். இந்தப் பிழைநீக்கச் செயல்களில் தண்டனையை உவந்து ஏற்றலும் அடங்கும். இதனால் மனம் சீரடைகிறது.

வேறுவகையில் பார்த்தால், நமக்குத் தெரிந்தவர்கள் கெடுதி செய்பவர்களாக இருந்தால் அவர்கள் தொடர்பைக் கைவிடுதல் சிறந்த செயலாகும்.

நமது நாட்டுக்கோ சமுதாயத்துக்கோ பகைவர் கெடுதி செய்தால் அவர்களை அழித்துவிடுதல் சிறந்த நற்செயலாகும்.

இப்படி நுணுகிப் பார்த்தால் பல்வேறு உள்ளர்த்தங்கள் பொதிந்தவகையில் கெடுவது செய்யின் விடுவது கருமம் என மொழிந்துள்ளார் ஔவையார்.

***
கொன்றைவேந்தன்- 21

கேட்டில் உறுதி கூட்டும் உடைமை 

விளக்கம்:


இன்னல் வந்தபோதிலும் இளகிவிடாமல் உறுதியாகச் செயலாற்றுவது நமது செல்வத்தைப் பெருக்கும் என்கிறார் ஔவையார்.

கேடு என்பது கெடுதி, துயரம், இழப்பு, உடல்நோவு எனப் பல பொருள்களைக் குறிக்கும். இவை ஏற்படும்போது உறுதி குன்றிவிடக் கூடாது.

உறுதி என்பது கொண்டகொள்கையில் தளராமல் இருத்தல்ஆகும். இது மனஉறுதியை மட்டுமின்றி, அறஉறுதியையும் குறிக்கிறது. தொடர்துன்பம் வரும்போதுதான் மனம் துவளுதல், கொள்கையில் இருந்து பிறழுதல், அறத்தைக் கைவிடுதல், ஆண்டவனை நிந்தித்தல் ஆகியன தோன்றும். ஆகையால் அவற்றுக்கு இடம்தராமல் ஊக்கத்தோடு தொடர்ந்து இயங்குதல் நமக்கு ஆக்கத்தைத் தருவதால் இழந்ததை மீட்பதோடு புதிதாகவும் நமக்கு உடைமைகள் சேரும்.

உடைமை என்பது நமக்கே உரியவை ஆகுவது. அறிவுடைமை, பண்புடைமை, சொத்துடைமை, அருளுடைமை எனப் பல உடைமைகளுக்கு இது பொருந்தும்.

‘ஆக்கம்அதர்வினாய்ச் செல்லும்அசைவிலா
ஊக்க முடையா னுழை’


அதாவது தளராத உறுதி கொண்டவரின் முகவரியைத் தேடிக் கண்டுபிடித்து ஆக்கம் வந்துசேரும் என திருவள்ளுவர் (குறள்- 594) உரைத்திருப்பதை இங்கு ஒப்புநோக்க வேண்டும்.

பக்திப்பூர்வமாகச் சிந்தித்தால், தொடர்துன்பங்கள் வந்தபோதிலும் உறுதியாக தெய்வம்தொழல், அந்த இறைவனையே நமது உடைமையாக்கி விடுவதை கைகூடச் செய்யும் என்றும் ஔவையார்உபதேசிக்கிறார்.

***
கொன்றைவேந்தன்- 22

கைப்பொருள் தன்னில் மெய்ப்பொருள் கல்வி

விளக்கம்:


நமக்குக் கைவசமாகும் பல்வேறு பொருள்களில் உண்மையான பொருள் என்னவென்று பார்த்தால் அது கல்வி மாத்திரமே என்கிறார் ஔவையார்.

பொருள் என்பதன் பொருள், நமது பயன்பாட்டுக்கு உதவுவது. நமக்குப் பயனைத் தருகின்ற விஷயம் பொருள்ஆகும். ஆகையால் நாம் பொருள்படுத்த வேண்டிய, அக்கறை செலுத்த வேண்டிய விஷயமாகப் பொருள் இருக்கிறது.

ஆக, பொருள் என்றால் செல்வம் மாத்திரம்அல்ல. மேலும் ஜடப்பொருள் மாத்திரமல்ல, நுண்பொருள்களுமாகும். இப்படிப்பட்ட பல்வேறு பொருள்களிலே மெய்யான பொருள், ஒருவர் பெறுகின்ற தரமான கல்வி மாத்திரமே.

கல்விக்கு ஏன் ஔவையார் முக்கியத்துவம் தந்திருக்கிறார்? ஏனெனில் நமது செல்வம், உடைமை மாத்திரம் அல்ல அறிவு, ஞானம் ஆகியவையும் உறுதி பெறுவது கல்வியில்தான். பள்ளி, கல்லூரிகளில் போய்ப் படிப்பது மாத்திரமல்ல கல்வி. குருமுகமாக நாம் கசடறப் பெறுகின்ற எவ்வகை அறிவும் கல்வியே. கல்போல நம்மை உறுதியாக விளங்கச் செய்வதே கல்வி. அதற்கு அறிவும் வேண்டும்; பயிற்சியும் வேண்டும். ஆகையால்தான் அதற்கு ‘சிக்ஷை’ என்று பெயர். அதனைத் தகுந்த குருவிடம் இருந்து பெறுபவன் சீடனாகிறான்.

குரு என்றால் வழிகாட்டி. ஆச்சார்யர் என்றால் வழிநடத்துபவர்.ஆசிரியர் என்றால் ஆசுகளை அதாவது குறைகளைக் களைபவர். ஆகவே தகுந்த ஆசான் மூலம் பெறுகின்ற அறிவும், பயிற்சியுமே கல்வி ஆகும். அந்தக் கல்வியே நம்மை வழிநடத்துகின்ற மெய்ப்பொருளாகும் என்று திட்டவட்டமாகக் கூறுகிறார் ஔவையார்.

‘கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை’


-என்று திருவள்ளுவர் (குறள்- 400) மொழிந்திருப்பதை ஒப்புநோக்க வேண்டும்.

இதையேதான் கெடமுடியாத, ஈடுஇணையற்ற சிறந்த செல்வமாகிய கல்வியே மெய்ப்பொருள் என அறிவுறுத்துகிறார் ஔவையார்.

***
கொன்றைவேந்தன்- 23

கொற்றவன் அறிதல் உற்றிடத்து உதவி

விளக்கம்:


அரசாட்சி செய்யும் அரசன் அன்றாட நாட்டு நடப்புகளை அறிந்துகொண்டு உரியவர்க்கு உரியநேரத்தில் தேவையான உதவிகளை அளிக்க வேண்டும் என்கிறார் ஔவையார்.

கொற்றவன் என்ற சொல் அரசன், அரசாட்சி செய்பவரைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டாலும், அதன் மிகச் சரியான பொருள் வெற்றியாளன். கொற்றம் என்றால் வெற்றி. கொற்றவை என்றால் வெற்றித் திருமகளான துர்க்கை. எனவே கொற்றவன் என்றிட வெற்றியாளன்.

வாழ்க்கையில் ஒருவர் வெற்றியாளராக வலம்வர வேண்டுமெனில், அவர் அறிந்துகொள்ள வேண்டியது பிறருக்கு உரிய நேரத்தில் உரிய உதவிகளைச் செய்தல் என இதற்குப் பொருள் கொள்ளலாம். அனைவருக்கும் உதவி செய்பவன் வெற்றியைத் தவிர வேறு எதனைப் பெறுவான்?

ஔவையின் இந்த அறிவுரை ஆட்சியாளருக்கு என எடுத்துக்கொள்ளுதலும் தகுமே. சிறந்த ஒரு ஆட்சியாளன் என்பவன் அடக்கி ஆளுபவன் மட்டுமல்ல, அன்போடு பேணுபவனும் ஆவான். எனவே, ஒரு சிறந்த ஆட்சியாளன் அறிய வேண்டியது, தனது ஆளுகைக்கு உட்பட்ட மக்களுக்குத் தகுந்த நேரத்தில் தகுந்த உதவிகளைச் செய்தல் என்றும் பொருள் கொள்ளலாம்.

இதையே திருவள்ளுவர்,

‘எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்’


-என ஒரு குறளிலும் (குறள்- 582),

‘முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்
கிறையென்று வைக்கப் படும்’


-என மற்றொரு குறளிலும் (குறள்- 388) எடுத்துரைத்துள்ளார்.

எல்லோருக்கும் எக்காலத்திலும் நிகழ்பவை அனைத்தையும் திறமையாக அறிய வேண்டியது அரசனின் கடமை, இவ்வாறு அறிந்துகொண்டதை வைத்து மக்களுக்குத் தேவையானவற்றை முறையாகச் செய்து காப்பாற்றும் மன்னவன் மக்களுக்கு இறைவன் போன்றவனாக மதிக்கப்படுவான் என திருவள்ளுவர் இந்த இரண்டு குறள்களில், நான்கு அடிகளில் விளக்கியுள்ளார்.

அக்கருத்துகளை ஒரேயடியாக, ‘கொற்றவன் அறிதல் உற்றிடத்து உதவி’ என மிக எளிமையாகவும் வலிமையாகவும் மொழிந்துள்ளார் ஔவையார்.

***
கொன்றைவேந்தன்- 24

கோள்செவிக் குறளை காற்றுடன் நெருப்பு 

விளக்கம்:


பிறரைப் பற்றிக் கூறப்படும் கோளுக்குச் செவிமடுக்கும் குறுகிய மனப்பான்மையானது காற்றின் உதவியால் வேகமாகப் பரவிடும் நெருப்பைப்போல நம்மை அழித்துவிடும் என எச்சரிக்கிறார் ஔவையார்.

இதற்குப் பொருள் சொல்லும் பலரும், கோள்மூட்டி கலகம் செய்பவன் காதிலே கோள் சொல்வது காற்றுடன் கலந்த நெருப்பைப் போன்றதாகும் எனக் கூறுவது ஏற்புடையதாக இல்லை. அவ்வாறெனில் மற்றவர் செவிகளில் நாம் கோள் சொல்லலாமா? எவ்வகையிலும் புறங்கூறல் அறமா?

ஆகையால் கூர்ந்துநோக்க வேண்டும். குறளை என்றால் குறுகிய எனப் பொருள். கோள்செவி என்பது கோளுக்கு, புரளிக்கு இடம்கொடுக்கும் செவி எனப் பொருள்படும். காற்றுடன் நெருப்பு என்பது ஓர் எச்சரிக்கை. பிறர் மீதான கோபம், சந்தேகம், வெறுப்பு, பொறாமை போன்றவை நமது மனத்தின் ஓரத்தில் எங்காவது சிறுபொறிபோல ஒளிந்து கொண்டிருக்கும். அதனை இந்தக் கோள் ஆனது ஊதிப் பற்றவைத்து நாசம் விளைவித்துவிடும்.

உதாரணத்துக்கு, கூனியின் கோளுக்குச் செவிமடுத்ததால்தான் கைகேயி பெருமை இழந்தாள். சகுனியின் கோள்களுக்குச் செவிகொடுத்ததால் கௌரவர்கள்அழிந்தனர்.

கோளுக்கு இடம்கொடாமல் இருந்திருந்தால் அவர்களது உள்ளத்தின் பொறாமைத்தீ காலப்போக்கில் தானாகவே அவிந்து போயிருக்கும்; இடம்கொடுத்ததால் காட்டுத்தீயாக மாறி நாசம் விளைவித்தது.

ஆகையால்தான், நெருப்பை ஊதி எரியவைக்கும் காற்றைப் போன்ற கோளுக்குச் செவிமடுத்தல் என்ற குறுகிய மனப்பான்மை வேண்டாம் என ஔவையார் எச்சரிக்கிறார்.

***
கொன்றைவேந்தன்- 25

கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை 

விளக்கம்: 

பழிசொல்லிப் புறம்பேசிக் கொண்டிருந்தால் எல்லோருடைய பகையையும் சம்பாதிக்க நேரிடும் என்று எச்சரிக்கிறார் ஔவையார்.

குறையிருப்பின் இதமாக எடுத்துரைப்பது வேறு. எல்லா விஷயத்திலும் குறை கண்டுபிடித்து எல்லோரையும் பழிசொல்லித் திரிவதென்பது வேறு. இவ்வாறு புறம் பேசுபவர் அனைவருக்கும் விரைவில் பகைவராகி விடுவர்.

சமூக வலைதளங்களில்முக்கியமாக வாட்ஸ்ஆப், டெலிகிராம் போன்ற குறுஞ்செய்திகள் கோலோச்சும் இக்காலகட்டத்தில் மிகவும் அவசியமான அறிவுரைஇது. ஆட்சியாளர்களை மட்டுமல்ல, அக்கம்பக்கத்து வீட்டாரைக்கூட விட்டுவைக்காமல் பழிதூற்றும் செயல்கள் குறுந்தகவல்களில் கொடுந்தகவல்களாய்ப் பரவி வருகின்றன. இதுபோன்ற பழிப்பேச்சுகள் பகையை வளர்த்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

புறங்கூறுதல் என்பது பிறரின் துன்பத்தில் மகிழும் குரூரத்தின் வெளிப்பாடு. அது ஒருவித மனநோய். பொறாமையில் பிறந்த பிள்ளை. வெறுப்பின் வேறு வடிவம். இயலாமையில் முளைக்கும் இழிசெயல்.

புறம்பேசுதலை முதலில் ஒருசிலர் ரசிப்பதைப் போலத் தோன்றினாலும், அவ்வாறு ரசிப்பதுபோலத் தோன்றுபவர்கூட உள்மனதில் நம்மைப்பற்றி இவன் பிறரிடம் என்னென்ன சொல்லியிருப்பானோ என்றுதான் எண்ணுவர். அவர்களும் இதுபோன்ற நபர்களை தங்களது எதிரியாகவே காண்பர்.

எனவே, பிறரைப் பழிதூற்றுபவன் எளிதில் பெரும்பகைக்கு ஆளாகிறான். இதைத்தான் இந்த ஒற்றைவரியில் ஓங்கி உரைத்துள்ளார் ஔவையார்.



No comments:

Post a Comment