16/09/2021

பண்டிட் தீனதயாள் உபாத்யாய - பொன்மொழிகள் - 4

-பேரா. பூ.தர்மலிங்கம்



***
எது தேவை?  

மேற்கத்திய அறிவியல் மற்றும் மேற்கத்திய வாழ்க்கை முறை இரண்டும் வெவ்வேறு விஷயங்கள். அதேசமயம், மேற்கத்திய அறிவியல் உலகளாவியது. நாம் முன்னோக்கிச் செல்ல விரும்பினால் அதை நாம் உள்வாங்க வேண்டும். ஆனால் மேற்கத்திய வாழ்க்கை முறைகளுக்கும் விழுமியங்களுக்கும் இது பொருந்தாது. உண்மையில், மேற்கத்திய முறைகளை எந்தவித சிந்தனையுமின்றி பின்பற்றுதல் அறவே தவிர்க்கப்பட வேண்டும். 

***

***
சமூகத்தின் வாழ்க்கைத் தரம்:

உணவு, உடை, தங்குமிடம், கல்வி, மருத்துவ வசதி ஆகியவை ஒவ்வொரு மனிதனின் ஐந்து அடிப்படைத் தேவைகள் ஆகும். அவை அனைத்தும் பூர்த்தி செய்யப்பட வேண்டும். ஒரு நாட்டின் பொருள் சார்ந்த வாழ்க்கைத் தரத்தை மதிப்பீடு செய்ய விரும்பினால், நாம் இதை ஒரு தொடக்கப் புள்ளியாக எடுத்துக் கொள்ளலாம். ஒரு சமூகத்தின் எந்தவொரு வகுப்பினருக்காவது இந்த வசதிகள் கிடைக்கவில்லையென்றால், அந்த சமூகத்தின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை என நாம் கூறலாம்.

***
ஜனநாயகத்தின் ஆதாரம்:

ஜனநாயக அரசாங்கமான மக்கள் அரசானது, தர்மத்தில் வேரூன்றி இருக்க வேண்டும். அதாவது, தர்ம ராஜ்யமாக இருக்க வேண்டும். 

ஜனநாயகம் என்பதற்கான வரையறையில், அதாவது ‘மக்களுடைய அரசாங்கம், மக்களால் மற்றும் மக்களுக்காக’ என்பதில் உள்ள ‘உடைய’ (of) என்பது சுதந்திரத்தைக் குறிக்கிறது; ‘ஆல்’ (by) என்பது ஜனநாயகத்தைக் குறிக்கிறது; ‘ஆக’ (for) என்பது தர்மத்தைக் குறிக்கிறது. 

இதனால், சுதந்திரமும் தர்மமும் உள்ள இடங்களில் மட்டுமே உண்மையான ஜனநாயகம் இருக்கிறது. தர்ம ராஜ்யமானது, இந்தக் கருத்துக்கள் அனைத்தையும் உள்ளடக்கி இருக்கிறது.

***
***
வேற்றுமையில் ஒற்றுமை:

வேற்றுமையில் ஒற்றுமை மற்றும் பல்வேறு வடிவங்களில் ஒற்றுமையின் வெளிப்பாட்டைக் கொணர்வது, பாரதிய கலாச்சாரத்தின் முதன்மையான எண்ணமாக, முக்கிய சிந்தனையாக இருந்து வருகின்றது. இந்த உண்மையானது முழுமனதுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டால், பல்வேறு அதிகார மோதலுக்கு அவசியமே இருக்காது. மோதல் என்பது கலாச்சாரமோ அல்லது இயற்கையின் அடையாளமோ அல்ல. மாறாக, இது விபரீதத்தின் அறிகுறியாகும். 

***
***
பிரிவினையல்ல, ஒருமை!

மேற்கத்திய நாடுகளில் உள்ள குழப்பம், வாழ்க்கையைப் பல பிரிவுகளாகப் பிரித்துப் பார்க்கின்ற போக்கிலிருந்து முதன்மையாக எழுகின்றது. பின்னர் அவற்றை ஒட்டுவேலை மூலம் ஒன்றாக இணைத்துப் பார்க்க முயற்சிக்கின்றனர். ஆனால், வாழ்க்கையில் பன்முகத்தன்மையும் (Diversity) பன்மையும் (Plurality) இருப்பதை நாம் ஒப்புக் கொள்கிறோம். ஆனாலும் அவற்றுக்கு பின்புலத்தில் உள்ள ஒற்றுமையைக் கண்டறியவும் நாம் முயற்சி செய்கிறோம். இந்த முயற்சி முற்றிலும் அறிவியல் பூர்வமானது.

விதையானது, வேர்கள், தண்டு, கிளைகள், இலைகள், பூக்கள், பழம் போன்ற பல்வேறு வடிவங்களில் தனது வெளிப்பாட்டைக் காண்கிறது. இவை அனைத்தும் வெவ்வேறு வடிவங்கள், வண்ணங்கள் மற்றும் பண்புகளைக் கொண்டுள்ளன. இருப்பினும், ஒவ்வொன்றுக்கும் இடையிலான ஒத்த தன்மையையும் உறவையும் நாம் விதையின் மூலம் அங்கீகரிக்கிறோம்.

***
***
நுகர்வு கலாச்சாரம்:

மனிதனின் ஆசைகளையும் தேவைகளையும் தொடர்ச்சியாகவும் முறையாகவும் அதிகரிக்கச் செய்வது மிகவும் அவசியமானது மற்றும் விரும்பத்தக்கது என மேற்கத்திய சமூகங்கள் கருதுகின்றன. மக்கள் விரும்புகிற பொருட்கள், உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் அல்லது இவ்விரண்டையும் விரும்புவதற்கும் பயன்படுத்துவதற்கும் மக்கள்  தூண்டப்படுகிறார்கள். தேவைக்கு ஏற்ப உற்பத்தி செய்வதற்குப் பதிலாக, ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கான சந்தைத் தேடல் தொடர்கிறது. தேவையை உருவாக்க முறையான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது மேற்கத்தியப் பொருளாதார அமைப்பின் முக்கியப் பண்பாக மாறியுள்ளது. 


- பண்டிட் தீனதயாள் உபாத்யாயா



No comments:

Post a Comment