16/09/2021

சமூகம் - பறையரும் பஞ்சமரும்

-மகாகவி பாரதி

சுவாமி சகஜானந்தர்

(மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 16)

.

பறையர்

‘பறையர்’ என்பது மரியாதை உள்ள பதம் இல்லை என்று கருதி இக்காலத்தில் சிலர் பஞ்சமர் என்ற சொல்லை அதிகமாக வழங்குகிறார்கள். நானும் சில சமயங்களில் பஞ்சமர்என்ற சொல்லை வழங்குவது உண்டு. ஆனால் பறையர் என்பதே மேற்படி ஜாதியாருக்குத் தமிழ்நாடில் இயற்கையாக ஏற்பட்ட பெயர். பறை என்பது பேரிகை. பூர்வகாலத்தில் நமது ராஜாக்கள் போர் செய்யப் போகும்போது ஜய பேரிகை கொட்டிச் செல்லும் உத்தமமான தொழில் இந்த ஜாதியார் செய்து வந்தபடியால் இவர்களுக்கு இப்பெயர் வழங்குவதாயிற்று. ‘இது குற்றமுள்ள பதமில்லை’ யென்பதற்கு ருஜூ வேண்டுமானால், மேற்படி கூட்டத்தாரால் சென்னையில் நடத்தப்படும் சபைக்கு ‘பறையர் மஹாசபை’ என்று பெயர் வைத்திருப்பதைக் காண்க. அவர்களை மிருகங்களைப்போல் நடத்துவது குற்றமேயொழிய  ‘பறையர்’ என்று சொல்லுவது குற்றமில்லை.

என்னடா இது! ஹிந்து தர்மத்தின் பஹிரங்க விரோதிகள் பறையரைக் கொண்டு பிராமணரை அடிக்கும்படி செய்யும்வரை சென்னைப் பட்டணத்து ஹிந்துக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்! அடே! பார்ப்பானைத் தவிர மற்ற ஜாதியாரெல்லாம் பறையனை அவமதிப்பாகத்தான் நடத்துகிறார்கள். எல்லாரையும் அடிக்கப் பறையரால் முடியுமா? பறையருக்கு அனுகூலம் மற்ற ஜாதியார் செய்யத் தொடங்கவில்லையா? எதற்கும் ஹிந்து மதவிரோதிகளின் பேச்சைக் கேட்கலாமா? நந்தனாரையும், திருப்பாணாழ்வாரையும் மற்ற ஹிந்துக்கள் கும்பிடவில்லையா? பறையருக்கு நியாயம் செலுத்த வேண்டியது நம்முடைய முதற்கடமை. அவர்களுக்கு முதலாவது வேண்டியது சோறு.சென்னைப் பட்டணத்து ‘பட்லர்’களைப் பற்றிப் பேச்சில்லை. கிராமங்களிலுள்ள பண்ணைப் பறையர்களைப் பற்றிப்பேச்சு. அவர்களையெல்லாம் ஒன்று திரட்டு. உடனே விபூதி நாமத்தைப் பூசு. பள்ளிக்கூடம் வைத்துக் கொடு. கிணறு வெட்டிக் கொடு. இரண்டு வேளை ஸ்நாநம் பண்ணச்சொல்லு. அவர்களோடு சமத்துவம் கொண்டாடு. நான் நெடுங்காலமாகச் சொல்லி வருகிறேன். அவர்களை எல்லாம் உடனே ஒன்று சேர்த்து ஹிந்து தர்மத்தை நிலைக்கச் செய்யுங்கள். நம்முடைய பலத்தைச் சிதற விடாதேயுங்கள். மடாதிபதிகளே! நாட்டுக் கோட்டைச் செட்டிகளே! இந்தவிஷயத்தில் பணத்தை வாரிச் செலவிடுங்கள். இது நல்ல பயன் தரக்கூடிய கைங்கர்யம். தெய்வத்தின் கருணைக்குப் பாத்திரமாக்கும் கைங்கர்யம்.

 ‘பறையரை’, ‘பரை’ (அதாவது ஆதிசக்தி முத்துமாரி) யின் மக்களென்றும் பொருள் சொல்வதுண்டு. நமக்கு மண்ணுழுது நெல்லறுத்துக் கொடுக்கிற ஜாதியாரை நேரே நடத்த வேண்டாமா? அது சரிதான்; இனிமேல் பறையன் கை நீட்டாமல் இருப்பதற்கு வழி தேடிக் கொள்ளுங்கள். சென்னைப் பட்டணத்திலே நாலு பட்லர்கள் ஹிந்து மதத்தை உல்லங்கனம் செய்தபோதிலும், நாட்டிலுள்ள பறையர் எல்லாரும் உண்மையான ஹிந்துக்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. எனக்கும் ஒரு வள்ளுவப் பையனுக்கும் ஸ்நேஹம். அவனுடைய கோயில் அம்மன் மீது நான் பாட்டுக்கட்டிக் கொடுத்தேன். அவன் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவதுண்டு. அவன் காத்தவராயசாமி விஷயமாகச் சில பாட்டுக்கள் சொன்னான். காத்தவராயன் வேதத்திலேயே சொல்லிய காற்று வாயுக் கடவுளேயன்றி வேறில்லை யென்று அந்தப் பாட்டுக்களினாலேயே தெரிந்து கொண்டேன். முத்துமாரி என்றபராசக்தியுடைய பிள்ளைதான் காத்தவராயன். பறையர்களும்நம்மைப் போலவே வைதிக தேவர்களைப் பூஜிக்கிறார்கள்.மற்றொன்று சொல்லுகிறேன்.

“அங்க மெல்லாங் குறைந்தழுகு தொழு நோயராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்
கங்கை வார் சடைக்கரந்தார்க்கு கன்பராயின்
அவர் கண்டீர் யாம் வணங்கும் கடவுளாரே.”

பறையர் ஹிந்துக்கள். அவர்களைக் கைதூக்கிவிட்டு மேல்நிலைக்குக் கொண்டு வருதல் நம்முடைய தொழில்.

பஞ்சமர்


லண்டனிலிருந்து மந்திரி மாண்டேகு வருவதற்கு முந்தி நமது தேசத்து பஞ்சமரை யெல்லாம் ஒன்று சேர்த்து விடுதலைக் கக்ஷியில் சேர்க்க வேண்டும் என்று சில சீர்திருத்தக்காரர் சொல்லுகிறார்கள். மிஸ்டர் மாண்டேகு வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி, நமது நாட்டுப் பறையரை உயர்ந்த நிலைமைக்குக் கொண்டுவருவது நம்முடைய கடமை.

பறையருக்கெல்லாம் நல்ல சோறு, நல்ல படிப்பு முதலிய சௌக்கியங்களும் மற்ற மனுஷ்ய உரிமைகளும் ஏற்பாடு செய்து கொடுத்தல் நம்முடைய கடமை. சென்னைப் பட்டணத்தில் நாயர் கக்ஷிக் கூட்ட மொன்றில் பறையரை விட்டு இரண்டு மூன்று பார்ப்பனரை அடிக்கும்படி தூண்டியதாகப் பத்திரிகைகளில் வாசித்தோம். ராஜாங்க விஷயமான கொள்கைகளில் அபிப்பிராய பேதமிருந்தால், இதை ஜாதி பேதச் சண்டையுடன் முடிச்சுப்போட்டு அடிபிடிவரை கொண்டு வருவோர் இந்த தேசத்தில் ஹிந்து தர்மத்தின் சக்தியை அறியாதவர்கள். இது நிற்க. அடுத்த நவம்பர் மாதம் பட்டணத்தில் பறையரை உயர்த்த வேண்டுமென்கிற நோக்கத்துடன் மகாசங்கம் நடத்தப் போவதாகக் கேள்விப்பட்டு மிகவும் சந்தோஷமடைந்தேன். முற்காலத்தில் நந்தனார் தோன்றியதுபோலவே, இப்போது மேற்படியார் குலத்தில் ஸஹஜாநந்தர் என்ற ஸந்யாஸி ஒருவர், நல்ல பக்தராயும் ஸ்வனாபிமானம் உடையவராகவும் தோன்றியிருக்கிறார். அவருடைய முயற்சிகளை முன்னுக்குக் கொண்டுவரும்படி உதவி செய்ய விரும்புவோர் குத்திபில் ஸ்ரீ கேசவப் பிள்ளை திவான் பகதூருக்கு எழுதி விவரங்கள் தெரிந்துகொள்ளலாம். மேற்படி ஸஹஜாநந்தர் சிதம்பரத்திற்கு அருகே ஒரு கிராமத்தில் பறைப் பிள்ளைகளுக்காக ஒரு பள்ளிக்கூடம் போட்டிருக்கிறார். அந்தப் பள்ளிக்கூடம் மே மாதம் திறக்கப்பட்டது. இப்போதைக்கு மண் கட்டிடம்; கூரை வேய்ந்திருக்கிறார்கள்.அதில் நானூறு பிள்ளைகள் வரை ஏற்கெனவே சென்று படிக்கிறார்கள்.

தியஸாபிகல் சங்கத்தார் சில பஞ்சம பாடசாலைகளை ஏற்படுத்தி அந்த ஜாதியாரை மேன்மைப்படுத்தும் பொருட்டு மிகுந்த சிரத்தையுடன் உழைத்து வருகிறார்கள். ஸ்ரீமதி அனிபெஸண்டுக்கு இந்த விஷயத்தில் ஏற்பட்டிருக்கும்அன்பும் உத்ஸாஹமும் மெச்சத் தகுந்தன.

பகவன் என்ற பிராமணனுக்கும் ஆதி என்ற பறைச்சிக்கும் ஓளவை, திருவள்ளுவர், கபிலர், பரணர், உப்பை, உறுவை,வள்ளி என்ற குழந்தைகள் பிறந்து உபய குலத்துக்கும் நீங்காத கீர்த்தி ஏற்படுத்தியதை இக்காலத்திலும் பறையர் மறந்துபோகவில்லை. சிறிது காலத்துக்கு முன்பு ஒரு கிழச் சாம்பான் என்னிடம் வந்து “முப்போதும் நீரில் முழுகிக் குளித்தால் முனிவர்களாவாரோ? எப்போதும் இன்பத்திலிருப்பவரன்றோ இரு பிறப்பாளராவார்?” என்ற தத்துவராயர் வாக்கைச் சொல்லி, பறை யென்பது ஹிந்து தர்மத்தில் கோயிற் பேரிகை யென்றும், அதைக் கொட்டுவோன் பறையன் என்றும், பறை யென்பது சக்தியின் பெயரென்றும்,அவளே ஆதியென்றும், சிவனே பகவன் என்று பிராமண ரூபங்கொண்டு அவளுடன் வாழ்ந்தானென்றும், பறையர் மேன்மைப்பட்டால் பார்ப்பார், வேளாளர், முதலியார், செட்டியார் முதலிய இதர ஜாதியாரும் மேன்மையடைவார்கள் என்றும் பலவித நீதிகளைச் சொன்னான். அதே கருத்துடையவராய் ஹிந்துக்களுடையவிடுதலையிலும் மேம்பாட்டிலும் மிகுந்த நாட்டத்துடன் உழைத்துவரும் ஸ்ரீ நீதிபதி மணி அய்யரும், வைத்தியர் நஞ்சுண்டராயரும்,சுதேசமித்திரன் ரங்கசாமி அய்யங்காரும் பறையர் குலத்தைக் கைதூக்கி விடுவதில் தம்மால் இயன்ற வரை உதவி செய்வதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.”

”ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்”.


  • -சுதேசமித்திரன்

No comments:

Post a Comment