16/09/2021

வ.உ.சி. வாழ்வே வேள்வி (பகுதி -1)

- திருநின்றவூர் இரவிக்குமார்


(வ.உ.சிதம்பரம் பிள்ளையின்
150வது பிறந்ததின ஆண்டை ஒட்டி
வெளியாகும் சிறப்புப் பதிவு)

***


யார் கற்றவர்?

அமரர் வ.உ.சிதம்பரம் பிள்ளை ‘செக்கிழுத்த செம்மல்’ என்று, ‘கப்பலோட்டிய தமிழன்’என்றும் அனைவரும் அறிவார்கள். அது மட்டுமல்ல, அவர் சிறந்த தமிழ் அறிஞர். சைவ சமய இலக்கியங்களில் ஆழ்ந்த அறிவுள்ளவர். பல சைவ தத்துவ நூல்களுக்கு விளக்கவுரை எழுதியுள்ளார். பல ஆங்கில நூல்களை மொழியாக்கம் செய்துள்ளார். பல நூல்களைப் பதிப்பித்துள்ளார். அவரே பல நூல்களை இயற்றியுள்ளார். சுய சரிதையும் எழுதியுள்ளார்.

சிதம்பரம் பிள்ளை, திருவள்ளுவரின் புகழை செல்லும் இடமெல்லாம் செப்பியவர். திருக்குறள்- மணக்குடவர் உரையையும் தொல்காப்பியம்-  இளம்பூரணர் உரையையும் ஆராய்ந்து பதிப்பித்தவர். அவரது தமிழ்ப் பற்றுக்கு அளவே இல்லை.

அவரது தமிழ்ப்பற்று பேச்சிலும் எழுத்திலும் (பதிப்பு) செயலிலும் மட்டுமே வெளிப்பட்டதன்று. தன்னுடைய தமிழ் அறிவை மாணாக்கர் பலர் மூலம் பரவிடச் செய்தார். அவரிடம் தமிழ் கற்றவர் பலர். திருக்குறளைக் கற்றவர்கள் பலர்.

அவர் ஒரு கண்டிப்பான ஆசிரியர். தாம் சொல்லிக் கொடுத்தவற்றை மறுநாள் தவறின்றிச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பார். அப்படி இல்லையென்றால் வேறு பாடத்திற்குச் செல்ல மாட்டார். காரணம், அவர் தமிழின்மீது கொண்ட பற்று. எனவே சிலருக்கு அவரிடம் பாடம் கற்பது எளிதாக இருக்கவில்லை.

திருக்குறளில் வித்தகரான சிதம்பரம் பிள்ளையிடம் பாடம் கேட்க ராஜாஜி வந்தார். பிள்ளையவர்களும் பாடம் சொல்ல இசைந்தார். அத்துடன் நிபந்தனையையும் நினைவுபடுத்தினார். ராஜாஜியும் ஏற்றுக்கொண்டு பாடம் கேட்க ஆரம்பித்தார். ஆனால் அவரால் முடியவில்லை. 

பலமுறை முயன்றும் நிபந்தனையில் திணறிப்போன ராஜாஜி ஒருநாள்,  “எனக்கு பாடம் சொல்லித்தரும் பொறுமை உங்களுக்கு இல்லை. உங்களிடம் பாடம் கேட்டறியும் பொறுமையும் எனக்கில்லை” என்று கூறி விடைபெற்றார்.

சுவாமி சகஜானந்தர் தமிழ் கற்றவர். ஹரிஜன மக்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டவர். அதற்காகவே துறவியானவர். தமிழக சட்டசபையில் உறுப்பினராக இருந்தவர் என அவரைப் பற்றி தமிழகத்தில் பலரும் அறிவார்கள். அவர் சிதம்பரம் பிள்ளையிடம் தமிழ் கற்றவர்.

பிள்ளையவர்களை ஒரு அச்சகத்தில் சுவாமி சகஜானந்தர் முதலில் சந்தித்தார். அவரை வணங்கி தன் விருப்பத்தைத் தெரிவித்தார். அவரும் இவரை யார், என்ன என்று விசாரித்தார்.

சுவாமி,  “நான் நந்தனார் வகுப்பு பிள்ளை” என்றார். பிள்ளையவர்கள் சுவாமியின் இருகரங்களையும் பற்றிக்கொண்டு, “உண்மையைக் கூறியதால் நீர் தான் உண்மையான அந்தணர்” என்று கூறினார்.

சுவாமி சகஜானந்தர் சிதம்பரம் பிள்ளையின் வீட்டிலேயே தங்கி, உணவுண்டு, அவரிடம் தொல்காப்பியம், திருக்குறள் போன்ற தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களைக் கற்றுத் தெளிந்தார். இது சுவாமி சகஜானந்தர் வாழ்க்கை வரலாறு கூறும் செய்தி.

(தகவல் உதவி: 
கவிஞர் தெய்வச்சிலை எழுதிய ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சி. 100)

***
வ.உ.சி.
 (1872 செப். 5  - 1936 நவ. 18)

வக்கீல் சிதம்பரம் பிள்ளை புகழ்

குலசேகர நல்லூர் என்ற சிறு ஊரில்  ஆச்சாரி ஒருவர் கொலை செய்யப்பட்டதாக வழக்கு. ஆச்சாரி பெரிய ரவுடி. அவரை வைக்கோல் போர் உள்ள களத்தில் துரத்தியடித்து கொலை செய்ததாக வழக்கு. அதில் ஏழு பேர் குற்றவாளிகளாகக் கருதப்பட்டனர். ஆறு பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களுக்கு பல ஆண்டுக்காலம் சிறைத் தண்டனை கிடைத்தது .

ஆனால் முதல் குற்றவாளியாகக் கருதப் பட்டவர் அகப்படவில்லை. அவர் ஆறுமுகத் தம்பிரான் என்ற சாமியார். போலீசாரின் ஆவணங்களில் ‘அழகப்ப பிள்ளை’ என்று அவர் பெயர் பதியப்பட்டிருந்தது. கொலை நடந்த உடன் அவர் தன்மீது அநியாயமாக பழி ஏற்படும் என்று அஞ்சி, திருவாவடுதுறை மடத்தில் சேர்ந்து சாமியார் ஆகிவிட்டார். பிறகு  ‘ஆறுமுகத் தம்பிரான்’ என்ற பெயருடன் சிதம்பரத்தில் உள்ள திருவாவடுதுறை மடத்தின் தலைவராகவும் ஆனார்.

1903ஆம் ஆண்டு மே மாதத்தில் கொலை நடந்தது. ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் ஒட்டப்பிடாரம் போலீஸ் கான்ஸ்டபிள் சிவசிதம்பரம் பிள்ளை என்பவர் மணியாச்சி ஸ்டேஷனில் தம்பிரானைக் கைது செய்தார். கைதி, ஒட்டப்பிடாரம் சப் ஜெயிலில் ரிமாண்டில் வைக்கப்பட்டார்.

அந்தக் காலத்தில் அங்கே பஞ்சாபகேச ஐயர் என்பவர் சப் மாஜிஸ்திரேட்டாக இருந்தார். அவர் மிகவும் திறமைசாலி. ஆனால் லஞ்சப் பேர்வழி. அது மட்டும் இல்லை என்றால் அவர் பெரிய பதவிகளை அடைந்திருப்பார். கொலை வழக்கு இந்த பஞ்சாபகேச ஐயரிடம் விசாரணைக்கு வந்தது. போலீசாரைத் தவிர மற்ற எல்லோரும் ‘தம்பிரான் நிரபராதி’ என்று சொன்னார்கள். அவ்வாறிருந்தும் அவர் தம்பிரானை ஜாமினில் விடுதலை செய்ய மறுத்துவிட்டார். அதற்கான காரணத்தை அந்தக் காலத்தில் பலரும் பலவாறாக பேசிக் கொண்டார்கள்.

பஞ்சாபகேச ஐயருக்கு பாடம் புகட்ட வேண்டும் என பலரும் நினைத்தனர். அவர்களில் ஒருவர் தம்பிரானின் உறவினர், இந்த வழக்கை நடத்த வேண்டும் என சிதம்பரம் பிள்ளளையை வேண்டிக்கொண்டார். வ.உ.சிதம்பரம் பிள்ளையும் அந்த வழக்கை ஏற்றுக்கொண்டார். மாஜிஸ்திரேட்டான ஆட்சித் தலைவரிடம் மனு கொடுத்து, அந்த வழக்கை தூத்துக்குடி ஜாயிண்ட் மாஜிஸ்திரேட் மன்றத்திற்கு மாற்றிவிட்டார். இது பஞ்சாபகேச ஐயருக்கு தலைகுனிவை ஏற்படுத்தியது.

அப்போது தூத்துக்குடி சப் கலெக்டராக இருந்தவர் ஈ.எச்.வாலேஸ். அவர் வ.உ. சிதம்பரம் பிள்ளையின் சொந்த ஊரான ஒட்டப்பிடாரத்தை அடுத்த புதியம்புத்தூரில் வழக்கை விசாரணை செய்யத் தொடங்கினார். இரண்டு பக்க வக்கீல்களும் சாட்சிக்காரர்களும் உறவினர்களும் நண்பர்களுமாகச் சேர்ந்த கூட்டம் ஒரு திருவிழா போல இருந்தது. அரசு சார்பில் மதுரை வக்கீல் ரங்காச்சாரி, திருநெல்வேலி வக்கீல் பழனியாண்டி முதலியார் ஸ்பெஷல் பப்ளிக் பிராசிக்யூட்டர்களாக ஆஜராகி வாதிட்டனர்.

வாதியின் பக்கம் சாட்சி விசாரணை தொடங்கியது. அவர்களை சிதம்பரம் பிள்ளை குறுக்கு விசாரணையில் திணறடித்தார். போலீசார் குறுக்கு விசாரணையில் தைரியமாக பதில் சொல்ல முடியாமல் விழித்தார்கள். ஒன்றிருக்க வேறொன்றைச் சொன்னார்கள்.

வாலேஸ் துரைக்கு வழக்கின் போக்கு தெரிந்துவிட்டது. எதிரியின் பக்கம் சாட்சி விசாரணை இல்லாமலே வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. தம்பிரான் விடுதலை அடைந்தார்.

இந்த வழக்கை ஆதிமுதல் கவனித்து கொண்டிருந்த உதவி காவல் துறை கண்காணிப்பாளர் பிளாக்ஸ்டான், சிதம்பரம் பிள்ளையின் நியாயத்தையும் வாதத் திறமையையும் கண்டு வியந்தார். அவரது கையைப் பிடித்து குலுக்கி தனது மட்டற்ற மகிழ்ச்சியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

அந்தக் காலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த இந்த கொலை வழக்கின் முடிவு சிதம்பரம் பிள்ளையின் புகழை மேலும் ஓங்கச் செய்தது.

***
தொழிலாளர் தலைவர் வ.உ.சி.

1885இல் ஹார்வி என்பவரால் பாபநாசம் அருகே, விக்கிரமசிங்கபுரத்தில் ஒரு பஞ்சாலையும் 1888 இல் தூத்துக்குடியில் கோரல் மில்லும் கட்டப்பட்டன. கோரல் மில்லில் 1,695 தொழிலாளர்கள் பணிபுரிந்தனர். அவர்களை கூலி என்று ஆங்கிலேயர்கள் அழைத்தனர். ஆனால் அடிமைகளைப் போல நடத்தினர்.

நாளொன்றுக்குபதினான்கு மணி நேர உழைப்பு என கசக்கி பிழியப்பட்டனர். விடுமுறை கிடையாது. உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லை. கேள்வி கேட்டால் கசையடி. எனவே, தொழிலாளர்கள் சைவ சமய அறிஞராகவும் வழக்கறிஞராகவும் (pleader) இருந்த சிதம்பரம் பிள்ளையை அணுகி தங்கள் கஷ்டங்களை சொல்லி முறையிட்டனர்.

1908 பிப்ரவரி 3ஆம் நாள், மேற்படி தொழிலாளர்களிடையே ஆலை நிர்வாகத்திற்கு எதிராக சிதம்பரம் பிள்ளையும் அவரது நண்பர் சுப்பிரமணிய சிவாவும் முழக்கமிட்டனர். பிப்ரவரி 27 இல் வேலைநிறுத்தம் தொடங்கியது. மில் தொழிலாளர்களுக்கு மற்றவர்களும் ஆதரவு தெரிவித்தனர். வெள்ளையர்களுக்கும் அவர்களது ஆதரவாளர்களுக்கும், மளிகைப் பொருட்களை விற்க மறுத்தனர் வணிகர்கள். சலவைத் தொழிலாளர்கள், நாவிதர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் எனப் பலரும் வேலை செய்ய மறுத்தனர்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் பல இடங்களில் கஞ்சித்தொட்டி திறந்தார் பிள்ளையவர்கள். மதுரையில் இருந்த அதே நிர்வாகத்தைச் சேர்ந்த மற்றொரு மில் தொழிலாளர்களும் பணி நிறுத்தம் செய்யத் தொடங்கினர். தொழிலாளர்களிடையே சிதம்பரம் பிள்ளையும் சுப்பிரமணிய சிவாவும் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தனர் . அவர்களது மன உறுதியைத் தக்க வைத்திருந்தனர்.

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ஆலை நிர்வாகம் பணிந்தது. தொழிலாளர்களின் ஊதியம் உயர்த்தப்பட்டது; மருத்துவ விடுப்பு அறிவிக்கப்பட்டது; வேலை நேரம் குறைக்கப்பட்டது. சிதம்பரம் பிள்ளையை தொழிலாளர்கள் கொண்டாடினார்கள்.

இன்று தொழிற்சங்கம் என்றாலே நாங்கள்தான் என்று கூவும் கம்யூனிஸ்ட் கட்சி பிறப்பதற்கு முன்னாலேயே (1908) தமிழகத்தில் முதல் தொழிற்சங்கத்திற்கு வித்திட்டவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை. தொழிலாளர் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த தன் சொத்தையே கரைத்தவர் சிதம்பரம் பிள்ளை.

தொழிலாளர் ஒற்றுமையை ஊதிய உயர்வுப் போராட்டமாகக் குறுக்கிவிடாமல், அதை விடுதலை வேட்கைக்கும் வித்தாக்கினார். அச்சமடைந்த ஆங்கில அரசு சிதம்பரம் பிள்ளையையும் சுப்பிரமணிய சிவாவையும் வீண்பழி சுமத்தி, கைது செய்து சிறையிலிட்டது. இருவரையும் வெவ்வேறு சிறைகளில் அடைத்தது.

சிறையில் தொழுநோயாளிகளுடன் அடைத்துவைத்து சிவாவுக்கு தொழுநோய் பிடிக்க வைத்தது ஆங்கிலேயரின் கீழ்த்தரமான புத்தி. தொழுநோயாளி ஆனதும் அவரை சிறையில் இருந்து வெளியேற்றியது. நண்பர் தீர்த்தகிரியாரின் (அவரும் சிறையில் இருந்த சுதந்திரப் போராட்ட கைதி)  ஆதரவால் அவர் பாப்பாரப்பட்டியில் வாழ்ந்து மறைந்தார்.

லண்டன் பிரிவியூ கவுன்சில் உத்தரவுப்படி இரட்டை ஆயுள் தண்டனை குறைக்கப்பட்டு, பின்னர் கண்ணனூர் சிறையிலிருந்து வெளியான சிதம்பரம் பிள்ளையின் வழக்கறிஞர் லைசன்ஸ் பறிக்கப்பட்டது. மேலும், தான் பிறந்த மாவட்டத்தில் வசிக்க தடையும் விதித்தது ஆங்கில நிர்வாகம்.

அதனால் சென்னையில் சிதம்பரம் பிள்ளை வசிக்க நேர்ந்தது. அப்போதும் அவர் தொழிலாளர்களுக்கு ஆதரவாகவே செயல்பட்டார். பெரம்பூர் பகுதியில் அவர் வசித்தபோது அங்கிருந்த ரயில்வே ஒர்க்ஷாப் தொழிலாளர்களை ஒருங்கிணைத்தார். அவர் சென்னையில் இருந்த காலத்தில் அவரது ஆலோசனையின்படி செயல்பட்டது சென்னை தொழிலாளர் சங்கம் (Madras Labour Union) எனப்படும் பி & சி மில் தொழிலாளர் சங்கம்.

வ.உ.சிதம்பரம் பிள்ளை எந்த இடத்தில் இருந்தாலும், எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும், தனிப்பட்ட முறையில் தனக்கு இழப்புகள் ஏற்பட்டாலும், தொழிலாளர்களுக்கு ஆதரவாகவே இறுதிவரை வாழ்ந்தார். அதனால் இன்றும் மக்கள் மனதில் மங்காமல் வாழ்கிறார்.





No comments:

Post a Comment