16/09/2021

தேசம் என்பது என்ன ?

-கவிஞர் நந்தலாலா



தேசம் என்பது என்ன ? ஒரு கொற்றக்குடையின் நிழல் வட்டத்தில் அடங்கிய நிலமா ?

இது எம் நிலம் என்று மனங்கள் ,தம் சிறகால் மூடிய உணர்வுத் தலமா?

ஒரு மொழி பரவிக்கிடக்கும் வெளியா?

கலாச்சாரம் தான் அதை அளந்து கூறும் அளவு கோலா?

சிங்கமும் புலியும் இதுவரை என் எல்லை
என்று சிறு நீரால் எழுதிச் செல்லும் எல்லையா?

ஓரின மக்களின் ஒற்றைக் கூரையா?

தேசம் பற்றிய கருத்து யாவும் உத்தேசமானதுதான்.

‘வட வேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறு நல்லுலகம்’  என்று தொல்காப்பியன் குறிப்பிடும் காலத்திலேயே, இந்தத் தமிழகம் பல கொற்றக் குடையின் கீழதானே இருந்தது?

வளர்ந்தும் மாறியும் வரும் சமூகம் தன் கலாச்சாரக் கூறுகளை தோலுரித்து
வளரும் போது அது மாறாமல் இருக்கிறதா என்ன?

ஒரு மொழியில் கிளை மொழி தோன்றுவதும் அது தனிமொழியாகி
தனித்து வளர்வதும் இயல்பாய் இருக்கும்போது மொழிவழி தேசிய அளவுகோல் சரியாகுமா?

நாம் நாடுவதே நம் நாடு. யானையின் வழித் தடம் அதன் மூளைக்குள் பதிந்திருப்பதைப் போல, ஒரு தேசத்தின் வரைபடம் நம் உணர்வுகளில் பதிந்திருக்கிறது.

‘மன்னும் இமயமலை எங்கள் மலையே’ என்று பாரதியைப் பாட வைப்பது அதுதான். பாரதி சொல்லட்டும் அங்கிருக்கும் தாசில்தார் ஒத்துக் கொள்வானா என்று கேலி செய்பவன் நுன்னுணர்வு தொலைத்தவன்.

‘கயிலாய மலை எங்கள் மலை அம்மே’ என்று திரிகூட ராசப்பனும் பாடியிருக்கிறான்.

சிவ சக்தி வழிபாடும் திருமால் வழிபாடும் பாரதம் முழுதும் பரந்து கிடக்கிறது. அதற்கான சுவடுகள் இருக்கின்றன.

‘காசிக்குப் போனால் அந்த யாத்திரை ராமேஸ்வரத்தில்தான் நிறைவடைய
வேண்டும்’ என்ற எழுத விதி ஒன்று இன்றும் பலரை இயக்கிக் கொண்டிருக்கிறது.

இங்கு கைலாச யாத்திரையை கனவாக வைத்திருப்பவர்கள் அதிகம்.

காசியிலும் விஷ்ணு கயாவிலும் நீத்தார் கடன் செய்ய நினைக்காதவன் உண்டா?

இன்றைய அரசியல் அமைப்பும், அதிகாரத்தின் மூக்கனாங்கயிறும் அறுந்து போனாலும் என்றுமுள தேசிய உணர்வுச் சரடு அறுந்து போகாது.

ஒரு நாய் ஒரே ஓட்டத்தில் ஓடிக் கடக்கும் தூரத்தை என் நாடு என்பது பாளையக்கார மனப்பான்மை. அதை வளரும் இந்தியா பத்தாம்பசலித் தனம் என்றே கணிக்கும்.

இன்றும் கடல் எல்லை தாண்டும் மீனவனை ‘இந்திய நாயே’ என்று சொல்லித்தான் சிங்கள கப்பல் படை அடித்து விரட்டுகிறது.

அந்த மீனவனைக் காக்க விரையும் நம் ரோந்துக் கப்பலில் தேசியக்கொடி தான் பறக்கிறது. அதில் பிரிவினைவாதிகளின் கட்சிக் கொடியா இருக்கிறது ?

தனக்கான உரிமையைக் கொடு என்று கேட்பது சரிதான். 
உரிமை பேசுகிறவன் கடமை பற்றியும் கருத வேண்டும்.

ஆணவம் கிழிக்கும்; அன்பு தைக்கும்.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ 
என்பவனைத்தான் தமிழும் மதிக்கும்.


No comments:

Post a Comment