16/09/2021

வ.உ.சி.க்குப் புகழாரம்: தமிழக அரசுக்கு நன்றி!

-ஆசிரியர் குழு

வேளாளன் சிறைபுகுந்தான் தமிழகத்தார்
    மன்னனென மீண்டான் என்றே
கேளாத கதைவிரைவிற் கேட்பாய் நீ
    வருந்தலைஎன் கேண்மைக்கோவே!
தாளாண்மை சிறினுகொலோ யாம்புரிவேம்
    நீஇறைக்குத் தவங்கள் ஆற்றி,
வேளாண்மை நின் துணைவர் பெறுகெனவே
    வாழ்த்துதிநீ வாழ்தி! வாழ்தி!

-மகாகவி பாரதி 



(ஆங்கிலேய அரசால் தனது உற்ற தோழர் வ.உ.சி. 1907இல் கைது செய்யப்பட்டபோது, மகாகவி பாரதி எழுதிய கவிதை வாழ்த்து இது).

  
***
தமிழக அரசுக்கு நன்றி!

தமிழகத்தின் தன்னிகரில்லா சுதந்திரப் போராளி வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 150வது பிறந்த ஆண்டு இம்மாதம் (செப். 5) துவங்கி உள்ளது. இதையொட்டி தமிழக முதல்வர் திரு. மு.அக.ஸ்டாலின் பல சிறப்பு அறிவிப்புகளை, செப்டம்பர் 3ஆம் தேதி சட்டமன்றத்தில் வெளியிட்டுள்ளர். அவை:

1. சென்னை காந்தி மண்டபத்தில் வ.உ.சி.யின் நினைவை பிரதிபலிக்கும் வகையில் செக்கு மண்டபம், மார்பளவுச் சிலை நிறுவப்படும்.

2. தூத்துக்குடி பெரிய காட்டான் சாலை இனிமேல் வ.உ.சி.சாலை என்று அழைக்கப்படும்.

3. கோவை வ.உ.சி. பூங்காவில் அவரின் முழு உருவச் சிலை நிறுவப்படும்.

4. ஒட்டப்பிடாரம், நெல்லையில் உள்ள மனி மண்டபம் புனரமைக்கப்பட்டு அவரின் வரலாறு ஒளி- ஒலிக் காட்சி ஏற்படுத்தி தரப்படும்.

5. வ.உ.சி.யின் வரலாறு டிஜிட்டல் வழியில் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும்

6. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வ.உ.சி. ஆய்வு இருக்கை வைக்கப்படும்.

7. தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் அவரின் புத்தகங்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும்.

8. வ.உ.சி, மகாகவி ஆகியோர் பயின்ற பள்ளிகளில் ரூ. 1.5 கோடி செலவில் புதிய கலையரங்கம் மாணவர் பலனடையும் வகையில் அமைக்கப்படும்.

9. கப்பல் துறையில் சிறந்து விளங்கும் ஒருவருக்கு கப்பலோட்டிய தமிழன் விருது மற்றும் ரூ.  5 லட்சம் ரொக்கப்பரிசு, சான்றுகள் வழங்கப்படும்.

10. நவம்பர் 18 - அவரின் நினைவு நாள் தியாக திருநாளாக கடைப்பிடிக்கப்படும்

11. தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் இந்த ஆண்டு செப்டம்பர் 5 முதல் அடுத்த (2022) ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் கட்டப்படும் அரசு கட்டடங்களுக்கு வ.உ.சி. பெயர் வைக்கப்படும்.

12. அரசுப் பேருந்துகளில் வ.உ.சி.யின் புகைப்படங்கள், வரலாற்றுப் பதிவுகள் புகைப்படக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

13. வ.உ.சி. வரலாறு குறித்து மாணவர்களுக்கு இணையவழி கருத்தரங்கம் நடத்தப்படும்.

14. வ.உ.சி யின் நூல்கள், கையேடுகள் இளைஞர்கள் பார்த்துப் பயனடையும் வகையில் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

இந்த அறிவிப்புகளை வெளியிட்ட தமிழக அரசையும் தமிழக முதல்வரையும் தேசிய சிந்தனைக் கழகம் மனமாரப் பாராட்டுகிறது. 

தியாகியர் சிந்திய ரத்தத்தால் தான் நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறோம். தியாகத் திருவுருவம் வ.உ.சி. அவர்களை நன்றியுடன் நினைவுகூரும் தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி கூறுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.



 


No comments:

Post a Comment