16/09/2021

கொங்கு நாட்டில் சுதந்திரப் போராட்டம்: பகுதி- 2

-சேக்கிழான்


சே.ப.நரசிம்மலு நாயுடு


-பகுதி 1


கொங்குநாடு என்று அழைக்கப்படும் நிலவியல் பகுதி தமிழகத்தின் தற்போதைய மேற்கு மண்டலத்தைக் குறிப்பதாகும். தற்காலத்தில் மாநிலத்தின் வளர்ச்சியில் இப்பகுதி பெரும் பங்களிப்பது போலவே, சுதந்திரப் போராட்டக் காலத்திலும் அரும் பணியாற்றி இருக்கிறது. குறிப்பாக, மகாத்மா காந்தியின் செல்வாக்கு துவங்குவதற்கு முன்னதாகவே, தேசிய சுதந்திர இயக்கமாக உருவான காங்கிரஸ் பேரியக்கத்தில் பலர் பாடுபட்டுள்ளனர்.

(கட்டுரையின் இப்பகுதி, 1885 முதல் 1920 வரையிலான காலகட்டத்தில், குறிப்பாக கொங்குநாட்டில் நிகழ்ந்த சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னோடித் தலைவர்கள் சிலரை சுட்டிக் காட்டுகிறது.)


முன்னோடியான நரசிம்மலு நாயுடு:

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, ஆலன் ஆக்டோவியன் ஹியூம் என்ற ஆங்கிலேயரால் துவங்கப்பட்டது. 1885-இல் மும்பையில் முதன்முதலாகக் கூடியது இந்திய தேசிய காங்கிரஸ். டபிள்யூ.சி.பானர்ஜி, தாதாபாய் நௌரோஜி, ராஜாராம் மோகன்ராய், தேவேந்திரநாத் தாகூர் உள்ளிட்டோர் கூட்டிய அந்தக் கூட்டத்தில் நாடு முழுவதிலுமிருந்து 72 பேர் பங்கேற்றனர். அவர்களுள் சேலத்தைச் சார்ந்த பகடாலு நரசிம்மலு நாயுடு, விஜயராகவாச்சாரியார் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள்.

சேலம் பகடாலு நரசிம்மலு நாயுடு, மிக மூத்த போராளியாவார் (1854- 1922). 1877இல் இவர் சேலத்தில் ‘சேலம் பேட்ரியாட்’ என்ற பத்திரிகையைத் துவக்கினார். அந்தப் பத்திரிகை நின்ற பிறகு, கோவையிலிருந்து, ‘கோயம்புத்துார் கலாநிதி’, ‘கோயம்புத்துார் அபிமானி’ ’சுதேசபிமானி’ ஆகிய பத்திரிகைகளை 20 ஆண்டுகள் நடத்தினார். இவரது எழுத்தும் பேச்சும், கொங்கு மண்ணிலிருந்த இளைஞர்களிடம் சுதந்திரப் போருக்கான எழுச்சியை உருவாக்கின.
நாயுடு தென்பாரதம் முழுவதும் பயணம் மேற்கொண்டு, பல சுவடிகளையும் கல்வெட்டுகளையும் ஆய்ந்து ‘தட்சிண இந்திய சரித்திரம்’ என்னும் நூலை சுமார் ஆயிரம் பக்கங்களில் வெளியிட்டார். ஹிந்து சமயத் தத்துவம், சமயத் தலைவர்களின் வரலாறு, இறைவனின் இலக்கணம், ஆன்ம இலக்கணம், பக்தி இயல்பு, வேதம், புராணம், ஆகமம், இதிகாசம் ஆகியவை பற்றி விரிவாகக் கூறும் ‘ஆர்ய சத்திய வேதம்’ என்ற நூலையும் இவர் எழுதியுள்ளார்.

சென்னை மஹாஜன சபாவின் கோவை கிளை தலைவராகவும் இருந்துள்ளார். ராஜாராம் மோகன்ராய் தோற்றுவித்த பிரம்ம சமாஜத்தில் பணியாற்றினார். ஆங்கிலேய அரசு இவரது பொதுப்பணியைப் பாரட்டி இவருக்கு ‘ராவ்பகதூர்’ பட்டம் அளிக்க முன்வந்தபோது, அதை மறுத்துவிட்டார். கோவை, மரக்கடை அருகிலுள்ள மாநகராட்சிப் பள்ளி, இவரது பெயரில் இயங்குகிறது; நரசிம்ம நாயுடு வீதியும் அங்குள்ளது.

‘தென்னிந்தியாவின் சிங்கம்’ எனப் போற்றப்பட்டவர்:



இதேபோல, சேலத்தைச் சார்ந்த மற்றொரு முன்னோடி, செய்யாத தவறுக்குத் தண்டிக்கப்பட்டதை எதிர்த்து ஆங்கிலேய அரசிடம் வாதிட்டு நஷ்டஈடு பெற்றவர், ‘தென்னிந்தியாவின் சிங்கம்’ என்று பாராட்டப்பட்ட சேலம் சக்கரவர்த்தி விஜயராகவாச்சாரியார் (1852 – 1944).

சென்னை மாகாணத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பொன்விளைந்தகளத்தூரில் பிறந்தாலும், ஆசிரியர் பணி நிமித்தமாக சேலம் வந்தவர், அங்கேயே சட்டம் பயின்று வழக்கறிஞராகவும் ஆனார். 1882 ஆம் ஆண்டில் சேலம் நகரசபை உறுப்பினராக அரசியல் நுழைந்து, 1895- 1901இல் சென்னை மாநில கவுன்சில் உறுப்பினராகவும் 1913- 1916 இல் மத்திய சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.

1882இல் சேலம் நகரின் செவ்வாய்ப்பேட்டையில், மசூதி இருந்த சாலை வழியாக ஹிந்துக்களின் சுவாமி ஊர்வலம் செல்ல இஸ்லாமியர்கள் எதிர்ப்புத் தெரிவித்தபோது, அதை எதிர்த்துப் போராடினார் விஜயராகவாச்சாரியார். அந்தப் போராட்டம் கலவரமாக மாறியபோது, அந்த மசூதி இடிக்கப்பட்டதுடன், இரு தரப்பிலும் பலர் கொல்லப்பட்டனர். அதையடுத்து விஜயராகவாச்சாரியார் உள்ளிட்ட பலரை ஆங்கிலேய அரசு கைது செய்தது.

விஜயராகவாச்சாரியாருக்கு பத்தாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அந்தமான் செல்லுலர் சிறைக்கு அனுப்பப்பட்டார். அதனால் தனது நகரசபை உறுப்பினர் பதவியையும் இழந்தார்.

ஆயினும், அந்த மதக் கலவரத்துக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று மறுத்த விஜயராகவாச்சாரியார், சிறையிலிருந்தபடியே தான் குற்றமற்றவர் என வாதாடினார். அவருடைய சட்டப் போராட்டத்தால், அவரும் உடன் சிறை சென்றோரும் விடுதலையாகினர். 

அது மட்டுமல்ல, அவர் கைது செய்யப்பட்டதால் பறிக்கப்பட்ட சேலம் நகரசபை உறுப்பினர் பதவியையும் திரும்பப் பெற்றார். மேலும், அவரது நகரசபை உறுப்பினர் பதவிநீக்கக் காலத்துக்கு நஷ்டஈடாக, அன்றைய மதிப்பில் நூறு ரூபாயை பிரிட்டிஷ் அரசு வழங்கியது! இந்த நிகழ்வால் நாடு முழுவதும் பிரபலமானார் சேலம் விஜயராகாவாச்சாரியார்.

1885இல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முதல் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற விஜயராகவாச்சாரியார், 1887இல் காங்கிரஸின் கொள்கைகளை வடிவமைத்த குழுவிலும் இடம் பெற்றார். இவர் ஆரம்பத்திலிருந்தே திலகர் உள்ளிட்ட தீவிர தேசியவாதிகளின் பக்கம் இருந்தார்.

மகாத்மா காந்தி இந்திய அரசியலில் நுழைந்தபோது (1915) அவரது அஹிம்சைப் போராட்டத்தை விஜயராகவாச்சாரியார் ஏற்கவில்லை. எனினும், திலகரின் மறைவுக்குப் பிறகு, 1920இல் நாகபுரியில் கூடிய இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மாநாட்டுக்கு விஜயராகவாச்சாரியார் தலைமை தாங்கியபோது, காந்தியின் கொள்கைகளை ஏற்றார்.

அந்த மாநாட்டில் தான் மகாத்மா காந்தி, ‘அஹிம்சைப் போராட்டம் மூலமாக பூரண ஸ்வராஜ்ஜியம்’ என்ற கருத்தை முன்வைத்தார். அதனை எதிர்த்த மோதிலால் நேரு, சித்தரஞ்சன் தாஸ் உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் வாதிட்டு, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் பூரண ஸ்வராஜ்ஜியப் பிரகடனத்தை நிறைவேற்றினார் விஜயராகவாச்சாரியார்.

சமூக சீர்திருத்தத்திலும் இவரது பங்களிப்பு அளப்பரியது. ஹிந்து மகாசபையிலும் சில ஆண்டுகள் விஜயராகவாச்சாரியர் பொறுப்பு வகித்தார். 1931இல் அகோலாவில் தேசிய அளவில் நடைபெற்ற ஹிந்து மகாசபை கூட்டத்துக்கு இவர் தலைமை தாங்கி இருக்கிறார். இவரது அரசியல் வாரிசாக ராஜாஜி கருதப்படுகிறார்.

பாரதியின் கடைசிச் சொற்பொழிவு:

பத்திரிகையாளரும் எழுத்தாளருமான மகாகவி பாரதி மிகச் சிறந்த சொற்பொழிவாளராகவும் விளங்கியவர். தனது ஆவேசமான விடுதலையுணர்வு கொண்ட சொற்பொழிவுகளால், ஆங்கிலேய அரசின் கண்காணிப்புக்கு ஆளானவர் பாரதி. அவரது இறுதிச் சொற்பொழிவு நிகழ்ந்த இடம் ஈரோடு. அதற்கு ஏற்பாடு செய்தவர் ஈரோட்டைச் சார்ந்த வழக்கறிஞரும் காங்கிரஸ் பிரமுகருமான எம்.கே. தங்கபெருமாள் பிள்ளை.

இவர், ஈரோட்டில் வாழ்ந்த ஈ.வெ.ராமசாமி (பின்னாளில் பெரியார் என்று அழைக்கப்பட்டவர்), வரதராஜுலு நாயுடு உள்ளிட்டோருடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர்; ‘குடியரசு’ என்ற பத்திரிகையை ஈ.வெ.ரா.வுடன் இணைந்து 1924இல் துவக்கியவர்.

01.05.1927 குடியரசு இதழ் தலையங்கத்தில் ஈ.வெ.ரா. “ குடியரசு என்னும் ஒரு பத்திரிகையை ஆரம்பிக்க வேண்டும் என்பதாக முதன்முதலில் நானும் எனது நண்பர் ஸ்ரீமான் தங்கபெருமாள் பிள்ளையும் 1922இல் கோயமுத்தூர் ஜெயிலில் சிறைவாசம் செய்யும்போதே நினைத்தோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

முதல் குடியரசு இதழ் 1925ஆம் ஆண்டு மே மாதம் இரண்டாம் தேதி சனிக்கிழமை வெளியிடப்பட்ட்து. இதன் தொடக்ககால ஆசிரியர்கள் ஈ.வெ.ராமசாமியும், தங்கபெருமாள் பிள்ளையும்தான். முதல் இதழின் முகப்பில் பாரதியார் பாடல்களும் திருக்குறளும் இடம்பெற்றிருக்கின்றன.

இந்த இடத்தில் ஈ.வெ.ரா. பற்றிய சிறு விளக்கம் தேவையாகிறது. ஏனெனில், அவரும் சுமார் 6 ஆண்டுகள் நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்டிருக்கிறார்.

ஈ.வெ.ராமசாமி ஆரம்பக்காலத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கியமான தலைவராக இருந்திருக்கிறார். 1919 முதல் 1925 வரை காங்கிரஸ் கட்சியில் தீவிரமாகச் செயல்பட்டிருக்கிறார். ஈரோடு நகரசபைத் தலைவராக இருந்த அவர், காங்கிரஸ் பணிகளுக்காக அதனை ராஜினாமா செய்திருக்கிறார்! 1922ல் சென்னை மாகாண காங்கிரஸ் தலைவராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணி பகிஷ்கரிப்புப் போராட்டங்களிலும் ஈ.வெ.ரா. ஈடுபட்டுள்ளார். அதற்காக மனைவியுடன் சிறைக்கும் சென்றவர் அவர். ஆனால் பிராமண வெறுப்பு என்னும் கோணல்புத்தி ஆரம்பகாலத்திலேயே அவரிடம் தோன்றிவிட்டது. அதன் விளைவாக நாத்திகமும், ஹிந்து சமய வெறுப்பும், தேசிய எதிர்ப்புணர்வும் பின்னாளில் அவரிடம் வளர்ந்தன. முதல் கோணல் முற்றிலும் கோணல் ஆகிவிட்டது. பின்னாளில் திராவிடர் கழகம் துவங்கி நாட்டு விடுதலைக்கு எதிராகவே பிரசாரமும் செய்தார் ஈ.வெ.ரா.

காங்கிரஸ் கட்சியின் மேலிடத் தலைவர்களுடனான முரண்பாட்டால் ஈ.வெ.ரா.வின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. 1925 நவம்பரில் காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக ‘காங்கிரஸையும் காந்தியையும் ஒழிப்பதே என் முதல் பணி’ என்று சபதமிட்டு அங்கிருந்து வெளியேறினார். அதன்பிறகு குடியரசு இதழில் இருந்து தங்கபெருமாள் பிள்ளை விலகிவிட்டார்.

தங்கபெருமாள் பிள்ளையின் அழைப்பின் பேரில், கருங்கல்பாளையம் வாசக சாலையின் ஆண்டு விழாவுக்காக 1921 ஜூலை 31ல் ஈரோடு வந்தார் மகாகவி பாரதி. அந்த ஆண்டு விழாவில் ‘மனிதனுக்கு மரணமில்லை’ என்ற தலைப்பில் பாரதியார் பேசினார். அடுத்த நாள் (ஆக. 1) ஈரோடு, காரை வாய்க்கால் மைதானத்தில்,  ‘இந்தியாவின் எதிர்காலம்’ என்ற தலைப்பிலும் பாரதி பேசினார். இதுவே பாரதியாரின் இறுதிச் சொற்பொழிவாகும். சென்னை சென்ற பின்னர், சுதேசமித்திரன் நாளிதழில்,  ‘சக்திதாசனின் ஈரோடு யாத்திரை’ என்ற தலைப்பில் இதுதொடர்பாக கட்டுரை எழுதியிருக்கிறார் மகாகவி பாரதி. அதில் தங்கபெருமாள் பிள்ளை பற்றியும் குறிப்பிட்டிருக்கிருக்கிறார்.

வ.உ.சி.க்கு உதவிய கோவை வழக்கறிஞர்:


திருநெல்வேலிப் புரட்சியின் கதாநாயகரான வ.உ.சிதம்பரம் பிள்ளையின் வாழ்வில் கோயமுத்தூர் பெரும் பங்கு வகித்துள்ளது. அவரது சிறைவாசக் காலத்திலும், விடுதலைக்குப் பிந்தைய காலத்திலும், அவருக்குப் பல உதவிகள் செய்தவர்கள் கோவை பிரமுகர்களே.

சுதந்திரப் போராட்டத்தின்போது 1908-இல் ராஜத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்ட வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு உறுதுணையாக இருந்தவர், கோவையைச் சார்ந்த வழக்குரைஞர் சி.கே.சுப்பிரமணிய முதலியார். அவரும் கோவை கிழாரும் வ.உ.சி.யை சிறையிலிருந்து விடுவிக்க சட்டரீதியாகப் போராடினர்.

இதனிடையே கோவை சிறையில் வ.உ.சி.க்கு ஆதரவாக கைதிகள் கலகம் செய்து சிறை அதிகாரியைத் தாக்கியதால், கண்ணனுார் சிறைக்கு வ.உ.சி.யை மாற்றிவிட்டனர்.

1912இல் சிறையிலிருந்து விடுதலையான பின்னரும், சொந்த ஊருக்குச் செல்லக் கூடாது என்ற ஆங்கிலேய அரசின் உத்தரவால், சிறிது காலம் சென்னையில் வசித்த வ.உ.சி, பிறகு தனது நண்பர்கள் வாழும் கோவையில் (1920 - 1924) குடியேறினார். கோவை நகரில், கூட்டுறவு முறையில் தொழிலாளர்களுக்காக மளிகைக்கடை துவக்கினார். கோவையில் தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் அவர் தீவிரமாகப் பங்கேற்றார். அங்கு ஒரு வங்கி இயக்குனராகவும் பணியாற்றினார். பின்னர், பிளேக் நோய்ப் பரவல் காரணமாக, அருகிலுள்ள பேரூருக்கு வ.உ.சி. குடும்பம் இடம்பெயர்ந்தது.

தனக்கு கோவை நகரில் பல வகைகளில் உதவிய வழக்கறிஞரும் நண்பருமான சி.கே.சுப்பிரமணிய முதலியாருக்கு நன்றிக்கடனாக, தனது குழந்தைக்கு சுப்பிரமணியம் என்று பெயரிட்டார் வ.உ.சி.

‘தேசிய சங்கநாதம்’ பெ.வரதராஜுலு நாயுடு:


பத்திரிகையாளரும், சித்த- ஆயுர்வேத மருத்துவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான பெ.வரதராஜுலு நாயுடு (1887- 1957), சென்னை மாநில சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். சேலம் மாவட்டம், ராசிபுரத்தில் பிறந்தவர். ‘தேசிய சங்கநாதம்’ என்ற தலைப்பில் 32 பக்கங்களில் பி.வரதராஜுலு நாயுடுவின் வரலாற்றை வ.உ.சி. எழுதி இருக்கிறார்.

உயர்நிலைக் கல்வி கற்கும்பொழுதே வந்தேமாதரம் இயக்கம் இவரைக் கவர்ந்தது. ‘முற்போக்காளர் சங்கம்’ என்னும் ஓர் அமைப்பை மாணவர்களிடையே அமைத்தார். . அதனால் பள்ளியிலிருந்து விலக்கப்பட்டார். தனது 19 வயதிலேயே தேசிய அரசியலில் ஈடுபட்டார்.

1918இல் மதுரை ஹார்வி மில் தொழிலாளர் வேலைநிறுத்தத்தை ஊக்குவித்து உரையாற்றியதற்காக 18 மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் நாயுடு சார்பில் ராஜாஜி வாதாடினார். உயர்நீதிமன்ற மேல்முறையீட்டில் நாயுடு விடுதலை பெற்றார்.

இவர் சேலத்தில் வாரப்பதிப்பாக 1919ஆம் ஆண்டின் இறுதியில் துவங்கிய ‘தமிழ்நாடு’ இதழும், அவர் எழுதிய இரு கட்டுரைகள், ராஜத் துரோகமானவை என்று குற்றம் சாட்டப்பட்டு, 9 மாதக் கடுங்காவல் தண்டனை பெற்றார். 1923இல் பெரியகுளம் தாலுகா மாநாட்டில் தடையுத்தரவை மீறிப் பேசியதற்காக இவருக்கு 6 மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

1920 ஆகஸ்டில் மகாத்மா காந்தி திருப்பூர் வந்தபொழுது, வரதராஜுலு நாயுடுவின் வீட்டில் தங்கினார். 1921இல் காந்தி மீண்டும் சேலம் வந்தபொழுது இவரது வீட்டில் தங்கினார். அப்பொழுது நடைபெற்ற மகளிர் கூட்டமொன்றில், நாயுடுவின் மனைவி ருக்மணி, தாம் அணிந்திருந்த அனைத்து நகைகளையும் மகாத்மா காந்தியிடம் கொடுத்துவிட்டார்.

1922இல் காந்தி கைதானபோது, அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க, அரசாங்கத்துக்குரிய வருமான வரியைக் கட்ட மறுத்தார். அப்போது, வரி மறுப்பைக் குறிப்பிட்டு டாக்டர் நாயுடு அரசாங்கத்துக்கு எழுதிய கடிதம் காந்தியடிகளின் ‘யங் இந்தியா’வில் வெளிவந்தது.

1925இல் தமிழ்நாடு மாகாண காங்கிரஸ் கமிட்டியில் தலைவராகவும் பணியாற்றினார். 1929இல் காங்கிரஸ் தலைமையுடன் கருத்து வேற்றுமை கொண்டு காங்கிரசை விட்டு வெளியேறினார். ஈ.வெ.ரா.வின் நண்பராக இருந்தபோதும், அவரது தேசிய விரோதக் கொள்கைகளை இவர் ஆதரிக்கவில்லை. பின்னர் ஆரிய சமாஜத்தில் இணைந்தார். நீதிக்கட்சி ஆரம்பிக்கப்பட்ட போது, அதை முறியடிப்பதற்கென்று வரதராஜுலு பிரசாரம் செய்தார். பின்னாளில் ஹிந்து மகா சபையின் தமிழகத் தலைவராகவும் இருந்தார்.

இவரது இதழியல் பணி ‘பிரபஞ்சமித்திரன்’ எனும் வார இதழ் மூலம் தொடங்கியது. மங்கலம் ஷண்முக முதலியார் உரிமையாளராகவும், சுப்பிரமணிய சிவா ஆசிரியராகவும் நடத்தப்பட்ட ‘பிரபஞ்சமித்திரன்’ நடத்த இயலாமல் தத்தளித்தபொழுது, நாயுடு 1916இல் அந்த இதழை வாங்கி, ஆசிரியரானார். அது இரண்டாண்டுகள் வெளிவந்தது. 1918ஆம் ஆண்டு நாயுடு சிறைப்பட்டபொழுது, இந்தப் பத்திரிகை முடக்கப்பட்டது.

அதன் பிறகு ‘தமிழ்நாடு’ இதழைத் தொடங்கினார். 1925இல் தமிழ்நாடு வார செய்தி பத்திரிகையைத் தொடங்கினார். 1931இல் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கிலப் பத்திரிகையின் சென்னைப் பதிப்பைத் துவக்கினார். பிற்காலத்தில் ராம்நாத் கோயங்காவுக்கு இப்பத்திரிகை விற்பனை செய்யப்பட்டது.

விடுதலை பெற்ற இந்தியாவில் நாயுடு 1951இல் சென்னை மாநிலச் சட்டமன்ற மேலவை உறுப்பினராக சேலத்தில் இருந்து காங்கிரஸ் சார்பில் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1952இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில், சேலம் நகரத்தில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார். 1957இல் இவர் மறைந்தார்.

அரும்பெரும் தியாகி தீர்த்தகிரி முதலியார்:

டி.என்.தீர்த்தகிரி முதலியார் (எ) தீர்த்தகிரியார் (1886 – 1953) தர்மபுரியைச் சார்ந்த விடுதலைப் போராட்ட வீரர். இவர் கள்ளுக்கடை மறியல், சட்டமறுப்பு, உப்பு சத்தியாகிரகம், நீல் சிலையை அகற்றும் போராட்டங்களின்போது பல்வேறு கட்டங்களில் 8 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டவர். இவர் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் இருந்துள்ளார்.

இந்திய சுதந்திரப் போராட்டம் மகாத்மா காந்தியின் அகிம்சை வழியில் செல்வதற்கு முற்பட்ட காலத்தில் துப்பாக்கியும், குண்டும் ஏந்தி வன்முறையால் ஆங்கிலேயரை விரட்ட வேண்டுமென்ற கருத்து கொண்டவர்களின் ஆதிக்கத்தில் இருந்தது. தீர்த்தகிரியார் புரட்சி வழியில் செயல்பட்ட தலைவர்களான வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, மகாகவி பாரதி, வாஞ்சிநாதன் ஆகியோரது தோழராக இருந்தார்.

ஆஷ் துரையின் கொலையாளியைத் தேர்வு செய்ய சீட்டு குலுக்கிப் போடப்பட்ட பெயர்களில் தீர்த்தகிரியாரின் பெயரும் ஒன்று. ஆனால் அதில் வாஞ்சிநாதன் தேர்வாகி ஆஷைச் சுட்டுக் கொன்றார். ஆரம்பத்தில் பாலகங்காதர திலகரைப் பின்பற்றினார். ஆயினும் மகாத்மா காந்தியின் செல்வாக்கு பெருகியபோது, அதனை ஏற்று காங்கிரஸ் தொண்டராக சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார்.

சேலம் விஜயராகவாச்சாரியாரால் விடுதலை இயக்கத்துக்கு ஈர்க்கப்பட்டவர்களுள் ஒருவரான டி.என்.கந்தசாமி குப்தாவைத் தனது அரசியல் குருவாக தீர்த்தகிரியார் குறிப்பிட்டுள்ளார். இவர் சிலகாலம் பாரதியாருடன் தலைமறைவாகவும், சிலகாலம் நாடு கடத்தப்பட்டும் பாண்டிச்சேரியில் இருந்திருக்கிறார்.

கண்ணனூர், திருச்சி சிறைகளில் இருந்தபோது விடுதலை வீரர் சுப்ரமணிய சிவாவுடன் இவருக்கு நட்பு வலுப்பெற்றது. இவரது துணிச்சலைக் கண்ட சுப்ரமணிய சிவா, இவருக்கு ’எம்டன்’ என்று பெயரிட்டார். சிவா அவர்கள் சிறையிலிருந்து தன் சொந்த ஊரான வத்தலகுண்டு செல்லாமல் தீர்த்தகிரியாருடன் தர்மபுரிக்கு அருகிலுள்ள பாப்பாரப்பட்டி சென்று தன் இறுதிக்காலத்தை அங்கேயே கழித்தார். இதற்கு தீர்த்தகிரி முதலியாரும் அவரது சகலை சின்னமுத்து முதலியாரும் சுப்ரமணிய சிவா மீது காட்டிய அன்பே காரணம்.

பாப்பாரப்பட்டியில் பாரத அன்னைக்கு கோயில் கட்ட சுப்பிரமணிய சிவா விரும்பியபோது, சின்னமுத்து முதலியாரின் நிதியுதவியால் வாங்கப்பட்டதே, அங்கு தற்போதுள்ள சிவா நினைவகமாகும். அந்த வளாகத்தில் தமிழக அரசால் பாரத அன்னைக்கு ஆலயம் கட்டப்பட்டுள்ளது.

தனது குடும்ப வாழ்வுக்குத் தேவையான பணத்தை, தான் அறிந்த நாட்டு மருத்துவத்தின் மூலமே ஈட்டினார். பற்பொடி, தலைவலி மருந்து, லேகியங்கள் தயாரித்தார். தான் தயாரித்த சித்த பல்பொடிக்கு தேச பக்தர் சித்தரஞ்சன் பெயரில் ‘சித்தரஞ்சன் பல்பொடி’ என்றும், தலைவலி மருந்துக்கு ‘சித்தரஞ்சன் பாம்’ என்றும் பெயரிட்டார்.

நெசவாளர் நலனுக்காக பல சேவைப் பணிகளைச் செய்தவர் தீர்த்தகிரியார். நாட்டின் விடுதலைக்காகவே தமது உடல், உழைப்பு, உயிர் அனைத்தையும் அளித்து, தான் பெரிய நிலச்சுவான்தாராக இருந்தபோதும் தன் சொத்துகளை எல்லாம் நாட்டின் சேவைக்காக செலவிட்ட இவர் 1953இல் ஏழ்மை நிலையில் மறைந்தார்.

தேசிய சுதந்திரப் போராட்டத்தின் திசையைத் தீர்மானிப்பதாக கொங்குநாடு திகழ்ந்திருப்பதை மேற்கண்ட தலைவர்களின் சரிதங்கள் காட்டுகின்றன. அடுத்த பகுதியில், மேலும் பல ஒப்பற்ற தலைவர்களைக் காணலாம்.



  




No comments:

Post a Comment