16/09/2021

ஒரு கோடி ரூபாய் (திலகர் சுயராஜ்ய நிதி)

-மகாகவி பாரதி



(மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 17)

ஸெப்டம்பர் மாஸத்துக்குள் ஸ்வராஜ்யம் கிடைப்பதற்கு ஒரு கோடி ரூபாய் இன்றியமையாத தென்றும், அது கொடுக்காவிட்டால் இந்திய தேசத்து ஜனங்கள் ஸ்வராஜ்யத்தில் விருப்பமில்லாத தேசத் துரோகிகளே யாவார்களென்றும் ஶ்ரீமான் காந்தி முதலியவர்கள் சொல்லிக்கொண்டு வந்தனர்.

ஜனங்கள் ஒரு கோடி ரூபாய் கொடுத்து விட்டார்கள், அந்தத் தொகை எங்ஙனம் செலவிடப்படுகிறது? எப்போது செலவு தொடங்கப் போகிறார்கள்? ஒரு மாஸத்திலோ, இரண்டு மாஸங்களிலோ, அன்றி இன்னும் ஒரு வருஷத்துக்குள்ளேயோ, ஸ்வராஜ்யம் கிடைக்க வேண்டுமாயின், அந்தத் தொகை ஏற்கெனவே செலவு தொடங்கியிருக்க வேண்டுமன்றோ?

“ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் தான் ஸ்வராஜ்யம் வரும்” என்று சொல்லப்பட்ட வார்த்தைக்கு ஒரு பொருள் தான் உண்டு. அதாவது, அந்தப் பணம் ப்ரசாரத் தொழிலிலே செலவிடப்படவேண்டும். நாமோ பலாத்கார முறையை அனுஸரிச்கவில்லை. எனவே, அந்தக் கோடி ரூபாயை ஸைந்யச் செலவுக்கு உபயோகப்படுத்துவதென்ற ஆலோசனைக்கு இடமில்லை. எனவே, ப்ரசாரத் தொழில் ஒன்றுதான் கதி. மேற்படி, தொகையில் ஒரு பகுதிக்கு ராட்டினங்கள் வாங்கி ஜனங்களுக்குக் கொடுக்க வேண்டுமென்று கருதினால் அங்கனம் தாராளமாகச் செய்யலாம். வேறு எத்தனை வகைகளில் செலவு செய்ய விரும்பினாலும் செய்யலாம். ஆனால் அத்தனைக்கும் ஆதாரமான மூலவழி ப்ரசாரந் தான் என்பதை மறந்துவிடக்கூடாது.
ஏற்கெனவே, ப்ரசாரத்தில் இத்தொகையை எங்ஙனம் செலவு செய்யலாமென்பதைக் குறித்துச் சில வழிகள் இப்பத்திரிகையிலே குறிப்பிட்டிருக்கிறேன். ஜில்லாவுக்கு 4 பேருக்குக் குறையாமல் மஹா நிபுணரான ஸ்வதேசீய ப்ரசாரகர் ஏற்பட வேண்டும்.

ஆனால், ப்ரசாரத் தொழில் இதுவரை தொடக்க முறாமல் இருப்பதன் காரணம் யாதென்பது துலங்கவில்லை .

இந்த விஷயத்தைக் குறித்துச் சென்னை மாகாணத்தில் வசூல் தொழிலை முக்கியஸ்தராக இருந்து நடத்திய என் நண்பர் சேலம் ஸ்ரீ ராஜகோபாலாசாரியரும் பிறரும் ஸ்ரீமான் மஹாத்மா காந்திக் கெழுதி வேண்டியன செய்வார்களென்று நம்புகிறேன்.

மற்றபடியுள்ள காங்க்ரஸ் ஸங்கங்களின் அங்கத்தினராலும் அனுதாபிகளாலும் மிகவும் சிரமப்பட்டு வசூல் செய்யப்பட்ட மேற்படி தொகை வீணாய்விடாதபடி கவனிக்க வேண்டும், உலக சரித்திரத்தில் இந்த சந்தர்ப்பம் மிக முக்யமானது. இதில் உலக முழுமையிலும் பல அற்புதமான மாறுதல்கள் தோன்றி வருவது மாத்திரமேயன்றி, உலகத்திலுள்ள தேசங்களுக்கெல்லாம் விடுதலை பொதுவாகி விடுமென்றும் புலப்படுகிறது. இத்தருணத்தில் விரைவிலே இந்தியா எங்கனமேனும் தன் ஸ்வதந்தரத்தை உறுதி செய்து கொள்ளுதல் அதன் கடமையாம். இதுவே, நமது தேசத்தில் பொது ஜனங்களின் மனதில் எப்போதும் விடாமற் பற்றியிருக்கும் பேராவலாகிவிட்டது. அது பற்றியே, மஹாத்மா காந்தி கேட்டபோது, ஜனங்கள் சிறிதேனும் லோபத்தன்மையின்றித் தங்கள் அளவிறந்த வறுமையையும் பாராட்டாமல், பணத்தை யதேஷ்டமாகவும் விரைவாகவும் கொடுத்துத் தங்கள் மீது பழிச் சொல்லுக்குச் சிறிதேனும் இடமின்றிச் செய்து கொண்டார்கள்.

ஒப்பந்தத்தில் ஒரு பாதி நிறைவேறிப் போய் விட்டது. அதாவது மனங்கள் பக்கத்திலே விதிக்கப்பட்ட கடமை நிறைவேறிவிட்டது. இனித் தலைவர்கள் தங்கள் கடமையை நிறைவேற்ற வேண்டியதைத் தவிர வேறொன்றும் இல்லை,

நாம் இங்கும் எழுதிக்கொண்டு வருகையிலே, ஶ்ரீமான் ராஜ்கோபாலாசார்யர் ஒரு கணக்கு ப்ரசுரம் செய்திருக்கிறார், அதில் சென்னை மாகாணத்து வசூல் எவ்வளவென்பதையும் அதில் செலவு எவையென்பதையும் விவரித்துக் கணக்குகள் தெரிவிக்கிறார். அதில் மிகவும் சொற்பமான தொகை யொன்று சுமார் (50,000 ரூபாயென்று நினைக்கிறேன்) ப்ரசாரச் செலவுக்காகப் போடப்பட்டிருக்கிறது. இந்த ரூபாய் போதாதென்பது என்னுடைய அபிப்ராயம். ப்ரசார விஷயத்தில் இந்தியா முழுதையும் ஒன்றாகப் பாராட்ட வேண்டும். இந்தியா முழுமைக்கும் ஒரே திட்டம், ஒரே முறைமை, ஒரே ப்ரசார ஸங்கம் தலைமையாக இருந்து இந்த ஸ்வராஜ்ய ப்ரசாரத்தை நடத்தி வராவிட்டால் நமக்கு எண்ணிறந்த ஸங்கடங்கள் விளையும், “கர்மம் உனக்குரியது; நீ பயனைக் கருதுதல் வேண்டா” என்று கண்ணபெருமான் பகவத்கீதையில் சொல்லியிருப்பதற்கு இக்காலத்தில் பலர் பொருளுணர்ந்து கொள்ள மாட்டாதவர்களாக இருக்கின்றனர்.

பயனே மனிதருக்குக் கிடைக்காத நிலைமையில் தொழில் புரிய வேண்டுமென்பது சிதையில் சொல்லப்பட்டதாகச் சிலர் நினைக்கிறார்கள், அந்த அர்த்தத்தில் பகவான் அந்த வசனத்தை வழங்கவில்லை என்பது கீதை முற்றிலும் வாசித்துப் பார்த்தவர்களுக்கு மிகவும் நன்றாகத் தெரியும்.

தொழில் புரிந்துவிட்டு வெற்றி அகப்படுமோ அகப்படாதோ என்று எவரும் மனம் புழுங்குதல் வேண்டா. பயனுடைய தொவென்று புத்தியாலே நிச்சயிக்கப்பட்ட தொழிலை, ஒருவேளை அது பயன் தராதோ என்ற பேதை ஸம்சயத்தால் நாம் நிறுத்தி வைத்தல் தகாது. தொழிலுக்குப் பயன் நிச்சயமாக உண்டு. கடவுள் பின்னொரு பகுதியிலே சொல்லுகிறார்:- “பார்த்தா, தொழிலுக்கு வெற்றி இந்த உலகத்தில் மிகவும் விரைவாகவே எய்தப்படும்” என்று. தவிரவும், “மகனே, நற்றொழில் புரிந்த எவனும் இவ்வுலகத்தில் தீ நெறி எய்துவதில்லை” என்று பின்னே கடவுள் மற்றோரிடத்தில் விளக்கியிருக்கிறார்.

எனவே, வெற்றியைக் கடவுளின் ஆணையாகக் கண்டு, பயனைப் பற்றி யோசனையே புரியாமல், நம்மவர் ஸ்வராஜ்யத்துக்குரிய தொழில்களை இடைவிடாமல் செய்து கொண்டு வரக்கடவர்,

அதனை உடனே தொடங்கவும் கடவர். அதில் திரிகரணங்களை மீட்சியின்றி வீழ்த்தி விடவும் கடவர்.

-சுதேசமித்திரன்  (11 ஆகஸ்டு 1921 , துன்மதி ஆடி 27)

(காளிதாஸன் என்ற புனைப்பெயரில் எழுதியது)




No comments:

Post a Comment