13/02/2021

இந்திய அரசியலை மாற்றியமைத்த ஞானி

-பேரா. பூ.தர்மலிங்கம்


பண்டித தீனதயாள் உபாத்யாய

இந்திய அரசியல் வானை மாற்றியமைத்த அரசியல் கட்சியான பாஜகவின் முன்னோடி, பாரதிய ஜனசங்கம். அதன் தலைவராக அனைவராலும் அறியப்பட்டவர் பண்டிட் தீனதயாள் உபாத்யாயா. இவரது நினைவுநாள் : பிப்ரவரி 11.

பண்டிட் தீனதயாள் உபாத்யாயா, இந்தியாவின் தலைசிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவர்; மனஉறுதி கொண்ட தேசியவாதி; சிறந்த தத்துவ அறிஞர்; பொருளாதார வல்லுநர்; சமூகவியல் அறிஞர்; வரலாற்றாசிரியர்; இதழாளர்; அரசியல் அறிவியலாளர் என பன்முகத்தன்மை கொண்டவர்; அரசியல், சமூகம், இலக்கியம் என அனைத்துக் களங்களிலும் முத்திரை பதித்தவர்.

இவர், 1937-இல் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தில் (ஆர்.எஸ்.எஸ்.) உறுப்பினராக இணைந்து, 1942-ஆம் ஆண்டிலிருந்து தன்னை முழுநேர ஊழியராக அர்ப்பணித்துக் கொண்டவர். இன்றைய பாஜகவின் முன்னோடியான பாரதிய ஜனசங்கத்தின் பொதுச் செயலாளராக, தலைவராக இவர் இருந்த காலகட்டத்தில்தான் கட்சி நாடு முழுவதும் வளர்ச்சி பெற்றது. ஆயினும், 1968-இல் மர்மமான மரணத்தால் இவரது தேசிய வாழ்க்கை மிகக் குறைந்த காலத்தில் சரிந்து போனது.

தீனதயாள், தனது வாழ்க்கை முழுவதையும் தேச நலனுக்காக அர்ப்பணம் செய்தவர். சமூகப் பணிகளில் நேரடியாக ஈடுபட்டு மக்களின் கஷ்டங்களை உணர்ந்தவர். பாரதத்தின் நாகரிகம் சார்ந்த அரசியல் பயணத்துக்கு இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. பாரதத்தின் இயல்பு மற்றும் பாரம்பரியத்துடன் இணக்கமான ஓர் அரசியல் தத்துவத்தை உருவாக்க தீனதயாள் விரும்பினார். இது பாரதத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தையும் உறுதி செய்வதாக அமைந்தது.

பண்டிட் தீனதயாள் உபாத்யாயா, ஒரு சித்தாந்தவாதியாக, அமைப்பாளராக, அரசியல் தலைவராக இந்திய அரசியலில் தனது அழியாத முத்திரையை விட்டுச் சென்றுள்ளார். ஓர் அமைப்பாளராக இவர் ஓர் அரசியல் கட்சியின் அடித்தளத்தை அமைத்தார், பின்னாளில் இக்கட்சியானது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக உருவானது. ஒரு சித்தாந்தவாதியாக தனது சுயசிந்தனைக் கருத்துக்களின் மூலம் தனது அரசியல் பார்வையைக் கற்பித்தார். ஓர் அரசியல் தலைவராக கொள்கை ரீதியான அரசியலைப் பின்பற்றினார். இவர் ‘ஏகாத்ம மானவ வாதம்’ என்ற ஒருங்கிணைந்த மனிதநேய தத்துவத்தை முன்வைத்தார். பொது வாழ்க்கையில் தனது நடத்தையின் மூலம் அரசியல் ஆர்வலர்களுக்கு முன்னுதாரணமாகவும் இருந்தார். தனது அறிவுசார் திறமைகள், சித்தாந்த அர்ப்பணிப்பு, அரசியல் புத்திசாலித்தனம் ஆகியவை மூலம் தற்போதும் ஏராளமான ஆர்வலர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார்.

பாரதிய ஜனசங்கத்தின் செயல்திறனைக் கட்டியெழுப்புதல், அதன் அரசியல் கலாசாரத்தை வளர்த்தல், அதன் அரசியல் சித்தாந்தத்தை உருவாக்குதல், காங்கிரசுக்கும் அதன் அரசியலுக்கும் ஒரு மாற்றீட்டை உருவாக்கும் நோக்கில் கூட்டணி ஆட்சியின் சகாப்தத்தை இந்தியாவில் ஏற்படுத்துதல் போன்றவற்றில் தீனதயாளுக்கு முக்கிய பங்களிப்பு உள்ளது.

தொடக்க வாழ்க்கை

உபாத்யாயாவின் வாழ்க்கை பல சவால்களும், சிரமங்களும், பிரச்னைகளும் நிறைந்தது. உத்தரப்பிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்திலுள்ள நாக்லா சந்திரபான் என்ற கிராமத்தில் பிறந்தார். சிறுவயதிலேயே தாய், தந்தையரை இழந்தார். உடன்பிறந்த தம்பியையும் இழந்தார். உறவினர்களால் வளர்க்கப்பட்டார். ராஜஸ்தான் மாநிலம், கங்காபூரில் ஆரம்பக் கல்வியையும், பின்னர், ராஜ்தூரில் 8 மற்றும் 9ஆம் வகுப்பும், சிகாரில் 10-ஆம் வகுப்பும் படித்தார். 1935-இல் பிலானியிலுள்ள பிர்லா கல்லூரியில் பள்ளி மேல்நிலைக்கல்வி பயின்றார். இந்த மேல்நிலைக் கல்வித் தேர்வில் மிக அதிக மதிப்பெண்கள் பெற்றதற்காக, தங்கப் பதக்கமும், மேல்படிப்புக்கான கல்வி உதவித்தொகையும் பெற்றார்.

தீனதயாள் தனது பட்டப்படிப்புக்காக கான்பூரிலுள்ள சனாதன் தரம் கல்லூரியில்’ சேர்ந்தார். அப்போது, சுந்தர்சிங் பண்டாரி, பல்வந்த் மகா சாப்தே ஆகியோருடன் நட்பு கொண்டார். அதன் பின்னர், 1937-இல் பல்வந்த் சாப்தே மூலமாக ஆர்.எஸ்.எஸ்.ஸில் சேர்ந்தார். ஆர்.எஸ்.எஸ்.ஸைத் தோற்றுவித்த டாக்டர் ஹெட்கேவாருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். அது இவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

1939-இல் தனது இளநிலைப் பட்டப் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். முதுகலைப் பட்டப் படிப்பிற்காக ஆக்ராவிலுள்ள செயின்ட் ஜோன்ஸ் கல்லூரியல் சேர்ந்தார். சூழ்நிலை காரணமாக முதுகலைப் படிப்பை இடையில் நிறுத்த வேண்டியதாயிற்று. இருப்பினும், தீனதயாள் அரசு நிர்வாகப் பணித் தேர்வை எழுதி வெற்றிகரமாகத் தேறினார். தேர்ந்தெடுக்கப்பட்டோரில் முதல் ஆளாக இருந்தபோதிலும் இவருக்கு ஆங்கிலேய அரசுப் பணியில் நாட்டம் இல்லாததால் பணியில் சேரவில்லை. தனது மாமாவின் வற்புறுத்தலால் 1941-இல் பார்யாக்கில் இளநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்து தேர்ச்சி பெற்றார். அரசு மற்றும் தனியார் துறைகளில் கிடைத்த அனைத்து வேலைவாய்ப்புகளையும் நிராகரித்து, பிறகு இவர் இயக்கப் பிரசாரகருக்கான வாழ்க்கையைத் தழுவி, ஆர்.எஸ்.எஸ்.ஸில் முழுநேர ஊழியரானார்.

ஆர்.எஸ்.எஸ்.ஸை வலுப்படுத்தல்

1940-களில் இவர் ஆர்.எஸ்.எஸ்.ஸின் முழுநேர ஊழியராக ஆனபோது இந்தியாவில் சுதந்திர இயக்கத்திற்கான போராட்டம் உச்சத்தில் இருந்தது. எனினும், ஆர்.எஸ்.எஸ்.ஸின் திட்டம் மற்றும் கொள்கைப்படி இந்து சமூகத்தை ஒழுங்கமைக்கும் நோக்கத்தை நிறைவேற்ற அவர் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். இவரைப் பொருத்த வரை, ஆர்.எஸ்.எஸ்.ஸின் பணிகளை வலுப்படுத்துவது மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தின் மேம்பாடு போன்ற விருப்பங்களே இலக்குகளாக இருந்தன.

1944 வரை உத்தரப்பிரதேசத்தின் லட்சுமிபூர் மாவட்டத்தின் ஆர்.எஸ்.எஸ் அமைப்பாளராகப் பணியாற்றினார். பின்னர் உத்தரப்பிரதேச ஆர்.எஸ்.எஸ்.ஸின் கூட்டு மாகாண அமைப்பாளராக பதவி உயர்வு பெற்று 1951 வரை தொடர்ந்து அதில் பணியாற்றினார். ஆர்.எஸ்.எஸ்.ஸை வலுப்படுத்த கடுமையாக உழைத்தார். தனது கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, நேர்மை, ஒழுங்கமைக்கும் திறன், இயக்க விசுவாசம் ஆகியவற்றால் ஆர்.எஸ்.எஸ்.ஸில் நற்பெயரையும் பாராட்டையும் பெற்றார்.

பத்திரிகையாளரானார்

தீனதயாள் வணிகரீதியான நோக்கமின்றி சேவை மனப்பான்மையோடு சிறந்த பத்திரிகையாளராகப் பணியாற்றினார். இவரது செயல்கள், படைப்புகள், பேச்சுகள் அனைத்திலும் தேசியமே நிறைந்திருந்தது. இந்தியாவை உலக அரங்கில் உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் எப்போதும் செயல்படுவார். தனது வீடு, குடும்பம் இவற்றைவிட தேச சேவையையே முக்கியமாகக் கருதினார்.

தீனதயாள் உபாத்யாயா, ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் திறம்பட எழுதக் கூடியவர். 1940-களில் லக்னௌவிலிருந்து ‘ராஷ்டிர தர்ம பிரகாஷன்’ என்ற பதிப்பகத்தை நிறுவி ‘ராஷ்டிர தர்மா’ என்ற ஹிந்தி மாத இதழைத் தொடங்கினார். ‘பாஞ்சஜன்யா’ என்ற ஹிந்தி வாராந்திர இதழையும் 1940-50இல் ‘ஸ்வதேசி’ நாளிதழையும் வெளியிட்டார். ஹிந்தியில் மிகவும் பிரபலமான சந்திரகுப்த மௌரியர் என்ற நாடகத்தை எழுதியுள்ளார். பின்னர் சாம்ராட் சந்திரகுப்தா, ஜகத்குரு சங்கராச்சாரியார் என்ற இரண்டு புத்தகங்களை எழுதினார். ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் ஹெட்கேவாரின் மராத்தி மொழியிலான வாழ்க்கை வரலாற்றை மொழி பெயர்த்தார். ‘ஆர்கனைசர்’ என்ற ஆங்கில வார இதழில் ‘அரசியல் டைரி’ என்ற தலைப்பில் தொடர்ந்து எழுதி வந்தார். இவர், தனது கருத்துக்களை தத்துவக் கட்டுரைகளாகவும் உரைகளாகவும் வெளிப்படுத்தினார்.

தீனதயாளும் பாரதிய ஜனசங்கமும்

1951-ஆம் ஆண்டு, ஆர்.எஸ்.எஸ். ஆதரவுடன் டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி பாரதிய ஜனசங்கத்தை நிறுவியபோது, பாரதிய ஜனசங்கத்தில் சேருவதற்கு தீனதயாள் உபாத்யாயா பணிக்கப்பட்டார். மேலும், கட்சியின் உத்தரப்பிரதேச மாநில பொதுச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். பின்னர் 1952 ஆம் ஆண்டில் அகில இந்திய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். டாக்டர் முகர்ஜி பாரதிய ஜனசங்கத்தை நிறுவிய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, காஷ்மீரப் போராட்டத்தில் ஈடுபட்டபோது அரசால் கைது செய்யப்பட்டு, சிறையில் மர்மமான முறையில் திடீரென இறந்தார். அவரது இறப்பைத் தொடர்ந்து அடுத்த 15 ஆண்டுகள் கட்சிக்காக தீனதயாள் அயராது உழைத்தார். அந்தக் கொந்தளிப்பான காலகட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளராகச் செயல்பட்டார். ‘இரண்டே இரண்டு தீனதயாள்கள் இருந்தால் போதும், இந்தியாவின் அரசியல் முகமே மாறிவிடும்’ என்று சியாம பிரசாத் முகர்ஜி இவரைப் பற்றிக் கூறி இருக்கிறார். பின்னர், 1967ஆம் ஆண்டு டிசம்பரில் பாரதிய ஜனசங்கத்தின் தலைவரானார். ஆனால் சில மாதங்களிலேயே இவரும் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.

1968 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 அன்று, வாரணாசி அருகே மொகல்சராய் ரயில் நிலையத்தின் (தற்போது தீனதயாள் ரயில் நிலையம்) நடைபாதையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

ராம் மனோகர் லோகியா, சரண்சிங் மற்றும் பிறருடன் இணைந்து, தீனதயாள் முதன்முதலாக காங்கிரசுக்கு எதிராக 1963-ஆம் ஆண்டிலும் பின்னர் 1967-ஆம் ஆண்டிலும் ஒரு கூட்டணியை உருவாக்கினார். இதன் விளைவாக, ஒன்பது மாநிலங்களின் நாடாளுமன்றத் தேர்தல்களில் காங்கிரசுக்கு எதிரான அலை உருவானது. 1967-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் ஆறு மாநிலங்களில் மாற்றுக் கட்சிகள் ஆட்சியைப் பிடித்தன. இது அரசியல் பன்முகத் தன்மைக்கு இடமளித்ததோடு, வெல்ல முடியாத கட்சி காங்கிரஸ் என்ற அகந்தையையும் சிதைத்தது. இது இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்ரமாக இருந்தது. 1977- ஆம் ஆண்டில், மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதா கட்சி மத்தியில் அரசாங்கத்தை அமைத்த போது, காங்கிரஸ் அல்லாத மாற்று பற்றிய இவரது கனவு நனவாகியது.

ஒருங்கிணைந்த மனிதநேயம்

ஒருங்கிணைந்த மனிதநேயம் எனப்படும் கருத்துக்களின் தொகுப்பை (ஏகாத்ம மானவ வாதம்), ஏப்ரல் 1965-இல் புனேவில் ஆற்றிய நான்கு சொற்பொழிவுகளில் ஒருமுறையான வழிமுறையாக தீனதயாள் உபாத்யாய வழங்கினார். இக்கருத்துக்கள் தொடர்பான அவரது சிந்தனைக் கூறுகள், ஏற்கனவே ஜனசங்கத்தில் விவாதிக்கப்பட்டு, 1965 ஜனவரியில் விஜயவாடாவில், கட்சியின் அடிப்படைச் சித்தாந்த அறிக்கையாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது தேச பொருளாதார மாதிரியை முன்வைத்து இந்திய சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் ஈர்க்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. இது மனிதனை மைய நிலையில் வைக்கிறது. உபாத்யாயாவின் கூற்றுப்படி, நாட்டின் முதன்மையான அக்கறை, தனி மனிதனை மையநிலையில் வைக்கின்ற உள்நாட்டுப் பொருளாதார மாதிரியை உருவாக்குவதாக இருக்க வேண்டும்.

தீனதயாளைப் பொருத்த வரை, மனிதனுக்கு முதன்மையான இடத்தைத் தராத எந்தவொரு அமைப்பும் இறுதியில் சிதைந்துவிடும். இவரது அறிவு செறிந்த இச்சொற்பொழிவு, சரியான கண்ணோட்டத்தில் மனிதனுக்கான இடத்தை ஒருங்கிணைந்த மனிதநேயத்தின் வடிவத்தில் நிலைநிறுத்துகிறது. மேலும் மனிதனை ஒரு முழுமையான ஆளுமையுடன் கூடிய மனிதனாக வளர்க்க முயற்சிக்கிறது. தீனதயாள் உபாத்யாயாவின் ஒருங்கிணைந்த மனிதநேயக் கோட்பாடு, அதன் அடிப்படை ஆதாரத்தை, இந்திய ரிஷிகள் மனித குலத்திற்கு வழங்கிய பண்டைய ஞானத்திலிருந்து பெற்றுள்ளது. ஆதி சங்கரரின் அத்வைத கருத்துக்களையும் தன்னுள் கொண்டுள்ளது.

தீனதயாள், “முதலாளித்துவம், சோஷலிசம் போன்ற அமைப்பு முறைகளால் கடவுளின் மிக உயர்ந்த படைப்பான மனிதன் தனது சொந்த அடையாளத்தை இழக்கிறான். எனவே நாம் மனிதனை அவருடைய சரியான நிலையில் மீண்டும் நிலைநிறுத்த வேண்டும். தனது சிறப்பை அவன் உணருமாறு செய்ய வேண்டும். அவனது திறன்களை மீண்டும் எழுப்ப வேண்டும். மேலும் அவரது உள்ளார்ந்த ஆளுமையின் மிகச் சிறப்பான இடத்தை அடைவதற்கு அவரை ஊக்குவிக்க வேண்டும். இதை ஒரு பரவலாக்கப்பட்ட பொருளாதாரத்தின் மூலம் மட்டுமே நிறைவேற்ற முடியும். ஆதலால் சுதேசி மற்றும் பரவலாக்கம் ஆகியவை தற்போதைய சூழலுக்கு ஏற்ற பொருளாதாரக் கொள்கை” என பரிந்துரைக்கிறார்.

ஒருங்கிணைந்த மனிதநேயம், மேற்கத்திய அறிவியலை வரவேற்றாலும், மேற்கத்திய பொருளியல் தத்துவங்களான முதலாளித்துவம், மார்க்சிய சோஷலிசம் ஆகிய இரண்டையும் எதிர்க்கிறது. இது முதலாளித்துவத்துக்கும் சோஷலிசத்திற்கும் இடையே ஒரு நடுநிலையை நாடுகிறது. முதலாளித்துவமும் கம்யூனிசமும் பொருளாதார பலத்தின் மீது மட்டும் தங்களது கவனத்தைச் செலுத்துவதால், தீனதயாள் இவ்விரண்டையும் புறக்கணிக்கிறார். முதலாளித்துவத்தில் செல்வத்தின் செறிவு ஒருசிலரின் கைகளிலும், கம்யூனிசத்தைப் பொருத்த வரை அரசின் கைகளிலும் இருக்கிறது. இவை இரண்டிலும், தனிமனிதன் ஒரு பலவீனமான, முக்கியத்துவமற்ற நபராகக் கருதப்படுகிறான். 1965 -ஆம் ஆண்டிலேயே கம்யூனிசத்தின் சீரழிவு பற்றி தீனதயாள் அறிந்திருந்தார். கம்யூனிச நாடுகளில், ஒரு புதிய அதிகாரத்துவ சுரண்டல் வர்க்கங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன என்பதை விளக்க, அவர் யுகோஸ்லேவேக்கியாவின் கம்யூனிச அரசியல்வாதி மற்றும் கோட்பாட்டாளர் - மிலோவன் டிஜிலாஸ் கூறிய புதிய வர்க்கத்தை மேற்கோள் காட்டினார்.

நான்கு மனிதகுல நோக்கங்கள்:

உபாத்யாயாவின் கூற்றுப்படி, மனிதனின் உடல், மனம், புத்தி, ஆன்மா ஆகிய படிநிலை ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட பண்புகள் நான்கும், உலகளாவிய நோக்கங்களான அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றுடன் ஒத்திருக்கின்றன; இவை நான்கும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இவற்றில் எதையும் புறக்கணிக்க இயலாது என்றாலும் கூட, தர்மமே அடிப்படையாகும். மேலும் மோட்சமே மனிதகுலத்தின் இறுதி குறிக்கோள் (தர்மம் மற்றும் வீடு) என்கிறார். ஆனால், முதலாளித்துவ மற்றும் சோஷலிச சித்தாந்தங்களிலுள்ள சிக்கல் என்னவென்றால், அவை உடல் மற்றும் மனதின் தேவைகளை (இன்பம் மற்றும் பொருள்) மட்டுமே பொருட்டாகக் கருதுகின்றன. எனவே ஆசை மற்றும் செல்வத்தின் பொருள் முதல்வாத நோக்கங்களை மட்டுமே அவை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன என்று தீனதயாள் கூறுகிறார்.

இது மனிதனுடைய – உடல், மனம், புத்தி மற்றும் ஆன்மா ஆகிய நான்கு பண்புக் கூறுகளை உள்ளடக்கியது. அவனது அனைத்து மாறுபட்ட சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகளிலிருந்து இவை உருவாகின்றன. இந்த நான்கு பண்புக்கூறுகளும் ஒரு மனிதனுக்குள் ஒருங்கிணைந்தவை. ஆனால், இவை ஒரு சமூகத்தின் விதிமுறைகள், மனிதனின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப, அவற்றின் செயற்பாட்டு வீரியம் வேறுபடுகிறது.

மனிதன் இயற்கையாகவே - உடல், மனம், ஆன்மாவின் தேவைகளை நிறைவு செய்ய ஒன்றிணைந்து முயற்சிக்கின்ற ஒரு சமூக விலங்கு என தீனதயாள் வாதிடுகிறார். தர்மம் என்பது மனிதனின் தேவைகளை நிறைவு செய்யவும் ஒற்றுமையுடன் வாழவும் உதவும் விதியாகும். மேலும், சமூக ஒற்றுமை இல்லாமல் மனிதத் தேவையை நிறைவு செய்வது என்பது உண்மையில் சாத்தியமற்றது. எனவே, நல்ல சமூகம் என்பது ஓர் உயிரினத்தைப் போன்று செயல்படுகிற அமைப்பாகும். இதில் ஒவ்வொரு மனிதரும் தேசத்தின் நலனைக் காப்பதற்காகச் செயல்படுகிறார்கள். ஒவ்வொரு தேசிய நிறுவனமும் அதற்கென சொந்த அடையாளத்தை அல்லது ஒரு குறிப்பிட்ட புவியியல் பகுதிக்குள் வாழ்கின்ற மக்கள் நீண்ட காலமாக இணைந்திருப்பதன் மூலம் உருவாகின்ற தேசிய கலாசாரத்தைக் கொண்டிருக்கும் என்று தீனதயாள் குறிப்பிடுகிறார்.

பொருளாதாரம், அரசியல் இரண்டையும் பரவலாக்க வேண்டும் என்று பண்டிட் தீனதயாள் விரும்பினார். வாழ்க்கையை ஒட்டுமொத்தமான ஒன்றாக அவர் கருதினார். மேலும் ஒருங்கிணைந்த கண்ணோட்டத்தில் வாழ்க்கையைப் பற்றிப் பேசினார்.

பல்வேறு வடிவங்களிலான அரசாங்கத்தில் ஜனநாயகம் மிகவும் இயல்பானதாக இருப்பதாக தீனதயாள் கருதினார். ஏனெனில் தேசத்தின் தலைவிதியை நிர்ணயிப்பதில் ஜனநாயகம் நேரடிப் பங்கு வகிக்கின்றது. ஒருங்கிணைந்த மனிதநேயக் கருத்தின் அடிப்படையில், அரசியல் ஜனநாயகமானது சமூக மற்றும் பொருளாதார ஜனநாயகத்துடன் இணைந்தாலன்றி அரசியல் ஜனநாயகம் என்பது ஒரு மோசடியாகும்.

அந்த்யோதயா

பண்டிட் தீனதயாள் உபாத்யாயா, ‘அந்த்யோதயா’ என்ற கருத்தை முன்வைத்தார். அதாவது வரிசையின் கடைக்கோடியில் நிற்கும் மனிதனின் நலனுக்கான திட்டம் இதுவாகும். தீனதயாள் உபாத்யாயா எளிய மக்களின் முன்னேற்றத்துக்காகவே பெருமளவில் எழுதியும் பேசியும் வந்தார்.

ஏழை - எளிய மக்களுக்குப் பணியாற்றுவதே அரசியலின் முழுநோக்கம் என இவர் நினைத்தார். பல நூற்றாண்டு காலமாக அன்னியரின் ஆதிக்கம் மற்றும் மோசமான நடவடிக்கைகளைத் தாங்கி, தேசத்தின் ஆன்மாவை உயிரோடு வைத்திருந்த ஏழை மற்றும் பாராம்பரியமான குடும்பத்தைச் சார்ந்த எளிய மக்கள், தீனதயாளின் கவனத்தை ஈர்த்தவர்கள் ஆவர். தனது பெரும்பாலான அரசியல் அறிக்கைகளில், நாட்டின் எதிர்காலம் இந்த சாமானியரின் கைகளில் இருப்பதாக இவர் குறி[ப்பிட்டுள்ளார். தீனதயாள், “நமது நாட்டின் முன்னேற்றத்தையோ, அதற்காக அரசாங்கம் என்ன செய்தது அல்லது விஞ்ஞானிகள் எதைச் சாதித்தார்கள் என்பதைப் பற்றியோ நான் மதிப்பிடமாட்டேன். ஆனால் நமது நாட்டின் முன்னேற்றத்தை, கிராமத்தில் உள்ள மனிதனின் முன்னேற்றத்தின் அடிப்படையில், தனது குழந்தைகளுக்கு எந்த அளவிற்கு சிறந்த வாழ்க்கையை அமைத்துத் தருவதற்கான திறன் அவனிடம் உள்ளது என்பதைப் பொறுத்தே மதிப்பீடு செய்வேன்” என்று எழுதினார்.

இவ்வாறாக, பண்டிட் தீனதயாள், மனிதகுலத்தின் கலாசார அடித்தளத்தில் நவீன இந்திய அரசியலைக் கட்டமைக்கத் தூண்டிய அசாதாரண மனிதர்களில் ஒருவராகத் திகழ்கிறார். தீனதயாளின் மகத்துவத்தை ஆதரவாளர்கள் மட்டுமின்றி எதிரிகளும் பாராட்டுவது அதனால்தான்.

இந்தியாவின் அறிவுசார் உல்கிலும், அரசியல் வரலாற்றிலும் தீனதயாள் உபாத்யாயா இன்னும் தனக்குரிய சரியான இடத்தைப் பெறவில்லை என்பது ஒரு முரண்பாடாகும். எனவே, இவரைப் பற்றிய பல ஆய்வுகள் செய்யப்பட வேண்டியது அவசியம். இவரது சித்தாந்தக் கருத்துக்கள் அனைத்து இந்திய மக்களையும் சென்றடைய வேண்டும். பண்டைய இந்தியரின் பெருமை மீட்டெடுக்கப்பட வேண்டும்.


கட்டுரையாளர் அறிமுகம்:




முனைவர் பூ.தர்மலிங்கம், பண்டிட் தீனதயாள் உபாத்யாயா இருக்கை பேராசிரியர், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி.


No comments:

Post a Comment