13/02/2021

அன்னைத்தமிழ் வளர்த்த அற்புதப் புலவர்கள் - 5

 -பொன்.பாண்டியன் 


பகுதி-1



13. பரணர்

(கடைச்சங்கப் புலவர் )

 சங்கத்தமிழ்ப் புலவர்களில் மின்னும் தாரகைகள் பலர். அவர்களில் கண்கவரும் நட்சத்திரங்களில் பரணர் முதன்மையானவர். கபிலரும் பரணரும் நண்பர்கள். இருவரும் இணைந்து பல இடங்களுக்குச் சென்று தமிழ் வளர்த்தனர். 

மற்றைய புலவர்களின் பாடல்களைவிட பரணரின் பாடல்களில் வரலாற்றுச் செய்திகள் பொதிந்திருக்கும். இவரை ஒரு 'வரலாற்றுப் புலவர்' என்று அழைப்பதும் மிகையன்று. இவர் அகத்துறைக்

கருத்துகளோடு அரசியல் மற்றும் பிற கருத்துக்களை

இணைத்துப் பாடுவதில் வல்லுநர் ஆவார்.

அதற்குச் சான்றாக அகநானூற்றின் 322-ஆவது பாடலைக் குறிப்பிடலாம்.  அஃது என்னவெனில் 

"ஒளிறுவேல் தானைக் கடுந்தேர்த் திதியன்

........................................

புகலரும் பொதியில் போலப்

பெறலருங் குரையள்எம் அணங்கியோளே." 

அதாவது அடைவதற்கரிய திதியனின் பொதிகை மலைச்சிகரத்தைக் கூட அடைந்துவிடலாம். தலைவியை அடைவது மிகவும் கடினம் என்பதாகும். 

இவ்வாறு பல பாடல்கள் உள்ளுறையாக வருவதைச் சான்று காட்டலாம். இவர் பாணர் மரபினர் என்பதை இவர்தம் சில பாடல்கள் மூலம் உணர முடிகிறது. 

' பரண்' என்ற சொல் தாங்குதல் என்ற பொருளைத் தருகிறது. பரணரும் அறத்தைத் தாங்கினார்.  அதனால்தான் அவர் பரிசிலுக்காகப் பாடாமல் சரியான செயல்களையும் தவறான செயல்களையும்

காய்தல்- உவத்தல் இன்றிப் பாடியுள்ளார். அதற்கான சான்றுகளைப் பிறகு காணலாம். 

புறநானூறு 99–ல் ஔவையார் பாடுகிறார்... 

" அன்றும் பாடுநர்க்கு அணியை இன்றும்

பரணன் பாடினர் மன்கொல் மற்றுநீ." 

பரணரே பாடிவிட்டார்- சொல்லிவிட்டார் பிறகென்ன? என்று அதியமான் நெடுமான் அஞ்சியைப் புகழ்ந்து பாடும்போது இவ்வாறு உரைத்திருக்கிறார் ஔவை. 

பொதுவாக அனைவரும் செய்யுளின் நயம் பாராட்டுவர்.  ஆனால் புலவோர் பரணரின் பாடலின் நயம் மட்டுமல்லாமல் பாடல் எழுந்த காரணம்; மிகை-குறை ஏதும் அற்ற பாடலின் கருத்து போன்றவற்றிற்காகவே பரணரைப் போற்றிப் பாடினர். 

" கரணம் அமைந்த காசறு செய்யுள்

பரணர் பாடினார் பத்துப்பாட்டு." 

அதாவது மெய்க்காரணம் அமைந்த குற்றமற்ற செய்யுளை இயற்றும் பரணர் என்று பதிற்றுப்பத்தில் ஐந்தாம்பத்தின் பதிகம், பரணரைப் புகழ்ந்து பாடுகிறது. 

"கடவுள் நிலைய கல்லோங்கு நெடுவரை

வடதிசை எல்லை இமயமாகத்

தென்னங் குமரியொடு ஆயிடைஅரசர்" 

என்ற பதிற்றுப்பத்து 43- ஆம் பாடலில் சேரன் செங்குட்டுவன் ஒருங்கிணைந்த பாரதத்தை தன் ஒருகுடைக்கீழ் ஆண்டதை தேசியத்தன்மை பொதிந்த விதத்தில் பாடியுள்ளார். 

இந்தப் பத்துப்பாடல்களுக்கு செங்குட்டுவன் பரணருக்குத் தந்த பரிசு என்ன தெரியுமா? 

உம்பர்க்காட்டுவாரி என்ற நிலப்பரப்பு. அதுமட்டுமன்று. தான் பெற்றெடுத்த செல்வன் குட்டுவன்

சேரலையும் பரிசாகத் தந்தான் எனில், பரணர் பெருமானை எந்த நிலையில் மக்கள் வைத்திருந்தனர் என்பதை நினைக்கும்போது மெய்சிலிர்க்கிறது அல்லவா? 

இன்றும் இமயமலையில் தெய்வங்கள் உறைவதாக மக்களிடையே நிலவும் நம்பிக்கையை  ‘’கடவுள்நிலைய..... இமயம்." –என்றுஅன்றே உறுதிப்படுத்தியுள்ளார். 

பசும்பூண் பாண்டியன் என்னும் மன்னனின் படைத்தலைவன் அதிகன்; வீரம்மிக்கவன்.   கைப்பறந்தலை என்ற களத்தில் கொங்கருக்கும் பாண்டியனுக்கும் போர். அதிகனால் கொங்கரின் சேனை பலத்த சேதாரம் ஆனது.  ஒருவழியாக அதிகன் போரில் கொல்லப்பட்டான்.

அதனால் கொங்கர் பெருத்த ஆரவாரம் செய்தனர். அவர்களுடைய ஆர்ப்பரிப்பு அடங்குமாறு பாண்டியன் கொங்கரை வெற்றி கொண்டார். அதுபோல, தலைவனையு ம்தலைவியையும் இணைத்துப்பேசி ஊரார் வம்பளந்து தூற்றுகிறார்கள். அவ்ஊராரின் வாயடங்குமாறு அவர்களின் திருமணம் நடந்தேற வேண்டும் என அகத்தைப் புறத்தொடு இணைத்துப் பாடி அவர்கள் மணம் புரிந்தாக வேண்டும் என்ற அறத்தையும் உள்ளுறையாக வைத்து ஒரு வரலாற்றையும் தெரிவிக்கின்றார். அந்தப் பாடல் இதோ:

" மயங்குமலர்க் கோதை குழைய மகிழ்நன்

முயங்கிய நாள்தவச் சிலவே; அலரே,

கூகைக் கோழி வாகைப் பறந்தலைப்

பசும்பூட் பாண்டியன் வினைவல் அதிகன்

களிறொடு பட்ட ஞான்றை

ஒளிறு வாட் கொங்கர்

ஆர்ப்பினும் பெரிதே." 

 -குறுந்தொகை 393. 

இமயம் முதல் குமரி வரையிலான நமது பாரத தேசத்திற்கு ஆரியவர்ஷம்- ஆரிய நாடு என்று பெயர் ஆகும். இதில் சேர, சோழ, பாண்டிய, அங்க, வங்க, சீன, சோனகம்...உட்பட 56 தேசத்து மன்னர்கள் இம்மாபெரும் தேசத்தை நிர்வகித்து வந்தனர். 

கடைச்சங்க கால சமயத்தில் (வடக்கே கனிஷ்கர், ஹர்ஷர் போன்றோர் காலத்தில் ) இமயத்துக்கும் விந்தியத்துக்கும் இடைப்பட்ட நிலப்பரப்புக்கு ' ஆரியவர்த்தம்' என்று பெயரிடப்பட்டது. அதனால் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆரியர்கள் எனப்பட்டனர்.

புலவர் பரணர் மன்னர்களின் வீரத்தைப் பாராட்டும்போது இவன்சிற்றரசன்; பேரரசன்; சேரன்; ஆரியன் என்ற பாகுபாடு காட்டாமல் வீரத்தைப் பாராட்டிப் பாடியுள்ளார். 

கடல்போன்ற சேனைகளுடன் இணைந்துவந்து தன்னை எதிர்த்த சேர சோழர்களை பாண்டிய நெடுஞ்செழியன் கூடற்பறந்தலையில் கலங்கடித்துப் புறமுதுகிடச் செய்ததை,

 "உடன்இயைந்து எழுந்த இருபெரு வேந்தர்

கடன்மருள் பெரும்படை கலங்கத் தாக்கி." 

          -அகநானூறு-116.

என்றும், சேரன் வடபுலத்து அரசரை வென்ற நிகழ்வினை, 

"ஆரியர் அலறத்தாக்கிப் பேரிசைத்

தொன்று முதிர் வடவரை

வணங்குவில் பொறித்து."

-அகநானூறு 396.

-என்றும் சமநோக்குடன் பாடிப் பாராட்டியுள்ளார். 

பரணர் கடவுள் நம்பிக்கை உள்ளவராக விளங்குகிறார். தலைவன் கல்வி கற்றலுக்காக ' ஓதற்பிரிவு' என்ற வழக்கப்படி தலைவியைப் பிரிய நேர்கிறது. அதனை அகநானூறு 125-ல், 

" கைதொழு மரபின் கடவுள் சான்ற

செய்வினை மருங்கிற் சென்றோர்." 

-என்கின்றார்.

 இங்கு கடவுள்சான்ற செய்வினை எனப்பட்டது கடவுள்போன்ற கல்விஅல்லது கடவுள் தொடர்பான ஆகமக்கல்வி எனக் கொள்ளலாம். இதன்மூலம் அந்நாளிலேயே மக்கள் கல்விக்கு அளித்த சிறப்பை அறிய முடிகிறது. 

அகநானூறு 152-ல்,

 "கடவுள் காந்தள் உள்ளும் பலவுடன்." 

-என்று காந்தள் மலரின் தெய்வத்தன்மையைப் புகழ்கிறார்.  அகநானூறு 162-ல்,

 "சூரர மகளிரிற் பெறற்கு அரியோளே" 

-என்று தலைவியைத் தெய்வமகளிரை விட

சிறந்தவளாகப் பாடுகின்றார். 

 "ஸேனானீனாம் அஹம்ஸ்கந்த." என்று ஸ்ரீமத் பகவத்கீதை-10-24. " படைத் தலைவர்களில்நான்முருகக்கடவுள்." என கண்ணன் கூறுவதற்கு ஏற்ப, 

"திருமணி விளக்கின் அலைவாய்ச் செருமிகு சேய்"

-என்றும், 

"முருகுறழ் முன்பொடு பொருதுகளம் சிவப்ப." 

-என்றும் அகநானூறு 181-ல் முருகப் பெருமானின் போர்த் திறத்தினைப் போற்றிப் பாடியுள்ளார். 

வேதங்கள் ஹிந்து ஸநாதன தர்மத்தை நெறிப்படுத்துவன ஆகும். அதில் ஸாம வேதம் இறைவனையே இசைய வைக்கும் தன்மை உடையது. அகநானூறு 181-ல் சிவபிரானைக் குறிப்பிடும்போது, 

" ஞாலம் நாறும். நலம்கெழுநல்லிசை

நான்மறைமுதுநூல்முக்கட்செல்வன்" 

-என்று பரணர் போற்றுகின்றார். 

அதாவது உலகில் தெய்வீக மணம் கமழச் செய்கின்ற; நன்மை தருகின்ற மிகப் பழைமையான நூலான இசை வேதம் ஸாம வேதத்தினை விரும்புகின்ற சிவபெருமான் எனக் குறிப்பிடுகின்றார்.

தெய்வங்களைக் குறிப்பிடுவதோடு அல்லாமல் பேய்களைக் குறித்தும் உரைக்கின்றார்.  புறநானூறு 369-ல்,

 " கணநரி யோடு கழுது களம்படுப்பப்

பூதம் காப்பப் பொலிகளம் தழீஇப்" 

அகநானூறு 122-ல் "கழுது வழங்கு யாமத்து." என்கின்றார். 

கழுது எனப்படுவது பேய் ஆகும். இவையெல்லாம் பிற்கால பரணி சிற்றிலக்கியத்தின் முன்னோட்டமாக இருக்கலாம். அதனால் பரணர் ஆனாரோ? 

சித்திரனார், உத்திரையார் என நாள்மீன் பெயர்களைக் கொண்டதுபோல இவரும் பரணி நாள்மீன் பெயரால் அழைக்கப்பட்டிருப்பாரோ? 

பரணர் நகைச்சுவை உணர்வு மிக்கவர். சான்றாக நற்றிணையின் 100-ஆவது பாடலில் அதை நுகரலாம். அந்தப் பாடலின் கருத்து பின்வருமாறு:

நெறி பிறழ்ந்த தலைவனிடம் கணிகை ஒருத்தி வம்பிழுக்கிறாள்.

"உன் மனைவியிடம் நம் நட்பைப் பற்றிச் சொல்வேன் பார் என்றவுடன் மன்னன் மலையமான் அரசவையில் ஆடும் கூத்தரின் மத்தளம்

அதிர்வதைப் போல அதிர்ந்து ஆடி நடுங்கிப் போய் விடுவான்."  என்று தன் தோழியிடம் கூறி நகைக்கிறாள். 

பரணர் பெண்கள் நலத்தில் மிகுந்த அக்கறை உள்ளவர். மன்னர் பேகன் தன் மனைவி கண்ணகியை விட்டுப் பிரிந்திருந்த காலத்தில் மற்றவர்களைவிட மிகவும் மனம் நொந்தார். அவரைப் பேகன் ஏற்றுக்கொள்ள பல பாடல்கள் இயற்றினார்.  அவர் தரும் பரிசுகளைக்கூட பெற மறுத்து விட்டார். பாரியிடம் கபிலருக்கு எந்த அளவு உரிமை இருந்ததோ அந்த அளவுக்கு பேகனிடம் பரணருக்கு உரிமை இருந்தது.  ஒருவழியாக அவர்களைச் சேர்த்துவைத்தார். 

புறநானூற்றின் கடைசி நூறு பாடல்களில் இவரின் ஏழு பாடல்களில் பொதுவாக பெண்களின் நிறைகுறைகளைச் சுட்டியே பாடியுள்ளார். 

'பொய்யடிமை இல்லாத புலவர்'களில் பரணர் முக்கியமானவர். இறைவன் அளித்த சங்கப்பலகையில் முதலில் அமர்ந்த மும்மூர்த்திகளில் ( நக்கீரர், கபிலர், பரணர்) இவரும் ஒருவர். பரணர் ஒரு தெய்வப்புலவர் ஆவார். 

நக்கீரர் தமிழ்ச்சங்கத் தலைவராக இருந்தபோது குயக்கொண்டான் என்பவன் ஆரியமும் தமிழும் ஒரு மொழியின் இருவேறு வடிவங்கள்

என்பதை உணராத பேதை. அவன் அவையில் ஆரியம் உயர்ந்தது- தமிழ் தாழ்ந்தது என்று உரைத்த அளவில் நக்கீரருக்கு வந்ததே கோபம்! 

"முரணில் பொதியில் முதற்புத் தேள்வாழி

பரண கபிலரும் வாழி..." 

(சரமகவி என்பதால் முழுவதும் தரப்படவில்லை ) என்று நக்கீரர் சரமகவி பாடியவுடன் அவன் இறந்துவிட்டான். 

மீண்டும் ஒரு தமிழ்க்கவி பாடி அவனை உயிர்ப்பிக்கவும் செய்தார். நக்கீரர் உள்ளப்படி பரணர் தெய்வப்புலவர் என்பதில் ஐயமில்லை. 

இத்தகைய தெய்வப்புலவர்களால் தாம் தமிழும் தேசமும் பண்பாடும் நமது கலாசாரமும் வாழ்ந்து கொண்டுள்ளன. 

பரணரின்படைப்புகள்: 

அகநானூறு - 34

குறுந்தொகை - 16

நற்றிணை - 12

பதிற்றுப்பத்து- 10

புறநானூறு -13

                                    -------

            மொத்தம்-  85

                                     -------

சங்க இலக்கியத்தில் 85 செய்யுள்கள் இவர்தம் படைப்புகள் ஆகும்.



No comments:

Post a Comment