16/12/2020

அன்னைத்தமிழ் வளர்த்த அற்புதப் புலவர்கள் -1

-பொன்.பாண்டியன் 



முன்னுரை: 

நமது தாய்மொழியாம், தமிழ் மொழி, முன்னைப் பழமைக்கும் முன்னைப் பழமையானது. இறைவன் சிவனே நம் தாய்மொழியைத் தோற்றுவித்தார் என்பது பாரம்பரிய நம்பிக்கை மட்டுமல்ல, பல பழம் தமிழ்ப் பாடல்களில் காணப்படும் ஆவணக் கூற்றும் ஆகும்.

மொழி தோன்றி பல்லாயிரம் ஆண்டுகள் கழிந்த பிறகும், நமது தமிழ் மொழி இளமைப் பொலிவுடன், சாகாவரம் பெற்றதாக இலங்குகிறது. அதற்கு, தமிழ் மொழியின் அடித்தளத்தை வலுவாக அமைத்து அளித்துச் சென்ற பெரும் புலவர்களே காரணம் எனில் மிகையில்லை.

உலகிலேயே, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னம், மொழி வளர்ச்சிக்காக, இலக்கியத் திறனாய்வுக்காக, சங்கம் வைத்த மண் தமிழகம் மட்டுமே. நம் தமிழின் வளர்ச்சிக்காகவும், மேம்பாட்டுக்காகவும் முதல், இடை, கடைச் சங்கங்கள் இயங்கியதாக, பழந்தமிழ் இலக்கியக் குறிப்புகளிலிருந்து அறிய முடிகிறது.

வாழையடி வாழையாக பெரும் புலவர் படை தாய்த்தமிழை வளர்த்தெடுத்து, நம் கரங்களில் தந்திருக்கிறது. இணையற்ற இத்தமிழை, இனிய தாய்மொழியைக் காப்பது நம் கடமை. அதற்கு, நம்மிடம் அருந்தமிழைக் கையளித்துச் சென்ற அற்புதப் புலவர்கள் படையை நாம் அறிந்திருப்பது மிகவும் உதவும்.

அந்த வகையில், தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலச் செயலாளரும், ஓய்வு பெற்ற ஆசிரியருமான, குடியாத்தம் நகரைச் சார்ந்த திரு. பொன்.பாண்டியன்,  இந்தத் தொடரை எழுதி இருக்கிறார். தமிழ் இலக்கிய ஆதாரங்களுடன் இந்தத் தொடரை ஆசிரியர் மிகச் சிறப்பாக எழுதி இருக்கிறார்.

தேசிய சிந்தனைக் கழகத்தின் தினசரி மின்னிதழான ‘தேசிய முரசு’ இதழில் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கும் இந்தத் தொடரை, இங்கு மீள்பதிவு செய்வதில் பெருமகிழ்வு அடைகிறோம்.

-ஆசிரியர் குழு 


***    

1 இறையனார் 


கல்லாலின்
புடையமர்ந்த கடவுளான சிவபிரானே இவ் இறையனார் ஆவார். கடல்கொண்ட குமரிக் கண்டத்தே விளங்கிய தென்மதுரையில் தலைச்சங்கத் தலைவராக வீற்றிருந்து தமிழ் வளர்த்தவர் இவர்.

மௌனமே உபதேசமொழியாகக் கொண்டிருந்த இவர் ஒருசமயம் ஆனந்தம் மேலிட்டுத் தமது கையில் இருந்த உடுக்கையைத் தட்டி இசைத்தார். அதன்மூலம் ஓசைக்குறிப்புகளையும் ஒலிக் குறிப்புகளையும் உருவாக்கினார். அவை பேசுமொழியாகவும் ஓத மந்திரங்களாகவும் திகழ்ந்தன. அவ்வாறு உடுக்கையின் ஒருபக்கம் தமிழும் மறுபக்கம் வடமொழியாகிய ஸம்ஸ்க்ருதமும் உருவாயின.

கடல்கொண்ட தென்பாரதத்தில் இருந்த மகேந்திரமலையின் சிகரத்தில் இறைவழிபாட்டுக்குரிய ஆகமங்களைப் படைத்து உமாதேவியாருக்கு உபதேசித்தார். 'இறையனார் அகப்பொருள்' என்னும் பொருளிலக்கண நூல் இவரால் இயற்றப்பட்டது ஆகும்.

புலவர் நக்கீரரின் தமிழோடு 'திருவிளையாடல்' புரிவதற்காக "கொங்குதேர் வாழ்க்கை..." என்ற பாடலை இயற்றினார். அது குறுந்தொகையின் இரண்டாம் பாடலாகும். அந்தப்பாடல்:

"கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமஞ்செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின், மயிலியற்
செறியெயிற் றருவை கூந்தலின்
நறியவு முளவோ நீயறியும்பூவே"

(குறுந்தொகை- 2) 

எல்லா ஜீவராசிகளையும் பெண்களாகவும் கூந்தலின் மணத்தைத் தெய்வீகமாகவும் 'நுட்ப மெய்ப்பொருளாக்கி' உருவகிக்கப்பட்ட பாடல் அது. "Every soul is potentially DIVINE" அதாவது ஒவ்வோர் உயிரும் இயற்கையாகவே தெய்வீகத்தன்மை பெற்றுள்ளன என்பதை உணர்த்த இறையனார் இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டார் எனலாம்.

பின்னாளில், மாணிக்கவாசகர் சொல்லச்சொல்ல திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் சுவடியில் எழுதி 'திருச்சிற்றம்பலமுடையான்' எனக் கையொப்பமிட்டு மறைந்தருளினார். நற்சங்கத் தமிழ்ப்புலவராகத் தாம் தந்த தமிழைப் பேணிக் காக்கும் கடமையை நமக்களித்து அருள்புரிந்து வருகிறார்.


***

2 முருகப் பெருமான் 


குறிஞ்சித் திணையின் தலைவனும், செந்தமிழ்க் கடவுளும் ஆன முருகப் பெருமான், கடல் கொண்ட தென்மதுரையில் தமது தந்தை சிவபிரானுடன் தலைச்சங்கத்தில் வீற்றிருந்து தமிழ் ஆய்ந்தார் என இறையனார் களவியல் உரை தெரிவிக்கிறது.

இராமாயண காலத்துக்கு முன்னிருந்தே நமது பாரத தேசம் முழுமையும் ஒன்பது வகையான இலக்கண நூல்கள் பயிற்சியில் இருந்தன. அவை ‘நவவியாகரணங்கள்’ எனப்பட்டன. இராமாயணத்தில் சொல்லின் செல்வனாகிய ஹனுமன் 'நவ வியாகரண பண்டிதர்' எனப் புகழப்படுகிறார்.

நவ வியாகரணங்களாவன:

1.ஐந்திரம்
2.சாந்த்ரம்
3.காசக்ருத்ஸ்நம்
4.கௌமாரம்
5.சாகடாயநம்
6.ஸாரஸ்வதம்
7.சாபிசலம்
8.சாகலம்
9.பாணினீயகம்.

-இவற்றுள் கௌமார இலக்கண நூல் முருகனாகிய குமரக் கடவுளால்  இயற்றப்பட்டது என்பது நம்பிக்கை.

மொழிகள் பெயரிடப்படாதபோது பொதுவாக மொழிக்கான இலக்கணமாக அவை இயற்றப்பட்டிருக்கலாம். இலக்கண நூல்கள் பொதுவாக இயற்றியவர் பெயரிலேயே விளங்கும். Wren and Martin-ம் இவ்வாறுதான்​ வழங்கப்படுகிறது.

முருகப் பெருமான் தனது சீடராகிய அகத்தியருக்குத் தமிழ்  இலக்கணத்துடன் மருத்துவமும் பயிற்றுவித்தார். அதனால் நமக்கு  'அகத்தியம்' என்னும் தமிழ் இலக்கண நூல் கிடைத்தது.

புலவர் நக்கீரரைத் 'திருமுருகாற்றுப் படை' பாட வைத்து அவரையும் சேர்த்து ஆயிரம் தவசிகளை ஒரு பூதத்திடமிருந்து விடுவித்தார் முருகப் பெருமான். அதனால்தான் திரு முருகாற்றுப் படை முருகனை "நூலறி புலவ" (261) என்று போற்றுகிறது.

புலவர் உப்பூரிக் குடிக் கிழார் என்பாரின் மகனாக அவதரித்தார் முருகன். அவர் பிறவி ஊமை ஆவார். அவர் பெயர் உருத்திர சன்மன் (ருத்ர சர்மா). அவருக்கு ஐந்து வயது இருக்கும் போது சிவபிரானின் 'இறையனார் அகப்பொருள்' நூலுக்குப் பல புலவர்கள் உரை எழுதினர். அவற்றுள் சிறந்ததைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு தமிழ் வல்லவனான அச் சிறுவனுக்குத் தரப்பட்டது.

அவ்வகையில் புலவர் மதுரை இளநாகனார் உரையைக் கேட்ட போது அவ்வப்போது மெய்சிலிர்த்தார். புலவர் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் உரையைக் கேட்ட போது தொடக்கம் முதல் இறுதி வரை மெய்சிலிர்த்துக் கண்ணீர்ப் பெருக்கிச் சிறந்ததெனத் தேர்ந்தெடுத்தார்.

சிவகவி போல் அந்தமிழால் வைதாரையும் வாழ வைக்கும் வடிவேலன் அருணகிரிநாதரின் தொழுநோயைக் குணமாக்கி அவரைச் சந்தக் கவியாக்கித் தமிழுக்குத் 'திருப்புகழை'த் தந்தார். அதனால் அருணகிரிநாதர் முருகனைக் கந்தர் அந்தாதியில்  "செந்தமிழ் நூல் விரித்தோன்" எனப் பாடிப் பரவுகிறார்.

ஊமையாகப் பிறந்த குழந்தை குமரகுருபரனுக்குப் பேச்சு வழங்கியதோடல்லாமல் கவிபாடும் ஆற்றலையும் வழங்கினார்.

பேசும் திறன் பெற்றவுடன் அவர் பாடிய 'கந்தர் கலிவெண்பா'வில் முருகனை, "வீசும் பனுவல் விபுதர்.....பெற்றோனே" என்று புகழ்கின்றார். அதாவது முருகன் எப்போதும் புலவர்கள் புடை சூழ வருபவன் என்று பொருள்படுவதாகும்.

புலவர்களை உருவாக்கும் பெரும்புலவனான முருகப்பெருமானின் அருள் அகிலமெங்கும் சிறந்து விளங்குவதாக!

***

3 துவரைக் கோமான் 


நமது அகண்ட பாரதத்தின் தென் திசை நீட்சியாக விளங்கியது கடல் கொண்ட குமரிக் கண்டம். அதில் தென் மதுரைக்கு வடபுறத்ததான  ‘கபாடபுரம்’ என்னும் நகரைத் தலைநகராகக் கொண்டு பாண்டியர்கள் ஆட்சி செய்தனர்​. அங்கு இரண்டாம் தமிழ்ச் சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்தனர் என்பதை இறையனார் களவியல் உரை மூலம் அறியலாம்.

அதில் துவரைக் கோமான் என்னும் புலவர் ஒருவரும் தமிழ் ஆய்ந்தார் என்ற செய்தி உள்ளது. துவரை என்பது பாரத தேசத்தின் மேற்கில் குஜராத் கடற்கரையில் கண்ணபிரானால் அமைக்கப்பட்ட 'த்வாரகை' நகரமாகும். அதையும் கடல் கொண்டு விட்டது. கோமான் என்னும் பெயர் கண்ணபிரானைக் குறிக்கும்.

கபாடம் என்றால் கதவு  ‘வாயில்’ எனப் பொருள்படும். துவாரகை என்பதற்கும் வாயில் எனப் பொருள்படும். எனவே துவரைக் கோமான் எனப்படுபவர் திருமாலே என்பது பழம்பெரும் புலவர்களின் முடிவு.

சங்கப் புலவர்களின் முன்னிலையில் தற்போது உள்ள மதுரையில் உள்ள கூடலழகர் கோயிலில் பெரியாழ்வார் பொற்கிழி அறுத்து புலவர் வாகை சூடினார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அந்த மதுரைக் கூடலழகருக்கு ‘துவரைக் கோமான்’ என்றும் 'புலவர்' கூடலழகர் என்றும் திருநாமங்கள் உண்டு.

சங்கத் தமிழ் நூலான பரிபாடல், திருமாலை "தொல்லியல் புலவ..." என்று பாடுகிறது ( 3 - 86 ) பாடியவர் கடுவன் இளவெயினனார் ஆவார்.

பரிபாடலின் முதல் பாடல் திருமாலை “வாய்மொழிப் புலவ நின் நாள் நிழல் தொழுதே” என்று முடிகிறது. துவரைக் கோமான் ஒரு குறிப்பிடத்தக்க தமிழ்ப் புலவர் என்பது இதன்மூலம் புலனாகிறது.

***
4 இந்திரன் 



தேவர்களின் மன்னனான இந்திரனை வழிபடுவது என்பது வேதங்களிலும் பழந்தமிழ் இலக்கியங்களிலும் இன்றியமையாததாகக் காட்டப்பட்டுள்ளது.

இந்திரன் மருத நிலத்தின் தெய்வமாகக் கருதப்படுகிறார். மருத மரத்திற்கு ‘அர்ஜுனம்’ என்று பெயரும் உண்டு. இந்திரனுக்கும் அவரின் அம்சங்களான இராமாயண வாலிக்கும் மஹாபாரத பார்த்தனுக்கும் அர்ஜுனன் என்ற பெயர் உண்டு.

‘இந்திர விழா’ தமிழகத்தில்சித்ரா பௌர்ணமியன்று​ம் இந்திரனுக்குரிய பண்டிகை போகிப் பண்டிகையாகவும் தொன்று தொட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

தேவர் கோமானாகிய இந்திரன் மொழிக்கு உரிய இலக்கணமாக ' ஐந்திரம் ' என்னும் நூலை இயற்றியுள்ளார். மொழி இலக்கண நூல்களில் முதன்மையானது ஐந்திரம் ஆகும்.

அது இன்ன மொழிகள் என்று பகுக்கப்படாத காலத்தில் பொதுமொழி இலக்கணமாக இயற்றப்பட்டிருக்கலாம். ஆனாலும் ஐந்திரம் பற்றிய குறிப்புகள் தமிழ் இலக்கியங்களில்தான் முதன்முதலாகக் குறிப்பிடப் பட்டுள்ளன.

தொல்காப்பியர் தமிழ் இலக்கண நூலை இயற்ற ‘ஐந்திரம்’ உறுதுணையாக இருந்து உள்ளது. தொல்காப்பியப் பாயிரத்தில் புலவர் பனம்பாரனார் தொல்காப்பியரை,

"மல்கு நீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றி"

-என அறிமுகப் படுத்துகிறார்.

சிலப்பதிகாரத்தில் கோவலன், கண்ணகி, கவுந்தி அடிகள் மூவரும் மதுரை நோக்கிச் செல்லும் வழியில் மாங்காட்டு மறையவனைச் சந்திக்கின்றனர். அவர் மதுரைக்குச் செல்லும் வழிகள் மூன்றினைக் குறிப்பிடும்போது இடதுப் பக்கச் சாலையில் சென்றால்

"...............................இங்குப்
புண்ணிய சரவணம் பொருந்துவிர் ஆயின்
விண்ணவர் கோமான் விழுநூல் எய்துவீர்"

( காடுகாண் காதை 98 - 99 ) 

என்கிறார். இதில் இந்திரன் யாத்த ஐந்திரம் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

இவ்வாறான தெய்வத் தன்மை பொருந்தியவர்களும் தமிழோடு தொடர்புடையவர்கள் என்பது தெரிய வருகிறது. 



காண்க:





No comments:

Post a Comment