16/12/2020

சூரப்பாவுக்குத் துணை நிற்போம்!

-பேரா. இளங்கோ ராமானுஜம்


சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் நேர்மையான கல்வியாளருமான திரு. சூரப்பா, இன்று நம் மாநிலத்தை ஆண்டவர்களாலும், ஆள்பவர்களாலும் ஒரு சேரக் குறிவைக்கப்பட்டுள்ளார். அவர் மீதான தாக்குதல்களிலும், அவதூறுப் பிரசாரங்களிலும் அரசியல்வாதிகளின்
வன்மமே வெளிப்படுகிறது; உண்மை மறைக்கப்படுகிறது. அரசு இயந்திரம் பலம் வாய்ந்தது. எப்படி வேண்டுமானாலும் கதையை ஜோடிக்கலாம்.
ஆனால் இறுதியில் உண்மைதான் வெல்லும்.

பாரதப் போரில் அபிமன்யு தனி ஒருவனாக நின்று பலம் வாய்ந்த எதிரிகளை எதிர்கொண்டது நம் நினைவுக்கு வருகிறது. அபிமன்யுவை அழிக்க நினைத்தவர்களுக்கு நன்கு தெரியும், அவர்கள் அறத்தை காலில் நசுக்கித் தான் அழிவைச் செய்கிறார்கள் என்று. இன்று திரு. சூரப்பாவைக் குறி வைப்பவர்களுக்கும் அவர்கள் செய்வது அதர்மம் என்பது தெரியும். எந்தவித முகாந்திரமும் இல்லாமல், இட்டுக்கட்டிய கதைகளைக் கொண்டு சூரப்பா பழி வாங்கப்படுகிறார்.

தனது பதவிக்காலத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் ஊழல்களில் திளைத்ததாகவும் திரு. சூரப்பா மீது புகார்களைக் கூறச் செய்து, அதனை விசாரிக்க நீதிபதி குழுவையும் அரசு நியமித்திருக்கிறது. இது அவரை பதவிலிருந்து நீக்க நடக்கும் முயற்சியே ஆகும்.

தமிழகத்தில் உள்ள கல்வியாளர்கள் அனைவருக்கும், இப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி ஏற்ற பின் நியமனம் செய்யப்பட்ட துணைவேந்தர்கள் அனைவரும் அப்பழுக்கு அற்றவர்கள்; ஊழலுக்கு துணை போகாதவர்கள்; கல்வியிலும் ஆராய்ச்சியிலும் நிர்வாகத் திறமையிலும் மிகச் சிறந்தவர்கள் என்பது தெரியும். தகுதியை அடிப்படையாக வைத்தே அவர்களைத் தேர்வு செய்தார் ஆளுநர்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை, பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி ஏலத்திற்கு விடப்பட்டதாகவும் பல கோடிகளின் துணையோடுதான் இப்பதவிக்ட்கு வர முடியும் என்றெல்லாம் இருந்த நிலையை பத்திரிகைகள் செய்தியாகவே வெளியிட்டன. இன்று அந்த நிலை மாறிவிட்டது. உயர்கல்வித் துறையில் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. இன்று பல்கலைக்கழகங்களை நிர்வாகம் செய்யும் கல்வியாளர்களின் தரமும் உயர்ந்து விட்டது.

பிறகு அரசியல்வாதிகள் ஆத்திரப்பட என்ன காரணம்?

* அண்ணா பலகலைக்கழகத்தின் துணைவேந்தராக திரு. சூரப்பா பதவியேற்றவுடன் கடந்த இருபது ஆண்டு காலத்தில் நடந்த முறைகேடுகளை வெளிப்படுத்த முயற்சித்தார்.

* பலகலைக்கழக நிர்வாகத்தில் பணச் செலவைக் குறைத்தார். சிக்கன நடவடிக்கை இவர்களுக்கு சீற்றத்தை ஏன் கொடுக்க வேண்டும்? பணப்புழக்கம் இல்லாவிட்டால் ஊழல் நடைபெற வாய்ப்பில்லை என்பது தெரிந்ததுதானே?

*பல்கலைக்கழக வாகனங்களை துணைவேந்தர் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததால் அவற்றை துஷ்பிரயோகம் செய்வது தடுக்கப்பட்டது.

*பட்டமளிப்பு விழாவிற்கு செய்யப்பட்டுவந்த செலவுகள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன.

* பாடங்களில் தேர்ச்சி பெறாமல் ‘அரியர்’ வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்ச்சி அளிக்க வேண்டும் என்று அரசு சொன்னதை எந்த சிறந்த கல்வியாளரும் ஏற்றுக் கொள்ள மாட்டார். ‘அரியர்’ மாணவர்களுக்கு கண்டிப்பாகத் தேர்வு வைக்க வேண்டும் என்று திரு. சூரப்பா சொன்னதில் என்ன தவறு இருக்க முடியும்?

* இப்போது உள்ள எந்த துணைவேந்தரும் எதற்கும் வளைந்து கொடுக்காதவர்களாக உள்ளனர். தேவையில்லாமல் ஆட்சியாளர்களை நேரில் சென்று பார்ப்பதில்லை. காலில் விழும் கலாச்சாரம் இவர்களுக்கு கிடையவே கிடையாது. கல்வியாளர்கள் அரசியல்வாதிகளின் அடிமை அல்ல என்று திரு. சூரப்பா போன்றவர்கள் நிரூபித்தது குற்றமா?

* சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து பெறுவதற்கு துணைவேந்தர் முயற்சி செய்வது தவறான போக்கு என்று கூறலாமா? மத்திய அரசின் மானியம் சிறந்த ஆராய்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதில் என்ன தவறு? அது மட்டுமல்ல, திரு. சூரப்பா துணைவேந்தராக வருவதற்கு முன்னமே, அண்ணா பலகலைக்கழகத்தில் அதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டு விட்டன. அதனால் 69% இட ஒதுக்கீட்டுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று தெளிவாக விளக்கம் அளித்தபிறகும், சிறப்பு அந்தஸ்துக்கு எதிராக மாநில அரசு பேசலாமா?

* திரு. சூரப்பா மீதான நடவடிக்கை, மற்ற துணைவேந்தர்களுக்கு எச்சரிக்கை மணியா? எங்கள் சொற்படி கேட்காவிட்டால் உங்களுக்கும் இந்த நிலைதான் என்ற பயமுறுத்தல் முயற்சி தான் இது என்பதே கல்வியாளர்களின் குற்றச்சாட்டு.

* எது எப்படி இருந்தாலும், திரு. சூரப்பா மீது தேவையற்ற பழி சுமத்துவதும், அவரின் ஆக்கபூர்வ முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுவதும், உயர்கல்வித் துறையின் கழுத்தை நெரிப்பது போலவே உள்ளன. அதுவும் உயர்கல்வித் துறையில் ஊழல்களை ஆளுநர் களைந்து கொண்டிருக்கும் நேரத்தில் அதற்கு இடையூறாகவே திரு. சூரப்பா மீதான விசாரனை முயற்சிகள் காட்சி அளிக்கின்றன.

* இந்த நிலை தொடருமானால், சிறந்த கல்வியாளர்கள் துணைவேந்தராக வருவதற்கு அச்சம் கொள்வார்கள். ஒரு வேளை அண்ணா பல்கலைக்கழகத்தை அரசியல் லாவணிக் கூட்டமாக மாற்ற முயலும் அரசியல்வாதிகளின் நோக்கமாக இருக்கக் கூடும்.

அரசியல்வாதிகளுக்கும், மாநில அரசுக்கும் இந்த நேரத்தில் கல்வியாளர்கள் இந்த வேண்டுகோளை முன்வைக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

”தயவுசெய்து வன்மத்தைக் கைவிடுங்கள். நேர்மையான கல்வியாளர் மீதான பழிவாங்கும் நடவடிக்கையைக் கைவிடுங்கள். ஒரு நல்ல கல்வியாளரின் மனதைப் புண்படுத்தாதீர்கள். நீண்ட இடைவேளைக்குப் பின்னர் சிறந்த துணைவேந்தர் அண்ணா பல்கலைக்கழகத்துக்குக் கிடைத்திருக்கிறார். அவரை தொந்தரவு செய்யாமல் பணியாற்ற அனுமதியுங்கள்.

அரசியல்வாதிகளுடன் போட்டியிடுவது கல்வியாளர்களின் பணி அல்ல. ஆளும் கட்சி- எதிர்க்கட்சிகளின் அரசியல் விளையாட்டுக்காக அவரை பகடைக்காய் ஆக்காதீர்கள்”

-இதுவே எங்கள் வேண்டுகோள். திரு. சூரப்பாவைக் காப்போம்! அவருக்குத் துணை நிற்போம். உயர்கல்வியை இன்னும் சிறக்கச் செய்வோம்!


காண்க:






No comments:

Post a Comment