16/12/2020

விஸ்வரூப விவேகானந்தர்

  -சுவாமி விமூர்த்தானந்தர்


உலகைப் புரட்டிப் போட்ட பல தலைவர்கள் மக்களின் முன்னேற்றத்திற்காக உரையாற்றினர். அவை அந்தந்தக் காலத்திற்கு அற்புதமானவை.

ஆனால் ஒட்டுமொத்த உல மக்களின் நன்மைக்காக எந்தக் காலத்திற்கும் ஏற்ற வகையில் விளங்கும் உரைகள் மிகச் சில.

அவற்றுள் முக்கியமானது எது என்றா கேட்கிறீர்கள்? நான் யாரென்றே நீங்கள் கேட்கவில்லையே?

நான்தான் வாக்சக்தி; மேதாசக்தி; சிந்தனை வளம் என்றெல்லாம் என்னைப் பற்றிக் கூறுவார்கள். தூய மனதிலிருந்தும் மௌனத்திலிருந்தும் வரும்  வாக்சக்தி’ நானே.

ஸ்ரீதேவி தனது வசநீ முதலிய வாக்தேவிகள் மூலம் லலிதா சஹஸ்ரநாமத்தை வெளிப்படுத்தினாள். என் சக்தி தேவியின் சக்தியே.

அழுத பிள்ளையான சம்பந்தருக்கு, உலக அன்னை ஞானப்பாலுடன் என்னையும் சேர்த்து ஊட்டி, அமுதப் பிள்ளையாக, திருஞானசம்பந்தராக மாற்றியருளினார். இப்படி அருள் பெற்றவர் பலர்.

, என்று நீங்கள் கற்கும் எழுத்துகளான அக்ஷரங்களிலிருந்து, அழிவற்ற பிரம்மமான அக்ஷரம் வரை என் சக்தியே வியாபித்திருக்கிறது.

உயர்ந்த ஆன்மிகச் சிந்தனைகளை என்னிடமிருந்து ஏற்கத் தயாராக இருப்பவர்களின் படைப்புகள் - அவை காவியமோ, ஓவியமோ - மூலம் உலகிற்கு நற்சிந்தனைகளை வழங்க நான் என்றும் தயார்.

சரணடைந்தவர்களைக் காப்பது என் விரதம் என ஸ்ரீராமர் சுக்ரீவனுக்கு அருளியதன் மூலம் திரேதா யுகத்தில் பிரகடனம் செய்தபோது என் சக்தி முழுமையாக அவர் மூலம் வெளிப்பட்டது.

துவாபர யுகத்தில், ஸ்ரீகிருஷ்ணர் கீதையை உபதேசித்தபோதும் நான் அவருடன் இருந்தேன்.

கலியுகத்தில் ஒரு புத்தாண்டில் ‘பக்தர்களே, உங்கள் அனைவருக்கும் ஆன்மிக விழிப்புணர்வு உண்டாகட்டும்’ என ஸ்ரீராமகிருஷ்ணர் ஆசீர்வதித்தபோதும் அவர் மூலம் நிறைவாக வெளிப்பட்டேன்.

நண்பர்களே, சில கலைஞர்களிடம் நான் நன்கு வெளிப்பட்டு, திடீரென்று காணாமலும் போவேன்.பல எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்கள் மூலம் ஒரு நேரத்தில் நல்ல கவிதைகளையோ, கதைகளையோ எழுத வைத்திருப்பேன்.

ஆனால் சில காலம் கழித்தோ, அவர்களது அந்திமக் காலத்திலோ இந்தக் கவிதைகளை எழுதியது நானா என்று அவர்களே வியந்தும், சந்தேகித்தும் போவதுண்டு. காரணம், எழுதிய அவர்கள் அந்த நேரத்திற்கு மட்டுமே என் சக்தியை வெளிப்படுத்த வல்லவர்களாக இருந்திருப்பார்கள்.

இன்னும் சிலர் சப்தஜாலம் மஹாரண்யம் என்றபடி, வார்த்தை விளையாட்டில் சிக்கி, எதுகை மோனை எனும் அலைகளில் அல்லாடும் துரும்புகளாகிப் போவதுமுண்டு.

என் சக்தி பல்வேறு காலங்களில் பல மாமனிதர்கள் மூலம் வெளிப்பட்டாலும், நான் பல காலம் கலிகாலத்தில் ஒருவருக்காகக் காத்திருந்தேன். நான் எப்படி அவரிடமிருந்து வெளிப்பட்டேன். அப்படி வெளிப்பட என்னென்ன காரணங்கள் என்பதை அறிந்தால் நீங்கள் வியப்பீர்கள்!

அமைதியாகப் பிரார்த்தனையுடன் கேளுங்கள்.

கலியுகத்திற்கு முன்பு நிகழ்ந்தது, நேற்று நடந்ததுபோல என் நினைவில் இன்றும் நிற்கிறது.

ஒரு புளிய மரப் பொந்தில், பகவானையும் பக்தர்களையும் சேர்த்து வைப்பதற்காக நம்மாழ்வார் பரவச நிலையில் பாசுரம் பொழிந்தார்.

திவ்யப் பிரபந்தத்தின் பாசுரங்கள் நம்மாழ்வாரிடத்தில் ஊற்றெடுத்தபோது, பெருமாளோடு ஜீவர்களைச் சேர்த்து வைப்பதற்கான பல சிந்தனைகளாக, பிரயத்தனங்களாக, பிரார்த்தனைகளாகப் பிரிந்து அவர் முன்பு நின்றேன்.

நம்மாழ்வாரின் திருமுன்பு நான்,  ஆழ்வாரே, எனது எந்தச் சிந்தனையையாவது உங்கள் பாசுரத்தில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று கேட்டுத் தவம் கிடந்தேன்.

ஆழ்வாரும் அனுக்ரஹித்தார். திருவாய்மொழி மூலம் நானும் அமரத்துவம் பெற்றேன்.

அன்பர்களே! அவ்வாறே இந்தக் கலியுகத்திலும் நான் தவம் கிடந்தேன்.

அது எப்போது என்றா கேட்கிறீர்கள்?

பாரதத்தின் ஆன்மிகப் பொக்கிஷங்கள் நாட்டை விட்டுச் சென்று கொண்டிருந்த சென்ற நூற்றாண்டு....

மேலைக் கலாசாரம் பாரதத்தை அடிமைப்படுத்தியிருந்தது.சொந்த சமயத்தின் மீது நம்பிக்கை இழந்திருந்ததால், மாற்றான் வீட்டு மல்லிகைகள் மட்டுமே மணக்கும் என்று பாரத மனங்கள் மயங்கிக் கிடந்தன.

ரிஷிகளும் முனிவர்களும் மெய்ஞான வல்லுனர்கள் என்ற உண்மை பரிகசிக்கப்பட்டது. சனாதன இந்து தர்மம் ஆட்டங்கண்டது.

வாக்சக்தியான என் சிந்தனை வளத்தை உணராமல், சத்தம் அதிகமிட்டவனே சிறந்த சொற்பொழிவாளனாக ஆரம்பித்தான். அசலாகவும் ஆழ்ந்தும் சிந்திக்காமல் பிறரது கருத்துகளைத் திரட்டியவர்களும், திருடியவர்களும் முனைவர் பட்டம் பெற்றனர்.

இப்படிப் பலப் பல மலினங்கள் பெருகின. அப்போதுதான் பண்டைய முனிவரையொத்தவரும், நவீன உலகிற்கு ஏற்ற சர்வதேசத் தலைவருமாக ஒருவர் வாய்த்தார்.

அந்நிய ஆட்சியின் அக்கிரமத்தால் நடந்த குற்றங்களைக் களைபவராக, அகண்ட பாரதத்தின் அருட்குருவாக விவேகானந்தர் தோன்றினார்.

1893-இல் சிகாகோவில் நிகழ்ந்த சர்வ சமயப் பேரவை. அங்கு நானிலத்தை மேம்படுத்த பல பேச்சாளர்களின் சிந்தனைகளில் நான் புகுந்து, சேர வாரீர் ஜகத்தீரே என்று கூவிக் கூவி அழைத்தேன்.

ஆனால் அங்கு பேசிய பலரும் என் மதமே ஒசத்தி என்று கூறி, கைத்தட்டலுக்காகவே பேசினர்; மனிதகுல மேன்மைக்காக ஆத்மார்த்தமாக அரிதாகவே பேசி முழுப் பலன் பெறாமலேயே போனார்கள்.

அந்தப் பேச்சாளர்களுள் 5-வது மற்றும் 20-வது நபர்களின் வாக்கில் நான் புகுந்து நாம் அனைவரும் சகோதர, சகோதரிகள் என்று கூறவும் வைத்தேன். ஆனால் அந்த இருவரும் வாக்சக்தியை உள்வாங்கிய சொற்ப அளவிற்கே வரவேற்பு பெற்றார்கள்.

இந்தப் பேரவையும் வழக்கமான பேசிவிட்டுப் போகும் ஒரு சடங்கோ என்று சோர்ந்து நின்றேன்.

ஆனால், அங்கிருந்த விவேகானந்தர் மீது என் நம்பிக்கை இருந்தது. அவர் தமது வாலிப வயதில், தியான வேளையில் மந்திரங்களைத் தங்க எழுத்துகளில் தரிசித்தவர் என்பதை நான் அறிவேன். அவரது குருவான ஸ்ரீராமகிருஷ்ணர் தமது அந்திமக் காலத்தில் நோயுற்றிருந்தபோதும் தினமும் சுமார் 20 மணி நேரம் பக்தர்களின் நலனுக்காக உபதேசித்தவர் அல்லவா!

குருதேவர் எப்படி இவ்வாறு கருத்துகளைப் பொழிகிறார் என்று சீடர்கள் வியப்பார்கள்.

அதற்கு அவர், நெற்களஞ்சியத்தின் உள்ளிருந்து ஒருவர் நெல்மணிகளைத் தள்ளிக் கொண்டிருப்பதுபோல, அன்னை பராசக்தி என் மூலம் பக்தர்களுக்கு உபதேசிக்கிறாள் என்பார்.

அப்படிப்பட்டவரின் சீடரான விவேகானந்தர் பேரவையின் 23-வது நபராகத் தயங்கியபடி எழுந்தார்.

அட்சரத்திற்கும் அறிமுகம் இல்லாதவர்; ஆனாலும் என்ன, அவரது முகத்தில்தான் ஸ்ரீமுகம் இருந்ததே!

பாரத ரிஷி, முனிவர்களின் பர ஞான அனுபவங்களையும், அபர ஞானத் திரட்சிகளையும் விவேகானந்தருக்குள் புகுத்தி, அவர் திருவாய் மலர்ந்திட நான் காத்திருந்தேன். என் சக்திகளைச் சரியாக நெஞ்சின் ஆழங்களில் சுமந்து பிரசவிக்கத் தவித்தார்; அதனால் பேசவும் தவிர்த்தார்; இல்லை, இல்லை, தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தார்.

‘மந்திரம் போன்று வேண்டுமடா சொல்லின்பம்’ என்று கவியரசர் பாரதி பாடியதற்கொப்ப, வாக்கு சக்தியை மந்திர சக்தியாக்கிக் கொண்டிருந்தார், பிரார்த்தனை மூலமாக!

வாக்சக்திகளான எனது மற்ற தேவிகளுடன் நாங்கள் அவருக்குள் நிறைந்துகொண்டே வந்தோம்!

அவரும் எங்கள் எல்லாச் சக்திகளையும் ஏற்றுக்கொண்டு உள்ளத்தளவில் விரிந்து கொண்டிருந்தார்.

இந்து மதத்தின் பிரதிநிதியாக மட்டுமின்றி, சனாதன இந்து மதம் எல்லா மதங்களுக்கும் தாய் மதம் என்பதை உலகிற்கு உணர்த்த அவர் உள்ளத்தளவில் வளர்ந்து கொண்டிருந்தார்.

பாரதத்தின் பிரதிநிதி என்பதோடு உலகிலுள்ள எல்லா மக்களின், ஏழை எளியவர்களின் நலன்களுக்காக வந்து உதித்தவர் என்ற ஏகாத்ம பாவ நிலையில் அவர் ஆழ்ந்து சென்று கொண்டிருந்தார்.

முடிவில் குருவையும் கலைமகளையும் துதித்தார்;  உலகிலுள்ள எல்லாச் சமயங்களின் ஒரே பிரதிநிதியாக உரையாற்ற விஸ்வரூபம் எடுத்தார்!

"அமெரிக்கச் சகோதரிகளே, சகோதரர்களே” என்ற அவரது ஒரு வரி, இரண்டு நிமிடங்கள், 4000 பேரை எழுந்து நின்று கரகோஷம் செய்ய வைத்தது.

முன்பின் தெரியாத ஒருவரின் முதல் வரியினால், பிரிந்திருந்த அந்நிய மக்களின் 8000 கரங்கள் இணைந்தன; 4000 இதயங்கள் திரண்டன.

அவரது சிகாகோ முதல் உரை 3.5 நிமிடங்கள்தான் நிகழ்ந்தது.பகவத் கீதை 18 அத்தியாயங்கள் போல, 18 வாக்கியங்களே அவை; 472 சொற்கள் மட்டுமே.

விஸ்வத்தையே தன்னுள் உணர்ந்த ஒரு விஸ்வாத்மா உரையாற்றினால், உலக மக்களுக்கு உற்சாகமன்றி வேறு என்ன வரும்?

அவர் சகோதர சகோதரிகளே என்று, பிறர் கூறியதுபோல சடங்காகக் கூறவில்லை.மாறாக, உலக மக்கள் யாவரும் உலக அன்னையின் ஒரு வயிற்று மக்கள் என்பதை உணர்ந்ததால் அவர் அவ்வாறு அழைத்தார். சகோதரம், சக உதரம் - ஒரு வயிற்றுப் பிள்ளை என்பது பொருள் அல்லவா!

அன்பர்களே! எந்தச் சக்தி 4000 பேரையும் அன்று எழ வைத்தது?அந்தச் சக்தி அன்று மட்டுந்தான் செல்லுபடியாகுமா?அன்றைய மக்களை மட்டுந்தான் உயர்த்துமா? இன்றுள்ள உங்களைப் போன்றவர்களை உயர்த்தாதா என்று நீங்கள் சிந்திப்பீர்களா?

கலியுகவாசிகளான நீங்கள் அதற்கும் விளக்கம் கேட்பீர்களே! சொல்கிறேன்.

ஏழைகள் மீதான இரக்கம், ஆன்மிகத் தகுதி, தன்னம்பிக்கை, தெய்வ ஆணை - ஆகிய நான்கும், விஸ்வரூபமெடுத்த விவேகானந்தரை, ஒரு வரியால் உலகை வெல்ல வைத்தது.

முதலில் அவர் பாரத மக்களிடம் கொண்டிருந்த அளவற்ற அன்பு அகிலம் அறிய வேண்டியது.

விவேகானந்தர் பம்பாயிலிருந்து புறப்பட்டபோது, வழியில் அபுசாலை ரயில் நிலையத்தில் தமது சகோதரத் துறவிகளான சுவாமி பிரம்மானந்தரையும் துரியானந்தரையும் தற்செயலாகச் சந்தித்தார். அப்போது தான் சிகாகோ சர்வ சமயப் பேரவைக்குச் செல்வதற்கான முக்கிய காரணத்தைக் கூறினார்:

"நான் இந்தியா முழுவதும் பயணம் செய்தேன். ஐயோ! என் சொல்வேன். சகோதரர்களே! மக்களின் கொடிய வறுமையைக் கண்டு என் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்களது வறுமையையும் துன்பங்களையும் அகற்ற முதலில் முயலாமல், அவர்களிடம் மதத்தைப் போதிப்பது பயனற்றது. இதற்காகவே, ஏழைகளின் விமோசனத்திற்கு வழி தேடவே அமெரிக்கா செல்கிறேன்”.

மக்கள் மீது அப்படி அன்பிருந்தால் மகேசன் அவருக்கு அருள்புரிய மாட்டாரா, என்ன?

அடுத்துவிவேகானந்தர் பெற்ற தெய்வ ஆணையைப் பற்றித் தெரிந்து கொள்ள,  நரேன் உலகிற்குப் போதிப்பான்’ என்று ஸ்ரீராமகிருஷ்ணரே எழுதிக் காட்டியதை நீங்கள் அறியவில்லையா?

மேலைநாட்டில் நடக்கும் சர்வ சமயப் பேரவைக்குப் போவதா என்று விவேகானந்தரின் மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது. அப்போது அலைகடலின் நடுவே தோன்றி அவரது குருதேவர் காட்சி தந்தார். தன்னைத் தொடர்ந்து வரும்படி பணித்து முன்சென்று வழிகாட்டினார்.

விவேகானந்தரா சிகாகோவில் உரையாற்றினார்?

இதோ அவரது சக சீடரான சிவானந்தர் மூலம் வெளிப்பட்ட உண்மையைக் கேளுங்கள்

"சிகாகோ செல்லும் முன்பு நாங்கள் கேட்ட விவேகானந்தரின் கருத்துகளுக்கும், பின்னர் அவர் ஆற்றிய உரைகளுக்கும் பெருத்த வேறுபாட்டைப் பார்த்தோம்.முன்பெல்லாம் அவர் ஞான மார்க்கத்தைப் பற்றியே கடினமான வார்த்தைகளுடன் பேசுவார். ஆனால் மேலைநாட்டில் அவரது உரைகள் மிக எளிதாக இருந்தன. இதைப் பற்றி விவேகானந்தரிடம் நாங்கள் விசாரித்தபோது அவர் கூறினார்:

சிகாகோ உரையினை நான் பேசியதாகவா நினைக்கிறீர்கள்? குருதேவரே என் உரையின் மூலமாக வெளிப்பட்டார்”.

என்னே விவேகானந்தரது பக்தி! குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணரின் திறம் மிக்க கருவி அவர்.

மூன்றாவதாக,சிகாகோ சென்றபோது மூன்று விதமான பிரச்னைகள் விவேகானந்தர் முன்பு இருந்தன.

முதலாவது, சர்வ சமயப்பேரவை தள்ளிப் போய் காலம் தாழ்த்தித்தான் நடக்க இருந்தது. சில மாத காலத்திற்கு அந்நிய நாட்டில் எப்படி, எங்கே அவர் தங்குவது? அவரது அன்றாடச் செலவிற்குப் பணம் தருவது யார்?

இரண்டாவது, சர்வ சமயப் பேரவையில் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பின் ஆதாரச் சான்றுக் கடிதம் இன்றி விவேகானந்தர் ஒரு பிரதிநிதியாகப் பேச முடியாது. அவரிடம் சிபாரிசுக் கடிதமும் இல்லை.

மூன்றாவது, சமயப் பேரவைப் பிரதிநிதியாகப் பதிவு செய்யும் காலமும் கடந்துவிட்டிருந்தது.

பாருங்களேன், அவர் உரையாற்றி உலகப் புகழ் இன்னும் பெறவில்லை. மேற்கூறிய மூன்று பிரச்னைகள் வந்து அவரை நெருக்கியபோதும் அவரது அகக்குரல் கூவியது இதுதான்: இந்தச் சர்வ சமயப் பேரவை ஏற்பாடெல்லாம் எனக்காகத்தான்!

அதாவது, அவர் மூலமாக உலகிற்கு ஏற்பட இருந்த நன்மையைப் பற்றிய நம்பிக்கை அது! இதை அவர் முன்பே துரியானந்தரிடம் ஒருமுறை கூறியிருந்ததும் என் நினைவிற்கு வருகிறது.

அப்போது நான் இவர்தான் தன்னம்பிக்கைச் சிங்கம் என்று சத்தமிட்டுக் கூவினேன்.

முக்கியமாக,விவேகானந்தரிடம் நான் கண்டு வியந்தது, அவரது ஆன்மிகத் தகுதி.

ஒரு நாள் அவரைப் பலரும் பாராட்டினர்.முதல் உரை வெற்றியானது, அவரது சொல்லாற்றலுக்குக் கிடைத்தது என்றனர் சிலர்.

வேறு சிலரோ, அவரது ஆங்கிலப் புலமையும், சாஸ்திர ஞானமும் காரணம் என்றனர்; குருவருள் என்றனர் சிலர்; இன்னும் சிலரோ, அவரது தவமும் ஆளுமையும் என்றனர். தோற்றப் பொலிவு என்றனர் பலர்.

எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, அவர் கூறியதை எண்ணி நெஞ்சம் நெகிழ்கிறேன்.

சிந்தனை சக்தியான நான் மக்களின் உள்ளங்களில் புகுவதற்கான ஓர் அடிப்படைத் தகுதியை அவர் வாயால் கூறக் கேட்டுப் புளகாங்கிதமடைந்தேன். அதை அவரது மொழியிலேயே கேளுங்கள்:

"சிகாகோவில் எனது முதல் சொற்பொழிவில் நான்  சகோதரிகளே, சகோதரர்களே’ என்றதும், எல்லோரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்ததும் உங்களுக்குத் தெரியும். ஆனால் அப்படி அவர்கள் பரவசப்பட்டது ஏன்? ஏதோ ஓர் அதிசய ஆற்றல் என்னிடம் உள்ளதாக நீங்கள் கருதலாம்.

உண்மைதான். என்னிடம் அத்தகைய ஆற்றல் உள்ளது.அது இதுதான் - ஒருமுறைகூட காம எண்ணம் என்னுள் புக நான் அனுமதித்ததில்லை. என் மனம், எனது சிந்தனை, பொதுவாக மனிதன் அந்த வழியில் செலவழிக்கிற என் ஆற்றல்கள் அனைத்தையும் ஓர் உயர்ந்த போக்கில் போகுமாறு பயிற்சி அளித்தேன். அது யாராலும் தடுக்க முடியாத ஒரு மாபெரும் ஆற்றலாக உருவெடுத்தது”.

மக்களே, இப்போது புரிகிறதா, விவேகானந்தரின் வாக்கிலும் நாக்கிலும் எழுத்திலும் என்றும் வாக்சக்தியாகிய நான் ஏன் நடனமாடுகிறேன் என்று?

உலகிற்கு விவேகானந்தர் ஒரு துறவி; ஆனால், எனக்கோ அவர் விஸ்வத்தையே தனக்குள் காணும் ஒரு வேதகால ரிஷி.

சர்வ சமயப் பேரவையில் பேச ஆரம்பிக்கும் முன் மேதாதேவியான சரஸ்வதியை அவர் இவ்வாறு வணங்கியிருப்பார் என்பது என் நம்பிக்கை.

'தேவி, உன் அருள் பெற்றவன் ரிஷி ஆகிறான்; பிரம்மஞானி ஆகிறான்.செல்வம் பெறுகிறான்; சிறந்த ஐஸ்வர்யங்களை அடைகிறான். அத்தகைய கலைமகளே, எங்களுக்குச் செல்வங்களை வழங்கு!’

நன்கு சிந்திக்கத் தெரிந்தால் நாட்டில் செல்வம் பெருகும் என்று கூறியவர் விவேகானந்தர்! ஆம், அந்தப் பிரார்த்தனையால் மேதாதேவி அவர்மூலம் பாரதத்திற்கு ஆறு வகையான செல்வங்களை வழங்கியுள்ளாள். அவற்றைப் பட்டியலிடுகிறேன்.

ஒன்று, இந்தியர்கள் தங்களைத் தாங்களே நம்ப ஆரம்பித்தார்கள்.

இரண்டாவது, தங்கள் பலத்தையும் பாரம்பரியப் பெருமையையும் உணர்ந்தார்கள்.

மூன்றாவது, அந்நிய அடிமைத்தனத்திலிருந்தும் மோகத்திலிருந்தும் இந்தியர்கள் விழித்தெழுந்தனர்.

நான்காவது, பிற நாட்டினர் நம்மை மதிக்க ஆரம்பித்தனர்.

ஐந்தாவது, பாரதம் விடுதலைக்காக வேட்கை கொண்டது.

ஆறாவதாக, உலகம் பாரதத்தைக் கண்டு வியக்க ஆரம்பித்தது.

இவை யாவும், விவேகானந்தர் விஸ்வரூபம் எடுத்ததால் வந்த நன்மைகள். இதனால்தானே கற்றறிந்தோர் அவரை விஸ்வகுரு என்று போற்றுகின்றனர்.

விஸ்வரூபமெடுத்த விவேகானந்தரின் பேரான்ம சக்தி அன்றைய மக்களுக்காக மட்டுமல்ல, இன்றுள்ள உங்களுக்கும் அந்தச் சக்தி வந்தடைய உங்களை ஆசீர்வதிக்கிறேன்.

 

குறிப்பு:



 பூஜ்யஸ்ரீ சுவாமி விமூர்த்தானந்த மகராஜ், தஞ்சாவூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர்.

இக்கட்டுரை, ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் (புரட்டாசி- செப்டம்பர் 2018) மாத இதழில் ’கரு உண்மை; உரு கற்பனை!’ என்ற தலைப்பில் (பாமதிமைந்தன்) வெளியானது. சுவாமிஜியின் அனுமதியுடன் இங்கு மீள்பதிவாகிறது.

சுவாமிஜியே மொழிபெயர்த்த, இதன் ஆங்கில மொழிபெயர்ப்புக் கட்டுரை அடுத்து உள்ளது…

 VAAK DEVI LAUDS VIVEKANANDA’S VOICE

 

No comments:

Post a Comment