16/12/2020

சிங்கங்களை உருவாக்கிய சிங்கம்

 -முத்துவிஜயன்

குரு கோவிந்த சிம்மன் 

(பிறப்பு: 1666, டிச. 22  – மறைவு: 1708, அக். 7)

அன்னிய ஆதிக்கத்திலிருந்து ஹிந்து தர்மத்தைக் காக்கும் உறைவாளாக உருவானதே சீக்கியம் என்னும் சம்பிரதாயம். பின்னாளில் இது சீக்கியம் என்னும் தனி மதமாக மாறியது. அந்த சீக்கியத்தை போர்க் குணமுள்ளதாக அமைத்தவர் குரு கோவிந்த சிம்மன் (சிங்).

குரு கோவிந்த சிம்மன், சீக்கிய மதத்தினரின் குருநாதர்களில் பத்தாவது குருவும் அவர்களது இறுதி மனித குருவுமாவார். இவரே வைராக்கியம் மிகுந்த சீக்கிய மதக் கோட்பாடுக்களுக்கு வித்திட்டவர்.

முகலாயம் மன்னர் ஔரங்கசீப்பால் கொல்லப்பட்ட ஒன்பதாவது சீக்கிய குருவான குருதேக் பகதூரின் மகனான இவர்,  சீக்கியத்தின் பல அம்சங்களை உருவாக்கியவர்.

பிறப்பும் வளர்ப்பும்:

இந்தியாவின் பீகார் மாநிலம்,  பாட்னாவில் பிறந்தவர். இவரது அன்னை மாதா குஜ்ரி.  தந்தை குரு தேக் பகதூர் அஸ்ஸாம் மாநிலத்திற்கு சீக்கிய மதத்தைப் பரப்பச் சென்றிருந்த காலத்தில் கோவிந்த சிங் பிறந்தார்.

தனது தாய்,  பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்த கோவிந்த சிங், சிறுவயதிலேயே தைரியம், சுதந்திரம் போன்ற நற்குணங்களை வெளிப்படுத்தினார்.

சிறுவயதிலேயே இவர் அரபி, பார்ஸி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். குதிரைச் சவாரி, பலவகைத் துப்பாக்கிகள், ஆயுதங்கள் முதலியவற்றைக் கையாள்வதிலும் சிறப்புப் பெற்று விளங்கினார்.

ஒருமுறை தமது நண்பர் குழாமோடு விளையாடிக் கொண்டிருந்த போது, அந்தப் பகுதியின் நிர்வாகியான நவாப் யானை மேல் அவ்வழியாகப் போனார். குழந்தைகள் அவரை வணங்குமாறு சொல்லப்பட்டார்கள். அதனால் எரிச்சலடைந்த கோவிந்த் சிங் தமது நண்பர்களிடம் நவாபைப் பார்த்து சிரிக்கச் சொன்னார். கோபமடைந்த நவாபைக் கண்டு துளியும் அச்சப்படாமல், தங்கள் கூட்டத்தை சுட்டிக் காட்டி, ‘இவர்கள் உங்களிடமிருந்து அரசாங்கத்தை மீட்பார்கள்’ என்று கூறினார்.

கோவிந்தனின் துணிச்சல் மிகுந்த செயல்களால் அச்சமடைந்த அவனது அன்னை,  “வெளியாட்களின் ஆட்சியில் நாம் இருப்பது தெரியாதா? இஸ்லாம்  மதத்தினர் பாதிக்கப்பட்டது மன்னருக்குத் தெரிந்தால் நமக்கு அழிவு காலம் வரும்” என்று வருந்தினார்.

இதைக் கேட்ட கோவிந்த சிங் கோபம் கொண்டார். தாய்,  பாட்டியின் சமாதான வார்த்தைகளைக் கண்டு கொள்ளாமல், உறுதியோடு  ‘இந்த நாட்டில் இனியும் இருக்க மாட்டேன். எனது தந்தையின் நாட்டுக்கு செல்வேன்’ என்று கூறி, பஞ்சாப் சென்றார்.

தந்தையின் பரித்தியாகம்:

இவரது தந்தையான குரு தேக் பகதூர் முகலாய மன்னர் ஔரங்கசீப்பால் கைது செய்யப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டார். தில்லியில் சிறியிலிருந்த தனது தந்தை குருதேக் பகதூருக்கு உற்சாகமூட்டும்படி கடிதங்கள் எழுதினார் கோவிந்த் சிங்.

தமது மகன் மீது நம்பிக்கை கொண்ட தந்தை,  ஒரு இளநீரையும் சில நாணயங்களையும்- தனது குரு சக்தியை மகனுக்கு தருவதன் சங்கல்பமாக, அடையாளமாக – நம்பிக்கைக்குரிய சீடரிடம் கொடுத்து அனுப்பினார்.

அதன்பிறகு, பொ.யு.பி. 1675 முதல் இறப்பு வரை சீக்கிய அம் மக்களின் குருவாகவும் ஆட்சியாளராகவும் இருந்தார். மொகாலயப் பேரரசர் ஔரங்கசீப்புடன்  மோதியதால்,  தர்மம் காக்கும்  போரில் தனது தந்தை, தாய், நான்கு மகன்களை இழந்தார்.

இவரது தந்தையும், ஒன்பதாவது சீக்கிய குருவுமான குருதேக் பகதூர் இஸ்லாம் மதத்துக்கு மாற மறுத்ததால்,  துண்டு துண்டாக வெட்டப்பட்டு,  குடியிருப்புப் பகுதிகளில் தொங்கவிடப்பட்டார். “நான் எனது தலையைத் தருவேன்; மதத்தையல்ல”  என்று அவர் தனது கழுத்தில் எழுதி வைத்திருந்த வாசகம் அப்போது சீக்கியர்களிடையே பிரபலமடைந்தது.

ஒரு சீக்கியர், அவரது அறுபட்ட தலையுடன் அனந்தபூருக்கு தப்பிச் சென்றார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுவன் குரு கோவிந்த சிங்,  சீக்கியர்களை வலிமையுடையவர்களாக மாற்ற பல அனுஷ்டானங்களி உருவாக்கினார்.

1685 , ஏப்ரல் மாதம் இவர் சிர்மௌர் மாவட்டத்திற்குக் குடிபெயர்ந்தார். இவர் மூன்று முறை திருமணம் செய்து கொண்டார். 1677- ஆம் ஆண்டில் ஜூடோஜியையும், 1684- ஆம் ஆண்டில் சுந்தரிஜியய் இரண்டாவதாகவும், அதன் பின்னர் சாஹிப் கௌர் என்பவரை மூன்றாவதாகவும் திருமணம் செய்து கொண்டார்.

சீக்கியத்தின் வளர்ச்சி:

1684 -ஆம் ஆண்டில் பஞ்சாபி மொழியில்  ‘சாண்டி தீ வார்’ எனும் நூலினை எழுதிய கோவிந்த சிங் 1685-ஆம் ஆண்டில்  ‘பாண்டா சாஹிப்’ எனும் குருத்வாராவை சீக்கியர் வழிபட்டுத் தலம்)  நிறுவினார். அங்கு மத போதனை, ஆயுதப் பயிற்சியுடன்,  இந்தி, பார்ஸி, பஞ்சாபி மொழிகளைக் கற்பித்தார்.

ஆனந்த்பூர் சாகிப் வட்டாரத்தில் கேஷ்கர், ஃபாதேகர், லாப்கர் மற்றும் ஆனந்த்கர் என்னும் நான்கு கோட்டைகளைக் கட்டினார். இங்கு ஆயுதத் தயாரிப்பு மற்றும் ஆயுதப் பாதுகாப்புக்கான இடங்களையும் நிறுவினார்.

சீக்கியர்களை எதிரிகளிடமிருந்து காத்துக்கொள்ளும் வலிமையுடைய சமயத்தினராக மாற்றினார். தனது இயக்கத்திற்கு  ‘கால்ஸா’ (தூய்மை) என்று பெயர் சூட்டினார்.  இதில் சேருபவரை ‘அகாலி’ என்று அழைத்தார். அகாலி என்ற சொல்லுக்கு அமரத்தன்மை வாய்ந்தவன் என்று பொருள்.

கடவுளின் சார்புள்வானாகப் பிறந்து பூமியில் அறத்தினை நிலைநாட்டுவதே முதன்மையான நோக்கம் என்று கூறினார். பாரதத்தின் பாரம்பரியம் மிக்க ஹிந்து தர்மத்தைக் காக்கும் வாளாகவும் கேடயமாகவும் சீக்கியர்கள் திக்ழ வேண்டும் என்றார் குரு கோவிந்த சிங்.

புனித நூலே குரு:

சீக்கிய குரு பதவிக்காக அவ்வப்போது ஏற்பட்ட மதப் பூசல்களைத் தடுப்பதற்காக ஒற்றை குரு முறையை குருகோவிந்த சிங் மாற்றினார். தனக்குப் பின் சீக்கிய மதப் புனித நூலான குரு கிரந்த சாஹிபே குரு என்று அறிவித்தார்.

குரு கிரந்த சாஹிபின் கடைசிப்பகுதியான ‘தஸ’ எனும் பகுதியை கோவிந்தரே எழுதினார். ராமாயணம், மகாபாரதம், கீதை  ஆகியவற்றின் சில பகுதிகளையும், சண்டி சரிதர், பகவதி தீவார்,  ராம் அவதார், துர்க ஸப்தஸதி ஆகிய இந்து சமய நூல்களையும் பஞ்சாபி மொழிக்கு மொழிபெயர்த்தார்.

1698-ஆம் ஆண்டில், ‘பச்சிட்டார் நாடக்’ எனும் பெயரில் சுயசரிதத்தை எழுதிய இவர் 1699-ல் ‘கால்சா’ அமைப்பை நிறுவினார்.

சீக்கியத்தில் மாற்றங்களை ஏற்படுத்திய குரு கோவிந்த சிங் சில முக்கிய கோட்பாடுகளை வகுத்தார். அதன்படி ஒவ்வொரு சீக்கிய ஆணும் கடவுளின் பிள்ளைகள் என்று உணர்வதற்காக தலைப்பாகையும் ஐந்து ‘க’ வை வைத்திருக்க வேண்டும் என்று கூறினார்.

இந்தி மொழியில்  ‘பஞ்ச்’ என்றால் ஐந்து. க- எனும் எழுத்து ஐந்து ககர எழுத்துக்களை முதன்மையாகக் கொண்ட செற்களைக் குறிக்கின்றது.

  • கேஸம் (நீண்ட தலை முடி, தாடி): கடவுள் தன்னை எப்படிப் படைத்தாரோ அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டு. அதில் மாறுதல் செய்யக் கூடாது.
  • கங்கம் (சீப்பு): ஒருவரது மனதையும் , ஆன்மாவையும் தூய்மையாக வைத்திருப்பதற்கு அடையாளம் சீப்பு.
  • கிர்பான் (குத்துவாள்): தன்னையும் மக்களையும் அன்னியர்களிட்மிருந்து பாதுகாக்கும் ஆயுதம்.
  • கச் (அரைக்கால் சட்டை): ஒரு நல்ல வாழ்க்கை வாழ்வதற்கான ஆடை.
  • கர (எஃகு காப்பு): பார்க்கும் போதெல்லாம்  நல்ல செயல்களைத் தூண்ட, வலக்கரத்தில் அணிய வேண்டும்.

-இந்த ஐந்தும் முறையே,  தியாகம், தூய்மை, ஆன்ம சுத்தி, புலனடக்கம், நேர்மை ஆகியவற்றின் சின்னங்கள் என்றும் கூறினார்.

கட்டுப்பாடுகளால் காத்தவர்:

சீகிய மத்தினர் இடைக்காலத்தில் ஒருவருக்கொருவர் ஜாதி ரீதியாகப் பிரிந்து பூசலிட்டு வந்ததை குரு கோவிந்தர் மாற்றினார். ‘கால்ஸா’ இயக்கத்தில் சேரும் அனைவரும்  மது அருந்துதல், புகை பிடித்தல் கூடாது;  நாள் தோறும் ஐந்து முறை வழிபடுதல் அவசியம்;  வருமானத்தின் பத்தில் ஒரு பங்கினை தானம் செய்ய வேண்டும்; வட்டி வாங்கக் கூடாது ஆகியவற்றை சீக்கிய மக்களிடையே கட்டாயமாக்கினார்.

சீக்கியர்கள் அனைவரும் சிங்கம் போன்ற பலமும், சத்திரிய  சக்தியும்,  சுயமரியாதையும் உடையவர்கள் என்று குருகோவிந்த் சிங் முழங்கினார்.

சீகியர்களிடையே வழக்கத்திலிருந்த  ‘சரண்பாஹுல்’ எனும் ஞானஸ்நானச்  சடங்கினை மாற்றி  ‘அம்ருத்பாஹீல்’ எனும் புதிய முறையைக் கொண்டுவந்தார். இந்த சடங்கினைச் செய்த பின்னரே அவர்கள் சீக்கியர்களாக மாறுவர் என்று சட்டங்கள் இயற்றினார்.

இச்சடங்கு முடித்த ஆண்கள்,  தன் பெயரின் பின்னால்  ‘சிங்’ (சிங்கம்) என்றும், பெண்கள்  ‘கெளர்’ (பெண் சிங்கம்) என்றும்  இணைத்துக்கொள்ள வேண்டுமென்பதை கட்டாயமாக்கினார்.

குரு கோவிந்த சிங் தனது வாழ்வு முழுவதும் அன்னிய ஆட்சியின் கொடுமைகளுக்கு எதிராகப் போராடினார். தனது  குடும்பமே அழிந்தபோதும், அவர் நிலைகுலையவில்லை. தர்மம் காக்கும் போரில் அவர் தனியொரு வீரனாக களத்தில் இருந்தார். அதன் காரணமாக முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் மதமாற்ற முயற்சிகளுக்கு பெரும் தடையாகவும் இருந்தார்.

தனது வாழ்நாள் முழுவதும் தர்மம் காக்கப் போரிட்ட இந்த மகத்தான மாவீரர் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள நான்டெட்-கில்  அக்டோபர் 7, 1708-இல் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

தனது வாழ்நாள் முற்றுப்பெறும் தறுவாயில், சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த சாகிப்பையே சீக்கிய மதத்தின் வாழும் குருவாக்கினார்.

இன்றும் உலகம் முழுவதும் சீக்கியர்கள்,  குரு கோவிந்த சிம்மனின் நினைவுகளுடன், குரு கிரந்த சாஹிப் மீதான பக்திப் பெருக்குடன், பாரதப் பாரம்பரியத்தின் அறுபடாத கண்ணிகளாக வாழ்கிறார்கள்.



No comments:

Post a Comment