16/12/2020

முழுநிலவும் விடிவெள்ளியும் (கவிதை)

-க.ரகுநாதன்


கந்தலாடை துவழ
விரித்த சடை நெகிழ
மார்பில் தவழும் தாடியுடன்
சாலையில் நடந்து வந்தவனின்
கை கால்களில் ஆணித் தழும்புகள்.
முகத்திலோ யுகங்கடந்த துயரம்.

சிற்றுயிர் ஊர்ந்த புதர் மேல்
குடை சாய்ந்த நிழல் தருவின்
அடியில் அமர்ந்தவனுக்கோ
நீர்மினுக்கும் கண்கள் கொண்ட முகம்.

பார்வைகள்...
தொடுதல்கள்...
ஆறுதல் விசாரிப்புக்குப் பின்
‘காயங்கள்...
தழும்புகள்...
துயரங்கள்’ என்றான் வந்தவன்.

‘உனக்கு வெளியே
எனக்கு உள்ளே’ என்றான் அமர்ந்தவன்.

பொக்கை வாய்களில்
பிரபஞ்சப் புன்னகைகள்
பரிமாறிய பின்
அமர்ந்தவன் ‘புத்தம் சரணம்’ என்க,
வந்தவன் ‘ஆமென்’ கூறிச் சென்றான்.





காண்க:

No comments:

Post a Comment