13/02/2021

பெருமாள் திருமொழி (கவிதை)

-குலசேகர ஆழ்வார்




எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

647 
இருளிரியச் சுடர்மணிக ளிமைக்கும் நெற்றி
இனத்துத்தி யணிபணமா யிரங்க ளார்ந்த
அரவரசப் பெருஞ்சோதி யனந்த னென்னும்
அணிவிளங்கு முயர்வெள்ளை யணையை மேவி
திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி
திரைக்கையா லடிவருடப் பள்ளி கொள்ளும்
கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டு என்
கண்ணிணைக ளென்றுகொலோ களிக்கும் நாளே . 1

648 
வாயோரீ ரைஞ்நுறு துதங்க ளார்ந்த
வளையுடம்பி னழல்நாகம் உமிழ்ந்த செந்தீ
வீயாத மலர்ச்சென்னி விதான மேபோல்
மேன்மேலும் மிகவெங்கும் பரந்த தன்கீழ்
காயாம்பூ மலர்ப்பிறங்க லன்ன மாலைக்
கடியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்
மாயோனை மணத்தூணே பற்றி நின்றென்
வாயார என்றுகொலோ வாழ்த்தும் நாளே . 2

649 
எம்மாண்பின் அயன்நான்கு நாவி னாலும்
எடுத்தேத்தி ஈரிரண்டு முகமுங் கொண்டு
எம்மாடு மெழிற்கண்க ளெட்டி னோடும்
தொழுதேத்தி யினிதிறைஞ்ச நின்ற செம்பொன்
அம்மான்றன் மலர்க்கமலக் கொப்பூழ் தோன்ற
அணியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்
அம்மான்ற னடியிணைக்கீ ழலர்க ளிட்டங்
கடியவரோ டென்றுகொலோ அணுகும் நாளே . 3


650 
மாவினைவாய் பிளந்துகந்த மாலை வேலை
வண்ணணைஎன் கண்ணணைவன் குன்ற மேந்தி
ஆவினையன் றுயக்கொண்ட ஆய ரேற்றை
அமரர்கள்தந் தலைவனைஅந் தமிழி னின்பப்
பாவினைஅவ் வடமொழியைப் பற்றற் றார்கள்
பயிலரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்
கோவினைநா வுறவழுத்தி என்றன் கைகள்
கொய்ம்மலர்தூய் என்றுகொலோ கூப்பும் நாளே . 4

651 
இணையில்லா வின்னிசையாழ் கெழுமி யின்பத்
தும்புருவும் நாரதனு மிறைஞ்சி யேத்த
துணியில்லாத் தொன்மறைநூல் தோத்தி ரத்தால்
தொன்மலர்க்க ணயன்வணங்கி யோவா தேத்த
மணிமாட மாளிகைகள் மல்கு செல்வ
மதிளரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்
மணிவண்ண னம்மானைக் கண்டு கொண்டென்
மலர்சென்னி யென்றுகொலோ வணங்கும் நாளே . 5

652 
அளிமலர்மே லயனரனிந் திரனோடு ஏனை
அமரர்கள்தம் குழுவுமரம் பையரும் மற்றும்
தெளிமதிசேர் முனிவர்கள்தம் குழுவு முந்தித்
திசைதிசையில் மலர்தூவிச் சென்று சேரும்
களிமலர்சேர் பொழிலரங்கத் துரக மேறிக்
கண்வளரும் கடல்வண்ணர் கமலக் கண்ணும்
ஒளிமதிசேர் திருமுகமும் கண்டு கொண்டென்
உள்ளமிக என்றுகொலோ வுருகும் நாளே . 6

653 
மறந்திகழு மனமொழித்து வஞ்ச மாற்றி
ஐம்புலன்க ளடக்கியிடர்ப் பாரத் துன்பம்
துறந்து,இருமுப் பொழுதேத்தி யெல்லை யில்லாத்
தொன்னெறிக்கண் நிலைநின்ற தொண்டரான
அறம்திகழும் மனத்தவர்தம் கதியைப் பொன்னி
அணியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்
நிறம்திகழும் மாயோனைக் கண்டென் கண்கள்
நீர்மல்க என்றுகொலோ நிற்கும் நாளே . 7

654 
கோலார்ந்த நெடுஞ்சார்ங்கம் கூனற் சங்கம்
கொலையாழி கொடுந்தண்டு கொற்ற வொள்வாள்
காலார்ந்த கதிக்கருட னென்னும் வென்றிக்
கடும்பறவை யிவையனைத்தும் புறஞ்சூழ் காப்ப
சேலார்ந்த நெடுங்கழனி சோலை சூழ்ந்த
திருவரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்
மாலோனைக் கண்டின்பக் கலவி யெய்தி
வல்வினையே னென்றுகொலோ வாழும் நாளே . 8

655
தூராத மனக்காதல் தொண்டர் தங்கள்
குழாம்குழுமித் திருப்புகழ்கள் பலவும் பாடி
ஆராத மனக்களிப்போ டழுத கண்ணீர்
மழைசோர நினைந்துருகி யேத்தி நாளும்
சீரார்ந்த முழுவோசை பரவை காட்டும்
திருவரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்
போராழி யம்மானைக் கண்டு துள்ளிப்
பூதலத்தி லென்றுகொலோ புரளும் நாளே . 9

656 
வன்பெருவா னகமுய்ய அமர ருய்ய
மண்ணுய்ய மண்ணுலகில் மனிச ருய்ய
துன்பமிகு துயரகல அயர்வொன் றில்லாச்
சுகம்வளர அகமகிழுந் தொண்டர் வாழ
அன்பொடுதென் திசைநோக்கிப் பள்ளி கொள்ளும்
அணியரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள்
இன்பமிகு பெருங்குழுவு கண்டு யானும்
இசைந்துடனே யென்றுகொலோ விருக்கு நாளே . 10

657 
திடர்விளங்கு கரைப்பொன்னி நடுவு பாட்டுத்
திருவரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்
கடல்விளங்கு கருமேனி யம்மான் றன்னைக்
கண்ணாரக் கண்டுகக்கும் காதல் தன்னால்
குடைவிளங்கு விறல்தானைக் கொற்ற வொள்வாள்
கூடலர்கோன் கொடைகுலசே கரன்சொற் செய்த
நடைவிளங்கு தமிழ்மாலை பத்தும் வல்லார்
நலந்திகழ்நா ரணனடிக்கீழ் நண்ணு வாரே . 11


சந்தக் கலி விருத்தம்


658 
தேட்டரும்திறல் தேனினைத்தென்
னரங்கனைத்திரு மாதுவாழ்
வாட்டமில்வன மாலைமார்வனை
வாழ்த்திமால்கொள்சிந் தையராய்
ஆட்டமேவி யலந்தழைத்தயர்
வெய்தும்மெய்யடி யார்கள்தம்
ஈட்டம்கண்டிடக் கூடுமேலது
காணும்கண்பய னாவதே . 1

659 
தோடுலாமலர் மங்கைதோளிணை
தேய்ந்ததும்சுடர் வாளியால்
நீடுமாமரம் செற்றதும்நிரை
மேய்த்துமிவை யேநினைந்து
ஆடிப்பாடி அரங்கவோஎன்ற
ழைக்கும்தொண்ட ரடிப்பொடி
ஆடனாம்பெறில் கங்கைநீர்குடைந்
தாடும்வேட்கையென் னாவதே . 2

660 
ஏறடர்த்ததும் ஏனமாய்நிலம்
கீண்டதும்முன்னி ராமனாய்
மாறடர்த்ததும் மண்ணளந்ததும்
சொல்லிப்பாடிவண் பொன்னிப்பே
ராறுபோல்வரும் கண்ணநீர்கொண்ட
ரங்கன்கோயில் திருமுற்றம்
சேறுசெய்தொண்டர் சேவடிச்செழுஞ்
சேறெஞ்சென்னிக் கணிவனே . 3

661 
தோய்த்ததண்தயிர் வெண்ணெய்பாலுடன்
உண்டலும்உடன் றாய்ச்சிகண்டு
ஆர்த்ததோளுடை யெம்பிரானென்ன
ரங்கனுக்கடி யார்களாய்
நாத்தழும்பெழ நாரணாவென்ற
ழைத்துமெய்தழும் பத்தொழு
தேத்தி,இன்புறும் தொண்டர்சேவடி
ஏத்திவாழ்த்துமென் நெஞ்சமே . 4

662 
பொய்சிலைக்குர லேற்றெருத்தமி
றுத்துபோரர வீர்த்தகோன்
செய்சிலைச்சுடர் சூழொளித்திண்ண
மாமதிள்தென்ன ரங்கனாம்
மெய்சிலைக்கரு மேகமொன்றுதம்
நெஞ்சில்நின்று திகழப்போய்
மெய்சிலிர்ப்பவர் தம்மையேநினைந்
தென்மனம்மெய்சி லிர்க்குமே . 5

663 
ஆதியந்தம னந்தமற்புதம்
ஆனவானவர் தம்பிரான்
பாதமாமலர் சூடும்பத்தியி
லாதபாவிக ளுய்ந்திட
தீதில்நன்னெரி காட்டியெங்கும்
திரிந்தரங்கனெம் மானுக்கே
காதல்செய்தொண்டர்க் கெப்பிறப்பிலும்
காதல்செய்யுமென் னெஞ்சமே . 6

664 
காரினம்புரை மேனிநல்கதிர்
முத்தவெண்ணகைச் செய்யவாய்
ஆரமார்வ னரங்கனென்னும்
அரும்பெருஞ்சுட ரொன்றினை
சேரும்நெஞ்சின ராகிச்சேர்ந்துக
சிந்திழிந்தகண் ணீர்களால்
வாரநிற்பவர் தாளிணைக்கொரு
வாரமாகுமென் னெஞ்சமே . 7

665 
மாலையுற்றக டல்கிடந்தவன்
வண்டுகிண்டுந றுந்துழாய்
மாலையுற்றவ ரைப்பெருந்திரு
மார்வனைமலர்க் கண்ணனை
மாலையுற்றெழுந் தடிப்பாடித்தி
ரிந்தரங்கனெம் மானுக்கே
மாலையுற்றிடும் தொண்டர்வாழ்வுக்கு
மாலையுற்றதென் நெஞ்சமே . 8

666
மொய்த்துக்கண்பனி சோரமெய்கள்சி
லிர்ப்பஏங்கி யிளைத்துநின்று
எய்த்துக்கும்பிடு நட்டமிட்டெழுந்
தாடிப்பாடியி றைஞ்சி,என்
அத்தனச்ச னரங்கனுக்கடி
யார்களாகி அவனுக்கே
பித்தராமவர் பித்தரல்லர்கள்
மற்றையார்முற்றும் பித்தரே . 9

667 
அல்லிமாமலர் மங்கைநாதன்
அரங்கன்மெய்யடி யார்கள்தம்
எல்லையிலடி மைத்திறத்தினில்
என்றுமேவு மனத்தனாம்
கொல்லிகாவலன் கூடல்நாயகன்
கோழிக்கோன்குல சேகரன்
சொல்லினின்தமிழ் மாலைவல்லவர்
தொண்டர்தொண்டர்க ளாவரே . 10


கலி விருத்தம்

668 
மெய்யில் வாழ்க்கையை மெய்யெனக் கொள்ளும்இவ்
வையந் தன்னொடும் கூடுவ தில்லையான்
ஐய னேஅரங் காஎன்ற ழைக்கின்றேன்
மையல் கொண்டாழிந் தேனென்றன் மாலுக்கே . 1

669
நூலி னேரிடை யார்திறத் தேநிற்கும்
ஞாலந் தன்னொடும் கூடுவ தில்லையான்
ஆலியா அழையா அரங்கா வென்று
மாலெ ழுந்தொழிந் தேனென்றன் மாலுக்கே . 2

670 
மார னார்வரி வெஞ்சிலைக் காட்செய்யும்
பாரி னாரொடும் கூடுவ தில்லையான்
ஆர மார்வ னரங்க னனந்தன்நல்
நார ணன்நர காந்தகன் பித்தனே . 3

671 
உண்டி யேயுடை யேயுகந் தோடும்,இம்
மண்ட லத்தொடும் கூடுவ தில்லையான்
அண்ட வாண னரங்கன்வன் பேய்முலை
உண்ட வாயன்ற னுன்மத்தன் காண்மினே . 4

672 
தீதில் நன்னெறி நிற்கஅல் லாதுசெய்
நீதி யாரொடும் கூடுவ தில்லையான்
ஆதி ஆய னரங்கன்,அந் தாமரைப்
பேதை மாமண வாளன்றன் பித்தனே . 5

673 
எம்ப ரத்தரல் லாரொடும் கூடலன்
உம்பர் வாழ்வையொன் றாக கருதிலன்
தம்பி ரானம ரர்க்கு,அரங் கநகர்
எம்பி ரானுக்கெ ழுமையும் பித்தனே . 6

674 
எத்தி றத்திலும் யாரொடும் கூடும்,அச்
சித்தந் தன்னைத் தவிர்த்தனன் செங்கண்மால்
அத்த னேஅரங் காஎன்ற ழைக்கின்றேன்
பித்த னாயொழிந் தேனெம்பி ரானுக்கே . 7

675 
பேய ரேயெனக் கியாவரும் யானுமோர்
பேய னேயெவர்க் கும்இது பேசியென்
ஆய னேஅரங் காஎன்ற ழைக்கின்றேன்
பேய னாயொழிந் தேனெம்பி ரானுக்கே . 8

676 
அங்கை யாழி யரங்க னடியிணை
தங்கு சிந்தைத் தனிப்பெரும் பித்தனாய்
கொங்கர் கோன்குல சேகரன் சொன்னசொல்
இங்கு வல்லவர்க் கேதமொன் றில்லையே . 9


தாவு கொச்சகக் கலிப்பா

677 
ஊனேறு செல்வத் துடற்பிறவி யான்வேண்டேன்
ஆனேறேழ் வென்றா னடிமைத் திறமல்லால்
கூனேறு சங்க மிடத்தான்தன் வேங்கடத்து
கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே . 1

678 
ஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்குழ
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்
தேனார்பூஞ் சோலைத் திருவேங்க டச்சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே . 2

679 
பின்னிட்ட சடையானும் பிரமனு மந்திரனும்
துன்னிட்டு புகலரிய வைகுந்த நீள்வாசல்
மின்வட்டச் சுடராழி வேங்கடக்கோன் தானுமிழும்
பொன்வட்டில் பிடித்துடனே புகப்பெறுவே னாவேனே . 3

680 
ஒண்பவள வேலை யுலவுதண் பாற்கடலுள்
கண்துயிலும் மாயோன் கழலிணைகள் காண்பதற்கு
பண்பகரும் வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்து
செண்பகமாய் நிற்கும் திருவுடையே னாவேனே . 4

681 
கம்பமத யானை கழுத்தகத்தின் மேலிருந்து
இன்பமரும் செல்வமு மிவ்வரசும் யான்வேண்டேன்
எம்பெருமா னீச னெழில்வேங் கடமலைமேல்
தம்பகமாய் நிற்கும் தவமுடையே னாவேனே . 5

682 
மின்னனைய நுண்ணிடையா ருருப்பசியும் மேனகையும்
அன்னவர்தம் பாடலொடு மாடலவை யாதரியேன்
தென்னவென வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துள்
அன்னனைய பொற்குடவா மருந்தவத்த னானவனே . 6

683 
வானாளும் மாமதிபோல் வெண்குடைக்கீழ் மன்னவர்தம்
கோனாகி வீற்றிருந்து கொண்டாடும் செல்வறியேன்
தேனார்பூஞ் சோலைத் திருவேங் கடமலைமேல்
கானாறாய்ப் பாயும் கருத்துடையே னாவேனே . 7

684 
பிறையேறு சடையானும் பிரமனு மிந்திரனும்
முறையாய பெருவேள்விக் குறைமுடிப்பான் மறையானான்
வெறியார்தண் சோலைத் திருவேங் கடமலைமேல்
நெறியாய்க் கிடக்கும் நிலையுடையே னாவேனே . 8

685 
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே . 9

686
உம்ப ருலகாண் டொருகுடைக்கீழ் உருப்பசிதன்
அம்பொற் கலையல்குல் பெற்றாலு மாதரியேன்
செம்பவள வாயான் திருவேங் கடமென்னும்
எம்பெருமான் பொன்மலைமே லேதேனு மாவேனே . 10

687 
மன்னியதண் சாரல் வடவேங் கடத்தான்றன்
பொன்னியலும் சேவடிகள் காண்பான் புரிந்திறைஞ்சி
கொன்னவிலும் கூர்வேல் குலசே கரஞ்சொன்ன
பன்னியநூல் தமிழ்வல்லார் பாங்காய பத்தர்களே . 11


தரவு கொச்சகக் கலிப்பா


688 
தருதுயரம் தடாயேலுன் சரணல்லால் சரணில்லை
விரைகுழுவு மலர்ப்பொழில்சூழ் விற்றுவக்கோட் டம்மானே
அரிசினத்தா லீன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன்
அருள்நினைந்தே யழும்குழவி அதுவேபோன் றிருந்தேனே . 1

689 
கண்டா ரிகழ்வனவே காதலன்றான் செய்திடினும்
கொண்டானை யல்லா லறியாக் குலமகள்போல்
விண்டோ ய் மதிள்புடைசூழ் விற்றுவக்கோட் டம்மாநீ
கொண்டாளா யாகிலுமுன் குரைகழலே கூறுவனே . 2

690 
மீன்நோக்கும் நீள்வயல்சூழ் விற்றுவக்கோட் டம்மாஎன்
பால்நோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன்
தான்நோக்கா தெத்துயரம் செய்திடினும் தார்வேந்தன்
கோல்நோக்கி வாழும் குடிபோன்றி ருந்தேனே . 3

691 
வாளா லறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாத காதல்நோ யாளன்போல் மாயத்தால்
மீளாத் துயர்தரினும் விற்றுவக்கோட் டம்மாநீ
ஆளா வுனதருளே பார்ப்ப னடியேனே . 4

692 
வெங்கண்திண் களிறடர்த்தாய் விற்றுவக்கோட் டம்மானே
எங்குப்போ யுய்கேனுன் னிணையடியே யடையலல்லால்
எங்கும்போய்க் கரைகாணா தெறிகடல்வாய் மீண்டேயும்
வங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை போன்றேனே . 5

693 
செந்தழலே வந்தழலைச் செய்திடினும் செங்கமலம்
அந்தரஞ்சேர் வெங்கதிரோற் கல்லா லலராவால்
வெந்துயர்வீட் டாவிடினும் விற்றுவக்கோட் டம்மாஉன்
அந்தமில்சீர்க் கல்லா லகங்குழைய மாட்டேனே . 6

694 
எத்தனையும் வான்மறந்த காலத்தும் பைங்கூழ்கள்
மைத்தெழுந்த மாமுகிலே பார்த்திருக்கும் மற்றவைப்போல்
மெய்த்துயர்வீட் டாவிடினும் விற்றுவக்கோட் டம்மாஎன்
சித்தம்மிக வுன்போலே வைப்ப னடியேனே . 7

695 
தொக்கிலங்கி யாறெல்லாம் பரந்தோடி தொடுகடலே
புக்கன்றிப் புறம்நிற்க மாட்டாத மற்றவைபோல்
மிக்கிலங்கு முகில்நிறத்தாய் விற்றுவக்கோட் டம்மாஉன்
புக்கிலங்கு சீரல்லால் புக்கிலன்காண் புண்ணியனே . 8

696 
நின்னையே தான்வேண்டி நீள்செல்வம் வேண்டாதான்
தன்னையே தான்வேண்டும் செல்வம்போல் மாயத்தால்
மின்னையே சேர்திகிரி விற்றுவக்கோட் டம்மானே
நின்னையே தான்வேண்டி நிற்ப னடியேனே . 9

697 
விற்றுவக்கோட் டம்மாநீ வேண்டாயே யாயிடினும்
மற்றாரும் பற்றில்லே னென்றுஅவனைத் தாள்நயந்த
கொற்றவேல் தானைக் குலசே கரஞ்சொன்ன
நற்றமிழ்பத் தும்வல்லார் நண்ணார் நரகமே . 10


அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


698 
ஏர்மலர்ப் பூங்குழ லாயர்மாதர்
எனைப்பல் ருள்ளவிவ் வூரில்,உன்றன்
மார்வு தழுவுதற் காசையின்மை
அறிந்தறிந் தேயுன்றன் பொய்யைக்கேட்டு
கூர்மழை போல்பனிக் கூதலெய்திக்
கூசி நடுங்கி யமுனையாற்றில்
வார்மணற் குன்றில் புலரநின்றேன்
வாசுதே வாஉன் வரவுபார்த்தே . 1

699 
கொண்டையொண் கண்மட வாளொருத்தி
கீழை யகத்துத் தயிர்கடையக்
கண்டுஒல்லை நானும் கடைவனென்று
கள்ள விழிவிழித் துப்புக்கு
வண்டமர் பூங்குழல் தாழ்ந்துலாவ
வாண்முகம் வேர்ப்பச்செவ் வாய்த்துடிப்ப
தண்டயிர் நீகடைந் திட்டவண்ணம்
தாமோத ராமெய் யறிவன்நானே . 2

700 
கருமலர்க் கூந்த லொருத்திதன்னைக்
கடைக்கணித்து ஆங்கே யொருத்திதன்பால்
மருவி மனம்வைத்து மற்றொருத்திக்
குரைத்தொரு பேதைக்குப் பொய்குறித்து
புரிகுழல் மங்கை யொருத்திதன்னைப்
புணர்தி யவளுக்கும் மெய்யனல்லை
மருதிறுத் தாய்உன் வளர்த்தியூடே
வளர்கின்ற தாலுன்றன் மாயைதானே . 3

701 
தாய்முலைப் பாலி லமுதிருக்கத்
தவழ்ந்து தளர்நடை யிட்டுச்சென்று
பேய்முலை வாய்வைத்து நஞ்சையுண்டு
பித்தனென் றேபிற ரேசநின்றாய்
ஆய்மிகு காதலோடு யானிருப்ப
யான்விட வந்தவென் தூதியோடே
நீமிகு போகத்தை நன்குகந்தாய்
அதுவுமுன் கோரம்புக் கேற்குமன்றே . 4

702 
மின்னொத்த நுண்ணிடை யாளைக்கொண்டு
வீங்கிருள் வாயென்றன் வீதியூடே
பொன்னொத்த வாடைகுக் கூடலிட்டுப்
போகின்ற போதுநான் கண்டுநின்றேன்
கண்ணுற் றவளைநீ கண்ணாலிட்டுக்
கைவிளிக் கின்றதும் கண்டேநின்றேன்
என்னுக் கவளைவிட் டிங்குவந்தாய்
இன்னமங் கேநட நம்பிநீயே . 5

703
மற்பொரு தோளுடை வாசுதேவா
வல்வினை யேன்துயில் கொண்டவாறே
இற்றை யிரவிடை யேமத்தென்னை
இன்னணை மேலிட்ட கன்றுநீபோய்
அற்றை யிரவுமோர் பிற்றைநாளும்
அரிவைய ரோடும் அணைந்துவந்தாய்
எற்றுக்கு நீயென் மருங்கில்வந்தாய்
எம்பெரு மான்நீ யெழுந்தருளே . 6

704 
பையர வின்னணைப் பள்ளியினாய்
பண்டையோ மல்லோம்நாம் நீயுகக்கும்
மையரி யொண்கண்ணி னாருமல்லோம்
வைகியெம் சேரி வரவோழிநீ
செய்ய வுடையும் திருமுகமும்
செங்கனி வாயும் குழலும்கண்டு
பொய்யொரு நாள்பட்ட தேயமையும்
புள்ளுவம் பேசாதே போகுநம்பீ . 7

705 
என்னை வருக வெனக்குறித்திட்
டினமலர் முல்லையின் பந்தர்நீழல்
மன்னி யவளைப் புணரப்புக்கு
மற்றென்னைக் கண்டுழ றாநெகிழ்ந்தாய்
பொன்னிற வாடையைக் கையில்தாங்கிப்
பொய்யச்சங் காட்டிநீ போதியேலும்
இன்னமென் கையகத் தீங்கொருநாள்
வருதியே லெஞ்சினம் தீர்வன்நானே . 8

706 
மங்கல நல்வன மாலைமார்வில்
இலங்க மயில்தழைப் பீலிசூடி
பொங்கிள வாடை யரையில்சாத்திப்
பூங்கொத்துக் காதிற் புணரப்பெய்து
கொங்கு நறுங்குழ லார்களோடு
குழைந்து குழலினி தூதிவந்தாய்
எங்களுக் கேயொரு நாள்வந்தூத
உன்குழ லின்னிசை போதராதே . 9

707 
அல்லி மலர்த்திரு மங்கைகேள்வன்
றன்னை நயந்திள வாய்ச்சிமார்கள்
எல்லிப் பொழுதினி லேமத்தூடி
எள்கி யுரைத்த வுரையதனை
கொல்லி நகர்க்கிறை கூடற்கோமான்
குலசே கரனின் னிசையில்மேவி
சொல்லிய இன்தமிழ் மாலைபத்தும்
சொல்லவல் லார்க்கில்லை துன்பந்தானே . 10


எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

708 
ஆலை நீள்கரும் பன்னவன் தாலோ
அம்பு யுத்தடங் கண்ணினன் தாலோ
வேலை நீர்நிறத் தன்னவன் தாலோ
வேழப் போதக மன்னவன் தாலோ
ஏல வார்குழ லென்மகன் தாலோ
என்றென் றுன்னைஎன் வாயிடை நிறைய
தாலொ லித்திடும் திருவினை யில்லாத்
தாய ரில்கடை யாயின தாயே . 1

709 
வடிக்கொ ளஞ்சன மெழுதுசெம் மலர்க்கண்
மருவி மேலினி தொன்றினை நோக்கி
முடக்கிச் சேவடி மலர்ச்சிறு கருந்தாள்
பொலியு நீர்முகில் குழவியே போல
அடக்கி யாரச்செஞ் சிறுவிர லனைத்தும்
அங்கை யோடணைந் தானையிற் கிடந்த
கிடக்கை கண்டிடப் பெற்றில னந்தோ
கேச வாகெடு வேன்கெடு வேனே . 2

710 
முந்தை நன்முறை யுன்புடை மகளிர்
முறைமு றைந்தம் குறங்கிடை யிருத்தி
எந்தை யேஎன்றன் குலப்பெருஞ் சுடரே
எழுமு கில்கணத் தெழில்கவ ரேறே
உந்தை யாவன்என் றுரைப்பநின் செங்கேழ்
விரலி னும்கடைக் கண்ணினும் காட்ட
நந்தன் பெற்றனன் நல்வினை யில்லா
நங்கள் கோன்வசு தேவன்பெற் றிலனே . 3

711 
களிநி லாவெழில் மதிபுரை முகமும்
கண்ண னேதிண்கை மார்வும்திண் டோ ளும்
தளிம லர்க்கருங் குழல்பிறை யதுவும்
தடங்கொள் தாமரைக் கண்களும் பொலிந்த
இளமை யின்பத்தை யின்றென்றன் கண்ணால்
பருகு வேற்கிவள் தாயென நினைந்த
அளவில் பிள்ளைமை யின்பத்தை யிழந்த
பாவி யேனென தாவிநில் லாதே . 4

712 
மருவு நின்திரு நெற்றியில் சுட்டி
அசைத ரமணி வாயிடை முத்தம்
தருத லும்,உன்றன் தாதையைப் போலும்
வடிவு கண்டுகொண் டுள்ளமுள் குளிர
விரலைச் செஞ்சிறு வாயிடைச் சேர்த்து
வெகுளி யாய்நின்று ரைக்கும்மவ் வுரையும்
திருவி லேனொன்றும் பெற்றிலேன் எல்லாம்
தெய்வ நங்கை யசோதைபெற் றாளே . 5

713 
தண்ணந் தாமரைக் கண்ணனே கண்ணா
தவழ்ந்தெ ழுந்து தளர்ந்ததோர் நடையால்
மண்ணில் செம்பொடி யாடிவந் தென்றன்
மார்வில் மன்னிடப் பெற்றிலே னந்தோ
வண்ணச் செஞ்சிறு கைவிர லனைத்தும்
வாரி வாய்க்கொண்ட அடிசிலின் மிச்சல்
உண்ணப் பெற்றிலேன் ஓகொடு வினையேன்
என்னை எஞ்செய்யப் பெற்றதெம் மோயே . 6

714 
குழக னேஎன்றன் கோமளப் பிள்ளாய்
கோவிந் தாஎன் குடங்கையில் மன்னி
ஒழுகு பேரெழி லிளஞ்சிறு தளிர்போல்
ஒருகை யாலொரு முலைமுகம் நெருடா
மழலை மென்னகை யிடையிடை யருளா
வாயி லேமுலை யிருக்கவென் முகத்தே
எழில்கொள் நின்திருக் கண்ணிணை நோக்கந்
தன்னை யுமிழந் தேனிழந் தேனே . 7

715 
முழுதும் வெண்ணெ யளைந்துதொட் டுண்ணும்
முகிழி ளஞ்சிறுத் தாமரைக் கையும்
எழில்கொள் தாம்புகொண் டடிப்பதற் கெள்கும்
நிலையும் வெண்தயிர் தோய்ந்தசெவ் வாயும்
அழுகை யுமஞ்சி நோக்குமந் நோக்கும்
அணிகொள் செஞ்சிறு வாய்நெளிப் பதுவும்
தொழுகை யுமிவை கண்ட அசோதை
தொல்லை யின்பத் திறுதிகண் டாளே . 8

716 
குன்றி னால்குடை கவித்ததும் கோலக்
குரவை கோத்த தும்குட மாட்டும்
கன்றி னால்விள வெறிந்ததும் காலால்
காளி யன்தலை மிதித்தது முதலா
வென்றி சேர்பிள்ளை நல்விளை யாட்டம்
அனைத்தி லுமங்கென் னுள்ளமுள் குளிர
ஒன்றும் கண்டிடப் பெற்றிலே னடியேன்
காணு மாறினி யுண்டெனி லருளே . 9

717
வஞ்ச மேவிய நெஞ்சுடைப் பேய்ச்சி
வரண்டு நார்நரம் பெழக்கரிந் துக்க
நஞ்ச மார்தரு சுழிமுலை யந்தோ
சுவைத்து நீயருள் செய்து வளர்ந்தாய்
கஞ்சன் நாள்கவர் கருமுகி லெந்தாய்
கடைப்பட் டேன்வெறி தேமுலை சுமந்து
தஞ்ச மேலொன்றி லேனுய்ந்தி ருந்தேன்
தக்க தேநல்ல தாயைப்பெற் றாயே . 10

718 
மல்லை மாநகர்க் கிறையவன் றன்னை
வாஞ்செ லுத்திவந் தீங்கணை மாயத்து
எல்லை யில்பிள்ளை செய்வன காணாத்
தெய்வத் தேவகி புலம்பிய புலம்பல்
கொல்லி காவலன் மாலடி முடிமேல்
கோல மாம்குல சேகரன் சொன்ன
நல்லி சைத்தமிழ் மாலைவல் லார்கள்
நண்ணு வாரொல்லை நாரண னுலகே . 11


தரவு கொச்சகக் கலிப்பா


719 
மன்னுபுகழ் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே
தென்னிலங்கை கோன்முடிகள் சிந்துவித்தாய் செம்பொஞ்சேர்
கன்னிநன்மா மதிள்புடைசூழ் கணபுரத்தென் கருமணியே
என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ . 1

720 
புண்டரிக மலரதன்மேல் புவனியெல்லாம் படைத்தவனே
திண்டிறலாள் தாடகைதன் உரமுருவச் சிலைவளைத்தய்
கண்டவர்தம் மனம்வழங்கும் கணபுரத்தென் கருமணியே
எண்டிசையு மாளுடையாய் இராகவனே தாலேலோ . 2

721 
கொங்குமலி கருங்குழலாள் கோசலைதன் குலமதலாய்
தங்குபெரும் புகழ்ச்சனகன் திருமருகா தாசரதீ
கங்கையிலும் தீர்த்தமலி கணபுரத்தென் கருமணியே
எங்கள்குல தின்னமுதே இராகவனே தாலேலோ . 3

722 
தாமரைமே லயனவனைப் படைத்தவனே தசரதன்றன்
மாமதலாய் மைதிலிதன் மணவாளா வண்டினங்கள்
காமரங்க ளிசைபாடும் கணபுரத்தென் கருமணியே
ஏமருவும் சிலைவலவா இராகவனே தாலேலோ . 4

723 
பாராளும் படர்செல்வம் பரதநம்பிக் கேயருளி
ஆராவன் பிளையவனோ டருங்கான மடைந்தவனே
சீராளும் வரைமார்பா திருக்கண்ண புரத்தரசே
தாராளும் நீண்முடியென் தாசரதீ தாலேலோ . 5

724 
சுற்றமெல்லாம் பின்தொடரத் தொல்கான மடைந்தவனே
அற்றவர்கட் கருமருந்தே அயோத்திநகர்க் கதிபதியே
கற்றவர்கள் தாம்வாழும் கணபுரத்தென் கருமணியே
சிற்றவைதன் சொல்கொண்ட சீராமா தாலேலோ . 6

725 
ஆலினிலைப் பாலகனா யன்றுலக முண்டவனே
வாலியைகொன் றரசிளைய வானரத்துக் களித்தவனே
காலின்மணி கரையலைக்கும் கணபுரத்தென் கருமணியே
ஆலிநகர்க் கதிபதியே அயோத்திமனே தாலேலோ . 7

726 
மலையதனா லணைகட்டி மதிளிலங்கை யழித்தவனே
அலைகடலைக் கடைந்தமரர்க் கமுதருளிச் செய்தவனே
கலைவலவர் தாம்வாழும் கணபுரத்தென் கருமணியே
சிலைவலவா சேவகனே சீராம தாலேலோ . 8

727 
தளையவிழும் நறுங்குஞ்சித் தயரதன்றன் குலமதலாய்
வளையவொரு சிலையதனால் மதிளிலங்கை யழித்தவனே
களைகழுநீர் மருங்கலரும் கணபுரத்தென் கருமணியே
இளையவர்கட் கருளுடையாய் இராகவனே தாலேலோ . 9

728 
தேவரையு மசுரரையும் திசைகளையும் படைத்தவனே
யாவரும்வந் தடிவணங்க அரங்கநகர்த் துயின்றவனே
காவிரிநல் நதிபாயும் கணபுரத்தென் கருமணியே
ஏவரிவெஞ் சிலைவலவா இராகவனே தாலேலோ . 10

729 
கன்னிநன்மா மதிள்புடைசூழ் கணபுரத்தென் காகுத்தன்
தன்னடிமேல் தாலேலோ என்றுரைத்த தமிழ்மாலை
கொல்நவிலும் வேல்வலவன் குடைக்குலசே கரஞ்சொன்ன
பன்னியநூல் பத்தும்வல்லார் பாங்காய பத்தர்களே . 11


அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


730 
வன்தாளி னிணைவணங்கி வளநகரம்
தொழுதேத்த மன்ன னாவான்
நின்றாயை அரியணைமே லிருந்தாயை
நெடுங்கானம் படரப் போகு
என்றாள்,எம் இராமாவோ உனைப்பயந்த
கைகேசி தஞ்சொற் கேட்டு
நன்றாக நானிலத்தை யாள்வித்தேன்
நன்மகனே உன்னை நானே . .1

731 
வெவ்வாயேன் வெவ்வுரைகேட் டிருநிலத்தை
வேண்டாதே விரைந்து வென்றி
மைவாய களிறொழிந்து தேரொழிந்து
மாவொழிந்து வனமே மேவி
நெய்வாய வேல்நெடுங்கண் நேரிழையும்
இளங்கோவும் பின்பு போக
எவ்வாறு நடந்தனையெம் இரமாவோ
எம்பெருமான் எஞ்செய் கேனே . 2

732 
கொல்லணைவேல் வரிநெடுங்கண் கோசலைதன்
குலமதலாய் குனிவில் லேந்தும்
மல்லணைந்த வரைத்தோளா வல்வினையேன்
மனமுருக்கும் வகையே கற்றாய்
மெல்லணைமேல் முன்துயின்றாய் இன்றினிப்போய்
வியன்கான மரத்தின் நீழல்
கல்லணைமேல் கண்டுயிலக் கற்றனையோ
காகுத்தா கரிய கோவே . 3

733 
வாபோகு வாஇன்னம் வந்தொருகால்
கண்டுபோ மலராள் கூந்தல்
வேய்போலு மெழில்தோளி தன்பொருட்டா
விடையோன்றன் வில்லைச் செற்றாய்
மாபோகு நெடுங்கானம் வல்வினையேன்
மனமுருக்கும் மகனே இன்று
நீபோக என்னெஞ்ச மிருபிளவாய்ப்
போகாதே நிற்கு மாறே . 4

734 
பொருந்தார்கை வேல்நுதிபோல் பரல்பாய
மெல்லடிகள் குருதி சோர
விரும்பாத கான்விரும்பி வெயிலுறைப்ப
வெம்பசிநோய் கூர இன்று
பெரும்பாவி யேன்மகனே போகின்றாய்
கேகயர்கோன் மகளாய்ப் பெற்ற
அரும்பாவி சொற்கேட்ட அருவினையேன்
எஞ்செய்கேன் அந்தோ யானே . 5

735 
அம்மாவென் றுகந்தழைக்கு மார்வச்சொல்
கேளாதே அணிசேர் மார்வம்
என்மார்வத் திடையழுந்தத் தழுவாதே
முழுசாதே மோவா துச்சி
கைம்மாவின் நடையன்ன மென்னடையும்
கமலம்போல் முகமும் காணாது
எம்மானை யென்மகனை யிழந்திட்ட
இழிதகையே னிருக்கின் றேனே . 6


736 
பூமருவு நறுங்குஞ்சி புஞ்சடையாய்ப்
புனைந்துபூந் துகில்சே ரல்குல்
காமரெழில் விழலுடுத்துக் கலனணியா
தங்கங்க ளழகு மாறி
ஏமருதோ ளென்புதல்வன் யானின்று
செலத்தக்க வனந்தான் சேர்தல்
தூமறையீர் இதுதகவோ சுமந்திரனே
விசிட்டனே சொல்லீர் நீரே . 7

737 
பொன்பெற்றா ரெழில்வேதப் புதல்வனையும்
தம்பியையும் பூவை போலும்
மின்பற்றா நுண்மருங்குல் மெல்லியலென்
மருகிகையும் வனத்தில் போக்கி
நின்பற்றா நின்மகன்மேல் பழிவிளைத்திட்
டென்னையும்நீள் வானில் போக்க
என்பெற்றாய் கைகேசீ இருநிலத்தில்
இனிதாக விருக்கின் றாயே . 8

738 
முன்னொருநாள் மழுவாளி சிலைவாங்கி
அவன்தவத்தை முற்றும் செற்றாய்
உன்னையுமுன் னருமையையு முன்மோயின்
வருத்தமுமொன் றாகக் கொள்ளாது
என்னையும்என் மெய்யுரையும் மெய்யாகக்
கொண்டுவனம் புக்க எந்தாய்
நின்னையே மகனாகப் பெறப்பெறுவேன்
ஏழ்பிறப்பும் நெடுந்தோள் வேந்தே . 9

739 
தேன்நகுமா மலர்க்கூந்தல் கௌசலையும்
சுமித்திரையும் சிந்தை நோவ
கூனுருவில் கொடுந்தொழுத்தை சொற்கேட்ட
கொடியவள்தன் சொற்கொண்டு இன்று
கானகமே மிகவிரும்பி நீதுறந்த
வளநகரைத் துறந்து நானும்
வானகமே மிகவிரும்பிப் போகின்றேன்
மனுகுலத்தார் தங்கள் கோவே . 10

740
ஏரார்ந்த கருநெடுமால் இராமனாய்
வனம்புக்க அதனுக் காற்றா
தாரர்ந்த தடவரைத்தோள் தயரதன்றான்
புலம்பியஅப் புலம்பல் தன்னை
கூரார்ந்த வேல்வலவன் கோழியர்கோன்
குடைக்குலசே கரஞ்சொற் செய்த
சீரார்ந்த தமிழ்மாலை யிவைவல்லார்
தீநெறிக்கண் செல்லார் தாமே . .11


எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

741 
அங்கணெடு மதிள்புடைசூ ழயோத்தி யென்னும்
அணிநகரத் துலகனைத்தும் விளக்கும் சோதி
வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய்த் தோன்றி
விண்முழுது முயக்கொண்ட வீரன் றன்னை,
செங்கணெடுங் கருமுகிலை யிராமன் றன்னைத்
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
எங்கள்தனி முதல்வனையெம் பெருமான் றன்னை
என்றுகொலோ கண்குளிரக் காணு நாளே . 1

742 
வந்தெதிர்ந்த தாடகைதன் உரத்தைக் கீறி
வருகுருதி பொழிதரவன் கணையொன் றேவி
மந்திரங்கொள் மறைமுனிவன் வேள்வி காத்து
வல்லரக்க ருயிருண்ட மைந்தன் காண்மின்
செந்தளிர்வாய் மலர்நகைசேர் செழுந்தண் சோலைத்
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
அந்தணர்க ளொருமூவா யிரவ ரேத்த
அணிமணியா சனத்திருந்த வம்மான் றானே . 2

743 
செல்வரிநற் கருநெடுங்கண் சீதைக் காகிச்
சினவிடையோன் சிலையிறுத்து மழுவா ளேந்தி
வெவ்வரிநற் சிலைவாங்கி வென்றி கொண்டு
வேல்வேந்தர் பகைதடிந்த வீரன் றன்னை
தெவ்வரஞ்ச நெடும்புரிசை யுயர்ந்த பாங்கர்த்
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
எவ்வரிவெஞ் சிலைத்தடக்கை யிராமன் றன்னை
இறைஞ்சுவா ரிணையடியே யிறைஞ்சி னேனே . 3

744 
தொத்தலர்பூஞ் சுரிகுழல்கை கேசி சொல்லால்
தென்னகரந் துரந்துதுறைக் கங்கை தன்னை
பத்தியுடைக் குகன்கடத்த வனம்போய்ப் புக்குப்
பரதனுக்கு பாதுகமு மரசு மீந்து
சித்திரகூ டத்திருந்தான் றன்னை யின்று
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
எத்தனையும் கண்குளிரக் காணப் பெற்ற
இருநிலத்தார்க் கிமையவர்நே ரொவ்வார் தாமே . 4

745 
வலிவணக்கு வரைநெடுந்தோள் விராதைக் கொன்று
வண்டமிழ்மா முனிகொடுத்த வரிவில் வாங்கி
கலைவணக்கு நோக்கரக்கி மூக்கை நீக்கிக்
கரனோடு தூடணன்ற னுயிரை வாங்கி
சிலைவணக்கி மான்மரிய வெய்தான் றன்னைத்
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
தலைவணக்கிக் கைகூப்பி யேத்த வல்லார்
திரிதலால் தவமுடைத்தித் தரணி தானே . 5

746 
தனமருவு வைதேகி பிரிய லுற்றுத்
தளர்வெய்திச் சடாயுவைவை குந்தத் தேற்றி
வனமருவு கவியரசன் காதல் கொண்டு
வாலியைகொன் றிலங்கைநக ரரக்கர் கோமான்
சினமடங்க மாருதியால் சுடுவித் தானைத்
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
இனிதமர்ந்த அம்மானை இராமன் றன்னை
ஏத்துவா ரிணையடியே யேத்தி னெனெ . 6

747 
குரைகடலை யடலம்பால் மறுக வெய்து
குலைகட்டி மறுகரையை யதனா லேரி
எரிநெடுவே லரக்கரொடு மிலங்கை வேந்தன்
இன்னுயிர்கொண் டவன்தம்பிக் கரசு மீந்து
திருமகளோ டினிதமர்ந்த செல்வன் றன்னைத்
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
அரசமர்ந்தா னடிசூடு மரசை யல்லால்
அரசாக வெண்ணேன்மற் றரசு தானே . 7

748 
அம்பொனெடு மணிமாட அயோத்தி யெய்தி
அரசெய்தி அகத்தியன்வாய்த் தான்முன் கொன்றான்
றன்பெருந்தொல் கதைக்கேட்டு மிதிலைச் செல்வி
உலகுய்யத் திருவயிறு வாய்த்த மக்கள்
செம்பவளத் திரள்வாய்த்தன் சரிதை கேட்டான்
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
எம்பெருமான் றஞ்சரிதை செவியால் கண்ணால்
பருகுவோ மின்னமுதை மதியோ மின்றே . 8

749 
செறிதவச்சம் புகன்றன்னைச் சென்று கொன்று
செழுமறையோ னுயிர்மீட்டுத் தவத்தோ னீந்த
நிறைமணிப்பூ ணணியுங்கொண் டிலவணன் றன்னைத்
தம்பியால் வானேற்றி முனிவன் வேண்ட
திறல்விளங்கு மிலக்குமனைப் பிரிந்தான் றன்னைத்
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
உறைவானை மறவாத வுள்ளந் தன்னை
உடையோம்மற் றுறுதுயர மடையோ மின்றே . 9

750 
அன்றுசரா சரங்களைவை குந்தத் தேற்றி
அடலரவப் பகையேறி யசுரர் தம்மை
வென்று,இலங்கு மணிநெடுந்தோள் நான்கும் தோன்ற
விண்முழுது மெதிர்வரத்தன் தாமம் மேவி
சென்றினிது வீற்றிருந்த வம்மான் றன்னைத்
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
என்றும்நின்றா னவனிவனென் றேத்தி நாளும்
இன்றைஞ்சுமினோ வெப்பொழுதும் தொண்டீர் நீரே . 10

751 
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
திறல்விளங்கு மாருதியோ டமர்ந்தான் றன்னை
எல்லையில்சீர்த் தயரதன்றன் மகனாய்த் தோன்றிற்
றதுமுதலாத் தன்னுலகம் புக்க தீறா
கொல்லியலும் படைத்தானைக் கொற்ற வொள்வாள்
கோழியர்கோன் குடைக்குலசே கரஞ்சொற் செய்த
நல்லியலின் தமிழ்மாலை பத்தும் வல்லார்
நலந்திகழ்நா ரணனடிக்கீழ் நண்ணு வாரே . 11


குலசேகரப் பெருமாள் திருவடிகளே சரணம்!


***

குலசேகர ஆழ்வார்

    பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவரான குலசேகர ஆழ்வார், கொங்கு மண்டலத்தில் உள்ள கருவூர் திருவஞ்சிக்களத்தில் அவதரித்தவர். ஜன்ம நட்சத்திரம்: மாசி மாதம்- புணர்பூசம்.

    இவர் பாடி அருளிய ‘பெருமாள் திருமொழி’,  வைணவர்களின் பக்தி இலக்கியமான நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் முதலாயிரத்தில், 647- 751 பாடல்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அப்பாடலே மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

    திருமலை ஆண்டவன் சன்னிதியில் ஆண்டவனின் பவளவாயை எக்காலும் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டுமென்றும், அதற்காக தன்னை அவர் கோயில் வாசற்படியாகவே வைத்துக்கொள்ளவேண்டுமென்றும் குலசேகரர் மனமுருக வேண்டிக்கொண்ட பாசுரம் இது...

செடியாய வல்வினைகள் தீர்க்குந்திருமாலே
நெடியானே வேங்கடவா ! நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க்கிடந்துன் பவளவாய் காண்பேனே!

    இதனால் இன்றும் வெங்கடேசப் பெருமாளின் வாசற்படிக்கு  ‘குலசேகரப்படி’ என்ற பெயர் வழங்குகிறது.

    இவர் திருவேங்கடவனிடம் இவ்வாறு வேண்டிநின்றாலும் ஆண்டவன் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன் என்ற காரணத்தால் ஸ்ரீரங்கநாதன் கோயிலிலும் கர்ப்பகிருகம் முன்னிருக்கும் படி  ‘குலசேகரன்படி’ என்று அழைக்கப்படுவதைப் பார்க்கலாம்.



No comments:

Post a Comment