18/10/2021

கொன்றைவேந்தன் - விளக்கவுரை (பகுதி - 2)

 -பத்மன்


காண்க: பகுதி-1

***

கொன்றைவேந்தன்- 26

சந்ததிக்கு அழகு வந்தி செய்யாமை


விளக்கம்:

ஒரு பரம்பரையின் வழித்தோன்றல்களுக்கு எது அழகென்றால் தங்களுக்குள் சண்டை செய்யாமைதான் என்று அழகாகச் சொல்கிறார் ஔவையார்.

ஆனால் வந்தி என்பதற்கு மலடு என்ற பொருளை வருவித்துக்கொண்டு சந்ததிக்கு அழகு மலடின்றி இருத்தல் என்று பலர் பொருள் சொல்கிறார்கள். இது தவறு.

வந்தி என்பது பல பொருள் தரும் ஒரு சொல். வந்தனை, மங்கலப் பாடகன், பாணன், சூதன், புகழ்வோன், ஏணி, முரண்டு, சண்டை எனப் பல்பொருள் வந்திக்கு உண்டு.

ஆனால் எந்த அகராதியிலும் மலடு என்ற பொருள் அகப்படவில்லை. அப்படியே கிடைப்பினும் இவ்விடத்தில் ஏற்பதற்கில்லை. மலடு என்பது நாமே செய்துகொள்வதா? பிள்ளைப்பேறு இல்லாமை இயற்கையின் குறைபாடு. அதையா இங்கு ஔவையார் குறிப்பிடுகிறார்? இல்லவே இல்லை.

வந்தி என்பதற்கு முரண்டு பிடித்து ஒருவரோடு ஒருவர் சண்டையிடுதல் என்ற பொருளே இங்கு ஏற்கத்தகும். ஒரு சந்ததியினரான கௌரவரும் பாண்டவரும் தங்களுக்குள் சண்டையிட்டதால் அழிந்தார்கள். மகாபாரதப் போருக்குப் பின் யது குலத்தவருக்கும் அவ்விதமே நிகழ்ந்தது. அவர்கள் எல்லாம் வம்சத்தின் பெயரைக் கெடுத்தனர்.

ஆகையால்தான் ஒரு சந்ததிக்கு அழகு, பெருமை என்பது தங்களுக்குள் சண்டை செய்யாமல் ஒற்றுமையாக இருத்தலே என்கிறார் ஔவையார்.
 
***
கொன்றைவேந்தன் -27

சான்றோர் என்கை ஈன்றோட்கு அழகு.

விளக்கம்:

தம் பிள்ளைகள் சான்றோர் எனப் புகழும் வகையில் வாழ்வது அவர்களைப் பெற்றெடுத்த தாய்க்குப் பெருமை தருவதாகும்.

பொதுவாக பெற்றோருக்குப் பெருமை எனவும் எடுத்துக்கொள்ளலாம். எனினும் ஈன்றோளுக்கு என்றே ஔவையார் கூறியிருப்பதால் தாய்க்கே கூடுதல் பெருமை.

பத்து மாதம் வயிற்றிலே சுமந்து வலிதாங்கி பிள்ளைகளைப் பெற்றெடுப்பதோடு அதன்பின் பல மாதங்கள் பாராட்டிச் சீராட்டியும் இன்னல்களைத் தாங்கிக்கொண்டும் வளர்த்து ஆளாக்குபவள் தாய் தானே! ஆகையால் தம் மக்களைச் சான்றோர் எனக் கேட்பதில் தாய்க்கே பெருமை அதிகம்.

இதைத்தான்,

ஈன்றபொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்


-என வள்ளுவப் பெருந்தகையும் (திருக்குறள்- 69) சொல்லியிருக்கிறார்.

வள்ளுவர் மகனை மட்டுமே குறிப்பிட்டுள்ள நிலையில் பெண்பாற் புலவரான ஔவையார் இருபாலரையும் குறிக்கும்வகையில் சான்றோர் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்.

(மனிதன் என்று பொதுப்படையாகச் சொல்வது இருபாலரையும் குறிக்கும் என்பதைப் போல திருவள்ளுவர் மகன் என்று கூறியிருப்பதையும் இருபாலருக்கும் பொதுவாய் எடுத்துக்கொள்ளலாம்.)

சான்றோர் என்ற சொல்நுட்பம் வாய்ந்தது. அது அறிஞர் என்பதை மட்டுமே குறிப்பதல்ல. பண்பாளர், ஒழுக்கசீலர், உயர்ந்தோர், வழிகாட்டுவோர் எனப் பல பொருள்களை உள்ளடக்கியது. சான்று என்பது அத்தாட்சி, நிரூபணம், முன்மாதிரி, ஆதாரம் எனப் பல பொருள்தரும்.

ஆகவே தம் மக்கள் பிறருக்கு முன்மாதிரி என மெச்சத் தகுந்தவகையில் வாழ்கிறார்கள் என்பதே அவர்களை ஈன்று வளர்த்த தாய்க்குப் பெருமை தரும் என்கிறார் ஔவையார்.

***
கொன்றைவேந்தன்- 28

சிவத்தைப் பேணில் தவத்திற்கு அழகு.

விளக்கம்:

இறை நினைப்பில் திளைத்திருப்பது தவத்துக்கு அழகாகும் என்கிறார் ஔவையார்.

தவம் என்பது ஒன்றைக் குறித்துத் தீவிரமாகவும் உன்னிப்பாகவும் சிந்தித்து அதனை அடைவதற்குத் தொய்வின்றி முனைவதாகும்.

செய்க தவம் செய்க தவம் தவம் செய்தால்
எண்ணிய யாவும் எய்தலாம்

-என்கிறார் மகாகவி பாரதி.

இவ்வாறான தீவிர முயற்சியில் எல்லாம் வல்ல இறையை அடைவதற்கான தவம் மிகப் பெருமை படைத்ததாகும்.

மேலும் சிவம் என்பது பால்பாகுபாடற்ற பொதுச்சொல்.சிவ (சிவன்) என்பது ஆண்பால் இறைவனையும் சிவா (சிவை) என்பது பெண்பால் இறைவியையும் குறிக்கும். எனவே சிவம் என ஔவை கூறியிருப்பது எவ்விதப் பாகுபாடுமற்ற இறையாகும்.

அத்துடன் சிவம் என்பது நன்மை, மங்கலம், சீலம், விடுதலைக்கு (முக்திக்கு) விழைதல் எனப் பல பொருள் தரும்.

ஆகையால், தவம் இருப்போர் நன்மை, சீலம், மங்கலம், முக்திக்கு விழைதல் ஆகியவற்றைப் பேணுவது அழகாகும்; பெருமை தரும் எனவும் ஔவையின் உரைபொருள் கொள்கிறது..

***
கொன்றைவேந்தன்-29

சீரைத் தேடின் ஏரைத் தேடு.

விளக்கம்:

நன்மை வேண்டும் எனில் உழவுத்தொழிலுக்கு முக்கியத்துவம் கொடு என்கிறார் ஔவையார்.

எக்காலத்துக்கும் பொருத்தமான அறிவுரை இது. உழவு இல்லையேல் உலகம் இல்லை ‘வயிற்றுக்குச் சோறிடல்வேண்டும்- இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்’ என மகாகவி பாரதி சொன்னாரே, அதை நனவாக்குவதற்கு அடிப்படைத் தேவை, உழவுத்தொழிலே.

ஈகின்ற மனம் இருந்தாலும் கொடுப்பதற்குப் பொருள் வேண்டுமே! அதைக் கொடுப்பது உழவல்லவா! வேறு எந்தப் பொருளை ஆக்குவதற்கும் வேளாண் விளைபொருளே பெரிதும் மூலப்பொருளாகவும் இருக்கிறது. எனவே எவ்வகைத் தொழில்வளர்ச்சிக்கும் கூட ஏர்ப்பூட்டி நடத்துகின்ற உழவுத்தொழிலே ஆதாரம்.

அதனால்தான் ‘சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்’ என்றார் திருவள்ளுவர். எத்தனை வகைத் தொழில்களால் இவ்வுலகம் சுழன்றாலும் உழவுத்தொழிலை முன்னேவைத்து அதன் பின்னேதான் உலகம் இயங்குகிறது என்கிறார் குறள்நாயகர். அதைத்தான் ‘சீரைத் தேடின் ஏரைத்தேடு’ என்றுள்ளார் ஔவை.

அதேநேரத்தில் நுட்பமாகப் பார்த்தால், மற்றொரு அரிய பொருளையும் இது தருகிறது.

‘மதிப்பு வேண்டுமெனில் எழுச்சி பெறு’ என்பதே அந்த மேலான மற்றொரு உட்பொருள்.

சீர் என்பதற்கு நன்மை, செல்வம், மதிப்பு, சமம், அழகு, புகழ், பெருமை எனப் பலபொருள் உண்டு. அதுபோலவே ஏர் என்பதற்கு கலப்பை, உழவுமாடு, உழவுத்தொழில் என்பவை போக எழுச்சி என்ற மாற்றுப்பொருளும் உண்டு.

ஆக, ஒருவர் சமுதாயத்தில் மதிப்பும் புகழும் செல்வவளமும் பெற வேண்டுமெனில், அவர் மனஎழுச்சி, செயல்எழுச்சி, அறஎழுச்சி பெற வேண்டும் என அறிவுறுத்துகிறார் ஔவையார்.

***
கொன்றைவேந்தன்-30

சுற்றத்திற் கழகு சூழயிருத்தல்.

விளக்கம்: 

சுற்றத்தார் என்பதற்கு அழகு எத்தகைய நிலையிலும் ஒன்றுகூடி இருத்தலே என்கிறார் ஔவையார்.

சுற்றத்தார் என்போர் நம்மைச்சுற்றி இருப்பவர்கள். உறவினர்கள், நண்பர்கள், அண்டைவீட்டார் எனப் பலரும் சுற்றத்தாரே.

சுற்றம் என்பது புறத்தே காணும் நிலை மாத்திரமல்ல, அகத்தே காணும் நிலையுமாகும். அருகருகே இருந்தாலும் அன்பும் ஆதரவும் அற்று வாழுதல் சுற்றமாகுமா? தொலைவில் இருந்தாலும் தொலையாத நேசம் சுற்றந்தானே!

ஆகையால் சுற்றத்தார் என்போர், ஒருவரின் இன்பதுன்பங்களில் பங்கெடுத்து உறுதுணையாக இருப்பவர்களே ஆவர்.

அதனைத்தான் சுற்றம் என்பதற்குப் பெருமை சூழ இருத்தல்- ஒன்றுகூடி இருத்தல் என்கிறார் ஔவையார்.

***
கொன்றைவேந்தன்-31

சூதும் வாதும் வேதனை செய்யும்

விளக்கம்: 

வஞ்சமும் வீண்பிடிவாதமும் வேதனை தரக்கூடியவை என எச்சரிக்கிறார் ஔவையார்.

மகாகவி பாரதி இதனை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் ‘படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோ என்று போவான்’ என்று புதிய கோணங்கியாய் வந்து கூடுதலாய் எச்சரித்தார்.

சூது என்பது குயுக்தி, வஞ்சம், வஞ்சனை என்பதோடு சூதாட்டத்தையும் குறிக்கும்.

சூதாட்டத்தால் தான் இழக்கக் கூடாததையெல்லாம் இழந்து அவமானத்துக்கு ஆளானான் தருமன். ஆகையால் சூதாட்டம் கூடாது என ஔவை எச்சரிப்பதாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

வாது என்பது பிடிவாதத்தை மட்டுமின்றி சண்டை, வீண்வாக்குவாதம் ஆகியவற்றையும் குறிக்கும். இவையும் வேதனை தரக்கூடியவையே. பாண்டவர்களுக்கு சமாதானப்பேச்சில் 5 ஊர் என்ன, 5 வீடும்கூடத் தர மாட்டேன் என துரியோதனன் பிடித்த பிடிவாதமும், அதனால் எழுந்த சண்டையுமே மகாபாரதப் போர் என்ற மாபெரும் துயரத்துக்குக் காரணம்.

ஆகையால்தான் அடுத்தவருக்கு மட்டுமின்றி தனக்குமே சூதும் வாதும் வேதனை தரும்; எனவே அவற்றை ஒதுக்கு என்கிறார் ஔவையார்.

***
கொன்றைவேந்தன்- 32

செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும்.

விளக்கம்: 

நாம் செய்ய வேண்டிய தவத்தை மறந்தால் துன்பம் நம்மை ஆட்கொள்ளும் என எச்சரிக்கிறார் ஔவையார்.

தவம் என்பது ஆன்ம மேன்மைக்காக நாம் உடல், வாக்கு, செயல் ஆகியவற்றை வருத்தி மேற்கொள்ளும் பயிற்சி. நம்மை வருத்தி மேற்கொள்ளும் இப்பயிற்சியால் உடல், மனம், ஆன்மா மூன்றும் வலுப்பெறுகிறது. நோன்பு, தியானம், உடல்- மனக்கட்டுப்பாடு, தீர்த்த யாத்திரை ஆகிய அனைத்தும் தவத்தில் அடங்கும்.

கைதவம் என்பதற்கு அறியாமை எனச் சிலர் பொருள் சொல்கின்றனர். ஆனால் அதன் நுட்பமான பொருள் துன்பம், வஞ்சனை என்றே உள்ளது. நாம் செய்யக்கூடிய, செய்து வருகின்ற நெறிசார்ந்த தவத்தை மறந்தோமானால், செய்யத் தவறினோமானால், நம்மை துன்பம் ஆட்கொண்டு விடுவதோடு வஞ்சகமும் நம்முள் குடியேறி ஆட்சிசெய்யத் தொடங்கிவிடும்.

நான்கு நாள் குளிக்காத உடம்பே நாறிப்போகிறது. உடற்பயிற்சியைக் கைவிட்டால் உடல் உரமற்றுப் போகிறது. இப்படியிருக்க செய்தவமாகிய நெறிசார் பயிற்சியை மறந்தால் என்னவாகும்?

ஆகையால்தான் செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும் என எச்சரிக்கிறார் ஔவை மூதாட்டி.

ஒப்பு நோக்குக:

43. தெய்வம் சீறின் கைதவம் மாளும்

***
கொன்றைவேந்தன்-33

சேமம் புகினும் யாமத்து உறங்கு.
விளக்கம்: 

பாதுகாப்பாக வாழ வேண்டிய நிலை ஏற்பட்டாலும், நள்ளிரவு நேரத்தில் நிம்மதியாக உறங்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார் ஔவையார்.

சேமம் என்றால் பாதுகாவல், காவல், அரண், சிறைச்சாலை, சேமிப்பு, நலம் எனப் பலபொருள் உள்ளது. அபாயங்கள் சூழ்ந்திருக்கும் நிலையில் அரண், கோட்டை அல்லது கட்டுக்காவல் மிகுதியான இடத்தில் சென்று இருக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டபோதிலும் தூக்கத்துக்குரிய நள்ளிரவு நேரத்தில் கவலைகளை மறந்து அல்லது சற்றுநேரம் ஒத்திவைத்துவிட்டு நிம்மதியாக உறங்க வேண்டும். மனதுக்கும், உடலுக்கும் ஓய்வு வழங்கும் உறக்கம் என்பது ஊக்கம் தரும் மருந்து போன்றது. உரியநேரம் உறங்காவிடில் உடலியல், உளவியல் பிரச்னைகள் தோன்றும். கவலைகளை மறக்க தூக்கம் சரியாக இருக்க வேண்டும்.

உறக்கத்தையும், மறதியையும் தருகின்ற ஜேஷ்டாதேவி எனப்படும் மூத்தோள் வழிபாடே பழங்காலத்தில் இருந்தது. ‘உறங்குவது போலும் சாக்காடு’ என்றார் திருவள்ளுவர். ஒழுங்காக உறங்காவிட்டால்அதுவே சாக்காடாக ஆகிவிடும்.

ஆகையால் நள்ளிரவு உறக்கம் தவிர்க்கக் கூடாத அவசியம் என்கிறார் ஔவையார்.

அதேநேரத்தில், சேமம்புகினும் என்பதை காவல்வேலைக்குப் போனாலும் நள்ளிரவில் உறங்க வேண்டும் எனச் சிலர் பொருள் சொல்கின்றனர். யாராக இருந்தாலும் நள்ளிரவில் உறங்குதல் நல்லது. ஆயினும் காவல், பாதுகாவல் வேலையில் ஈடுபடுவோர் உறங்கினால் காரியம் கெட்டுவிடும். கொள்கைரீதியில் நள்ளிரவு உறக்கம் அவர்களுக்கும் தேவை என்றாலும் நடைமுறையில் சாத்தியமில்லை.எனவே அவர்களுக்கு இந்த அறிவுரை முழுமையாகப் பொருந்த இயலாது. அவர்களும்கூட பணியில்லாத நேரத்தில் யாமத்தில் உறங்குவது சேமம் தரும்.

***
கொன்றைவேந்தன்- 34

சைஒத்து இருந்தால் ஐயமிட்டு உண்.

விளக்கம்:

இழிவவென்னும் எண்ணம் விலகி இருக்குமானால், வறியவர்க்கு உணவளித்துவிட்டு உண் என்று உபதேசிக்கிறார் ஔவையார்.

போதுமான அளவு பொருள் இருந்தால் பிறருக்கு உணவளித்துவிட்டு உண் என்பதுபோல பலர் பொருள் சொல்கின்றனர். இதில் எனக்கு உடன்பாடில்லை. உயர்ந்த நீதி சொல்லும்ஔவையார், பசித்திருக்கும் பிறருக்கு உணவளித்துவிட்டு நீ உண் என்று சொல்லும்போது, அதற்கு முரணாக, முதலில் உன்பாட்டைப் பார்த்துக்கொள் என்றவகையிலா அறிவுறுத்துவார்?

ஆகவே மாற்றுப்பொருள் தேட வேண்டியுள்ளது.

சை என்பதற்கு அகராதியில் இழிவுக்குறிப்பு என்பதைத் தவிர வேறுபொருள் அகப்படவில்லை. ஒத்து என்பதற்கு விலகு என்ற பொருளும் உள்ளது.

எனவே சைஒத்து என்பதற்கு இழிவான எண்ணம் விலகியிருத்தல் என்பதே சரியான பொருளாக அமைகிறது. அதாவது நம்மிடம் இவர் பிச்சை எடுக்கிறார் என்ற இழிவான எண்ணம் நம் உள்ளத்தில் இருந்து விலகி இருக்கும்பட்சத்தில் வறியவர்க்கு தானம் அளித்துவிட்டு உண் என்றே இதற்குப் பொருள் கொள்ளத்தகும்.

ஐயமிட்டு உண்ணுதல் சிறப்பானது, அதைவிடச் சிறப்பானது தானமளிக்கும் நாம் உயர்வானவர், தானம் வாங்கும் இவர் தாழ்வானவர் என்ற இழிவான எண்ணம் விலகியிருக்க தானம் அளிப்பது.

ஆகையால்தான் இழிவெண்ணம் விலகியிருத்தலுக்கு முக்கியத்துவம் கொடுத்து சைஒத்து இருந்தால் ஐயமிட்டு உண் என்று மொழிந்துள்ளார் ஔவையார்.
***
கொன்றைவேந்தன்-35

சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்.

விளக்கம்:

முயற்சி உடையவர்கள் பொருளைப் பெறுவர் என்ற மிக உயர்ந்த தத்துவத்தை மிக நுட்பமாகக் கூறியுள்ளார் ஔவையார்.

சொக்கு என்ற சொல்லுக்கு உள்ள பல பொருள்களிலே வளைதல் என்ற பொருளும் ஒன்று. சொக்கவைப்பவன் அதாவது நம்மை வளையவைக்கும் அழகன் என்பதால் ஈசன் சொக்கன் ஆனார். வளைந்த உடல் கொண்டது என்பதால் குரங்குக்கு சொக்கு என்றும் பெயர் உண்டு.

ஔவையார் கூறியுள்ள சொக்கர் என்பதற்குப் பொருள், கடும் முயற்சிகளுக்கு உடலையும் உள்ளத்தையும் வளைப்பவர் என்பதே பொருத்தம். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? என்பதில் உள்ள வளைதல் இளமையிலேயே உரிய பயிற்சிகளை, முயற்சிகளை மேற்கொள்ளுதல் என்பதைக் குறிக்கிறது. கடுமையான முயற்சிசெய்து சாதிப்பவனை, வில்லாக வளைத்துவிட்டான் எனப் பாராட்டுகிறோம்.

அத்தம் என்பதற்கு அர்த்தம் என்றும் ஒருபொருள் இருக்கிறது. முடிவு, நிறைவு, பொருள் என்றும் பொருள்கள் உள்ளன.

ஆகவே, முயற்சி உடையவன் செல்வமாகிய பொருளைப் பெறுவான், வாழ்வின் நிறைவைப்பெறுவான், நல்முடிவை எய்துவான் என்ற பொருளில் தான் ’சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்’ என உரைத்துள்ளார் தமிழ் ஞானப்பழமான ஔவையார்.
***
கொன்றைவேந்தன்-36

சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்.

விளக்கம்:

சோம்பலால் முயற்சி செய்யாமல் இருப்பவர்கள் வாழ்க்கையில் மிகத் துயரங்களுக்கு ஆளாகி அழுது புலம்பிக் கொண்டிருப்பார்கள் என்று எச்சரிக்கிறார் ஔவையார்.

இது சாதாரணப் பார்வைக்கு வெளியே தோன்றும் கருத்து. இது சரிதான். அதேநேரத்தில் ஆழ்ந்து நோக்கினால், இதன் உட்பெருளில் யோகத்தின் பரமரகசியத்தை வெளிப்படுத்துகிறார் ஔவையார்.

சோம்பர் என்பது வேறேதும் உணர்ச்சிகளற்று இறைநினைப்பில் மூழ்கியிருக்கும் சிவயோகிகளை, சித்தர்களைக் குறிக்கும் சொல்.

தேம்புதல் என்பதற்கு வருந்துதல் என்பது தவிர மெலிதல், வலிகுறைதல் என்ற பொருள்களும் உள்ளன. யோகத்தில் திளைப்பவர்கள் உடலின் எடை குறைந்து, மெலிந்து வற்றலாய்க் காணப்படுவர். யோகநிஷ்டையிலும், வாழ்வின் நிறைவிலும் பூதஉடலற்ற ஆவிஉருவில் பெருவெளியில் மிதப்பர். திரிதல் என்பதற்கு மிதத்தல் என்ற இப்பொருள் தவிர மாற்றம்அடைதல் என்ற மற்றொரு பொருளும் உள்ளது. அதன்படி வேறு உணர்வற்று இறைநினைப்பிலேயே மூழ்கிக் கிடக்கும் தவயோகிகள், தமது உடலை மட்டுமின்றி தமது கர்மவினைகளையும் வருத்தி, நசிவடையச் செய்து தாம் – தனி என்ற நிலை திரிபுற்று இறையுடனேயே ஒன்றி இருப்பர் என்ற வேதாந்தக் கருத்து வெளிப்படுகிறது.

சோம்பர் இருப்பது சுத்தவெளியிலே
சோம்பர் கிடப்பது சுத்தவெளியிலே
சோம்பர் உணர்வு சுருதிமுடிந்திடஞ்
சோம்பர் கண்டாரச் சுருதிக்கண் தூக்கமே

-என இதனைத் தெளிவுறுத்துகிறார் திருமூலர்.

யோகிகள் இருப்பதும் மூழ்கிக் கிடப்பதும் தூய பெருவெளியிலே, அவர்களது உணர்வு வேதத்தின் முடிவான வேதாந்தத்திலே (வேதத்துக்கும் எட்டாத இடத்திலே என்றும் பொருள் கொள்ளலாம்) நிலைத்திருக்கும்.

ஆகையால் அவ்வேதத்தின் பாற்பட்டிருப்போர்தான் என்ற தனி நினைப்பையும் பிற நினைப்புகளையும் மறந்து இருப்பர். (வேதம் என்பது நாம் அறிவது. அதையும் தாண்டிய இடத்தை அடையும் யோகிகள் அறிதல் என்ற இந்நிலையையும் மறந்திருப்பர் எனவும் பொருள்).

இந்த யோக ரகசியத்தைத் தான் சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர் என ஔவையார் மொழிந்துள்ளார்.

ஆக, சாதாரண மக்களுக்கு சோம்பலின்றி முயற்சி செய் என்றும், ஆன்மிகத்தில் நாட்டம் உள்ளோருக்கு வேறு நினைவின்றி இறைநினைப்பில் ஒன்றப் பழகு என்றும் உபதேசித்துள்ளார் ஔவையார்.

***
கொன்றைவேந்தன்-37

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.

விளக்கம்: 

தந்தையின் சொல்லை மதித்து நடப்பதைவிட மிகச்சிறந்த மந்திரம் வேறு எதுவும் இல்லை என்கிறார் ஔவையார்.

மந்திரம் என்பது மனத்திரம். திரம் என்றால் வலிமை, உறுதி எனப் பொருள். மனத்தில் கருதுவதால், தொடர்ந்து உச்சரிப்பதால் எது நமக்கு வலிமையையும் உறுதிவாய்ந்த பாதுகாப்பையும் தருகிறதோ அதுவே மந்திரம். மனத்திறம் என்றும் சொல்லலாம். அவ்வகையில் மனத்துக்கு ஆற்றல் தருவது எனப் பொருள்படும்.

தமிழைப் போலவே சம்ஸ்கிருதத்திலும் மந்திரம் என்ற சொல் இதேபொருளைக் கொண்டுள்ளது.

“மனனாத் த்ராயதே இதிமந்த்ர:”

அதாவது மனத்தால் நினைப்பதாலேயே, நினைப்பவரை அனைத்து இன்னல்களிலிருந்தும் காப்பாற்றுவதால் மந்திரம் எனப் பெயர்பெற்றது.

மேலும் ‘மனனாத்தத்வ பதஸ்யத்ராயத இதிபயத:’ என்றும் மந்திரத்துக்கு விளக்கம் உண்டு. அதாவது, எவற்றின் தத்துவத்தை அதாவது உட்பொருளை அறிந்துகொண்டால், நாம் அனைத்துவிதமான அச்சங்களில் இருந்தும், துன்பங்களில் இருந்தும் காப்பாற்றப்படுவோமோ, அதற்கே மந்திரம் என்றுபெயர்.

தந்தை என்பவர் வாரிசுகளின் வளர்ச்சியில், மேன்மையில் உண்மையான அக்கறை காட்டுபவர். அவர் சொல்கின்ற வார்த்தைகள், ஆலோசனைகள் அவர்தம் மக்களுக்கு வழிகாட்டியாகவும் பாதுகாப்புக் கேடயமாகவும் ஆற்றல் தருவதாகவும் அமையும். தனது அனுபவத்தில் இருந்தும், தாம் அறிந்தவற்றில் இருந்தும், தந்தை உதிர்க்கும் வார்த்தைகள், பிள்ளைகளுக்கு தீயஅனுபவங்களைத் தவிர்ப்பதற்கும் நல்அனுபவங்களைத் துய்ப்பதற்கும் வழிகாட்டும்.

அதனால்தான் தந்தையின் சொல்லைவிட மிக உயர்ந்த மந்திரம் வேறு எதுவும் இல்லை என்கிறார் ஔவையார்.
 
***
கொன்றைவேந்தன்- 38

தாயிற் சிறந்தவொரு கோயிலுமில்லை.

விளக்கம்:


தாயை விடச் சிறந்த கடவுள் வாழும் ஆலயம் வேறு எதுவும் இல்லை என்கிறார் ஔவையார்.

கடவுள் உலகத்தைப் பெற்றெடுத்து உயிரினங்களைப் பேணிக் காக்கிறார். தாயார் நம்மைப் பெற்றெடுத்துப் பேணிக் காக்கிறார். இந்த உலகத்துக்கு நாம் வருவதற்கு முதற்காரணம் தாய். தாயின் கருவறையில்தான் உயிர் உருவாகி வளர்கிறது. உள்ளிருக்கும்போது தாயின் உணவே நமக்கும் உணவாகிறது. பிறந்தவுடன் தாயின் ரத்தமே நாம் அருந்தும் பாலாகச் சுரக்கிறது.அதற்குப் பின்னரும் அமுதோடு சேர்ந்து அன்னையின் அன்பும் நமக்கு ஊட்டப்படுகிறது.

பிள்ளைகளுக்குத் தெய்வமாய் விளங்கும் தாயைப் பிரதிபலிக்கும் வகையிலேயே கோயில் வடிவமைப்பும் திகழ்கிறது.

தாயின் பாதங்களே கோபுரங்கள். சீவனைச் சுமக்கும் தாயின் கருவறையே தெய்வம் குடியிருக்கும் கர்ப்பக்ருஹம்.

கோயில்கள் ஆன்மிகத்தோடு பாரம்பரியக்கலைகளையும் பாதுகாக்கும் பொக்கிஷங்கள். தாயும் அதுபோல நமக்கு ஜீவன் கொடுப்பதோடு பாரம்பரியக் கலைகள், அறிவையும் நமக்கு ஊட்டுகிறார்.

போர்க்காலங்களில் கோயில்கள் பாதுகாப்பு அரண்களாகவும், பஞ்சக்காலங்களில் உணவுதானியங்களை வழங்கிக் காப்பாற்றும் கிடங்குகளாகவும் செயல்பட்டுள்ளன. கோயில் வளாகங்கள் நீதிபரிபாலன சபைகளாகவும் விளங்கியுள்ளன. இதேபோல தாயாரும் குழந்தைகளைப் பாதுகாப்பவராகவும் போஷிப்பவராகவும் குழந்தைகளுக்குள் ஏற்படும் சச்சரவுகளை கருணையோடு தீர்ப்பவராகவும் விளங்குகிறார்.

ஆகையால் தாய் என்பவர் தெய்வம் உறையும் கோயில் போன்றவர். கோயில் இறைவனுக்காக மனிதன் வடிவமைத்த ஆலயம். தாயார் உயிரினங்களுக்காக இறைவனே வடிவமைத்த ஆலயம்.

அதனால்தான் தாயிற் சிறந்த ஒரு கோயிலும் இல்லை என நவில்கிறார் ஔவையார்.

***
கொன்றைவேந்தன் - 39

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு 


விளக்கம்: 

கடல் கடந்து சென்றேனும் பொருள் தேட வேண்டும் என்று அறிவுறுத்துகிறார் ஔவையார்.

திரவியம் என்பது பல பொருள் தரும் நுட்பமான சொல். செல்வம், சரக்கு, அரும்பண்டம், பொன், கலப்பு மருந்து, ஒன்றன் தன்மையான உட்பொருள், மூலப்பொருள் என அதற்குப் பல பொருள் உண்டு.
 
நாம் இருக்கின்ற இடத்திலேயே எல்லாப் பொருள்களும் கிடைத்து விடாது. சில பொருள்கள் வெளியிடங்களில், வெளி நாடுகளில்தான் கிடைக்கும். தேவைப்படுகின்ற அத்தகைய பொருள்களை அலை பாய்கின்ற கடலைக் கடந்து சென்றும்கூட கொண்டுவர வேண்டும் என்கிறார் ஔவையார்.

‘திரை’ என்றால்  ‘அலை’ என்று பொருள். அக்காலத்தில் வான்வழி வர்த்தகம் இல்லை. நிலம் மற்றும் கடல் வழியே தான் வர்த்தகங்கள் நடைபெற்றன. ஆகையால் கடல் கடந்த தொலைதூரப் பகுதியில் இருந்தாலும் நமது ஆக்கத்துக்குத் தேவையான பொருள்களை அந்த இடத்தில் இருந்தும் தருவிக்க வேண்டும் என்பது பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாதது. இதைத்தான் ஔவையார் அக்காலத்திலேயே அறிவுறுத்தியிருக்கிறார்.

மேலும், ‘பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை’ என்று திருவள்ளுவர் கூறியிருக்கிறார். ஆகையால் செல்வ உருவாக்கம் என்பது தனிமனிதனுக்கும் நாட்டுக்கும் மிக மிக அவசியம். இதனை உணர்ந்துதான், கடல் கடந்து சென்று வர்த்தகம், தொழில் புரிந்துகூட செல்வ வளத்தை உருவாக்குக என்று கட்டளையிடுகிறார் ஒவையார்.
 
இன்று நம்மில் பலர், திரைகடல் ஓடி திரவியம் தேடும் செயலைத்தான் செய்து கொண்டிருக்கிறோம்.

இந்தக் கொன்றைவேந்தன் அறவுரையில், அறத்தின்பாற்பட்ட கருத்தும் பொதிந்துள்ளது.  ‘திரை’ என்றால்  ‘மறைப்பு’ என்றும் பொருள் உண்டு. கடல் என்பது வாழ்க்கைக் கடல் அதாவது சம்சார சாகரத்தைக் குறிக்கும். மாயை எனப்படும் அறியாமையால் மறைக்கப்பட்டிருக்கும் இந்தப் பிறவிக் கடலில் பல முறை அல்லாடினாலும்கூட, அதன் உட்பொருளான இறையை உணர்ந்து, அதனை அடைவதற்கான முயற்சியை மேற்கொள் என்கிறார் ஔவையார்.

ஆகையால்,  ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’என்ற ஔவையின் இந்த ஒற்றையடிப் பா, சாதாரணப் பார்வைக்கு கடல் கடந்தும் செல்வம் தேடு என்ற பொருளையும், நுட்பமான பார்வைக்கு பிறவிக் கடலில் நீந்தினாலும் இறையருளைத் தேடு என்ற உட்பொருளையும் தருகிறது.

***
கொன்றைவேந்தன்- 40

தீராக் கோபம் போராய் முடியும்.

விளக்கம்: 

கோபத்தைத் தணிக்காமல் வளர்த்துக்கொண்டே இருந்தால் அது பெரிய போரில் போய்த்தான் முடியும் என்று எச்சரிக்கிறார் ஔவையார்.

கோபம் ஏற்படுவது மனித இயல்பு. ஆனால் அதற்குத் தீர்வு காணாமல் வளரவிடுவது நமது மனநிலையைப் பாதிப்பதோடு நல்ல சூழ்நிலையையும் பாதிக்கும். கோபம் நமது சிந்தனை ஆற்றலை மழுங்கடித்து தவறான முடிவுகளை எடுக்க வழிவகுக்கும்.

தீராக் கோபமானது, ஒரு தீப்பொறி பல இடங்களில் பற்றுவதைப் போல, ஓரிடத்தில் இருந்து வேறு இடங்களிலும் வேறு மனிதர்களிடமும் பாய்ந்து பகையை ஏற்படுத்தும். இதன் விளைவு, மிகப் பெரிய சண்டையில் போய் முடியும்.

பீமன் மீதும் அர்ச்சுனன் மீதும் எழுந்த சிறுவயது கோபத்தை கௌரவர்கள் தணிக்காததால் பாண்டவர்களோடு பகைமூண்டு மிகப்பெரிய மகாபாரத யுத்தம் என்ற சர்வநாசத்தில் போய் முடிவடைந்தது. இதேபோல பாண்டவர்கள் மீது அஸ்வத்தாமன் கொண்டிருந்த தீராக்கோபம் சிறுகுழந்தைகளான உபபாண்டவர்கள் உட்பட பலரையும் அநியாயமாக இரவுநேரத்தில் படுகொலை செய்யவைத்து படுபாதகன் என்ற தீராப்பழியை மாவீரனும் சிரஞ்சீவியுமான அவனுக்குக் கொடுத்தது.

இதே ஔவையார் ஆத்திசூடியில் ‘ஆறுவது சினம்’ என்று மென்மையாகவும் அறிவுறுத்துகிறார். பழத்துக்காக கோபம்கொண்டு முருகப்பெருமான் பழநிமலை மீது நின்றபோது ஔவையார் அவரைப் பாடிப் பரவசப்படுத்தி கோபத்தைத் தணித்தார் என்று கூறப்படும் நாட்டுப்புற ஆன்மிகக்கதையில் கூட ஔவை, கோபத்தைத் தணித்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறார்.

தணியாமல் நீடிக்கும் தீராக்கோபம்தான் நாடுகள் இடையேயான போருக்கும், பிரிவினைகளுக்கும், பயங்கரவாதப் பாதகங்களுக்கும் காரணமாக அமைகிறது. கொடுங்கோலர்களும் சர்வாதிகார்களும் மதவெறியர்களும் உருவாவது தீராக்கோபத்தால்தான். மனித சமுதாயத்துக்குப் பேரழிவைத் தரும் போரைத் தூண்டுவது இத் தீராக்கோபமே.

ஆகையால்தான் கொன்றைவேந்தனில் சற்று கடுமை கூட்டி தீராக் கோபம் பேராய் முடியும் என எச்சரிக்கிறார் ஔவையார்.

***
கொன்றைவேந்தன்- 41

துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு.

விளக்கம்: 

நுண்ணுணர்வு இல்லாத பெண்கள் தங்கள் மடியிலே நெருப்பை வைத்துக்கொண்டிருப்பதைப் போல அவதிப்பட நேரிடும் என எச்சரிக்கிறார் ஔவையார்.

துடிப்பு என்பது பரபரப்பு, சினம், உடலில் உயிர்ப்பு இருப்பதை உணர்த்தும் நாடித்துடிப்பு, நுட்பமான உணர்வு ஆகிய பொருள்களைத் தருகிறது. ஒரு பாதிப்புக்கு உடனடியாக ஆற்றும் எதிர்வினை என்றும் பொருள்.வலியால் துடிப்பது, நாட்டுக்குச் சூழ்ந்திருக்கும் ஆபத்தை நினைத்துத் துடிப்பது ஆகியவை இந்த நுண்ணுணர்வே.

இயற்கையாகவே இடர்கள் கூடுதலாக உள்ள மகளிருக்கு நுண்ணுணர்வும் முன்னெச்சரிக்கையும் கலந்த துடிப்பு இருக்க வேண்டும். ஒருவன் பார்க்கும் பார்வையிலேயே அவன் எந்த நோக்கோடு பார்க்கிறான் என்பதை அறிந்து எதிர்வினையாற்ற வேண்டும். சீற வேண்டிய இடத்திலே சீறியாக வேண்டும். அதற்கு இந்தத் துடிப்பு அவசியம். அவ்வாறான நுண்ணுணர்வு இல்லாத பெண்கள் தங்கள் மடியிலேயே நெருப்பைக் கட்டிக்கொள்வதைப் போலஅபாயத்தைச் சுமந்து செல்வார்கள். அதுமட்டுமல்ல, அவர்களது பெற்றோரும், கணவனும், குடும்பத்தாருமே மடியில் நெருப்பைப் போன்ற துயரத்துக்கு ஆட்படுவார்கள்.

துடிப்பு இருக்கும் பெண்களுக்கு மனஉறுதியும் வலிமையும் தானே வந்து சேரும்.

ஆகையால்தான் பெண்களுக்கு துடிப்பு வேண்டும் என்பதை வலியுறுத்தவே எதிர்மறையாக துடியாப் பெண்கள் மடியில் நெருப்பு என எச்சரிக்கிறார் ஔவையார்.

***
கொன்றைவேந்தன்- 42

தூற்றம் பெண்டிர் கூற்றெனத் தகும்.

விளக்கம்: 

பெண்களைத் தூற்றுதல் அழிவை உருவாக்கிவிடும் என அறிவுறுத்துகிறார் ஔவையார்.

ஆனால், இழிசொற்களைச் சொல்லும் பெண்கள் எமனுக்கு ஒப்பாவர் எனச் சிலர் பொருள் கூறுகின்றனர். அவ்வாறெனில் ஆண்கள் இழிசொற்களைக் கூறுவது ஏற்றம் தருமா?

தூற்றம் பெண்டிர் என்றுதான் ஔவையார் கூறியிருக்கிறார். தூற்றும் பெண்டிர் எனக் கூறவில்லை என்பதை உற்றுநோக்க வேண்டும்.

தகர வரிசையில் கொன்றைவேந்தனை அடுக்கிச் சொல்லும்போது வரிசைப்படி து எனத் தொடங்கும் சொல்லுக்குப்பின் ‘தூ’ எனத் தொடங்கும் சொல் வர வேண்டும் என்பதால் தூற்றம் என்பதை முன்னே சொல்லி ஆரம்பித்திருக்கிறார் ஔவையார். ஆகையால் பெண்டிரைத் தூற்றுதல் என்பது அழிவுக்கு வழிவகுக்கும் என்றுதான் பொருள் கொள்ளத்தகும்.

‘தையலைஉயர்வுசெய்’ என்று புதிய ஆத்திச்சூடியில் புகழ்ந்து பாடினான் மகாகவி பாரதி. அந்த மகாகவிக்கு உத்வேகமாகவும் உள்ளங் கவர்ந்த ஆசானாகவும் திகழ்பவர் ஔவையார். அப்படிப்பட்ட பெண்பாற் புலவரான ஔவையார் கூறிய பல கருத்துகளுக்கு, பெண்குலத்தை இழிவுசெய்வதைப் போல திரித்துப் பொருள் கூறுவது வேதனை அளிக்கிறது. அத்தகைய திரிந்த பொருள் கொள்வதால், இந்தக் கொன்றைவேந்தன் அடியும் அடிவாங்கியுள்ளது.

தூற்றம் என்பது அபவாதம் பேசுதல், குற்றச்சாட்டுகளைச் சுமத்துதல், இழிவாகப் பேசுதல் எனப் பல்வேறு பொருள் தருகிறது. ஆகையால், பெண்களை மனம்போன போக்கில் இழிவுசெய்து பேசுதல், குறை கூறுதல் ஆகியவை அந்த நபருக்கோ, அந்தக் குடும்பத்துக்கோ, அந்த சமுதாயத்துக்கோ அழிவைத் தந்துவிடும் என்று ஔவையார் எச்சரிக்கிறார் என்றே இதற்குப் பொருள் கொள்ள வேண்டும்.

***
கொன்றைவேந்தன்- 43

தெய்வம் சீறின் கைதவம் மாளும்.

விளக்கம்:

தெய்வம் சீற்றம் கொண்டால் வஞ்சனைக்கு முடிவு கட்டப்படும் என்று அழுத்தம் திருத்தமாக உரைக்கிறார் ஔவையார்.

கைதவம் என்றால் வஞ்சனை, கபடம், சூது என்று பொருள். தெய்வம் கருணைக்கடல், மிகவும் பொறுமையானது. ஆயினும் உலகில் வஞ்சகக் கொடுமை மிகுந்துகொண்டே வந்தால், அந்த அசுரத்தனத்துக்கு முடிவுகட்ட தெய்வம் அறச்சீற்றத்தோடு பேரச்சம் தரும் உருவில் தோன்றும். அப்போது வஞ்சனை அழியும்.

‘தெய்வம் நின்று கொல்லும்’ என்பது மூத்தோர்மொழி. எடுத்த எடுப்பிலேயே தீமைக்கு அழிவை தெய்வம் தந்துவிடாது. தவறு செய்தவர்கள் திருந்த இடம் கொடுக்கும். தவறு செய்தவர்களை சான்றோர்கள் திருத்தவும் அவகாசம் கொடுக்கும். ஆனால், இவற்றையெல்லாம் தாண்டி, நல்லவர்கள், அப்பாவிகளின் எண்ணிக்கை நசிந்து, வஞ்சகர்கள், தீயவர்களின் எண்ணிக்கை மிகும்போது தெய்வம் சீற்றம் கொள்ளும். அந்தச் சீற்றத்தீயில் தீமை பொசுங்கும்.

அதிலும் விஷயம் தெரியாதவர்கள் தவறு செய்யும்போது தெய்வம் மிகவும் பொறுத்திருக்கும்.ஆனால் நன்கு சிந்திக்கத் தெரிந்தவர்கள் தவறு செய்யும்போதுதான் தெய்வத்துக்கு ஆத்திரம் பொத்துக்கொண்டு வரும். வஞ்சனை என்பது அறிவற்றவர்கள் செய்கின்ற தவறோ, தெரியாமல் செய்துவிடுகின்ற குற்றமோஅல்ல. இதுபாவம், இது பிறருக்குத் துன்பம் விளைவிக்கும் என்று தெரிந்தே, தங்களது சுயலாபத்துக்காகவோ அல்லது குரூர மனப்பான்மையாலோ செய்கின்ற குற்றங்கள்தான் வஞ்சனை எனப்படுகிறது. கொள்ளை லாபமடித்தல், படுகொலைகள் செய்தல், நம்பிக்கைத் துரோகம் செய்தல், ஏமாற்றுதல், அப்பாவிகளைத் துன்புறுத்துதல், சாதி-மதவெறியால் கொடுமை இழைத்தல், அரசியலுக்காக பொய்ப்பித்தலாட்டம் செய்தல், இனத்துவேஷம் கொள்ளுதல் போன்றவை வஞ்சனைகளாகும். இவை மிகும்போது தெய்வம் சீறி அவற்றை மாய்க்கும். இதனைத்தான், மகாகவி பாரதி, ‘படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோவென்று போவான்’ என்று நவீனக் கோணங்கியாக எச்சரித்துள்ளார்.

வஞ்சகம் மிகுவதால் கோபம் கொள்ளும் தெய்வம், எந்த வடிவிலும் வரும். புராணங்களில் கூறப்படுவதைப் போன்ற அதீதமானுட உருவில்தான் தெய்வம் வர வேண்டும் என்பதில்லை. சராசரி மானுடர் போன்றோ அல்லது நினைத்துப் பார்க்க இயலாத எந்தவொரு வடிவத்திலோ தெய்வம் வந்து, தீயவர்களையும் தீமையையும் துடைத்தெறியும்.

இதனைத்தான், தெய்வம் சீறின் கைதவம் மாளும் என்று ஊசி தைத்தாற்போல நறுக்கெனச் சொல்லிவைத்துள்ளார் ஔவையார்.

ஒப்பு நோக்குக:

32. செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும்.

***
கொன்றைவேந்தன்- 44

தேடாது அழிக்கின் பாடாய் முடியும்.

விளக்கம்:

வாழ்வின் நிறைவாகிய இறையைத் தேடாது இந்த வாழ்வை அழிக்கின் பல பிறவிகளை எடுத்துத் துன்புறும் பாடு அதாவது அல்லலாக நம் வாழ்க்கை முடியும் என எச்சரிக்கிறார் ஔவையார்.

இந்தப் பிறவி என்பது இறைவன் நமக்கு வைத்துள்ள சோதனை; ஒரு தேர்வு. இந்தத் தேர்விலே நாம், வாழ்வின் அர்த்தம் என்ன என்பதை, இதற்கு விடையாகிய விடையேறும் பெருமானாம் இறைவனைத் தேடி அடைய வேண்டும். அதுவே நமது பிறவிப்பிணிக்கு விடையாக நிம்மதி தரும் நிறைவாக அமையும். இல்லையேல் சம்சார சாகரத்தில் உழன்றுகொண்டே இருக்க வேண்டியதுதான். இதனைத்தான்,

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடிசேராதவர்

-என்றார் திருவள்ளுவப் பெருமான் (திருக்குறள்- 10).

அதேநேரத்தில் இகவாழ்வுக்கு ஏற்ற மற்றொரு பொருளையும் இது தருகிறது. செல்வத்தைத் தேடாமல், இருக்கின்ற செல்வத்தை அழித்தால் துன்பமாக முடியும் என்பதே அப்பொருள்.

அருளில்லார்க் கவ்வுலக மில்லை பொருளில்லார்க்
கிவ்வுலக மில்லாகி யாங்கு

-என வள்ளுவப் பெருந்தகை ஈரடியில் (திருக்குறள்- 247) கூறியதை ஔவைப் பிராட்டியார் ஓரடியில் உரைத்துள்ளார்.

ஆக, இவ்வுலக வாழ்வுக்கான பொருட்செல்வத்தையும் அழித்திடாமல் தேடிச்சேர்க்க வேண்டும், இறைவனோடு இரண்டறக் கலப்பதற்கு வழிவகுக்கும் அவ்வுலக வாழ்வுக்கான அருட்செல்வத்தையும் அழித்திடாமல் மென்மேலும் தேடிச்சேர்க்க வேண்டும் என்று ஔவையார் அறிவுறுத்துகிறார்.

***
கொன்றைவேந்தன்- 45

தையும் மாசியும் வையகத்து உறங்கு.

விளக்கம்:

தை, மாசி ஆகிய மாதங்களில் வைக்கோல் குடிலில் உறங்கு என்கிறார் ஔவையார்.

தை முன்பனிக்காலம் முடியும் மாதம். மாசி பின்பனிக்காலம் தொடங்கும் மாதம். இந்த இரு மாதங்களிலுமே குளிர் மிகஅதிகமாக இருக்கும். 

‘வை’ என்றால் வைக்கோல் எனப் பொருள். அகம் என்றால் வீடு. எனவே வையகம் என்பது வைக்கோல் கூரை வேய்ந்த வீடு. வைக்கோல் என்பது குளிரை அண்டவிடாமல் கதகதப்பாக வைக்கும். அக்காலத்திலே ஓட்டுவீடும், வைக்கோல்வீடுமே அதிகம். இதிலே ஓட்டுவீடுகூட குளிரை உள்நுழைய விடும். வைக்கோல்வீடு குளிரை உள்நுழைய விடாது. ஆகையால் சுற்றுச்சூழல் அறிவுறுத்தலாக தை, மாசி ஆகிய மாதங்களில் வைக்கோல் குடில்களில் குடியிருக்குமாறு ஔவையார் கூறுகிறார் எனலாம்.

அதேநேரத்தில் நுட்பமான வேறுபொருள்களும் உள்ளன. தைமாதம் அறுவடை மாதம். அப்போது அறுவடைப் பணிகளுக்காக வயல்களில் வைக்கோல் வேயப்பட்ட குடில்களில்தான் தங்க நேரிடும். இந்த அறுவடைப்பணிகள் அடுத்த மாதமான மாசியிலும் நீடிக்கலாம். ஆகையால் குளிருக்கு அடக்கமாகவும் அறுவடைப் பணிகளுக்காகவும் வைக்கோல் குடில்களில் தங்குமாறு ஔவையார் கூறுவதாக எடுத்துக்கொள்ளலாம்.

வைக்கோல் என்பதற்கு கூண்டுவண்டி, ஊர்தி, பல்லக்கு, விலங்குகள் இழுக்கும் வண்டி என்றும் பொருள் உள்ளது.

தைமாதம் அறுவடைமாதம் என்பதால் கையிலே காசு புழங்கும். சூரியன் உத்தராயண புண்யகாலம் என்ற ஒளிமிகும் வடதிசைப் பயணத்தைத் தொடங்கும் புனித மாதம் தை. அடுத்த மாதமான மாசி, சிவராத்திரியும், மாசிமகமும் கொண்டாடப்படும் மாதம். தீர்த்த யாத்திரைக்கும், புனித நீராடலுக்கும் உகந்த மாதம். ஆகையால் புனிதமான தை, மாசி ஆகிய மாதங்களில் புனிதத்தலங்களுக்கு, புனித நீராடலுக்குச் செல்லப் பயணம் மேற்கொள்ளுதல் மரபு.

அக்காலத்தில் மாட்டுவண்டி, குதிரைவண்டி, பல்லக்கு ஆகியவற்றில்தான் பயணம் மேற்கொள்வது வழக்கம். அப்போது பாதுகாப்புக்காகவும், குளிருக்கு அடக்கமாகவும் இரவுநேரத்தில் இத்தகைய வண்டிகளில்தான் உறங்க நேரிடும்.

இதைக் கருத்தில் கொண்டே தை, மாசி ஆகிய மாதங்களில் புனிதப்பயணம் மேற்கொள் என்பதைக் குறிக்கும்வகையில் வையகத்து உறங்கு என்று ஔவையார் கூறுவதாகவும் பொருள் கொள்ளலாம்.

***
கொன்றைவேந்தன்- 46

தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது.

விளக்கம்:

பிறரை எதிர்பார்த்து அவர்களை வணங்கியும் தொழுதும் உண்ணக்கூடிய நிலையைவிட தானே கடுமையாக உழைத்து உண்பதே இனிமைதரக் கூடியது என்கிறார் ஔவையார்.

பிறரிடம் சேவகம் செய்து அதில் கிடைக்கும் ஊதியத்தில் உண்பதைவிடத் தானே உழுது உணவு விளைவித்து அதில் உண்பது இனிமையானது என்று ஔவையார் அறிவுறுத்துவதாக பொதுவாக பொருள் கூறப்படுகிறது.

உழுதுஊண் என்பதால் உழவுத்தொழிலில் ஈடுபட்டு, பிறருக்கும் உணவளித்து தானும் உண்பதற்கு வழிவகுக்கும் உழவு இனிமையானது எனக் கூறுவதும் தகுமே. சுயதொழில் செய்வதையும் இந்த ரகத்தில் சேர்க்கலாம். ஆனால் மாறிவரும் காலச்சூழலில் உழவுத்தொழிலும் சுயதொழிலும் கடுமை நிறைந்தவையாக உருவெடுத்து வருகின்றன. இருப்பினும் அவற்றை மீறி மனநிறைவைத் தருகின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை.

மறுபுறத்தில் பிறரிடம் பணிந்து ஊழியம் புரிகின்ற நிலையே இன்று பலருக்கும் உள்ளது. ஔவையார் கூற்றின் நோக்கம் அவர்களைப் பழிப்பது அல்ல. என்னதான் உயர்ந்த வேலையாக இருந்தாலும் பிறருக்குப் பணிய வேண்டியிருப்பதால் அதனைவிட உழவுத்தொழில் மேலானது என்று எடுத்துக்கொள்ளலாம். ஆயினும் எல்லோருக்கும் இது சாத்தியமல்ல.

அப்படியானால் ஔவை கூறுவதன் உண்மைப்பொருள் தான் என்ன?

தொழுதுஊண் என்பதற்குப் பிறரின் காலில் கையில் விழுந்து, அடிமைபோலக் கிடந்து அவர்கள் தயவில் அவமானப்பட்டு உண்ணும் வாழ்க்கை என்பதே பொருளாகத் தெரிகிறது. இதிலே சொகுசுவாழ்க்கை என்ற சுவை கிடைத்தாலும்கூட அது இனிமையல்ல. அதேபோல உழுது என்பது வெறும் உழவுத்தொழிலை மட்டும் குறிக்கவில்லை. கடுமையாகப் பாடுபடும் அனைத்துவகை உழைப்பையும் குறிக்கிறது. அந்தக் கடினவாழ்க்கையில் மானத்தோடு வாழ்வதால் அது இனிமையானது.

எனவே பிறரைத் தொழுது வாழும் சொகுசு வாழ்வின் சுவையைவிட, பாடுபட்டு உழைத்து வாழும் கடின வாழ்வு இனிமையானது என்றே ஔவையார் கூறுகிறார்.

***
கொன்றைவேந்தன்- 47

தோழனோடும் ஏழைமை பேசேல்.

விளக்கம்:

நெருங்கிய நண்பர்களோடும்கூட அறியாமையோடு பேசாதே என அறிவுறுத்துகிறார் ஔவையார்.

ஏழைமை என்பதற்கு வறுமை என்ற பொருளும் உண்டு. அதன் அடிப்படையில், நமது நண்பர்களிடத்தும் நமது வறுமைநிலை குறித்துப் பேசக்கூடாது எனப் பொதுவாகப் பெருள் சொல்லப்படுகிறது. இதுதவறல்ல. ஆனால் முழுமையானதாக இல்லை.

ஏழைமை என்பதற்கு பேதைமை என மற்றொரு பொருள் உண்டு. பேதைமை என்றால் அறியாமை, அறிவீனம் எனப் பொருள்.

ஆகையால் நம்மிடம் நெருங்கிப் பழகும் நண்பர்கள்தானே என்ற நினைப்பில் அவர்களிடம் முன்பின் யோசியாமல் அறிவீனமாகப் பேசிவிடாதே என எச்சரிக்கிறார். இல்லையேல், பின்னர் துயரங்களுக்கு ஆளாக நேரிடலாம். உற்ற தோழராக இருந்தாலும் அவர்களிடமும் முன்னெச்சரிக்கையோடு அறிவுப்பூர்வமாகப் பேசுவதே உத்தமம்.

நமது வறுமையைப் பிறரிடம் பறைசாற்றுவதும் ஒருவகையில் அறிவீனமே. அதேபோல நமது இதர குறைபாடுகளையும் அறிவீனமாகப் பேசிவிடுவது ஆபத்தானதே.

எனவே, நண்பர்களிடமும் அறிவீனமாகப் பேசாதே என்பதே "தோழனோடும் ஏழைமை பேசேல்" என்ற ஔவையின் வாக்குக்குச் சரியான பொருளாகத் தோன்றுகிறது.

***
கொன்றைவேந்தன்- 48

நல்லிணக்கம் அல்லது அல்லல்படுத்தும்.

விளக்கம்:

நல்லிணக்கம் இல்லாத நிலைமை துன்பங்களை ஏற்படுத்தும் என்கிறார் ஔவையார்.

நல்லிணக்கம் என்பது வேண்டாவெறுப்பாகவோ வேறுவழியின்றியோ இணங்கி வாழ்வதல்ல. இயல்பான நல்லெண்ணத்தோடு ஒருவரையொருவர் மதித்து, அன்பு பாராட்டி இணங்கி வாழ்வதே நல்லிணக்கம் எனப்படுகிறது.

இந்த நல்லிணக்கமானது பிரச்னைகளுக்கு எளிய தீர்வு காணவும் மகிழ்ச்சியோடு வாழவும் உதவுகிறது. நல்லிணக்கம் இல்லாத இடத்தில் பிணக்குகள் தோன்றி, பகையாய் மாறி, போராய் உருவெடுத்துத் துயர்படுத்தும்.

தனிநபர்கள் இடையேயும் குடும்பம், குடியிருப்பு, தெரு, ஊர், மாநிலம், நாடு- ஏன், உலகம் தழுவிய நிலையிலும் நல்லிணக்கம் இருப்பது அவசியம். அது முறையாக இல்லாததால்தான் நாம் வாழ்வில் பல அல்லல்களை அனுபவிக்கிறோம்.

ஆகையால் அல்லல்கள் இன்றி ஆனந்தமாய் வாழ நல்லிணக்கம் அவசியம் என்பதையே எதிர்மறையாக எச்சரித்து அறிவுறுத்துகிறார் ஔவையார்.

***
கொன்றைவேந்தன்- 49

நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை.

விளக்கம்:

நாடு முழுவதுமே வாழ்வதற்குரிய செழிப்போடும் பாதுகாப்போடும் இருந்தால் அந்நாட்டுக்குக் கேடு ஒன்றும் இல்லை என்கிறார் ஔவையார்.

பாரதம் போன்ற மிகப்பரந்த நாட்டுக்கு எக்காலமும் பொருந்தி வருகின்ற நன்மொழி இது.

நாட்டின் வளத்துக்கு ஆதாரமான வளங்கள் அனைத்தும் அனைத்து இடங்களிலும் கிடைத்துவிடாது. சில பொருட்கள் சில இடங்களில் மட்டுமே விளையும், உற்பத்தியாகும். ஆனால் நாட்டின் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு அப்பொருட்கள் தங்குதடையின்றி விநியோகம் ஆகுமானால் நாடு முழுவதுமே செழிக்கும்.

அதேபோல தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை ஆதாரங்களும் சீராகவி நியோகிக்கப்பட வேண்டும். ஓரிடத்தில் தோன்றி பல இடங்களுக்கும் பாய்கின்ற தண்ணீரை தோன்றும் இடத்தில் மட்டுமே சொந்தம் கொண்டாடுவது பிற பகுதிகளை வாழத் தகுதியற்றதாக்கிவிடும். ஓரிடத்தில் விளையும் பண்டங்கள் பிறப குதிகளுக்குப் போகாமல் முடங்கினாலும் இன்னல் உருவாகும். ஆகையால் நாட்டின் ஓரிடத்து வளம் பிற இடங்களுக்கும் பயன்தர வேண்டும்.

இந்த சமச்சீரான, பொதுவான பயன்பாட்டைத்தான் மகாகவி பாரதியார், ‘கங்கை நதிப்புறத்து கோதுமைப்பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்’ என்றும், ‘வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் (மாநிலங்களில்) பயிர் செய்குவோம்’ என்றும் எடுத்துரைக்கிறார்.

நாடு முழுவதும் வாழ என்று சொல்லும்போது நாட்டுமக்கள் அனைவருமே நலமுடன் வாழுதல் என்ற பொருளும் அடங்கியுள்ளது. இதைத்தான் இன்றைய மத்தியஅரசு ‘அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி’ என்று கூறி செயல்படுத்த முனைப்புக் காட்டுகிறது. நாட்டு வளர்ச்சியின் பயன், கடையருக்கும் மடைமாற்றமின்றி போய்ச்சேர வேண்டும். அப்போதுதான் நாடு முழுவதும் வாழும்.

மற்றொரு முக்கியமான விஷயம் – நாட்டின் பாதுகாப்பு. நாட்டின் எல்லைகள் அன்னிய சக்திகளின் அச்சுறுத்தலுக்கு இடமின்றி பாதுகாப்புடன் இருப்பதோடு உள்நாட்டுப்பகுதிகளும் அன்னியகைக்கூலிகள், தீயசக்திகள், பயங்கரவாதிகள், கயவர்களின் அச்சுறுத்தலுக்கு உட்படாமல் பாதுகாப்பாக வாழக்கூடிய நிலையில் இருக்க வேண்டும்.

இவ்வாறாக நாடு முழுவதிலுமே, மக்கள் அனைவருமே வளமாக, நலமாக, பலமாக, பாதுகாப்பாக வாழ்ந்தால் கேடு என்ற ஒன்று ஏற்படாது என்பதை நமக்கு அறுதியிட்டுக் கூறுகிறார் ஔவையார்.

***
கொன்றைவேந்தன்- 50

நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை.

விளக்கம்:

நிலைத்து நிற்பதற்கு, சொன்ன சொல்லில் இருந்து மாறாத வாய்மை ஒழுக்கத்தைக் கற்க வேண்டும் என அறிவுறுத்துகிறார் ஔவையார்.

ஒருவர் நிலையான கல்வியைக் கற்றுள்ளதற்கு எது அடையாளம் என்றால் சொல்வழுவாமைதான் அதன் அடையாளம் என்றும் இதற்குப் பொருள் உண்டு.

"அங்க நிற்கிறாருஅவரு" என்று ஒருவரைப் புகழ்கிறோமே அந்த நிற்றல் என்பது நிலைத்த பெருமையைக் குறிக்கிறது. அத்தகு நிலைத்த பெருமையைப் பெற, சொல்திறம்பாமையில் நின்றொழுகல் அவசியம். ஆனால் சொல்மாற்றிப் பேசுதலே, நடத்தலே நிற்றலுக்குத் துணை என இன்றைய அரசியல்வாதிகள் நினைக்கிறார்ககள். அது ஒரு மாயம். உண்மை ஒருநாள் வெளிப்படும்போது அல்லது உணரப்படும்போது, அவர்கள் கட்டமைத்த பிம்பம் நொறுங்கிப்போகும்.

நிற்றல் என்பது கொண்டகொள்கையில் நிலையாக இருப்பதைக் குறிக்கிறது. கற்றல் என்பது கல்போல உறுதியாக இருத்தலைக் குறிக்கிறது.எது நம்மை ஐயம் திரிபற தெளிவாக அறியச்செய்து, அதன்படி உறுதியாக விளங்கச் செய்கிறதோ அதுவே கல்வி. திறம்புதல் என்றால் தடம்மாறுதல், பிறழுதல், வழுவுதல் என்று பொருள். சொல் என்பது வாக்கு. நாம் கொடுத்த சத்தியம் மட்டுமின்றி பிறருக்கு நம் மீது நம்பிக்கை ஏற்படும்வகையில் நாம் உதிர்க்கும் சொல் அனைத்தையும் குறிக்கும்.

ஆகையால் கொள்கையில் நிலையாக நிற்கக் கற்றிருக்கிறோம் என்றால், நிலைத்த புகழில் நாம் உறுதிபடத் திகழ வேண்டும் என்றால், அதற்கு வாக்குத்தவறாமை மிக மிக அவசியம் என்கிறார் ஔவையார்.

இதிலே மற்றொரு நுட்பமான உட்பொருளும் இருக்கிறது. சொல் என்றால் சுருதியாகிய வேதம், மூத்தோர்சொல், சான்றோர்சொல் ஆகியவற்றையும் குறிக்கும். அவர்களது சொற்களே நம் வாழ்க்கையின் நெறிமுறைகள். ஆக, ஒழுக்கநெறியில் நாம் நிற்கக் கற்றிருக்கிறோம் எனில், சான்றோர் சொன்ன சொல்லில் இருந்து தடம்புரளாத இயல்பைப் பெற்றிருக்கிறோம், அதற்குப் பழகி இருக்கிறோம் எனப் பொருள்.

ஓரடியில் பல விளக்கங்கள் விரியும் சொல்லை மொழிந்த சான்றோராகிய ஔவையாரின் சொல்லை உணர்ந்து அதன்வழியில் இருந்து பிறழாமல் வாழ்வோம்.

***


No comments:

Post a Comment