18/10/2021

மிஸஸ் ஆனி பிஜாண்ட்

- மகாகவி பாரதி


(மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 25)

சமீப காலமாக மிஸஸ் ஆனி பிஜாண்ட் (Anne Besant) தமது சக்தியையும் செல்வாக்கையும் புதிய சுயராஜ்ய இயக்கத்திற்கு விரோதமாக திருப்பி வருகிறார். கொஞ்ச காலத்திற்கு முன்பு இங்கிலாந்துக்கு சென்றிருந்தபோது, அரவிந்தர் ஒரு தீவிரவாதி என்றும், ஆபத்தானவர் என்றும், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை அழிக்க எவ்வித உபாயத்தையும் கைகொள்ளத் தயங்காதவர் என்றும் ஒரு பத்திரிகை நிருபரிடம் கூறினார். இதற்காக இந்திய பத்திரிகைகள் அவளைக் கண்டித்ததோடு, அரவிந்தரைப் பற்றி இதுபோல் அபவாதம் செய்வதற்கு முகாந்திரம் கூறுமாறும் கேட்டன.

இதற்கு தமது மகாத்மாக்கள் அரவிந்தரைப் பற்றி கொண்டுள்ள அபிப்பிராயத்தை தமது பிரதான ஹிந்து காலேஜின் பத்திரிகையில் தெரிவித்திருக்கிறாள். ஆங்கிலேயர்களோடு ஒத்துழைக்க மறுப்பதே அரவிந்தரைப் பற்றி அம்மகாத்மாக்கள் கோபங்கொண்டிருப்பதற்கு பிரதான காரணம் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த மகாத்மாக்கள் நமது ராஜீய விஷயங்களில் அக்கறை பாராட்டுவதற்கு நாம் வந்தனம் செய்கிறோம். அதே சமயத்தில் ஆங்கிலேயர்களுடன் ‘ஒத்துழைத்தல்’ என்பது அவர்களுக்கு கீழ்படிதல் என்பதும், அவர்களுக்குச் சேவகர்களாகப் பணிபுரிவதை தவிர வேறு எந்த உபகாரத்தையும் அவர்கள் எதிர்பார்க்கவில்லை என்பதையும் சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.
 
ராஜீய விஷயங்களில் மட்டும் அல்லாமல், பல்வேறு மார்க்கங்களில் ஜனங்களிடமிருந்து பணம் திரட்டி அவள் நடத்தும் பிரதான ஹிந்து காலேஜிலும்கூட நம்மவர்கள் எந்த உயர்பதவியிலும் அமராமல் ஆங்கிலேயரின் அதிகாரத்திற்கு கீழ்படிந்து நடக்க வேண்டும் என்று விரும்புகிறாள். சில மாதங்களுக்கு முன்பாக அந்த காலேஜுக்கு புதிய பிரின்சிபல் நியமிக்கப்பட்ட பொழுது, இந்தியர் எவரையும் அப்பதவிக்கு அமர்த்துவதை எதிர்த்தாள். இதன் காரணமாக ஓர் ஆங்கிலேயர் அப்பதவியை பெற்றார்.

இந்த அக்கிரமம் இம்மட்டோடு நிற்கவில்லை. பிஜாண்டிசம் , திபேத்திய ஆவிகள் முதலான அநேக பொய்ம்மைகளைப் பரப்புவதற்காக உருவாக்கப்பட்டுள்ள தியோசாபிகல் சங்கத்தின் தலைவர் பதவி ஐரோப்பியர்களால் மட்டுமே வகிக்கப்பட வேண்டுமென்றும், ஹிந்துக்களுக்கு அதற்கு பணம் கொடுக்கும் உரிமை மட்டுமே உண்டு என்றும் மகாத்மாக்கள் ஆஞ்ஞாபித்துள்ளனர். இதுவே ஒத்துழைப்பு போலும்! நாம் பணம் கொடுக்க, அந்நியர்கள் ஆதிக்கம் செலுத்த வேண்டும்.

அரவிந்தர் இத்தகைய ஒத்துழைப்பு தர சம்மதிக்காததாலேயே திபேத்திய ஆவிகள் அவர்மீது கோபம் கொண்டுள்ளன. மிஸஸ் பிஜாண்டைத் தம் ஆன்மீக வழிகாட்டியாகவும், குருவாகவும், புராதன ஆரிய ரிஷிகளின் நவீன பிரதிநிதி என்றும் நம்மில் சிலர் நம்புவதைவிட நமது ஹிந்து ஜாதி க்ஷிணித்துவிட்டது என்பதற்கு வேறு ஆதாரமும் வேண்டுமோ? நமது புணருத்தாரணத்திற்கு சுதந்திரம் என்ற குறிக்கோளைத் தவிர வேறு எந்த உபாயமும் இல்லை.


குறிப்பு:

 ‘விஜயா’ (30 அக்டோபர் 1909) இதழில் வெளியான கட்டுரை.
(பின்னாளில் அன்னிபெசண்ட் அம்மையாரின் கொள்கைகளில் மாற்றம் ஏற்பட்டபோது, அவரைப் பாராட்டியும் மகாகவி பாரதி எழுதி இருக்கிறார்). 


No comments:

Post a Comment