18/10/2021

பண்டிட் தீனதயாள் உபாத்யாய - பொன்மொழிகள் - 5

-பேரா.பூ.தர்மலிங்கம் 


வேற்றுமையில் ஒற்றுமை மற்றும் பல்வேறு வடிவங்களில் ஒற்றுமையின் வெளிப்பாட்டைக் கொணர்வது ஆகியன பாரதிய கலாச்சாரத்தின் முதன்மையான எண்ணமாக, முக்கிய சிந்தனையாக இருந்து வருகின்றன. இந்த உண்மையானது முழுமனதுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டால், பல்வேறு அதிகார மோதலுக்கு அவசியமே இருக்காது. மோதல் என்பது கலாச்சாரமோ அல்லது இயற்கையின் அடையாளமோ அல்ல. மாறாக, இது விபரீதத்தின் அறிகுறியாகும்.
 
***

ஹேகல்    ‘ஆய்வறிக்கை, ஆய்வின் எதிர்வினை மற்றும் தொகுப்பு’ ஆகியவற்றின் கொள்கையை முன்வைத்தார். காரல் மார்க்ஸ் இந்த கொள்கையை அடிப்படையாகக் கொண்டு வரலாறு மற்றும் பொருளாதாரம் குறித்த தனது பகுப்பாய்வை முன் வைத்தார். டார்வின்  ‘தகுதி உள்ளவை பிழைத்து வாழ்தல்’ கொள்கையை வாழ்க்கையின் ஒரே அடிப்படையாகக் கருதினார். ஆனால், நாம் இந்த நாட்டில் அனைத்து உயிர்களின் அடிப்படை ஒற்றுமையைக் காண்கிறோம்.

***
பாரத நாட்டில் அரசரினும் சிறந்தது தர்மம் ஆகும். இங்கு, ஓர் அரசர் தர்மத்தின்படி செயல்படவில்லை என்றால், அவரை நீக்குவது மக்களின் கடமையாகும். ஆனால், மேற்கத்திய நாடுகளில் அரசர்கள் கடவுளின் வடிவமாகக் கருதப்பட்டதால், எந்தவொரு சூழ்நிலையிலும் தர்மத்தின்படி மக்கள் அரசரை அகற்றிவிட முடியாது.

***
உடல், மனம், புத்தி, ஆன்மா என்ற நான்கும் ஒரு மனிதனை உருவாக்குகின்றன. மேலும், அவை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. அதனால் ஒவ்வொன்றையும் நாம் தனித்தனியே நினைத்துப் பார்க்க இயலாது. ஆனால் மேற்கத்திய நாடுகளில் அவற்றைத் தனித்தனியாகவும், மற்றவையுடன் எந்தவிதத் தொடர்பும் இல்லாமல் எண்ணிப் பார்த்ததின் விளைவாகவே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

பாரதிய கலாச்சாரத்தின் முதல் சிறப்பியல்பு என்னவென்றால், அது வாழ்க்கையை ஓர் ஒருங்கிணைந்த முழுமையாகப் பார்க்கிறது. ஒவ்வொரு பகுதிகளைப் பற்றியும் சிந்திப்பது ஒரு நிபுணருக்குச் சரியானதாக இருக்கலாம். ஆனால், அது நடைமுறை நோக்கில் பயனுள்ளதாக இருக்காது.

***
ஒரு தேசத்தின் மன உணர்வை வெளிப்படுத்தவும் பராமரிக்கவும் உதவும் விதிமுறைகள் தர்மம் என்று அழைக்கப்படுகின்றன. அதாவது, வாழ்க்கை விதிகள் மற்றும் அவற்றின் தத்துவார்த்த அடிப்படை பற்றி முழுமையாக உரைப்பது ‘தர்மம்’ எனப்படுகிறது. அந்த விதிகள் தன்னிச்சையாகச் செயல்பட முடியாது. அவை சார்ந்த பொருள் அல்லது மனிதனின் வாழ்க்கை மற்றும் முன்னேற்றத்தைக் காப்பதாக இருக்க வேண்டும். மேலும், அவ்விதிகள் தர்மத்தின் பரந்த கட்டமைப்புக்கு ஏற்ப இணக்கமாகவும் இருக்க வேண்டும்.

***
ஒரு குறிப்பிட்ட செயலின் தகுதியையும் தகுதியின்மையையும் தீர்மானிக்கும் அளவீடே  ‘சிட்டி’ (தேசிய உணர்வு / நெறிமுறைகள்) எனப்படுகிறது. நமது இயல்புகளுக்கு ஏற்ப சிட்டி (Chiti) அங்கீகரிக்கப்பட்டு கலாச்சாரமாக ஒன்றிணைக்கப்படுகிறது. இவை வளர்க்கப்பட வேண்டும். சிட்டிகளுக்கு எதிரானவற்றை தவறான போக்காகவும் விரும்பத் தகாததாகவும் கருதி தவிர்க்க வேண்டும். சிட்டி என்பது ஒவ்வொரு செயலையும் ஒவ்வொரு அணுகுமுறையையும் சோதித்துப் பார்த்து, அது ஏற்றுக்கொள்ளத் தக்கதா அல்லது தகாததா எனத் தீர்மானிக்கின்ற உரைகல்லாகும். சிட்டி என்பது தேசத்தின் ஆன்மா. இந்த சிட்டியின் அஸ்திவாரத்தில் தான் ஒரு தேசம் எழுந்து வலுவாகவும் வீரியமாகவும் மாறுகிறது. இந்த சிட்டி தான் ஒரு தேசத்தில் உள்ள ஒவ்வொரு மாபெரும் மனிதனின் செயலிலும் வெளிப்படுகிறது.

***
தர்ம ராஜ்யம் எந்தவொரு தனி மனிதனையோ அமைப்பையோ இறையாண்மையாக அங்கீகரிக்கவில்லை. ஒவ்வொரு நபரும் சில கடமைகளுக்கு உட்பட்டவர்கள். நிர்வாக உரிமைகள், நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் மக்கள் போன்றோர் தர்மத்தால் நிர்ணயிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுகின்றனர்.
 
அரசு என்பது தர்மராஜ்யமாக- தர்மத்தின் ஆட்சியாக மட்டுமே இருக்க முடியும். ஒரு தர்மராஜ்யத்தில் அரசு, முழுமையான அதிகாரம் படைத்ததாக இருக்காது. இது தர்மத்திற்கு உட்பட்டது. நாம் எப்போதும் தர்மத்தில் இறையாண்மையை வைத்திருக்கிறோம். சுதந்திரமும் தர்மமும் உள்ள இடங்களில் மட்டுமே உண்மையான ஜனநாயகம் இருக்கிறது. 
 
***
நமது தேசியவாதத்தின் அடிப்படையானது வெறுமனே  ‘பாரத்’ அல்ல,  ‘பாரதமாதா’ என்பதாகும். மாதா என்ற வார்த்தையை நீக்குங்கள், பாரத் என்பது ஒரு நிலமாக மட்டுமே இருக்கும். நமக்கும் இந்த நிலத்திற்கும் இடையிலான உறவு தாயின் உறவோடு மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. நிலத்திற்கும் அதில் வாழும் மக்களுக்கும் இடையிலான உறவு தாய் மற்றும் மகனுக்குமான உறவாக இல்லாதவரை எந்த நிலத்தையும் ஒரு நாடு என்று அழைக்க முடியாது.

***
வெவ்வேறு பட்ட அரசியல் கட்சிகள் தங்களுக்கென ஒரு தத்துவத்தை உருவாக்க முயற்சி செய்ய வேண்டும். சில சுயநல நோக்கங்களுக்காக ஒன்றிணைந்த கூட்டமாக இருக்கக் கூடாது. இது ஒரு வணிக நிறுவனமோ கூட்டுப் பங்கு நிறுவனமோ அல்ல. கட்சியின் தத்துவமானது, கட்சி அறிக்கையாக மட்டுமே இருந்துவிடக் கூடாது. உறுப்பினர்கள் அதைப் புரிந்து கொண்டு அதைச் செயல்பாடாக மாற்றுவதற்குத் தங்களை அர்ப்பணிக்க வேண்டும். 

***
தற்போதைய பொருளாதார அமைப்பும் உற்பத்திமுறையும் இயற்கையின் சமநிலையை மிக வேகமாக பாதிப்புக்கு உள்ளாக்குகின்றன. இதன் விளைவாக, ஒருபுறம் அதிகரித்து வரும் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக, புதிய பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. மறுபுறம், ஒவ்வொரு நாளும் புதிய சிக்கல்கள் எழுகின்றன. இதனால் மனிதநேயமும் நாகரிகமும் மறைந்து கொண்டே போகின்றன. எனவே, எளிதில் மீட்டெடுக்கக் கூடிய இயற்கை வளங்களின் பகுதியை மட்டுமே பயன்படுத்துவது அவசியமாகும். மேலும், இயற்கையை அழிக்காமல் பயன்படுத்துவதே பொருளாதாரக் கட்டமைப்பின் நோக்கமாக இருக்க வேண்டும்.

***
ஒரு குழந்தை கல்வி கற்பிப்பது என்பது சமூகத்தின் நலனுக்காகவே. பிறப்பால் குழந்தை ஒரு விலங்கிற்கு ஒப்பானது. அக்குழந்தை கல்வி மற்றும் கலாச்சாரத்தால் மட்டுமே சமூகத்தின் பொறுப்பான உறுப்பினராகிறது. சமூகத்தின் நலனுக்கான ஒரு செயலுக்கு கட்டணம் வசூலிப்பது சரியானதன்று. கட்டணம் செலுத்த இயலாமையால், குழந்தைகளுக்குக் கல்வி கிடைக்காமல் போய்விட்டால், இச்சூழலைச் சமூகம் நீண்ட காலம் தாங்க முடியுமா? விதை விதைப்பதற்கும் மரக்கன்றுகளைப் பராமரிப்பதற்கும் நாம் மரங்களிலிருந்து கட்டணம் ஏதும் வசூலிப்பதில்லை. மாறாக, நாம் நமது பணத்தையும் முயற்சிகளையும் முதலீடு செய்கிறோம். மரம் வளரும்போது பழங்களைப் பலனாகப் பெறுவோம் என்பது நாம் அறிந்ததே. கல்வியும் இது போன்றே ஒரு முதலீடே ஆகும். 

***
மேற்கத்திய அறிவியல் மற்றும் மேற்கத்திய வாழ்க்கை இரண்டும் வெவ்வேறு விஷயங்கள். அதே சமயம், மேற்கத்திய அறிவியல் உலகளாவியது. நாம் முன்னோக்கிச் செல்ல விரும்பினால் அதை நாம் உள்வாங்க வேண்டும். ஆனால், மேற்கத்திய வாழ்க்கை முறைகளுக்கும் விழுமியங்களுக்கும் இது பொருந்தாது. உண்மையில், மேற்கத்திய முறைகளை எந்தவித சிந்தனையுமின்றி பின்பற்றுதல் அறவே தவிர்க்கப்பட வேண்டும்.

***
நமது கலாச்சார உணர்வை வெளிப்படுத்துவதற்கான ஓர் உபகரணமாக சுதந்திரம் மாறினால் மட்டுமே, அது அர்த்தமுள்ளதாக இருக்கும். இத்தகைய உணர்ச்சி வெளிப்பாடு நமது முன்னேற்றத்திற்குக் காரணியாக மட்டுமின்றி, இதற்காக நாம் எடுக்கின்ற முயற்சியானது நமக்கு மகிழ்ச்சியையும் அளிக்கும். எனவே தேசிய மற்றும் மனித நோக்கிலிருந்து பாரதிய கலாச்சாரத்தின் கொள்கைகளைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டியது அவசியமாகும். அதன் உதவியுடன், மேற்கத்திய அரசியல் சிந்தனையின் பல்வேறு கருத்தியல்களை நாம் சரிசெய்ய முயன்றால், அது நமக்குக் கூடுதல் நன்மையாக இருக்கும்.

***
நாம் பெருமையுடன் வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்துகிறோம். சிந்தனை, மேலாண்மை, மூலதனம், உற்பத்தி முறைகள், தொழில்நுட்பம் போன்றவை முதல் நமது நுகர்வுக் தன்மை மற்றும் தரங்கள் வரை நாம் வெளிநாட்டு உதவியைப் சார்ந்தே வளர்ந்திருக்கிறோம். இது முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்குமான பாதை இல்லை. நாம் நமது தனித்துவத்தை மறந்து மீண்டும் உண்மையான அடிமைகளாக மாறிவிடுவோம். எனவே, சுதேசியின் நேர்மறையான பொருண்மையை நமது பொருளாதாரத்தின் புனரமைப்புக்கான அடித்தளமாகப் பயன்படுத்த வேண்டும்.
***
நீங்கள் ஜனநாயகவாதியாக இருந்தால், உங்கள் மனசாட்சியைத் தவிர வேறு யாருக்கும் அடிபணியத் தேவையில்லை. மக்களுக்காக இருக்கின்ற அரசியல் கட்சிகளும் மக்களின் பலத்திலேயே நிற்கின்றன. அரசியல் கட்சிகளை யாரும் தங்கள் விருப்பத்திற்கு வளைக்கக் கூடாது என்று மக்கள் விரும்பினால், மக்கள் தங்களது அதிகாரத்தை அவர்களுக்கு வழங்க வேண்டும். அரசியல் கட்சிகளை மக்கள்தான் வடிவமைக்கிறார்கள்; மக்களின் அரசியல் விதியும் அவர்களாலேயே நிர்ணயிக்கப்படுகிறது.

***
தேசத்தின் வளர்ச்சிப் பார்வையில் இருந்து நமது அரசியலமைப்பை ஆராய்ந்தால், நமது அரசியலமைப்பில் திருத்தங்கள் தேவை என்பதை உணர்கிறோம். நாம் அனைவரும் ஒரே தேசம், ஒரே மக்கள் ஆவோம். அதனால்தான், மொழி, மாநிலம், சாதி, மதம் போன்றவற்றின் அடிப்படையில் எந்தவொரு சிறப்பு உரிமைகளையும் நாம் பெறவில்லை. ஆனால், அனைவருக்கும் சமத்துவத்தை வழங்கியுள்ளோம். 

தனித்தனி மாநிலங்கள் இருக்கின்றன. எனினும், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தனிக்குடியுரிமை இல்லை. நாம் அனைவரும் பாரத நாட்டின் குடிமக்கள். இந்த அடையாளத்தின் மூலம், எந்தவொரு தனிப்பட்ட மாநிலத்திற்கும் தனியே பிரிந்து செல்லும் உரிமை இல்லை. இருப்பினும், நாம் நமது அரசியலமைப்பை கூட்டாட்சி முறையாக மாற்றினோம். இதன்மூலம், நாம் நடைமுறையில் இதை ஏற்றுக்கொண்டாலும் கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளவில்லை.

*** 
கூட்டாட்சி அரசியலமைப்பில், மாநிலங்கள் ஒவ்வொன்றும் அடிப்படை அதிகாரங்களைக் கொண்டதாகவும், மத்திய அரசு மாநிலங்களின் கூட்டமைப்பாகவும் கருதப்படுகிறது. இது உண்மைக்கு முரணானது. பாரதத்தின் ஒற்றுமைக்கும் பிரிக்கமுடியாத தன்மைக்கும் எதிரானது. எனவே, நமது அரசியலமைப்பு, கூட்டாட்சிக்கு  (Federal Government) பதிலாக ஒற்றை ஆட்சியாக (Unitary Government) இருக்க வேண்டும்.

***
விதையானது வேர்கள், தண்டு, கிளைகள், இலைகள், பூக்கள் மற்றும் பழம் போன்ற பல்வேறு வடிவங்களில் தனது வெளிப்பாட்டைக் காண்கிறது. இவை அனைத்தும் வெவ்வேறு வடிவங்கள், வண்ணங்கள், பண்புகளைக் கொண்டுள்ளன. இருப்பினும், ஒவ்வொன்றுக்கும் இடையிலான ஒத்த தன்மையை, உறவை நாம் விதையின் மூலம் அங்கீகரிக்கிறோம். அதுபோலவே, நாம் இந்த நாட்டில் உள்ள அனைத்து உயிர்களின் அடிப்படை ஒற்றுமையைப் காண்கிறோம்.

***
மார்க்சின் சித்தாந்தங்கள் மாறிவரும் காலங்கள் மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறிவிட்டன. நமது தேசம் எதிர்கொள்ளும் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக மார்க்சிய சித்தாந்தங்களை திரும்பத் திரும்ப பரிசீலிப்பது என்பது, அறிவியல் மற்றும் நடைமுறைக்குப் பொருந்தாத பிற்போக்குத்தனமான அணுகுமுறையைப் பின்பற்றுவதாகும். மறைந்துபோன தீர்ப்புகளை முழுமையாக அகற்றுவதன் மூலம் சமுதாயத்தைs சீர்திருத்த எண்ணுபவர்கள், காலாவதியான சில அன்னிய மரபுகளுக்கு இரையாகிறார்கள் என்பதே ஆச்சரியமான உண்மையாகும்.

 ***
ஒவ்வொரு மதத்திற்கும் சுதந்திரம் உள்ளது. ஆனால், இந்த சுதந்திரம் மற்றவர்களின் மதத்தின் மீது அத்துமீறாத வரையில் மட்டுமே நீண்டுள்ளது. இத்தகைய அத்துமீறல் நடந்தால், சுதந்திரம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறி தண்டிக்கப்பட வேண்டும். மேலும், அது முடிவுக்கு வர வேண்டும். அத்தகைய வரையறைகள் வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் தேவைப்படுகின்றன. இவ்வாறு மதச் சுதந்திரத்தை உறுதி செய்வது தர்ம ராஜ்யம் ஆகும்.

***
நமது நாட்டின் கலாச்சாரத்தையும் தத்துவ வாழ்க்கையையும் தவிர்த்துவிட்டு இந்திய அரசியலை சிந்திக்க முடியாது. இந்தியக் கலாச்சாரமானது ஓர் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறது. உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களிலும் மேலோட்டமாகக் காணப்படுகின்ற வேறுபாடுகளை ஏற்றுக் கொண்டாலும் கூட, இந்தியக் கலாச்சாரம் அவர்களிடையே இருக்கின்ற ஒற்றுமையைக் காண விளைகிறது. மேலும், அவற்றை ஒருங்கிணைக்கிறது. 

***
நாம் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். நமது இந்திய நாட்டினர் யாரேனும் சீனா அல்லது பாகிஸ்தானுக்குச் சாதகமாகப் பணியாற்ற அனுமதிக்கப்படவில்லை என்பதை மக்கள் உறுதிப்படுத்த வேண்டும். இவர்கள் எப்போது, எங்கே அமைதியைக் குலைக்கின்றனர் அல்லது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கின்றனர் என்பதைக் கண்டுணர்ந்து இரக்கமின்றி அடக்கப்பட வேண்டும். ஆனால் இந்தச் சக்திகளை அரசியல் மட்டத்திலும் சரி செய்ய வேண்டும். இந்த நாட்டு மக்களுக்கு தேசியவாதம் மற்றும் ஜனநாயகத்தின் மீது நிலையான நம்பிக்கை உள்ளது. மேலும் இந்த மதிப்புகளைத் தகர்த்தெறிய முற்படுபவர்களை மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். 

***
தர்மம் என்பது தேசத்தின் ஆன்மாவின் களஞ்சியமாகும். தர்மம் அழிக்கப்பட்டால், தேசம் அழிந்துவிடும். தர்மத்தைக் கைவிட்டவர், தேசத்தைக் காட்டிக் கொடுத்தவராகிறார். 

***
நமது கலாச்சாரத்தின்படி, தர்மத்தின் வழியிலேயே நமது ஆசையை நாம் அடைய முடியும். நல்ல உணவு போன்ற பொருட்களைக் கூட எப்போது, எங்கே, எவ்வாறு, எந்த அளவுகளில் பயன்படுத்த வேண்டும் என்பது தர்மத்தால் மட்டுமே தீர்மானிக்க முடியும். ஒரு நோய்வாய்ப்பட்டவர் ஆரோக்கியமானவருக்கான உணவைச் சாப்பிட்டால் அல்லது ஒரு ஆரோக்கியமானவர் நோய்வாய்ப்பட்டவருக்கான உணவைச் சாப்பிட்டால், இரண்டுமே பாதகமான விஷயங்களாகும். தர்மம், மனிதனின் இயல்பான போக்குகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதன்மூலம், அவனால் இன்பம் தரக்கூடியவற்றைத் தவிர்த்து நன்மை பயக்கும் விஷயங்களைத் தீர்மானிக்க முடிகிறது. எனவே, கலாச்சாரத்தில், தர்மத்திற்கு முதலிடம் அளிக்கப்படுகிறது.

***
வேதகாலத்திய மதம், எப்போதும் மாறிக்கொண்டே இருக்கிறது. இந்த மதம்  மாறும், மேலும் வாழ்ந்து கொண்டிருக்கும். இது ஒரு தேங்கி நிற்கிற குளம் போன்றதல்ல. புதிய சிந்தனைகள் எப்போதுமே இந்த மதத்திற்குள் நுழைந்தன. ஆனால் ஒவ்வொரு புதிய மாற்றமும் பழையவற்றுடன் அதன் தொடர்பைத் தக்கவைத்துக் கொண்டுள்ளன. ஒவ்வொரு புதிய சீர்திருத்தவாதியும் நமது பண்டைய பாரம்பரியம், நமது மூதாதையர்கள் மற்றும் அவர்களது சாதனைகளுக்கு மதிப்பளித்தனர். அதே நேரத்தில் காலத்திற்கேற்ப புதிய சிந்தனைகளை முன்வைத்தனர். இப்புதிய சிந்தனைகள் அடிப்படைச் சிந்தனையுடன் ஒத்துப் போவதால், அவை எந்த வகையிலும் தேசத்திற்கு கேடு விளைவிக்கவில்லை. மாறாக, அவை தேசத்தின் வளர்ச்சிக்குப் பங்களித்தன. 

***
நமது நாட்டில், உடல், மனம், புத்தி, ஆன்மா ஆகியவற்றின் ஒருமித்த வளர்ச்சியையே மனிதனின் முன்னேற்றம் எனக் குறிப்பிடுகிறோம். பாரதியக் கலாச்சாரம் ஆன்மாவின் முக்தியைப் பற்றி மட்டும் நினைக்கிறது, மற்றவற்றைப் பற்றி கவலைப்படுவதில்லை என்று விமர்சிக்கப்படுகிறது. அது உண்மையல்ல. நாம் ஆன்மாவைப் பற்றி சிந்திக்கின்றோம். மேலும் உடல், மனம், புத்தி ஆகியவற்றையும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகிறோம். ஆனால் பிறர் உடலுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தனர். 

- பண்டிட் தீனதயாள் உபாத்யாய

***


No comments:

Post a Comment