ஹிந்து ஞான மரபின் மணிமுடியான வேதாந்த தரிசனத்தின் மையமான ஆதி நூல்கள் உபநிஷதங்கள். சங்கரர் தொடங்கி அனைத்து வேதாந்த ஆசாரியார்களும் ஈசாவாஸ்ய உபநிஷதம் முதலாக உள்ள பத்து முக்கிய உபநிஷதங்களுக்கும் மிகவும் விரிவான உரைகள் எழுதியிருக்கிறார்கள். ஒவ்வொரு தத்துவத் தரப்பும் வேதாந்த தரிசனத்தின் பொதுக்கருத்துக்களுடன் கொள்ளும் இணைவையும், அந்த தரப்பின் தனித்தன்மையையும் வரையறுப்பதில் இந்த விரிவுரைகளுக்கு முக்கியப் பங்கு உண்டு.
இந்தக் கட்டுரை, உபநிஷதக் கவிதையின் நேரடி அனுபவத்தை ஒரு துளியாக அளிக்க முயலும் ஒரு முயற்சியே அன்றி விரிவுரை எழுதுவதல்ல. எனவே சில குறிப்புகளை மட்டும் தருகிறேன்.
இந்த உபநிஷதத்தின் பல இழைகளும் குவியும் புள்ளி ஒருமை, முழுமை, பூரணத்துவம் எனலாம். கடவுள் – உலகம், துறவு – இன்பம், செயல் தரும் பந்தம் – செயலின்மை தரும் முக்தி, ஒன்று – பல, அறிவு – அறியாமை, இவ்வுலகம் – அவ்வுலகம் என்று ஒன்றுக்கொன்று எதிராக உள்ள கருத்தாக்கங்களை தத்துவ ரீதியாக சமன்வயப் படுத்துவதே இந்த உபநிஷதத்தின் நோக்கம்.
வாழ்க்கையை ஒருங்கிணைந்த யோகமாகக் கண்டு ஒழுகிட மானிடரை அறிவுறுத்துகிறது இந்த உபநிஷதம். செயல், இன்பம், அறிவு ஆகிய மூன்று மானுட லட்சியங்களையும் மோதல்கள் இன்றி நெறிப்படுத்தும் சமன்வயப் பார்வையை போதிக்கிறது. Work for the work’s sake, knowledge for the knowledge’s sake, love for love’s sake – செயலுக்காகவே செயல், அறிவுக்காகவே அறிவு, அன்புக்காகவே அன்பு என்ற கொள்கைகளே கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம் முதலிய வாழ்க்கை நெறிகளாக கீதையின் உபதேசத்தில் முழுமையாகப் பரிணமிக்கின்றன என்று விவேகானந்தர் கூறுகிறார். அந்தக் கொள்கைகளின் தொடக்கப் புள்ளி உபநிஷதங்களில் தான் உள்ளது.
‘ஈசாவாஸ்யம் இதம் ஸர்வம்’ என்று தொடங்கிறது முதல் மந்திரம். புலன்கள் காணும் புறப் பிரபஞ்சம் எங்கும், மனம் உணரும் அகப் பிரபஞ்சம் எங்கும் இறைச் சக்தியே நிறைந்துள்ளது என்பது இதன் பொருள். உலகெங்கும் இறைமையால் தீண்டப் படாத பொருள் என்று ஒன்றும் இல்லை. எனவே, இவ்வுலகை நுகர்வுப் பொருளாகக் கருதாமல், பிறர் பொருளை விரும்பாமல் வாழ்க்கையை நடத்துக என்பது உபதேசம்.
காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் ஒவ்வொரு நாளும் மாலை நேரப்பிரார்த்தனை இந்த மந்திரத்துடன் தொடங்கும் வழக்கம் காந்தியே ஏற்படுத்தியது. “எல்லா புனித நூல்களும் தத்துவங்களும் அழிந்து சாம்பலாகி விட்டாலும் கூட ‘ஈசாவாஸ்யம் இதம் சர்வம்’ என்ற இந்த ஒரு சுலோகம் இந்துக்களின் நினைவில் எஞ்சியிருந்தால் போதும். இந்து மதம் என்றென்றும் வாழும்” என்று காந்தி பரவசத்துடன் எழுதுகிறார்.
“உங்களுக்கு சொல்கிறேன், இந்த சிறிய மந்திரம் கூறும் சத்தியமான உபதேசம், மேன்மைக்காகவும் உயர்ச்சிக்காவும் ஏங்கும் ஒவ்வொரு மனித இதயத்தின் தேடலையும் பூர்த்தி செய்யும் வண்ணம் அமைந்துள்ளது. நான் இதுவரை படித்த எல்லா புனித நூல்களையும் எடுத்துக் கொண்டால், அவற்றில் உள்ள நற்கருத்துக்கள் யாவும், இந்த மந்திரத்திலிருந்தே பெறப்பட்டு, இதன் விரிவுரைகள் போன்றே உள்ளதாக எனக்குத் தோன்றுகிறது. உலக சகோதரத்துவம் – மனிதர்களின் சகோதரத்துவம் மட்டுமல்ல, உயிர்கள் அனைத்தின் சகோதரத்துவம் எனக்கு இம்மந்திரத்தில் மட்டுமே கிடைக்கிறது. எனது பிரபுவும் இறைவனுமான ஈசன் மீது இடையறாத நம்பிக்கை – அதையும் இம்மந்திரம் கற்பிக்கிறது… எனது இருப்பின் ஒவ்வொரு இழையையும் ஈசனே நிரப்புகிறான் என்னும்போது, அதிலிருந்து புவிமீதுள்ள எல்லா உயிர்களும் சமஉரிமை கொண்டவை என்ற சிந்தனை மிகவும் உறுதியாக வலுப்படுகிறது..”
இரண்டாம் மந்திரம் கர்மயோகத்தைக் கற்பிக்கிறது. இதம் ஸர்வம் (*இவை* அனைத்தும்), இஹ (*இங்கு*) ஆகிய சுட்டுச் சொற்கள், இந்த உபதேசம் அவ்வுலக வாழ்க்கை பற்றியது அல்ல, இந்த மண்ணின் மீது நின்று கொண்டு இவ்வுலகைப் பற்றிப் பேசப் படுகிறது என்னும் தொனியை அறிவிக்கின்றன.
3வது மந்திரம் ஆத்மாவை அறிய முயலாதோர் அடையும் ஆன்மிக வீழ்ச்சியைக் குறிப்பிடுகிறது. 4,5வது மந்திரங்கள் உள்ளும் புறமும் நின்றிலங்கும் ஆத்மாவின் இயல்பினை “அது” என்ற சுட்டுச் சொல்லால் உணர்த்துகின்றன. 6-7ம் மந்திரங்கள் ஆத்மாவை அறிந்து உணர்வோரின் ஆன்மீக மேன்மையைக் கூறுகின்றன. 8ம் மந்திரம் ஆத்மாவை “அவன்” என்று சர்வசக்திமானான கடவுளாக விவரிக்கிறது.
9-11 மந்திரங்கள் சத்தியத் தேடலின் பாதையில் வித்யை (அறிவு), அவித்யை (அறியாமை) ஆகிய இரண்டிலும் நின்று ஒழுகி, பின் அவற்றைக் கடந்து செல்ல வேண்டும் என்கின்றன. வித்யை, அவித்யை என்ற சொற்களுக்கு தத்துவ ரீதியாக பல விளக்கங்கள் அளிக்கப் பட்டுள்ளன. அவித்யை என்பது செயல்களில் ஈடுபடுவது, வித்யை என்பது செயல்கள் அனைத்தையும் துறந்து தியானத்திலும் அறிதலிலும் ஆழ்வது. ஒன்றை முழுமையாகத் தவிர்த்து மற்றொன்றை மட்டும் கைக்கொள்வோரது பாதை இருளடைந்தது. இவ்விரண்டிலும் சமநிலையுடன ஈடுபடுபவன் கர்மயோகத்தால் ஆன்மிக வீழ்ச்சியில் இருந்து விடுபட்டு (மரணத்தை வென்று), தியானத்தால் ஆன்மிக சத்தியத்தை (அமுதநிலை) தன்னில் உணர்கிறான் என்பது பொதுவான ஒரு விளக்கம்.
12-14 மந்திரங்களும் இதே போன்றவை. இதில் உருவம், அருவம் என்பதற்கான சொற்களாக ஸம்பூதி (தோற்றம் கொள்ளல்), அஸம்பூதி / வினாசம் (தோற்றமின்மை, தோற்றமழிதல்) ஆகியவை பயின்று வருகின்றன. அருவ தியானம், உருவ வழிபாடு ஆகிய இரண்டு பாதைகளின் சமன்வயத்தை இம்மந்திரங்கள் முன்வைக்கின்றன என்று கொள்ளலாம். அல்லது உருவம், அருவம் என்பவை முறையே இதற்கு முன்பு சொன்ன செயல்கள், செயலின்மை என்பவற்றுக்கான குறியீடுகளாக சொல்லப் பட்டன என்றும் கொள்ளலாம்.
15வது மந்திரம் கவித்துவமான ஒரு வேண்டுதல். பேணி வளர்ப்போன் (பூஷன்) என்பது சூரிய தேவனுடைய பெயர்களில் ஒன்று. புறக் கண்ணால் காணும் சூரிய மண்டலம் சத்தியத்தை மறைத்துள்ள பொன்மூடியாகவும் அதன் உள் ஒளி ஞானமாகவும் இங்கு உருவகிக்கப் பட்டுள்ளது. சத்திய இயல்பினர் (சத்யதர்மா) என்ற சொல் ஆன்மிகத் தேடல் கொண்டவனைக் குறிக்கிறது.
16வது மந்திரம் சத்திய தரிசனம் கண்ட ரிஷியின் பரவசம். சூரிய மண்டலத்தின் ஒளிக்கு அப்பால் பரம்பொருளைக் கண்டு, அதனுடன் தனது ஆன்மா ஒன்றுபட்டு நிற்பதை ஒரு மகாவாக்கியமாக அறிவிக்கிறார் – நானே அவன் (ஹோஹம் அஸ்மி)!
சத்தியத் தேடல் கொண்டவனுக்கு உடல் அழிந்து மரணமெய்துவது என்பது ஒரு தொடர்ச்சியே அன்றி முடிவு அல்ல. 17வது மந்திரம் அதை அறிவிக்கிறது. உடலை விட்டுச் செல்லும் ஆத்மாவின் நினைவூட்டலாக, கடைசி சொற்களாக “மனமே எண்ணுக செய்ததை எண்ணுக” என்ற வாசகம் வருகிறது.
கடைசி மந்திரம் அக்னி தேவனிடம் பிரார்த்தனை. இம்மந்திரத்தில் ‘செல்வம் சேர் நல்வழி’ என்பது உலக வாழ்வின் வளங்கள், ஆத்ம ஞானம் இரண்டையுமே குறிக்கிறது.
ஈசாவாஸ்ய உபநிஷதம் கூறும் தத்துவங்கள் குறித்து மேலும் அறிய கீழ்க்கண்ட நூல்களைப் பார்க்கலாம். இவை நான் கற்றவற்றில் தற்போது நினைவுக்கு வருபவை:
- Isha Upanishad: Translation and commentary by Sri Aurobindo (Online book)
- Ishavasya Upanishad – Commentary by Swami Chinmayananda, Published by CCMT, Mumbai.
- ஈசாவாஸ்ய உபநிஷதம் (ஒளிக்கு அப்பால்) – சுவாமி ஆசுதோஷானந்தர். ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை.
- Experiencing the Ishavasya Upanishad – Guru Nitya Chaitanya Yati, Narayana Gurukula, Fernhill, Ooty (இப்புத்தகத்தை எழுத்தாளர் சூத்ரதாரி தமிழில் மொழிபெயர்த்துள்ளார். நாராயண குருகுலம் பதிப்பாக வெளிவந்துள்ளது).
ஓம்
இவையனைத்தும்
ஈசனால் நிரம்பியுள்ளது
அசையும் உலகனைத்தும்
அதைத் துறந்து
நீ இன்பம் துய்த்திடுக
பிறர் பொருளை
விரும்பற்க. (1)
இங்கு
செயல்கள் புரிந்து
நூறாண்டு வாழ
இச்சை கொள்க
இது தவிர்த்து வேறுவழி
இல்லை
இத்தகைய மானிடரை
செயல்கள் பற்றுவதில்லை. (2)
காரிருள் மூடியவை
ஒளியற்றவை அவ்வுலகங்கள்
ஆன்மாவை அழிப்போர்
செத்ததும்
அங்கு சென்றடைகின்றனர். (3)
அந்த ஒன்று
அசையாதது
மனதினும் விரைவானது
தேவர்களாம் புலன்கள்
அதனை அடைவதில்லை
அவற்றுக்கும் முன்செல்வது அது
நின்றுகொண்டு
ஓடுபவற்றை முந்துகிறது அது
அதன் இருப்பில் காற்று
அனைத்தையும் உயிர்ப்பிக்கிறது. (4)
அது அசைகிறது
அசைவதில்லை
அது தொலைவிலுள்ளது
அருகிலும்
அது இவ்வனைத்தின்
உள்ளே உள்ளது
அனைத்தும்
கடந்தும். (5)
அனைத்துயிர்களையும்
தன்னிலும்
தன்னை அனைத்துயிர்களிலும்
காண்போர்
எதையும் வெறுப்பதில்லை. (6)
ஆன்மாவே அனைத்துயிரும் ஆனது
என அறிந்து
ஒருமை கண்டோனுக்கு
ஏது மயக்கம்
ஏது கவலை? (7)
அவன்
எங்கும் சூழ்ந்தவன் சுடரோன்
உடலற்றவன் வடுவற்றவன்
தசையற்றவன் தூயோன்
பாவம் துளைக்காதவன்
உட்பொருள் உணரும் கவி
அறிவோன் சுயம்பு
அனைத்தும் கடந்தவன்
முடிவற்ற வருடங்களுக்கு
அனைத்தையும்
முறையாக வகுத்து வைத்தான். (8)
அடர் காரிருள் வழிச் சென்றடைவர்
அறியாமையில் ஒழுகுவோர்
அதனினும் பெரிய இருளடைவர்
அறிவில் ஆழ்ந்தோர். (9)
அறிவால் அடைவது ஒன்று
அறியாமையால் அடைவது வேறொன்று என
எமக்கு அதை விளக்கிய பெரியோர்
கூறக் கேட்டோம். (10)
அறிவு அறியாமை
இரண்டும் ஒன்றுசேர அறிந்தோன்
அறியாமையால்
மரணம் கடந்து
அறிவினால்
அமுதநிலை அடைகின்றான். (11)
அடர் காரிருள் வழிச் சென்றடைவர்
அருவத்தை வழிபடுவோர்
அதனினும் பெரிய இருளடைவர்
உருவத்தில் ஆழ்ந்தோர். (12)
உருவத்தால் அடைவது ஒன்று
அருவத்தால் அடைவது வேறொன்று என
எமக்கு அதை விளக்கிய பெரியோர்
கூறக் கேட்டோம். (13)
அருவம் உருவம்
இரண்டும் ஒன்றுசேர அறிந்தோன்
உருவத்தால்
மரணம் கடந்து
அருவத்தால்
அமுதநிலை அடைகின்றான். (14)
பொன்மயமான மூடிக்குள்
மறைந்துள்ளது
சத்தியத்தின் முகம்
பேணி வளர்ப்போனே
சத்திய இயல்பினர் காண
அதைத் திறந்திடுக. (15)
பேணி வளர்ப்போனே ஒருதனியரசே
யமனே ஞாயிறே பிரஜாபதியின் புதல்வா
கதிர்பரப்பி ஒளி கூட்டுக
அதோ உன்
நன்மங்கல வடிவை நான் காண்கிறேன்
அதிலுறையும் புருஷன்
நானே அவன். (16)
உயிர்மூச்சு காற்றில் கலந்திடும்
அழிவற்று
உடல் சாம்பலாகும்
ஓம்
மனமே எண்ணுக
செய்ததை எண்ணுக
மனமே எண்ணுக
செய்ததை எண்ணுக. (17)
அக்னி
செல்வம்சேர் நல்வழியில்
எம்மை நடத்திடுக
தேவா
அனைத்து வழிகளையும் நீயே அறிவாய்
வளைந்து வரும் தீமையை விலக்கிடுக
உனக்கே எம் போற்றிப் புகழ்ச்சிகள்
மேன்மேலும்! (18)
காண்க: ஜடாயு
நன்றி: தமிழ் ஹிந்து இணையதளம்
No comments:
Post a Comment