18/10/2021

தேசிய மண் வாசம்! (கவிதை)

-வைஷ்ணவிப்பிரியன்


மதுரை மேலமாசி வீதிக்கு
அந்தக் கனவான் வந்தபோது
அணித்திருந்தவை-
பத்து முழம் வேட்டி,
உயர்ந்த கதர் ஜிப்பா,
அழகிய குஜராத்தி தொப்பி,
கழுத்தைச் சுற்றிய அங்கவஸ்திரம்.
அங்கிருந்து செல்கையில்
அரையாடைப் பக்கிரி ஆகியிருந்தார்
அந்தக் கனவான்.



தன்னைக் காண வந்த
எளிய மக்களின் அரையாடை
அவரை சஞ்சலப்படுத்தியது.
தேவைக்கு மேல் வைத்திருப்பவன்
திருடன் என்ற ஞானோதயம்
அவருள் ஒலித்தது.
அதன்பின் நிகழ்ந்தது வரலாறு.

எளிமையே தலைமையின்
இலக்கணம் என்ற அந்த
இல்லறத் துறவி முன்பு
பணிந்தது தேசம்.
அவரிடம் மண்டியிட்டது
ஆங்கில ஏகாதிபத்தியம்.

அந்த மகான் தன்னை உணர்ந்து
விண்ணில் எழுந்த தருணம்-
புதுமையாய் மலர்ந்தது
காந்தியத்தின் அடையாளம்.
இந்த மாநிலத்தில் என்றும் வீசும்
தேசிய மண் வாசம்!



குறிப்பு:

மகாத்மா காந்தி தமிழகத்தின் 1921 செப். 20 அன்று மதுரைக்கு வந்திருந்தார். அப்போது, அங்கிருந்த எளிய மக்களின் அரையாடைக் கோலம் கண்டு, தானும் இடுப்பில் ஒரு அரைவேட்டி மட்டுமே அணிந்தவராக மாறினார். அந்த வரலாற்று நிகழ்வு நிகழ்ந்து ஒரு நூற்றாண்டு ஆகிறது. அதனை நினைவுகூரும் கவிதை இது…



No comments:

Post a Comment