18/10/2021

பாரதீயப் பெண்மணிகள் - ஒரு முழுமையான பார்வை (நூல் அறிமுகம்)

-திருநின்றவூர் இரவிக்குமார்

பாரதீயப் பெண்மணிகள் - ஒரு முழுமையான பார்வை
ஆசிரியர்: ரங்க ஹரி (ஹிந்தி மூலம்)
தமிழில்: உ.சுந்தர்.
வெளியீடு: விஜயபாரதம் பதிப்பகம், சென்னை.
விலை:  ரூ. 75/-

***

 62 பக்கங்கள் கொண்ட சிறிய நூல். ஏழு அத்தியாயங்கள் உள்ளன. வேதகாலம் தொடங்கி இன்றுவரை இந்தியப் பெண்களின் நிலையை ஒரு பருந்துப் பார்வையாகக் கூறுகிறார் நூலாசிரியர்.

ஒரு பருப்பு தானியத்தைப்  பிரித்தால் எப்படி அது இரு பக்கமும் சரிசமமாக இருக்குமோ அதுபோல, வேத காலத்தில் ஆண்களும் பெண்களும் சரிசமமாகக் கருதப்பட்டனர். ஆண்களுக்கு நிகராக பெண்களும் கல்வி கற்றவர்களாக இருந்தனர். யக்ஞோபவீதம் எனப்படும் பூணூல் அணியப் பெற்றிருந்தனர். வேள்விகளில் பங்கேற்கவும் வேள்விகளை தலைமை ஏற்று நடத்தவும் செய்தனர்;  தானங்களை அளித்தனர். அவ்வாறு அளிக்க அவர்களுக்கு செல்வம் இருந்தது மட்டுமன்றி, உரிமையும் இருந்தது. மணவிலக்கு செய்யவும், மறு விவாகம் செய்யவும் அவர்களுக்கு உரிமை இருந்தது. துறவு வாழ்க்கையை மேற்கொள்ளவும் அவர்களால் முடிந்தது. நாடு முழுவதும் சுற்றித் திரியவும் அவர்களுக்கு சுதந்திரம் இருந்தது.
 
இதற்கு நல்ல உதாரணமாக மஹிதாஸ் ரிஷியைக் கூறலாம். ஒரு ரிஷிக்கும் சூத்திர குலத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு பிறந்தவர். அதனால் பாரபட்சம் காட்டப்பட்டது தெரிகிறது. அவரின் தாய் தனியே அவரை வளர்த்து ஆளாக்குகிறார். அவர் எழுதிய வேதநூல் அனைவராலும் பாராட்டப்பட்டு , ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அவரது பெயரையே நூலுக்குச் சூட்ட முன்வருகிறார்கள். அவர் அதை மறுத்து தன் தாயாரை பெருமைப்படுத்தும் விதமாக அவர் பெயரையே வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார். அந்த தாயின் பெயர் இதரா. எனவே அந்த நூலுக்கு  ‘ஐதரேய பிராமணம்’ என்று பெயர் சூட்டப்படுகிறது. சூத்திர குலத்தைச் சேர்ந்த பெண் அறிவுள்ளவராகவும், தனித்து நின்று பிள்ளையை வளர்த்து, அவனுக்கு அறிவு புகட்டி, கற்றவர் சபையில் பாராட்டைப் பெறும் படி வைக்கக் கூடியவராகவும் இருந்திருக்கிறார்.

வேதங்கள் ‘அபௌருஷேயம்’எனப்படுகின்றன. அறிவு கொண்டு சிந்தித்து எழுதியது அல்ல, அண்டவெளியில் கண்டு எழுதப்பட்டது என்று இதற்கு அர்த்தம். அப்படிக் கண்டு எழுதியவர்கள் ரிஷிகள் எனப்பட்டனர். பெண் ரிஷிகளுக்கு ‘ரிஷிகா என்று பெயர். ரிஷிகளும் ரிஷிகாகளும் ஞானத்தில் முதிந்தவர்கள். உயரிய சிந்தனையுடன் தவ வாழ்க்கை வாழ்பவர்கள். தனக்காக அல்லாமல் சமுதாயத்துக்காக வாழ்பவர்கள்.

வேதங்களில் இருபத்து ஐந்து ரிஷிகாகளின் பெயர்கள் உள்ளன. அவர்களின் பெயர்களை பட்டியலிட்டுள்ளார் நூலாசிரியர். அவர்கள் கண்டு எழுதியது 266  மந்திரங்கள். அவை இன்றும் நடைமுறையில் உள்ளன. இன்றும் வைதீகத் திருமணங்களில் ஓதப்படும் மந்திரங்கள், சூரியா என்ற ரிஷிகா எழுதியதே.

இதிகாசம் என்றால் இது இப்படி நடந்தது என்று பொருள். அதாவது வரலாறு. வரலாற்றுக் காலம் ஆகிய ராமாயண- மகாபாரதக் காலத்தில் பெண்களின் நிலை வேத காலம் போலவே ஆண்களுக்கு நிகராக சுதந்திரமாகவும் இருந்தது. ராமாயணத்தில் மூன்று நாகரிகங்கள் காட்டப்படுகின்றன. ஒன்று அரண்மனைவாசிகள்- தசரதன் மனைவியர் , சீதை போன்ற அரண்மனை வாசிகள்;மிகவும் கற்றறிந்தவர்கள்; தசரதன் இறந்த பிறகு அவருக்கு சிரார்த்தம் செய்கிறார்கள்; தானம் செய்கிறார்கள்; அதற்கு உரிமை உள்ளவர்களாக இருக்கிறார்கள்.

தாரா, சூர்ப்பணகை போன்ற பெண்கள் வனத்தில் இருப்பது காட்டப்படுகிறது. இவர்கள் அரசியல் திறன் கொண்டவர்களாக இருக்கிறார்கள். வாலி போருக்குப் புறப்படும்போது அவனைத் தடுத்து நிறுத்திய தாரை, ‘இரண்டு மானுடர்கள் வில்லுடன் இப்பகுதியில் சுற்றித் திரிவதாக தகவல் வந்துள்ளது’  என்று எச்சரிக்கை செய்கின்றார். வாலிக்கு முன்பாகவே அவருக்கு உளவு தெரிந்தவராக காட்டப்படுகிறது. அதேபோல சூர்ப்பனகை; அவர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார். அவமானப்பட்ட போது ராவணனின் அரசவையில் அவன் ஆட்சியைப் பற்றி கேள்வி எழுப்புகிறார். இந்த இரண்டு பெண்களும் அரசியல் திறன் கொண்டவர்களாகவும், நாட்டு நடப்பைத் தெரிந்து கொண்டவர்களாகவும், கேள்வி எழுப்பக் கூடிய அளவுக்கு சுதந்திரம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.

அடுத்ததாக சபரி என்ற பக்தை. மந்தாரை, அசோகவனத்தில் இருக்கும் பெண்கள் என சாதாரணமானவர்களும் காட்டப்படுகிறார்கள்.

மகாபாரதத்தில் திரௌபதி. அவள் அரசவையில் அவமதிக்கப்பட்ட போது தர்மம் பற்றிக் கேள்வி எழுப்புகிறார்.  ‘தர்மராஜா தன்னை இழந்த பின் என்னை இழந்தாரா? என்னை இழந்த பின் தன்னை இழந்தாரா?” என்ற கேள்வி மிகவும் பிரபலமானது.

வேத காலமும் இதிகாச காலமும் வேறாக இருந்தாலும், பண்பாடு தொடர்கிறது. பெண்களின் நிலை அதே போலத் தொடர்கிறது.

 ‘ஜைன- பௌத்த காலங்களில் பெண்களின் நிலை’ என்ற அத்தியாயத்தில் பௌத்த பிக்குகளுக்கு நிகராக பிக்குணிகள் இருந்தனர். பிக்கு, பிக்குணி என்றால் ஞானம் பெற்றவர் என்று அர்த்தம். பிக்குணி என்பது பாலி மொழியில் தேரி என்கிறார்கள். 71  தேரியர்களின்  பெயர்களை பௌத்த வரலாற்றாசிரியர்கள் தொகுத்துள்ளனர். இந்தப் பெண் துறவியர் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மதத்தைப் பரப்பினார்கள். அதுமட்டுமன்றி வெளிநாடுகளுக்கும் சென்று மதத்தைப் பரப்பினார்கள். அசோகரின் மகளான சங்கமித்திரை இலங்கைக்குச் சென்று பௌத்தத்தைப் பரப்பினார் என்பது அனைவரும் அறிந்தது.

ஜைனப் பெண்கள் துறவிகளாவது இன்றும் உள்ளது. பெண் துறவிகள் சிறு கூட்டமாக வாயை துணியால் மூடிக்கொண்டு (கொரானா காலத்திற்கு முன்பும்) மெதுவாக நடந்து செல்வதைப் பார்த்திருக்கலாம். நாடு முழுவதும் இன்றும் இது நடந்து கொண்டிருக்கிறது.

ஸ்மிருதிகளின் காலத்தில் இந்நிலை மாறி உள்ளதைக் காண முடிகிறது. வேத, இதிகாச காலங்களில் பெண்கள் சுதந்திரமாகவும், கல்வியறிவு பெற்றவர்களாகவும், மந்திர திருஷ்டாவாகவும், வேள்விகளை நடத்துபவர்களாகவும், செல்வங்களைப் பெற்றவர்களாகவும், தானம் செய்ய உரிமை உள்ளவர்களாகவும் இருந்த நிலை மாறி இருப்பதைக் காண்கிறோம்.

நன்னடத்தை அற்ற, மற்ற பெண்களிடம் ஈடுபாடு கொண்டவனாக இருந்தாலும் கணவனே வணங்கத்தக்க கடவுள் (கல்லானாலும் கணவன்,  புல்லானாலும் புருஷன்) என பெண்களுக்கு விதிக்கப்படும் (மனு 30) நிலை ஏற்பட்டது. கணவனுக்குச் செய்யும் சேவையே பெண்கள் செய்யும் வேள்வி (மனு 31) என்றும்,  ‘பெண் குழந்தைப் பருவத்தில் தந்தையையும் இளமையில் கணவனையும் கணவன் மறைந்த பிறகு முதுமையில் மகனையும் சார்ந்து இருக்க வேண்டும். சுதந்திரமாக இருக்கக் கூடாது. சுதந்திரமாக இருந்தால் இரு குடும்பத்தினருக்கும் அவப்பெயர் ஏற்படுத்துகிறாள்’ ( மனு 34 ) என்பதும் ஸ்மிருதி காலத்தில் பெண்களின் நிலையாக இருந்தது.

சிலர்,  ‘எங்கு பெண்கள் மதிப்புடன் நடத்தப்படுகிறார்களோ அங்கே கடவுள்கள் வசிக்கிறார்கள்;  எங்கே பெண்கள் மதிக்கப் படவில்லையோ அங்கு நல்லது நடப்பதில்லை’ என்றும் ( மனு 36) மேற்கோள் காட்டுகிறார்கள். இது  ஆண்களுக்குக் கூறப்பட்ட அறிவுரை. பெண்களை கல்வி கற்பதில் இருந்து விலக்கி வைத்துவிட்டு (அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பெதற்கு?), பின்பு அவளை (சரஸ்வதி) வணங்குகிறேன் என்பது போலித்தனம் என்று சாடுகிறார் நூலாசிரியர்.

மனு ஸ்மிருதி உருவாக்கப்பட்ட காலம் என்ன? அப்பொழுது நிலவிய சமூக சூழல் என்ன? யார் ஆட்சிக்காலம்? அது மக்களிடம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது? போன்ற விஷயங்களுக்கு தெளிவான விடை இல்லை. இதில் இடைச்செருகல்கள் எவை? என்று கேட்டால் பதில் கிடையாது. மனு ஸ்மிருதி ஏதோ ஒரு காலகட்டத்தில், இந்த பரந்த இந்தியா முழுவதும் நடைமுறையில் இருந்தது என்று சொல்ல முடியுமா என்றால் பதில் இல்லை. பராசரர், யாக்ஞவல்கியர் ஸ்மிருதிகள் பற்றியும் இதே நிலைதான் உள்ளது.

பெண்கள் தாழ்த்தப்பட்டது பற்றி நூலாசிரியர் குறிப்பிடும் ஒரு விஷயம் சுவாரஸ்யமாக உள்ளது. மகாகவி காளிதாசருக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்தவர் மகாகவி பாஸர். அவர் பதிமூன்று நாடகங்களை சம்ஸ்கிருத மொழியில் எழுதி உள்ளார். அதில் ஆண்கள் எல்லோரும் உயர்வான சமஸ்கிருத மொழியில் பேசுகின்றனர். பெண்கள் அனைவரும் தாழ்வாகக் கருதப்பட்ட பிராகிருத மொழியில் பேசுகின்றனர்.

கிருஷ்ணரின் தந்தை வசுதேவர் சம்ஸ்கிருதத்தில் பேசுவார். தாய் தேவகி பிராகிருதத்தில் பேசுவார். பீமனும் பீமனின் மகன் கடோத்கஜனும் சம்ஸ்கிருதத்தில் பேசுவார்கள். ஆனால் கடோத்கஜனின் தாய் பிராகிருதத்தில் பேசுவார்‌. திருதராஷ்டிரன் சமஸ்கிருதத்திலும் காந்தாரி பிராகிருதத்தில் பேசுவதாக அவரது நாடகங்களில் உள்ளது.

அவருக்குப் பின் வந்த கவி காளிதாசரும் அதே வழியில் எழுதுகிறார். கண்வ மகரிஷியால் கல்வி புகட்டபட்டு, பண்புள்ளவளாக வளர்த்தெடுக்கப்பட்ட சகுந்தலை பிராகிருதத்தில் பேசுகிறார். அதேவேளையில், அரசனுக்கு வேட்டையில் உதவி செய்ய வந்த காட்டுவாசி தலைவன் சம்ஸ்கிருதத்தில் பேசுவான்.

இதன்மூலம் கதாபாத்திரங்களின் தன்மையை மீறி, ஆண்- பெண்  வேற்றுமையையும் மட்டுமன்றி, ஆணை உயர்வாகவும் பெண் இழிவுபடுத்தப் படுவதையும் குறிக்கிறது என்று நூலாசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.

பெண் நாலு சுவற்றுக்குள்ளே (அந்தர் ) சிறை வைக்கப்பட்டாள். இன்றும் கேரள பிராமணர்கள் தங்கள் வீட்டு பெண்களை அந்தர்ஜனம் என்று குறிப்பிடுவதைக் காணலாம்.  ‘ஒவ்வொரு ஆணின் தோல்விக்குப் பின்னே ஒரு பெண் இருப்பதைக் காணலாம்’ என்ற மலையாள சொலவடை இதன் உச்சமாக இருக்கிறது.

இதற்கு நேர்மாறாக உலகின் தொன்மையான மொழியான தமிழில் ஔவையார், கண்ணகி, மணிமேகலை, ஆண்டாள் என வேதகாலப் பண்பாடு தொடர்வதை - பெண்கள் கல்வி கற்றவர்களாக, சுதந்திரமானவர்களாக, துறவு மேற்கொள்ள உரிமை பெற்றவர்களாக இருப்பதைக் காணமுடிகிறது. திருவள்ளுவ நாயனாரும் ‘மனைமாட்சி’ என்ற அதிகாரத்தில் பெண்ணின் சிறப்பை வலியுறுத்துகிறார். தேசியப் பண்பாட்டை தமிழகம் காத்து நின்றது இதன்மூலம் புரிகிறது.

 ‘அடிமைக் காலத்தில் பெண்கள்’ என்ற அத்தியாயத்தில் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள், ஐரோப்பிய மற்றும் ஆங்கில கிறிஸ்தவர்களின் ஆட்சிக் காலத்தில் பெண்களின் நிலையைப் பற்றிக் கூறுகிறது. பெண்களுக்கு பர்தா அணியும் வழக்கம் இக்காலத்தில்தான் ஏற்பட்டது. இரவு நேரங்களில் திருமணம் செய்வது, பால்ய விவாகம் என்ற மோசமான பழக்கம், நாட்டியக் கலையில் ஈடுபடும் பெண்களை இழிவாகக் கருதுவது போன்ற பழக்கங்கள் எல்லாம் இக்காலத்தில் ஏற்பட்டவையே. பெண்களை அந்நியரிடமிருந்து இருந்து காப்பாற்ற உறுதி ஏற்கும் ரக்ஷாபந்தன் விழாவும் இக்காலத்தில் தான் ஏற்பட்டது.

இஸ்லாமிய ஆக்கிரமிப்பு தாடகை போல இருந்தது என்றால், மேற்கத்திய கிறிஸ்தவ ஆக்கிரமிப்புக்கு பூதகியை உதாரணமாகக் காட்டுகிறார் நூலாசிரியர். அவர்கள் சிரித்துக் கொண்டே நாட்டின் பொருளாதாரத்தைச் சுரண்டினர். ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்தையே கபடமாக, சுயமறதியில் ஆழ்த்தினர். ஆனாலும் அது நீடிக்கவில்லை. இந்திய சமுதாயம் விழிப்படைந்து தன்னை காத்துக்கொள்ளத் தொடங்கியது. பெண்களுக்கு நேரிட்ட இழிவு நீங்கத் தொடங்கியது. அது அந்நியர்களால் அல்ல, நம்மவர்களாலேயே தொடங்கியது.

விடுதலைச் சிந்தனைக்கு வித்திட்ட சுவாமி விவேகானந்தரின் குரு ராமகிருஷ்ண பரமஹம்சர். அவரது குரு அம்பா பைரவி என்ற பெண் துறவி. பரமஹம்சரின் துறவு வாழ்க்கைக்குரிய தவபூமியை ஏற்படுத்தித் தந்தவர் ராணி ராசாமணி என்ற பெண்மணி. 

ராணி மங்கம்மாள், வேலு நாச்சியார், ஜான்சி ராணி லட்சுமிபாய் என வீரப்பெண்மணிகள் தோன்றினர். சகோதரி நிவேதிதை, மேடம் காமா, டாக்டர் அன்னிபெசன்ட் போன்ற வெளிநாட்டுப் பெண்களும் இந்தியர்களாகி, கல்வித்துறையிலும் அரசியல் களத்திலும் ஆன்மிகத் தளத்திலும் வளர்ச்சிக்கு வழி வகுத்தனர். ஆரிய சமாஜத்தை துவங்கிய சுவாமி தயானந்தர் பெண்களுக்கு பூணூல் அணிவிக்கும் பழக்கத்தையும், வேள்விகளில் பங்கு எடுப்பதையும் மீண்டும் துவக்கினார்.

விண்வெளி ஆய்வு, மருத்துவம், நோய் மற்றும் மருந்து ஆய்வு, காவல், ராணுவம், அரசியல், இலக்கியம், இசை, சினிமா, தத்துவம், ஆன்மிகம், சமயம், விளையாட்டு, நீதித் துறை என இன்று பெண்கள் இல்லாத துறைகள் எதுவுமே இல்லை. அதுமட்டுமன்றி பல துறைகளில் அவர்கள் தலைமையேற்று நடத்தி வருவதையும் பார்க்கிறோம்.

ஆண்கள் செய்யக் கூடிய எல்லாவற்றையும் பெண்களாலும் செய்ய முடியும் என்பதை நிரூபித்து வருகின்றனர். இந்தியாவின் இடைக்காலத்தில் ஏற்பட்ட இருள், தொய்வு நீங்கி பண்டைய வேத காலத்திற்கு இணையான நிலை ஏற்பட்டுள்ளது. 

இது வெறும் துவக்கம் தான். மீண்டும் பாரதம் உலகின் குருவாக, தலைமை ஏற்று நடத்தும் நல்ல நாடாக மாறும் என்ற நம்பிக்கை பிறக்கிறது இச்சிறிய நூலைப் படிக்கும்போது.



No comments:

Post a Comment