18/10/2021

பாரத நாடு (கவிதை)

-மகாகவி பாரதி


(மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 22)


[ராகம்: ஹிந்துஸ்தானி தோடி]

பல்லவி

பாருக்குள்ளே நல்ல நாடு – எங்கள்
பாரத நாடு.


சரணங்கள்

ஞானத்தி லேபர மோனத்திலே - உயர்
மானத்திலே அன்ன தானத்திலே,
கானத்தி லேஅமு தாக நிறைந்த
கவிதையி லேஉயர் நாடு - இந்தப்

(பாருக்குள்ளே) 1

தீரத்தி லேபடை வீரத்திலே - நெஞ்சில்
ஈரத்தி லேஉப காரத்திலே,
சாரத்தி லேமிகு சாத்திரங் கண்டு
தருவதி லேஉயர் நாடு - இந்தப்

(பாருக்குள்ளே) 2

நன்மையி லேஉடல் வன்மையிலே - செல்வப்
பன்மையி லேமறத் தன்மையிலே,
பொன்மயி லொத்திடும் மாதர்தம் கற்பின்
புகழினி லேஉயர் நாடு - இந்தப்

(பாருக்குள்ளே) 3

ஆக்கத்தி லேதொழி லூக்கத்திலே - புய
வீக்கத்தி லேஉயர் நோக்கத்திலே,
காக்கத் திறல்கொண்ட மல்லர்தம் சேனைக்
கடலினி லேஉயர் நாடு - இந்தப்

(பாருக்குள்ளே) 4

வண்மையி லேஉளத் திண்மையிலே - மனத்
தண்மையி லேமதி நுண்மையிலே,
உண்மையி லேதவ றாத புலவர்
உணர்வினி லேஉயர் நாடு - இந்தப்

(பாருக்குள்ளே) 5

யாகத்தி லேதவ வேகத்திலே - தனி
யோகத்தி லேபல போகத்திலே
ஆகத்தி லேதெய்வ பக்திகொண் டார்தம்
அருளினி லேஉயர் நாடு - இந்தப்

(பாருக்குள்ளே) 6

ஆற்றினி லேசுனை யூற்றினிலே- தென்றல்
காற்றினி லேமலைப் பேற்றினிலே
ஏற்றினி லேபயன் ஈந்திடுங் காலி
இனத்தினி லேஉயர் நாடு - இந்தப்

(பாருக்குள்ளே) 7

தோட்டத்தி லேமரக் கூட்டத்திலே - கனி
ஈட்டத்தி லேபயி ரூட்டத்திலே
தேட்டத்தி லேஅடங் காத நிதியின்
சிறப்பினி லேஉயர் நாடு - இந்தப்

(பாருக்குள்ளே) 8

No comments:

Post a Comment