18/10/2021

‘விஜயா’வில் அரவிந்தர்

- திருநின்றவூர் இரவிகுமார்


(அரவிந்தம்-150)

(மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 21)

விடுதலை இயக்கமான காங்கிரஸில் இரண்டு பெரும் பிரிவுகள் இருந்தன. ஆங்கில அரசை அனுசரித்து சிலபல சலுகைகளைப் பெற்று அதில் திருப்தி அடைந்த மிதவாத கோஷ்டி ஒன்று. ஆங்கிலேயர்களை எதிர்த்து எல்லாவகையிலும் போராட்டத்தை முன்னெடுத்த தீவிர தேசியவாதிகள் என்று மற்றொரு பிரிவு. அதன் தலைவராக பாலகங்காதர திலகர் இருந்தார். அவரது கோஷ்டியில்தான் வங்காளத்தைச் சேர்ந்த அரவிந்தர் உட்பட பலரும், தமிழகத்தில் சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய பாரதி, சிவா போன்றோரும் இருந்தனர்.

கவிஞர், பல மொழி அறிந்தவர், பத்திரிகையாளர், சுதந்திரப் போராளி என்று -  பாரதியாருக்கும் அரவிந்தருக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. காங்கிரஸ் மாநாட்டில் அவர்கள் நெருக்கமானார்கள். பாரதியார் ‘சுதேசமித்திரன்’ நாளிதழில் உதவி ஆசிரியராக 1904-இல் தன் இதழியல் பணியைத் தொடங்கினார். அதே நாளிதழில் பின்னர் மீண்டும் உதவி ஆசிரியராக இருந்த போதுதான் 1921-இல் காலமானார்.

பாரதியாரின் பத்திரிகைப் பணி என்றதும் ‘இந்தியா’ வாரஇதழும்  ‘சுதேசமித்திர’னும் பலருக்கு நினைவுக்கு வரும். ஆனால் அவர் ஆசிரியராக இருந்தது ‘விஜயா’ என்ற நாளேடிற்குத் தான். சுமார் எட்டு மாதங்கள் பாரதியார் அதன் ஆசிரியராக இருந்துள்ளார்.

அரவிந்தர் மீது பெரும் மதிப்பு கொண்ட பாரதியார் ‘விஜயா’ பத்திரிகை சார்பாக அவரை நேர்காணல் செய்ய ஒருவரை கொல்கத்தாவுக்கு அனுப்பினார். விஜயா பத்திரிகையில் அது வெளிவந்தது. அரவிந்தரின் கூரிய அறிவு, தீவிர தேசபக்தி, ஆழ்ந்த இறை நம்பிக்கை ஆகியவை அதில் தெளிவாக வெளிப்பட்டுள்ளன. பேட்டி காண்பவரின் அவநம்பிக்கை, அது பற்றிய பாரதியாரின் கேலி எல்லாம் அதில் வெளிப்படுகின்றன.

அந்த நேர்காணல் இங்கு முழுமையாக:

ஸ்ரீமான் அரவிந்த கோஷுடன் ஸம்பாஷணை

சில தினங்களின் முன்பு நமது பத்திரிகைப் பிரதிநிதியொருவர் கல்கத்தாவிற்குப் போய் அங்கே ஸ்ரீமான் அரவிந்த கோஷுடன் பல விஷயங்களைப் பற்றியும் சம்பாஷணை செய்து வந்தனர். அந்த மஹாஞானியுடன் நம்மவர் செய்த சம்பாஷணையின் ஸாரம் இங்கு தரப்படுகின்றது.

கல்கத்தா காலேஜ் சதுரத் தெருவில் 6-ம் நெம்பர் வீட்டில் நமது பிரதிநிதி அரவிந்த பாபுவைத் தரிசனம் செய்தனர். இந்த வீடு இப்போது தேச நிர்வாஸம் செய்யப்பட்டிருக்கும் பாபு கிருஷ்ண குமார மித்திரருடையது. கீழே கிருஷ்ண குமார பாபுவின் குடும்பத்தார் வசிக்கிறார்கள். மேல் மெத்தையில் கிருஷ்ண குமார பாபுவின்  ‘ஸஞ்ஸீவனி’ பத்திரிகையினது காரியஸ்தலம். அங்கே இரண்டு அறைகளில் அரவிந்த பாபு தமது எழுத்து வேலை, தம்மைப் பார்க்க வந்தவருடன் ஸம்பாஷணை புரிதல் முதலிய காரியங்கள் செய்து வருகிறார்.

நமது பிரதிநிதி அங்கு போய் அரவிந்த பாபுவைப் பார்த்தவுடன்  “இவரா அரவிந்த பாபு?” என்ற எண்ணமுண்டாயிற்றாம். அந்த எண்ணம் பிறக்கும் போது நம்மவர் ஸ்ரீமான் அரவிந்தருடைய கண்களைப் பார்த்திருக்கவில்லை. அரவிந்தர் மெலிந்த சரீரமுடையவர். மேலே சாதாரண குடுத்துணி ஒன்று போட்டுக்கொண்டு அதிஸாமானிய மனிதரை போலே உட்கார்ந்திருந்தார். இதைக் கண்டவுடன் நம்மவருக்குப்  “பாரத நாட்டிற்கு நவீன மார்க்கம் காட்டி, மஹா பிரளயத்தின் மூலமாக நம்மை கரை சேர்க்க பிறந்திருக்கும் யோகி இவர் தானா?” என்ற வியப்புண்டாயிற்று.

கண்களைப் பார்த்த பிறகே நம்மவருடைய மனம் சமாதானமடைந்தது. ஆ! அந்தக் கண்களிலே என்ன அறிவு ! என்ன அருள்! என்ன அமைதி! மஹா சாந்தி, மஹா சாந்தி! அவரிருந்த அறை முற்றிலும் ஓர் பெரிய ஸத்துவ சாந்தி திகழ்ச்சி பெற்றிருந்தது.

அரவிந்த பாபு சிறைச்சாலையிலிருக்கும்போது நாராயண தரிசனம் செய்ததைப் பற்றி நம்மவர் சில கேள்விகள் கேட்டனர். இந்தக் கலியில் பரமாத்மா தரிசனம் கிடைப்பது துர்லபமாதலால் அரவிந்த பாபு விஷயத்தில்கூட நம்மவர் சிறிது ஐயம் கொண்டு அவரது பரமாத்ம தரிசனம் ஒருவேளை கனவிலேற்பட்டிருக்குமோ என்று சங்கிப்பாராயினர். அரவிந்தரின் மறுமொழியைக் கேட்டவுடனே நம்மவருடைய ஐயங்களெல்லாம் தீர்ந்து போயின. அவர் மறுமொழி கூறும்போது அவர் முகத்திலே தோன்றிய அடக்கத்தையும், அமைதியையும், சிரத்தையையும் நிஷ்கபடதன்மையையும், ஒளியையும் கண்டவுடனே நம்மவருக்கு அரவிந்தர் மஹா சித்தரென்பது தெளிவாய் விட்டது.

அரவிந்தர் கூறியது:  “ஆம், நான் நாராயணனை காணப் பெற்றேன். எனக்கு நிகழ்ந்த தரிசனங்களெல்லாம் ஜாக்கிர நிலையில் தோன்றின. அவை கனவுகளல்ல.”

நமது பிரதிநிதியின் கேள்வி:  “அந்த ஸ்திதியை அடைவதற்கு ஏதேனும் உபாயமிருக்கிறதா?”

அரவிந்தர் மறுமொழி: “ஆம். யோகமே வழி.”

கேள்வி:  “சிறைச்சாலையில் தாம் மாத்திரமே யோக சாதனம் செய்தீரா? வேறு யாரேனும் செய்தார்களா?"

மறுமொழி:  “வரேந்திரனும் என் போலவே சாதனம் செய்து கொண்டு வந்தான்.”

கேள்வி:  “அந்த யோகம் எவ்வகைப்பட்டது?”

மறுமொழி:  “பக்தி யோகம். எல்லா பொறுப்பையும் ஈசன் மீது வைத்துவிடு.  ‘நீ சிந்திப்பதும், பேசுவதும், செய்வதும் இவையெல்லாம் உன்னுடையனவல்ல. உன் மூலமாக ஈசனே சிந்திக்கிறான்; அவனே பேசுகிறான்; அவனே செய்கிறான்’ என்ற தெளிவு பெற முயற்சி செய். காலக் கிரமத்தில் அனுபூதி கிடைக்கும். தரிசனம் வேறு, ஸ்வாநுபூதி வேறு. அஹங்காரத்தை நசுக்கிவிடு.  ‘நான்’ அற்றிரு. ஆத்ம தியாகம் பழகு.”

தேச நிர்வாச வதந்தி

பிறகு ஆத்மார்த்த விஷயங்களை விட்டு நமது பிரதிநிதி லௌகிக விஷயங்களை பற்றிய பேச்சு தொடங்கினர்.

 “தம்மை ஸர்க்கார் அதிகாரிகள் தேச நிர்வாஸம் செய்யப் போவதாகக் கல்கத்தா முழுவதும் பேசிக் கொள்கிறார்களே. ஒருவேளை நம்மைக் கொண்டு போய்விட்டால் நாங்களென்ன செய்வது?” என்று நமது பிரதிநிதி கேட்டதற்கு---

அரவிந்தர்:  “கல்கத்தா போலீஸார் என்னைத் தேசத்தினின்றும் அகற்ற வேண்டுமென்று விரும்பியதற்கு வைஸிராயும் அவர் சபையினரும் இணங்கவில்லையென்று தெரிகிறது” என்றனர்.

நம்மவர் அதற்குமேல்,  “தம்மை அதிகாரிகள் இப்போது ஒன்றும் செய்ய மாட்டார்கள். இன்னும் சிறிது காலமிருந்து தாம் நாட்டிற்கு நல்வழி காட்ட வேண்டுமாதலால், ஈசன் தம்மை யாரும் தீண்டுதற்கு இடங்கொடுக்க மாட்டாரென்று நாங்களறிவோம்” என்றனர்.

அரவிந்த பாபு புன்னகை புரிந்தனர்.

நமது பிரதிநிதியின் எண்ணங்கள்

இங்ஙனம் சம்பாஷணை செய்து கொண்டு வரும்போதே நமது பிரதிநிதி தமது நெஞ்சிலே உதித்த எண்ணங்களைக் குறிப்பிட்டுப் பின்வருமாறு எழுதுகிறார்:

அரவிந்தருடைய குரல் மிகுந்த அமைதி கொண்டதாயிருந்தது. என் மனதில் சாந்தி பிறந்தது. எங்கும் ஒரே சாந்தியாகத் திகழ்ந்தது. தேசபக்தியின் பொருட்டாகப் பலவகைத் துன்பங்கள் அனுபவித்தவரும், பாரத நாடு முழுமையும் வியப்பெய்தும்படி அற்புதமான வசனங்கள் கூறியிருப்பவரும், சுதேசீய தர்மத்தின் ரிஷிகளிலொருவருமாகிய மஹானுடைய சன்னிதிக்கு வந்திருக்கிறோமென்ற எண்ணம் எனக்கு மிகுந்த ஆனந்தத்தை விளைத்தது. உடன்பிறந்த தம்பியொருவர் தூக்கு தண்டனைக்கு காத்திருக்கும்போது இந்த மனிதர் சிறிதேனும் மனச் சலனமில்லாமல் எங்களுடன் அமைதியோடும், சாந்தியோடும் சம்பாஷனை செய்துகொண்டிருந்தது எனக்கோர் புதுமையாகக் காணப்பட்டது.

மஹா ப்ரளயம்

இப்பால் நம்மவர் பற்பல கேள்விகள் கேட்டதற்கு அரவிந்தர் பெருங் கருணையுடன் மறுமொழி சொல்லிக்கொண்டே வந்தார். இறுதியாக நம்மவர் பாரத நாட்டின் தற்காலக் குழப்ப நிலையைப் பற்றி பேசலாயினர். அதைப் பற்றி ஏதோ சில கேள்விகள் கேட்டதற்கு அரவிந்தர் பின்வரும் தெய்வீகமான பிரசாதம் செய்திருக்கின்றனர்.

 “ஓர் பிரளயம் வருகிறது. அப்பிரளயம் வருவதற்குரிய முன்னடையாளங்களெல்லாம் தென்பட்டு வருகின்றன. 1906 -ம் வருஷத்துடன் கலியுகத்தில் 5000 வருஷங்களாய் விட்டன. 1907 -ம் வருஷ முதல் ஓர் புதிய காலம் தொடங்கியிருக்கிறது. இஃது பலத்திலும் அளவிலும் மிகுதி பெற்றுக்கொண்டே வருகிறது. இன்னும் நான்கு வருஷங்களில் இப்பிரளயம் எல்லோர் கண்ணுக்கும் தெரியும்படி நன்றாக விருத்திடைந்திருக்கும். அதற்கு அடுத்த 4 அல்லது 5 வருஷங்களில் இது பரிபூரணமாய் விடும்.”

கேள்வி:  “இப்பிரளயம் எப்படிப்பட்டது?”

மறுமொழி:  “மஹா பிரளயம், மாறுதல், புரட்சி, மஹா க்ராந்தி, உயர்ந்தோர் தாழ்தல், தாழ்ந்தோர் உயர்தல், மாறுதல், மாறுதல் ! எங்கு பார்த்தாலும் மாறுதல். அரசாட்சியிலே மாறுதல். நமது ஜனங்களிடம் மாறுதல். புதிய பிரச்சனைகள், புதிய சிந்தனைகள் - எல்லாச் செயல்களிலும் புதிய வழிகள். ஓம்.”

ஆதாரம்: விஜயா (18 செப்டம்பர் 1909)


‘இந்தியா’ பத்திரிகையின் ஆசிரியராக வில்லியனூர் எஸ்.லக்ஷ்மிநாராயண ஐயர் என்பவர் பதியப் பட்டிருந்தாலும் பாரதியாரே நடைமுறையில் அதன் ஆசிரியராக இருந்தார் என கருதப்படுகிறது. அதனால்  ‘இந்தியா’வில் வந்த கட்டுரைகள் பலவும் அப்படியே 'விஜயா'வில் வந்துள்ளன.

புதுவையில் முதலில் பாரதியாரும் பிறகு அரவிந்தரும் வந்து சேர்ந்த பிறகு இருவரும் தினசரி சந்தித்து பேசி பழகுவது ஏற்பட்டது. இதனால் அரவிந்தரின் கருத்துத் தாக்கம் பாரதியாரிடம் ஏற்பட்டது. அதேபோல் பாரதியார், மண்டயம் சீனிவாசாச்சாரியார் மூலமாக அரவிந்தர் தமிழக பக்தி வரலாற்றை முழுமையாகத் தெரிந்து கொண்டார் எனலாம். 

அரவிந்தர் நடத்திய ‘ஆர்யா’  பத்திரிகையில் பாரதியார் ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுதியுள்ளார். வைணவ ஆச்சார்யார் நம்மாழ்வார் பற்றி பாரதியார் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையை ஆவணி மாத யுவகாண்டீபத்தில் படித்திருக்கலாம்.



No comments:

Post a Comment