18/10/2021

தமிழக சுதந்திரப் போர்க்களத்தில் ஆன்மிகவாதிகள்

-ஈரோடு சரவணன்

வீரர் பூலித்தேவன்


நாடு முழுவதும் நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தின் போது, விநாயகர் சதுர்த்தி மற்றும் சிவாஜி ஜெயந்தி போன்ற பண்டிகைகளைக் கொண்டாடுவதன் மூலம் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்திற்கு எதிராக சமூக விழிப்புணர்வையும், புரட்சியுணர்வையையும் நாட்டு மக்களிடையே கொண்டுவந்தவர் பாலகங்காத திலகர். அதன் மூலம் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஹிந்துக்களை ஒருங்கிணைத்தார்.

தேசத்தையும், தெய்வீகத்தையும் போற்றி வழிநடந்தவர் திலகர். அவரது அடிச்சுவட்டைப் பின்பற்றி சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்ட பலரும், தேச விடுதலையுணர்வுடன் பாரதப் பண்பாட்டையும் காப்பதற்குப் போராடினார்கள். இவர்கள் நாட்டை நேசித்தது போலவே நமது நாட்டின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் போற்றிக் காப்பாற்றினார்கள்.
 

ஆரம்ப காலப் போராளிகள்:

மக்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடைபெறும் காலகட்ட்த்துக்கு முன்னதாகவே, அந்நியரை அகற்ற தமிழகத்தில் பல முயற்சிகள் நடைபெற்றுள்ளன. அவற்றில் ஈடுபட்டோரும் ஆன்மிக நாட்டம் உடையவர்களே.

1792-இல் துவங்கி ஒன்பதாண்டு காலம் நடைபெற்ற பாஞ்சாலங்குறிச்சிப் போர்தான் இந்திய விடுதலைப்போரின் முதல் நிகழ்ச்சியா இல்லை, நெற்கட்டான்செவ்வல் என்ற பகுதியை ஆண்டுவந்த பூலித்தேவனின் போராட்டம்தான் முதல் விடுதலைப் போராட்டமா என்று 1960களில் தமிழகத்தில் விவாதம் நடந்தது.

சிற்றரசர்களின் போராட்டங்களை விடுதலைப் போராட்டமாக வகைப்படுத்த முடியாது என்று ஒருசாராரும், ஆங்கிலேயரின் ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டம் எதுவுமே விடுதலைப் போராட்டம்தான் என்று ஒருசாராரும் கருதுகின்றனர். வரி கேட்டு தொல்லை செய்த வெள்ளையர்களை எதிர்த்து தீரத்துடன் முதன் முதலாக புலியாகப் பாய்ந்தது பூலித்தேவன்தான் என்பது மறுக்க முடியாத உண்மை.

இந்திய சுதந்திர வரலாற்றில் இவரது போராட்டக் காலம் மிகச் சிறியது என்றாலும், வெள்ளையர்களை விரட்ட முதன்முதலாக வாளெடுத்தது பூலித்தேவன் மட்டுமே. 1755இல் நெல்லைச் சீமையின் நெற்கட்டும் சேவல் கோட்டையை முற்றுகையிட்டு வரி வசூல் செய்த ஆங்கிலேய அதிகாரி கர்னல் ஹெரோனையும் அவனது படைகளையும் விரட்டியடித்து, தென்னகத்தின் சுதந்திர தாகத்துக்கு வித்திட்ட முதல் மாவீரன் பூலித்தேவனே.

அந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் கூட ஆங்கிலேயருக்கு எதிரான போரில் டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்களின் போன்ற அந்நியர்களின் உதவியை பூலித்தேவர் மறுத்துவிட்டார். அவரை சதியின்மூலம் தான் வெள்ளையன் வீழ்த்தினான்.

ஆரணிக் கோட்டைத் தலைவன் அனந்த நாராயணன் என்பவரது மாளிகைக்கு பூலித்தேவரை வரச் செய்து அங்கு கைது செய்யப்பட்டார். அவரை பாளையங்கோட்டைக்குக் கொண்டுசெல்லும் வழியில், சங்கரன்கோவிலின் இறைவனை வழிபட வேண்டும் என்று பூலித்தேவர் விரும்பியதாகவும், அதன்படி கும்பினிப் போர்வீரர்கள் புடைசூழச் சென்று இறைவனை வழிபட்டதாகவும் கூறப்படுகிறது.

அப்போது பெரிய புகை மண்டலமும் ஜோதியும் எழ, கைவிலங்குகள் அறுந்து விழ, அந்த ஜோதியில் கலந்தார் என்றும், பூலித்தேவன் சிவஞானத்துடன் ஐக்கியமானதால் ‘பூலிசிவஞானம்’ ஆனார் என்றும் நாட்டுப்புறப் பாடல்கள் கூறுகின்றன.

இன்றைக்கும் சங்கரன்கோவிலில் உள்ள சங்கர நாராயணர் கோயிலில் ‘பூலித்தேவர் மறைந்த இடம்’ எனப்படும் அறை பாதுகாக்கப்பட்டு வருகிறது.

வீரத்தின் விளைநிலம் மருது சகோதரர்கள்:

தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள் மருது சகோதரர்கள். இவர்களது களம் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த காளையார்கோவில் ஆகும். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடிய- பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள், ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்றனர். விருப்பாச்சி கோபால நாயக்கர் தலைமையிலான பழனி சதி வழக்கு அதில் குறிப்பிடத் தக்கது.

1801 ஜூன் 12 ஆம் தேதி, சின்ன மருது, திருச்சி,ஸ்ரீரங்கம் முதலிய இடங்களில் வெளியிட்ட அறிக்கை ‘ஜம்புத் தீவு பிரகடனம்’ என அழைக்கப்படுகிறது. அவ்வறிக்கையின் மூலம் எல்லா இனங்களையும் சேர்ந்த மக்கள் நாட்டுப்பற்றுடன் தேசம் காக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், ஆங்கிலேயருக்கு எதிராகப் போர் தொடுக்க வேண்டுமென்றும் அறைகூவல் விடுக்கப்பட்டது.

அதன் விளைவாக, ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் 1801 அக்டோபர் 24 இல் திருப்பத்தூரில் இவ்விருவரும் தூக்கிலிடப்பட்டனர். அதற்கு முன், காளையார்கோவில் கோயிலைத் தாக்குவதாக ஆங்கிலேயப் படை அறிவித்ததால்தான், அதைத் தடுக்க மருது சகோதரர்கள் சரணடைந்தனர்.

இவர்கள் காளையார்கோவிலில் உள்ள சொர்ணகாளீஸ்வரர் கோயிலின் கோபுரத்தைக் கட்டியதுடன், குன்றக்குடி, திருமோகூர் கோயில்களுக்கும், சுற்றியுள்ள பல கோயில்களுக்கும் திருப்பணி செய்தனர். மானாமதுரை சோமேசர் கோயிலுக்கு கோபுரம் கட்டி, தேரும் செய்தளித்துள்ளனர்.

பாஞ்சாலங்குறிச்சியின் கதநாயகனான வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு அனைவரும் அறிந்த்து. திருச்செந்தூர் செந்திலாண்டவனை மனதில் இருத்தியே ஆங்கிலேயருடன் போராட்டியவர் கட்டபொம்மன். அவரும் ஆங்கிலேயப் படையால் சதித் திட்டம் தீட்டி கைது செய்யப்பட்டு, 1799 அக். 16-இல் கயத்தாறில் தூக்கிலிடப்பட்டார்.

சேலம் விஜயராகவாச்சாரியார்:

மாபெரும் தேசியத் தலைவர், சுதந்திரப் போராட்டவீரர், அரசியல் சாசன வழிகாட்டி, ‘தென்னிந்தியாவின் சிங்கம்’ என்று போற்றப்பட்டவர் சேலம் சக்கரவர்த்தி விஜயராகவாச்சாரியார் (1852- 1944). அவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றவர்; தீவிர ஹிந்து உணர்வு கொண்டவர். ஏ.ஓ.ஹியூம், தாதாபாய் நௌரோஜி, கோபாலகிருஷ்ண கோகலே, சுரேந்திரநாத் பானர்ஜி, மதன்மோகன் மாளவியா, பாலகங்காதர திலகர் போன்ற தேசியத் தலைவர்களுடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் அரை நூற்றாண்டுக்கும் மேல் பங்கு வகித்தவர் இவர்.

1899ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் கொள்கை பரப்புக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். மதுவிலக்கு, நிலச் சீர்திருத்தம், குழந்தைத் திருமண எதிர்ப்பு, பெண்களுக்குச் சொத்துரிமை, தீண்டாமை ஒழிப்பு போன்ற திட்டங்களை நாட்டின் சுதந்திர லட்சியங்களுடன் இணைத்த பெருமை விஜயராகவாச்சாரியாருக்கு உண்டு. ஹிந்து மகா சபையின் தலைவராகவும் சில காலம் பதவி வகித்துள்ளார் (1931).

வ.வே.சு. ஐயர்:

திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குரைஞராக ஐந்தாண்டு காலம் தொழில்புரிந்தவர் வரகனேரி வேங்கட சுப்பிரமணிய ஐயர் (1981- 1925). ரங்கூனில் பாரிஸ்டர் ஒருவரிடம் இளம் வழக்குரைஞராகப் பணியாற்றிய ஐயர் ‘பாரிஸ்டர்’ படிப்பதற்காக 1907-இல் லண்டன் சென்றார். இங்கிலாந்திற்கு மேல்படிப்புக்காகச் செல்லும் இந்தியர்கள் வழக்கமாக தங்குமிடம் இந்தியா ஹவுஸ் விடுதி என்பது எழுதப்படாத நியதியாக இருந்தது. ஐயர் இந்தியா ஹவுஸில் விநாயக தமோதர சாவர்க்கரை சந்தித்த பின்னர் , தனது வாழ்வில் ஒரு மாற்றத்தைக் கண்டார்.

சாவர்க்கர் தலைமையில் ‘சுந்திர இந்திய சங்கம்’ என்ற அமைப்பு லண்டனில் உருவானது. அந்த அமைப்பின் துணைத் தலைவராக ஐயர் பொறுப்பேற்றுக் கொண்டார். 1857-இல் நடைபெற்ற முதல் சிப்பாய் கலகத்தின் பொன்விழா ஆண்டையொட்டி சாவர்க்கர் மராட்டியில் எழுதிய ‘முதலாவது இந்திய சுதந்திர போர்’ புத்தகத்தை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் வ.வே.சு. ஐயர்.

1909 ஜீலை 1ஆம் தேதி பிரிட்டிஷ் இந்திய விவகார துணை அமைச்சரான கர்சன் வில்லியை லண்டனில் மதன்லால் திங்க்ரா என்ற இளைஞர் சுட்டுக் கொன்றார். அந்த நிகழ்வுக்குப் பின்னர் கெடுபிடி அதிகமாயிற்று. ஐயர் பார்-அட்-லா தேர்வில் வெற்றி பெற்றார்; ஆயினும் பிரிட்டன் மன்னருக்கு விசுவாசமாக இருப்பதாகப் பிரமாணம் எடுக்க மறுத்ததன் காரணமாக பாரிஸ்டர் பட்டத்தைத் துறந்தார்.

மகாகவி பாரதியின் ‘இந்தியா’ இதழில் விடுதலைக்கு ஆதரவான கட்டுரைகள் பலவற்றை லண்டனிலிருந்தே எழுதினார். திரு.வி.க. வின் தேசபக்தன் பத்திரிகையில் ஆங்கிலேய அரசுக்கு எதிராக கட்டுரை எழுதியதற்காக சிறைத் தண்டனை பெற்றார். கலெக்டர் ஆஷ் துரையை சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதனுக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்தவர் வ.வே.சு. ஐயர் தான்.

ஐயருக்கு அரசியலும், இலக்கியத்துடன் தெய்வீகமும் இரண்டு கண்களாக இருந்தன. இவர் எழுதிய ‘குளத்தங்கரை அரசமரம்’தான் தமிழின் முதல் சிறுகதையாகும். பின்னாளில் சேரன்மாதேவியில் பரத்வாஜ ஆசிரமமும் தமிழ்க் குருகுலமும் அமைத்தார். பாபநாசம் அருவியில் 1925 ஜூன் 4-இல் மூழ்கி இவர் மூழ்கி மறைந்தது, சுதந்திரப் போரில் ஈடுபட்ட ஆன்மிகப் பற்றாளர்களுக்குப் பேரிழப்பு.

வ.உ.சிதம்பரம் பிள்ளை:

தென்னிந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ண இயக்கத்துக்கு வித்திட்ட, ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் நேரடி சீடரும், சுவாமி விவேகானந்தரின் சகோதரத் துறவியுமான சசி மகராஜ் உடனான சந்திப்பு, வழக்கறிஞர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

“சசி மகராஜ் என்னிடம், ‘சுதேச எண்ணங்கள் பல நன்மைகளைத் தரக் கூடியது, இது என் கருத்து’ என்று கூறினார். அவர் சொன்னது ஒரு விதையாக என்னுள் விழுந்தது. என் உள்ளம் அதனைப் போற்றிக் காத்தது” என்று அந்த சந்திப்பைப் பற்றிக் கூறுகிறார் வ.உ.சி. இந்த ’விதை'யின் இரு தளிர்களே ’தூத்துக்குடி கைத்தொழில் சங்கம்’ மற்றும் ’தரும சங்கம்’ என்று தமது சுய சரிதையில் குறிப்பிட்டுள்ளார்.

ஆங்கில ஆட்சிக்கு எதிராகச் செயல்பட்டத்தற்காக 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றவர் வ.உ.சி (1872- 1936). அதற்காக தனது சொத்து, சுகங்களை இழந்தவர். ஆங்கிலேயருக்குப் போட்டியாக சுதேசி நாவாய் கம்பெனியை நிறுவினார். 1907ஆம் ஆண்டு நடந்த சூரத் மாநாட்டில் அஞ்சா நெஞ்சர் என்று கூறப்படும் திலகர் பெருமானுக்கு உறுதுணையாக வ.உ.சி. விளங்கினார்.

விடுதலைப் போராட்டத்தைத் தூண்டியதற்காக 1908ஆம் ஆண்டில் இவர் கைது செய்யப்பட்டு 36 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். பின்னர் இத்தண்டனை ஆறு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. சிறையில் செக்கிழுத்தார்; கல்லுடைத்தார். இதனால் இவர் செக்கிழுத்த செம்மல் எனப் போற்றப்பட்டார். 1936 நவ. 18ஆம் நாள் தூத்துக்குடியில் மறைந்தார்.

மகாகவி பாரதி:

தேசியத்தையும் தெய்வீகத்தையும் இரு கண்களாக பாவித்த திலகரின் அடிச்சுவட்டில் வந்தவர் மகாகவி சுப்பிரமணிய பாரதி (1882- 1921). அந்நிய ஆதிக்கத்துக்கு எதிராக கடுமையான மதிப்பிடுகளுடன் இதழியல் பணியாற்றியவர்; அதே சமயத்தில் நையாண்டித்தனமாகவும் எழுதியவர். தனது தேசபக்திப் பாடல்களின் மூலம் தமிழக மக்களிடையே சுதந்திர தாகத்தை ஏற்படுத்தியவர். இந்தியா, சுதேசமித்திரன் போன்ற பத்திரிகைகளின் ஆசிரியராக வலம் வந்தவர். தனது வீட்டில் ஹரிஜன இளைஞர் ஒருவருக்கு பூணூல் அணிவித்து, காயத்ரி மந்திரம் சொல்லிக் கொடுத்தவர்.

தென்னாட்டைத் தட்டி எழுப்பிய பெருமை பாரதியின் ‘இந்தியா’ பத்திரிகைக்கு உண்டு என திரு.வி.க. குறிப்பிட்டுள்ளார். பத்திரிக்கை உலகில் ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய பாரதியின் ஆன்மிக, தெய்வீகக் கருதுகள் அனைவரும் அறிந்தவையே.

நீலகண்ட பிரம்மச்சாரி:

சீர்காழியை அடுத்த எருக்கஞ்சேரி எனும் கிராமத்தில் பிறந்தவர் நீலகண்ட பிரம்மச்சாரி (1889- 1978). சீர்காழி இந்து உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வரை படித்தார். ரகசிய இயக்கமான ‘அபிநவ பாரத இயக்கத்தின் தமிழகக் கிளையை 1907ஆம் ஆண்டில் துவக்கி, இந்திய விடுதலை இயக்கத்தில் தீவிர பங்காற்றினார். காங்கிரஸ் கட்சியில் இருந்த தீவிர எண்ணம் படைத்த வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பிபின் சந்திரபால், பாரதியார், சிங்காரவேலர் போன்றவர்களுடன் நட்புக் கொண்டிருந்தவர் நீலகண்டர்.

ஆஷ் துரையை சுட்டுக் கொன்ற வாஞ்சிநானுக்கு துணை நின்றதாக, நீலகண்டரும் கைது செய்யப்பட்டார். அப்போது நீலகண்ட பிரம்மச்சாரியின் வயது 21. நீலகண்டருக்கு ஏழாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. வாழ்வின் பெரும்பகுதியை இந்தியா, பாகிஸ்தான், மியான்மர் நாட்டுச் சிறைகளில் கழித்தவர். வாழ்வின் பிற்பகுதியில் சந்நியாசம் பெற்று, மைசூர் அருகே நந்தி மலையடிவாரத்தில் ஆசிரமம் அமைத்துக் கொண்டு ஸ்ரீ ஓம்காரானந்த சுவாமி என்ற பெயரில் வாழ்ந்து, தனது 88-ஆவது வயதில் 4 மார்ச் 1978-இல் காலமானார்.

சுப்பிரமணிய சிவா:


அரசியலையும் ஆன்மிகத்தையும் விடுதலைப் போராட்டத்தில் இணைத்துப் போராடியவர் சுப்பிரமணிய சிவா (1884- 1925). தமிழக மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச் செய்த சிறந்த பேச்சாளர் ‘ஞானபாநு’ என்ற இதழை நடத்தியவர். தனது வீரமிக்க பேச்சால் விடுதலை வேட்கையைத் தூண்டியதால் ’வீரமுரசு’ என்று போற்றப்பட்டவர். வ.உ.சி., மகாகவி பாரதியார் ஆகியோருடன் இணைந்து விடுதலைப் போராட்டங்களில் தீவிரமாகச் செயல்பட்டவர்.

தேசிங்குராஜன், சிவாஜி உள்ளிட்ட நாடகங்க நூல்களையும், வேதாந்த ரகஸ்யம், மோட்ச சாதனை ரகசியம் உள்ளிட்ட ஆன்மிக நூல்களையும் எழுதியுள்ளார். வ.உ.சி., பாரதியார், சுப்பிரமணிய சிவா ஆகிய மூவரையும் தமிழக விடுதலைப் போராட்டத்தில் மும்மூர்த்திகள் என அழைத்தனர். ராஜதுரோக வழக்கில் 1908-இல் வ.உ.சி.யுடன் கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனை அனுபவித்த சிவா, சிறை சித்ரவதைகள் காரணமாக தொழுநோயால் பாதிக்கப்பட்டார்.

தனது வாழ்வின் இறுதிக் காலத்தில், தருமபுரியில் பாரத மாதா ஆசிரமம் நிறுவினார். அங்கு பாரத மாதாவுக்கு ஆலயம் எழுப்ப வேண்டும் எனப் பாடுபட்டவர். 1925 ஜூலை 23-இல் மறைந்தார்.

தியாகி விஸ்வநாத தாஸ்:

நாடக மேடையை நாட்டின் விடுதலைக்காக மிகச் சிறப்பாக பயன்படுத்தியவர் விஸ்வநாத தாஸ் (1886- 1940). நாடக நடிகர்களிலேயே தலைசிறந்த தேசியவாதியாகவும், தெய்வீகவாதியாகவும் திகழ்ந்தவர். இளம் வயதிலேயே நாட்டின் விடுதலைக்காகப் போராடும் தலைவர்களுடன் நட்பு கொண்டிருந்தார். இவரது உணர்ச்சி மிகுந்த தேசபக்தி நாடகத்தால், மகாத்மா காந்தியே இவரைப் பாராட்டி இருக்கிறார். 1919 இல் பஞ்சாப் படுகொலை நடந்தபோது ‘பஞ்சாப் படுகொலை பாரீர்.. கொடியது பரிதாபமிக்கது’ என்று பாடி தேசப்பற்றை மக்களுக்கு ஊட்டியவர். இவரது நாடகங்களில் விடுதலை உணர்வைத் தூண்டும் பாடல்கள் பல அமைந்தன.

இவர் வெள்ளைக்காரர்களை மறைமுகமாகக் குறிப்பிட்டு ‘கொக்கு பறக்குதடி பாப்பா, வெள்ளைக் கொக்கு பறக்குதடி பாப்பா’ என்று பாடிய பாடல் புகழ் பெற்றது. இவர் தம் நாடகங்களின் மூலம் வசூலாகும் பணத்தைச் சுதந்திரப் போராட்டத்துக்கு அர்ப்பணித்து வாழ்ந்தார். ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டு சிறைவாசம் சென்றவர். திருமங்கலம் வட்ட காங்கிரஸ் கமிட்டியிலும், மதுரை ஜில்லா போர்டிலும் காங்கிரஸ் உறுப்பினராக இருந்தவர்.

கோவை சுப்ரி:

1925-இல் அகில இந்திய நூற்போர் சங்கம் திருப்பூரில் தொடங்கப்பட்டது. இதனைத் தொடங்க கதர் இயக்கத்தின் நாயகரான கோவை அய்யாமுத்துவுடன் சேர்ந்து பணியாற்றிய கோவை சுப்ரி (1898 – 1993) என்ற சுப்பிரமணியத்தின் பங்களிப்பு முக்கியமானது. இந்த சங்கம் திருப்பூரில் தொடங்கப்பட்ட காலத்துக்குப் பின் கதர் உற்பத்தி பல கிராமங்களிலும் அதிகரித்தது.

1930-இல் மகாத்மா காந்தி தண்டி யாத்திரை மேற்கொண்ட போது அந்த போராட்டம் நடைபெற்ற அனைத்து நாட்களும் சுப்ரி கோவையில் ஊர்வலங்களை நடத்தினார். அன்னிய துணி எதிர்ப்பு மற்றும் வெள்ளையனே வெளியேறு இயக்கப் போராட்டங்களில் பங்குபெற்று சிறை சென்றவர். முருகப் பெருமான் மீது பக்தி மிக்க சுப்ரி, ‘முருக கானம்’ என்ற பெயரில் ஆன்மிக நூலை எழுதியுள்ளார்.

கே.பி.சுந்தராம்பாள்:

கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் (1908- 1980), தமிழிசை, நாடகம், அரசியல், ஆன்மிகம் எனப் பலதுறைகளிலும் புகழ் ஈட்டியவர். தனது கணவர் கிட்டப்பாவுடன் சேர்ந்து இதிகாச நாடகங்களில் தொடக்கத்தலிருந்தே நடித்து வந்த அவர், ஆங்கிலேயரின் ஆட்சிக்கு எதிரான ஏராளமான பாடல்களை அந்த நாடகங்களின் இடையிலேயே கதையுடன் இணைத்துப் பாடினார்.

நாடகங்களில்லாமல் தனித்த பாடல்களாகவும் விடுதலைப் போராட்டப் பாடல்களை இவர்கள் இருவரும் பாடினார்கள். முருகப் பெருமானைப் பாடும் பாடல்களிலும் ஊடே தேச பக்தியை ஊட்டும் பாடல்களையும் பாடுவார். ‘ஓட்டுடையோர் எல்லாம் கேட்டிடுங்கள்’ என்ற பாடல் பிரசித்தி பெற்ற பாடல்.

முத்துராமலிங்க தேவர்:

‘தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்’ என கூறியவர் பசும்பொன் முதுராமலிங்க தேவர் (1908 -1963). வாழ்வின் இறுதிவரை தெய்வீகத்தில் சமரசம் செய்து கொள்ளாதவர். வழக்கறிஞர் சீனிவாசன் இல்லத்தில் இவர் தங்கியிருந்தபோது பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் தேசபக்தியை அறிந்து கொண்டார் நேதாஜி. அதன் விளைவாக அவரை கொல்கத்தாவில் உள்ள தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார் நேதாஜி.

நேதாஜியின் வலதுகரமாக தமிழகத்தில் செயல்பட்டவர் தேவர். 1939ஆம் ஆண்டு, மதுரையில் வைத்தியநாத ஐயர் முன்னின்று நடத்திய ஹரிஜன ஆலயப் பிரவேசம் இவரது துணையால் தான் வெற்றிகரமாக நடைபெற்றது.

திரு.வி.கல்யாண சுந்தரனார்:

தமிழ் அறிஞர் யாழ்ப்பாணம் நா.கதிரவேற் பிள்ளையிடம் புராணங்கள், யாப்பிலக்கணமும், மயிலை மகாவித்வான் தணிகாசல முதலியாரிடம் வடமொழி, சைவ சமய நூல்களும், பாம்பன் சுவாமிகளிடம் உபநிடதங்களும் கற்றவர் திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் எனப்படும் திரு.வி.க. (1883- 1953). நீதிபதி சதாசிவ ராவின் தொடர்பால் ஆங்கில அறிவு பெற்றார். அன்னிபெசன்ட் அம்மையார், மறைமலை அடிகளாரின் தொடர்பு இவரை உயர்த்தியது.

1906-iல் ஸ்பென்சர் நிறுவனத்தில் கணக்கராகச் சேர்ந்தார். விடுதலை இயக்கத்தில் ஈடுபாடு ஏற்பட்டதால், அந்த வேலையைத் துறந்தார். வெஸ்லி கலாசாலையிலும், பள்ளியிலும் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். ‘தேச பக்தன்’ பத்திரிகையின் ஆசிரியராக இரண்டரை ஆண்டுகள் இருந்தார். தனது எழுச்சிமிக்க எழுத்துகளால், ஆங்கில ஆட்சிக்கு எதிராக மக்களை பொங்கியெழச் செய்தார். அந்நிய அடக்குமுறையை எதிர்த்து மேடைகளில் ஆவேசமாக உரை நிகழ்த்தினார்.

சென்னை மகாஜன சங்கக் கூட்டத்தில் ‘இனி எங்கும் எவரும் தமிழிலேயே பேசவேண்டும்’ என்ற தீர்மானத்தைக் கொண்டுவந்தார். சென்னையில் மகாத்மா காந்தி ஆற்றிய உரையை அற்புதமாக மொழிபெயர்த்து காந்தியடிகளிடம் பாராட்டுப் பெற்றார். திலகரே இவரது அரசியல் குரு. 1920-இல் ‘நவசக்தி’ வார இதழைத் தொடங்கி 20 ஆண்டுகள் நடத்தினார். தன் எழுத்துகளால் தேசபக்திக் கனலை மூட்டினார். 1926-ல் அரசியலைத் துறந்தார். பாலசுப்பிரமணிய பக்த ஜனசபை, மாதர் சங்கம், கைம்மைப் பெண்கள் கழகம் ஆகிய அமைப்புகள் உருவாகக் காரணமாக இருந்தார்.

முருகன் அருள் வேட்டல், செய்யுள்கள், மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், நாயன்மார் வரலாறு, தேசபக்தாமிர்தம், என் கடன் பணி செய்து கிடப்பதே, சைவசமய சாரம், நாயன்மார் திறம், சைவத் திறவு, முருகன் அல்லது அழகு என பல்வேறு துறைகளில் ஏராளமான நூல்களைப் படைத்துள்ளார்.

விடுபட்டோர் ஆயிரம்…

இவர்கள் மட்டுமல்லாது, தமிழகத்தில் சுதந்திர வேட்கையில் போராடிய ஆன்மிகப் பெரியவர்களின் பட்டியல் மிகவும் நீளமானது. கல்கி தி. சதாசிவம் , கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி. வெ. அ. சுந்தரம் . காந்தி ஆசிரமம் கிருஷ்ணன், குமராண்டிபாளையம் ஏ. நாச்சியப்பன், கோடை எஸ். பி. வி. அழகர்சாமி, தி.சு.அவினாசிலிங்கம் செட்டியார், பாஷ்யம் என்கிற ஆர்யா, சாவடி அருணாசலம் பிள்ளை, சீர்காழி சுப்பராயன், சேலம் ஏ. சுப்பிரமணியம், தி. மா. ஜம்புலிங்கம முதலியார், சவலை ராமசாமி முதலியார், பெ. வரதராஜுலு நாயுடு, ருக்மிணி லக்ஷ்மிபதி, தஞ்சை ஏ. ஒய்.எஸ். பரிசுத்த நாடார் , ஆறுமுகனேரி தூக்குமேடை ராஜகோபால் போன்ற மேலும் நூற்றுக்கணக்கான ஆன்மிகவாதிகள் போராட்டக் களத்தில் முன்னின்றவர்கள்.


குறிப்பு:


திரு. ஈரோடு சரவணன்
பாஜகவின் முன்னாள் மாநில பிரசார அணி தலைவர்.


No comments:

Post a Comment