18/10/2021

தமிழகத்தில் நேதாஜியின் நிழல்

-தஞ்சை வெ.கோபாலன்


பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
(பிறப்பு: 1908, அக். 30 - மறைவு: 1963, அக். 30)


பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற பெயர் தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளிலுள்ள ஊர்களில் கூட பிரபலமான பெயர். தேசியமும் தெய்வீகமும் தனது இரு கண்களாகப் பாவித்த மகான். தமிழகத்தில் நேதாஜியின் நிழலாக வர்ணிக்கப்படுபவர் தேவர்.

மதுரைப் பகுதியில் சுதந்திரப் போரை முன்னின்று நடத்திய தீரர்களில் முதன்மையானவர் பசும்பொன் தேவர். ராஜாஜி தேவர் மீது அன்பும் பற்றும் கொண்டவர். ‘நான் அர்ஜுனன் என்றால் தேவர்தான் சாரதி’ என்றார் அவர்.

மதுரையில் ஏ.வைத்தியநாத ஐயர் தலைமையில் ஆலயப் பிரவேசம் மேற்கொண்ட போது பலத்த எதிர்ப்பு இருந்தது. அப்போது ராஜாஜி, தேவர் அவர்களைத் தான் சத்தியாக்கிரகிகளுக்குத் துணையாக இருக்கப் பணித்தார். கதிரவனைக் கண்ட பனி போல எதிர்ப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்தது. ஆலயப் பிரவேசம் மிக விமரிசையாக நடந்தது. தேசியமும் தெய்வீகமும் தேவர் கடைப்பிடித்த இரு கொள்கைப் பிடிப்புகள்.
 
அந்த நாளில் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு உள்பட்ட சில பகுதிகளில் நீதிக்கட்சியினரின் அத்துமீறல்களைத் எதிர்த்து, அங்கெல்லாம் தேசிய முழக்கங்களை எதிரொலிக்கச் செய்து ‘காங்கிரசைக் காத்தவர்’ எனும் பாராட்டை தீரர் சத்தியமூர்த்தியிடம் பெற்றவர் தேவர்.

முத்துராமலிங்க தேவர், ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி அருகேயுள்ள பசும்பொன் கிராமத்தில் 1908-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30-ஆம் நாள் பிறந்தார். தந்தை உக்கிரபாண்டி தேவர், தாயார் இந்திராணி அம்மையார். இளம் வயதில் இவர் தாயை இழந்தார். தாயை இழந்த இந்தத் தனயனுக்கு ஒரு இஸ்லாமியப் பெண் தாய்ப்பால் ஊட்டி வளர்த்தார்.

1927-ஆம் ஆண்டு தனது 19-ஆவது வயதில் சென்னை சென்று வழக்கறிஞரும் காங்கிரஸ் தலைவருமான எஸ்.சீனிவாச ஐயங்காரைச் சந்தித்த பின் காங்கிரசில் சேர்ந்தார். அப்போது சென்னையில் டாக்டர் அன்சாரியின் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் மகாநாட்டில் கலந்து கொண்டார். அங்கு நேதாஜி சுபாஷ் சந்திர போசின் அறிமுகம் இவருக்குக் கிடைத்தது. அதன் பிறகு ஊர் திரும்பிய தேவர் தென் மாவட்டங்களில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு சுதந்திரப் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

விவசாயக் குடும்பத்தில் பிறந்த தேவர், புகழ்பெற்ற தலைவர்கள் பலரை அழைத்து ராஜபாளையத்தில் விவசாயிகள் மாநாட்டினை நடத்தினார். ராஜாஜி 1937-இல் சென்னை மாகாண முதல்வராகப் பொறுப்பு ஏற்றபின் ஆலயப் பிரவேசச் சட்டத்தைக் கொண்டு வந்தார். தாழ்த்தப்பட்டவர்களை ஆலயத்துள் அழைத்துச் செல்லும் பொறுப்பை மதுரையில் ஏ.வைத்தியநாத ஐயர் மேற்கொண்டார். அவருக்கு அங்கு பயங்கர எதிர்ப்பு ஏற்பட்டது. அந்த எதிர்ப்பை முறியடித்து அந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார் தேவர்.

ராமநாதபுரம் ஜில்லா போர்டு தேர்தலில் இவர் முதுகுளத்தூரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஜில்லா போர்டு தலைவராக வருவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால் கட்சி பி.எஸ்.குமாரசாமி ராஜாவின் பெயரை சிபாரிசு செய்ததும், அவரது வெற்றிக்கு உறுதுணையாக இருந்து பாடுபட்டார் தேவர்.

1937-இல் சட்டசபை தேர்தல் நடந்தது. அப்போது பலம்பொருந்திய கட்சியாக விளங்கிய நீதிக்கட்சிக்கும் காங்கிரசுக்கும் பலத்த போட்டி. ராமநாதபுரம் தொகுதியில் ராமநாதபுரம் ராஜா நீதிக்கட்சி சார்பில் நின்றார். அவர் சமஸ்தானத்தில் மன்னருக்கு எதிராக யார் காங்கிரசில் போட்டியிட முடியும்? அப்படி போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியுமா? அந்த நிலையில் தேவரை காங்கிரஸ் கட்சி அங்கு நிறுத்துகிறது. தேவரே வெற்றி பெற்றார்.

அப்போது சாத்தூர் தொகுதியில் காமராஜ் நின்றார். அந்தத் தேர்தலில் கடும் எதிர்ப்பு அமளிக்கு இடையே காமராஜை வெற்றி பெற வைத்தவர் தேவர் தான்.

காங்கிரசில் அப்போது மகாத்மா காந்தியின் தலைமைக்கும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கும் போட்டி நிலவியது. திரிபுரா காங்கிரசில் மகாத்மா காந்தி பட்டாபி சீதாராமையாவை தலைமைப் பதவிக்கு நிறுத்துகிறார். நேதாஜியை தீவிர தேசபக்தர்கள் ஆதரித்தனர். இந்தப் போட்டியில் தேவர் நேதாஜியை ஆதரிக்கிறார். நேதாஜி வெற்றி பெற்றதும் காந்திஜி, ‘பட்டாபியின் தோல்வி என் தோல்வி’ என்று அறிவித்தார். காங்கிரசில் அப்போது இரு கோஷ்டிகளுக்கிடையே ஒற்றுமையில்லாமல் பிறகு நேதாஜி ராஜிநாமா செய்யும் சூழ்நிலை ஏற்பட்டது. காங்கிரசிலிருந்து வெளியேறிய நேதாஜி ‘பார்வர்டு பிளாக்’ எனும் கட்சியைத் தோற்றுவிக்கிறார். அதில் தேவர் அங்கம் வகித்தார்.

இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் தேவர் தீவிரவாத கோஷ்டியைச் சேர்ந்தவர் என்று சொல்லி அவரை மதுரையை விட்டு வெளியே போகக் கூடாது என்று தடை விதித்தனர். இதுபோன்ற அடக்குமுறைகளுக்கு அடிபணியக் கூடியவரா தேவர்? தடையை மீறி சொந்த கிராமமான பசும்பொன்னுக்குச் செல்கிறார். வழியில் திருப்புவனத்தில் கைது செய்யப்பட்டு 18 மாத சிறை தண்டனை பெற்றார்; திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார் 1939 செப்டம்பர் மாதத்தில்.

18 மாத சிறைத் தண்டனை முடிந்து வெளியே வந்த தேவரை, சிறைச்சாலை வாயிலில் மறுபடியும் கைது செய்கிறார்கள். பாதுகாப்புச் சட்டத்தின் படி மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். திருச்சி, வேலூர், அலிப்புரம், ராஜமுந்திரி, அம்ரோட்டி ஆகிய சிறைகளில் இவர் அடைக்கப்பட்டிருந்தார். போரில் ஜப்பான் சரணடைந்த பிறகு தேவர் ஆறாண்டு சிறைவாசத்துக்குப் பிறகு வெளியே வந்தார்.

சுதந்திரம் பெறும் காலம் நெருங்கிவிட்டதற்கான அறிகுறிகள் தோன்றத் தொடங்கின. 1946-இல் சட்டசபைக்குத் தேர்தல் நடந்தது. தேவர் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். டி.பிரகாசம் முதல்வராகப் பதவியேற்றார். தேவரை தன்னுடைய அமைச்சரவையில் சேரும்படி பிரகாசம் அழைத்ததை தேவர் ஏற்றுக் கொள்ளவில்லை.

காங்கிரசின் ஒரு பிரிவாக செயல்பட்டு வந்த நேதாஜியின் பார்வர்டு பிளாக் கட்சி 1948-ல் தனிக் கட்சியாக வெளியே வந்தது. அப்போதிலிருந்து தேவர் காங்கிரசில் இல்லை, பார்வர்டு பிளாக்கின் தலைமைப் பொறுப்பில் இருந்தார். இந்த நிலையில் இந்திய அரசியல் சட்டம் அமலுக்கு வந்து குடியரசாக 26-1-1950-இல் பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்தியக் குடியரசின் முதல் பொதுத் தேர்தல் 1952-இல் நடைபெற்றது. தேவர் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியிலும், அருப்புக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதியிலும் ஒரே நேரத்தில் போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றி பெற்று, பின் சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்தார்.

மதுரையில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையின் போது அதில் பங்குகொண்ட ஒருவர் கொலையுண்ட வழக்கில் தேவர் கைதுசெய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையில் இருந்தார். அங்கு இவரது உடல்நலம் கெட்டது. அப்போது தென் மாவட்டங்களில் இருவேறு பிரிவினர்களுக்கிடையே கலவரம் மூண்டது. அப்போது காமராஜ் முதலமைச்சராக இருந்தார். மதுரையில் இவர் கைது செய்யப்பட்ட நிகழ்ச்சியே ஒரு நாடக பாணியில் அமைந்தது.

விடியற்காலை எழுந்து மதுரையிலிருந்து புறப்பட்டு முதுகுளத்தூர் புறப்பட்டு வைகை நதிப் பாலத்தில் அவரது கார் வரும்போது பாலத்தின் நடுவில் போலீஸார் இவரைத் தடுத்து நிறுத்தி கைது செய்கிறார்கள். காரிலிருந்து கீழே இறங்கிய தேவர் முழங்காலுக்கும் கீழ் வரை தொங்கும் தனது பழுப்பு நிற கதர் ஜிப்பாவில் கைவிட்டது தான் தாமதம், போலீஸ் அதிகாரிகள் அவர் கைகளைப் பிடித்துக் கொள்கிறார்கள். இவர் ஏதோ ஆயுதத்தை எடுக்கிறார் என்று. இவர் அவர்களை ஒதுக்கிவிட்டுத் தன் பையிலிருந்து பட்டினால் ஆன திருநீற்றுப் பையை எடுத்து, அதிலிருந்து கைநிறைய திருநீற்றை எடுத்துத் தன் நெற்றியில் பூசிக்கொண்டு, ‘ஊம் இப்போது போகலாம்’ என்றார். பிற்பாடு இவ்வழக்கில் நிரபராதி என தேவர் விடுதலை ஆனார்.

தேவர் இப்போதைய மியன்மார் எனும் பர்மாவுக்குச் சென்று அங்கு வாழும் தமிழ் மக்களையெல்லாம் சந்தித்திருக்கிறார். அவர்கள் இவருக்கு மிகச் சிறப்பான வரவேற்பை அளித்தனர். அங்கு சென்ற பல இந்தியத் தலைவர்களில் இவருக்கு அளித்தது போன்ற வரவேற்பு வேறு யாருக்கும் அளிக்கப்பட்டதில்லையாம். எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ, உலகின் அத்தனை பகுதிகளிலும் தேவரின் புகழ் பரவிக் கிடந்தது.

1957-இல் நடந்த பொதுத் தேர்தலிலும் இவர் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி, ஸ்ரீவில்லிபுத்தூர் நாடாளுமன்றத் தொகுதி இரண்டிலும் போட்டியிட்டார். இரண்டிலும் மறுபடி வெற்றி. இந்த முறையும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வைத்துக் கொண்டு சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார்.

உடல்நலம் கெட்டுவிட்ட நிலையில் 1962-ல் நாடாளுமன்றத்துக்கு மட்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனாலும் இவர் தில்லி சென்று பதவி ஏற்றுக் கொள்ளமுடியாதபடி உடல்நிலை கெட்டு விடுகிறது. தன்னுடைய நண்பர் திருச்சி டாக்டர் காளமேகம் அவர்களிடம் தங்கி ஓய்வு எடுத்துக் கொண்டு, வைத்தியம் செய்தும் முடியாமல் மதுரை சென்றார். அங்கு அவர் 30-10-1963-இல் தனது 55-ஆம் வயதில் இவ்வுலக வாழ்க்கையை நீத்து உயிர் துறந்தார்.

வாழ்க தீரர் முத்துராமலிங்கத் தேவரின் புகழ்!





No comments:

Post a Comment