17/10/2020

தேசியக் கல்வி

-மகாகவி பாரதி



ஓரு தேசம் என்பது கோடானுகோடி குடும்பங்களின் தொகுதி. குடும்பங்கள் இல்லாவிட்டால் தேசம் இல்லை. தேசம் இல்லாவிடில் தேசியக் கல்வியைப் பற்றி பேச இடமில்லை. தமிழ் நாட்டில் தேசியக் கல்வி என்பதாக ஒன்று தொடங்கி, அதில் தமிழ் பாஷையைப் பிரதானமாக நாட்டாமல், பெரும்பான்மைக் கல்வி இங்கிலீஷ் மூலமாகவும், தமிழ் ஒருவித உப பாஷையாகவும் ஏற்படுத்தினால் அது  ‘தேசியம்’ என்ற பதத்தின் பொருளுக்கு முழுதும் விரோதமாக முடியுமென்பதில் ஐயமில்லை. 

தேச பாஷையே பிரதானம் என்பது தேசியக் கல்வியின் ஆதாரக் கொள்கை. இதை மறந்துவிடக் கூடாது. தேச பாஷையை விருத்தி செய்யும் நோக்கத்துடன் தொடங்கப்படுகிற இந்த முயற்சிக்கு நாம் தமிழ் நாட்டிலிருந்து பரிபூர்ண ஸஹாயத்தை எதிர்பார்க்க வேண்டுமானால், இந்த முயற்சிக்குத் தமிழ் பாஷையே முதற் கருவியாக ஏற்படுத்தப்படும் என்பதைத் தம்பட்டம் அறைவிக்க வேண்டும். 

இங்ஙனம் தமிழ் பிரதானம் என்று நான் சொல்லுவதால், டாக்டர் நாயரைத் தலைமையாகக் கொண்ட திராவிடக் கக்ஷியாருக்கு நான் சார்பாகி, ஆர்யபாஷா விரோதம் பூண்டு பேசுகிறேன் என்று நினைத்துவிடலாகாது. தமிழ்நாட்டிலே தமிழ் சிறந்திடுக! பாரத தேசமுழுதிலும் எப்போதும் போலவே வடமொழி வாழ்க. இன்னும் நாம் பாரத தேசத்தின் ஐக்கியத்தைப் பரிபூர்ணமாகச் செய்யுமாறு நாடு முழுவதிலும் வடமொழிப் பயிற்சி மேன்மேலும் ஓங்குக! எனினும் தமிழ்நாட்டில் தமிழ்மொழி தலைமை பெற்றுத் தழைத்திடுக! 

ஆரம்பப் பள்ளிக்கூடம்: 

உங்களுடைய கிராமத்தில் ஒரு பாடசாலை ஏற்படுத்துங்கள். அல்லது, பெரிய கிராமமாக இருந்தால் இரண்டு மூன்று வீதிகளுக்கு ஒரு பள்ளிக்கூடம் வீதமாக எத்தனை பள்ளிக்கூடங்கள் சாத்யமோ அத்தனை ஸ்தாபனம் செய்யுங்கள். 

ஆரம்பத்தில், மூன்று உபாத்தியாயர்கள் வைத்துக்கொண்டு ஆரம்பித்தால் போதும். இவர்களுக்குச் சம்பளம் தலைக்கு மாசம் ஒன்றுக்கு 30 ரூபாய்க்குக் குறையாமல் ஏற்படுத்த வேண்டும். உபாத்தியாயர்கள் பி.ஏ. எம்.ஏ. பட்டதாரிகளாக இருக்க வேண்டிய அவசியமில்லை. மெட்றிகுலேஷன் பரீஷை தேறினவர்களாக இருந்தால் போதும். மெட்றிகுலேஷன் பரீஷைக்குப் போய்த் தவறினவர்கள் கிடைத்தால் மிகவும் நல்லது. 

இந்த உபாத்தியாயர்களுக்கு தேச பாஷையில் நல்ல ஞானம் இருக்க வேண்டும். திருஷ்டாந்தமாக, இங்ஙனம் தமிழ்நாட்டில் ஏற்படும் தேசியப் பாடசாலைகளில் உபாத்தியாயராக வருவோர் திருக்குறள், நாலடியார் முதலிய நூல்களிலாவது தகுந்த பழக்கம் உடையவர்களாக இருக்க வேண்டும். சிறந்த ஸ்வதேசாபிமானமும், ஸ்வதர்மாபிமானமும், எல்லா ஜீவர்களிடத்திலும் கருணையும் உடைய உபாத்தியாயர்களைத் தெரிந்தெடுத்தல் நன்று. 

அங்ஙனம் தேசபக்தி முதலிய உயர்ந்த குணங்கள் ஏற்கனவே அமைந்திராத உபாத்தியாயர்கள் கிடைத்த போதிலும் பாடசாலை ஏற்படுத்தும் தலைவர்கள் அந்த உபாத்தியாயர்களுக்கு அந்தக் குணங்களைப் புகட்டுவதற்குரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும். ஆரோக்கியமும் திட சரீரமுமுடைய உபாத்தியாயர்களைத் தெரிந்தெடுப்பது நன்று. 

பாடங்கள்: 

(அ) எழுத்து, படிப்பு, கணக்கு. 
(ஆ) இலேசான சரித்திரப் பாடங்கள்: 

வேதகால சரித்திரம், புராண கால சரித்திரங்கள், பெளத்த காலத்துச் சரித்திரம், ராஜபுதனத்தின் சரித்திரம் இவை மிகவும் சிரத்தையுடன் கற்பிக்கப்பட வேண்டும். பள்ளிக்கூடம் ஏற்படுத்தப் போகிற கிராமம் அல்லது பட்டணம் எந்த மாகாணத்தில் அல்லது எந்த ராஷ்ட்ரத்தில் இருக்கிறதோ, அந்த மாகாணத்தின் சரித்திரம் விசேஷமாகப் பயிற்று விக்கப் படவேண்டும். [இங்கு நான் மாகாணம் அல்லது ராஷ்ட்ரம் என வகுத்திருப்பது சென்னை மாகாணம், பம்பாய் மாகாணம் முதலிய தற்காலப் பகுதிகளைக் குறிப்பதன்று; பாஷைப் பிரிவுகளுக்கு இசைந்தவாறு வகுக்கப்படும் தமிழ்நாடு, தெலுங்குநாடு, மலையாள நாடு முதலிய இயற்கைப் பகுதிகளைக் குறிப்பது]. 

இந்தச் சரித்திரங்களில் மஹா கீர்த்தி பெற்று விளங்கும் பருவங்களை உபாத்தியாயர்கள் மிகவும் உத்ஸாகத்துடனும், ஆவேசத்துடனும், பக்தி சிரத்தைகளுடனும் கற்பிக்கும்படி ஏற்பாடு செய்ய வேண்டும். அதிபால்யப் பிராயத்தில் மனதில் பதிக்கப்படும் சித்திரங்களே எக்காலமும் நீடித்து நிற்கும் இயல்புடையன. ஆதலால், பள்ளிப் பிள்ளைகளுக்கு ஆரம்ப வகுப்பிலேயே நம்முடைய புராதன சரித்திரத்தின் அற்புதமான பகுதிகளையூட்டி, அசோகன், விக்ரமாதித்யன், ராமன், லக்ஷ்மணன், தர்மபுத்திரன், அர்ஜுனன் இவர்களிடமிருந்த சிறந்த குணங்களையும், அவற்றால் அவர்களுக்கும், அவர்களுடைய குடிகளுக்கும் ஏற்பட்ட மஹிமைகளையும் பிள்ளைகளின் மனதில் பதியும்படி செய்வது, அந்தப் பிள்ளைகளின் இயல்பைச் சீர்திருத்தி மேன்மைப்படுத்துவதற்கு நல்ல ஸாதனமாகும். தேசபாஷையின் மூலமாகவே இந்தச் சரித்திரப் படிப்பு மட்டுமேயன்றி, மற்றெல்லாப் பாடங்களும் கற்பிக்கப் படவேண்டுமென்பது சொல்லாமலே விளங்கும். 

தேசபாஷையின் மூலமாகப் பயிற்றப்படாத கல்விக்கு தேசியக் கல்வி என்ற பெயர் செலுத்துதல் சிறிதளவும் பொருந்தாது போய்விடுமன்றோ? இது நிற்க. ஹிந்து தேச சரித்திரம் மாத்திரமே யல்லாது, ஸெளகர்யப்பட்டால் இயன்றவரை அராபிய, பாரஸீக, ஐரிஷ், போலிஷ், ருஷிய, எகிப்திய, இங்கிலீஷ், ப்ரெஞ்சு, அமெரிக்க, இத்தாலிய, கிரேக்க, ஜப்பானிய, துருக்க தேசங்கள் முதலியவற்றின் சரித்திரங்களிலும் சில முக்கியமான கதைகளும் திருஷ்டாந்தங்களும் பயிற்றிக் கொடுக்க ஏற்பாடு செய்தால் நல்லது. 

(இ) பூமி சாஸ்திரம்: 

ஆரம்ப பூகோளமும், அண்ட சாஸ்த்ரமும், ஜகத்தைப் பற்றியும், ஸுர்ய மண்டலத்தைப் பற்றியும், அதைச் சூழ்ந்தோடும் கிரகங்களைப் பற்றியும், நக்ஷத்திரங்களைப் பற்றியும், இவற்றின் சலனங்களைப் பற்றியும் பிள்ளைகளுக்கு இயன்றவரை தக்க ஞானம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். பூமிப் படங்கள், கோளங்கள், வர்ணப் படங்கள் முதலிய கருவிகளை ஏராளமாக உபயோகப் படுத்த வேண்டும். ஐந்து கண்டங்கள், அவற்றிலுள்ள முக்கிய தேசங்கள், அந்தத் தேசங்களின் ஜனத்தொகை, மதம், ராஜ்ய நிலை, வியாபாரப் பயிற்சி, முக்கியமான விளைபொருள்கள், முக்கியமான கைத்தொழில்கள் இவற்றைக் குறித்துப் பிள்ளைகளுக்குத் தெளிந்த ஞானம் ஏற்படுத்த வேண்டும். முக்கியமான துறைமுகப் பட்டணங்களைப் பற்றியும் அவற்றில் நடைபெறும் வியாபாரங்களைக் குறித்தும் தெளிந்த விவரங்கள் தெரிய வேண்டும். 

மேலும் இந்தியர்களாகிய நம்மவர் வெளி தேசங்களில் எங்கெங்கே அதிகமாகச் சென்று குடியேறியிருக்கிறார்கள் என்ற விஷயம் பிள்ளைகளுக்குத் தெரிவதுடன், அங்கு நம்மவர் படிப்பு, தொழில், அந்தஸ்து முதலிய அம்சங்களில் எந்த நிலையிலே இருக்கிறார்கள் என்பதும் தெளிவாகத் தெரிய வேண்டும். மேலும் உலகத்திலுள்ள பல தேசங்களின் நாகரிக வளர்ச்சியைக் குறித்து, பிள்ளைகள் தக்க ஞானம் பெறவேண்டும். 

பாரத பூமி சாஸ்த்ரம், இந்தியாவிலுள்ள மாகாணங்கள், அவற்றுள் அங்குள்ள தேச பாஷைகளின் வேற்றுமைக்குத் தகுந்தபடி இயற்கையைத் தழுவி ஏற்படுத்தக் கூடிய பகுதிகள் - இவை விசேஷ சிரத்தையுடன் கற்பிக்கப்பட வேண்டும். வெளி மாகாணங்களைக் குறித்துப் பின்வரும் அம்சங்களில் இயன்றவரை விஸ்தாரமான ஞானமுண்டாக்க வேண்டும்; அதாவது, பாரத பூமி சாஸ்த்ரத்தில், மற்ற மாகாணங்களில் வசிக்கும் ஜனங்கள், அங்கு வழங்கும் முக்கிய பாஷைகள், முக்கியமான ஜாதிப் பிரிவுகள், தேச முழுமையும் வகுப்புக்கள் ஒன்று போலிருக்கும் தன்மை, மத ஒற்றுமை, பாஷைகளின் நெருக்கம், வேத புராண இதிஹாஸங்கள் முதலிய நூல்கள் பொதுமைப்பட வழங்குதல், இவற்றிலுள்ள புராதன ஒழுக்க ஆசாரங்களின் பொதுமை, புண்ணிய க்ஷேத்திரங்கள், அவற்றின் தற்கால நிலை, இந்தியாவிலுள்ள பெரிய மலைகள், நதிகள், இந்தியாவின் விளைபொருள்கள், அளவற்ற செல்வம், ஆஹார பேதங்கள், தற்காலத்தில் இந்நாட்டில் வந்து குடியேறியிருக்கும் பஞ்சம், தொத்து நோய்கள், இவற்றின் காரணங்கள், ஜல வஸதிக் குறைவு, வெளி நாடுகளுக்கு ஜனங்கள் குடியேறிப்போதல் - இந்த அம்சங்களைக் குறித்து மாணாக்கருக்குத் தெளிவான ஞானம் ஏற்படுத்தப்பட வேண்டும். 

பாரத தேசத்தின் அற்புதமான சிற்பத் தொழில்கள், கோயில்கள், இவற்றைப் பற்றி மாணாக்கருக்குத் தெரிவிக்க வேண்டும். உங்கள் சொந்த ராஷ்ட்ரம் அல்லது மாகாணத்தின் பூமி சாஸ்த்ரம். இது கற்றுக்கொடுப்பதில், ஜனப் பாகுபாடுகளைப் பற்றி பேசுமிடத்து, ஹிந்துக்கள், மகம்மதியர்கள் என்ற இரண்டு பிரிவுகளே பிரதானம் என்பதையும், இவர்களில் மகம்மதியர்களிலே பெரும்பாலார் ஹிந்துக்களின் சந்ததியில் தோன்றியவர்கள் என்பதையும், அங்ஙனமன்றி வெளி நாட்டோரின் சந்ததியாரும் இப்போது முற்றிலும் ஸ்வதேசிகளாக மாறிவிட்டனர் என்பதையும் மாணாக்கர்கள் நன்றாக உணரும்படி செய்ய வேண்டும். 

மேலும், பூமி சாஸ்திரப் பயிற்சியில் விளைபொருள் முதலியவற்றை திருஷ்டாந்தங்களின் மூலமாகத் தெளிவுபடுத்துவதுடன், இயன்றவரை பிள்ளைகளை யாத்திரைக்கு அழைத்துச் சென்று பிற இடங்களை நேருக்கு நேராகக் காண்பித்தல் நன்று. பூமிப் படங்கள், கோளங்கள் முதலியவற்றிலெல்லாம் பெயர்கள் தேச பாஷையிலேயே எழுதப்பட்டிருக்க வேண்டும். 

(ஈ) மதப்படிப்பு: 

நான்கு வேதங்கள், ஆறு தர்சனங்கள், உபநிஷத்துக்கள், புராணங்கள், இதிஹாஸங்கள், பகவத்கீதை, பக்தர் பாடல்கள், சித்தர் நூல்கள் - இவற்றை ஆதாரமாகக் கொண்டது ஹிந்து மதம். ஹிந்து மதத்தில் கிளைகள் இருந்த போதிலும், அக்கிளைகள் சில சமயங்களில் அறியாமையால் ஒன்றையொன்று தூஷணை செய்து கொண்ட போதிலும், ஹிந்து மதம் ஒன்றுதான்; பிரிக்க முடியாது. வெவ்வேறு வ்யாக்யானங்கள் வெவ்வேறு அதிகாரிகளைக் கருதிச் செய்யப்பட்டன. பிற்காலத்தில் சில குப்பைகள் நம்முடைய ஞான ஊற்றாகிய புராணங்கள் முதலியவற்றிலே கலந்துவிட்டன. மத த்வேஷங்கள், அனாவசிய மூட பக்திகள் முதலியனவே அந்தக் குப்பைகளாம். ஆதலால், தேசியப் பள்ளிக்கூடத்து மாணாக்கர்களுக்கு உபாத்தியாயர் தத்தம் இஷ்ட தெய்வங்களினிடம் பரம பக்தி செலுத்தி வழிபாடு செய்து வரவேண்டும் என்று கற்பிப்பதுடன், இதர தெய்வங்களைப் பழித்தல், பகைத்தல் என்ற மூடச் செயல்களைக் கட்டோடு விட்டுவிடும்படி போதிக்க வேண்டும். 

'ஏகம் ஸத் விப்ரா: பஹுதா வ தந்தி' (கடவுள் ஒருவரே, அவரை ரிஷிகள் பல பெயர்களால் அழைக்கின்றனர்) என்ற ரிக் வேத உண்மையை மாணாக்கரின் உள்ளத்தில் ஆழப் பதியுமாறு செய்ய வேண்டும். மேலும், கண்ணபிரான் "எல்லா உடம்புகளிலும் நானே உயிராக நிற்கிறேன்" என்று கீதையில் கூறியபடி, ஈ, எறும்பு, புழு, பூச்சி, யானை, புலி, கரடி, தேள், பாம்பு, மனிதர் -- எல்லா உயிர்களும் பரமாத்மாவின் அம்சங்களே என்பதை நன்கறிந்து, அவற்றை மனம் மொழி மெய்களால் எவ்வகையிலும் துன்புறுத்தாமல், இயன்ற வழிகளிலெல்லாம் அவற்றிற்கு நன்மையை செய்துவர வேண்டும் என்பது ஹிந்து மதத்தின் மூலதர்மம் என்பதை மாணாக்கர்கள் நன்றாக உணர்ந்து கொள்ளும்படி செய்ய வேண்டும். 

மாம்ஸ போஜனம், மனிதன் உடல் இறைச்சியைத் தின்பது போலாகும் என்றும் மற்றவர்களைப் பகைத்தலும், அவர்களைக் கொல்வதுபோலே யாகும் என்றும் ஹிந்து மதம் கற்பிக்கிறது. 'எல்லாம் பிரம்ம மயம்', 'ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத்' என்ற வசனங்களால் உலக முழுதும் கடவுளின் வடிவமே என்று ஹிந்து மதம் போதிக்கிறது. 'இங்ஙனம் எல்லாம் கடவுள் மயம் என்றுணர்ந்தவன் உலகத்தில் எதற்கும் பயப்பட மாட்டான்; எங்கும் பயப்பட மாட்டான். எக் காலத்திலும் மாறாத ஆனந்தத்துடன் தேவர்களைபோல் இவ்வுலகில் நீடூழி வாழ்வான்' என்பது ஹிந்து மதத்தின் கொள்கை. இந்த விஷயங்களெல்லாம் மாணாக்கருக்கு தெளிவாக விளங்கும்படி செய்வது உபாத்தியாயர்களின் கடமை. 

மத விஷயமான போராட்டங்கள் எல்லாம் சாஸ்த்ர விரோதம்; ஆதலால், பரம மூடத்தனத்துக்கு லக்ஷணம். ஆசாரங்களை எல்லாம் அறிவுடன் அனுஷ்டிக்க வேண்டும். ஆனால், ஸமயக் கொள்கைக்கும் ஆசார நடைக்கும் தீராத ஸம்பந்தம் கிடையாது. ஸமயக் கொள்கை எக்காலத்திலும் ஆறாதது. ஆசாரங்கள் காலத்துக்குக் காலம் மாறுபடும் இயல்புடையன. ஸ்ரீ ராமாயண மஹாபாரதங்களைப் பற்றி பிரஸ்தாபம் நடத்துகையிலே, நான் ஏற்கனவே சரித்திரப் பகுதியிற் கூறியபடி, இதிஹாஸ புராணங்களில் உள்ள வீரர், ஞானிகள் முதலியோரின் குணங்களை நாம் பின்பற்றி நடக்க முயல வேண்டும். உண்மை, நேர்மை, வீர்யம், பக்தி முதலிய வேதரிஷிகளின் குணங்களையும், ஸ்வதேச பக்தி, ஸ்வஜனாபிமானம், சர்வ ஜீவ தயை முதலிய புராதன வீரர்களின் குணங்களையும் பிள்ளைகளுக்கு நன்றாக உணர்த்த வேண்டும். 

சிபி சக்கரவர்த்தி புறாவைக் காப்பாற்றும் பொருட்டாகத் தன் சதையை அறுத்துக் கொடுத்த கதை முதலியவற்றின் உண்மைப் பொருளை விளக்கிக் காட்டி, மாணாக்கர்களுக்கு ஜீவகாருண்ணியமே எல்லா தர்மங்களிலும் மேலானது என்பதை விளக்க வேண்டும். ஏழைகளுக்கு உதவி புரிதல், கீழ் ஜாதியாரை உயர்த்தி விடுதல் முதலியனவே ஜன சமூஹக் கடமைகளில் மேம்பட்டன என்பதைக் கற்பிக்க வேண்டும். 

(உ) ராஜ்ய சாஸ்திரம்: 

ஜனங்களுக்குள்ளே ஸமாதானத்தைப் பாதுகாப்பதும், வெளி நாடுகளிலிருந்து படை எடுத்து வருவோரைத் தடுப்பதும் மாத்திரமே ராஜாங்கத்தின் காரியங்கள் என்று நினைத்து விடக்கூடாது. ஜனங்களுக்குள்ளே செல்வமும், உணவு, வாஸம் முதலிய ஸெளகர்யங்களும், கல்வியும், தெய்வ பக்தியும், ஆரோக்கியமும், நல்லொழுக்கமும், பொது சந்தோஷமும் மேன்மேலும் விருத்தியடைவதற்குரிய உபாயங்களை இடைவிடாமல் அனுஷ்டித்துக் கொண்டிருப்பதே ராஜாங்கத்தின் கடமையாவது. குடிகள் ராஜாங்கத்தைத் தம்முடைய நன்மைக்காகவே சமைக்கப்பட்ட கருவியென்று நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். 

குடிகளுடைய இஷ்டப்படியே ராஜ்யம் நடத்தப்பட வேண்டும். தீர்வை விதித்தல், தீர்வைப் பணத்தை பல துறைகளிலே வினியோகித்தல், புதுச்சட்டங்கள் சமைத்தல், பழைய சட்டங்களை அழித்தல் முதலிய ராஜாங்க காரியங்களெல்லாம் குடிகளால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளின் இஷ்டப்படியே நடத்த வேண்டும். குடிகளின் நன்மைக்காகவே அரசு ஏற்பட்டிருப்பதால், அந்த அரசியலைச் சீர்திருத்தும் விஷயத்தில் குடிகள் எல்லாரும் தத்தமக்கு இஷ்டமான அபிப்பிராயங்களை வெளியிடும் உரிமை இவர்களுக்கு உண்டு. இந்த விஷயங்களை யெல்லாம் உபாத்தியாயர்கள் மாணாக்கர்களுக்கு கற்பிக்குமிடத்தே, இப்போது பூமண்டலத்தில் இயல் பெறும் முக்கியமான ராஜாங்கங்கள் எவ்வளவு தூரம் மேற்கண்ட கடமைகளைச் செலுத்தி வருகின்றன என்பதையும் எடுத்துரைக்க வேண்டும். மேலும், உலகத்து ராஜாங்கங்களில் சுவேச்சாராஜ்யம் ஜனப்பிரதிநிதியாட்சி, குடியரசு முதலியன எவையென்பதையும், எந்த நாடுகளில் மேற்படி முறைகள் எங்ஙனம் மிசிரமாகி நடைபெறுகின்றன என்பதையும் எடுத்துக் காட்ட வேண்டும். 

மேலும், உலகத்து கிராம பரிபாலனம், கிராம சுத்தி, வைத்தியம் முதலியவற்றில் குடிகளனைவரும் மிகுந்த சிரத்தை காட்ட வேண்டுமாதலால், மாணாக்கர்களுக்கு இவற்றின் விவரங்கள் நன்றாக போதிக்கப்பட வேண்டும். கோயிற் பரிபாலனமும், அங்ஙனமே ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுப்பதும், தொழில் ஏற்படுத்திக் கொடுத்து உணவு தருவதும் ராஜாங்கத்தாரின் கடமை என்பது மட்டுமன்றி, கிராமத்து ஜனங்கள் அத்தனை பேருக்கும் பொதுக் கடமையாகும்.

(ஊ) பொருள் நூல்: 

பொருள் நூலைப்பற்றிய ஆரம்பக் கருத்துக்களை மாணாக்கர்களுக்குப் போதிக்கு மிடையே, தீர்வை விஷயத்தை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். ஜனங்களிடம் தீர்வை எத்தனைக்கெத்தனை குறைவாக வசூல் செய்யப்படுகிறதோ, அங்ஙனம் குறைவாக வாங்கும் தீர்வையிலிருந்து பொது நன்மைக்குரிய காரியங்கள் எத்தனைக்கெத்தனை மிகுதியாக நடைபெறுகின்றனவோ, அத்தனைக்கத்தனை அந்த ராஜாங்கம் நீடித்து நிற்கும்; அந்த ஜனங்கள் க்ஷேமமாக வாழ்ந்திருப்பார்கள். 

வியாபார விஷயத்தில், கூட்டு வியாபாரத்தால் விளையும் நன்மைகளை மாணாக்கர்களுக்கு எடுத்துக் காட்ட வேண்டும். மிகவும் ஸரஸமான இடத்தில் விலைக்கு வாங்கி, மிகவும் லாபகரமான சந்தையில் கொண்டுபோய் விற்க வேண்டும் என்ற பழைய வியாபாரக் கொள்கையை எப்போதும் பிரமாணமாகக் கொள்ளக்கூடாது. விளைபொருளும் செய்பொருளும் மிஞ்சிக் கிடக்கும் தேசத்தில் விலைக்கு வாங்கி, அவை வேண்டியிருக்குமிடத்தில் கொண்டுபோய் விற்க வேண்டும் என்பதே வியாபாரத்தில் பிரமாணமான கொள்கையாகும். வியாபாரத்தில் கூட்டு வியாபாரம் எங்ஙனம் சிறந்ததோ, அதுபோலவே கைத் தொழிலிலும் கூட்டுத் தொழிலே சிறப்பு வாய்ந்ததாம். முதலாளியொருவன் கீழே பல தொழிலாளிகள் கூடி நடத்தும் தொழிலைக் காட்டிலும், தொழிலாளிகள் பலர் கூடிச் செய்யும் தொழிலே அதிக நன்மையைத் தருவதாகும். 

செல்வம் ஒரு நாட்டில் சிலருக்கு வசப்பட்டதாய் பலர் ஏழைகளாக இருக்கும்படி செய்யும் வியாபார முறைகளைக் காட்டிலும், சாத்தியப்பட்டவரை அநேகரிடம் பொருள் விரவியிருக்கும்படி செய்யும் வியாபார முறைகள் மேன்மையாக பாராட்டத்தக்கனவாம். 

(எ) ஸயன்ஸ் அல்லது பெளதிக சாஸ்திரம்: 

ஐரோப்பிய ஸயன்ஸின் ஆரம்ப உண்மைகளைத் தக்க கருவிகள் மூலமாகவும் பரீஷைகள் மூலமாகவும் பிள்ளைகளுக்கு தாங்களே 'ஸயன்ஸ்' சோதனைகள் செய்து பார்க்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். வியாபார விஷயங்களுக்கு ரஸாயனப் பயிற்சியிலே அதிக சிரத்தை காண்பிக்க வேண்டும். 

கண்ணுக்குத் தெரியாத நுட்பமான பூச்சிகள் தண்ணீர் மூலமாகவும், மண்மூலமாகவும் பரவி நோய்களைப் பரப்புகின்றன என்ற விஷயம் ஐரோப்பிய 'ஸயன்ஸ்' மூலமாக கண்டுபிடிக்கப்பட்டிருப்பதில் ஒரு சிறிது உண்மை இருப்பது மெய்யேயாயினும், மனம் சந்தோஷமாகவும், ரத்தம் சுத்தமாகவும் இருப்பவனை அந்தப் பூச்சிகள் ஒன்றும் செய்யமாட்டா என்பதை ஐரோப்பியப் பாடசாலைகளில் அழுத்திச் சொல்லவில்லை. அதனால், மேற்படி சாஸ்திரத்தை நம்புவோர் வாழ்நாள் முழுதும் ஸந்தோஷமாய் இராமல் தீராத நரக வாழ்க்கை வாழ்கிறார்கள். ஆதலால், நமது தேசிய ஆரம்பப் பாடசாலையில் மேற்படி பூச்சிகளைப் பற்றின பயம் மாணாக்கருக்குச் சிறிதேனும் இல்லாமல் செய்துவிட வேண்டும்.

உலகமே காற்றாலும், மண்ணாலும், நீராலும் சமைந்திருக்கிறது. இந்த மூன்று பூதங்களை விட்டு விலகி வாழ யாராலும் இயலாது. இந்த மூன்றின் வழியாகவும், எந்த நேரமும் ஒருவனுக்குப் பயங்கரமான நோய்கள் வந்துவிடக் கூடும் என்ற மஹா நாஸ்திகக் கொள்கையை நவீன ஐரோப்பிய சாஸ்திரிகள் தாம் நம்பி ஓயாமல், பயந்து பயந்து மடிவது போதாதென்று, அந்த மூடக் கொள்கையை நமது தேசத்தின் இளஞ்சிறுவர் மனதில் அழுத்தமாகப் பதியும்படி செய்துவிட்டார்கள். சிறு பிராயத்தில் ஏற்படும் அபிப்பிராயங்கள் மிகவும் வலிமை உடையன, அசைக்க முடியாதன, மறக்க முடியாதன; எனவே, நமது நாட்டிலும் இங்கிலீஷ் பள்ளிக்கூடங்களில் படித்த பிள்ளைகள் சாகுமட்டும் இந்தப் பெரும் பயத்துக்கு ஆளாகி தீராத கவலைகொண்டு மடிகிறார்கள். பூச்சிகளால் மனிதர் சாவதில்லை; நோய்களாலும் சாவதில்லை; கவலையாலும், பயத்தாலும் சாகிறார்கள். இந்த உண்மை நமது தேசியப் பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளின் மனதில் நன்றாக அழுந்தும்படி செய்ய வேண்டும். 

பெளதிக சாஸ்த்ரங்கள் கற்றுக் கொடுப்பதில், மிகவும் தெளிவான எளிய தமிழ் நடையில் பிள்ளைக்கு மிகவும் ஸுலபமாக விளங்கும்படி சொல்லிக்கொடுக்க வேண்டும். இயன்ற இடத்திலெல்லாம், பதார்த்தங்களுக்குத் தமிழ்ப் பெயர்களையே உபயோகப்படுத்த வேண்டும். திருஷ்டாந்தமாக,  ‘ஆக்ஸிஜன்’,  ‘ஹைட்ரஜன்’ முதலிய பதார்த்தங்களுக்கு ஏற்கனவே தமிழ்நாட்டில் வழங்கப்பட்டிருக்கும் பிராணவாயு, ஜலவாயு என்ற நாமங்களையே வழங்க வேண்டும். தமிழ்ச் சொற்கள் அகப்படாவிட்டால் ஸமஸ்கிருத பதங்களை வழங்கலாம். பதார்த்தங்களுக்கு மட்டுமேயன்றிக் கிரியைகளுக்கும் அவஸ்தைகளுக்கும் (நிலைமைகளுக்கும்) தமிழ் ஸமஸ்கிருத மொழிகளையே வழங்குதல் பொருந்தும். 

இந்த இரண்டு பாஷைகளிலும் பெயர்கள் அகப்படாத இடத்தில் இங்கிலீஷ் பதங்களையே உபயோகப்படுத்தலாம். ஆனால், குணங்கள், செயல்கள், நிலைமைகள் - இவற்றுக்கு இங்கிலீஷ் பதங்களை ஒரு போதும் வழங்கக்கூடாது. 

பதார்த்தங்களின் பெயர்களை மாத்திரமே இங்கிலீஷில் சொல்லலாம், வேறு வகையால் உணர்த்த இயலாவிடின். நுட்பமான விவரங்கள் கற்றுக் கொடுப்பதற்குத் தகுந்த பாட புஸ்தகங்கள் தமிழில் இன்னும் ஏற்படவில்லையாதலால், ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் உபாத்தியாயர்கள் இங்கிலீஷ் புஸ்தகங்களைத் துணையாக வைத்துக்கொண்டு, அவற்றிலுள்ள பொதுப்படையான அம்சங்களை மாத்திரம் இயன்றவரை தேச பாஷையில் மொழிபெயர்த்துப் பிள்ளைகளுக்குச் சிறிது சிறிது கற்பித்தால் போதும். 

திருஷ்டாந்தமாக, ரஸாயன சாஸ்திரம் கற்பிக்குமிடத்தே:- (அ) உலகத்தில் காணப்படும் வஸ்துக்களெல்லாம் எழுபதே சொச்சம் மூலப் பொருள்களாலும், அவற்றின் பலவகைப்பட்ட சேர்க்கைகளாலும் சமைந்திருக்கின்றன. (திருஷ்டாந்தங்களும், சோதனைகளும் காட்டுக). (ஆ) அந்த மூல பதார்த்தங்களில், பொன், வெள்ளி, செம்பு, கந்தகம் இவைபோல வழக்கத்திலுள்ள பொருள்கள் இவை; க்ரோமியம், தித்தானியம், யூரேனியம் இவை போல ஸாதாரண வழக்கத்திலகப்படாதன இவை; கனரூபமுடையன இவை; திரவரூபமுடையன இவை; வாயுரூபமுடையன இவை; இவற்றுள் முக்கியமான மூல பதார்த்தங்களின் குணங்கள் முதலியவற்றை எடுத்துக் காட்டுக. (இ) ரஸாயன சேர்க்கை, பிரிவு இவற்றின் இயல்புகள் (பரீஷைகளின் மூலமாக விளக்குக): இவற்றின் விதிகள். (ஈ) ரேடியம், ஹெலியம் முதலிய புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்ட மூல பதார்த்தங்களின் அற்புத குணங்கள். (உ) பரமாணுக்கள், அணுக்கள், அணுக்கணங்கள் -- இவற்றின் இயல்பு, குணங்கள், செய்கைகள் முதலியன. இவைபோன்ற பொது அம்சங்களைப் பற்றிய முக்கியமான செய்திகளை, ஸாதாரண ஸம்பாஷணை நடையில் உபாத்தியாயர்கள் வீட்டில் எழுதிக் கொண்டு வந்து பிள்ளைகளுக்கு வாசித்துக் காட்டி அவர்களை எழுதி வைத்துக் கொள்ளும்படி செய்ய வேண்டும். 

இயற்கைநூல் (பிஸிக்ஸ்), ரஸாயனம் (கெமிஸ்ட்ரி), சரீர சாஸ்த்ரம், ஜந்து சாஸ்த்ரம், செடிநூல் (தாவர சாஸ்த்ரம்) இவையே முக்கியமாக போதிக்க வேண்டியனவாம். (எ) கைத்தொழில், விவஸாயம், தோட்டப்பயிற்சி, வியாபாரம்: இயன்றவரை மாணாக்கர்கள் எல்லாருக்கும் நெசவு முதலிய முக்கியமான கைத்தொழில்களிலும் நன்செய் புன்செய்ப் பயிர்த் தொழில்களிலும், பூ, கனி, காய், கிழங்குகள் விளைவிக்கும் தோட்டத் தொழில்களிலும், சிறு வியாபாரங்களிலும் தகுந்த ஞானமும் அனுபவமும் ஏற்படும்படி செய்தல் நன்று. இதற்கு, மேற்கூறிய மூன்று உபாத்தியாயர்களைத் தவிர, தொழிலாளிகள், வியாபாரிகள், விவசாயிகளிலே சற்றுப் படிப்புத் தெரிந்தவர்களும் தக்க லெளகீகப் பயிற்சி உடையவர்களுமான அனுபவஸ்தர்களைக் கொண்டு ஆரம்பப் பயிற்சி ஏற்படுத்திக் கொடுத்தல் மிகவும் நன்மை தரக்கூடிய விஷயமாகும். 

(ஏ) சரீரப் பயிற்சி: 

தோட்டத் தொழில்கள், கிணறுகளில் ஜலமிறைத்தல் முதலியவற்றால் ஏற்படும் சரீரப் பயிற்சியே மிகவும் விசேஷமாகும். பிள்ளைகளுக்குக் காலையில் தாமே ஜலமிறைத்து ஸ்நானம் செய்தல், தத்தம் வேஷ்டி துணிகளைத் தோய்த்தல் முதலிய அவசியமான கார்யங்களில் ஏற்படும் சரீரப் பயிற்சியும் நன்றேயாம். இவற்றைத் தவிர, ஓட்டம், கிளித்தட்டு, சடுகுடு முதலிய நாட்டு விளையாட்டுகளும், கால்பந்து (Foot ball) முதலிய ஐரோப்பிய விளையாட்டுகளும், பிள்ளைகளுடைய படிப்பில் பிரதான அம்சங்களாகக் கருதப்பட வேண்டும். குஸ்தி, கஸரத், கரேலா முதலிய தேசியப் பயிற்சிகளும் இயன்றவரை அனுஷ்டிக்கபடலாம். 

ஐரோப்பிய முறைப்படி பிள்ளைகளைக் கூட்டமாகக் கூட்டி, கபாத்து (ட்ரில்) பழகுவித்தல் இன்றியமையாத அம்சமாகும். ஸெளகர்யப்பட்டால் இங்கிலீஷ் பள்ளிக்கூடங்களில் பயிற்றுவிக்கும் மரக்குதிரை, ஸமக் கட்டைகள் (parallel bars) ஒற்றைக் கட்டை (horizontal bar) முதலிய பழக்கங்களும் செய்விக்கலாம். 

படிப்பைக் காட்டிலும் விளையாட்டுக்களில் பிள்ளைகள் அதிக சிரத்தை எடுக்கும்படி செய்ய வேண்டும். 'சுவர் இல்லாமல் சித்திரம் எழுத முடியாது'. பிள்ளைகளுக்கு சரீர பலம் ஏற்படுத்தாமல் வெறுமே படிப்பு மாத்திரம் கொடுப்பதால், அவர்களுக்கு நாளுக்கு நாள் ஆரோக்கியம் குறைந்து, அவர்கள் படித்த படிப்பெல்லாம் விழலாகி, அவர்கள் தீராத துக்கத்துக்கும் அற்பாயுசுக்கும் இரையாகும்படி நேரிடும்.

(ஐ) யாத்திரை (Excursion): 

பிள்ளைகளை உபாத்தியாயர்கள் பக்கத்தூர்களிலும் தமதூரிலும் நடக்கும் உற்சவங்கள் திருவிழாக்கள் முதலியவற்றுக்கு அழைத்துச் சென்று, மேற்படி விழாக்களின் உட்பொருளைக் கற்பித்துக் கொடுத்தல் நன்று. திருவிழாவுக்கு வந்திருக்கும் பலவகை ஜனங்களின் நடையுடை பாவனைகளைப் பற்றிய ஞானம் உண்டாகும்படி செய்ய வேண்டும். 

வனபோஜனத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அங்கு பிள்ளைகள் தமக்குள் நட்பும், அன்பும், பரஸ்பர ஸம்பாஷணையில் மகிழ்ச்சியும் எய்தும்படி ஏற்பாடு செய்ய வேண்டும். மலைகள் கடலோரங்களுக்கு அழைத்துச் சென்று இயற்கையின் அழகுகளையும் அற்புதங்களையும் பிள்ளைகள் உணர்ந்து மகிழும்படி செய்ய வேண்டும். பல விதமான செடி கொடிகள், மரங்கள், உலோஹங்கள், கல்வகைகள் முதலியவற்றின் இயல்பைத் தெரிவிக்க வேண்டும். 

பொதுக் குறிப்புகள்: 

மேலே காட்டிய முறைமைப்படி தேசியப் பள்ளிக்கூடம் நடத்துவதற்கு அதிகப் பணம் செலவாகாது. மாஸம் நூறு ரூபாய் இருந்தால் போதும். இந்தத் தொகையை ஒவ்வொரு கிராமத்திலுள்ள ஜனங்களும் தமக்குள்ளே சந்தா வசூலித்துச் சேர்க்க வேண்டும். செல்வர்கள் அதிகத் தொகையும், மற்றவர்கள் தத்தமக்கு இயன்றளவு சிறு தொகைகளும் கொடுக்கும்படி செய்யலாம். 

நூறு ரூபாய் வசூல் செய்ய முடியாத கிராமங்களில் ஐம்பது ரூபாய் வசூலித்து உபாத்தியாயர் மூவருக்கும் தலைக்கு மாஸச் சம்பளம் 12 ரூபாய் கொடுத்து, மிச்சத் தொகையை பூகோளக் கருவிகள், 'ஸயன்ஸ்' கருவிகள், விவசாயக் கருவிகள் முதலியன வாங்குவதில் உபயோகப்படுத்தலாம். 

நூறு ரூபாய் வசூலிக்கக்கூடிய கிராமங்களில் உபாத்தியாயர் மூவருக்கும், தலைக்கு இருபது வீதம் சம்பளம் ரூபாய் அறுபது போக, மிச்சத் தொகையை மேற்படி கருவிகள் முதலியன வாங்குவதில் உபயோகப்படுத்தலாம். 

மேற்படி கருவிகள் எப்போதும் வாங்கும்படி நேரிடாது. முதல் இரண்டு வருஷங்களுக்கு மாத்திரம் மாஸந்தோறும் மிஞ்சுத் தொகையை இங்ஙனம் கருவிகள் வாங்குவதிலும் புஸ்தகங்கள் வாங்குவதிலும் செலவிட்டால் போதும். அப்பால் மாஸந்தோறும் மிஞ்சுகிற பனத்தைப் பள்ளிக்கூடத்துக்கு க்ஷேம நிதியாக ஒரு யோக்கியமான ஸ்ரீமானிடம் வட்டிக்குப் போட்டுவர ஏற்பாடு செய்ய வேண்டும். 

இவ்வாறன்றி ஆரம்பத்திலேயே கருவிகள் முதலியன வாங்குவதற்கு பிரத்யேகமான நிதி சேகரித்து அவற்றை வாங்கிக்கொண்டு விட்டால், பிறகு தொடக்க முதலாகவே மிச்சப் பணங்களை வட்டிக்குக் கொடுத்து விடலாம். மாசம் நாற்பது ரூபாய் வீதம் மிச்சப் பணங்களை க்ஷேமநிதியாகச் சேர்த்து வந்தால் பதினைந்து வருஷங்களுக்குள்ளே தகுந்த தொகையாய்விடும். பிறகு மாஸ வசூலை நிறுத்திவிட்டுப் பள்ளிக்கூடத்தை அதன் சொந்த நிதியைக் கொண்டே நடத்தி வரலாம். 

தவிரவும், அப்போதப்போது அரிசித் தண்டல், கலியாண காலங்களில் ஸம்பாவனை, விசேஷ நன்கொடைகள் முதலியவற்றாலும் பள்ளிக்கூடத்து நிதியை போஷணை செய்து வரலாம். 

எல்லாவிதமான தானங்களைக் காட்டிலும் வித்யா தானமே மிகவும் உயர்ந்தது என்று ஹிந்து சாஸ்த்ரங்கள் சொல்லுகின்றன. மற்ற மத நூல்களும் இதனையே வற்புறுத்துகின்றன. ஆதலால் ஈகையிலும் பரோபகாரத்திலும் கீர்த்திபெற்றதாகிய நமது நாட்டில், இத்தகைய பள்ளிக்கூடமொன்றை மாஸ வசூல்களாலும், நூற்றுக் கணக்காகவும், ஆயிரக் கணக்காகவும் அல்லது சிறு சிறு தொகைகளாகவும் சேகரிக்கப்படும் விசேஷ நன்கொடைகளாலும் போஷித்தல் சிரமமான காரியம் அன்று. இது மிகவும் எளிதான காரியம். 

இந்தப் பள்ளிக்கூடங்களை ஒரு சில மனிதரின் ப்ரத்யேக உடைமையாகக் கருதாமல், கோயில், மடம், ஊருணி முதலியன போல கிராமத்தாரனைவருக்கும் பொது உடைமையாகக் கருதி நடத்த வேண்டும். பொது ஜனங்களால் சீட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்கப் படுவோரும், ஐந்து வருஷங்களுக்கு ஒருமுறை மாற்றப்படவேண்டிய வருமாகிய பத்து கனவான்களை ஒரு நிர்வாக ஸபையாகச் சமைத்து அந்த ஸபையின் மூலமாகப் பாடசாலையின் விவகாரங்கள் நடத்தப்பட வேண்டும். இந்த நிர்வாக ஸபையாரைத் தெரிந்தெடுப்பதில் கிராமத்து ஜனங்களில் ஒருவர் தவராமல் அத்தனை பேருக்கும் சீட்டுப் போடும் அதிகாரம் ஏற்படுத்த வேண்டும். 

இத்தகைய கல்வி கற்பதில் பிள்ளைகளிடம் அரையணாக்கூடச் சம்பளம் வசூலிக்கக் கூடாது. தம்முடைய பிள்ளைகளுக்குச் சம்பளம் கொடுக்கக்கூடிய நிலைமையிலிருந்து, அங்ஙனம் சம்பளம் கொடுக்க விரும்புவோரிடம் அத்தொகைகளை நன்கொடையாகப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் மிகவும் ஏழைகளான பிள்ளைகளுக்குப் பள்ளிக் கூடத்திலிருந்தே இயன்றவரை புஸ்தகங்களும், வஸ்த்ரங்களும், இயன்றவிடத்தே ஆஹாரச் செலவும் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஆண்மக்களுக்கு மட்டுமன்றி, இயன்றவரை பத்து வயதுமட்டுமேனும் பெண் குழந்தைகளும் வந்து கல்வி கற்க ஏற்பாடு செய்யலாம். அங்ஙனம் செய்தல் மிகவும் அவசியமாகவே கருதத் தகும். ஆனால், ஜனங்கள் அறியாமையால், இங்ஙனம் பெண்குழந்தைகளும் ஆண் குழந்தைகளும் சேர்ந்து படிக்கும் விஷயத்தில் ஆக்ஷேபம் சொல்லக்கூடிய கிராமங்களில், இதை வலியுறுத்தாமல், முதலில் ஆண் பிள்ளைகளுக்கு மாத்திரமாவது தேசியக் கல்வி பயிற்ற ஏற்பாடு செய்யலாம். பெண் குழந்தைகளுக்கு இதே மாதிரியாக உபாத்திச்சிமார் மூலமாக கல்வி பயிற்றக்கூடிய இடங்களில் அதனையும் செய்யலாம். 

பாடசாலை வைப்பதற்குத் தக்க இடங்கள் செல்வர்களால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். இது ஸெளகர்யப்படாத இடங்களில் கோயில்கள், மடங்கள் முதலிய பொது ஸ்தலங்களிலே பாடசாலை நடத்தலாம். அதிகப் பணச் செலவின்றி ஸெளகர்யமும், நல்ல காற்றோட்டமும் ஒளிப்பெருக்கமும் உடைய கூரைக் கட்டிடங்கள் கட்டி அவற்றில் பாடசாலை நடத்தினால் போதும். இடம் பெரியதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஏராளமான பணம் செலவு செய்து கட்டிடங்கள் கட்டவேண்டிய அவசியமும் இல்லை. ஸாதாரண செளகர்யங்கள் பொருந்திய இடங்களில் கல்வி நன்றாகக் கற்பித்தால் அதுவே போதும். 

இங்ஙனம் ஆரம்பப் பாடசாலைகளில் படித்துத் தேறும் பிள்ளைகள் அந்த அளவிலே ஏதேனும் தொழில் அல்ல வியாபாரத் துறையில் புகுந்து தக்க ஸம்பாத்யம் செய்யத் தகுதியுடையோராய் விடுவார்கள். அங்ஙனமின்றி, நாட்டிலுள்ள பல உயர்தரப் பாடசாலைகளில் அவர்கள் சேர்ந்து மேற்படிப்பு படிக்க விரும்பினாலும் அதற்கு இப் பள்ளிக்கூடங்கள் தக்க ஸாதனங்களேயாகும். மேலும் அவ்விதமான ஆரம்பப் பாடசாலைகள் நன்கு நடந்து வெற்றி பெற்றுவிடுமாயின், அப்பால் இதே கொள்கைகளை ஆதாரமாகக் கொண்ட மேல்தர தேசியப் பாடசாலைகள் ஏற்படுத்தக்கூடிய இடங்களில் அங்ஙனம் செய்யலாம். 

முக்கியமான குறிப்பு:

ஹிந்துக்களல்லாத பிள்ளைகள் இப்பாடசாலைகளில் சேர்ந்தால் அவரவர் மதக் கொள்கைகளை அன்னியமத தூஷணையின்றிப் பெருந்தன்மையாகக் கற்றுக் கொடுப்பதற்குரிய வழிகள் செய்ய வேண்டும். 

முடிவுரை: 

தேசத்தின் வாழ்வுக்கும் மேன்மைக்கும் தேசியக் கல்வி இன்றியமையாதது. தேசியக் கல்வி கற்றுக் கொடுக்காத தேசத்தை தேசமென்று சொல்லுதல் தகாது. அது மனிதப் பிசாசுகள் கூடி வாழும் விஸ்தாரமான சுடுகாடேயாம். இந்த விஷயத்தை ரவீந்திரநாத் தாகூர், ஆனிபெஸண்ட், நீதிபதி மணி அய்யர் முதலிய ஞானிகள் அங்கீகரித்தும், நம் நாட்டில் தேசியக் கல்வியைப் பரப்புவதற்குரிய தீவிரமான முயற்சிகள் செய்கின்றனர். 

ஆதலால், இதில் சிறிதேனும் அசிரத்தை பாராட்டாமல், நமது தேச முழுதும், ஒவ்வொரு கிராமத்திலும் மேற்கூறியபடி பாடசாலைகள் வைக்க முயலுதல் நம்முடைய ஜனங்களின் முதற் கடமையாம்.


குறிப்பு:

மகாகவி பாரதி, 1920 மே மாதம் ‘சுதேசமித்திரன்’ இதழில் எழுதிய கட்டுரை இது. பெ.தூரன் தொகுத்தளித்த பாரதி கட்டுரைகளில் இக்கட்டுரை இடம் பெற்றுள்ளது.



No comments:

Post a Comment