-பொன்.பாண்டியன்
பல்லவி
கல்வியே அனைத்து மாகும்- என்றும்
கற்பதே கடமை யாகும்!
அனுபல்லவி
அறம், பொருள், இன்பம், வீடு
அளித்திடும் ஆன்ற கல்வி!
சரணங்கள்
கல்வியே விழியும் ஆகும்- மெய்க்
காட்சியின் விழியும் ஆகும்!
கல்வியே செவியும் ஆகும்- ஞானப்
பசிக்கு நல் அமுதம் ஆகும்!
கல்வியே சுவாசம் ஆகும்- நறும்
புகழ்மணம் பரப்பும் எங்கும்!
கல்வியே தலைமை ஆகும்- தெளிந்த
சிந்தனை செழுமை ஆகும்!
கல்வியே உயிர தாகும்- ஒழுக்கப்
பண்பினில் வாழ வைக்கும்!
கல்வியே செல்வம் ஆகும்- கற்றுக்
கருத்துடன் சேர்ப்போம் நாளும்!
கல்வியே வலிமை யாகும்- உயர்
மிடுக்குடன் பயில்வோம் நாமும்!
கல்வியே அழகும் ஆகும்- எழில்
கலைகளாய்ப் புனைவோம் வாரும்!
கல்வியே துணைய தாகும்- உற்ற
பொழுதெல்லாம் உதவி செய்யும்!
கல்வியே அரண தாகும்- என்றும்
விழிப்புடன் நம்மைக் காக்கும்!
கல்வியே மருந்து மாகும்- மடப்
பிணியெலாம் தீர்த்து வைக்கும்!
கல்வியே உறுதி யாகும்- உழைத்(து)
உலகெலாம் வாழச் செய்வோம்!
கல்வியே கடவுள் ஆகும்- அன்னை
கலைமகள் பாதந் தன்னை
நல்மனம், மொழி, மெய்யாலே
வணங்கி நாம் வாழ்வோம் என்றும்!
குறிப்பு:
No comments:
Post a Comment