15/05/2021

அன்னைத்தமிழ் வளர்த்த அற்புதப் புலவர்கள் - 11

-பொன்.பாண்டியன் 


காண்க: முந்தைய பகுதிகள்



20. காக்கைப்பாடினியார் நச்செள்ளையார்


நமது பாரத தேசத்து அன்னையர் வீரம், தியாகம் இரண்டிலும் இணையற்றவர்கள் என்பதற்குப் பின்வரும் புறநானூறு 278-ஆம் பாடல் சான்றாகும்.

“நரம்புஎழுந்து உலறிய நிரம்பா மென்தோள்
முளரி மருங்கின் முதியோள் சிறுவன்
படைஅழிந்து மாறினன் என்றுபலர் கூற
மண்டமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்டஎன்
முலைஅறுத் திடுவென், யான்எனச் சினைஇக்
கொண்ட வாளொடு படுபிணம் பெயராச்
செங்களம் துழவுவோள் சிதைந்துவே றாகிய
படுமகன் கிடக்கை காணூஉ
ஈன்ற ஞான்றினும் பெரிதுஉவந் தனளே”

ஒன்பது அடிகளில் ஒரு பெரும் வீரகாவியத்தையே படைத்துவிட்டார் காக்கைப்பாடினியார் நச்செள்ளையார் என்னும் கவிமாது.

இப்பாடலுக்குப் பொருள் உணர உணர வீரம் பெருகும் என்பதில் ஐயமில்லை. புறநானூற்றில் ஒரே பாடல் என்றாலும் அஃது மாதரின் வீர, மறத் திண்மையைப் போற்றும் ஓர் உச்சம் தொட்ட பாடல்.

வீரத்தாயரை புறநானூற்றுத்தாய் என்றே புகழ்வதற்கு காக்கைப்பாடினியார் நச்செள்ளையாரின் பாடல் காரணமாக அமைந்தது என்றால் அது மிகையாகாது.

அதே புலவர்ப் பெண்மகள் குறுந்தொகை 210-இல் கூறுகிறார்:

வலிமைமிக்க தேர்களையுடைய மன்னன் நள்ளியின் வனங்களில் மேயும் ஆவினங்களின் பாலிலிருந்து பெறும் நெய்யதனை தொண்டி நகர்ப்புறத்து வயல்களிலே முற்றிலும் விளைந்த அரிசியால் சமைக்கப்பட்ட சோற்றோடு பிசைந்து காக்கைக்கு ஏழுகலன்களில் இட்டாலும் அது ஆற்றிய உதவிக்குப் போதாது. ஏனெனில் அது விருந்துவரக் கரைந்ததே. அந்த விருந்து வேறு யாராக இருக்கும்? இத்தனை நாள் என்னைக் காணாது பிரிந்து சென்ற தலைவனே உன்னைத் தவிர?

இந்தப் பாடல் படிக்கப் படிக்க காதலன் பின்நயம் மிகையளிக்கும் அற்புதப் பாடல். இவ்வாறு காக்கையை மெச்சிப் பாடினதாலேயே நச்செள்ளையார் ‘காக்கைப்பாடினியார் நச்செள்ளையார்’ என்று அழைக்கப்படுகிறார். குறுந்தொகையில் இவரது பாடல் ஒன்றே எனினும் மின்போல ஒளிரும் பாடல் ஆகும்.

இவையன்றி, சேரநாட்டு குடநாட்டிலிருந்து வரையாடுகளை தண்டகாரண்யம் வரை கவர்ந்துசென்ற கொள்ளையரை ஒறுத்து ஆடுகளை மீட்டுவந்த சேர மன்னன் ‘ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்’ குறித்துப் புகழ்ந்து ‘பதிற்றுப்பத்து’ நூலில் ஆறாம் பத்தாகப் பதிகம் பாடியுள்ளார்.

இந்தப் பத்துப்பாடல்களிலும் வானவரம்பன் நெடுஞ்சேரலாதனின் ஆற்றல், அன்பு, அரண், கொடை, புரவலாண்மை, ரசனை, இல்லறப்பேறு, தலைமைப்பண்பு, அறமாகிய செங்கோன்மை, அருளுடைமை ஆகியவற்றைப் புகழ்ந்து பாடியுள்ளார். இப்பாடலுக்காக ஒன்பது காநிறை பொன்னும் நூறாயிரம் காணம் (லட்சம்) பணமும் பரிசாகத் தந்தார் என்பர்.

அவர் தனது வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் பார்ப்பனர்க்குக் கபிலைப் பசுக்களோடு குடாநாட்டில் ஓர் ஊரையும் தந்தவர் ஆவார்.

அந்துவஞ்செள்ளை என்பவர் ஒரு சேரஅரசி ஆவார். செள்ளை என்பது சேரமரபின் அரசிகளுக்கு வழங்கும் பட்டமாக இருக்கலாம். நச்செள்ளையாரும் சேரஅரச மரபினராக இருக்கலாம்.

செல்லம்; செல்லி; செள்ளை; தங்கை; இளையோள் எனப் பொருள்படும்படியும் அப்பெயர் அமைகிறது. தமிழ்ப் பெண்பால் புலவர்களிடையே காக்கைப்பாடினியார் நச்செள்ளையார் தேசப்பற்றை ஊட்டுவதில் தனியிடம் பெற்றுள்ளார்.

No comments:

Post a Comment