15/05/2021

கவியோகி சுத்தானந்த பாரதியார்

-தஞ்சை வெ.கோபாலன்


கவியோகி சுத்தானந்த பாரதி
(1897 மே 11 - 1990 மார்ச் 7)


கவியோகி சுத்தானந்த பாரதியார் குறித்து நினைவுப் படுத்திக் கொள்ள வேண்டுமென்றால் அந்தக் காலத்தில் டி.கே.பட்டம்மாள் பாடிய “எப்படிப் பாடினரோ அடியார் - அப்படிப் பாட நான் ஆசை கொண்டேன் சிவனே!’’ என்ற பாடலை நினைத்துப் பார்க்கலாம்.

அல்லது எம்.எம்.தண்டபாணி தேசிகர் பாடி பிரபலமான இந்தப் பாடலை நினைவுப் படுத்திக் கொள்ளலாம். அது:- "இல்லையென்பான் யாரடா? என் அப்பனைத் தில்லையிலே பாரடா! கல்லும் கசிந்துருகக் கனிந்த முறுவலுடன் காட்சியளிக்கும் அந்தக் கருணைச் சுடரொளியை, இல்லையென்பான் யாரடா?" இந்தப் பாடலும் நமக்கு கவியோகியை நினைவு படுத்தும்.

மற்றொரு பாடல் "அருள் புரிவாய் கருணைக் கடலே, ஆருயிர் அனைத்தும் அமர வாழ்வு பெறவே, அருள்புரிவாய் கருணைக் கடலே" என்பது. அடுத்தது "ஜகஜ்ஜனனீ சுகவாணி கல்யாணி", "ஜங்கார ஸ்ருதி செய்குவாய்", “சகல கலா வாணியே, சரணம் தாயே!" என்றொரு பாடல்.

இது அந்தக் காலத்தில் பல பள்ளிக்கூடங்களில் காலையில் பள்ளி தொடங்கும் போது பாடப்படும் கடவுள் வாழ்த்துப் பாடலாகத் திகழ்ந்திருக்கிறது. இப்படி அந்தக் காலத்தில் கவிதை உலகில் கொடிகட்டிப் பறந்தவர் கவியோகி சுத்தானந்த பாரதியார்.

இவற்றிலெல்லாம் மிகச் சிறந்தது என்று அனைவராலும் பாராட்டப்பட்டது  'பாரத மகாசக்தி காவியம்' எனும் படைப்புதான். இவரது படைப்புக்கள் பலப்பல. இவர் ஒரு சிறந்த இலக்கிய வாதி. ஆன்மீக உலகத்திலும் கொடிகட்டிப் பறந்தவர்.

மகாத்மா காந்தி விரும்பிய "உலகமே ஒரு குடும்பம்" என்பது யோகியின் பார்வை. இவருக்கு ஜாதி, மதம், இனம், நாடு என்ற எல்லைகள் கிடையாது. சுத்த ஆன்ம யோக நெறிமுறைகளே இவரது வாழ்க்கை. எட்டு வயதிலேயே சில மகான்களின் கருணையால் குறிப்பாக இவரது உறவினரும் மாபெரும் யோகியுமான பூர்ணானந்தர் என்பவரால் பேரின்பப் பாதையை அறிந்து கொண்டவர்.

இவர் சந்தித்தப் பெரியோர்கள் அனேகர். அவர்கள் மகாத்மா காந்தி, பாரதியார், வ.வே.சு.ஐயர், அரவிந்தர், திலகர், வ.உ.சி., கல்கி இப்படி பற்பல பெயர்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆன்மீகத் தூண்களான ஷீரடி பாபா, ரமண மகரிஷி, சேஷாத்ரி சுவாமிகள், அரவிந்த அன்னை, ஞானானந்தகிரி சுவாமிகள் ஆகியோரின் தொடர்பும் இவருக்கு இருந்தது.

சுத்தானந்த பாரதியார் ஒரு பன்மொழிப் புலவர். தமிழில் கவிதை, இசைப்பாடல்கள், சிறுகதை, கட்டுரை, நாவல் முதலியன இவரது புகழ் மிக்க படைப்புகள். மொழிபெயர்ப்புப் பணியிலும் இவர் தனி முத்திரை பதித்தவர். "பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்" எனும் மகாகவி பாரதியின் வாக்கைச் செயல்படுத்திக் காட்டியவர்.

பல அயல்நாட்டு அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றை இவர் எழுதி வெளியிட்டிருக்கிறார். இத்தாலிய மகாகவி தாந்தே வரலாறு, அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மன் வரலாறு, பிரெஞ்சு இலக்கிய மேதை விக்டர் ஹியூகோவின் அற்புதமான நாவலான "லே மிசரபிளே', "லாஃபிங் மேன்" போன்றவற்றைத் தமிழில் மொழி பெயர்த்து எழுதியிருக்கிறார்.

விக்டர் ஹியூகோவின் 'லே மிசரபிளே'தான் பட்சிராஜா பிலிம்ஸ் நாகையா நடித்த ‘ஏழை படும் பாடு’ எனும் படமாக வெளிவந்தது. 'லாஃபிங் மேன்" கதையை’இளிச்சவாயன்’ என்று மொழிபெயர்த்து எழுதினார்.

இளமைப் பருவம்:

இவரது இளமைக்காலம் பற்றி அதிகமாக யாரும் எழுதாவிட்டாலும் இவரே ஒரு காலத்தில் சில பத்திரிகைகளில் எழுதியிருக்கிற கட்டுரையிலிருந்து சில செய்திகள் தெரிய வருகின்றன. "சோதனையும் சாதனையும்" எனும் நூலில் இவர் தன் சுயசரிதையை விரிவாக எழுதியிருக்கிறார். அது தவிர சிவகங்கை மன்னர் உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்து பின்னர் அருகிலுள்ள சோழபுரத்தில் யோகியார் தொடங்கிய உயர்நிலைப் பள்ளிக்குத் தலைமை ஆசிரியராக வந்த அவரது உறவினர் திரு ஆர்.வெங்கடகிருஷ்ண ஐயர் எழுதி வெளியிட்ட ‘Experiences of a pilgrim soul’ எனும் வாழ்க்கை சரிதமும் இவர் வரலாற்றைக் கூறுவதாகும்.

சிவகங்கை இவரது ஊர். தந்தை பெயர் ஜடாதரர். தாயார் பெயர் காமாட்சி அம்மாள். இவர் பிறந்தது 11-5-1897. இவருக்கு இரண்டு மூத்த சகோதரர்கள், ஒரு மூத்த சகோதரி. இவர்கள் இப்போதைய ஆந்திரப் பிரதேசத்திலிருந்து தென் தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள். வேதம், இசை இவற்றில் தேர்ந்தவர்கள். அந்த குடும்பம் பக்தி நெறியில் ஈடுபட்டவர்கள். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வெங்கடசுப்பிரமணியன் என்பது.

இவருடைய வீட்டுக்கு வந்த இவரது உறவினரும் மாபெரும் ஞானியுமான பூர்ணானந்தர் இவரது ஆற்றலை உணர்ந்து இவருக்கு சுத்தானந்தர் என்று பெயர் சூட்டினார். இவரது தகப்பனார் வக்கீலாக இருந்தவர். பள்ளியில் பயிலும் காலத்திலேயே இவருக்குக் கம்பன் கவியமுதில் மனம் நாட்டம் கொண்டார். திருக்குறள் இவர் மனதைக் கவர்ந்தது. தந்தை ஜடாதரர் இவரது கல்வி, ஆன்மீக வழிகாட்டியாகத் திகழ்ந்தார்.

மதுரையில் இவரது தாயின் குடும்பமும் வசதியான குடும்பம். மதுரையில் இவரது தாய் மாமாவும் ஒரு வக்கீல். நல்ல செல்வந்தர். இவருடைய தாய்வீட்டில் எல்லா வசதிகளும் இருந்த போதும் மனத்தில் மகிழ்ச்சியில்லையாம். அமைதி இல்லையாம். சிவகங்கையில் தந்தை வீட்டில் அமைதியையும், மதுரையில் தாய்மாமன் வீட்டில் உலகத்தையும் அறிந்தேன் என்கிறார் இவர்.

இளம் வயதிலேயே சுற்றுப்புற ஊர்களுக்குச் சென்று பெற்றோருடன் சேர்ந்து ஹரிகதை, பஜனை இவற்றை நடத்தி வந்தார். அவருக்கு எட்டு வயது இருக்கும்போது சிதம்பரம் ஆடல்வல்லான் ஆலயத்துக்குச் சென்று நடராஜர் சந்நிதியில் ஆழ்ந்த யோகத்தில் இருந்தார். நெஞ்சம் நெகிழ்ந்து அவர் மனதில் தோன்றியது ஒரு தமிழ்ப்பாட்டு. அதுதான் நான் முன்பே சொன்ன "எப்படிப்பாடினரோ, அடியார் அப்படிப்பாட நான் ஆசை கொண்டேன் சிவனே!" எனும் பாட்டு.

"எப்படிப் பாடினரோ - அடியார்
அப்படிப் பாட நான்
ஆசை கொண்டேன் சிவனே!
 
அப்பரும் சுந்தரரும் ஆளுடைப் பிள்ளையும்
அருள் மணிவாசகரும்
பொருளுணர்ந்து உன்னையே (எப்படிப்)
 
குருமணி சங்கரரும் அருமைத் தாயுமானரும்
அருணகிரி நாதரும் அருட்சோதி வள்ளலும்
கருணைக் கடல் பெருகி காதலினால் உருகி,
கனிதமிழ்ச் சொல்லினால்
இனிதுனை அனுதினம் (எப்படிப்)


சிதம்பரம் சிவகாமி நடராஜப் பெருமான் திருவருளால் முதன்முதல் கவிபாடி அரங்கேற முடிந்தது சுத்தானந்தரால்.

தெய்வசிகாமணிப் புலவர் என்பவர் இவருக்குத் தமிழ் போதித்தார். இலக்கணம், இலக்கியம் முதலானவற்றை முறையாகப் பயின்றார் இவரிடம். யாப்பிலக்கணம் சொல்லிக் கொடுத்த ஆசிரியரிடம் இவர் ஒரு குறள் எழுதிக் காட்டினார். அது:

"தெய்வ வொளிதனையே தேடு, பிறவெல்லாம்
கைநழுவும் காலத்திற் காண்"

-என்பது. இதைக் கண்ட ஆசிரியர் "நீ எழுது. மேன்மேலும் எழுது, உன்னிடம் கலைமகள் அருள் நிறைந்திருக்கிறது, புலமை இருக்கிறது" என்றார்.

தன் இளமைக் காலத்திலேயே தமிழ் தவிர, சம்ஸ்கிருதம், இந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். "மில்டனில் தாந்தேயைக் காண்கிறேன், தாந்தேயே என் கவிக்கனவின் தந்தை" என்கிறார்.

மதுரை மீனாட்சி அருளால் யோகியானது:

இவரது இளம் வயதில் தனது தந்தையை இழந்து, இவரும் இவரது தாயாரும் மதுரையில் இருந்த இவரது தாய்மாமா வீட்டில் தங்கி படித்தார். பெரிய மாமாவின் பெயர் வக்கீல் ராமசாமி ஐயர். ஆங்கிலத்தில் பெரும் புலவர். ஜபம், தியானம், பூஜை, பாராயணங்கள் இவைகளை செய்து வந்தார். தானே ராட்டையில் நூல் நூற்று கதர் வாங்கி அணிவார். அவரது மாப்பிள்ளை ஒரு ஞானி. சதா தத்வமசி என்று வாழ்ந்தார். அவரை மனநலமில்லாதவர் என்று துரத்திவிட்டனர். அவர் சுத்தானந்தரையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு இவர்களுக்கு நம் வழி புரியவில்லை, நீயும் என்னுடன் வந்து விடு என்றார்.

அவர் சொன்னார், "ஞானிகளைப் பித்தர் என்று கூறும் இந்த நரகம் உனக்கு வேண்டாம். உலகம் ஒரு துன்பக்காடு, உள்ளுறவுதான் நல்ல உறவு. நீ தனித்திரு, இனித்திரு" என்றார்.

சுத்தானந்தரின் சித்தியின் கணவர் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர். அவர் தகாத உறவொன்றை வைத்துக் கொண்டு இவரது சித்தியைப் படாத பாடு படுத்தி வந்தார். இப்படி அவர் குடும்பத்தில் அனைவர் மீதும் இவருக்குப் பிடிப்பு இல்லாமல் போய்விட்டது.

சுத்தானந்தர் கல்லூரிப் படிப்பை முடித்தபின் இவரை லண்டனுக்கு அனுப்பி பார் அட் லா படிக்கவைக்க வேண்டுமென்பது மாமனின் விருப்பம். தனக்குப் பின் தன் வக்கீல் தொழிலைத் தன் குடும்பத்தார் செய்யவேண்டுமென்பது அவரது ஆவல். ஆனால் இவருக்கு வேலைக்குப் போகவேண்டும், சம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணம் இல்லாமல் சதா ஆன்மீக சிந்தனையில் ஈடுபட்டு வந்தார். கோயில் குளம் போன்ற இடங்களில் தனிமையில் அமர்ந்து யோகத்தில் ஆழ்ந்திருப்பார். இவரது போக்கு இவரது மாமாவுக்குப் பிடிக்கவில்லை.

ஒரு நாள் இவரது மாமா இவரை அழைத்து நீ ஒழுங்காகப் படித்து மேற்கொண்டு சட்டம் படிக்க முயற்சி செய்யாமல் சதா சர்வ காலம் கோயில், குளம் என்று சுற்றிக் கொண்டிருக்கிறாய். அங்கெல்லாம் போய் கண்ணை மூடிக்கொண்டு யோகம் செய்கிறாயாம். என்னடா இது? படிக்கிறதாய் இருந்தால் இங்கே இரு. இல்லாவிட்டால் எங்காவது போய்விடு. உன்னையும் உன் அம்மாவையும் உட்கார வைத்து சோறு போடுவது நீ படித்து முன்னேற வேண்டும் என்பதற்காகத்தான் தெரிகிறதா? என்றார்.

யோகிக்கு அவர் சொல்கிற பாதை பிடிக்கவில்லை. என்னால் யோகத்தில் ஈடுபடுவதை நிறுத்த முடியாது. எனக்கு இறைவன் வகுத்த வழி யோகியாக ஆவதுதான் என்றார்.

அவர் மாமா தன் பெட்டியைத் திறந்து அதில் ஏராளமாகச் சேர்த்து வைத்திருந்த பொன், நகைகள் இவைகளைக் காட்டி, இவைகளெல்லாம் உனக்காகத்தான் நான் சொல்கிறபடி கேட்டால் இவையெல்லாம் உனக்குத் தருகிறேன். இல்லையேல் வேறு யாருக்காவது கொடுத்துவிடுவேன் என்றார்.

இவர் அதெல்லாம் எனக்குத் தேவையில்லை. எனக்கு என் மீனாட்சி அம்மன் அருள் செய்வாள் என்றார். அப்படியானால் நீ இந்த வீட்டில் இருக்க வேண்டியதில்லை, எங்கேயாவது போய் உன் யோகத்தை நடத்திக் கொள் என்றாள். இவரும் சரியென்று சொல்லி கிளம்பினார். உடனே மாமாவும் இவரது அம்மாவும் இவரைத் தடுத்து நிறுத்தினார்கள்.

மாமா கேட்டார், பெரிய வீராப்போடு போகிறாயே, ராத்திரி சாப்பாட்டுக்கு என்ன செய்வாய்? திரும்ப இங்கதானே வரவேண்டும் என்றார். இதைக் கேட்ட யோகி நிதானமாகச் சொன்னார், "நான் வெளியே போய்விட்டால் இரவு சாப்பாட்டை என் அன்னை மீனாட்சி போடுவாள்' என்றார். அப்படியா போடாவிட்டால் என்ன செய்வாய் என்றார் மாமா.

மரியாதையாக நான் தோற்றுவிட்டேன் என்று சொல்லி இங்கே திரும்பி வந்து விடுகிறேன். இல்லையென்றால் மீனாட்சி விட்ட வழியில் நான் என் பாட்டைப் பார்த்துக் கொள்கிறேன் என்றார். வீட்டைவிட்டுப் புறப்பட்ட சுத்தானந்தர் மீனாட்சி கோயிலுக்குச் சென்றார். ஆலயத்தில் எல்லா சந்நிதிகளிலும் சென்று வழிபட்டு முடித்துவிட்டு அங்கிருந்த ஒரு மரத்தடி மேடையில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்து விட்டார். இரவு வெகு நேரம் ஆகிவிட்டது. அர்த்தஜாமம் முடிந்து வெளியே வந்த தேவேந்திர பட்டர் எனும் சிவாச்சாரியார் மேடையில் தியானத்தில் அமர்ந்திருக்கும் இவரிடம் வந்தார். அவருக்குச் சுத்தானந்தரை நன்கு தெரிந்திருந்தது. அவரை எழுப்பி என்னப்பா இங்கே இந்த நேரத்தில் ஆத்தில் மாமா, அம்மா எல்லோரும் செளக்கியமா? என்று விசாரித்தார். பிறகு அர்த்தஜாமத்துக்கு செய்த நைவேத்தியம் இருந்த பாத்திரத்திலிருந்து பிரசாதத்தை அவருக்குக் கொடுத்து உண்ணச் செய்தார். இவரும் அவற்றைப் பசியாற உண்டார்.

ஆகா! மீனாட்சி என் விரதத்தை அங்கீகரித்து விட்டாள். இனி அவள் காட்டும் பாதையில் செல்வேன் என்று சபதம் செய்து கொண்டார். வீட்டுக்குப் போகலியா என்று கேட்ட சிவாச்சாரியாரிடம் நடந்த விவரங்களைச் சொன்னார். அவர் சுத்தானந்தரை வக்கீல் வீட்டுக்குக் கொண்டு போய் விட்டுவிட்டு நடந்ததை விவரித்தார். மாமாவுக்கும் இவரது யோகத்தின் மீது நம்பிக்கை பிறந்தது. இவர் உறுதியாக நம்பியபடி மீனாட்சி இவருக்கு இரவு உணவு அளித்து தங்க இடமும் கொடுத்து விட்டாளே என்று.

சிவகங்கை வாசம்:

தனது பதினெட்டு வயதுவரை இவர் சிவகங்கையில்தான் இருந்தார். ஐந்து வயதில் ரங்க ஐயங்கார் திண்ணைப் பள்ளியில் படித்தார். பின்னர் அரசர் பள்ளியில் படிப்பு. படிப்பில் அதிக கவனமின்றி புலவர்கள், பெரியோர்களின் சொற்பொழிவு என்று இவர் சுற்றத் தொடங்கினார். ஒரு ஆசிரியர் மாணவர்களையெல்லாம் திட்டிக்கொண்டே இருப்பார். பிறகு அவர்களைப் பார்த்து "டேய், தடிப்பயல்களா, நான் சொல்வதை எழுதுங்கள்" என்பாராம். இவரோ, அவர் திட்டிய சொற்களையெல்லாம் எழுதிக் காண்பிக்க அவரிடம் மறுபடி அர்ச்சனை வாங்குவாராம். "பத்து முறை எழுதுடா கழுதை" என்றால், கழுதை கழுதை என்று பத்து முறை எழுதி அடிவாங்கியிருக்கிறார்.

தெய்வசிகாமணிப் புலவர் என்பவர் இவரது தமிழறிவை ஊக்குவித்தார் என்று முன்னமேயே சொன்னேன். மேலும் சில ஆசிரியர்கள் ஆங்கிலப் புலமையை வளர்த்துவிட்டனர். சிவகங்கையில் வாழ்ந்த நாட்கள் கல்வி வளர்ச்சியில் இவரை ஊக்கவில்லை ஆனால் யோக வளர்ச்சியில் ஊக்குவித்தது. இலக்கியமும், கவிதைத்திறனும். ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட், ஷெல்லியின் புரோமிதியஸ், பிரான்சிஸ் தாம்சனின் ஹெளண்ட் இவை எனக்கு ஆவேசமளிக்கின்றன, அரவிந்தரின் அஹானா என் உள்ளத்தை அள்ளுகிறது என்று இவர் எழுதியிருக்கிறார்.

நாளெல்லாம் படிக்கிறேன், பசித்தபோது படித்துக் கொண்டே இருக்கிறேன்" என்கிறார். என் சிறந்த நண்பர்கள் இலக்கியங்களே, இலக்கியத்துக்கு அடுத்ததாக அறிவியல் நூல்களைப் படிக்கிறேன் என்கிறார் இவர். கவிதை எழுதத் தூண்டுபவை எவை என்றால் இவர் சொல்கிறார்:

"அருவியும் குருவியும் அளித்தன கவிதை;
காடும் மலையும் கவிமலர் கொய்தேன்,
கொய்த மலர்களைக் கோர்த்துக் கோர்த்துச்
சுத்த சக்திக்கே சூட்டி மகிழ்ந்தேன்"

-என்று.

சிவயோக ஆன்மாக்களின் தொடர்பால் இவரது மனம் பக்குவப்பட்டது. அதன் பின்னர் கல்லூரிப் பாடங்களில் மனம் பதிந்தது. முதலாவது மாணவனாக இவர் தேர்ந்தார். நாட்டரசன்கோட்டையில் கம்பர் சமாதியில் அமர்ந்து கம்ப ராமாயணம் முழுதும் பயின்றார். பற்பல இலக்கிய நூல்களைப் படித்துப் பல நூல்களை இவரும் எழுதிவைத்தார். வேதம், உபநிஷத்துக்கள், பிரம்ம சூத்திரம், ஜூத ஸம்ஹிதை முதலியன கற்றார். அவற்றையெல்லாம் தமிழாக்கம் செய்தார். தெலுங்கும் இந்தியும் பயின்றார், அவற்றிலும் கவிதைகள் எழுதினார்.

அக்கால வழக்கப்படி ஆங்கிலத்தை சிறப்பாகக் கற்றார். பிரெஞ்சும், லாட்டினும் பயின்றார். ஷேக்ஸ்பியர், மில்டன், பைரன், டென்னிஸன், பிரெளனிங், வேட்ஸ்வொர்த், ஷெல்லி, அரிஸ்டாடில், பிளேட்டோ, ஸ்காட், அன்னிபெசண்ட், ராமதீர்த்தர், விவேகானந்தர் ஆகியோருடைய நூல்களைக் கற்றார்.

பட்டப்படிப்பு முடித்தவுடன் மேலும் படிப்பதற்காகவே அரசர் கல்லூரியில் இவர் நூலகர் வேலையில் சேர்ந்து அங்கும் ஓயாமல் படித்தார். இப்படி இவர் விடாமல் படித்ததால்தான் அறிவு பெற்றாரா என்று கேட்டால், இவர் சொல்கிறார், என்மீது திணிக்கப்பட்ட நூலறிவு சிற்றறிவே, என் யோகத்தால் உள்ளிருந்து மலர்ந்த சுத்த ஆன்மஞானமே பெரியது என்றார்.

ஒரு இளைஞனின் வாழ்க்கையில் இருக்க வேண்டிய குணங்கள் இவரிடம் இல்லை. மாறாக எப்படி யிருந்தது என்பதை அவர் சொல்வதைப் பார்ப்போம்.

"சக்தியின் அருளால் நான் பெண்களை சக்திமயமாகப் பார்த்தேன். எல்லா பெண்களையும் ஓம் ஓம் சுத்த சக்தி என்று வணங்கினேன். என் மனம் மாசுற்றால் உடனே பராசக்தியைப் பாடுவேன், பட்டினி போடுவேன், என்னை நானே தண்டித்துக் கொள்வேன். புலனடங்கினால் மனமும் அடங்கும். புலனடக்கத்திற்கு தூய்மை வேண்டும்." என்கிறார்.

அவரது இளமைக் காலம் வீட்டில் எங்ஙனம் இருந்தது என்றால்:

"வீட்டில் இனிய பாட்டின் முழக்கம்
இப்புறம் வேதம்; அப்புறம் கீதம்;
எதிரே கோயிலில் இசையின் அலைகள்
சிவகங்கை யெங்கும் திருவிழாக் கோலம்.
பாடகர், பண்டிதர், பாவலர், நாவலர், பாகவதர்கள்
பஜனை மடங்கள் மல்கிய சூழலில் வளர்ந்தது
என் வாக்கே கேட்டுக் கேட்டு
பாட்டுக் கற்றுப் பாமாலை சூட்டி
பரமனைத் தொழுதேன்"

- என்கிறார். தமிழ் மொழிபால் இவருக்கிருந்த விருப்பத்தைப் பல பாடல்களில் விவரித்திருக்கிறார்.

"வெள்ளி நகைப்பது பார், வெண் சங்கொலிப்பது கேள்;
கிள்ளை கூறு மொழியும் கீதக் குயிலிசையும்
அள்ளி வரும் தென்றல் அருந்தேன் மலர்களுடன்
துள்ளி விளையாடுதல் பார்! தும்பி ஓம் சக்தியெனக்
கள்ளுண்டு அலம்புவ பார் காதற் களிப்பூறி
உள்ளம் குளிர உயிர் குளிர ஊன் குளிரத்
தெள்ளருளாம் தெய்வத் திருவாரமுதமய
வெள்ளத்திலாட விரைந்தேலோ ரெம்பாவாய்!"

இவருக்குத் திருக்குறள் மீதும், மாணிக்கவாசகரின் திருவாசகத்தின் மீதும், சங்க இலக்கியங்கள் மீதும், கவிச்சக்கரவர்த்தி கம்பனின் காவிய நயத்திலும் அபாரமான ஈடுபாடு, இவை அனைத்தும் அழியாப் பீடினைப் பெற்றவை என்பது இவர் கருத்து. அதைச் சொல்லும் போது:

"தேவர் குறளாட்டித், திருவாசகம் சூட்டி
மூவர் தமிழ் ஓதி, நாலாயிரம் பாடி
தாவடங்களாக முச்சங்கத் தமிழணிந்து
காவிய மாமணியாம் கம்ப முடி கவிழ்த்து
கூவித் திருப்புகழைக் கூத்தாடித் தெண்டனிட்டு
தேவாதி தேவனருட் சேர்ந்திடுவோ மெம்பாவாய்"

-என்கிறார். தமிழை வாழ்த்தி ஒரு கவிதை:

"திருகொலு விருக்கும் தமிழ்த் திருவாழ்க!
அரனருட் புதல்வி, அருங்கலைச் செல்வி
வரனருள் முதல்வி; வாழிய தமிழ்த்தாய்
அறிவனல் விழியாள், அமுதக் கதிர்
விரி முழுமதி முகத்தாள், மோகன காந்தம்
வீசிடும் அரசி மின்னெனத் தெறிக்கும்
பொலிநகை முத்தம் பொழிந்திடும் வாயாள்"
 
மற்றொரு கவிதை ‘தமிழ் அன்னை’ என்ற தலைப்பில்…

"அன்புருவான தமிழ் அன்னை மொழி
அரசியான தமிழ் அன்னை
இன்பம் அளிக்கும் தமிழ் அன்னை - எங்கள்
இன்னுயிரான தமிழ் அன்னை
ஆறுகள் ஊறும் மலை வளர்த்தாள் - இயல்
அழகு சொட்டும் பசு வளர்த்தாள்
வீறுய் மிகுந்த படை வளர்த்தாள் - ஞான
வித்தகர் போற்றும் கலை வளர்த்தாள்"

 'தமிழ் முழக்கம்' எனும் தலைப்பில் பாடிய கவிதை…

"வைய மெங்கும் தமிழ் முழக்கம் செய்ய வாருங்கள்-
ஒன்றாய்ச் சேருங்கள்!
கைகள் செந்தமிழாலயம் கட்டிடக் காணுங்கள்-
வெற்றி பூணுங்கள்!
தேனினும் இனிய தெய்வத் தமிழிசை நலம் கூறுவோம்!
நானிலத்தினில் தாயின் மணிக்கொடி நாட்டுவோம்!
வீரம் காட்டுவோம்"

இப்படி தமிழ் மீது பற்பல கவிதைகள் பாடியிருக்கிறார். இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் நம் நாட்டினர் ஆண்மையற்றுக் கிடந்த நிலையைப் பார்த்து மனம் நொந்தார். நெஞ்சில் ஆவேசக் கனல் ஆர்த்தெழ வேண்டும் என்ற விருப்புடன் கவிதைகளும் கட்டுரைகளும் எழுதினார். அப்படி அவர் எழுதிய கட்டுரைகள் எண்ணற்றவை.

‘வீரத் தமிழர்க்கு ஆவேசக் கடிதங்கள்’ எனும் தலைப்பில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் கவியோகி அற்புதமான நூலொன்றை எழுதியிருக்கிறார். அந்த நூலில் எம் தமிழர்க்கு மொழி அன்பு, நாட்டு அன்பு, உலக அன்பு, கடவுள் அன்பு இவை நான்கும் இதயத்தில் பொங்கி எழ வேண்டுமெனத் தன் கருத்தை வெளிப்படுத்துகிறார்.

எல்லோருக்கும் தமிழுணர்வு வேண்டும். இந்தத் தமிழுணர்வு எலெக்ட்ரான் அணுக்களைப் போல எங்கணும் பரவ வேண்டும் என்கிற தனது பேரவாவை வெளிப் படுத்துகிறார். தமிழரின் முன்னேற்றத்துக்குப் பெரும் தடையாக இருப்பது போலிச் சாதி உணர்வு என்கிறார். இந்த உணர்வு நொறுக்கப்பட வேண்டும், பெயருக்குப் பின் ஜாதிப் பெயர்களைத் தூக்கி எறிய வேண்டுமென்கிறார்.

தமிழ் மன்னர்களின் வீரம் குறித்த இவரது கவிதை தெவிட்டாத இன்பமூட்டக் கூடியது.

"கண்ணகிக்குப் பத்தினிக்கல் கொணர்ந்த சேரன்
கனக விசயர் செருக்களிக்க நடந்த போரில்
விண்ணெட்ட வெற்றி முரசொலித்த நாட்டீர்!
வியன் கப்பற் படை நடத்தி ராச ராசன்
கண்ணெட்டு நாடெல்லாம் கைக்கொண்டான்
கலைச்சாலை அறச்சாலை கவின்செய் கோயில்
விண்ணெட்டப் புகழ் விளங்கச் செய்தான் அன்னான்!
வெற்றி நினைந்து ஆவேசம் பெற்று வாரீர்!

கவியோகி பன்மொழிப்புலவர் என்பதை முன்பே பார்த்தோம். அப்படிப் புலமை பெற்ற அத்தனை மொழிகளிலும் இவர் மிக அருமையான படைப்புக்களை வெளிக் கொணர்ந்திருக்கிறார். அவர் எழுதியுள்ள பாடல்களின் எண்ணிக்கை ஐயாயிரத்தைத் தாண்டுகிறது. இவை தவிர தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் இவர் நூற்றுக்கணக்கான நூல்களை எழுதிக் குவித்திருக்கிறார்.

அவர் எழுதியுள்ள நூல்கள் ஆயிரத்தைத் தாண்டும். தனிமனிதனொருவன் தானே இவ்வளவு பெரிய சாதனையைச் செய்திருக்கிறான், அதுவும் இன்றுபோல அத்துணை வசதிகள் இல்லாத காலகட்டத்தில் எழுதிக் குவித்திருக்கிறான் என்றால் இதற்கு ஈடு இணை இல்லை என்றே சொல்லலாம்.

இவர் உணவு நெறியை மிகக் கவனமாகக் காத்தார். உப்பு, புளி, மிளகாயை நீக்கினார். வேகும் சோற்றில் காய்கறிகளைப் போட்டு உண்டார். உணவோடு நல்ல சாதுக்களின் சகவாசமும் இவருக்கு உதவியது என்கிறார். நிலக்கடலை, பழங்கள் இவைதான் இவருக்கு உணவு. இதனை எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும் கவனமாக கடைப்பிடித்தார்.

இவருக்கு மதுரையில் இருந்த நாட்களில் வ.உ.சி., ஜி.சுப்பிரமணிய ஐயர், சிவா ஆகியோருடன் நட்பு ஏற்பட்டது. பாரதியாரும் பிறகு அங்கு சேர்ந்து கொண்டார். மதுரை பசுமலையில் இவர் ஆசிரியர் பயிற்சியும் பெற்றார். பட்டம் பெற்ற பிறகு திருமங்கலத்தில் வேலைக்கு போன இடத்தில் நிரம்பியிருந்த ஊழலைக் கண்டு ஓடிவந்து விட்டார். அப்போது முசிறி அருகே இருந்த காட்டுப்புத்தூர் எனும் ஜமீன் கிராமத்தில் ஆசிரியர் வேலை இருப்பது அறிந்து மனுப்போட்டார் அங்கு வேலை கிடைத்தது.

காட்டுப்புத்தூர் வாசம்:

காட்டுப்புத்தூர் இவரைப் பொருத்த வரை பாட்டுப்புத்தூராக இருந்தது என்கிறார். அவ்வூரின் ஜமீந்தார் உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சுந்தரம் ஐயர் என்பார். காட்டுப்புத்தூர் பள்ளிக்கூடத்தில் இவர் ஆங்கிலம், சயின்ஸ், பூகோளம் ஆகியவை கற்பித்தார். 7ஆம் வகுப்புக்கு கணக்கும் பாடம் எடுத்தார்.

அங்கு மாணவர்களை இவர் கேட்டார், "நீ எதற்கு பள்ளிக்கூடம் வந்தாய்?" என்று. ஒவ்வொருவரும் ஒரு பதிலை அளித்தனர். அப்பா அனுப்பினார் வந்தேன் என்றான் ஒருவன். வீட்டில் பொழுது போகவில்லை வந்தேன் என்றான் மற்றொருவன். ஒரே ஒருவன் மட்டும் சொன்னான் "அறிவு வளர்ச்சி பெற வந்தேன்" என்று. இவருக்கு சாரணர் பயிற்சி அளிக்கப்பட்டது. இவரும் அதனை ஆவலுடன் கற்றுக் கொண்டு மாணவர்களையும் அதில் பயிற்றுவித்தார்.

அந்தப் பள்ளி மாணவர்களுக்குத் தீக்குச்சி செய்ய கற்றுத் தருகிறேன் என்று இவர் எதையோ போட்டு அரைக்க அது வெடித்து, இவரது ஆசிரியர் பதவிக்கும் வேட்டு வைத்துவிட்டது. மற்றவர்கள் இவரைப் போகச் சொல்லாவிட்டாலும், இவருக்கு அங்கிருக்கப் பிடிக்கவில்லை. வேலையை விட்டுவிட்டு சுற்றுப்புற ஊர்களுக்கெல்லாம் செல்ல ஆரம்பித்தார். ஆங்காங்கே மக்களைக் கூட்டிவைத்து பேசினார். இவரது தோற்றம், இவரது பாடல்கள், பேச்சு முதலியன மக்களைக் கவர்ந்ததால், இவர் போகுமிடங்களிலெல்லாம் இவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

"நச்சரிக்கும் வாழ்வைநீ நம்பாதே என்று அம்மான்
எச்சரிக்கை செய்தான், இனிநானும் - அச்சமுறேன்
சாவையும் வெல்லுமொரு சக்திப் பணிசெய்யப்
போவேன், அவனே புகல்"

-என்று அங்கிருந்து வெளியேறினார்.

இவர் கரூர், நெரூர், தாந்தோன்றிமலை ஆகிய இடங்களுக்கும், அகண்ட காவிரி பாயும் பகுதிகளுக்கும் சென்று அங்கெல்லாம் அமர்ந்து "பாரத மகாசக்தி காவியம்" என்ற பெயரில் ஒரு காவியத்தை எழுதினார். இவர் புதுச்சேரி சென்று வ.வே.சு.ஐயரையும் பாரதியாரையும் பார்த்தார்.

பாரதி இவருடைய ‘பாரதசக்தி’ நூலைப் பாராட்டி "தமிழுக்கு ஒரு மகாகாவியம் விளங்கட்டும், செய் பாண்டியா, பராசக்தி உனக்கு நல்ல வாக்குத் தருவாள்" என்று ஆசிர்வாதித்தார். பாரதியைப் போற்றி இவர் எழுதிய வெண்பா:

"வீரங் கனலும் விழிக்கனலும், பிள்ளைபோல்
ஈரந் திகழும் இளநெஞ்சும் - பாரதியின்
சொல்லும் பொருளும் சுதந்திரப் பேரிகையும்
வெல்லும் புவியை விரைந்து".

இவருக்கு சுதந்திர வேட்கை பிறந்தது. திருச்சியில் அப்போது இருந்த காங்கிரஸ் ஆபீசுக்குச் சென்றார். அங்கு கல்கியின் அறிமுகமும், டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜனின் அறிமுகமும் கிடைத்தது. அங்குதான் இவர் காந்திஜியைச் சந்தித்துப் பேசினார். அவர் அழைப்பை ஏற்று காங்கிரஸ் பிரசாரப் பணியில் இறங்கினார்.

சுத்தானந்தர் கரூரில் அரசியல் கூட்டங்களில் பேசினார். அங்கு கள்ளுக்கடை மறியலில் கலந்து கொண்டார். கரூர் காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த நாமக்கல் ராமலிங்கம் பிள்ளையோடு தொடர்பு ஏற்பட்டது.

காந்தியடிகளுடன் தொடர்பு:

மகாத்மா காந்தி ரயிலில் திருச்சி வருகிறார், அவரை கட்டளை ரயில் நிலையத்தில் சந்திக்க இரவு பன்னிரெண்டு மணிக்குத் தன்னுடன் மாணவர்கள் பலரையும் சேர்த்துக் கொண்டு காந்திஜியைச் சந்திக்கச் சென்றார். ரயில் வந்து நின்றபோது நள்ளிரவு. அனைவரும் தூங்கும் நேரம். ரயில் வந்து நின்றதும் இவரும் நண்பர்களும் 'மகாத்மா காந்திக்கு ஜே!' என்றும் 'வந்தேமாதரம்' என்றும் குரல் கொடுத்தனர்.

ஜன்னல் திறந்தது. செளகத் அலி எனும் தலைவர் தலையை வெளியே நீட்டி, "அரே அங்கு என்ன கூச்சல்! மகாத்மா தூங்குகிறார்" என்றார். உடனே கொண்டுவந்திருந்த மாலையையும், பணத்தையும் செளகத் அலியிடம் கொடுத்துவிட்டு மகாத்மாவிடம் சமர்ப்பியுங்கள் என்றார். இந்த சந்தர்ப்பத்தில் காந்தி எழுந்து விட்டார். உடனே அவரைப் பார்த்து சுத்தானந்தர் "நமஸ்தே" என்றார். காந்தி மலர்ந்த முகத்துடன் நாங்கள் கொடுத்தவற்றை வாங்கிக் கொண்டார்.

"சிரமம் கொடுத்துவிட்டோம், படுத்துக் கொள்ளூங்கள், நாங்கள் திருச்சியில் தங்களைச் சந்திக்கிறோம்' என்று சொல்லி திரும்பி வந்துவிட்டார். அதன்படி மறுநாள் திருச்சியில் மகாத்மா காந்திஜியை சந்தித்தார்.

திருப்பதி யாத்திரை:


பிறகு இவர் திருப்பதி, காளகஸ்தி ஆகிய இடங்களுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார். காங்கிரசில் இருந்த பிளவு குறித்து மனம் வருந்தி இவர் அதிலிருந்து ஒதுங்கி ஒரே இடத்தில் தங்கிவிட முடிவு செய்தார். சொந்த ஊரான சிவகங்கைக்கு வந்தார். இவருக்கு தேவகோட்டையில் நண்பர் ஒருவர் தொடங்கிய பள்ளிக்கூடத்தில் வேலை கிடைத்தது. அங்கு பணி புரிந்தார்.

தினமும் ஆறு மணி நேரம் மட்டும் பேசுவதும், மற்ற நேரங்களில் மெளன விரதமும் அனுஷ்டித்தார். விடுமுறை நாட்களில் முழுவதும் மெளனம்தான். தினமும் காலை 3 மணிக்கு எழுந்துவிடுவார். உடனே தியானம். பள்ளிக்கூடத்தில் பாடம் நடத்துவதில் முழு உழைப்பையும் நல்கினார்.

தேவகோட்டையில் இவர் பொது சேவையில் ஈடுபட்டிருந்த சமயம் வ.வே.சு.ஐயரிடமிருந்து இவருக்கு ஒரு கடிதம் வந்தது. இவரை அவரது பரத்வாஜ ஆசிரமத்துக்கு வரச் சொல்லி. இவரும் காத்துக் கொண்டிருந்தார். ஆனால் இவர் வீட்டில் எதிர்ப்பு இருந்தது. வ.வே.சு.ஐயர் ஒரு புரட்சிக்காரர். அவரோடு போய் இவர் சேருவதை குடும்பத்தார் விரும்பவில்லை. அது குறித்து இவர் எழுதியிருப்பதைப் பாருங்கள்:

"சில நண்பர்களைக் கொண்டு எனக்கு வீட்டில் புத்தி சொல்லச் சொன்னார்கள். ஒருவர் கண்டபடி திட்டினார். நான் மெளனமாக பொறுத்துக் கொண்டு என் வேலையைப் பார்த்தேன். உலகுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருந்தால் கழுதை விற்ற கந்தப்பன் கதைதான். அனைவரும் என்னை பைத்தியம் என்றனர். அது சரிதான் என்று நிரூபிப்பது போல நான் எனது தலைப்பாகையைக் கழற்றி எறிந்தேன். என் உடைமைகள், உடைகள் அனைத்தையும் தீயிட்டு எரித்தேன். நான் எழுதிய கையெழுத்துப் பிரதிகளில் ‘பாரத சக்தி’யை மட்டும் வைத்துக் கொண்டு மற்ற நாவல்கள், நாடகங்கள் அனைத்தையும் தீயிட்டு எரித்தேன்."

அப்போது ராமேஸ்வரத்தில் நடந்த காங்கிரஸ் மகாநாட்டுக்கு இவர் சென்றார். அங்கு ந.சோமையாஜுலு, ஸ்ரீனிவாசவரதன் ஆகியோரை சந்தித்தார். அங்கு மாநாடு முடிந்ததும் தனுஷ்கோடி, மதுரை போய்விட்டு சேரன்மாதேவிக்குப் போனார். அங்கு வ.வே.சு.ஐயர் இவரை வரவேற்றார்.

வ.வே.சு.ஐயரின் பரத்வாஜ ஆசிரமத்தில்:

தியாகச்சுடர், மாவீரன் வ.வே.சு.ஐயரிடம் இவருக்கு நல்ல பழக்கம் உண்டு. திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியில் ஐயர் நிறுவிய பரத்வாஜ் ஆசிரமத்திலும், அவரது பத்திரிகையான 'பாலபாரதி'யிலும் சுத்தானந்தருக்கு தொடர்பு உண்டு. இவரது தமிழார்வத்தையும், கவிதைத் திறத்தையும் ஐயர் வெகுவாக புகழ்ந்திருக்கிறார்.

ஐயர் மீது இவருக்கு இருந்த அன்பை விளக்க இவர் ஐயருக்கு எழுதிய கடிதமொன்றில் இவரது வாசகத்தைப் பார்க்கலாம். அதில் இவர் ஐயரை, "வீரவிளக்கே! விக்ரமச் சிங்கமே! வ.வே.சுப்பிரமணிய தீரனே! தீப்பொறி சிந்தும் சிங்கம் போல பாரத தேவியின் துயர் தீர்க்க வீறுகொண்டெழுந்த வித்தகனே! என்றெல்லாம் போற்றியிருக்கிறார்.

ஐயரை இவர் வர்ணிப்பதைப் பார்க்கலாம்:

"சிங்க முகம், நீலமணிக் குன்று போல் திண்ணுடல்; புதிய வைரம்போல் உறுதியான அங்கங்கள்; கர்லாவும் பஸ்கியும் செய்து இறுகிய தசைகள்; செவ்வரி படர்ந்த கூர்விழிகள்; அடர்ந்த தாடி; வகுடெடுத்துஒழுங்காகச் சீவி விட்ட கேசம். அகன்ற மார்பு, பஞ்சகச்ச வேஷ்டி, மேலே கதர் துப்பட்டா, பிறைச் சந்தனத்தின் நடுவே குங்குமப் பொட்டு. அவரது கிண்கிணிக் குரலுடன் நாணப் புன்னகையும் சேர்ந்து என் உள்ளத்தில் அன்பு மின்சாரம் பாய்ச்சின".

சேரன்மாதேவியில் வ.வே.சு.ஐயரின் குருகுலம் அமைக்கப்பட்டது. அதற்கு தலைவர் வ.வே.சு.ஐயர். அங்கு சுத்தானந்தர் இலக்கியம், கல்வி விளம்பரம், பத்திரிகை காரியாலயம் நிர்வாகம் ஆகியவற்றைக் கவனித்தார்.  'பாலபாரதி' இதழ் பொறுப்பு முழுவதும் இவருடையது.

வ.வே.சு.ஐயரின் குருகுல வாழ்க்கை பற்றி இவர் எழுதியதைப் படித்தால்தான் அந்த குருகுலம் எப்படிச் செயல்பட்டது என்பது புரியும். அங்கு ஒருநாள் வாழ்க்கை எப்படி இருந்தது தெரியுமா?

காலை நாலறைக்கு அனைவரும் எழவேண்டும். காலைக்கடன்கள் அனைத்தும் முடியும். பல்துலக்க மாவிலை பறித்து அதில்தான் துலக்க வேண்டும். சிறிது உடற்பயிற்சி. பின்னர் ஆசிரமத்தைக் கூட்டி சுத்தம் செய்தல்; பின்னர் குளிக்க வரிசையில் தாமிரபரணி ஆற்றுக்குச் செல்வர்.

ஆசிரமம் திரும்பியதும் காலை உணவாக வாழைப்பழம், வேர்க்கடலை, மோர் அல்லது பழைய சோறு. வகுப்புகள் தொடங்கும். பதினோரு மணிக்கு மதிய உணவு. சாப்பிடும்போது யாரும் பேசக்கூடாது. உணவு, சோறு, கூட்டு, மோர், பழம், தேங்காய் இவைகளே.

புளி, மிளகாய், வெங்காயம், காபி, டீ இவை அறவே கிடையாது. உணவுக்குப் பின் தட்டுக்களைக் கழுவுதல், இடத்தை சுத்தம் செய்தல் அனைத்தும் மாணவர்களே.

பிற்பகல் சந்தைக்குச் சென்று சிலர் வேண்டிய சாமான்களை வாங்குவர். மற்றவர் ராட்டையில் நூல் நூற்பர். பிற்பகல் நான்கு மணிக்கு வகுப்புகள் தொடங்கும். மாலையில் விளையாட்டு. இரவு பஜனை தொடர்ந்து உணவு. ஒன்பது மணிக்கு ஆசிரமம் தூங்கிவிடும்.

சுத்தானந்தர் எழுதிய  'பாரதசக்தி மகாகாவியம்' இங்கு ஐயரால் மேலும் மெருக்கூட்டப்பட்டது.

இங்கு தலைவர்களின் விழாக்கள் நடக்கும். திலகர் ஜெயந்தி, காந்தி ஜெயந்தி, நவராத்திரி உத்சவம், உடல்நலம் கெட்டால் இயற்கை வைத்தியம் இப்படி. பாலபாரதி பத்திரிகைக்கு சுத்தானந்தரே முழுப்பொறுப்பெடுத்து வெளியிட்டார்.

படிப்பு தவிர மாணவர்களை அடிக்கடி வெளியில் சுற்றுலா அழைத்துச் சென்று இயற்கை வளங்களைக் காண்பிப்பார்கள். அப்படி அவர்கள் சென்ற இடங்கள், கல்யாண அருவி, குற்றாலம், நாகர்கோயில், குமரி முனை, பத்மநாபபுரம், திருவனந்தபுரம், கொல்லம், திருச்செந்தூர் இப்படி பல இடங்களுக்கும் சென்று நல்ல அனுபவம் பெற்றனர் மாணவர்கள்.

இவர் அங்கிருந்த காலத்தில்தான் வ.வே.சு.ஐயர் மீது ஜாதிப்பிரிவினைப் பார்த்து உணவு வழங்குகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இவ்வளவுக்கும் ஐயர் மிகப் பரந்த மனப்பாங்கு உள்ளவர். குறுகிய ஜாதிப்பிரிவுகளில் உட்படாத புரட்சிக்காரர். அவருக்கே இப்படிப்பட்ட குற்றச்சாட்டு எழுந்ததை சிறுபிள்ளைத்தனமாக இருந்தது என்கிறார் சுத்தானந்தர். பிரயாணங்களில் நாங்கள் அனைவரும் ஒன்றாக கலந்தே சமைத்து உண்டோம் என்கிறார் இவர்.

இவரிடம் ஐயர் மனம்வருந்தி பேசிய மற்றொரு செய்தி எவருடைய மனதையும் நெகிழச்செய்து விடும். அது என்ன? சுத்தானந்தர் எழுதுகிறார்:

"மணி பதினொன்று. நான் கீதை காட்டும் பாதை எழுதிக் கொண்டிருந்தேன். "ஸஞ்சலம் ஹி மனக் கிருஷ்ண' என்ற பகுதியை உரக்கப் படித்தேன். அப்போது ஐயர் வந்தார். ஆம், மனம் ஸஞ்சலமாகத்தான் இருக்கிறது. தைர்யவானையும் காலம் சோதிக்கத்தான் செய்கிறது. மனம் உடைகிறது. சோதனைகளை வென்றுதான் நமது தார்மிக வாழ்வை நிலைநாட்ட வேண்டும் என்றார்.

வ.வே.சு.ஐயர் அருவியில் விழுந்து இறப்பதற்கு முதல்நாள் ஐயர் தன் மகளுடன் கல்யாண அருவிக்குப் புறப்பட்டார். அப்படி புறப்பட்ட ஐயரை இவர் வர்ணிக்கும் பகுதி இது:

"சிங்கம் போன்ற முகம்; நெற்றி நிறைய விபூதி; அழகாகச் சீவி கழுத்தில் படிந்த கேசம்; நீண்டு வளர்ந்த தாடி - இரவும் பகலும் போல் கருப்பும் வெள்ளையும் காட்டுகிறது. வீரக்கனல் விழிகள்; நீர்க்காவி ஏறிய கதர் பஞ்சகச்சம்; மேலே பூப்போட்ட கதர் அங்கவஸ்திரம்; இறுகிப் புடைத்த தோளில், பை; அந்தி அழகெல்லாம் ஐயர் மேல் பொலிகிறது. மஞ்சள் வெயிலில் அவரது வீர வடிவம் தெரிகிறது. அந்தி மல்லிகைக் கொடிபோல் சுபத்திரா தவழ்கிறாள். நமஸ்காரம்.... என்றேன். அந்தோ! அதுதான் அவரது கடைசி சமஸ்காரமானதோ!"


பிறகு, மறுநாள் நடந்தவைகளை அவர் வாக்கால் கேட்டால்தான் அதன் ஆழம் புரியும். அவர் சொல்லுகிறார்:

"மறுநாள் அனந்தகிருஷ்ணய்யர் ஓடிவந்தார். வாருங்கள் என்று என்னை மாடிக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர் விம்மி விம்மி அழுதார். 'சுபத்ரா கால் தவறி அருவியில் விழுந்தாள். அவளை எடுக்க ஐயரும் குதித்தார். இதுகாறும் உடல் கிடைக்கவில்லை' என்றார். என் தலை சுழன்றது. தமிழகம் சுழன்றது. உலகமே சுழன்றது."

"கல்யாண அருவியை நோக்கி ஓடினேன். அப்போதுதான் ஐயரின் உடலை எடுத்துப் போட்டிருக்கிறார்கள். பார்க்கச் சகிக்கவில்லை. தாடி மீசையெல்லாம் முகம் முழுவதும் மீன்கள் கொத்தி விகாரப்படுத்தியிருந்தன. அழகான பெண் சுபத்ரை பிணமாகக் கிடக்கிறாள். மனைவி பாக்கியலட்சுமி அம்மாள் வந்தாள். அந்த சோகமயமான சூழ்நிலையை எப்படிச் சொல்வது. இறுதி கிரியைகள் முடித்து அந்த அம்மாள் தன் மகன் கிருஷ்ணமூர்த்தியுடன் திருச்சிக்குச் சென்றாள்."

இப்படி அந்த சோக நிகழ்ச்சியை வர்ணிக்கிறார் யோகி. மறுநாள் அந்த கல்யாண அருவிக்குப் போனார் சுத்தானந்தர். முதல்நாள் நடந்தவை அவர் மனக்கண்ணில் ஓடுகின்றன. ஐயரின் நினைவு அவர் மனத்தை வாட்டுகிறது. ஒரு பாடல் தோன்றுகிறது.

"சிங்கம் போல் வீறுடையான், சேய்போல் வஞ்சமிலான்
தங்க மணிக்குரலான் சாவிற்கும் அஞ்சாதான்;
முனிபோல் முகமுடையான் முத்துநகையுடையான்
கனிபோல் மொழியுடையான் கண்ணிலினிக் காண்பேனோ?"

தஞ்சையில் ‘சமரஸபோதினி’:

அதன் பின் இவர் பாலபாரதியை நடத்த முயன்றாலும் முடியவில்லை. பத்திரிகை நின்று போனது. ஆசிரமத்திலிருந்தும் சுத்தானந்தர் வெளியேறினார். பின்னர் தஞ்சையில் அப்போது வெளியான ‘சமரஸபோதினி’ எனும் பத்திரிகைக்கு ஆசிரியரானார். இதில் தி.ஜ.ரங்கனாதன் துணை ஆசிரியர். (இவர் பின்னாளில் மஞ்சரி உள்ளிட்ட பத்திரிகைகளில் பணியாற்றியவர்) மற்றும் பலரும் பத்திரிகை வெளிவர துணை புரிந்தனர். அப்போது இவரை டாக்டர் கோபு, பூவராகவன் ஆகியோர் வந்து காண்பராம். பத்திரிகை அலுவலகத்திலேயே இவரும் தங்கிக்கொண்டார்.

தஞ்சையில் இவருக்குப் பிடித்த இடங்களாக இவர் குறிப்பிடுபவை, வெண்ணாற்றின் பொழில், கருந்திட்டைக்குடி தமிழ்ச்சங்கம், சேதுபாவா மடம், பூர்ணானந்தர் தோட்டம், பிரஹதீஸ்வரர் கோயில், கருவூரார் சந்நிதி, பங்காரு காமாட்சி ஆலயம் இங்கெல்லாம் இவர் மனம் பறிகொடுத்து தியானத்திலும் பாடல்களைப் பாடுவதிலும், பிரசங்கங்கள் செய்வதிலும் கழித்ததோடு பல பெரியவர்களையும் தரிசித்துப் பழகியிறுக்கிறார்.

இவர் அடிக்கடி தியானம் செய்யச் செல்லும் மற்றொரு இடம் 'நீலகிரி தோட்டம்''. இங்கு சுவாமி கேவல்ராம் என்பவர் இருந்தாராம். இவர் அரவிந்தருக்கும் நண்பராம். தஞ்சையில் இருந்தபோது இவர் திருப்பூந்துறுத்தி சென்றிருக்கிறார். அங்கு ஓர் வேதாந்த சுவாமிகள் இருந்தாராம். அப்பர் மடம் இடிந்து கிடந்ததாம்.

அங்கிருந்து திருவையாறு சென்றிருக்கிறார். தியாகப்பிரம்மத்தின் சமாதியில் கீர்த்தனங்களை இயற்றிப் பாடினாராம். கல்யாணமஹால் சம்ஸ்கிருத கல்லூரிப் புலவர்களுடன் அளவளாவியிருக்கிறார்.

சமரஸபோதினி எனும் இந்த பத்திரிகை வாரம் இருமுறையாக வெளிவந்தது. இவர் பத்திரிகையில் சாத்தூர் விஸ்வநாத ஐயர் பாரதியார் பற்றி எழுதிவந்தார் என்கிறார். இவர் பாரதியாரின் தம்பி சி.விஸ்வநாத ஐயராக இருக்க வேண்டும்.

இவர் தஞ்சையில் இருந்த போது 1925இல் காஞ்சிபுரம் காங்கிரஸ் மகாநாடு நடந்திருக்கிறது. அதில் திரு.வி.க. தலைமை வகிக்க வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வேண்டி பெரியார் தீர்மானம் கொண்டு வந்து அது ஏற்றுக்கொள்ளப் படாமையால் அதிலிருந்தும் காங்கிரசிலிருந்தும் வெளிநடப்பு செய்தார். அந்த மாநாட்டிலும் இவர் கலந்து கொண்டிருக்கிறார். அந்த மகாநாட்டுக்கு முதல்நாள் நடந்த 'விஷயாலோசனைக் கூட்டம்' எப்படி நடந்தது என்பதை இவர் எழுதுகிறார்.

"விஷயாலோசனைக் கூட்டம் சந்தைக்கூட்டமாக இருந்தது. பேச்சுக்குப் பேச்சு வாள்வீச்சாக இருந்தது. ஒருவர் பேசியபின் மற்றவர் பேசினால் நன்றாக இருக்கும், இவர்கள் சளசளவென்று ஒரே நேரத்தில் அனைவரும் கூக்குரல் இட்டனர்" என்கிறார்.

காஞ்சிபுரம் மகாநாட்டையடுத்து வேதாரண்யத்தில் நடந்த காங்கிரஸ் மகாநாட்டிலும் கலந்துகொண்டு இவர் பேசியிருக்கிறார். அதன் பின் சீர்காழியை அடுத்த எருக்கூர் சென்றார். இவ்வூரில்தான் புரட்சிவீரன் நீலகண்ட பிரம்மச்சாரி பிறந்தார் என்பதை நினைவு படுத்திக் கொள்ளலாம். இங்குள்ள பாரத சமாஜத்தில் இவர் பேசினார்.

திருவையாற்றில் நடக்கும் தியாகபிரம்ம உத்சவத்திலும் கலந்துகொண்டு பல பாகவதர்களிடம் பேசியிருக்கிறார். அப்போது மைசூர் நாகரத்தினம்மாள் இவரிடம் உமக்கு எதற்கு அரசியலும் பத்திரிகையும். பேசாமல் கீர்த்தனாஞ்சலி செய்து கொண்டு இரும், என்று கூறியிருக்கிறார்.

பெரியார் ஈ.வெ.ரா.வுடன் நட்பு:

ஒரு முறை ஈரோட்டுக்குச் சென்று பெரியாரின் அண்ணன் கிருஷ்ணசாமி நாயக்கரிடம் பேசிவிட்டு பெரியார் வீட்டுக்குப் போக வழி கேட்க, அவர் சொன்னாராம், "சை! அவன் பாமரன், நாத்திகன், ராமாயண விரோதி, பிராமண விரோதி" என்று அஷ்டோத்திரம் நடத்தினார்.

பிறகு ஒரு மாட்டு வண்டியில் இவரை தன் தம்பி ராமசாமி நாயக்கர் வீட்டுக்கு அனுப்பினாராம். அங்கு இவரை ஈ.வே.ரா. அன்புடன் வரவேற்று மனைவிக்கு அறிமுகப்படுத்தினாராம். இவர் பெரியாரின் இல்லத்தில் ஸ்நானம் செய்து நித்ய அனுஷ்டானங்களை முடித்து சூரிய நமஸ்காரம் செய்வதை அவர் பார்த்துக் கொண்டிருந்தாரம். அதற்குள் அந்த அம்மாள் கூடத்தில் கோலம் போட்டு, ஊதுவத்தி கொளுத்தி, விளக்கேற்றி தட்டில் பழங்களைக் கொண்டு வைத்தாராம். பெரியார் இவரிடம் "பூஜை சேயண்டி" என்றார். இவரும் ஜபமும் தியானமும் செய்து கற்பூரம் ஏற்றி அந்தச்சுடரை தியானம் செய்ய, பெரியார் "பாகு பாகு சரியண்டி (நல்லது சரி சரி) என்றாராம்.

பெரியாரைப் பற்றி இவர் கூறுவது:

"நாயக்கர் காந்தியிடம் அன்பு வைத்திருந்தார். சாதி இறுமாப்பையும் கடவுள் பெயரால் நடக்கும் போலி நாடகங்களையும் அவர் கண்டித்தார். அரசியல் நாடகத்தில் புகுந்த கூனி வேலைகளையும் கோமாளிக் கூத்துக்களையும் அவர் வெறுத்தார், கண்டித்தார்."

பத்திரிகை தொழிலை விட்டுவிட்டு திருத்துறைப்பூண்டி அருகிலுள்ள பாமணி கிராமத்தில் மக்கள் நல்வாழ்வுக்காகப் பல சீர்திருத்தங்களைக் கற்றுக் கொடுத்து அந்த கிராம மக்களின் மனங்களில் இடம் பிடித்தார். பின்னர் அங்கிருந்து பாலையூர் எனுமிடத்துக்குப் போய் அங்கு தங்கி ஆசிரமம் ஏற்படுத்திக்கொண்டு கிராம முன்னேற்றத்துக்குப் பாடுபட்டார். மக்களின் மகோன்னத ஆதரவு இவருக்குக் கிடைத்தது.

அப்போது காங்கிரசை விட்டு விலகிய பெரியார் தொண்டர்கள் நாகப்பட்டினத்தில் ஒரு சுயமரியாதை மகாநாடு நடத்தினார்கள். அதில் மாயவரம் சின்னையா பிள்ளை தலைமை வகித்தார். அதில் காந்தி படத்தைத் திறந்து வைத்து சுத்தானந்தர் பேசினார். இந்த மகாநாட்டில் பட்டுக்கோட்டை அழகிரி, மாயவரம் நடேசன், சுப்பிரமணிய பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர். அதில் பலரும் பார்ப்பனீயம் என்றும் பிராமணர்கள் பற்றியும் கேலியாகப் பேசினர். ஒருவர் "பார்ப்பனீயம் ஒழிக!" என்றார். பின்னர் சுத்தானந்தர் பேசுகையில் சொன்னது:

"நான் ஒரு பார்ப்பான். எதைப் பார்ப்பான் தெரியுமா? எல்லோர் மனதையும் ஊடுருவிப் பார்ப்பான். சமரசத்தால் உங்களைப் பார்ப்பான். சாதி மதம் ஒழியப் பார்ப்பான் (கைதட்டல் கேட்கிறது) நான் ஒரு புரட்டன். ஆன்மாவைப் புரட்டிப் பார்ப்பவன். நான் ஒரு பஞ்சாங்கன், மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய பஞ்ச அங்கமுடையோன். பசியும் தாகமும் அனைவருக்கும் ஒன்றுதான். தோலைத் தாண்டினால் உள்ளம் ஒன்றுதான். நம்மைக் கெடுப்பது மனமயக்கம்தான். உள்ளறிவால் கண்டால் ஒருமையே தெரியும். இதைத்தான் அருட்சுடர் வள்ளலார் சொன்னார்" என்று பேசியதை பலரும் வரவேற்றார்கள்.

திருவாரூரில் ரயிலேறி பயணம் செய்கையில் இவருக்கு தொண்டு செய்யும் சீடர்கள் போல நடித்து இருவர் இவர் பெட்டியைத் திருடிச்சென்று விட்டனர். டிக்கட் இல்லாமல் பயணம் செய்த இவரை மாயவரம் ஸ்டேஷனில் இறக்கி விசாரித்தபோது இவர் விவரங்களைச் சொல்ல, அந்த ஸ்டேஷன் மாஸ்டருக்கு இவரைத் தெரிந்திருந்தமையால் அங்கு சிலநாட்கள் தங்கி பின் பயணத்தை தொடர்ந்தார்.

சென்னையில் தொடர்பு:

சென்னையில் இவரது மனம் கவர்ந்த இடம் மயிலாப்பூர். அடையாற்றில் இவர் அன்னிபெசண்ட் அம்மையாரையும் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியையும் சந்தித்துப் பேசினார். அப்போது சென்னை இந்தி பிரசார சபா திருவல்லிக்கேணியில் இருந்தது. அங்கிருந்த பாரதியின் உறவினர் ஹரிஹர சர்மாவோடு பழக்கம் ஏற்பட்டது.

இந்த காலகட்டத்தில் இவர் பெங்களூர் மற்றும் வடநாட்டுத் தலங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். காந்திஜியின் சபர்மதி ஆசிரமத்துக்கும் சென்றார். பம்பாய் பெருநகரத்திலும் இவரது வாசம் சில நாட்கள் இருந்தன. சென்னையில் இவருக்கு காந்திஜியோடு இருக்கும் பாக்கியம் கிடைத்தது. காந்திஜி இவரை ஆசீர்வதித்தார்.

‘ஸ்வராஜ்யா’ பத்திரிகை:

இவர் சென்னையில் இருந்த சமயம் டி.பிரகாசம் "ஸ்வராஜ்யா" பத்திரிகையை நடத்த இவரை அழைத்தார். அதே காரியாலயத்தில் இவருக்குத் தங்க இடம் தரப்பட்டது. அவர் "ஸ்வராஜ்யா" பத்திரிகையில் ஆசிரியராக இருந்தது பற்றி அவரே கூறும் செய்தியைப் பார்ப்போம்.

"பிராட்வேயில் மிகப் பெரிய மாளிகையில் 'ஸ்வராஜ்யா' காரியாலயம் இருந்தது. முதல் தளத்தின் முன்புறம் இரண்டு 'லைனோக்கள்' வேலை செய்தன. அடித்தளத்தின் பின்புறம் பெரிய ஆங்கில இயந்திரம் ஆங்கில 'ஸ்வராஜ்யா'வை அச்சடித்துக் கொண்டிருக்கும். மூன்றாம் மாடிக்குச் சென்றால் இவருடைய அறை. ஒரு கோவணத்தைக் கட்டிக்கொண்டு மின்னல் வேகத்தில் பேனரை ஓட்டிக் கொண்டிருப்பார்.

இவர் ஸ்வராஜ்யா ஆசிரியராக இருந்த சமயம் "பால்ய விவாகம்" பற்றிய சர்ச்சை எழுந்து பல கூட்டங்களில் விவாதங்கள் நடந்தன. அங்கெல்லாம் இவர் போய் பால்ய விவாகத்தை எதிர்த்தார். அப்போது சிலர் 'பெண்களுக்கு எட்டு வயதில் திருமணம் செய்ய வேண்டும், அதுதான் சாஸ்திரம். விதவைத் திருமணம் விபசாரமாகும்" என்றெல்லாம் பேச அங்கெல்லாம் கலவரம் நடந்தது. இந்த பத்திரிகை சிலகாலம் வரை வெளிவந்து கொண்டிருந்தது.

ஸ்ரீபெரும்புதூர் கூட்டம்:

ஸ்ரீபெரும்புதூரில் பெண்ணுரிமை கூட்டமொன்று நடந்தது. அவ்வூரில் பால்ய விவாகத்தின் காரணமாகப் பல விதவைகள் இருந்தனர். அதன் கொடுமைகள் குறித்து இவர் பேச அங்கு சென்றார். கோயில் மண்டபத்தில் கூட்டம். பெண்கள் பலர் அங்கு வந்து கன்னத்தில் கைவைத்துக் கொண்டு நின்றிருந்தனர். சில வைதீகர்கள் அவர்களை விரட்டியடித்தனர். "புருஷாள் கூட்டத்தில் உங்களுக்கு என்ன வேலை, போங்கோ" என்று விரட்டினார். அவர்கள் சுற்றியிருந்த வீட்டுத் திண்ணையில் கூடி கூட்டத்தைக் கேட்டனர். வைதீகர்கள் 'கலிகாலம் கலிகாலம்' என்றனர். உள்ளூர் பிரமுகர் யாரும் முன்வராததால் சுத்தானந்தர் பேசத் தொடங்கினார்.

அவர் பராசர ஸ்மிருதி, வேதம், பகுத்தறிவு இவற்றை ஆதாரமாகக் கொண்டு வாதம் புரிந்தார். ஆண்டாள் புரிந்தது காதல் திருமணம் என்றார். அங்கிருந்த வைதீகர்கள் சிலர் "நீங்கள்தான் கலிகால தூதர்கள், உங்களால்தான் மழை பெய்யவில்லை, கம்மனாட்டிகளுக்குக் கல்யாணமாம், திரண்டு குளித்த பெண்டுகளை மணையில் வைப்பதாம், காதலாம் கத்தரிக்காயாம், கலியாணமாம், போங்காணும்; கோயில் மண்டபத்தில் அபசாரமாகப் பேசக்கூடாது" என்று கூச்சலிட்டனர்.

அப்போது விசாலாட்சியம்மாள் என்பவர் பேச வந்தார். "ஏய்! பெண்கள் புருஷாள் முன் பேசக்கூடாது" என்று தடுத்தனர். இவர்கள் கோயிலுக்கு வெளியே ஒரு மேஜையைப் போட்டு அதில் ஏறி பேசிமுடித்துவிட்டே அங்கிருந்து கலைந்தனர். முத்துலட்சுமி ரெட்டி தலைமையில் தேவதாசி முறை ஒழிப்பையும் இவர் ஆதரித்துப் பேசியும் எழுதியும் வந்தார்.

‘சக்தி’யில் படைப்புகள்:

நமக்கெல்லாம் ‘சக்தி’ கோவிந்தன் பற்றி தெரியும். இவர் வெளியிட்ட சக்தி எனும் பத்திரிகை மிகவும் பிரபலம். அதில் ஆரம்பகாலத்தில் கவியோகிதான் ஆசிரியராக இருந்தார். ‘மஞ்சரி’ பத்திரிகையில் இருந்த தி.ஜ.ரங்கநாதன் என்பவர்தான் இவருக்கு ‘சக்தி’யில் உதவி ஆசிரியர். ‘சக்தி’ ஒரு மிகச்சிறந்த இலக்கியப் பத்திரிகை. அதில் யோகியின் கவிதைகள், கட்டுரைகள் அதிகம் இடம்பெற்றன.

இவை தவிர ‘இயற்கை போதினி’ என்ற ஒரு குறும் பத்திரிகையிலும் இவருக்குத் தொடர்பு இருந்தது. அல்லயன்ஸ் குப்புசாமி ஐயர் 1908 முதல் 1924 வரை நடத்தி வந்த ‘விவேக போதினி’ பத்திரிகையிலும் யோகி எழுதி வந்தார்.

கணக்கற்ற கவிதைகள்:

யோகி சுந்தானந்தருடைய கவிதைகளைக் கணக்கிட வேண்டுமென்றால் அது சாத்தியமான காரியமாக இருக்காது. பல்லாயிரக்கணக்கான பாடல்களை இவர் பாடியிருக்கிறார். மகாகவி பாரதியாரைப் போன்றே இவரும் சக்தியைப் பற்றிப் பாடியிருக்கிறார். ‘சுத்த சக்தி தாண்டவம்’ எனும் தலைப்பில் அமைந்த பாடலின் மேன்மையைப் பார்ப்போம்.

"ஓங்குயர் மோன ஒளி அதனில்
ஓமென யாழிசைத்தாய் அந்த
நீங்கறு பாட்டினிலே - பராசக்தி
நீளுலகைப் படைத்தாய்.
ஈருயிர் யாவினுக்கும் - உயிராய்
எங்கும் இருப்பவளே - எம்மைத்
தாங்கி வளர்ப்பவளே - சுத்த
சக்தி தர்மச் சுடர் மணியே!"

இன்னொரு பாடல்:

"ஓடும் அருவியெலாம் அம்மா
உன் ஓங்கார வீணையன்றோ?
பாடும் பறவையெல்லாம் திருப்
பாவை முழக்கமன்றோ?
கூடும் மணத் தென்றல் கண்ணன்
குழலமுத மன்றோ?
ஆடும் அவனியெல்லாம் ஓம்
சச்சி தானந்த தாண்டவமே!"

இங்கே ஒரு திருப்பள்ளி எழுச்சி கேட்போமா?

"விண்முகம் கனிந்தது விடிந்தது காலை
வீங்கிருள் அகன்றது தூங்கின குமுதம்
தண்முகம் அருளைத் தணல்முக மானது
தடங்களில் விரிந்தன தாமரை யெல்லாம்
மண்முகம் புதுப்பசும் பொன்முக மாகிட
மங்கலச் செங்கதிர் மலர்ந்தது வானில்
எம்முகம் பார்த்தருள் புரிவதற் கெண்ணி
எழுந்தருள் இத்தினம் இன்பக் கொழுந்தே!"

பெண்மைக்கு இலக்கணம் சொல்கிறார் இந்தப் பாட்டில்:

"வசந்த சோலை போலே மின்னும் வான்முகிலைப் போலே
இசைந்த காதல் போலே நல் இன்பமான பெண்மை
கலை வளர்க்கும் பெண்மை கவிகனிய நிற்கும் பெண்மை
தலை சிறந்த இன்பம் நல்கும் தாயமுதப் பெண்மை
தேன் மொழிகள் பேசி அன்புத் திருநகையை வீசி
வானமுதம் ஊட்டி நம்மை வளர்க்கும் பெண்மை வாழ்க"

'இளங்கதிர்' என்றொரு கவிதை:

"இளங்கதிர் காலை இயற்கையின் அழகில்
இலக்கியங் காணோமோ?
களங்க மில்லாத மலை அருவியினிலே
கவிதைகள் கேளோமோ?
உளங்குளிர் காதல் ஒருமையில் இன்பம்
ஊறிடக் காணோமோ?
வளம்பெறும் ஆண்பெண் சிவசக்தி எனவே
வாழ்ந்திட மகிழோமோ?"

‘யசோதரையும் சித்தார்த்தனும்’ எனும் தலைப்பில் ஒரு கவிதையை சுத்தானந்தர் இயற்றியிருக்கிறார்.

தமிழிசைப் பற்று:

கர்நாடக இசையில் பெரும்பாலும் தெலுங்குப் பாடல்களைத்தான் அதிலும் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் பாடல்களைத்தான் எல்லோரும் பாடுகிறார்கள். ஓரிருவர் முத்துசாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகியோர் பாடல்களையும், ஒரு காலத்துக்குப் பிறகு கன்னட மொழிப் பாடல்களையும் பாடி வருகின்றனர். இதையொட்டி தமிழ்நாட்டில் தமிழிசை இயக்கம் தொடங்கியது.

செட்டி நாட்டரசர் தலைமையில் கல்கி, ராஜாஜி ஆகியோரும் தமிழிசைக்கு ஆர்வம் காட்டி வளர்க்கத் தொடங்கினர். தமிழிசை பரவ வேண்டுமானால் தமிழில் நல்ல சாகித்தியங்கள் இயற்றப்பட வேண்டும் என்று பாரதியார் கூட விரும்பியிருக்கிறார். அதையொட்டி சுத்தானந்தர் கச்சேரிகளில் பாடக்கூடிய பல நல்ல தமிழ் சாகித்தியங்களை இயற்றினார்.

இவருடைய தமிழ்ப் பாடல்களை திருமதி எம்.எஸ்.சுப்புலட்சுமி, எம்.எம்.தண்டபாணி தேசிகர், டி.கே. பட்டம்மாள், ஜி.என்.பாலசுப்பிரமணியம், சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோர் பாடிப் பிரபலப்படுத்தினார்கள்.

எம்.எம்.தண்டபாணி தேசிகர் பாடி பிரபலமான பாடல் "இல்லையென்பான் யாரடா?" எனும் பாடல். தமிழில் பாட பாடல்கள் எங்கே இருக்கிறது என்று கேட்டவர்களுக்கு பதிலடி கொடுப்பது போல இந்தப் பாடல் அமைந்தது என்று தேசிகருக்கு பெருமகிழ்ச்சி.

தமிழில் சாகித்தியங்கள் இவர் திரைப்படங்களிலும் பாடல்களை எழுதியிருக்கிறார். அந்தக் காலத்தில் வந்த போஜன், ஆண்டாள், சுதர்சன், பொன்வயல், பார் மகளே பார், மரகதம் போன்ற படங்களில் இவரது பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன.

இவற்றில் சுதர்சன் படத்தில் பி.யூ.சின்னப்பா பாடியுள்ள "உன்னடியில் அன்பு வைத்தேன் கண்ண பரமாத்மா உலகெல்லாம் நீயே அன்றோ கண்ண பரமாத்மா" எனும் பாடலும், "பொன்வயல்" படத்தில், "சிரிப்புத்தான் வருகுதையே, உலகைக் கண்டால் சிரிப்புத்தான் வருகுதையே" எனும் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடலும், "பார் மகளே பார்" எனும் படத்தில் வரும் "வெட்கமாய் இருக்குதடி இந்த வேலவர் செய்திடும் வேலை இல்லா வேலை" எனும் பாடலும், "மரகதம்" படத்தில் வந்து பிரபலமாக விளங்கிய "மாலை மயங்குகின்ற நேரம், பச்சை மலை வளரும் அருவி ஓரம்" எனும் சுப்பையா நாயுடு இசை அமைத்த பாடலும் சிறப்பாக விளங்கிய பாடல்களாகும்.

சர்வமத சம்மதம்:

இவருக்கு மதப் பாகுபாடு இல்லை. இந்து மதத்தாராயினும் மற்ற மதங்களையும் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரைப் போல, அந்தந்த மதத்தில் ஈடுபாடு கொண்டு அந்த மதத்தாராகவே இருக்கப் பழகியவர். மற்ற மதங்களின் நூல்களைப் பழுதறக் கற்றவர். ஜைன மதத்தின் தத்துவங்களை ஆழமாகக் கற்றுத் தேர்ந்தவர் இவர். அது போலவே பைபிள் முழுவதும் இவர் கற்று அறிந்து வைத்திருந்தார். இஸ்லாம் தத்துவங்களைக் கற்றுக் கொள்வதற்காக திருக்குரானை முற்றிலுமாக ஓதியவர்.

அவர் இயற்றியுள்ள ‘பாரத சக்தி மகா காவியம்’ எனும் நூலில் இந்த சர்வமதக் கருத்துக்களை ஆழ்ந்து படித்து நமக்குக் கொடுத்திருக்கிறார். இவர் கிறிஸ்தவ மதம் பற்றிய ‘கிறிஸ்து சாதனம்’ எனும் கட்டுரையொன்றை எழுதி அந்த மதம் சார்ந்த கருத்துக்களைச் சிறப்பாக எடுத்து விவரிக்கிறார். கிறிஸ்தவ மத நூலான பைபிளில் 25,000 சொற்கள் உண்டு என்றும், இதை வைத்துக் கொண்டு பாதிரிமார்கள் அரிய தொண்டினை இயற்றுவதாகவும் கூறுகிறார். பைபிள் உலகிலுள்ள 400 மொழிகளில் இருப்பதாகவும் இவர் ஒரு தகவலைக் கொடுக்கிறார். தான் சென்ற உலக நாடுகள் அனைத்திலும் பைபிள் படிக்கப்படுவது குறித்தும் இவர் குறிப்பிடுகிறார்.

இவர் ‘புத்தர் கருணை’எனும் சிறிய நூலொன்றை எழுதியிருக்கிறார். புத்தரைப் பற்றி இவர் கூறும் கருத்துக்கள்.

"புத்தர் அரச போகத்தைத் துறந்தார். அரச மரத்தினடியில் அமர்ந்து இவர் உலகத்தார் துயர் நீங்க ஓர் மார்க்கம் கண்டார். பெளத்தம் அறவழியை போதிக்கிறது. அன்பு, இரக்கம், எளிமை, தன்னலமில்லாதிருத்தல், தானம், சீலம், நல்லொழுக்கம் இவை அமைதிக்கான வழி என்கிறார் சுத்தானந்தர். புத்தமத பிரச்சாரத்திலும் இவர் ஈடுபட்டார்.

ஜைனர்களின் மகாவீரர் பற்றியும் இவர் விளக்குகிறார். அவர் சொல்கிறார்:

"மகாவீரர் என்ற பெயரால் அவர் ஏன் அழைக்கப்பட வேண்டும் தெரியுமா? அதிமுத்தம் என்கிற பயங்கரமான சுடுகாட்டில் மகாவீரர் தியானத்தில் இருந்தார். கடுமையான இடி மின்னலுடன் மழை பெய்தது. பேய்க்கணங்களும், கொள்ளிவாய்ப் பிசாசுகளும் அவரை அச்சுறுத்தின. மகாவீரர் அசையவில்லை. பின்னும் அவரது பிரம்மச்சரியம் மாயப்பெண்களால் மாசுபடுத்த முயல்கின்றன. ஒன்றுக்கும் அசையாத மகாவீரரை ஒரு தேவதை "முனிவரே, உம்மை சோதித்தோம், நீரே பிரம்மச்சாரி, உம்மை மகாவீரர் என்பேன் என்கிறது அந்த தேவதை.

இப்படி இவர் மற்ற மதங்களையும் விரும்பி அதன் கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு அதன் பெருமைகளையெல்லாம் ஊருக்குச் சொன்னவர். ஆனாலும் அவர் அடிப்படையில் ஓர் அத்வைதி. ஆதி சங்கரரின் மீது அசைக்கமுடியாத பக்தி கொண்டவர்.

மகாகவி பாரதியோடு சுத்தானந்தர்:

மகாகவியின் பெருமையை மக்கள் பெரிதும் உணராதிருந்த காலத்தில் அந்த மாபெரும் கவிஞனைச் சரியாக அடையாளம் கண்டு கொண்டவர் சுத்தானந்தர். பாரதி குறித்து அவர் ‘பாரதி விளக்கம்’, ‘கவிக்குயில் பாரதியார்’ என இரு நூல்களை எழுதியிருக்கிறார். பாரதிக்கும் தனக்கும் இருந்த பழக்கம் குறித்து அவரே எழுதியதைப் பார்க்கலாம்.

"பாரதியாரை சிறுவயதில் நான் மதுரையில் பார்த்தேன். அப்போது அவர் வாட்டசாட்டமாக களை பொருந்தியவராக இருந்தார். புதுச்சேரியில் அவரைப் பார்த்தபோது அவர் மெலிந்து போயிருந்தார். நெற்றியில் நாமமும், கூரிய பார்வையும், பாவறா வாயும், தைரிய மீசை தாடியும் பாரதியை விளக்கின. இப்போது எவ்வளவு வேற்றுமை. ஆள் இளைத்திருந்தார். ஆனால் விழிகளில் அதே கனல். வெற்றிலைக் காவியேறி உதட்டில் அதே முத்து நகையைக் கண்டேன். மீசை ஜயமுண்டு பயமில்லை என்று பேசியது. தாடியில்லை."

கடையத்துக்குச் சென்று பாரதியைக் கண்ட காட்சியை இப்படி விளக்குகிறார்…

முதலில் அக்கிரகாரத்துக்குச் சென்று பாரதியார் வீடு எது என்று வினவினேன். “அடடா! நீர் வைதிகமாயிருக்கிறீர். அவனை ஏன் பார்க்கிறீர், அவன் முழு அனாச்சாரம்” என்றார் ஒருவர். “அது கிறுக்குப் பிடித்து கஞ்சா போட்டு எங்காவது திரியும்” என்றார் இன்னொருவர். “நாங்கள் யாரும் அவன் வீட்டுக்குப் போவதில்லை, அவன் கழுதையைக் கொஞ்சும் கவி” என்றார் இன்னொருவர். நான் அவர்கள் வாயை அடக்கினேன்.

“ஐயா! தமிழ்நாடு முழுவதும் கொண்டாடும் கவிக்குயிலை காகமும், கூகையும் வெறுத்தால் பரவாயில்லை, அவர் பெருமையை நான் அறிவேன்’’ என்றேன். ஒருவர் மட்டும் கடையம் சத்திரத் திண்ணையிலிருந்து வந்து "அதோ அந்த ஆற்றங்கரை தோப்பில் தாண்டுகால் போடுகிறார்" என்றார். ஓடினேன். "விட்டு விடுதலை ஆகிடுவாய் இந்தச் சிட்டுக் குருவியைப் போலே" என்ற பாட்டு என்னை வரவேற்றது. பாரதியார் அந்தப் பாட்டைப் பாடிக்கொண்டு வெகு முறுக்காக ராணுவ நடைபோட்டுக் கொண்டிருந்தார். இடையிடையே மீசையை நகாசு செய்து கொண்டே, அஸ்தமனச் சூரியனைப் பார்த்தார். பசுஞ்சோலையில் தங்க முலாம் பூசியது போல மஞ்சல் வெயில் படர்ந்தது."

-இப்படிச் சொல்லிக்கொண்டே போகிறார் சுத்தானந்தர். மறுமுறை திருச்செந்தூரிலும் பாரதியாரைச் சந்தித்திருக்கிறார். அங்கு பாரதியார் "முருகா, முருகா" எனும் பாடலைப் பாடியதைக் கேட்டிருக்கிறார். கடைசி முறையாக பாரதியை சென்னைக் கடற்கரையில் பார்த்திருக்கிறார். அப்போதுதான் பாரதியார் "பாரத சமுதாயம் வாழ்கவே" எனும் பாடலைப் பாடியதையும் அப்போது வ.வே.சு.ஐயரும் கூட இருந்ததையும் விவரிக்கிறார். அந்தக் கூட்டம் மழை காரணமாக சீக்கிரம் முடிந்துவிட்டதாம்.

வ.உ.சிதம்பரம் பிள்ளையுடன்:

தூத்துக்குடி சென்று இவர் வ.உ.சி.யைச் சந்தித்தார். அப்போது காங்கிரசில் இரு பிரிவுகள். ஒன்றுக்கு வரதராஜுலு நாயுடு தலைவர். இவர் அங்கு சென்றதும் மற்றொரு கோஷ்டி இவரை கூட்டங்களில் பேச அழைத்தது. வ.உ.சி.யுடன் நெருங்கிப் பழகிய காலமும் இதுதான். அவரைப் பற்றி சுத்தானந்தர் கூறுவது:

"உரம் பெற்ற வீர உள்ளம், கம்பீரமான கருமேனி, முரசம் போன்ற தமிழ்ப்பேச்சு, பேச்சுக்கேற்றபடி துடிக்கும் மீசை, வக்கீல் உடை, அன்பான மனம், புலமை நிரம்பிய சொல் - எல்லாம் என் மரியாதையை அதிகரிக்கச் செய்தன. 'வீரச்சிதம்பரம் பிள்ளை' என்ற பாட்டைப் பாடினேன்." என்கிறார்.

பாட்டைக் கேட்ட வ.உ.சி. "பாட்டு கம்பீரமாக இருந்தது. பாரதி கேட்டால் மகிழ்வார். ஸ்வராஜ்யாவில் தங்கள் தலையங்கம் படித்தேன், நடையில் பழைய விறுவிறுப்பும் புதிய மறுமலர்ச்சியும் உள்ளன. ஆனால் எல்லாம் காந்தி மயமாக இருக்கிறது. திலகரும் உமது நண்பர்தானே?" என்றார் பிள்ளைவாள்.

அதற்கு சுத்தானந்தர், "திலகரிடமும் எனக்கு உள்ளன்புதான். அந்த மராட்டிய வீரம் தங்கள் தமிழ் மீசையில் துடிக்கிறதே. வெள்ளையரை விரட்டியடிக்க அவர் வீரம் பேசினார். தாங்கள் வெள்ளையன் வெட்கும்படி கப்பல் விட்டீர்கள். தங்கள் தியாகத்தை சுதந்திர பாரதம் பொன் எழுத்துக்களால் பொறிக்கும்" என்றேன்.

பிள்ளை சொன்னார், "நான் சிறையை விட்டு வெளிவந்தபோது எனக்கு மாலை சூட்டி வரவேற்க ஒரு தமிழன்கூட இல்லை. எண்ணைக்கடை வைத்துப் பிழைத்தேன். வறுமையில் வாடினேன். வாலஸ் துரை எனது சன்னத்தை மீட்டுத் தந்தார். அந்த நன்றிக்கே என் பிள்ளைக்கு வாலேசன் என்று பெயரிட்டேன். அதற்கொரு குறள்:

"கொன்றன்ன இன்னா செயினும் அவர் செய்த
ஒன்று நன்றுள்ளக் கெடும்".

“இன்று எனக்கு மாதம் முன்னூறு ரூபாய் தந்தால் இப்படியே அரசியல் மேடையில் குதிக்கிறேன். நான் ஒருவன் கிளம்பினால் போதும், நாட்டை உரிமைக்கு அழைத்துச் செல்வேன்" என்றார்.

"தங்கள் உணர்ச்சிதான், பாரதி வாணியாகப் பாடியது. தங்கள் பேச்சு, பாரதி பாட்டு, ஐயர் எழுத்து, சிவாவின் ஆவேசம் - இந்த நான்கும் தமிழுலகைத் தட்டி எழுப்பின. இன்று வகுப்புவாதம்தான் நாட்டைப் பிளக்கிறது" என்றேன்.

அதற்கு வ.உ.சி. சொன்னார், "என் குருநாதர் காலத்தில் வகுப்புவாதமே கிடையாது. இன்று நாடு வகுப்புக் கந்தலாயிருக்கிறது. இந்து, முஸ்லிம், பார்ப்பான், அல்லான், வைதிக ஒத்துழையாமை, ஸ்வராஜ்யக் கட்சி என்ற பிரிவெல்லாம் தற்கால அரசியல் ஊழலையே காட்டுகின்றன. எனக்கு மட்டும் வாய்ப்பளித்தால், தமிழரை ஒன்று சேர்ப்பேன். நாயக்கரும், நாயுடுவும், ஐயங்காரும், ஐயரும் என்னுடன் கைகோர்த்து நடக்கச் செய்வேன்" என்றார்.

அன்று நடந்த கூட்டத்துக்கு சிதம்பரம் பிள்ளை தலைமை வகித்தார். வரதராஜுலு நாயுடு, எம்.எஸ்.சுப்பிரமணிய ஐயர், குப்புசாமி முதலியார், அண்ணாமலைப் பிள்ளை, சுப்பையர் ஆகியோர் பேசினர். கடைசியில் சுவாமி சுத்தானந்த பாரதியார் பேசுகிறார், பேசத்தான் வேண்டும், பேசும் பாரதியார் என்று அழைத்தார் தமிழ்ச்சிங்கம் வ.உ.சி. காலமும் கடமையும் என்று நான் பேசினேன், இல்லை கர்ஜித்தேன் என்கிறார் சுத்தானந்தர்.

பொதுவான சில செய்திகள்:

1979ஆம் வருஷம். சென்னை, பள்ளிப்பட்டு, ஸ்ரீராம் நகரில் யோகி சுத்தானந்த பாரதியார் ‘யோக சமாஜம்’ அமைத்து அதில் தங்கி இருந்தார். அங்கே அவருடைய சீடர்கள் சிலர் தங்கியிருந்தனர். அந்தக் காலத்தில் அவர் பல ஊர்களுக்கும் கூட்டங்களுக்கும் மற்ற நிகழ்ச்சிகளுக்கும் போய்வந்தார்.

பெரும்பாலான நேரங்களில் அந்த கட்டடத்தின் மாடியில் எழுதிக்கொண்டோ அல்லது தியானத்திலோ இருப்பது வழக்கம். இவருக்கு உதவியாகச் சில சீடர்களும் உடன் இருந்தார்கள். அடிக்கடி பல பெரியவர்கள் இவரைப் பார்க்க வருவார்கள். அவர்களுடன் இவர் இலக்கியம், கவிதை, யோகம், அரசியல் என்று ஒன்றுவிடாமல் பேசினார்.

அவர் ஃபிரெஞ்சு மொழியிலிருந்து தமிழாக்கம் செய்த கதையான ‘ஏழை படும் பாடு’ என்ற பெயரில் ஒரு திரைப்படம் எடுத்தார்கள் அல்லவா? அதில் நடித்த வி.நாகையா பற்றி இவருக்கு நல்ல அபிப்பிராயம். அவர் நன்றாகப் பாடுவார், நல்ல சங்கீத ஞானமுள்ளவர் என்பார். இவர் ஃபிரெஞ்சிலிருந்து மொழிபெயர்த்த மற்றொரு கதையை எம்.ஆர்.ராதா படமெடுக்க விரும்பினார் என்றும், ஆனால் அது நடக்கவில்லை என்றும் கூறுகிறார்.

இவர் தன்னை மட்டும் பற்றி சிந்திக்கவில்லை, அவர் காலத்து மற்ற எழுத்தாளர்கள், படைப்பாளிகள் பற்றியெல்லாம் இவருக்கு நல்ல எண்ணம் உண்டு. புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன் இவர்களது சிறுகதைகளை இவர் பெரிதும் பாராட்டியிருக்கிறார்.

பாரதிதாசனின் கவிதை வேகத்தையும் இவர் புகழ்ந்து பேசுகிறார். கம்பதாசன் குறித்து இவர் சொன்னது, "அந்த ஆள் அற்புதமான கவிஞன், ஆனால் ஒண்ணாம் நம்பர் குடிகாரன்" என்றார். கண்ணதாசன் குறித்து, "அவர் நல்ல கவிஞர், என் மீது நிரம்ப மரியாதை உள்ளவர்" என்கிறார். கவிஞர் சுரதா பற்றி இவர் கூறுவது: "சுரதாவை எனக்கு அவரது இளமைக் காலம் தொட்டே தெரியும். அவர் என் புத்தகங்களை எல்லாம் படித்து என்மீது ஆர்வம் கொண்டு தன் பெயரை "சுத்தானந்த தாசன்" என்று வைத்துக் கொண்டார். பின்னாளில் பாரதிதாசனிடம் ஐக்கியமாகி சுப்புரத்தினதாசன் என ஆனார்" என்கிறார்.

காஞ்சி மகா சுவாமிகள் மீது பக்தி:

காஞ்சி மகாசுவாமிகள் காஞ்சி மகான் பற்றி இவர் எழுதியதைப் பார்ப்போம்…

'இவர் துறவுலகத்துக்கே தூய ஒளியாகத் துலங்குகிறார். அவரை நான் ஐந்து முறை தரிசித்துள்ளேன். 1922-இல் அவர் சிவகங்கைக்கு வந்தபோது ராஜா சத்திரத்தில் தங்கியிருந்தார். நானும் என் தமயனாரும் சென்று தரிசித்தோம். எப்போதும் அவர் மகா தேஜஸ்வியாகத் துலங்கினார். அவர் பேச்சு மிக இனியது. அவர் குறித்து நான் பாடினேன்.

"தேனினும் இனிய சொல்லான், தீச்சுடர் மேனிகொண்டான்
ஊனுயிர்க்குயிரதான ஒன்றினைக் கலந்து நின்றான்
ஏனினிக் கவலை நெஞ்சே; இன்றுனக் கருள்செய் தானிஞ்
ஞானவான் - காமகோடி நாதனை நம்புவோமே"

அவருடைய திருக்கரத்தால் தேங்காயும் கனிகளும் திருநீறும் அளித்தார்.

மறுமுறை நான் திருப்பெருந்துறைக் கோயில் குறுந்தமரத்தடியே நிஷ்டைகூடி மாணிக்கப்பாட்டு எழுதிக் கொண்டிருந்தேன். அப்போது அடியார் சூழ ஆசாரியார் வந்தார். ஒரு பாட்டுப் படித்தேன். என்னை ஆசீர்வதித்தார். ஒரு வாரம் அவருடனே இருந்தேன். பிறகு காஞ்சி, சென்னை, திருப்பதி மூன்றிடங்களுக்குத் தலைமை வகித்து அவரைப் பற்றிப் பேசினேன்.

ரமண மகரிஷியும் அரவிந்த மகானும்:

அரசியல், ஆசிரியர் பணி, ஊர் சுற்றல், வாதம் புரிதல், கிராம நிர்மாணத் திட்டங்கள் இப்படி பல அவதாரங்களை எடுத்த இவர் அடிக்கடி தியானத்தில் அமர்ந்துவிடுவார் என்பதைப் பார்த்தோம் அல்லவா?

ஒரு நிலையில் இவரது தியானத்தில் ரமண மகரிஷி தோன்றத் தொடங்கினார். அது முதல் ரமணர் குறித்தும், அவர் வாழ்ந்த திருவண்ணாமலை, அவர் தவமிருந்த விருபாக்ஷி குகை இவை மனதில் ஓடத்தொடங்கின. விடுவாரா இவர்? எங்கெங்கோ சுற்றி மறுபடி திருவண்ணாமலை வந்து சேர்ந்தார். திருவண்ணாமலையில் வந்து இறங்கியதும் அண்ணாமலைப் பிள்ளை, ஜானகிராம ஐயர் ஆகிய இருவர் இவரை வரவேற்றனர்.

இவர் அண்ணாமலை குன்றில் ஏறி அங்கு அருவியில் நீராடிவிட்டு விருபாக்ஷி குகைத் திண்ணையில் அமர்ந்து தியானத்தில் மூழ்கினார். பின்னர் அங்கிருந்து ரமணாசிரமம் சென்றார். அங்கு அப்போது இருந்த பிரபல காங்கிரஸ் தலைவரும் ஆன்மீகத் துறையில் பெரியவருமான காவ்யகண்டம் கணபதி சாஸ்திரிகள் இருந்தார். மகரிஷியிடமும் காவ்யகண்டம் சாஸ்திரிகளிடமும் சுத்தானந்தர் நன்கு அளவளாவினார். இந்த சந்திப்பினால் தான் 'ரமணப்பிரகாசத்தின்' பெருமையை அறிந்தேன் என்கிறார் சுத்தானந்தர்.

இவர் திருவண்ணாமலையில் பகவான் ரமணரின் அனுமதியோடு மலைமீது ரமணர் தவமிருந்த விரூபாக்ஷி குகையில் அவரைப் போலவே மெளனத் தவத்தில் அமர்ந்து இருந்திருக்கிறார். ரமணாசிரமத்தில் சுத்தானந்தர் வசித்து வரும் போது அங்கிருந்த காவ்யகண்டம் கணபதி சாஸ்திரிக்கு அரவிந்தரை தரிசிக்க வருமாறு அழைப்பு வருகிறது. தானும் அரவிந்தரை தரிசிக்கவும் தன் வங்கிக் கணக்கிலிருந்த பணத்தை அரவிந்தரிடம் கொடுத்துவிட வேண்டுமென்கிற எண்ணமும் உதயமாகியது.

ரமணரின் சந்நிதியில் இருக்கும்போதுதான் 'ரமணரைப் பார்த்தாலே போதும், அவர் அடைந்த உயர்நிலையைப் பிறரும் அடையத் தூண்டும் சக்தி கிடைக்கும்' என்று உணர்ந்தார் சுத்தானந்தர். திருவண்ணாமலை வாசத்தின் போதுதான் சேஷாத்ரி சுவாமிகளையும் தரிசித்தார். அவர் சொன்ன மகா உபதேசம் "சுத்தானந்தமாக இரு" என்பது. அந்த ஆசியை மனதில் வாங்கிக்கொண்டு திருவண்ணாமலையை விட்டுப் புறப்பட்டார்.

அங்கிருந்து புதுச்சேரி வந்தார். அங்கு அரவிந்தரையும் அன்னையையும் தரிசித்தார். 5-12-1950இல் அரவிந்தர் முக்தி அடைந்தார். அதன் பின் ஆரோவில் எனும் ஊர் உருவானது. அதில் 200 பேர் அயல்நாட்டார் சிறு குடில்களை அமைத்துக்கொண்டு வாழ்ந்தனர். அப்போது அன்னையும் காலமானார். அதன்பின் அங்கு தொடர்ந்து வாழ்ந்து வந்த சுத்தானந்தர் முதல் ஏழு ஆண்டுகளில் அரவிந்தரின் நூல்கள் அனைத்தையும் பயின்றார். பல நூல்களை மொழி பெயர்த்தார். அவர் கவிதைகளை வரி வரியாக ஆழ்ந்து படித்தார். அதைப்பற்றியெல்லாம் சுமார் 40 நூல்கள் எழுதி வெளியிட்டார். அங்கு மெளனமும், நூல் எழுதுதல், படித்தல் என்று பொழுது போயிற்று.

அரவிந்த ஆசிரமத்தில் தொடர்ந்து 25 ஆண்டுகளைக் கழித்தபின் அவர் புதுவையை விட்டு வெளியேறினார். புதுவையில் இருந்த 25 ஆண்டுகளும் அவர் மெளன விரதம் பூண்டிருந்தார். முதல் பத்து ஆண்டுகளில் அரவிந்தரின் நூல்கள் அனைத்தையும் படித்துத் தேர்ந்தார். பின்னர் பற்பல நூல்களை எழுதிக் குவித்தார். அத்தனையும் தனது மெளன விரதத்தோடேயே நடந்தது.

அங்கு இவர் யோகம் பயின்றதோடு, அரவிந்தரின் அன்புக்கும், அன்னையின் கருணைக்கும் பாத்திரமானார். தினம் இவர் அவர்களை தரிசித்தபின் தான் தனது வேலைகளைத் தொடங்குவார். அரவிந்த அன்னை இவருக்குத் தினமும் ஒரு மலரைக் கொடுத்து ஆசி வழங்கி வந்தார். வாழ்க்கைப் பலனைப் பெற்றதாகவும், அவர்களது அருளாசி தனக்கு முழுமையாகக் கிடைத்ததாகவும் இவர் கருதினார். நான் ஏன் அரவிந்தாசிரமத்தை விட்டு வெளியேறினேன் என்பதற்கு "கடவுள் ஆணை' என்கிறார். அரவிந்த ஆசிரமத்தைவிட அரவிந்தரை மேலாக நினைக்கிறேன் என்கிறார்.

அங்கிருந்து சிதம்பரம் அண்ணாமலை நகருக்குச் செல்கிறார். அங்கு ராஜா சர் அண்ணாமலை செட்டியார் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பேசினார். பிறகு தருமபுரம் ஆதீனம் சென்று அவர்களோடு சைவ சித்தாந்தத்தைப் பரப்புவது குறித்து பேசினார். அங்கிருந்து வைத்தீஸ்வரன்கோயில் சென்று தரிசித்தார்.

சுவாமி சிவானந்த சரஸ்வதி, ஆரிய சமாஜ் தலைவர் சுவாமி ஸ்ரத்தானந்தா, ஷீரடி சாய்பாபா, புட்டபர்த்தி பாபா, மேகர் பாபா, இவர்கள் தவிர பிரபல விஞ்ஞானி சர் சி.வி.ராமன், கே.எம்.முன்ஷி, ஜவஹர்லால் நேரு, ராஜாஜி, திருக்கோயிலூர் தபோவனம் சுவாமி ஞானானந்தா ஆகியோர்களோடும் இவருக்கு பழக்கம் இருந்தது. இதன் பின் உலக நாடுகள் பலவற்றுக்கும் யாத்திரை சென்றார்.

வெளிநாட்டுப் பயணங்கள்:

இன்றைய சூழ்நிலையில் வெளிநாடு செல்வது என்பது நம் ஊரிலிருந்து சென்னைக்குப் போய் திரும்புவது போலத்தான். ஆனால் அதிக வசதிகள் இல்லாத நிலையில் யோகி சுத்தானந்த பாரதி பல ஊர்களுக்கும் சென்று வந்ததென்பது சிறப்பான செய்தி.

இவர் சென்ற நாடுகளிலெல்லாம் இவரது தோற்றமும், பேச்சும் இவர் மீது மக்கள் மதிப்பும் பக்தியும் கொள்ள வைத்தது. இந்து சமயத்தைப் பற்றிப் பேசும் இவர் மற்ற சமயங்களையும் போற்றிப் பேசியதை மக்கள் வரவேற்றனர். இவர் வெளிநாட்டுப் பயணங்கள் இவர் மட்டும் கண்டும் வசித்தும் வந்த நிகழ்ச்சியாகி விடாமல் அவற்றை ‘நான் கண்ட ரஷ்யா’, ‘நான் கண்ட ஜப்பான்’ என்றெல்லாம் நூல்களை எழுதி மக்களும் படிக்க வசதி செய்து கொடுத்தார்.

இவர் சென்று வந்த நாடுகள் ரஷ்யா, இலங்கை, மலாயா (மலேசியா), தாய்லாந்து, ஜப்பான், பிரான்ஸ், லண்டன் (இங்கிலாந்து), ஜெர்மனி, அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, இத்தாலி ஆகியவையாகும்.

ரஷ்ய அனுபவம்: மாஸ்கோவிலிருந்து சுமார் 100 மைல் தூரத்திலிருந்த டால்ஸ்டாய் பண்ணையும், அவரது மாளிகையும் இவர் சென்று பார்த்த இடங்களில் முதலாவதாகும். அங்கு டால்ஸ்டாயின் வீட்டில் ஒரு நினைவகம் இருக்கிறது. அங்கு டால்ஸ்டாய் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் கண்டு களித்தார். பின்னர் அங்கு அமர்ந்து தியானம் செய்தார்.

அங்கு போய் டால்ஸ்டாயின் நினைவிடத்தில் அமர்ந்து கொண்டு நமது ஊரில் வடலூரிலுள்ள வள்ளலாரின் நினைவிடத்தையும் அப்படி மாற்ற வேண்டுமென்று எண்ணமிடுகிறார். அங்கிருந்து லெனின்கிராட் செல்கிறார். அங்கு இவர் ஒரு பள்ளிக்கூடத்துக்குச் செல்கிறார். அங்கு ஒரு மாணவனிடம் போய் இவர் "நீ கடவுளை நம்புகிறாயா?" என்றார். அந்த மாணவன் சொன்னானாம், "ஆம் நான் நம்புகிறேன், ஆனால் இந்த விஷயம் என் ஆசிரியருக்குத் தெரியக் கூடாது" என்றானாம். இதை அவரே எழுதுகிறார்.

இவரது ரஷ்யப் பயணத்தின் போது இவர் எழுதிய இரு ஆங்கிலக் கவிதைகள் படிக்க சுவாரசியமாக இருக்கும்.

இலங்கை அனுபவம்: இவர் இலங்கை சென்ற சமயம் அங்கு அமைதி நிலவியிருந்தது. மன்னார் சென்றடைந்த இவர் அங்கிருந்து கதிர்காமம் வரை சென்ற போது இவருக்கு அதி விமரிசையான வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஒவ்வோர் ஊரிலும் ஆடலும், பாடலும், நாட்டியம், ஊர்வலம் என்று தடபுடலாக வரவேற்பு இருந்தது. சைவம் தழைத்தோங்கிய பகுதி அது. அங்கு அனைத்து மதத்தினரும் அன்பு, பக்தி, நேர்மை இவற்றோடு ஒற்றுமையாக வாழ்வதைக் கண்டதாக எழுதுகிறார்.

ஆறுமுக நாவலரின் சைவம், சுவாமி விபுலானந்தரின் சங்கத் தமிழ், பொலநருவாவில் புத்தர் காட்சி, திரிகோணமலையின் கடற்கரை, ச்கிரியா மலையின் மேல் சித்திரக் காட்சிகண்ட், சிங்கக் குகை, அனுராதபுரத்தில் அசோகனின் மகள் சங்கமித்திரையால் நடப்பட்ட அரச மரம், புத்த நாகரிகச் சின்னங்கள் இவற்றைக் கண்டு இவர் மனம் நெகிழ்ந்து போயிருக்கிறார்.

கண்டியில் புத்தருடைய பல் இருப்பதை தரிசனம் செய்திருக்கிறார். அங்கு இவர் ‘சமயோக தர்மம்’ எனும் தலைப்பில் ஒரு சொற்பொழிவு நிகழ்த்தியிருக்கிறார். இவர் நாவலப்பிட்டி, வதுளை, குவீன்ஸ்மேரி, கல்யோயா ஆகிய ஊர்களுக்குச் சென்றபோது கடுமையான மழை பெயதபோதும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து இவர் பேச்சைக் கேட்டனர்.

வவுனியாவில் சுத்தானந்தர் இளைஞர் மன்றம் எனும் ஓர் அமைப்புச் செயல்பட்டு வந்தது. அங்கு ஏராளமான தமிழ் அன்பர்கள் இவருக்கு மறக்கமுடியாத வரவேற்பு கொடுத்தனர்.

மலாயா பயணம்: மலாயா செல்வதற்காக இவர் முதலில் சிங்கப்பூர் சென்று அங்கு நகரசபை மண்டபத்தில் மாபெரும் கூட்டத்தில் உரையாற்றினார். தலைப்பு ‘சர்வமத சமரசம்’ என்பது. அங்கிருந்தவர்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தது, எனவே இவர் ஆங்கிலத்தில் பேசினார். அங்குள்ள பத்திரிகைகள் இவரது பேச்சை விவரமாக வெளியிட்டிருந்தன. தமிழ் முரசு, மலாயா மெயில், தமிழ்நேசன், டைம்ஸ் ஆகிய பத்திரிகைகள் தினமும் இவரது பேச்சை வெளியிட்டன. கோலாலம்பூர் முதலான இடங்களிலும் இவரது பேச்சைக் கேட்க மக்கள் திரளாக வந்திருந்தனர்.

தாய்லாந்து பயணம்: இவர் தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கிற்கு சென்றதும் அங்கு பரவியிருந்த இந்தியப் பண்பாடு, கலை ஆகியவற்றைக் கண்டு ரசித்திருக்கிறார். புத்தர் கோயில், ராமாயணச் சிற்பங்கள் ஆகியவை தனக்கு உளக்கிளர்ச்சியை உண்டு பண்ணியதாக இவர் குறிப்பிடுகிறார்.

சயாம் சங்கத்தில் இவர் கம்ப ராமாயண சொற்பொழிவு நிகழ்த்தியிருக்கிறார். இவர் பன்மொழிப் புலவர் அல்லவா? அங்கு இந்தியில் வேதம் குறித்த சொற்பொழிவொன்றையும் நிகழ்த்தியிருக்கிறார். தற்போதைய வியட்நாமிலுள்ள சைகோனுக்கும் சென்றார். இப்படி தென்கிழக்கு ஆசியா முழுவதும் இவர் பயணம் செய்தார்.

ஜப்பான் பயணம்: ஜப்பானின் பயணம் இவருக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்ததாம். அவர் சொல்கிறார், "ஆசியாவின் ஆற்றல் பெற்ற வீரத் திருநாடு ஜப்பான்" என்று. அங்கு போனதும் அது இவரது தாய்வீடு போல உணர்ந்தாராம். யோகஹாமா துறைமுகம் பார்த்துவிட்டு அங்கு நடந்த உலக பெளத்த மகாநாட்டில் ‘ஜென் புத்தம்’ எனும் தலைப்பில் ஒரு மணிநேரம் பேசினாராம். டோக்கியோ பல்கலைக்கழகத்தையும் இவர் கண்டு களித்திருக்கிறார்.

ஃபிரான்ஸ் பயணம்: ஃபிரான்சின் வண்ணமிகு தலைநகர் பாரிசுக்கு இவர் சென்றார். அங்கு ஜோன் ஆஃப் ஆர்க் கையில் வைத்திருந்த வாளைக் கண்டு அதைக் கண்களில் ஒத்திக் கொண்டாராம். ஈஃபிள் டவர் இவரைக் கவர்ந்த இடம். இவருக்கு ஃபிரெஞ்சு மொழி நன்றாகத் தெரியும். கவிதைபாடும் ஆற்றலும் உண்டு. ஆகவே அங்கு இவர் பல ஃபிரெஞ்சு புலவர்களைக் கண்டு உரையாடியிருக்கிறார்.

லண்டன் பயணம்: லண்டன் சென்று அங்கிருந்து ஷேக்ஸ்பியர் கிராமமான ஸ்டாட்ஃபோர்டு சென்று அங்கு ஷேக்ஸ்பியர் விழாவில் கலந்து கொண்டார். ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகங்களுக்குச் சென்று வந்தார். ஜெர்மனி பயணம் பெர்லினில் உலக சமாதான மகாநாடு நடைபெற்றது. அதில் பங்குகொண்டு இவர் பேசினார். இவர் பேச்சுக்கு ஜெர்மானியர்கள் அடிக்கடி எழுந்து வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ஆர்ப்பரித்தனராம்.

இந்த நாடுகள் தவிர இவர் அமெரிக்கா, இத்தாலி, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கும் சென்று வந்தார். உலக நாடுகள் முழுவதையும் சுற்றிப் பார்த்த பின் பூரண ஞானத்துடன் இவர் தனது வாசத்தைச் சென்னையில் நிலைநிறுத்தினார். அங்கு ‘யோக சமாஜம்’ எனும் இடத்தை அமைத்துக் கொண்டு அங்கு சந்நியாச வாழ்க்கையைத் தொடர்ந்தார்.

இவர் தனது தென்னாப்பிரிக்கப் பயணத்தின் போது டர்பன், ஜோஹன்ஸ்பர்க், கேப்டவுன், கிம்பர்லி, ஆகிய இடங்களுக்குச் சென்று அங்குள்ள தமிழர்களிடையே பேசினார். அவர் சென்ற இடங்களிலெல்லாம் தமிழர்கள் கூட்டம் கூட்டமாக வந்து இவர் பேச்சைக் கேட்டனர்.

ராஜராஜன் விருது:

இவர் சென்னையில் தனது யோக சமாஜத்தில்இருந்த காலத்தில்தான் தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகம் இவருக்கு முதன்முதலாக அறிவிக்கப்பட்ட ‘ராஜராஜன் விருதை’க் கொடுத்து கெளரவித்தது. இந்த விருதைப் பெற்ற முதல் அறிஞர் இவர்தான். தமிழ்ப் பல்கலைக் கழகம் தோன்றி அறிவித்த முதல் விருது இது. இதனைப் பெறும் பாக்கியத்தைப் பெற்றவர் யோகி சுத்தானந்த பாரதியார்.

இவர் பாடல்களிலும், எழுத்திலும் மணிப்பிரவாள நடையே அதிகமிருக்கும். தனித்தமிழ் இயக்கத்தார் சிலர் இவரது இந்த மணிப்பிரவாள நடையை ஏற்றுக் கொள்ளவில்லை, குறை சொன்னவர்களும் உண்டு.

இவர் அதிகம் உறங்குவது கிடையாது. அது பற்றி வ.வே.சு.ஐயர் கூறுகையில், "அவர் பேனா நள்ளிரவில்கூட ஓடிக்கொண்டிருக்கும்" என்பார்.

அதிக நேரம் தியானத்தில் இருப்பார். உணவு வகைவகையாக சாப்பிடமாட்டார். அரிசியோடு காய்கறிகளையும் ஒன்றாகப் போட்டு வேகவைத்து சாப்பிட்டுவிடுவார். வயதான காலத்திலும் கிணற்றில் நீர் இறைத்து குளித்து தன் உடைகளைத் தானே துவைத்து உணர்த்திப் போட்டுக் கொள்வார்.

சிவகங்கையில் பள்ளி:  

சென்னை- அடையாறு யோக சமாஜத்தில் இருந்து கொண்டிருந்த சுவாமிஜிக்கு திடீரென்று தான் பிறந்த சிவகங்கையின் நினைவு வந்தது. அங்கு தொடங்கிய அவரது வாழ்வு உலகம் முழுவதும் சுற்றித் திரிந்த பின் சென்னை- அடையாற்றில் பல காலம் யோக சாதனையில் ஈடுபட்ட பிறகு தன் வாழ்வின் அந்தி நேரம் நெருங்குகிறது என்பதை உணர்ந்தோ என்னவோ தன் சொந்த ஊருக்கு வர எண்ணினார்.

1973இல் சிவகங்கை ராஜா உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்த ஆர்.வெங்கடகிருஷ்ண ஐயருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் சிவகங்கை நகரையொட்டிய புறநகர் பகுதியில் ஒரு பள்ளிக்கூடம் தொடங்க வேண்டும், அதற்கு ஆகவேண்டிய காரியங்களைத் தொடங்குங்கள் என்று எழுதப்பட்டிருந்தது.

ஆனால் ஒரு பள்ளிக்கூடம் தொடங்க வேண்டுமானால் அதற்கான பூர்வாங்க வேலைகள் எவ்வளவு சிரமம் என்பது அதில் ஈடுபட்டவர்களுக்குத்தான் தெரியும். எத்தனை நடைமுறைகள், எத்தனை தடைகள், அலைச்சல், செலவு, இதையெல்லாம் எண்ணி தலைமை ஆசிரியர் சற்று திகைத்தார். இருந்தாலும் இப்படியொரு பள்ளி தொடங்குவது என்பது வரவேற்கத்தக்கதுதான் என்று முடிவு செய்து அதற்காக ஒரு கமிட்டி ஏற்படுத்தி வேலைகளில் இறங்கினார்.

பள்ளிக்கூடம் தொடங்குவது என்றால் அதனை ஏதாவது ஒரு அமைப்பின் சார்பில்தான் தொடங்க வேண்டுமென்று சுவாமிஜி விரும்பியதால் ‘யோக சமாஜம்’ எனும் பெயரில் ஓர் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. உடனே சிவகங்கையைச் சுற்றி பள்ளிக்கூடத்துக்கு ஏற்ற இடம் கிடைக்கிறதா என்று தேடத் தொடங்கினார்கள். அப்படியொரு பெரிய இடம் சோழபுரம் எனும் கிராமத்தில் இருந்தது.

அதன் உரிமையாளர்களான இரு செல்வந்தர்கள் தங்கள் இடத்தைத் தானமாகக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார்கள். நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த இரு தனவந்தர்கள் மனமுவந்து இந்த நற்பணிக்காகத் தங்கள் 27.37 ஏக்கர் நிலத்தைத் தானமாகக் கொடுத்தனர். வாழ்க அவர்களது தர்ம சிந்தை. ஒருவருடைய இடம் 22 ஏக்கர் மற்றொருவருடையது 7.37 ஏக்கர். இரண்டும் ஒரே இடத்தில் அமைந்திருந்தது. 1977 ஜனவரியில் Gift Deed பதிவு செய்யப்பட்டது. சிவகங்கை கம்பன் விழாவுக்கு வந்த யோகி சுத்தானந்த பாரதியார் யோக சமாஜத்துக்கு ‘சுத்தானந்தா யோக சமாஜம்’ எனப் பெயரிட்டு பதிவு செய்யச் சொன்னார். 1978இல் பள்ளிக்கூடம் தொடங்க அனுமதி கேட்டு மனுச்செய்தனர். கே.என்.ராமநாதன் செட்டியார் என்பவர் தனது மாளிகையொன்றை தற்காலிகமாக பள்ளிக்கூடம் நடத்த கொடுத்தார்.

பல அரசு அதிகாரிகளும் இப்படியொரு பள்ளிக்கூடம் தொடங்க, அதுவும் சுவாமி சுத்தானந்தர் தொடங்குவதனால் அனைத்து ஒத்துழைப்பையும் தந்தனர். ஆனால் ஒரே ஒருவர் Joint Director of School Education அனுமதி தர மறுத்துவிட்டார். எனவே கமிட்டி சென்னையிலிருந்த டைரக்டருக்கு மேல் முறையீடு செய்தனர். அப்போது டைரக்டராக இருந்தவர் கல்வியாளர் டாக்டர் கே.வெங்கடசுப்பிரமணியம். அவர் அவசரமாக மும்பை செல்லவிருந்ததால் வந்தவுடன் அனுமதி தந்துவிடுவதாகச் சொல்லி மனுவைத் தன் உதவியாளரிடம் கொடுத்துச் சென்றார்.

அந்த உதவியாளர் வேண்டுமென்றோ அல்லது தவறாகவோ அதனை அனுமதி மறுத்த அதிகாரிக்கு அனுப்பி வைத்துவிட்டார். மறுபடி தேர் புறப்பட்ட இடத்திலேயே சென்று நின்றது. அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த உ.சுப்பிரமணியமும் அவர் தம்பி உ.பில்லப்பன் என்பவரும் முதலமைச்சர் எம்.ஜி.ராமசந்திரனிடம் இது குறித்துப் பேசினார். பண்ருட்டி ராமசந்திரனிடமும் பேசினார். உடனே பண்ருட்டி டைரக்டருக்கு போன் செய்து அனுமதி தருவது குறித்து முடிவு என்ன ஆயிற்று என்று முதலமைச்சர் கேட்பதாகக் கேட்டதும், அவசர அவசரமாக கையெழுத்தாகியது. இப்படி மலையைக் கெல்லி ஒரு எலியைப் பிடிக்க வேண்டியிருந்தது, இப்படியொரு பள்ளிக்கூடம் தொடங்குவதற்காக.

சிவகங்கை ராஜா உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக இருந்த வெங்கடகிருஷ்ணன் தான் இந்த பள்ளிக்குத் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். 1-9-1979 அன்று பள்ளிக்கூடம் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை தொடங்கப்பட்டது. அடுத்த ஆண்டில் பத்தாவது ஆரம்பிப்பது என்று முடிவானது. அதுவரை 59 பேர் பள்ளியில் சேர்ந்திருந்தனர். பள்ளிக்கூடத்துக்கு தானமாக வந்த இடத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டது. 1-6-1987இல் இந்த புதிய கட்டடத்துக்கு பள்ளிக்கூடம் மாற்றப்பட்டது. அந்தக் கட்டடம் Dr.K.வெங்கடசுப்பிரமணியம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. உதவி செய்த அத்தனை கல்வித்துறை அதிகாரிகளும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டார்கள்.

சென்னை- அடையாறு யோக சமாஜத்தில் தங்கியிருந்த யோகியார், சிவகங்கை சோழபுரத்துக்கு வந்து நிரந்தரமாகத் தங்குவதென்று முடிவுக்கு வந்தார். 1982 டிசம்பரில் இவர் சிவகங்கை வந்து சேர்ந்தபோது மகிழ்ச்சி வரவேற்பு அளிக்கப்பட்டது. இங்கு அவருக்கு பல ஊர்களிலிருந்தும் சீடர்களும், ஆர்வலர்களும் வந்து சேர்ந்தார்கள். இவருடைய ONE GOD, ONE WORLD AND ONE COSMIC RACE எனும் சித்தாந்தம் தீவிரமாக பிரசாரம் செய்யப்பட்டது.

1990இல் அவரே சோழபுரம் பள்ளிக்கூடத்தில் தன் வரலாற்றைப் பேசினார். அது:

"என்னை ஆட்கொண்டு ஆளாக்கிய மகான்கள் பலர். தேவி மீனாட்சி அருளால் அருட்கவியானேன். பூர்ணானந்தர், ஞானசித்தர், ரமணர், ஷீரடி சாயிநாதர், சேஷாத்ரி சித்தர், சித்தாரூடர், அப்துல்லா மெளல்வி, சாது சுந்தர் சிங், மெஹர்பாபா, அரவிந்த அன்னை, அன்னிபெசண்ட், வ.வே.சு.ஐயர், கவிக்குயில் பாரதியார் போன்ற எத்தனையோ அருளறிவுச் செல்வருடன் பழகிய அனுபவங்கள் இங்கே செயல்வடிவம் பெற வேண்டும்.

பல மொழிகளைக் கற்றேன், பல சமயங்களையும் பழகிப் பயின்றேன். பாரத நாட்டைப் பலமுறைச் சுற்றினேன். உலகைப் பலமுறை வலம் வந்தேன். நாடு நாடாகச் சுற்றி, மலைக் குகைகளிலும், காடுகளிலும் அரவிந்தர் ஆசிரமத்திலும் முப்பதாண்டுகள் மோனத்தவமிருந்து எனது அனுபவங்களையெல்லாம் ஆயிரம் நூல்களில் எழுதிக் குவித்துள்ளேன். அவை அனைத்தும் மீண்டும் அச்சேறி வரவேண்டும். பிற்காலத்தில் இதை ஒரு அன்புப் பணியாக மேற்கொள்க"

-என்று உரையாற்றினார்.

இறுதிக்காலம்:

சுவாமிஜி அந்த முதிர்ந்த வயதிலும் மறுபடி ரிஷிகேஷ், சிம்லா, ஐதராபாத், பாட்னா ஆகிய இடங்களுக்குச் சென்று வந்தார். 1990 பிப்ரவரியில் இவர் ஊர் திரும்பினார். அது முதல் அவரது உடல் நிலை கெடத் தொடங்கியது. ஜோதி விழா நடந்த சமயம் கூட அவரால் பேச முடியவில்லை. மார்ச் மாதம் 4ஆம் தேதி முதல் சுவாமிஜி உணவு உட்கொள்ள மறுத்து விட்டார். வயது மூப்பும், தள்ளாமையும் யோகி சுத்தானந்தரை மிகவும் வாட்ட 7-3-1990இல் இவ்வுலக வாழ்வை நீத்து அமரரானார்.

அன்று காலை 9 மணிக்கு பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர் யோகியார் அதுவரை எழுந்திருக்கவில்லை என்பதை உணர்ந்து அவர் அறைக்குச் சென்று பார்க்க அங்கு கவியோகி சுத்தானந்த பாரதியார் மீளாத அமரத்துவம் பெற்றுவிட்டதைக் கண்டார்.

11-5-1897இல் பிறந்த அவர் தனது 93ஆம் வயதில் இவ்வுலக வாழ்வை நீத்தார். யோகியாரின் பூதவுடல் அந்தப் பள்ளி வளாகத்திலேயே சமாதி வைக்கப்பட்டு அங்கு ஓர் கோயில் எழுப்பப் பட்டது.

ஏற்கனவே ஒரு நகரத்தார் நண்பரிடம் பள்ளி வளாகத்தில் ஒரு ஆலயம் எழுப்பி அதிலொரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்ய வேண்டும், அதற்காக ஒரு லிங்கம் கொண்டு வரப் பணித்திருந்தார். அந்த லிங்கம் இவர் காலமான சமயம் வந்து சேர்ந்தது. அது சுவாமிஜியின் சமாதி ஆலயத்திலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டு இன்றளவும் மிகச் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு பஜனை முதலிய வழிபாடுகள் நடந்து வருகின்றன.

அவரது பூதவுடல் மறைந்தாலும் தமிழில் அவர் படைத்த படைப்புக்கள் அனைத்தும் என்றென்றும் வாழ்ந்திருக்கும். நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை இவரைப் பற்றி பாடிய பாடல் ஒன்றை நினைவுகூர்வோம்.

"தென்மொழியும் வடமொழியும் தெளியக் கற்றான்
திசைமொழியாம் ஆங்கிலத்தில் திறமை மிக்கான்
மென்மைமிகும் பிரெஞ்சு மொழியை விரும்பிக் கொண்டான்
பன்மொழிகள் பரிந்தொளிரும் சுத்தானந்த பாரதி
மெய்ஞ்ஞானப் பண்பில் மிக்கத்
தன் மொழியே தலைசிறந்த மொழியா மென்று
தமிழுக்கே பணிபுரியும் தவசியானான்!"

வாழ்க கவியோகி சுத்தானந்த பாரதியார் புகழ்!


குறிப்பு:


தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநில துணைத் தலைவராக வழிகாட்டிய அமரர் தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியதன் தொகுப்பு இது…

No comments:

Post a Comment