16/08/2020

வையத் தலைமை கொள்! (பகுதி- 1, 2)

-சேக்கிழான்

(புதிய பார்வையில் புதிய ஆத்திசூடி)


1. தமிழ்த்தாயும் தமிழ்மகளும்…

தமிழகத்தின் தவப்புதல்வரான பாரதி, தமிழ் இலக்கியங்களில் கற்றுத் தோய்ந்தவர். பல மொழிகளை அறிந்திருந்த அவர் தமிழின் சிறப்பில் தன்னை மறந்தவர். அதனால்தான்

 ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்

இனிதாவது எங்கும் காணோம் 

-என்று அவரால் பாட முடிந்தது. அதுமட்டுமல்ல,

‘யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்

வள்ளுவர்போல், இளங்கோவைப்போல்

பூமிதனில் யாங்கனுமே பிறந்ததில்லை

உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை 

-என்றும் பாடி மகிழ்ந்தார் பாரதி. 

ஒரு பொருளைப் பாராட்ட வேண்டுமானால், பல பொருள்களை அவர் அறிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அவரால் அதனை திறமையாக ஒப்பிட முடியும் என்பதை அறிந்தவர்களுக்கு, பாரதியின் விசாலமான ஞானம் புலப்படும். தாய்மொழி மட்டுமல்லாது, சமஸ்கிருதம், ஆங்கிலம், ஹிந்தி, பிரெஞ்ச் ஆகிய மொழிகளையும் அறிந்திருந்தவர் பாரதி. ஆங்கிலக் கவிஞன் ஷெல்லியிடத்தும், சமஸ்கிருதக் கவிஞன் காளிதாசனிடத்தும் தனது மனதைப் பறிகொடுத்தவர் அவர். தனது பெயரையே ஷெல்லிதாசன் என்றும் காளிதாசன் என்றும் வைத்துக் கொண்டவர் அவர். அதனால்தான், தான் அறிந்த புலவர்களில் கம்பர், திருவள்ளுவர், இளங்கோ அடிகள் போல இப்புவியில் வேறு யாரும் இல்லை என்று பெருமிதமாகப் பாட அவரால் இயன்றது. 

மகாபாரத இதிகாசம் மீது மிகுந்த காதலுற்றவர் பாரதி. அதனால்தான், ‘பாஞ்சாலி சபதம் என்ற தனிக் காவியத்தை அவர் பாடினார். அதுபோலவே, ஔவையின் பாடல்களிலும் தன்னைப் பறிகொடுத்தவர் அவர்.


சாதி இரண்டொழிய வேறில்லை என்றே

தமிழ்மகள் சொல்லிய சொல் அமிழ்தம் என்போம்!

நீதிநெறியில் நின்று பிறர்க்குதவும்

நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்! 


-என்று அவர் பாடுகையில், தமிழ்மகள் என்று ஔவையைக் குறிப்பிடுகையில் (பாரத தேசம்), அவரது இலக்கிய ஞானம் நம்மை வியக்க வைக்கிறது.

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் மேதினியில்
இட்டார் பெரியோர், இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி.

-என்பது ஔவையின் ‘நல்வழிபாடல் (2). இதையே வேறு வரிகளில் பாடும் பாரதியின் திறன் மகிழத் தக்கது.

இதனையே பாரதி, ‘பாப்பாப் பாட்டுபாடலில்,

‘சாதிகள் இல்லையடி பாப்பா- குலத்

தாழ்ச்சி, உயர்ச்சி சொல்லல் பாவம்;

நீதி, உயர்ந்த மதி, கல்வி- அன்பு

நிறைய உடையவர்கள் மேலோர் 

-என்று சொல்லிச் செல்கிறார். அதாவது ஔவையை ஆழ்ந்து கற்றிருந்தாலும், அவரது கருத்தை காலத்துக்கு ஏற்றவகையில் இளம் பருவத்தினருக்குச் சொல்ல வேண்டும் என்ற ஆவல் இதில் புலப்படுகிறது. 

மழலைப் பருவத்தில் மனதில் விதைக்கும் நற் கருத்துகளே விருட்சமாக வளர்ந்து, பின்னாளில் அவர்களை வழிநடத்தும் என்று நமது முன்னோர் அறிந்திருந்தனர். அதனால்தான் முதல் வகுப்பில் ஆத்திசூடி, நல்வழி, மூதுரை, கொன்றைவேந்தன், உலகநீதி போன்ற நீதிநூல்கள் கற்பிக்கப்பட்டன. அவற்றை சிறுவயதில் கற்று வளர்ந்தவர் மகாகவி பாரதி. 

எனினும், அந்த நீதிநூல்களிலும் காலத்துக்கேற்ற மாற்றம் செய்ய வேண்டுமென்ற அவரது சிந்தனை புதிய வடிவம் எடுக்கிறது. அப்படித்தான் ஔவையின் ஆத்திசூடிக்கு இணையாக ‘புதிய ஆத்திசூடிஎன்ற புதிய இலக்கியத்தைப் படைக்க முனைகிறார் பாரதி. 

இந்த புதிய ஆத்திசூடியில் ஔவையின் கருத்துகளுடன் சுமார் 90 சதவீதம் ஒத்துப்போகும் பாரதி, சுமார் 10 சதவீதம் கருத்துகளை காலதேச வர்த்தமானத்துக்கு ஏற்றவாறு மாற்றுகிறார். 

ஔவையின் காலம் சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது ஆய்வாளர்தம் கருத்து. தமிழில் பிற்கால நீதிநூல்கள் எழுந்த காலகட்டம் அது. சங்ககால ஔவையார் வேறு; நீதிநூல்கள் பாடிய ஔவையார் வேறு என்பதும் ஆய்வாளர்களின் கருத்து. அந்தக்கால நடைமுறைகளுக்கு ஏற்ப ஔவையார் எழுதிய  ‘ஆத்திசூடியை, தனது காலத்துக்கு (1910) ஏற்ற வகையில், சுதந்திரப் போராட்டக் களத்துக்கு உகந்த வகையில் புதிய ஆத்திசூடியாக மாற்றி எழுதி இருக்கிறார் பாரதி. 

உதாரணமாக,  ‘ஆறுவது சினம்’ என்று ஔவை (ஆத்திசூடி- 2) அறிவுறுத்துகையில், ‘ரௌத்திரம் பழகு என்று பாரதி (புதிய ஆத்திசூடி- 96) ஆணையிடுகிறார். இருவரின் உபதேசங்களும் மனித நலனுக்கானவையே. என்றபோதும், காலத்துக்கேற்ற வகையில் நம்மைத் தகவமைத்துக் கொள்வதன் அவசியம் பாரதியிடம் வெளிப்படுகிறது. 

சட்டமும் நீதியும் காலத்துக்குத் தகுந்தாற்போல மாறுதல் கொள்பவை. எனவேதான் அவை தொடர்பான இலக்கியங்கள் ‘ஸ்மிருதிஎனப்படுகின்றன. பராசர ஸ்மிருதி, மனு ஸ்மிருதி போன்றவை இதற்கு உதாரணங்கள். காலத்தில் மாறாதது தர்மம். இதை பண்பாடு என்றும் சொல்லலாம். தர்மம் வளர்க்கும் இலக்கியங்கள் ஸ்ருதிஎனப்படுகின்றன. வேதங்களும், உபநிடதங்களும்,  இதிகாசங்களும் இவ்வகையைச் சார்ந்தவை. 

ஆத்திசூடி ஒரு ஸ்மிருதி நூல். அதனை தனது காலத்தில் வாழும் மக்களுக்காக மாற்றி எழுத வேண்டும் என்று தீர்க்கதரிசனப் புலவர் பாரதி விரும்பியதைப் புரிந்துகொள்ள முடிகிறது. தமிழ்த்தாய் மீது மிகுந்த பற்றும், தமிழ்மகள் ஔவை மீது மிகுந்த மரியாதையும் கொண்டிருந்த மகாகவி பாரதியின் ‘புதிய ஆத்திசூடிஅவ்வகையில் ஒரு பெரும் ஆதர்ஷ இலக்கியமாக நம்முன் உள்ளது. 

ஔவையார் 109 வரிகளில் பாடிய ஆத்திசூடியை, 110 வரிகளுடன் புதிய ஆத்திசூடியாகப் பாடுகிறார் பாரதி. 


‘ஆத்தி சூடி அமர்ந்த தேவனை 

ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே 

-என, ஆத்தி மாலை அணிந்த தேவன் சிவனை வணங்கி தனது நீதிநூலைத் துவக்குகிறார் ஔவை. ஏனெனில் தமிழரின் அக்காலத் தெய்வம் சிவன் மட்டுமே. 

பாரதியோ, சிவன், மாலவன், அல்லா, யேசு என இக்காலத்திற்கேற்றவாறு பல சமயத் தெய்வங்களை முன்னிறுத்தி, பரம்பொருளை வாழ்த்தி தனது புதிய நூலைத் துவக்குகிறார். எனினும்,


ஆத்திசூடி இளம்பிறை அணிந்து

மோனத்திருக்கும் முழுவெண் மேனியான்… 

என்று ஆத்திசூடி என்ற சொல்லிலேயே தனது நூலைத் துவங்குகிறார். இதுவே வாழையடி வாழையென வந்துதித்த மரபு. சுமார் மூவாயிரம் ஆண்டுக் காலப் பாரம்பரியம் கொண்ட தமிழ் இலக்கியங்கள் எங்கனும் இத்தகைய சிந்தனை ஒருமைப்பாட்டைக் காணலாம். 

இனிவரும் அத்தியாயங்களில், மகாகவி பாரதியின் ‘புதிய ஆத்திசூடியை புதிய பார்வையில் நாம் தரிசிக்கலாம்...

***

2. நோக்கமும் நுணுக்கமும்…

பாரதி புதிய ஆத்திசூடி எழுதியது, இளம்பருவத்தினரிடம் நல்ல கருத்துகளை விதைப்பதற்காகவே என்பதை நாம் அறிவோம். ‘பருவத்தே பயிர் செய்என்ற ஔவையின் (ஆத்திச்சூடி- 22) வழிநின்று, மழலைகளுக்கு அவர் உபதேசம் செய்கிறார். 

புதிய ஆத்திசூடி, அகர வரிசையில் எழுதப்பட்டது. இதன் அமைப்பு முறை கீழ்க்கண்டவாறு உள்ளது:

1. கடவுள் வாழ்த்து

2. உயிர் வருக்கம் (1 - 12 / 12 வரிகள்)

3. ககர வருக்கம் (13 – 24 / 12 வரிகள்)

4. சகர வருக்கம் (25 – 36 / 12 வரிகள்)

5. ஞகர வருக்கம் (37 – 41 / 5 வரிகள்)

6. தகர வருக்கம் (42 – 53 / 12 வரிகள்)

7. நகர வருக்கம் (54 – 64 / 11 வரிகள்)

8. பகர வருக்கம் (65 – 74 / 10 வரிகள்)

9. மகர வருக்கம் (75 – 85 / 11 வரிகள்)

10.யகர வருக்கம் (86 – 88 / 3 வரிகள்)

11.ரகர வருக்கம் (89 – 96 / 8 வரிகள்)

12.லகர வருக்கம் (97- 102 / 6 வரிகள்)

13.வகர வருக்கம் (103 – 110 / 8 வரிகள்)

குழந்தைகள் மனனம் செய்ய எளிதாக இருக்க வேண்டும்; அதன்மூலம் மொழியின் கட்டுமானத்தையும் இயல்பாக உணர வேண்டும் என்பதற்காகவே பண்டைய திண்ணைப்பள்ளிகளுக்கான நீதிநூல்களை இம்முறையில் நமது முன்னோர் இயற்றினர். அவர்களின் அடியொற்றி, மகாகவி பாரதியும் இதே நடையில் ‘புதிய ஆத்திசூடியை இயற்றி உள்ளார்.

மேலும், தனது உபதேசங்களில் தான் விரும்பும் பல அம்சங்களை வலியுறுத்திச் செல்கிறார். அவரது புதிய ஆதிச்சூடியை ஏழு அம்சங்கள் கொண்டவையாகப் பிரிக்கலாம். அவை:


அ. பண்புநலம் கூறுபவை


ஆ. உடல்நலம் வலியுறுத்துபவை


இ. அறிவுநலம் வளர்ப்பவை


ஈ. நடைநலம் நாடுபவை


உ. எண்ணநலம் விதைப்பவை


ஊ. சமூகநலம் விழைபவை


எ. கடமைநலம் விதிப்பவை 

இந்த 7 அம்சங்கள் தொடர்பான அறிவுரைகளும், புதிய ஆத்திசூடியில் ஆங்காங்கே விரவி வரும் வகையில் அமுதத் துளிகளாகத் தெளிக்கப்பட்டுள்ளன. அவற்றை நாம் முதலில் வகைப்படுத்தித் தொகுத்துக் கொள்வது மேலும் நுணுகி ஆராய்வதற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். 

ஏனெனில் ஒரு விஷயத்தையே மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் வகையில் பல இடங்களில் பலவிதமான அமுத மொழிகளைச் சொல்லிச் செல்கிறார் பாரதி. அதன் நோக்கம், அந்த விஷயத்தை குழந்தைகள் மனதில் பசுமரத்தாணி போல பதிய வைப்பதே. உதாரணமாக,


1. அச்சம் தவிர்

16. கீழோர்க்கு அஞ்சேல்

26. சாவதற்கு அஞ்சேல்

45. தீயோர்க்கு அஞ்சேல்

51. தொன்மைக்கு அஞ்சேல்

72. பேய்களுக்கு அஞ்சேல் 

-ஆகிய வரிகளில் பாரதி மீள மீள வலியுறுத்துவது அச்சமின்மையே. அச்சமே அடிமை வாழ்வின் அவலத்துக் காரணம் என்று நன்கு உணர்ந்திருந்த பாரதி,  அச்சமின்மையை குழந்தைகளுக்கு பல வகைகளில் இதனை வலியுறுத்திச் செல்கிறார்.


‘அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே 

என்று ‘பண்டாரப்பாட்டிலும்,


பயமெனும் பேய்தனை அடித்தோம்- பொய்மைப்

பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்!

 என்று  ‘ஜயபேரிகைப் பாடலிலும் முழங்கும் பாரதி,


‘நெஞ்சு பொறுக்கு திலையே! - இந்த

நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்,

அஞ்சி யஞ்சிச் சாவார் - இவர்

அஞ்சாத பொருளில்லை அவனியிலே 

என்றுபாரத ஜனங்களின் தற்கால நிலைமைபாடலில் வருந்திப் பாடுவது, அக்கால மக்களின் அச்சம் கருதியே. பெண்களின் சுதந்திரத்தை வலியுறுத்தும்  ‘புதுமைப்பெண் கவிதையில் கூட,


‘நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்;
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்…

-என்று பாடுகிறார் பாரதி. அச்சத்தை விட்டாலே நாடு விடுதலை அடைந்துவிடும் என்ற அவரது தாபமே இவ்வாறெல்லாம் அவரைப் பாடச் செய்கிறது. 

இவ்வாறே புதிய ஆத்திச்சூடி நெடுகிலும் அவரது ஆன்மதாபத்தைக் காண முடியும். எனவே அவரது தேசிய வேட்கையை 7 அம்சங்களாகப் பகுத்துக்கொண்டு, அவற்றைப் புரிந்துகொள்ள முயற்சிப்பது, புதிய திசையை நமக்குக் காட்டக் கூடும்.

(தொடர்கிறது...)


காண்க:



No comments:

Post a Comment