பக்கங்கள்

மின்னிதழின் அங்கங்கள்

13/01/2021

அன்னைத்தமிழ் வளர்த்த அற்புதப் புலவர்கள் - 4

-பொன்.பாண்டியன் 

பகுதி-1

கபிலர்


12. கபிலர் 


கபிலர் என்ற திருநாமம் பாரதேசம் முழுமையும் பிரசித்தி பெற்றது. வங்கக் கடற்பகுதி கங்கை பாய்வதற்கு முன்பொட்டல் நிலமாக இருந்தது. அங்கே குகை போன்ற நிலவறையில் கபில முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது சகர புத்திரர்கள் 100 பேரும் தொலைந்துபோன தங்களது யாகக்குதிரையைத் தேடி வந்தனர். அங்கே குதிரையின் குளம்படித் தடங்கள் பிலத்தினுள் நுழைந்திருப்பதை அறிந்தனர். அதனால் அதை மீட்க அந்தப் பகுதியைத் தோண்டினார்கள். தோண்டத் தோண்ட பரப்பு பெரிதாகிக்கொண்டே இருந்தது. ஆழமும் அதிகமானது. முடிவில் கபிலர் இருக்கும் இடத்தை அடைந்தனர். அவரருகே தங்களுடைய குதிரையையும் கண்டனர்.

"நீர்தாம் எம் குதிரையைக் களவாடியவரோ?" என அவர் தவத்தைக் கலைத்தனர். தவம் கலைந்து அவர் பார்த்த பார்வையில் 100 பேரும் எரிந்து சாம்பலாகினர். அவர்கள் வீடுபேறு அடைவதற்காக ஆகாசகங்கையை பூமியில் பாயச்செய்து அவர்களின் அஸ்தியைக் கரைப்பதற்காக அவர்களுக்குப் பின்வந்த பல சந்ததியினர் முயன்றனர். இறுதியில் பகீரதனின் கடுந்தவத்தாலும் முயற்சியாலும் அந்த நோக்கம் நிறைவேறியது. பகீரதன் என்றால் பற்பல தேர்களை உடையவன் என்று பொருள் ஆகும். இதேபொருள் பயக்கும் விதத்தில் உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி என்ற சோழ மன்னன் ஒருவர் உண்டு.

பின்பு கங்கை பாய்ந்து வங்கக்கடல் உருவாகியது. கடல் உண்டாக சகரர்கள் காரணமானதால் கடலுக்குச் சாகரம் என்றும் பெயர் உண்டு. இது தோண்டப்பட்ட கடல் ஆனதால் 'தொடுகடல்' எனத் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

கப்பலுக்கு வங்கம் என்றொரு பெயரும் உண்டு. கப்பல்கள் அதிகமாகப் புழங்குவதால் வங்கக்கடல் என்ற பெயர் வந்தது. கபிலவஸ்து புத்தர் தோன்றிய இடம். இன்றைய ஒரிசா அன்றைய கலிங்கம். அங்கேயிருந்த கபிலபுரத்திற்கு சிலப்பதிகாரக் கண்ணகிக்கு முற்பிறவித் தொடர்பு உண்டு.

கபிலன் என்ற பெயரில் பல புலவர்கள் தமிழிலக்கியத்தில் உண்டு. இவற்றையெல்லாம் சொல்லப் புகுவதன் நோக்கம் என்னவெனில் கபிலர் என்ற பெயரின் புனிதமும் சிறப்பும் நமது பாரத தேசத்தின் தொன்மக் காலத்திலிருந்து ஒரு சிறப்பான இடம்பெற்று வருகிறது என்பதை நமது கருத்தில் கொள்வதற்காகத் தான்.

இங்கு இப்போது நாம் காணப்போவது கடைச் சங்க காலக் கபிலரைப் பற்றித்தான். இன்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்பே தற்போதுள்ள மதுரை நகருக்கு மூன்றாம் தமிழ்ச்சங்கம் கடைச்சங்கமாக இடம்பெயர்ந்தது. அக் கடைச்சங்கப் புலவர்களுள் கபிலரும் ஒருவர்.

அச் சங்கப் புலவர்கள் 51 வகையான எழுத்து ஒலிகளின் அம்சங்கள் ஆவர். கபிலர் தமிழ்ப் புலவர்களில் அன்றும் இன்றும் என்றும் நின்று ஒளிரும் கண்கவர் நட்சத்திரம் ஆவார்.

கிடைத்துள்ள சங்கப் பாடல்கள் மொத்தம் 2,381-ல் 235 பாடல்கள் கபிலர் பாடியவை ஆகும். அதாவது பத்தில் ஒரு பங்கு பாடல்கள் இவர்தம் படைப்பாகும் என அறிஞர் பெருமக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் இவர்தம் கவிபாடும் ஆற்றல் வியக்கத் தக்கதாகும்.

"செந்நாப் புலவனாகிய கபிலன் இங்கில்லையானால் என்ன? நான் உம்மைப் பாட மாட்டேனா?" என கபிலர் பாட்டுக்காக ஏங்கிய சேரமான்மாந்தரஞ்சேரல் இரும்பொறையைப் பார்த்து பொருந்தில் இளங்கீரனார் புறநானூற்றுப்பாடல் 53-ல்புகழ்ந்து பாடியுள்ளார்.

"கபிலன் புலவன் மட்டும் அல்லன்; புலன் அழுக்கு அற்ற அந்தணாளன். அவன் உம்மைப் பாடிவிட்டான். அவனைவிட மேற்கொண்டு உம்மை நான் என்ன பாடிவிட முடியும்?" என்று மன்னன் மலையமான் திருமுடிக்காரியிடம் பெண்பாற்புலவர் மாறோக்கத்து நப்பசலையார் புறநாநூறு 126-ல் முறையிட்டு மகிழ்ந்து பாடுகிறார். அவரே மலையமான் சோழிய ஏனாதித்திருக் கண்ணனிடம் புறநாநூறு 174-ல் "பொய்யா நாவின் கபிலன்" என்று புகழ்ந்து பாடியுள்ளார்.

குறிஞ்சித்திணை பாடுவதில் கபிலர் தலைசிறந்தவர். அதனால் அவருக்கு 'குறிஞ்சிக்கோர் கபிலர்' என்ற சிறப்புப்பெயரும் உண்டு.

"உலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலன்" என நக்கீரர் அகநானூறு 78-ல் புகழ்கிறார். இங்கு உலகுடன் திரிதரும் என்ற சொல்தொடரால், கபிலர் ஒரு 'பிருஹத்பரணர்' பிரிவினராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கபிலன் என்றும் உற்சாகத்துடன் இருப்பார் என்பதைப் பெருங்குன்றூர்கிழார் பதிற்றுப்பத்து 85-ஆம் பாடலில் "உவலை கூராக்கவலைஇல் நெஞ்சின் நனவில்பாடிய நல்லிசைக் கபிலன்" என்று பெருமிதத்துடன் பாடுகிறார்.

கபிலர் மிகவும் தன்னம்பிக்கை உடையவர்.பதிற்றுப்பத்து 61-ல் "எஞ்சிக் கூறேன்" அதாவது எந்தக் கருத்தையும் மிச்சம் மீதியில்லாமல் பாடும்திறன் பற்றிக் கூறுகிறார்.

கபிலர் தமிழைப் பரப்புவதில் விருப்பம் உடையவர். வடபுலத்து அரசன் பிரஹதத்தன் என்பவருக்கு குறிஞ்சிப்பாட்டு பாடியதன் மூலம் தமிழ் பயிற்றுவித்தார். அதில் விசேஷம் என்னவென்றால், அப்பாட்டில் குறிஞ்சி நிலத்தில் பூக்கும் 99 வகையான பூக்களைக் குறிப்பிடுகிறார். இது அவரின் தமிழ் மீதுள்ள பற்றிற்கும், தமிழ் வளர்க்கும் பான்மைக்கும் இயற்கை ரசனைக்கும் உற்றுநோக்கும் திறனுக்கும் ஒரு சான்றுஆகும்.

கபிலர் சேரன் செல்வக்கடுங்கோ வாழிஆதன் மனம் மகிழுமாறு பதிற்றுப்பத்தில் பாடினார். அதனால் மனம் மகிழ்ந்த சேரன் சேலத்தின் அருகிலுள்ள ஊத்தங்கரைப்பகுதியில் 'நன்றா' என்னும் குன்றின் மீதுச்சியில்

அவரை ஏற்றி தானும் உடன்நின்று சுற்றிலும் கண்ணில்படும் தொடுவானம் வரையிலான நிலத்தைஅளித்தான். அதையவர் அங்கு வாழும் மக்களுக்கென்றே வழங்கி மகிழ்வடைந்தார்.

மன்னன் இருங்கோவேளின் உறவினன் ஒருவன் அரையம் என்ற பகுதியை ஆண்டு வந்தான். அவன் புலவர்கழா அத்தலையாரை இகழ்ந்து பேசினான். அவனுடைய நகரம் திடீரென்று அழிந்துபோனது. அப்போது அவனை நோக்கி கபிலர் புறநானூறு 202-ல்

“நும்போல் அறிவின் நுமருள் ஒருவன்
புகழ்ந்த செய்யும் கழாஅத் தலையை
இகழ்ந்ததன் பயனே”

-என்று  பாடி தமிழ்ப் புலவர்கள்பால் தமக்கிருந்த மதிப்பை வெளிப்படுத்துகிறார்.

அவர் பரிசுக்கேங்கும் தன்மையரல்லர். அறிஞரை மதிக்கும் மாண்புடையவர் ஆவார். கபிலர் வள்ளல் பேகனிடம், "முதலில் உன் மனைவியின் கண்ணீரைத் துடை. பிறகு எங்களைக் கவனி " என்று பொருள்பட புறநானூறு 143-ல் அறிவுறுத்துகிறார். மன்னருக்கே அறிவுறுத்தும் துணிவையும் பெற்றிருந்தார் நமது கபிலர்.

கபிலர் யாரோடும் பழகுந்தன்மை உடையவர். அரசர், அறிஞர், புலவர், வறிஞர் எனப் பாகுபாடு அறியாதவர். எனவே அவருடன் பழக அனைத்துத் தரப்பினரும் விரும்பினர். கபிலருக்கு மிக நெருங்கிய நண்பர்கள் புலவர்களில் பரணர், இடைக்காடனார், ஔவையார் போன்றோரும், மன்னர்களில் பறம்புமலை வள்ளல் வேள்பாரி போன்றோரும் ஆவர். பாரி வள்ளல் அவருக்கு ஓர் ஊரையே பரிசாக வழங்கினார்.

பாரியைப் போரில் எவராலும் வெல்ல முடியாது. பாடல் பாடியோ, யாசகமாகவோ அவருடைய நாட்டையே பெறலாம். அந்த அளவுக்கு வீரமும் கருணையும் மிகுந்தவர் பாரி வள்ளல். முல்லைக் கொடிக்காகத் தன்தேரையே வழங்கியவர் ஆயிற்றே. அவரின் வீரத்தையும் கொடைத்திறத்தையும் மூவேந்தர்களுக்கும் அறிவுறுத்தும் பாங்கில்
“அளிதோதானே
பாரியதுபறம்பே
..................................... விரையொலிகூந்தலும்
விறலியர்பின்வர
ஆடினிர்பாடினிர்செலினே
நாடும்குன்றும்
ஒருங்கு ஈயும்மே”
-என்று புறநானூறு 109-ல் பாடுகிறார்.

அப்பாடலுக்கேற்ப பாரி வள்ளலின் வாழ்வும் பரிதாபமாக முடிந்தது. பாரியைப் போரில் வெல்ல முடியாத மூவேந்தர்கள் புலவர்கள்போல அவர் அரண்மனையில் புகுந்து பாரியைக் கொன்றுவிட்டனர்.

பாரியின் மகளிர் இருவர். அங்கவை, சங்கவை என்பன அவர்களுடைய பெயர்களாகும். அவர்கள் கபிலரிடம் அடைக்கலம் ஆனார்கள். அவர்களும் புலவர்களே. அவர்களுக்கு ஏற்ற கணவரை மன்னர் மரபில் தேடினார் கபிலர். சில இடங்களில் வேண்டினார்.

பாரியின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியாலும் மூவேந்தர் மீதுள்ள அச்சத்தின்பேரிலும் கபிலரின் வார்த்தைகளுக்கும் அவர்கள் செவிமடுக்கவில்லை. உற்சாகமே உருவெடுத்த கபிலர் இவ்விஷயத்தில் மனம் கலங்கியே போனார்.

கபிலர் பாரியின்மகளிரை திருமணம் செய்து கொடுப்பதற்காக மிகவும் கஷ்டப்பட்டார். அதற்காக அவர் மனம்நொந்து பாடுவது கல்லையும் கரைக்கும் தன்மையுடையது:

" யானே பரிசிலன் மன்னும் அந்தணன்" எனவும், "யானே தந்தை தோழன் இவர்என் மகளிர் அந்தணன் புலவன் கொண்டு வந்தனனே" எனவும் பாடுகிறார். இவை புறநானூறு 200, 201-ல் இடம்பெற்றுள்ளன.

தன்னால் அந்தப் பொறுப்பை நிறைவேற்ற முடியாததால் அவர் மிகவும் மனம் வருந்தினார்.

அப்பொறுப்பை தமது நண்பர் ஔவையாரிடம் ஒப்படைத்தார். அவர் அவர்களை திருக்கோவலூர் தென்பெண்ணை ஆற்றங்கரை மலையமான் தெய்வீகனுக்கு மணம்முடித்து வைத்தார். அவர்களின் திருமணம் முடிந்ததும் கபிலர் சற்று மனநிம்மதி உற்றார்.

இருப்பினும் பாரியின் பிரிவு கபிலரை மிகவும் வாட்டியது. அவர் திருக்கோவலூர் தென்பெண்ணை ஆற்றின் நடுவில் உள்ள ஒரு குன்றின்மீது தவம் செய்தார்.

வடக்கிருந்து உண்ணாநோன்பிருந்து நண்பனுக்காக உயிர்விட்டார். இவ்வாறு கபிலர் நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தார். இன்றும் அந்தக் குன்று 'கபிலர் குன்று' என்று அழைக்கப்பட்டு நட்பின் சின்னமாக விளங்குகிறது.

இந்த நிகழ்வு திருக்கோவலூர் கல்வெட்டுச் சாசனத்தில்,

“.........................கபிலன்
மூரிவண்தடக்கைப்
பாரிதன்அடைக்கலப்பெண்ணைமலையற்
குதவிப்பெண்ணைஅலைபுனல்அழுவத்துஅந்தரிக்ஷம்
செலமினல்புகும்வீடுபேறெண்ணிக்
கனல்புகும்கபிலக்கல்அதுபுனல்வளர்
பேரெட்டானவீரட்டானம்அனைத்தினும்
அநாதியாயது”
-எனப் பதிவிடப்பட்டுள்ளது.

பெருமைமிக்க தமிழ் உலகத்திற்கு பெரும்புகழ் படைத்த கபிலர் படைத்தவை:

நற்றிணைப் பாடல்கள் - 20
குறுந்தொகைப் பாடல்கள் - 29
ஐங்குறுநூறு பாடல்கள் - 100
பதிற்றுப்பத்துப் பாடல்கள் - 10
கலித்தொகைப் பாடல்கள் - 29
அகநானூறு பாடல்கள்- 18
புறநானூறு பாடல்கள்- 28
குறிஞ்சிப்பாட்டு- 1
------------------------------------
மொத்தம்-235

பாரதப் பெருநாட்டின் பெருங்கவி கபிலர் யாத்த ஒவ்வொரு செய்யுளும் ஒவ்வோர் இலக்கியம் ஆகும். தமிழ்வாழும் நாளும் கபிலர்புகழ் வாழும்.

(தொடர்கிறது)

காண்க:


.

No comments:

Post a Comment