பக்கங்கள்

மின்னிதழின் அங்கங்கள்

18/10/2021

சுதந்திரம் காக்கும் கொங்கு நாடு

-சேக்கிழான்

வ.உ.சி.யும் பாரதியும்

அண்மைக்காலமாக, பாரதத் திருநாட்டின் மத்திய அரசை தமிழகத்தில் சிலர் ‘ஒன்றிய அரசு’ என்ற ஏகடியம் பேசி வருகிறார்கள். அவர்கள் அறியாதது, தமிழக விடுதலைப் போரின் மும்மூர்த்திகளான மகாகவி பாரதி, வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா ஆகியோர் ஒன்றுபட்ட பாரத விடுதலைக்காகக் குரல் கொடுத்தவர்கள் என்பது.

தமிழகத்தில் சுமார் ஒரு நூற்றாண்டுக் காலமாகவே தனித் தமிழ்நாடு எண்ணத்துடன் பிரிவினை எண்ணம் வளர்ப்போர் சத்தமின்றி இயங்கி வருகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் திமுகவை அரசியல்ரீதியாக ஆதரிப்பவர்கள். கூடவே, ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் நாத்திகக் கொள்கைகளை பிரசாரம் செய்பவர்களாகவும் இருப்பவர்கள். தவிர பிராமண எதிர்ப்பு, ஆரிய எதிர்ப்பு, ஹிந்தி எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு என்று தங்கள் ஆசாபாசங்களுக்கு கோட்பாட்டு முலாமும் பூசுவார்கள்.

இந்தப் பிரிவினைவாதிகளுக்கு எதிராகவே தமிழகத்தின் முப்பெரும் தேசபக்த மாவீரர்கள் விளங்கினார்கள். நமது துரதிர்ஷ்டம், மகாகவி பாரதி (1921), சுப்பிரமணிய சிவா (1925), வ.உ.சி. (1936) ஆகியோர் நாட்டு விடுதலைக்கு முன்னதாகவே நம்மைவிட்டுப் பிரிந்து விட்டார்கள். சுதந்திரப் போராட்டத்தின் இறுதிக் கட்டத்தை வழிநடத்திய காங்கிரஸ் கட்சி சுயநலவாதிகளால் சூழப்பட்டுவிட்ட நிலையில், தமிழகத்தில் பிரிவினைவாதிகளின் துஷ்பிரசாரத்தைத் தடுக்க இயலாது போய்விட்டது.
 

இந்தச் சூழலில், தமிழகப் பிரிவினைவாதிகளின் ‘ஒன்றிய’ ஏகடியத்துக்கு பதிலடியாக தமிழகத்தின் மேற்கு மண்டல மாவட்டங்கள் அடங்கிய கொங்கு மண்டலத்தை தனி மாநிலம் ஆக்க வேண்டும் என்ற குரல், சில மாதங்களுக்கு முன்னர் தேசபக்தர்களால் எழுப்பப்பட்டது. அப்போது, மாநிலத்தை ஆளும் திமுகவும், அதனை ஆதரிக்கும் ஊடகங்களூம் சற்றே திகைப்பில் ஆழ்ந்தது உண்மை. முள்ளை முள்ளால் எடுக்க நெடுநாள் ஆகாது என்பது அப்போது பட்டவர்த்தனமாக உணர்த்தப்பட்டது.

ஆனால் நம்மைப் பொருத்த வரை, தமிழகத்தைப் பிரிக்க வேண்டும் என்பது நமது எண்ணமில்லை. ஹிந்து இயக்கங்கள் நிர்வாக வசதிக்காக பல ஆண்டுகளாகவே தென் தமிழகம்- வட தமிழகம் என்ற இரு பிரிவாக வகுத்துக் கொண்டுதான் செயல்படுகின்றன; அரசியல் பிரிவினைகளை நாம் ஏற்கவில்லை. காலம் உத்தரவிட்டால் எதுவும் நடக்கும் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

இந்தக் கட்டுரைக்கு இத்தனை நீண்ட பீடிகை எதற்கு என்ற கேள்வி எழலாம். இந்தக் கட்டுரையின் அடிநாதம், நாட்டின் தென்கோடியில் வாழ்ந்த மகாகவி பாரதி, வ.உ.சி, சுப்பிரமணிய சிவா ஆகியோர் எவ்வாறு ஒருங்கினைந்த பாரத அன்னையின் விலங்கொடிக்க முன்னிலையில் நின்றார்கள் என்பதைக் கோடிட்டுக் காட்டுவது தான்.

அது மட்டுமல்ல, தமிழகத்தின் ஓர் அங்கமான கொங்குநாடு அந்த மூவரையும் எவ்வாறு அரவணைத்தது என்பதை சுட்டிக்காட்டி, நாட்டின் மனக்குரலாக கொங்குநாடு திகழ்ந்திருப்பதை எடுத்துக் காட்டுவதும் நமது நோக்கம்.

மாநில எல்லை கடந்த தானைத் தலைவர்கள்:

தேசிய விடுதலைக்கான போரில் ஈடுபட்ட யாவருக்கும் தெளிவாகத் தெரிந்திருந்த உண்மை, இந்த நாடு ஒரே நாடு என்பது. இமயம் முதல் குமரி வரை, பல சமஸ்தானங்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தபோதும், இந்த நாடு ஒரே நாடு என்பதை அவ்வனைவரும் உணர்ந்திருந்தனர். அதற்கு இந்த நாட்டின் ஆன்மிக அடித்தளமே காரணம்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 1885-இல் துவக்கப்பட்டபோது நாடு முழுவதிலும் இருந்து அதன் நிறுவன உறுப்பினர்களாக 72 பேர் பங்கேற்றனர். அவர்களில் தமிழகத்தின் சேலம் விஜயராகவாச்சாரியார், சேலம் பகடாலு நரசிம்மலு நாயுடு, ஜி.சுப்பிரமணிய ஐயர் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள். குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை வடிவமைத்த குழுவில் இடம் பெற்றவர் சேலம் விஜயராகவாச்சாரியார்.

அதேபோல, காங்கிரஸ் கட்சிக்குள் மிதவாதிகள்- தீவிரவாதிகள் என்ற பிரிவினை (1907) உருவானபோது, தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் பலரும் தீவிரவாத கோஷ்டியின் பின்னே நின்றது வரலாறு. அவர்களுள் முதன்மையானவர்கள் தமிழக விடுதலை மும்மூர்த்திகள்.

தேசிய அளவில் விடுதலைப் போர்க்கள மும்மூர்த்திகளான, பஞ்சாபின் லாலா லஜபதி ராய், மராட்டியத்தின் பாலகங்காதர திலகர், வங்கத்தின் பிபின் சந்திரபாலர் ஆகியோர், லால்- பால்- பால் என அழைக்கப்பட்டனர். இவர்கள் மூவருமே சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளால் வார்க்கப்பட்டவர்கள். இவர்களை தமிழகத்தில் ஆதரித்து நின்றவர்கள் தமிழக விடுதலை மும்மூர்த்திகளான பாரதி, வ.உ.சி, சிவா ஆகியோரே. இவர்களும் சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளால் ஆட்படுத்தப்பட்டவர்களே.

இவர்களில் லாலா லஜபதிராய், பாலகங்காதர திலகர் ஆகியோர் குறித்து கவிதை பாடி இருக்கிறார் பாரதி. பிபின் சந்திரபாலரை அழைத்து வந்து சென்னையில் அரசியல் கூட்டமும் நடத்தி இருக்கிறார் அவர். அதேபோல, பிபின் சந்திரபாலரைக் கொண்டு திருநெல்வேலியில் 1908-இல் கூட்டம் நடத்தியதால்தான் வ.உ.சி.யும் சுப்பிரமணிய சிவாவும் ஆங்கிலேய அரசால் வேட்டையாடப்பட்டனர்.

1905ஆம் ஆண்டு காசியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிலும், 1906ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிலும் கலந்து கொண்டவர் பாரதி. கொல்கத்தா மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற பாரதி, அச்சமயம் டம்டம் நகரில் இருந்த சகோதரி நிவேதிதையைத் தரிசித்து அருளுபதேசம் பெற்றிருக்கிறார்.

1907-இல் சூரத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், தீவிரவாதிகளின் தலைவரான திலகரை மிதவாதிகள் தாக்கியபோது, மேடையில் அவரைச் சூழந்து நின்று காத்தவர்கள் வ.உ.சி. உள்ளிட்டவர்கள். அதனால்தான் வ.உ.சி.யை தென்னாட்டுத் திலகர் என்றார்கள். திலகரைப் போலவே அவரும் தொழிலால் வழக்குரைஞர்; திலகரைப் போலவே நாட்டுக்காக தன் சொத்து, சுகங்களை இழந்தவர் வ.உ.சி.

வ.உ.சி.யுடன் கைகோர்த்து நின்ற விடுதலைவீரர் வத்தலகுண்டு அளித்த சுப்பிரமணிய சிவா. திலகருக்குப் பின் இவரது அரசியல் வழிகாட்டியாக இருந்தவர் வங்கம் தந்த சிங்கம் சித்தரஞ்சன் தாஸ். இவர்தான் நேதாஜியின் அரசியல் குருவும் கூட. தனது வாழ்வின் இறுதிக்கட்டத்தில், தர்மபுரி அருகே பாப்பாரப்பட்டியில் பாரத மாதா ஆசிரமம் அமைத்து, வாழ்ந்து மறைந்தார் சிவா. 1920-இல் நடைபெற்ற கொல்கத்தா காங்கிரஸ் மாநாட்டுக்குச் சென்று வந்தவர் சிவா.

இவ்வாறு மாநில எல்லை கடந்து சிந்தித்த இந்தத் தலைவர்களால் தான் தேசிய நீரோட்டம் பொங்கிப் பிரவகித்தது. இவர்களால் தேசிய விடுதலைப் போரும் வேகம் கொண்டது. இந்த மும்மூர்த்திகளை அடையாளம் கண்டு ஆதரித்தவர்கள் கொங்கு நாட்டினர் என்பதும் பெருமிதம் கொள்ளக் கூடியது.

பாரதிக்கு கொங்கு நாட்டின் ஆதரவு:

பத்திரிகையாளரும் எழுத்தாளருமான மகாகவி பாரதி மிகச் சிறந்த சொற்பொழிவாளராகவும் விளங்கியவர். தனது ஆவேசமான, விடுதலையுணர்வு கொண்ட சொற்பொழிவுகளால், ஆங்கிலேய அரசின் கண்காணிப்புக்கு ஆளானவர் பாரதி. அவரது இறுதிச் சொற்பொழிவு நிகழ்ந்த இடம் ஈரோடு. அதற்கு ஏற்பாடு செய்தவர் ஈரோட்டைச் சார்ந்த வழக்கறிஞரும் காங்கிரஸ் பிரமுகருமான எம்.கே. தங்கபெருமாள் பிள்ளை.

இவர், ஈரோட்டில் வாழ்ந்த ஈ.வெ.ராமசாமி (பின்னாளில் பெரியார் என்று அழைக்கப்பட்டவர்), வரதராஜுலு நாயுடு உள்ளிட்டோருடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர்; ‘குடியரசு’ என்ற பத்திரிகையை ஈ.வெ.ரா.வுடன் இணைந்து 1924இல் துவக்கியவர்.

முதல் குடியரசு இதழ் 1925ஆம் ஆண்டு மே மாதம் இரண்டாம் தேதி சனிக்கிழமை வெளியிடப்பட்ட்து. இதன் தொடக்ககால ஆசிரியர்கள் ஈ.வெ.ராமசாமியும், தங்கபெருமாள் பிள்ளையும்தான். முதல் இதழின் முகப்பில் பாரதியார் பாடல்களும் திருக்குறளும் இடம்பெற்றிருக்கின்றன.

காங்கிரஸ் கட்சியின் மேலிடத் தலைவர்களுடனான முரண்பாட்டால் ஈ.வெ.ரா.வின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. 1925 நவம்பரில் காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக ‘காங்கிரஸையும் காந்தியையும் ஒழிப்பதே என் முதல் பணி’ என்று சபதமிட்டு அங்கிருந்து வெளியேறினார். அதன்பிறகு குடியரசு இதழில் இருந்து தங்கபெருமாள் பிள்ளை விலகிவிட்டார்.

தங்கபெருமாள் பிள்ளையின் அழைப்பின் பேரில், கருங்கல்பாளையம் வாசக சாலையின் ஆண்டு விழாவுக்காக 1921 ஜூலை 31ல் ஈரோடு வந்தார் மகாகவி பாரதி. அந்த ஆண்டு விழாவில் ‘மனிதனுக்கு மரணமில்லை’ என்ற தலைப்பில் பாரதியார் பேசினார். அடுத்த நாள் (ஆக. 1) ஈரோடு, காரை வாய்க்கால் மைதானத்தில், ‘இந்தியாவின் எதிர்காலம்’ என்ற தலைப்பிலும் பாரதி பேசினார். இதுவே பாரதியாரின் இறுதிச் சொற்பொழிவாகும். சென்னை சென்ற பின்னர், சுதேசமித்திரன் நாளிதழில், ‘சக்திதாசனின் ஈரோடு யாத்திரை’ என்ற தலைப்பில் இதுதொடர்பாக கட்டுரை எழுதியிருக்கிறார் மகாகவி பாரதி. அதில் தங்கபெருமாள் பிள்ளை பற்றியும் குறிப்பிட்டிருக்கிருக்கிறார்.

வ.உ.சி.க்கு உதவிய கோவை வழக்கறிஞர்:

திருநெல்வேலிப் புரட்சியின் கதாநாயகரான வ.உ.சிதம்பரம் பிள்ளையின் வாழ்வில் கோயமுத்தூர் பெரும் பங்கு வகித்துள்ளது. அவரது சிறைவாசக் காலத்திலும், விடுதலைக்குப் பிந்தைய காலத்திலும், அவருக்குப் பல உதவிகள் செய்தவர்கள் கோவை பிரமுகர்களே.

சுதந்திரப் போராட்டத்தின்போது 1908-இல் ராஜத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்ட வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு உறுதுணையாக இருந்தவர், கோவையைச் சார்ந்த வழக்குரைஞர் சி.கே.சுப்பிரமணிய முதலியார். அவரும் கோவை கிழாரும் வ.உ.சி.யை சிறையிலிருந்து விடுவிக்க சட்டரீதியாகப் போராடினர்.

இதனிடையே கோவை சிறையில் வ.உ.சி.க்கு ஆதரவாக கைதிகள் கலகம் செய்து சிறை அதிகாரியைத் தாக்கியதால், கண்ணனுார் சிறைக்கு வ.உ.சி.யை மாற்றிவிட்டனர்.

1912இல் சிறையிலிருந்து விடுதலையான பின்னரும், சொந்த ஊருக்குச் செல்லக் கூடாது என்ற ஆங்கிலேய அரசின் உத்தரவால், சிறிது காலம் சென்னையில் வசித்த வ.உ.சி, பிறகு தனது நண்பர்கள் வாழும் கோவையில் (1920 - 1924) குடியேறினார். கோவை நகரில், கூட்டுறவு முறையில் தொழிலாளர்களுக்காக மளிகைக்கடை துவக்கினார். கோவையில் தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் அவர் தீவிரமாகப் பங்கேற்றார். அங்கு ஒரு வங்கி இயக்குனராகவும் பணியாற்றினார். பின்னர், பிளேக் நோய்ப் பரவல் காரணமாக, அருகிலுள்ள பேரூருக்கு வ.உ.சி. குடும்பம் இடம்பெயர்ந்தது.

தனக்கு கோவை நகரில் பல வகைகளில் உதவிய வழக்கறிஞரும் நண்பருமான சி.கே.சுப்பிரமணிய முதலியாருக்கு நன்றிக்கடனாக, தனது குழந்தைக்கு சுப்பிரமணியம் என்று பெயரிட்டார் வ.உ.சி.

சிவாவின் கனவுக்கு துணை நின்றவர்:


தர்மபுரியைச் சார்ந்த விடுதலைப் போராட்ட வீரர் டி.என்.தீர்த்தகிரி முதலியார் (எ) தீர்த்தகிரியார். பல்வேறு கட்டங்களில் 8 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்ட இவர், ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் இருந்தவர்.

இந்திய சுதந்திரப் போராட்டம் மகாத்மா காந்தியின் அகிம்ஸை வழியில் செல்வதற்கு முற்பட்ட காலத்தில் வன்முறையால் ஆங்கிலேயரை விரட்ட வேண்டுமென்ற கருத்து கொண்டவர்களின் ஆதிக்கத்தில் இருந்தது. தீர்த்தகிரியார் புரட்சி வழியில் செயல்பட்ட தலைவர்களான வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, மகாகவி பாரதி, வாஞ்சிநாதன் ஆகியோரது தோழராக இருந்தார்.

ஆஷ் துரையின் கொலையாளியைத் தேர்வு செய்ய சீட்டு குலுக்கிப் போடப்பட்ட பெயர்களில் தீர்த்தகிரியாரின் பெயரும் ஒன்று. ஆனால் அதில் வாஞ்சிநாதன் தேர்வாகி ஆஷைச் சுட்டுக் கொன்றார்.

ஆரம்பத்தில் பாலகங்காதர திலகரைப் பின்பற்றினார். ஆயினும் மகாத்மா காந்தியின் செல்வாக்கு பெருகியபோது, அதனை ஏற்று காங்கிரஸ் தொண்டராக சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார். இவர் சிலகாலம் பாரதியாருடன் தலைமறைவாகவும், சிலகாலம் நாடு கடத்தப்பட்டும் பாண்டிச்சேரியில் இருந்திருக்கிறார்.

கண்ணனூர், திருச்சி சிறைகளில் இருந்தபோது விடுதலை வீரர் சுப்ரமணிய சிவாவுடன் இவருக்கு நட்பு வலுப்பெற்றது. சிவா சிறையிலிருந்து தன் சொந்த ஊரான வத்தலகுண்டு செல்லாமல் தீர்த்தகிரியாருடன் தர்மபுரிக்கு அருகிலுள்ள பாப்பாரப்பட்டி சென்று தன் இறுதிக்காலத்தை அங்கேயே கழித்தார். இதற்கு தீர்த்தகிரி முதலியாரும் அவரது சகலை சின்னமுத்து முதலியாரும் சுப்ரமணிய சிவா மீது காட்டிய அன்பே காரணம்.

பாப்பாரப்பட்டியில் பாரத அன்னைக்கு கோயில் கட்ட சுப்பிரமணிய சிவா விரும்பியபோது, சின்னமுத்து முதலியாரின் நிதியுதவியால் வாங்கப்பட்டதே, அங்கு தற்போதுள்ள சிவா நினைவகமாகும். அந்த வளாகத்தில் தமிழக அரசால் பாரத அன்னைக்கு ஆலயம் கட்டப்பட்டுள்ளது.

தேசிய சுதந்திரப் போராட்டத்தின் திசையைத் தீர்மானிப்பதாக தமிழகமும், தமிழகத்தின் சிந்தனைப் பெருவழியைத் தீர்மானிப்பதாக கொங்குநாடும் திகழ்ந்திருப்பதை மேற்கண்ட நிகழ்வுகள் காட்டுகின்றன. தேசியம் காக்கும் போரில் கொங்குநாடு என்றும் முன்னணியில் துலங்கும்; பிரிவினை எண்னம் கொண்டோருக்கு எதிரான சண்டமாருதமாய், தமிழக தேசபகதர்களுக்குத் துணையாக விளங்கும்.

காண்க: சேக்கிழான்






No comments:

Post a Comment