பக்கங்கள்

மின்னிதழின் அங்கங்கள்

18/10/2021

நதியும் பிறவும் (கவிதை)

-கவிஞர் ஸ்ரீ.பக்தவத்சலம்




நதி

நதியொரு ஓவியர்
கரையெங்கும் மலர்கள் வண்ணம்.

நதியொரு சிற்பி
கூருடைத்த உருளைக் கற்கள்.

நதியொரு பாடகர்
விடியலுக்கு முன் கேளுங்கள்.

நதியொரு கலைஞன்
சும்மாயிருப்பதில்லை.
 
நதியொரு ஞான யோகி
தன்னியல்பில் தானானது.
 
நதியொரு கர்மயோகி
வினைபுரிவதில் மாறாதது.

நதியொரு சக்தியோகி
பல்லுயிர்க்கும் பகிர்வானது.

நதியொரு பக்தியோகி
கடல் சேர்ந்து நிறைவானது.

***
மின்மினிகள்

பகலில் ஒளி தின்று
இரவில் உமிழ்கிறதோ
மின்மினிகள்?

வனத்தரைகளில் படர்ந்திருக்கின்றன
பனித்துளி போன்ற ஒளித்துளிகள்.
அணைக்கப் பார்க்கிறது மழை.
 
ஊதிப்பார்க்கிறது காற்று.
துளி நழுவி வளி நழுவி
வளைந்து பறந்து விளையாடுகின்றன
தீப்பொதி மின்மினிகள்.
 
மின்மினிகள் ஒளிவீசியே
துணை தேடுகின்றன.
வேடிக்கைதான்...
காதலொளியைச் சுமந்து
தூது செல்கிறது இருட்டு.
 
ஒரு சில ஒளிக்காதலிகள்
ஒளிக்காதலனை
கூடிக்களித்த களைப்பில்
ருசித்தும் முடிக்கின்றன.
 
இருளை ஒளி விழுங்கும்
ஒளியை இருளும் விழுங்கும்
ஒளியைத் தின்னும் ஒளி கண்டு
கலவரமாகிறது காரிருள்.

***
அப்பச் சுவை


பசிப் பூனை நான்.
 
கருத்த அப்பமாய்
குவிந்திருக்கிறது இருள்.
 
அப்பச் சுவை காட்டி
சுற்றிச் சுற்றிப் பறக்கின்றன
மின்மினிப் பூச்சிகள்.
 
தின்னத் தெரியாத ஏக்கத்தில்
கூச்சலிடுகின்றன தவளைகள்.

தாகம் தணிக்க காலருகே
தீராமல் பாய்கிறது நதி.
 
தன் பங்கிற்கு வாலாட்டி
குழைகிறது செந்நிற நாய்.
 
நழுவவிடாதே எனச்
சொல்லிக் கடக்கிறது
மென்குளிர் காற்று.
 
இருட்டு அப்பத்தை
மெல்லச் சுவைக்கிறேன்.


***
அழுக்கு

ஆசை தீரப் புணர்ந்தாரில்லை
அழுக்குப் போக குளித்தாரில்லை.

விளக்குத் திரிக்கு பஞ்சுருட்ட
திரியில் திரண்டன உள்ளங்கையழுக்குகள்.

கடவுளின் சன்னதியில்
ஏற்றிய விளக்கொளியில்

எரிந்து கொண்டிருக்கின்றன
என் அழுக்குகள்.

***

No comments:

Post a Comment