பக்கங்கள்

மின்னிதழின் அங்கங்கள்

18/10/2021

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தமிழகம்

-தஞ்சை வெ.கோபாலன்

ஸ்டாஃபோர்டு கிரிப்ஸ் உடன்
மகாத்மா காந்தி உள்ளிட்ட தலைவர்கள்.


1. ஸ்டாஃபோர்டு கிரிப்ஸ் தூதும் காங்கிரஸ் எதிர்ப்பும்

ஆண்டுதோறும் நடைபெறும் காங்கிரஸ் மாநாடுகள் பெரும்பாலும் டிசம்பர் மாதத்தில் நடைபெறும். ஒரு சில நேரங்களில் அவசரமாகக் கூடி முடிவுகள் எடுக்க வேண்டுமானால் மற்ற மாதங்களிலும் கூட காங்கிரஸ் கூடி விவாதித்து முடிவுகளை எடுத்திருக்கிறது. அதைப் போல இரண்டாம் உலக யுத்தம் உச்சகட்டத்தில் நடந்து கொண்டிருந்த போது, இந்தியர்கள் கிழக்கில் சுதந்திர உதயம் எழுமா என்று ஆவலோடு காத்திருந்த நேரத்தில், 1942-ஆம் வருஷம் ஜனவரி மாதம் 13 முதல் 16 வரை காங்கிரஸ் காரியக் கமிட்டி கூடியது.

அதே ஆண்டில் வார்தாவில் அகில இந்திய காங்கிரஸ் கூடி முக்கியமான நடவடிக்கைகள் குறித்து விவாதம் நடத்தியது. அபுல்கலாம் ஆசாத் தலைமை வகித்தார்.

அந்தக் காலகட்டத்தில் ஐரோப்பாவில் தொடங்கிய யுத்தம், ஜப்பான் அதை அமெரிக்கக் கடற்கரைக்குக் கொண்டுசென்று பேர்ல் ஹார்பரை குறிவைத்துத் தாக்கி அமெரிக்கக் கப்பல்களை உடைத்தெறிந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, ஆசிய நாடுகள் பலவற்றை கபளீகரம் செய்துகொண்டு ஜப்பான் பர்மா மூலமாக இந்திய எல்லையை நெருங்கியிருந்த நேரம்.

ஜப்பான் தாக்குதலுக்கு முன்பாக இந்திய தேசிய ராணுவம் தங்கள் படைவீரர்களை அணிவகுத்து ‘தில்லி சலோ’ என்று நேதாஜி படைகளை வழிநடத்திக் கொண்டு வந்த நேரம்.

 
இந்த சூழ்நிலையில் இந்தியாவில் சுதந்திரத்துக்குப் பாடுபடும் தேசபக்தர்கள் என்ன செய்ய வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதையெல்லாம் வழிநடத்த காந்திஜி அவசியம் தேவை என்பதால், அவரை காங்கிரசை வழிநடத்த வரவேண்டுமென்று அறைகூவல் விடுத்தது கட்சி.

காந்திஜியும் நாடு இருக்கும் நிலைமையையும், இந்த இக்கட்டான நேரத்தில் இந்திய சுதந்திரத்தையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டிய சூழ்நிலையில், சில நிபந்தனைகளுடன், போராட்டத்தை வழிநடத்த ஒப்புக் கொண்டார்.

தனிநபர் சத்தியாக்கிரகம் போர் தொடங்கியதும் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது மூடப்பட்ட காந்திஜியின் பத்திரிகைகள் மீண்டும் வெளிவரத் தொடங்கின.

காங்கிரசுக்கும் காந்திஜிக்கும் மிக நெருக்கமானவரும், இந்திய சுதந்திரப் போராட்டத்துக்குத் தனது நன்கொடைகளாலும், காந்திஜிக்குத் தந்து வந்த ஆதரவாலும் சிறந்து விளங்கிய ஜம்னாலால் பஜாஜ் என்பார் இந்த நேரத்தில் காலமானார். காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக இருந்து வந்தவர் பஜாஜ்.

அந்தக் காலகட்டத்தில் தேசிய சீனாவின் அதிபராக விளங்கிய சியாங்கே ஷேக்கும் அவரது மனைவியாரும் கல்கத்தா வந்து காந்திஜியைச் சந்தித்து உலக அரசியல் விவகாரம் குறித்து விவாதித்தனர். இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சம் என்னவென்றால், திருமதி சியாங்கே ஷேக் அவர்கள் இந்திய பாணியில் கதரில் நெய்யப்பட்ட புடவை அணிந்து கொண்டு, இந்துப் பெண்மணி போல நெற்றியில் திலகமிட்டுக் கொண்டு காந்திஜிக்கும் சியாங்கே ஷேக்குக்கும் மொழிபெயர்ப்பாளராக விளங்கியது தான்.

ஐரோப்பாவில் ‘மின்னல்வேகத் தாக்குதல்’களை நடத்திக் கொண்டு ஜெர்மனி முன்னேறிக் கொண்டிருந்தது. ஜெர்மனியின் இந்த அதிவேகத் தாக்குதலைக் குறித்து புதிதாக ஒரு சொல் உருவானது. அதுதான் பிளிட்ஸ்கிரெக் (Blitzkrieg) என்பது.

போலந்து ஜெர்மனியிடம் விழுந்த அடுத்த கணம், ஜெர்மானியப் படைகள் மேற்கு நோக்கித் திரும்பத் தொடங்கியது. அப்போது அவர்களது படைகள் முன்னேறிய வேகத்துக்கு இணையாக இந்த யுத்தத்துக்கு முன்பும் இல்லை, பின்பும் இல்லை. இன்று வரை இந்த Blitzkrieg சொல் அகராதியில் இடம்பிடித்து விட்டது.

ஜப்பான் பர்மாவில் ரங்கூன் நகரையும் கைப்பற்றி விட்டது, அடுத்ததாக இந்தியா தான். தூரக்கிழக்கு ஆசியா முழுவதிலும் காலனிகளை அமைத்திருந்த பிரிட்டன், பிரான்ஸ் முதலான நாடுகள் தங்கள் காலனிகளை இழந்து வந்தன. பிரிட்டன் எல்லா காலனிகளையும் ஜப்பானிடம் தோற்றுவிட்டு கடைசிப் புகலிடமாக இந்தியாவினுள் முடங்கியது.

ரங்கூனைப் பிடித்துவிட்ட ஜப்பான் அடுத்த சில நாட்களில் இந்தியாவினுள் நுழைந்துவிடும்; அப்போது இந்திய மக்கள் எக்கேடு கெட்டால் என்ன என்று பிரிட்டிஷார் தப்பிப் பிழைத்து இங்கிலாந்துக்குச் சென்றுவிடுவர். இந்திய நாட்டு மக்களின் தலையெழுத்து என்னவாகும்?

ஐரோப்பாவை விழுங்கி ஏப்பம் விட்டுவிட்ட ஜெர்மனி கிழக்கு நோக்கி திரும்பி இந்தியாவிற்கும் வரலாம். கிழக்கிலிருந்து ஜப்பான் பர்மாவை விழுங்கி விட்டு இந்தியாவை அமுக்கிவிட வரலாம். இந்த நிலைமையை எப்படி சமாளிப்பது என்ற கவலை இந்தியத் தலைவர்களுக்கு ஏற்பட்டது.

இனியும் ஆங்கிலேயர்கள் இந்திய மக்களைக் காப்பாற்றுவார்கள் என்று நம்பிக் கொண்டிருக்க முடியாது. யுத்தத்தின் போக்கு மாறுமானால் அவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள ‘துண்டைக் காணோம், துணியைக் காணொமென்று’ அவர்கள் நாட்டை நோக்கி ஓட்டம் பிடித்துவிடுவார்கள். அப்போது மாட்டிக் கொள்பவர்கள் நாமல்லவா?

நம்மை அதாவது இந்தியர்களை, நாட்டைக் காக்கும் வகையில் ஆங்கிலேயர்கள் பழக்கி வைத்திருக்கவில்லை. இந்திய தேசியப் படையை வழிநடத்தும் நேதாஜி இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் தான் என்றாலும், ஜப்பான் செய்துவரும் உதவிகளால் அவர்களுக்கு ஏற்புடையவராகத் தானே இருப்பார்? அவர்களை நேதாஜியால் விரோதித்துக் கொள்ள முடியுமா? அல்லது ஜப்பானியர்கள் தான் இந்தியர்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்கத் தயாராக இருப்பார்களா?

இந்த சூழ்நிலையில், காங்கிரசின் எண்ணம்தான் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள அப்போது 1942 மார்ச் மாதம் 7-ஆம் தேதி வல்லபபாய் படேல் பேசிய பேச்சைக் காணலாம். அவர் சொல்கிறார்:

“பாரதத் தாயின் புதல்வர்களே! நீங்கள் அனைவருமே மகாபாரத யுத்தத்தைப் பற்றி அறிந்திருப்பீர்கள். அந்த குருக்ஷேத்திர யுத்தம் மிகப் பிரம்மாண்டமான யுத்தம் என்பதையும் அறிந்திருப்பீர்கள். ஆனால் இன்று நடைபெறுகின்ற உலக யுத்தத்தோடு ஒப்பிடும்போது அது ஒன்றுமே இல்லை என்று சொல்லலாம்.

அந்தக் காலத்தில் ஒரு யுத்தம் நடக்கிறது என்று சொன்னால், அது நடக்கவேண்டிய அரங்கைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். யுத்தம் அந்த இடத்தினுள் தான் நடக்க வேண்டும். அதன் எல்லையைத் தாண்டாமல் யுத்தம் நடத்தி, அது முடிந்து வெற்றி தோல்விகளை முடிவு செய்து கொள்வார்கள்.

ஆனால் இன்றைய யுத்தம் இருக்கிறதே அது இந்த யுத்தத்தில் சம்பந்தப்பட்டவர்கள் இருக்குமிடத்திற்கும் அப்பால் வெகு தூரத்துக்குப் பரந்து விரிந்து நடந்து கொண்டிருக்கிறது. யுத்தம் முந்தைய காலங்களைப் போல தரையில் மட்டுமல்லாமல், வானவெளியிலும், கடலுக்கு அடியிலும் கூட பயங்கரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த யுத்தத்தினால் விளந்தவை எவை? எத்தனை அழிவுகள்? இவைப ற்றியெல்லாம் யுத்தம் செய்து கொண்டிருப்பவர்களுக்கே தெரியாது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள், இந்த யுத்தத்தின் வீச்சு எப்படிப்பட்டது என்பதை.

யுத்தம் செய்யும் இரு கட்சியாருமே யோக்கியர்கள் அல்ல. இறைவன் பெயரால் நடக்கும் யுத்தம் என்று இரு தரப்பாருமே பிரகடனப் படுத்திக் கொள்கிறார்கள். இரு சாராரும் ஏசு கிறிஸ்துவை வழிபடுவதாக வேறு சொல்லிக் கொள்கிறார்கள். என்ன வேடிக்கை பாருங்கள்!

இந்த யுத்தத்தில் ஈடுபட்டிருப்போர் தங்களை முன்னேற்றமடைந்தவர்களாகவும், நாகரிகம் தெரிந்தவர்களாகவும், மற்றவர்களுக்கு உபதேசம் செய்யும் தகுதி படைத்தவர்களாகவும் கூறிக் கொள்கிறார்களே தவிர, பிந்நாளில் இவர்களைப் பற்றி எழுதப் போகும் வரலாற்றாசிரியர்கள் இவர்களை மிருகங்களினும் கேடு கெட்டவர்கள் என்று தான் எழுதப் போகிறார்கள்.

உலகத்தையே அழித்தொழிக்கும் பயங்கரமான யுத்தம் நடந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் தன் உள்ளத் திண்மையால் மனவுறுதியுடன் நின்றுகொண்டு, ‘வாள் எடுத்தவன் வாளாலேயே அழிவான்’ என்றும், வன்முறையாளன் வன்முறையாலேயே கொல்லப்படுவான் என்றும் உரக்கக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார் காந்திஜி.

இந்த யுத்தம் முடிந்து தெளிவு பிறக்கும்போது தான் உலகில் மிக உயர்ந்த தர்மம் அகிம்சை என்பதை மக்கள் உணரப் போகிறார்கள். இந்தியா இப்போது இருக்கும் சூழ்நிலையில் நாம் நம்மை இறைவனிடம் ஒப்படைத்துவிட்டோமாதலின், நம்மைவிட இந்த உலகில் மகிழ்ச்சியடையப் போவது யார் இருக்க முடியும்?

நாம் யாரிடமிருந்தும் எதையும் பறித்துக் கொள்ளவில்லை எனும்போது எதை இழந்துவிடப் போகிறோம்? ஒன்றும் இல்லை. ஆனால், நாம் ஒரு உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். உலக யுத்த குழப்பம் எவ்வளவு இருந்த போதும் நாம் மிருகங்களைப் போல ஏன் சாக வேண்டுமென்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

காந்தியடிகளிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது பயமின்மை என்பதைத்தான். இப்போது நமக்குக் கிடைத்திருக்கும் இந்த அரிய வாய்ப்பு இனி எந்தப் பிறவியிலும் கிடைக்குமா என்பது சந்தேகம் தான். பீரங்கிகள் வெடிக்கும் போதும், துப்பாக்கிகள் அலறும்போதும் மார்பைத் திறந்து காட்டும் தைரியம் வராமல் போனாலும், கோழைகளாக மாறி களத்தைவிட்டு ஓடிவிடும் கேவலத் தன்மையாவது ஏற்படாமல் இருக்க வேண்டும்.

நீங்கள் தாக்கப்படும்போது அகிம்சையினாலோ, தேவைப்பட்டால் பலாத்காரத்தின் மூலமாகவோ எதிரிகளைத் துணிந்து எதிர்க்கும் துணிவைக் கற்றுக் கொள்ள வேண்டும்.”

-இப்படியொரு உரையை நிகழ்த்தி வல்லபபாய் படேல் மக்களை விழித்தெழச் செய்தார். இப்படி உலக யுத்தம் இந்த பூமியின் எல்லா பகுதி மக்களையும் அச்சத்தில் உறைய வைத்திருந்தது.

பூமிப் பந்தின் மேற்புறமெங்கும் யுத்தம் அல்லோலப் பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் இந்திய மக்கள் எங்கோ எண்ணெய் மழை பெய்வது போலவும், நடைபெறுகின்ற நிகழ்ச்சிகள் எதிலும் அக்கறை இல்லாதவர்கள் போலவும் அலட்சிய பாவத்துடன் காணப்படுவதைக் கண்டு அமெரிக்கா அதிர்ச்சி அடைந்தது. இந்தியர்களின் இந்த மனப்போக்குக்கு என்ன காரணம் என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர்.

இந்த நிலைமையை இப்படியே விட்டுவிட அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்டுக்கு மனம் இல்லை. அவர் இங்கிலாந்து தலைவர்களுடன் இது பற்றி விவாதித்தார். அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட்டே இதுபற்றி கவலை தெரிவிக்கும் போது தாம் சும்மாயிருந்தால் சரியில்லை என்பதனாலோ என்னவோ, இந்தியாவைப் பற்றி அதிகம் கவலைப்படாத சர் வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு முடிவுக்கு வந்தார். இந்தியாவுக்கு சர் ஸ்டாஃபோர்டு கிரிப்ஸ் என்பவரை தூதராக அனுப்பி அங்குள்ள நிலைமையை ஆராயப் பணித்தார்.

1942, மார்ச் மாதத்தில் சர் ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ் இந்தியா வந்தார். இந்தியா வந்து இறங்கியதுமே அவர் தன் பணியைத் துவங்கிவிட்டார். காந்திஜியைச் சந்தித்து இங்கிலாந்து இந்திய மக்களுக்குக் கொடுக்க விரும்பும் சில கவைக்குதவாத சீர்திருத்தங்களைப் பற்றி எடுத்துரைத்தார். இதை பொறுமையாகக் கேட்டுக் கொண்ட காந்திஜி சொன்னார், “நீங்கள் இப்போது சொன்னவை தான் அதிகபட்சமாகக் கொடுக்ககூடிய சலுகைகள் என்றால், இதற்காக நீங்கள் சிரமப்பட்டு இத்தனை தூரம் பயணம் செய்து இங்கு வந்திருக்க வேண்டியதில்லையே. இதற்கு மேல் உங்களிடம் எந்த சலுகைகளும் கொடுப்பதற்கு இல்லையென்றால், நீங்கள் அடுத்த விமானத்திலேயே இங்கிலாந்துக்குப் புறப்பட்டு விடலாமே!” என்றார்.

அப்போது காந்திஜி சொன்ன சொற்றொடர் வரலாற்றில் பதிவாகியிருக்கிறது. அவர் சொன்னார் “கிரிப்சின் திட்டம் பின்தேதியிட்ட காசோலை”.

அப்படி என்ன தான் திட்டத்தை கிரிப்ஸ் வெளியிட்டார்? இந்தியாவை நிர்வாக ரீதியில் பல பாகங்களாகப் பிரிக்க ஒரு திட்டம். இப்படியொரு திட்டத்தை இந்த நாட்டில் எந்த கட்சியும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. வேறு வழி? கிரிப்ஸ் அடுத்த மாதமே இங்கிலாந்துக்கு விமானம் ஏறினார். அவருடைய தூது தோல்வியில் முடிந்தது.

காந்திஜி இந்த மக்களின் போராட்ட உணர்வைத் தூண்டும் விதத்தில் தன் பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதி வந்தார். அமெரிக்க பத்திரிகையாளர்கள் சிலர் அவரை பேட்டி கண்டபோது, அவர் சொன்ன சில கருத்துக்கள்:-

“இந்தியாவை கடவுளின் கையில் ஒப்படைத்துவிட்டு ஆங்கிலேயர்கள் இந்த நாட்டைவிட்டு வெளியேறி விடட்டும். புரியும்படியாகச் சொல்ல வேண்டுமானால் இந்தியாவை குழப்ப நிலையிலும், அராஜகங்களுக்கிடையிலும் விட்டுவிட்டு அவர்கள் வெளியேறிச் செல்லட்டும். அப்போது நிலவும் குழப்பங்களிலிருந்து ஒரு உண்மையான வலிமைமிக்க நாடு உருவாகும். இப்போதிருக்கும் பொய்யான போலியான இந்தியாவின் அடையாளம் மறையும்”.

இந்திய சுதந்திரப் போரில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது 1942-இல் நடந்த’Quit India’ இயக்கம். இதன் நேரடி தமிழாக்கம் “இந்தியாவைவிட்டு வெளியேறு” என்பது தான். நாம் யாரை இந்தியாவை விட்டு வெளியேறச் சொல்கிறோம், ஆங்கிலேயர்களை என்பதால் அது மொழியாக்கம் செய்யப்படும்போது “வெள்ளையனே வெளியேறு” போராட்டம் என்று அறிவித்து விட்டார்கள். அதுவும் சரி தான்.

இந்தப் போராட்டம் எப்படி, எங்கு ஆரம்பிக்கப்பட்டது, அது நடந்த விதம், அதன் விளைவுகள் பற்றி சிறிது பார்ப்போம். இந்த கட்டுரைத் தொடரின் தலைப்பில் காணப்படுவது போல இந்தப் போராட்டம் தான் இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்தியர்கள் எழுப்பிய “சுதந்திர கர்ஜனை” என்று சொல்லலாம்.
1942-ஆம் ஆண்டு. ஆம்! நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பின்னால், இந்தியாவை ஆணி அடித்தது போல நின்று நிதானித்து ஆண்டு கொண்டிருந்த பிரிட்டிஷார் இந்த நாட்டைவிட்டு பெட்டி படுக்கைகளுடன் புறப்பட வைக்கும் ஓர் இறுதிக்கட்டப் போராட்டம் தொடங்கப்படும் நேரம் நெருங்கிவிட்டது. அந்தப் போராட்டத்துக்குப் பச்சைக்கொடி காட்டப்போகும் காங்கிரஸ் மாநாடு, பம்பாய், ஆசாத் மைதானத்தில் 1942, ஆகஸ்ட் மாதம் 8-ஆம் தேதி நடைபெற்றது.


அப்போதுதான் நாடே அதிரும் வண்ணம் “Quit India” – வெள்ளையனே இந்தியாவை விட்டு வெளியேறு எனும் கோஷம் பிறந்தது. அந்த விவரங்களை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.



2. வெள்ளையனே! இந்தியாவை விட்டு வெளியேறு!

1942, ஆகஸ்ட் மாதம் 8-ஆம் தேதி. பம்பாய் ஆசாத் மைதானம். ஆயிரக் கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் அமைதியாக மகாத்மா காந்தியடிகளின் உரையைக் கேட்டுக் கொண்டிருக் கின்றனர். ‘Quit India’ தீர்மானத்தை முன்மொழிந்து மகாத்மா வாதங்களை முன்வைக்கிறார். ‘ஆகஸ்ட் க்ரந்தி’ என்று இந்தி மொழியில் சொல்லப்படும் இந்தப் போராட்டம் அமைதி வழியில் பிரிட்டிஷாரை இந்த நாட்டைவிட்டுப் போய்விடும்படி கேட்டுக் கொள்ளும் போராட்டம்.

இதற்கு முன் எத்தனையோ போராட்டங்களை காந்திஜியின் தலைமையில் காங்கிரஸ் நடத்தியிருந்தும், இந்தப் போராட்டம் ஒரு இறுதிப் போராட்டம் போன்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. அமைதியான வழியில்- ஆங்கிலேயர்கள் எப்படி ஓசையின்றி இந்த நாட்டினுள் காலடி எடுத்து வைத்தார்களோ அதைப் போலவே- இப்போது இந்த நாட்டைவிட்டு அமைதியாக வெளியேறிவிட வேண்டுமென்ற முழக்கத்தை முன்வைத்தது இந்த தீர்மானம்.

1942 ஆகஸ்ட் 8-ஆம் தேதி பம்பாய் ஆசாத் மைதானத்தில் இதற்கான தீர்மானத்தை காந்திஜி முன்மொழிந்தார். நரம்புகளை முறுக்கேற்றும் அவரது உரையில், நாட்டின் அரசியல் சூழ்நிலைகளையும், ஆங்கிலேயர் கள் இந்த யுத்த காலத்திலும் நடந்து கொள்ளும் முறைகளையும் விவரமாக எடுத்து வைக்கிறார்.

அவருடைய உரையின் இறுதிகட்ட வரிகள் தான் இந்த நாட்டின் தலைவிதியை மாற்றி அமைக்கக் காரணமாக இருந்தது. அந்த வரிகள் “செய், அல்லது செத்து மடி!” Do or Die என்பது.

காந்தியடிகள் முன்மொழிந்த அந்த தீர்மானத்தில் கண்டிருந்த செய்திகளின் சுருக்கம் இதோ:

“இந்திய நாட்டில் நாள்தோறும் நிகழும் நிகழ்ச்சிகள், மக்கள் பெற்றுவரும் அனுபவங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைத்துவிடவேண்டும் என்ற உறுதியான முடிவுக்கு காங்கிரஸ் வந்துவிட்டது.

இந்திய நாட்டின் நன்மையைக் கருதிமட்டுமல்லாமல், உலக நாடுகளின் பாதுகாப்பையும் முன்னிட்டு உலகில் நிலவும் ராணுவ வெறி, நாசிசம், பாசிசம் போன்ற ஏகாதிபத்திய கொடுமைகளை எதிர்த்தும், ஒரு நாடு மற்றொரு நாட்டை ஆக்கிரமித்துப் பிடித்துக் கொள்ளும் வெறிச்செயலை ஒழிக்கவும் இந்தியா சுதந்திரம் பெறவேண்டியது அவசியமாகிறது.”

உலகப் பெரும்போர் நடந்து கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எந்தவித இடையூறும் தந்துவிடக் கூடாது எனும் நல்ல எண்ணத்தில் காங்கிரஸ் பல விஷயங்களில் ஆட்சியாளர்களுக்கு விட்டுக்கொடுத்தும், அரசின் போக்கு மாறவில்லை.

சர் ஸ்டாஃபோர்டு கிரிப்ஸ் அவர்களுடன் காங்கிரஸ் நடத்திய பேச்சு வார்த்தைகளிலும், அடிப்படையான சில உரிமைகளைத்தான் கேட்டோம். ஆனால் அதற்கு எவ்விதப் பயனும் ஏற்படவில்லை. ஆங்கில ஆட்சியாளர்கள் மீது இதனால் இந்திய மக்களுக்கு வெறுப்பு அதிகரித்து விட்டது.

மற்றொரு பக்கம் பிரிட்டன் உள்ளிட்ட நேசநாடுகளுக்கு எதிராக ஜப்பான் பெற்று வரும் வெற்றிகளைக் கண்டு மக்கள் மகிழ்ச்சியும் உத்சாகமும் கொண்டிருக்கிறார்கள். இந்தப் போக்கு மிகவும் ஆபத்தானது.

ஓர் அடிமை வாழ்வில் இருந்து மற்றொரு அடிமை வாழ்வுக்கு அது கொண்டுபோய் விட்டுவிடும். ஆங்கிலேயர்களுக்கு பதில் ஜப்பானியர்களுக்கு நாம் அடிமைகளாக ஆக அது வழிவகுத்துவிடும். மலேயா, சிங்கப்பூர், பர்மா முதலான நாடுகளில் ஏற்பட்ட அனுபவத்தைப் போல இங்கும் ஏற்படுவதைத் தடுக்க காங்கிரஸ் விரும்புகிறது. நமக்கு எந்த அல்லது யாருடைய ஆதிக்கமும் தேவையில்லை.

அந்நிய ஆட்சியாளர்கள் நம்மைப் பிரித்தாளும் கொள்கையை நீண்ட நெடுங்காலமாகக் கருணையின்றி கடைபிடித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் மக்கள் உறுதியுடனும், மனம் விரும்பியும், நம்மிடம் உள்ள பலத்தை ஒன்று திரட்டியும் அந்நிய சக்திகளின் ஆதிக்கத்தை எதிர்த்து நிற்க வேண்டும். அது தான் இப்போது காங்கிரசின் ஒரே நோக்கம்.

இந்தியாவிலிருந்து ஆங்கில ஆட்சியாளர்கள் வெளியேறிவிட வேண்டும். இதைச் சொல்லும் அதே நேரத்தில் இங்கிலாந்துக்கோ அல்லது அதோடு இணைந்து போரில் ஈடுபட்டிருக்கும் நேச நாடுகளுக்கோ நாம் எந்தவித இடையூறும் விளைவிக்க விரும்பவில்லை.

இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் எல்லோரும் வெளியேறிவிட வேண்டும் என்பதல்ல நமது கோரிக்கை. அவர்களும் நாமும் பரஸ்பர நல்லெண்ணத்துடன் ஆட்சியை மாற்றிக்கொள்ள வேண்டுமென்பதே நம் கோரிக்கை. ஆங்கிலேயர்கள் ஆட்சி முடிய வேண்டும். இந்தியர்களை இந்தியர்களே ஆண்டுகொள்ளும் சுயாட்சி மலர வேண்டும். இதுவே இந்த மாநாட்டின் உறுதியான கோரிக்கை”.

-அந்தத் தீர்மானத்தின் உட்கருத்து இவை தான். காந்திஜி தன்னுடைய உரையின் நிறைவில் மிக உருக்கமாக ஒரு வேண்டுகோளை முன்வைத்தார். அது, “நான் ஒரு மந்திரத்தை உங்களுக்கு இப்போது சொல்லுகிறேன். அதை உங்கள் இதயங்களில் பதித்து வைத்திருங்கள். நீங்கள் விடும் மூச்சுக்காற்றிலும் இந்த மந்திரம் ஒலித்துக் கொண்டிருக்கட்டும். அந்த மந்திரம் ‘செய்! அல்லது செத்து மடி!’ Do or Die” என்று குறிப்பிட்டார்.

காந்திஜி சொன்ன இந்த ‘செய் அல்லது செத்து மடி’ என்ற கோஷத்தை அரசாங்கம் தவறாகப் புரிந்து கொண்டது. காந்தியடிகள் மக்களை அரசுக்கு எதிராக வன்முறையைத் தூண்டுகிறார் என்று எண்ணியது. இதை அவர்கள் மக்களுக்கும் பிரகடனப் படுத்தி எச்சரித்தனர்.

அதற்கு காந்திஜி ஒரு விளக்கமளித்தார். நான் சொன்ன இந்த கோஷத்தின் பொருள் “ஒன்று, நாங்கள் இந்தியாவை விடுதலை அடையும்படி செய்வோம்; அப்படி இல்லையென்றால் அந்த முயற்சியில் நாங்கள் எங்கள் உயிர்களைத் தியாகம் செய்வோம்” என்று விளக்கமளித்தார்.

இந்த மாநாட்டின் தீர்மானத்தின்படி போராட்டத்தைத் துவக்குவதற்கு முன்பாக தான் வைசிராய்க்கு ஒரு கடிதம் எழுதப் போவதாகவும் காந்தியடிகள் தெரிவித்தார். பிரிட்டிஷ் அரசோ இந்த தீர்மானத்துக்குப் பதில் அளிக்கையில் “காங்கிரஸ் விடுக்கும் சவாலை இந்திய சர்க்கார் எதிர்கொள்வார்கள்” என்றனர்.

பம்பாய் மகாநாட்டில் நேருஜியும் பேசினார். அவர் சொன்னார், “பிரிட்டிஷாருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. அவர்கள் தங்கள் பெட்டி படுக்கைகளைச் சுருட்டிக் கொண்டு தங்கள் நாட்டுக்குக் கப்பல் ஏற வேண்டிய நேரம் இது. அவர்களே அப்படி செய்துவிட்டு இந்தியாவை விட்டு வெளியேறி விடுவார்களானால் அது மிகவும் கெளரவமான செயலாக இருக்கும்” என்றார்.

மாநாட்டுப் பிரதிநிதிகளின் உடல்களில் புதிய ரத்தம் பாய்ந்தது போன்ற எழுச்சி இந்தத் தீர்மானத்தைக் கேட்டதும் உருவானது. இது ஒரு நேரடியான கோரிக்கை. இந்த நாட்டை இத்தனை காலம் ஆண்டு, அனுபவித்துச் சுரண்டியது போதாதா, புறப்படுங்கள்- உங்கள் நாட்டுக்கு என்பது, இந்தியர்களின் ஏகோபித்த கோரிக்கை.

உலக நாடுகள் பலவற்றிலும் காலனிகளை அமைத்து அந்த நாடுகளையெல்லாம் சுரண்டி செல்வத்தைக் குவித்த பிரிட்டன் அத்தனை சுலபத்தில் இந்த நாட்டைவிட்டு வெளியேறி விடுவார்களா என்ன? அப்படியொரு தீர்மானத்தைக் காங்கிரஸ் நிறைவேற்றியதும் அவர்கள் கோபம் எல்லை கடந்தது.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் காங்கிரசின் இந்தத் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளாதது மட்டுமல்ல, இதற்குச் சரியான பதிலடி கொடுக்கவும் தங்களைத் தயார் செய்து கொண்டார்கள்.

காந்திஜி பம்பாயில் பேசி முடித்த ஒருசில மணி நேரத்துக்குள் ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு விட்டனர். யுத்தகால சிறைவாசம் என்றால், இன்னார் இன்ன சிறையில் இருக்கிறார் என்பதைக் கூட வெளியிட மாட்டார்கள். யாரும் அவர்களைச் சென்று பார்த்துவிட முடியாது. இந்திய பிரிட்டிஷ் சர்க்காரின் இந்த அடக்குமுறையை அதிகப்படியான இந்தியர்களை உறுப்பினர்களாகக் கொண்ட வைஸ்ராயின் சபையும் அங்கீகரித்தது.

கொடுமை என்னவென்றால், இந்திய முஸ்லி ம்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சமஸ்தானாதிபதிகள், பிரிட்டிஷ் அரசில் பணிபுரியும் காவல்துறை, இந்திய ராணுவம், இந்திய சிவில் சர்வீஸ்- இவர்கள் அத்தனை பேரும் அரசாங்கத்தின் இந்த அடாவடி அராஜகத்தை ஆதரித்தார்கள்.

யுத்த காலமாதலால் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கப்பட்டன. அதை கள்ள மார்க்கெட்டில் விற்று பெரு வியாபாரிகள் கொழுத்த லாபம் சம்பாதித்தனர். ஆகவே இந்த அபூர்வமான சந்தர்ப்பத்தை கள்ள மார்க்கெட் வியாபாரிகள் இழக்கத் தயாரில்லை, ஆகவே அவர்களும் பிரிட்டிஷ் அரசின் நடவடிக்கைகளை ஆதரித்தார்கள்.

இளைஞர்களும் இந்திய மாணவர்களும் தங்கள் கவனத்தை இந்திய தேசிய ராணுவத்தின் மீதும் அதன் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் மீதும் திருப்பியிருந்ததால், காங்கிரசின் இந்தத் தீர்மானம் அவர்களை அதிகம் ஈர்க்கவில்லை.

ஆனால் எதிர்பாராத ஓரிடத்திலிருந்து இந்தப் போராட்டத்தை ஆதரித்து ஒரு குரல் ஒலித்தது. அது தான் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்டின் குரல். அவர் பிரிட்டிஷ் பிரதம மந்திரியை, இந்தியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியிருந்தார்.

அதிகாரங்களின் பல கரங்கள் இந்தப் போராட்டத்தை நசுக்க வேண்டிய ஏற்பாடுகள் நடந்தன. ஆனால் உணர்ச்சிவசப்பட்ட அடிமட்ட காங்கிரஸ் தொண்டர்களும், திரைமறைவில் இருந்து கொண்டு பெரும் போராட்டத்தைத் தூண்டிவிட்டுக் கொண்டிருந்த சில அரசியல்வாதிகளும் இந்த ஆகஸ்ட் புரட்சியை ஒரு ரத்தப் புரட்சியாக ஆக்கிக் கொண்டிருந்தார்கள்.

இப்படிப்பட்ட வன்முறைப் போராட்டம் காங்கிரசின் போராட்டமல்ல, பொதுமக்களும், சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்ட வீரர்களும் இணைந்து நடத்திய செயல். ஆகவே இந்த வன்முறைகளுக்குக் குற்றம் சாட்டப்பட வேண்டியவர் காந்திஜி அல்ல; அவர் மீது அடக்குமுறையை ஏவிவிட்டு, காங்கிரசின் குரல்வளையை நசுக்கி கட்சியைத் தடைசெய்து, வங்கிக் கணக்குகளை முடக்கி, தொண்டர்களை சிறையிலிட்ட இந்திய அரசே அத்தனைக்கும் காரணம் என்பதை அடித்துக் கூற முடியும்.

பிரிட்டிஷ் அரசு உலகப் போர் நடந்து கொண்டிருக்கும் போது இந்தியாவுக்குச் சுதந்திரம் அளிப்பது எனும் பேச்சுக்கே இடமில்லை என்று உறுதியாக நின்றது. யுத்தம் முடியட்டும், அப்போது யோசிப்போம் என்பது அவர்கள் பதில்.

நாடெங்கும் அராஜகம் வன்முறை வெறியாட்டம். ஆயிரமாயிரம் தொண்டர்கள் கைது. சிறையில் அடைப்பு. இந்தப் போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்படவில்லை. ஆங்காங்கே அவரவர்க்குத் தோன்றியபடி போராடினதன் விளைவு, போராட்டம் தோல்வியில் முடிந்தது. ஆனால் அதற்குள் நிகழ்ந்தவை வடுக்களாக நிலைத்து நிற்கும்.

இந்தப் போராட்டத்தின் விளைவாக, பிரிட்டிஷ் அரசும் ஒரு தெளிவான முடிவுக்கு வந்துவிட்டது. இனியும் நாம் இந்தியாவில் இருந்து ஆட்சி செய்யமுடியாது எனும் உண்மையை அவர்கள் புரிந்து கொண்டிருந்தார்கள்.

ஆகஸ்ட் 8-ஆம் தேதி, காந்திஜி மாநாட்டுப் பந்தலில் இருந்து தன் தங்குமிடம் செல்வதற்குள் கைது செய்யப்பட்டு எங்கோ கொண்டு செல்லப்பட்டு விட்டார். நேருவும், படேலும், அபுல்கலாம் ஆசாதும் கைதாகினர். உடல்நலம் சரியில்லாமல் பாட்னாவில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த பாபு ராஜேந்திர பிரசாத்தும் கைது செய்யப்பட்டார். தமிழ்நாட்டுத் தலைவர்கள் தீரர் சத்தியமூர்த்தி ரயிலில் சென்னை திரும்பிக் கொண்டிருந்த வழியில் ஆந்திராவில் கைதுசெய்யப்பட்டு சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவர் விடுதலை ஆகாமலே சிறைவாசத்தின் போதே தன் இன்னுயிரையும் நீத்து அமரர் ஆனார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த பெருந்தலைவர் காமராஜ் மட்டும் தான் கைது செய்யப்படலாம் என்பதாலும், சிறை செல்வதற்கு முன்பு வெளியில் போராட்டம் குறித்த சில தகவல்களை காங்கிரசாருக்குத் தெரிவிக்க வேண்டியிருந்ததாலும், தன்னை ஒரு கிராமத்து விவசாயி போல தலையில் முண்டாசும், தன் உடைமைகளை ஒரு மூட்டையாகக் கட்டி அதைத் தலையில் தாங்கிக் கொண்டும் பம்பாயிலிருந்து சென்னை வரும் வழியில் அரக்கோணம் ரயில் நிலையத்தில் இறங்கி மற்ற பயணிகளைப் போல நடந்து சென்று நிலையத்துக்கு வெளியே வந்தார்.

அப்போது அரக்கோணம் கடைத்தெருவில் காபி ஓட்டல் நடத்தி வந்த தியாகி தேவராஜ ஐயங்காரை ரகசியமாகச் சந்தித்தார். பின்னர் அவருடன் கிளம்பி ராணிப்பேட்டைக்குச் சென்று அங்கு தீனபந்து ஆசிரமம் நடத்திக் கொண்டிருந்த கல்யாணராம ஐயரைப் போய் பார்த்து அவரிடம் சில செய்திகளைச் சொல்லி மற்றவர்களுக்கும் சொல்லச் செய்தார்.

பின்னர் இவர்கள் ராணிப்பேட்டையில் ஒரு தோட்டத்தில் வசித்துவந்த காங்கிரஸ் தொண்டர் ஒருவரின் இல்லம் சென்றனர். ஒரு முஸ்லிம், அவர் இல்லத்தில் காமராஜ் தங்கியிருந்து பின் மறுநாள் வேலூர் சென்று அங்கிருந்த காங்கிரஸ்காரர்களை ஒரு ரகசியக் கூட்டத்தில் சந்தித்துவிட்டு ஊர் திரும்பும் வழியில் திருச்சி, தஞ்சாவூர் ஆகிய இடங்களுக்கும் சென்றபின் விருதுநகர் திரும்பினார்.

ஊர் திரும்பிய அன்று காலை வீட்டில் குளித்து உணவு அருந்தியபின் ஒரு நண்பரை அனுப்பி விருதுநகர் காவல் நிலையத்துக்குச் செய்தி சொல்லி அனுப்பினார். தான் ஊர் திரும்பிவிட்டதாகவும், தன்னை கைது செய்து கொள்ளலாம் என்றும் செய்தி அனுப்ப, அந்த இன்ஸ்பெக்டர் வந்து காமராஜரைத் தேடி போலீஸ் வேலூர் சென்றிருப்பதாகவும், திரும்பி வருவதற்கு இன்னும் ஓரிரு நாட்கள் ஆகும். அதுவரை தலைவர் ஓய்வெடுத்துக் கொண்டு வீட்டில் இருக்கலாம் என்று சொல்லியும் கேட்காமல், காமராஜ் அன்றே கைதானார். பின்னர் சிறை சென்றார்.

மாநாட்டுப் பந்தலிலும், பிரதிநிதிகள் தங்கும் முகாம்களிலுமிருந்து அகில இந்திய தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, எங்கு கொண்டு செல்கிறோம் என்றுகூட சொல்லாமல் எங்கெங்கோ கொண்டு செல்லப்பட்டார்கள். ஒவ்வொரு மாகாண பிரதிநிதிகளிலும் பெயர் சொல்லக்கூடிய தலைவர்கள், மாவட்டத் தலைவர்கள் உட்பட பலரும் கைது செய்யப்பட்டு ஆங்காங்கே பல சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

இத்தனை களேபரங்கள் நடந்து கொண்டிருக்கையில், ஆகஸ்ட் 15-ஆம் தேதி மகாத்மா காந்தியடிகளின் செயலாளராக இருந்த மகாதேவ தேசாய், ஆகாகான் மாளிகையில் உயிரிழந்தார். காந்திஜி அவரது உடலைத் தானே குளிப்பாட்டி அந்த அரண்மனை வளாகத்தின் ஒரு பகுதியில் சிதை அடுக்கி அவரை தகனம் செய்தார்.

அப்போது காந்திஜி முணுமுணுத்த வரிகள்: “மகாதேவ்! மகாதேவ்! எனக்குப் பின் என்னுடைய சரித்திரத்தை எழுத நீ இருப்பாய் என்று எண்ணியிருந்தேன். ஆனால் உன்னுடைய சரித்திரத்தை என்ன எழுதவைத்துவிட்டு நீ மறைந்து சென்றனையே!” என்று புலம்பினார்.

தென்னாப்பிரிக்காவைவி ட்டு இந்தியா வந்து சேர்ந்து இந்திய சுதந்திரப் போரில் ஈடுபட்ட நாளிலிருந்து மகாதேவ தேசாய் காந்திஜியைப் பிரியாமல் உடன் இருந்தவர். குஜராத்தைச் சேர்ந்த இவர் ஒரு எம்.ஏ. பட்டதாரி. சிறந்த எழுத்தாளர். மிக உயர்ந்த சிந்தனை படைத்தவர். எளிய, உயர்வான ஆங்கில நடை அவருடையது.

காந்திஜி, புனா ஆகாகான் மாளிகையிலும், மற்ற தலைவர்கள் நேரு உட்பட அனைவரும் அகமத்நகர் கோட்டையிலும் சிறைவைக்கப்பட்டனர். காந்திஜியும் மற்ற தலைவர்களும் சிறைப்பட்ட அந்த ஆகஸ்ட் 8 இரவுக்குள் எத்தனையெத்தனை கைதுகள், சிறைச்சாலைக்கு அனுப்புதல் அன்று நாடே அமளி துமளிப் பட்டது.

மறுநாள் பொழுது விடிந்தது. காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்ட செய்தி நாடு முழுவதும் பரவியது. ஆங்காங்கே மக்கள் பொங்கி எழுந்தனர். நாட்டின் பெரு நகரங்கள், சிறு ஊர்கள் அனைத்திலும் மக்கள் கூட்டம் கூட்டமாக அவரவர்க்குத் தோன்றிய முறைகளில் எல்லாம் போராடத் தொடங்கினர்.

இந்தப் போராட்டங்களுக்கும், பம்பாய் காங்கிரசில் நிறைவேற்றப்பட்ட ‘வெள்ளையனே வெளியேறு’ தீர்மானத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. அப்படியொரு தீர்மானத்தின் விவரங்கள் கூட பொதுமக்களுக்குத் தெரியுமா என்பது தெரியவில்லை. இது மக்கள் தாங்களாகவே தலைவர்களின் கைதை எதிர்த்துத் தொடங்கிய போர். அவர்களுக்கு வழிகாட்ட தலைவர்கள் எவரும் வெளியில் இல்லை. பெயர் சொல்லக்கூடிய காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் சிறை கொட்டடியில். பொதுமக்கள் கேப்டன் இல்லாத கப்பல் சிப்பந்திகளைப் போல அவரவர் மனதுக்குத் தோன்றியபடி போராட்டம் நடத்தத் தொடங்கினர்.

இது காங்கிரஸ் கட்சி நடத்திய போர் அல்ல. பொதுமக்கள் உணர்ச்சிவசப்பட்டு தாங்களாகவே தேர்ந்தெடுத்துக் கொண்ட போர். நாட்டில் பல பகுதிகளிலும் தந்திக் கம்பிகள் அறுக்கப்பட்டன. ரயில் தண்டவாளங்கள் பெயர்க்கப்பட்டன. ‘மகாத்மா காந்தியை விடுதலை செய். மகாத்மா காந்திக்கு ஜே!’ என்றெல்லாம் கோஷங்கள் எழுப்பப்பட்டன. பொதுமக்களின் வாழ்க்கை ஸ்தம்பித்து நின்றது. நாடு மட்டுமல்ல உலகமே இந்தியாவில் நடக்கும் இந்த வெகுஜனப் போரை வேடிக்கை பார்க்கத் தொடங்கியது.

காங்கிரஸ் கட்சியோ ஆகஸ்ட் புரட்சியில் நடந்தவைக்கு பொறுப்பேற்றுக் கொள்ள முடியாது, காரணம் தீர்மானம்தான் போட்டார்களே தவிர அவர்கள் போராட்டம் எங்கு, எப்படி, எந்த வகையில் நடக்கும் என்ற முடிவுகள் எதையும் அறிவிக்காத நிலையில், அடக்குமுறைகளை எதிர்கொள்ள ஆங்காங்கே வன்முறை போராட்டங்களை நடத்தத் தொடங்கிவிட்டனர். ஆகவே இது ஒரு பொதுஜனப் புரட்சி.

நடந்த வன்முறைகளுக்குத் தாங்கள் காரணமல்ல என்பதால், அந்த காலகட்டத்தில் நடந்த பல வன்முறைகளை காந்தியவாதிகள் எழுதுவதில்லை. ஆனால் நடந்தவை நடந்தவையே! அதை மறைக்கவோ, மறுக்கவோ முடியாது அல்லவா?

அப்படி இந்திய நாடு முழுவதும் நடந்த வன்முறை வெறியாட்டங்களை எழுதினால் பக்கங்கள் போதாது என்பதால், தமிழ்நாட்டில் நடந்த ஒருசில நிகழ்வுகளை விவரமாக இனி வரும் தொடர்களில் பார்க்கலாம்.

அந்த வன்முறை சரியென்பது நமது வாதமல்ல. ஆனால் தவறான வழிகளில் நாடு பிடித்து, வன்முறையே வரலாறாய் ஆட்சி புரிந்து அடக்குமுறைகளை அவிழ்த்துவிட்டு அடிமைத் தளையில் நம்மை வைத்திருந்த அன்னிய ஆட்சியாளர்களுக்கு அந்த வன்முறை தான் புரிந்தது என்பதை எடுத்துக்காட்டவே இந்த விவரங்கள்.

அதுமட்டுமல்ல, இந்த நாட்டின் மீது கொண்ட பக்தியால் அல்லவோ ஆயிரமாயிரம் மாரதவீ ரர்கள் தாய்நாட்டுக்காகத் தங்கள் நல்லுயிர் ஈந்தனர்?

அந்தப் போராட்டத்தை வன்முறை என்று ஒதுக்கிவிட்டால், அவர்களது தியாகம் மறைக்கப்படுவதாகாதா? அதனால் தான் ஒருசில வரலாற்று நிகழ்ச்சிகளையும், அந்த வரலாற்று நாயகர்களையும் இனி பார்ப்போம்.


3. பற்றி எரிந்தது நாடு


இதென்ன கொடுமை! காங்கிரஸ் மகாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றினார்கள், அதில் ‘இத்தனை ஆண்டுகாலம் இந்த நாட்டை சுரண்டிய அன்னியனே நீ வெளியேறு’ என்று குரல் கொடுத்தார்கள்.

முடிந்தால் உடனே கப்பல் ஏறியிருக்க வேண்டும், அல்லது உங்களோடு ஒட்டும் உறவும் வைத்துக்கொண்டு ஆட்சியை உங்களிடம் தந்துவிடுகிறோம் என்று சமாதானமாகப் போயிருக்க வேண்டும். இரண்டும் இல்லாமல் இந்த மண்ணில் வந்து தங்கிக் கொண்டு, இந்த மண்ணின் மைந்தர்களைக் கண்மூடித்தனமாக தாக்கியும், துப்பாக்கியால் சுட்டும், சிறையில் அடைத்தும் கொடுமை செய்யும் அளவுக்கு உனக்குத் துணிச்சலா? நாங்கள் பாரதத்தின் மைந்தர்கள், என்று வீறுகொண்டு எழுந்தனர் இந்திய நாட்டு மக்கள்.

இதுநாள் வரை ஒவ்வொரு ஊரிலும் காங்கிரஸ்காரர்கள் தலையில் தொப்பி, மேலே கதராடை, கையில் ராட்டை போட்ட காங்கிரஸ் கொடி இவற்றோடு அணிவகுத்துச் சென்று, “மகாத்மா காந்திக்கு ஜே!” “பண்டித ஜவஹர்லால் நேருவுக்கு ஜே!” “வந்தேமாதரம்!” என்றெல்லாம் கோஷமிட்டுக் கொண்டு தெருவோடு போவார்கள்.

எங்காவது கள்ளுக்கடை, அன்னிய துணிக்கடை போன்ற இடங்களில் மறியல் செய்து கைதாகி சிறைக்குச் செல்வார்கள். போலீஸ்காரர்கள் கலைந்து செல்லும்படி சொன்னாலும் போகாமல் அங்கேயே இருந்து அவர்களிடம் தடியடியும், துப்பாக்கிச் சூடும் வாங்கி ரத்தம் சிந்தி உயிரை விடுவார்கள்.

மற்றவர்கள், ஊரிலுள்ள மக்கள் இவற்றைப் பெரும்பாலும் வேடிக்கை பார்த்துவிட்டு, பாவம் இந்த காங்கிரஸ்காரத் தொண்டர்கள். என்ன அடி, என்ன அடி! போலீசாரின் அடியை எப்படித் தான் தாங்கிக் கொள்கிறார்களோ? என்ன வேண்டுமாம் இவர்களுக்கு, சுதந்திரமா? இப்போ என்ன கெட்டுப் போய்விட்டது? எதற்கு சுதந்திரம்? இப்படியெல்லாம் அடியும் உதையும் வாங்கி சுதந்திரம் வாங்கி என்ன தான் செய்யப்போகிறார்களாம்? காந்தியும் நேருவும் வெள்ளைக்காரர்கள் மாதிரி இந்த நாட்டை ஆளமுடியுமா? வெள்ளைக்காரன் ரயிலைக் கொண்டு வந்தான், தந்தி கொண்டுவந்தான். சாலைகளையும் பாலங்களையும் கட்டித்தந்தான், அவனை ஏன் போகச் சொல்லவேண்டும்? என்று உபதேசம் செய்த சில பரம தேசபக்தர்களும் அப்போது இருந்தார்கள்.

அப்படிப்பட்ட நிலை இன்று முதன்முறையாக மாறி, யாரைப் பார்த்து இந்த மக்கள் கேலி பேசினார்களோ அந்த காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் அடிபட்டு சிறைபட்டுக் கிடக்கும் நேரத்தில் பொங்கி எழுந்தார்கள்.

இந்திய சுதந்திரப் போர் ‘பிரெஞ்சுப் புரட்சி’யைப் போன்றோ அல்லது ‘ரஷ்யப் புரட்சி’யைப் போன்றோ பலாத்கார வழியில் வரவில்லை. 1942 ஆகஸ்ட் 9-ஆம் தேதி தொடங்கி இந்த புண்ணிய பாரத தேசம் முழுவதும் நடந்த கலவரங்கள், ரத்தம் சிந்தியது இதெல்லாம் ஒரு வெகுஜனப் புரட்சி இல்லையா?

ஆம் ஆகஸ்ட் புரட்சி என்பது காங்கிரஸ் தொண்டர்கள் வழக்கமாகச் செய்யும் அமைதிப் போராட்டமல்ல. மக்கள் களத்தில் இறங்கி தாங்களே முன்னின்று நடத்திய ஒரு யுகப் புரட்சி.

வெள்ளைக்காரர்களுக்கு இந்தப் போராட்டம் தான் புரிந்தது. தங்களால் ஆன மட்டும் இந்தப் புரட்சியைத் தடுத்துவிட எல்லா வழிமுறைகளையும், அடக்குமுறைகளையும் கையாண்டார்கள். புற்றீசல் போல வெகுண்டு எழுந்த இந்திய மக்களின் தேசாவேசத்தை ஆங்கில போலீசாரின் குண்டாந்தடிகளும் துப்பாக்கிகளும் அடக்க முடியவில்லை என்பது இறுதி முடிவு, உலகுக்குப் பறை சாற்றியது.

எங்கெங்கு பார்த்தாலும் ஊர்வலங்கள், கடையடைப்பு, பொதுக்கூட்டங்கள், போலீஸ் அடக்குமுறை. அஞ்சலகங்கள் தீவைக்கப்பட்டு எரிக்கப்பட்டன. தந்தி கம்பிகள் அறுக்கப்பட்டு தொலைதொடர்புகள் துண்டிக்கப்பட்டன. ஆங்காங்கே ரயில் தண்டவாளங்கள் பெயர்க்கப்பட்டன. இதெல்லாம் விளைவுகளை எண்ணி, இது சரியா தவறா என்று சிந்தித்துச் செய்யும் காரியங்களா என்ன? உணர்ச்சிவசப்பட்ட கூட்டத்தின் ஆவேசம் அப்படிப்பட்டது.

காந்திஜியின் நவஜீவன் அச்சகத்தினுள் போலீஸ் நுழைந்து 1933 முதல் வெளியான ‘ஹரிஜன்’ பத்திரிகைகளின் கட்டுகளைக் கைப்பற்றி தீவைத்துக் கொளுத்தினர். அங்கு இருந்த அச்சு அடிக்கும் இயந்திரங்களை அடித்து நொறுக்கினர்.

இந்தச் செய்தி அறிந்த மக்கள் கொதித்துப் போனார்கள். காந்தியடிகள் தீமை செய்தவர்க்கும் நன்மையே செய்யவேண்டும் என்பார். வெறி கொண்ட மக்கள் கூட்டம் இதுமாதிரியான நேரங்களில் பொறுமை காக்குமா என்ன? காந்திஜி சொன்னது சரி தான், ஆனால் இந்த வெள்ளைக்காரர்களுக்கு அவர்கள் பாஷையிலேயே சொன்னால் தானே புரிகிறது? என்றனர் மக்கள்.

அப்போது தேச விடுதலை இயக்கத்தில் இருந்தவர்கள் அனைவருமே அகிம்சாவாதிகள் என்று சொல்வதற்கில்லை. ஆனால் காந்தியடிகள் எனும் பெரும் சக்திக்குக் கட்டுப்பட்டுத் தங்கள் கை, கால்களை கட்டி வைத்திருந்தனர். அப்படிப்பட்டவர்கள் இந்தச் சூழ்நிலையில் கொதித்து எழுந்தபோது, அவர்களது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி, தான் உண்ணாவிரதம் இருப்பேன், வன்முறை கூடாது என்றெல்லாம் சொல்லி அடக்கி வைக்க காந்தி இல்லையே; சிறையில் அல்லவா தவம் செய்து கொண்டிருக்கிறார்? அப்புறம் அமைதி எப்படி வெளியே நிலவும்?

பெயர் சொல்லக்கூடிய எந்தத் தலைவராலும் தொண்டர்களைத் தொடர்பு கொள்ள முடியாமல் எங்கெங்கோ கண்காணாத சிறைகளில் அடைக்கப்பட்டு விட்டனர். இவற்றையெல்லாம் சிறையில் இருந்த காந்தியடிகள் பார்த்தார். 14-8-1942, அதாவது அவர் கைதான ஐந்தாம் நாள் கவர்னர் ஜெனரல் லார்டு லின்லித்கோவுக்கு ஒரு கடிதம் எழுதினார்.

அதில் அவர், “நாங்கள் தீர்மானம் மட்டுமே நிறைவேற்றியிருக்கிறோம். அதை நடைமுறைப்படுத்த என்ன செய்யலாம், எப்போது எப்படி செய்யலாம் என்பதெல்லாம் முடிவாகாத நிலையில் நீங்கள் அவசரப்பட்டு அடக்குமுறையில் இறங்கிவிட்டீர்கள். அப்படியில்லாமல் எங்களுக்குச் சிறிது அவகாசம் கொடுத்திருப்பீர்களானால் இதுபோன்றதொரு நிலைமை வராமல் தடுத்திருக்க முடியும்” என்று சொல்லியிருந்தார்.

காந்திஜி இப்படிச் சொன்ன வழியில் ஆங்கிலேயர்கள் பொறுத்திருந்து நடவடிக்கை எடுத்திருந்தால், இதுபோன்றதொரு கட்டுப்பாடற்ற கலகம் நிகழ்ந்திருக்காது. சுதந்திரமும் வேகமாக வந்திருக்காது என கருதுவோரும் உண்டு.

ஆக, ஒரு வகையில் ஆங்கில அரசின் அவசரமும், ஆத்திரமும், இந்தியர்களை அடக்கி ஆண்டுவிடலாம் என்ற ஆணவமும் அடக்குமுறையும் சுதந்திரத்தை விரைவு படுத்திவிட்டது என்பது தான் உண்மை.

1919-இல் தொடங்கி 1942 வரை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் காந்திஜியின் குரலைக் கேட்டார்கள்; ஜவஹர்லால் நேருவின் குரலைக் கேட்டார்கள்; ராஜாஜி, ஆசாத், படேல், ராஜன் பாபு ஆகியோரின் குரல்களைக் கேட்டார்கள். ஆனால் சாதாரண இந்தியக் குடிமகனின் குரலைக் கேட்டதில்லை. அப்படிக் கேட்கும் வாய்ப்பு அவர்களுக்கு 1942 ஆகஸ்ட்டில் கிடைத்தது.

தவறின் மேல் தவறாக ஆங்கிலேயர்களின் அரசு தில்லியில் செய்துகொண்டிருக்கும் நிலையில் இங்கு நடக்கும் தவறுகளைக் கண்டு உலக மாந்தர்கள் பிரிட்டிஷாரின் நேர்மையைப் பற்றியும், சட்டத்திற்கு உட்பட்ட ஆட்சி பற்றியும் தவறாக எண்ணி விடுவார்களோ எனும் அச்சத்தில் லண்டனில் இருந்த இந்தியா மந்திரி அமெரி என்பார் இங்கிலாந்தின் பி.பி.சி. வானொலி மூலம் ஒரு உரையை ஆற்றினார்.

போதாதற்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமன் பிரிட்டிஷ் அரசுக்கு ஓர் அறிவுரை கூறியிருந்தார். இந்தியர்களை அடக்குமுறைக்கு ஆளாக்கிவைப்பது நல்லதல்ல என்பது அவரது கருத்து. அவரை சமாதானப்படுத்தும் விதமாக அமெரி ஒரு ரேடியோ உரையாற்றினார்.

அந்த உரையில் அவர் சொன்ன விஷயங்கள் தான் விசித்திரமானவை. அவர் சொன்னார்: “காங்கிரஸ் முன்பே திட்டமிட்டிருந்தபடி சதி வேலை, நாச வேலைகளில் ஈடுபடுகின்றனர். அவர்களது திட்டம் பிரிட்டிஷ் அரசின் உளவுத் துறைமூலம் எங்களுக்குக் கிடைத்துவிட்டது. தந்திக் கம்பிகளை அறுப்பது, தொலைபேசிக் கம்பிகளை வெட்டுவது, ரயில் தண்டவாளங்களைப் பெயர்ப்பது, அரசாங்க அலுவலகங்களுக்குத் தீயிடுவது- குறிப்பாக போலீஸ், அஞ்சல் நிலையங்களை தீயிட்டு அழிப்பது போன்ற செயல் திட்டங்கள் அதில் அடங்கியுள்ளன.”

காந்தியடிகளின் ஆதரவும் ஆசியும் இல்லாமலா இத்தனை விஷயங்களும் நடக்கின்றன என்று தன் மேலான கருத்தை வெளியிட்டார்.

அதுவரை இந்திய மக்கள் எப்படிப் போராடுவது, என்னென்ன வேலைகளைச் செய்தால் பிரிட்டிஷ் அரசு முடங்கிப் போகும் என்பதெல்லாம் தெரியாமல் இருந்தவர்களுக்கு, இந்தியா மந்திரி அமெரி பாடம் எடுத்துவிட்டார். ஓகோ! இப்படியெல்லாம் தான் போராட வேண்டுமென்று காந்திஜியே திட்டம் செய்திருக்கிறாரா? இதுவரை தெரியவில்லையே! இந்த இந்தியா மந்திரி அமெரி சொல்லித் தானே இத்தனை விஷயங்களும் தெரிய வருகின்றன. வாருங்கள் அந்த அழிவுகளையெல்லாம் அரங்கேற்றம் செய்துவிடுவோம் என்று இளைஞர்கள் போரில் குதித்துவிட்டார்கள்.

‘சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி’ என்பார்கள். வழிதெரியாமல் திணறிக் கொண்டிருந்த இளைஞர்களுக்கு எப்படிப் போராட வேண்டுமென்ற பாடம் எடுத்துவிட்டார் அமெரி. நல்ல புத்திசாலி!

காந்திஜி இந்திய அரசின் உள்துறை அமைச்சர் சர் ரெஜினால்டு மாக்ஸ்வெல் என்பாருக்குத் தெரிவித்த கருத்து இது தான்- அமைதியாகப் போயிருக்க வேண்டிய இந்தப் போராட்டத்தை திசை திருப்பி வன்முறைக்குத் திருப்பிவிட அரசாங்கமே திட்டமிட்டதோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது என்பது தான்.

1942 ஆகஸ்ட் புரட்சியைப் பற்றி ஐயப்பாடு எழுப்பியவர்களுக்கு இதைப் பற்றிய சரியான விளக்கங்களை நமது எழுத்தாளர்கள் பலர், குறிப்பாக கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி, அகிலன், ரா.சு.நல்லபெருமாள் ஆகியோர் விரிவாக விளக்கங்களைக் கொடுத்திருக்கிறார்கள்.

இதற்கிடையில் மகாத்மாவைக் கடுமையாகப் பின்பற்றும் தேசபக்தர்கள் சிலர் வன்முறையாளர்கள் செய்வது தவறு என்று சுட்டிக்காட்டி அமைதிவழியில் போராடி சிறை சென்றார்கள். அப்படி சிறை சென்றவர்களைக் காட்டிலும் வன்முறை வெறியாட்டம் ஆடி சிறை சென்றவர்களே அதிகம்.

அப்படி நாடு முழுதும் நடந்தவற்றை விவரிக்க இங்கு இடம் போதாது, தமிழ்நாட்டில் நிகழ்ந்த ஓரிரு சம்பவத்தை இங்கு நினைவு படுத்தி ‘ஆகஸ்ட் புரட்சி’யின் வீரியத்தை விளக்க விரும்புகிறேன்.

முதலில் கோயம்புத்தூரில் தொடங்குவோம். அங்கு ஒண்டிப்புதூரை அடுத்த கொக்கக்காளித் தோட்டம் எனுமிடத்தில் 1942 ஆகஸ்ட் 12-ஆம் தேதி இரவு ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் கலந்துகொள்ள நிறையப் பேர் வந்தாலும், கூட்டம் ரகசியம் என்பதால் ஒருசிலர் மட்டுமே கலந்து ஆலோசிக்கப்பட்டனர்.

கோவையில் என்.ஜி.ராமசாமி என்பார் ஒரு தொழிற்சங்கத் தலைவர். அவர் தலைமையில் கோயம்புத்தூர் மாவட்ட பஞ்சாலைத் தொழிலாளர் பலர் அங்கு கூடி விவாதித்தனர். அந்தக் கூட்டத்தில் என்.ஜி.ராமசாமி அன்றைய நிலைமையை தொண்டர்களுக்கு நன்கு விளக்கினார். தலைவர்கள் சிறையில் இருக்கிறார்களா அல்லது வேறு அயல்நாடு எதற்கும் அனுப்பப்பட்டு விட்டார்களா என்பதுகூடத் தெரியாத நிலை என்றார்.

இதற்கிடையில் இந்தியா மந்திரி அமெரி சொல்வது உண்மையானால், அப்படிப்பட்ட போராட்டத்தை நாம் செய்தாக வேண்டும். ஆனால் இது மிகவும் ஆபத்தானது என்றெல்லாம் எச்சரித்தார். பலரும் பலவிதமான கருத்துக்களைச் சொல்லி, போராடலாம் என்றனர்.

கடைசியில் அவரவர்க்கு சரியென்று தோன்றும் வழியில் போராடிக் கொள்ளுங்கள், ஆனால் யாரும் யாரையும் காட்டிக் கொடுக்கக் கூடாது. எத்தனை துன்பங்கள் இழைத்தாலும் ஒரு வார்த்தை கூட மற்றவர்களைக் காட்டிக் கொடுக்கும்படி பேசக் கூடாது என்று எச்சரித்து அனுப்பப்பட்டனர்.

எது எப்படியிருந்தாலும் யாரையும் துன்பப்படுத்துவதோ, கொலை செய்வதோ, தனிமனித சொத்து எதற்கும் சேதம் விளைவிப்பதோ கூடாது என்று சத்தியப் பிரமாணம் செய்துவிட்டுப் பிரிந்தனர்.

மறுநாள் காலை தலைவர் என்.ஜி.ராமசாமி கைது செய்யப்பட்டார். அன்று இரவு அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையிலிருந்து புறப்பட்டு, போத்தனூர் வழியாக வரும் ஒரு வெடிமருந்து ஏற்றிய கூட்ஸ் ரயிலை கவிழ்க்க சிலர் ஒன்று திரண்டனர். போத்தனூர்- சிங்காநல்லூர் இடையில் தண்டவாளங்கள் பெயர்க்கப்பட்டன. இரவு நேரத்தில் வெடிமருந்துகளை ஏற்றிக் கொண்டு வந்த அந்த கூட்ஸ் ரயில் அந்த இடம் வந்ததும் நிலை தடுமாறி பெட்டிகள் கவிழ்ந்தன. பெட்டிகள் உடைந்தன, பொருட்கள் சேதமாயின. இந்தச் செயலைச் செய்தது யார்? போலீசார் குழம்பிப் போயினர். ஆனால் இந்த நிகழ்ச்சி பிரிட்டிஷ் அரசுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கத் தொடங்கியது.

அடுத்ததாக 1942 ஆகஸ்ட் 26ஆம் தேதி இரவு சூலூர் விமான தளம் தீவைத்துக் கொளுத்தப்பட்டது. முன்னர் அமைதியாகச் சென்று மறியல் செய்த கள்ளுக்கடைகள் வாசலில் தொண்டர்கள் அடித்துத் துன்புறுத்தப்பட்டார்கள் அல்லவா, அங்கெல்லாம் அந்த கடைகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. இந்தப் போராட்டத்தை போலீசார் எப்படி எதிர் கொண்டனர் என்பதுதான் முக்கியமானது.

சிறையில் அடைக்கப்பட்ட தொண்டர்களை மலம் தோய்ந்த செருப்பால் அடித்தனர் பொள்ளாச்சி சிறையில். போராடி சிறையில் இருக்கும் தொண்டர்களின் உறவினர்கள் வீடுகளுக்குச் சென்று அங்கு கண்ணில் பட்டவர்களையெல்லாம் தடிகொண்டு தாக்கினர். ஆண்களின் மீசையைக் கையால் பிடித்து இழுத்தும், தீ வைத்துப் பொசுக்கியும் துன்புறுத்தினர். இத்தனை துன்பங்களையும் தாங்கிக் கொண்ட அந்தப் பெயர் தெரியாத தேசபக்தர்களின் பாதங்களைப் பணிந்து போற்றுவோம்.


4. எங்கெங்கு நோக்கினும் பற்றி எரியுது

கோவைப் பகுதியில் நடந்த நிகழ்ச்சிகளை சுருக்கமாகப் பார்த்தோம். இனி தஞ்சை மாவட்டத்தில் நடந்த இரு நிகழ்ச்சிகளைப் பார்ப்போம்.

முதல் நிகழ்ச்சியில், திருவையாறிலுள்ள அரசர் கல்லூரியில் தொடங்கி அங்கிருந்த அரசு அலுவலகங்கள் தீக்கிரையான செய்திகளையும், தொடர்ந்து சீர்காழியில் ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள உப்பனாற்றுப் பாலத்துக்கு வெடிகுண்டு வைத்த வழக்கையும் பார்க்கலாம். முதலில் திருவையாற்று நிகழ்ச்சி.

ஆன்மீகத் துறையில் மட்டுமல்லாது திருவையாறு அரசியலிலும் முன்னணி வகித்திருக்கிறது. இந்திய சுதந்திரப் போர் உச்ச கட்டத்தை அடைந்த 1942 ஆகஸ்ட் புரட்சி எனும் ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தின் போது அன்றைய தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற இரண்டு புரட்சிகளில் ஒன்று திருவையாற்றில் நடந்தது. திருவையாறு நிகழ்ச்சியில் அரசர் கல்லூரி மாணவர்களாயிருந்த சோமசேகர சர்மா, ராம சதாசிவம், ஏ.ஆர்.சண்முகம், கு.ராஜவேலு, கவிஞர் எஸ்.டி.சுந்தரம் போன்றவர்களும், பெரும்பாலும் உள்ளூர் காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொண்டு சிறைத் தண்டனை அனுபவித்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியால் திருவையாறுக்கு அரசியல் வரைபடத்தில் ஒரு நிரந்தர இடத்தைக் கொடுக்கும்படி நேர்ந்தது. அந்த நிகழ்ச்சி பற்றிய தகவல்களை சிறிது பார்க்கலாம்.

திருவையாறு புரட்சி

திருவையாறு நகரத்தில் போலீசுக்கு எதிராக கலகம், கல்லெறி வைபவம், போலீஸ் தடியடி, அதனைத் தொடர்ந்து மக்கள், திருவையாறு தபால் அலுவலகம், முன்சீப் கோர்ட், சார்பதிவாளர் அலுவலகம் ஆகியவற்றில் புகுந்து அடித்து நொறுக்கி, தீ வைத்த சம்பவங்கள் நடைபெற்றன. ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர், இறுதியில் 44 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

நாடு முழுவதிலும் நடக்கும் மக்கள் எதிர்ப்பின் ஒரு பங்காக திருவையாறு நகரத்திலும் மக்கள் கொதிப்படைந்தனர். காந்திஜி கைதான 9-8-1942க்கு மறுநாள் 10-8-1942 அன்று திருவையாற்றிலுள்ள அரசர் கல்லூரி மாணவர்கள் ஓர் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினர். இந்த அரசர் கல்லூரி என்பது மராட்டிய மன்னர்கள் காலத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்த சத்திரங்கள் நிர்வாகத்தால் நடத்தப்பட்டது. இந்த அரசர் கல்லூரி மாணவர்கள் தான் உண்ணாவிரதம் இருந்தனர். உண்ணாவிரதப் போராட்டத்தோடு தலைவர்கள் கைதை எதிர்த்து ஓர் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்தனர். அதற்கு ஆந்திரா பகுதியிலிருந்து இந்தக் கல்லூரியில் சமஸ்கிருதம் படிப்பதற்காக வந்து விடுதியில் தங்கிக் கொண்டிருந்த எஸ்.ஆர்.சோமசேகர சர்மா என்பவர் ஏற்பாடுகளைச் செய்தார்.

அவரோடு கு.ராஜவேலு, பின்னாளில் கவிஞர் எஸ்.டி.சுந்தரம் என்று அழைக்கப்பட்டவர் ஆகியோரும் ஈடுபட்டிருந்தனர். இந்தக் கூட்டத்தில் அரசாங்கத்தின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டம் நடத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கீற்றுப் பந்தல் பிறகு தீப்பிடித்து எரிந்து போயிற்று. இந்த விபத்து பற்றி விசாரணை செய்ய போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கல்லூரிக்கு வந்து விசாரணை செய்தார். இதில் இரண்டு மாணவர்கள் மீது சந்தேகப்பட்டு விசாரணை நடத்தினார். அவர்கள் கவிஞர் சுந்தரம், கோவிந்தராஜன் என்போர். கல்லூரிக்குள் நடந்த இந்த நிகழ்வு, வெளியேயும் பரவும் என்று போலீஸ் எதிர்பார்க்கவில்லை போலிருக்கிறது.

12-8-1942 அன்று மாலை 5 மணிக்கு புஷ்யமண்டபத் துறையில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆவிக்கரை ஆசிரியர் சிதம்பரம் பிள்ளை என்பவரும் முன்னாள் ஆசிரியர் சங்கரய்யர் என்பவரும் பேசினார்கள். இந்தக் கூட்டத்தில் பேசியவர்கள் மிகவும் உணர்ச்சிகரமாகவும், தேசபக்தியைத் தூண்டியும் பேசினர்.

மறுநாள் காலை திருவையாறு கடைத்தெருவில் ஓரிரண்டு கடைகளைத் தவிர மற்ற கடைகள் அனைத்தும் திறக்கப்படவில்லை. விசாரித்ததில் மகாத்மா மற்றும் இதர தலைவர்களின் கைதை எதிர்த்து கடைக்காரர்கள் கடையடைப்பு செய்திருப்பதாக தகவல் கிடைத்தது. அப்போது சுமார் 200 அல்லது 300 பேர் கொண்ட கூட்டம் ஒன்று கூடியது. இதில் பெரும்பாலும் கல்லூரி மாணவர்களே இருந்தார்கள். இந்தக் கூட்டம் அப்படியே கடைத்தெருவுக்குள் நுழைந்து வரத்தொடங்கியது. இந்தச் செய்தி போலீசுக்குப் போயிற்று. உடனே போலீஸ் தாங்கள் பாதுகாப்பளிப்பதாக உறுதி கூறினர்.

கூட்டத்தினரை போலீசார் கலைந்து போய்விடுமாறு கேட்டுக் கொண்டனர், அவர்கள் போகாததால் எச்சரித்தனர். பிறகு மக்கள் கூட்டம் மீது தடியடி நடத்திக் கலைந்து போகச் செய்தனர். ஆனால் கூட்டம் கலைந்து போகாமல் மேலும் வன்முறையில் ஈடுபட்டனர். கற்களை எடுத்து வீசினர். போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன. வன்முறை அதிகரிக்கத் தொடங்கியது. கூட்டத்தின் ஒரு பகுதியினர் அங்கிருந்து மெல்ல நகர்ந்து தபால் ஆபீசுக்குச் சென்று விட்டனர். அங்கு சென்று தபால் ஆபீசின் மீது கற்களை எறிந்து தந்தி ஒயர்களை அறுத்தெறிந்து அறிவிப்பு பலகையையும் உடைத்துத் தெருவில் விட்டெறிந்தனர்.

சுமார் 10 மணிக்கு மக்கள் கூட்டம் மிகப் பெரிதாக ஆனது. 300 அல்லது 400 பேருக்கு மேல் இருந்த கூட்டம் விரைந்து ஊரின் தென்பகுதியில் காவிரி நதியின் தென் கரையில் இருந்த முன்சீப் கோர்ட் வளாகத்தை நோக்கி நகர்ந்தது. கோர்ட் கட்டடத்தில் கூட்டம் கல்லெடுத்து வீசி, கூறையில் பதித்திருந்த கண்ணாடிகளையும், பெயர் பலகையையும் உடைத்தனர்; அங்கிருந்த மேஜை நாற்காலி ஆகியவற்றை உடைத்தனர். ஹாலில் மாட்டப்பட்டிருந்த பிரிட்டிஷ் மன்னரின் போட்டோ உடைத்தெறியப்பட்டது. பீரோக்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சட்டப் புத்தகங்கள் கிழித்து எறியப்பட்டன. இங்க் புட்டிகள் உடைத்தெறியப்பட்டன. டைப் அடிக்கும் மெஷின் உடைக்கப்பட்டு சாலையில் கொண்டு போய் போட்டு நசுக்கப்பட்டு, பின்னர் அருகிலிருந்த காவிரி ஆற்றில் வீசி எறியப்பட்டது. வாசலில் நெருப்பு அணைக்க மணல் கொட்டி வைக்கப்பட்டிருந்த வாளிகள் நசுக்கி தூக்கி எறியப்பட்டன.

கோர்ட் அறை தவிர ஆபீசின் இதர பாகங்களில் இருந்த மேஜை நாற்காலிகளும் உடைக்கப்பட்டன. அங்கிருந்து ஆபீஸ் பணம் சூறையாடப்பட்டது. அலுவலக கேட் உடைக்கப்பட்டு நடு சாலையில் போடப்பட்டு போக்குவரத்தை நிறுத்தினர். இவை அனைத்தும் சுமார் 15 நிமிஷ நேரத்துக்குள் நடந்து முடிந்தன.

கூட்டம் உடனே அங்கிருந்து அடுத்த கட்டடத்தில் இருந்த சப் ரிஜிஸ்திரார் அலுவலகத்துக்குள் நுழைந்தது. அங்கும் கோர்ட்டில் நடந்தது போன்ற அழிவுகளும், உடைத்தலும் நடைபெற்றன. போலீஸ் சம்பவ இடத்துக்கு வந்து கோர்ட் மற்றும் சப் ரிஜிஸ்திரார் அலுவலகக் கட்டடங்களில் நடைபெற்ற வன்முறையைக் கண்டு கூடியிருந்த கூட்டத்தைத் தடிகொண்டு தாக்கி விரட்டலாயினர்.

சம்பவம் நடந்த நாளன்று மாலையிலிருந்தே நூற்றுக் கணக்கானோரை போலீஸ் பிடித்துக் கொண்டு போய் கடைத்தெருவில் நிறுத்தி, அடையாள அணிவகுப்பு நடத்தினர். நூற்றுக் கணக்கானோர் விசாரிக்கப்பட்டு, பிறகு இறுதியில் 44 பேர் மீது பல வழக்குகளைப் பதிவு செய்தனர்.

அரசாங்கத் தரப்பில் மொத்தம் 28 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இதில் முன்சீப், போஸ்ட் மாஸ்டர், சப் ரிஜிஸ்திரார், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆகியோரும் அடங்குவர். இந்த வழக்கு, சம்பவம் நடந்து 6 மாத காலத்துக்குப் பிறகு விசாரணைக்கு ஏற்கப்பட்டு 4-1/2 மாதங்களுக்குப் பிறகு தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இதில் சுமார் 85 பேர் எதிரிகளின் தரப்பில் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். சாட்சிகளில் பெரும்பாலோர் குற்றவாளிகளுக்கு அலிபி இல்லை – அதாவது குற்றம் நடந்த நேரத்தில் அவர்கள் அங்கு இல்லை- என்றே சொன்னார்கள். அவை எதுவுமே ஏற்கப்படவில்லை.

வழக்கு கூடுதல் மாவட்ட நீதிபதி, தஞ்சாவூர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு இந்திய பாதுகாப்புச் சட்டப்படி பதிவானது. வழக்கின் தீர்ப்பில் 4 பேர் விடுதலை யானார்கள். மீதமுள்ள 40 பேருக்குத் தண்டனை. மேற்படியான தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் பெல்லாரியில் உள்ள அலிப்பூர் ஜெயிலுக்கு அனுப்பி ‘C’ வகுப்பில் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

சீர்காழி சதி வழக்கு

தஞ்சை மாவட்டத்தில் திருவையாறுக்கு அடுத்ததாக மிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்காகக் கருதப்படுவது இந்த சீர்காழி சதி வழக்கு.

தொடக்கத்தில் காந்திய வழியில் சாத்வீகப் போராட்டங்களிலேயே ஈடுபட்டு வந்தவர்களை, அப்போது சென்னை மாகாண கவர்னராக இருந்த வெள்ளைக்காரனின் பேச்சு விழித்து எழச்செய்து விட்டது. ரயில்வே அதிகாரிகள் கலந்துகொண்ட மாநாடொன்றில் பேசுகையில் சென்னை கவர்னர் “இந்தியாவின் இதர பகுதிகளில் அரசு அலுவலகங்களிலும், ரயில்வே பாலங்களிலும் வெடிகுண்டுகளை வைத்து நாசவேலைகள் நடைபெற்று வரும்போது, சென்னை மாகாணம் மட்டும் அப்படிப்பட்ட நாச வேலைகள் எதுவும் நடைபெறாமல் அமைதியாகவே இருக்கிறது என்பது சென்னை மாகாணத்துக்குப் பெருமை, ஆகவே இது மகிழ்ச்சியளிக்கும் செய்தி” என்று கூறினார்.

இந்தச் செய்தி எல்லா பத்திரிகைகளிலும் வெளிவந்தது. இதைப் படித்த தேசபக்தர்களுக்கு, கவர்னரின் பேச்சு ஒரு சவாலாக இருந்தது போலும். நம் தேசபக்தியையும், வட இந்திய மக்களைப் போலவே நாமும் காண்பித்தால் என்ன என்ற எண்ணம் அவர்களுக்குத் தோன்றிவிட்டது போலும். சென்னை மாகாணம் முழுவதும் வன்முறை ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் தோன்றலாயின. அந்த வரிசையில் சீர்காழியில் நடைபெற்ற நிகழ்ச்சி பற்றி இப்போது பார்ப்போம்.

அந்த நாளில் மிகப் பிரபலமான பத்திரிகைகளாக விளங்கிய, ஆங்கில ஏடு ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’, தமிழ் நாளேடு ‘தினமணி’ இவற்றின் அதிபராக விளங்கியவர் திரு. ராம்நாத் கோயங்கா. அந்த பத்திரிகைகளில் தினமணியில் பணியாற்றியவரும் பின்னர் அதன் ஆசிரியராகவும் இருந்தவர் மேதை திரு. ஏ.என்.சிவராமன். இவர்களோடு தினமணி என்.ராமரத்தினம் ஆகியோர் ஒன்று கலந்து தமிழ்நாட்டில் முக்கிய பகுதியிலுள்ள ஏதாவதொரு பாலத்துக்கு வெடிவைத்துத் தகர்க்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.

தமிழ்நாட்டில் பல படித்த தேசபக்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்ற வெறியும் ஆத்திரமும் கொண்டனர். எத்தனை தலைவர்கள், அத்தனை பேரும் ‘அஹிம்சை சத்தியம்’ என்று தங்கள் போராட்ட பாதையை வகுத்துக் கொண்டவர்கள். அவர்களைப் பிடித்து எங்கிருக்கிறார்கள் என்றுகூடத் தெரியாமல் சிறையில் அடைத்து வைத்துக் கொடுமை செய்யும் இந்த வெள்ளை அரசுக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று விரும்பினர். இவர்களோடு பாமர மக்களும் சேர்ந்து ஒத்துழைத்தனர்.

அரசாங்கத்துக்கு விரோதமான காரியங்களைச் செய்வதால், தங்கள் உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேரிட்டால் என்ன செய்வது? அதைப் பற்றிய சிந்தனையே அந்த இளைஞர்களுக்கு இல்லை. நம் நாடு, நம் மக்கள், நம் தலைவர்கள், நமக்கு சுதந்திரம், அடக்குமுறையைக் கையாளும் வெள்ளையனுக்கு சரியான பாடம் இதுதான் அவர்கள் மனதில் ஓடிய எண்ண அலைகள். அப்படிப்பட்ட தியாக மனம் படைத்த தஞ்சை மாவட்ட படித்த இளைஞர்கள் சிலர் ஒன்று சேர்ந்து செயல்படத் துடித்துக் கொண்டிருந்தனர்.

ராம்நாத் கோயங்காவுக்கு நாடு முழுவதிலும் நல்ல செல்வாக்கு உண்டு. கோயங்காவும், சிவராமனும் ஆந்திரா, ஒரிசா எல்லையிலுள்ள செல்லூர் எனும் இடத்துக்கு ரகசியமாகச் சென்று அங்கிருந்த மைக்கா சுரங்கத்தில் வெடி வைத்துத் தகர்க்கப் பயன்படுத்தும் டைனமைட் குச்சிகளை சுமார் 200 பவுண்டு வாங்கிக் கொண்டு வந்தனர். இந்த டைனமைட் குச்சிகளைப் பாதுகாப்பாகச் சென்னைக்குக் கொண்டு வந்து, நம்பகமான தொண்டர்கள் மூலம் தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும் அனுப்பி வைத்தனர்.

ஏ.என்.சிவராமன் திருநெல்வேலிக்குப் புறப்பட்டுச் சென்று, அங்கு தகுதியான வீரர்களைப் பார்த்து பொறுப்புகளை ஒப்படைக்கக் கிளம்பினார். தினமணியில் உதவி ஆசிரியராக இருந்த என்.ராமரத்தினம் கும்பகோணம் சென்றார். கும்பகோணம் காங்கிரசில் தலைவராக இருந்தவர் பந்துலு அய்யர். ஏ.என்.சிவராமன் பந்துலு அய்யரின் மூன்றாவது புதல்வரான டி.வி.கணேசன் (இவரும் தினமணியில் உதவி ஆசிரியர்) என்பாரை அழைத்துக் கொண்டு திருக்கருகாவூர் சென்றனர்.

இருவரும் அந்த கிராமத்தில் இரண்டு நாட்கள் தங்கி ஆலோசித்தனர். பிறகு இருவரும் அம்மாபேட்டைக்குச் சென்றனர். அங்கு சில காங்கிரஸ் நண்பர்களைச் சந்தித்து அவர்களோடு ஆலோசனை செய்தனர். அப்படிச் சந்தித்த அவ்வூர் காங்கிரஸ் தொண்டர் ஒருவரிடம் இரண்டு டைனமைட் குச்சிகளைக் கொடுத்துவிட்டுத் திரும்பி வந்தனர்.

அவந்திபுரம் கிட்டு எனும் கிருஷ்ணமூர்த்தி, தினமணி என்.ராமரத்தினம், பந்துலு ஐயரின் மூன்றாவது மகனும் தினமணி உதவி ஆசிரியருமான கணேசன் ஆகியோர் ரகசியமாக ஆலோசனை செய்தனர். இவர்கள் செய்யும் நடவடிக்கையின் காரணமாக பிரிட்டிஷ் அரசு தன் செயல்பட்டை இழந்து தவிக்கும்படியாக இருக்க வேண்டும், அப்படிப்பட்ட திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று ஆலோசித்து, இறுதியாக மாயவரத்துக்கும் சிதம்பரத்துக்கும் இடையில் ரயில் மார்க்கத்தில் ஏதாவதொரு ஆற்றுப் பாலத்திற்கு வெடி வைத்துத் தகர்ப்பது என்று முடிவாகியது.

அது எந்த ஆறு? எந்த பாலம்? யார் செய்வது? போன்றவற்றை அந்தந்த இடத்திற்குப் போய் பார்த்து முடிவு செய்து கொள்ளலாம் என்று தீர்மானித்தனர்.

தெற்கேயிருந்து சென்னைக்குப் போகும் மெயின் லைன் இந்தப் பகுதி வழியாகப் போவதாலும், ஏதாவதொரு முக்கியமான ஆற்று ரயில் பாலம் தகர்க்கப்படுமானால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, அரசாங்கத்துக்கு நெருக்கடி ஏற்படும்.

மூவரும் சீர்காழிக்குச் சென்று அவ்வூரில் ரகுபதி ஐயரின் குமாரனும், துடிப்பும், தேசபக்தியும், வீரமும் ஒருங்கே பெற்ற காங்கிரஸ்காரராக விளங்கிய சுப்பராயனைச் சந்தித்தனர். வந்த அன்பர்கள் சுப்பராயனிடம் தங்கள் திட்டத்தை விளக்கி அதைச் செயல்படுத்தும் விதம் குறித்து விவாதித்தனர். இந்த திட்டத்தை ஏற்றுக் கொண்ட சுப்பராயன், தனது உள்ளூர் நண்பர்களிடமும் இதுபற்றி பேசி, விவாதித்து முடிவு தெரிவிப்பதாகக் கூறினார். தினமணி ராமரத்தினமும், கணேசனும் சென்னை திரும்பிவிட்டனர்.

சீர்காழி ரகுபதி ஐயரின் குமாரரும், பின்னாளில் திருச்சியில் சிம்கோ மீட்டர்ஸ் எனும் நிறுவனத்தை நிறுவி பெரும் புகழோடு விளங்குபவருமான, சுப்பராயன் தனது சீர்காழி நண்பர்களுடன் திட்டம் குறித்து விரிவாக விவாதித்து உப்பனாறு பாலத்தைத் தங்கள் இலக்காகத் தீர்மானித்துக் கொண்டனர்.

நாடு முழுவதும் பாலங்களைத் தகர்க்கும் பணி மும்முரமாக நடந்து வந்ததால், ரயில் பாதைகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இரண்டு மைல் தூரத்திற்கு ஒரு போலீஸ்காரர் வீதம் நிறுத்தப்பட்டிருந்தனர். இந்த குழுவில் உறுதியும் துணிச்சல் மிக்கவர்களாகவும் விளங்கிய இருவர். இவர்கள் இருவரும் திட்டம் உருவானவுடனேயே அதைச் செயல்படுத்தும் வேலைகளில் ஈடுபடலாயினர். இவர்கள் கிட்டத்தட்ட பதினைந்து அல்லது இருபது நாட்கள் வரை தினமும் தொடர்ந்து செய்து ஒரு வழியாக வேலை முடிந்தது.

இதுவரை எந்தவித அபாயமான சூழ்நிலையும் தோன்றாதபடி வேலையைக் கச்சிதமாக செய்து முடித்து விட்டனர். சுவற்றில் போட்ட துளையில் டைனமைட்டைப் பொறுத்தி, அதில் திரியை இணைத்து, அது கீழே உள்ள நீரில் விழுந்து நனைந்து விடாமல் இருக்க திரியோடு ஒரு குடைக்கம்பியை இணைத்துக் கட்டி நீட்டிக் கொண்டிருக்கும்படி வைத்தனர். இப்போது திட்டப்படி எல்லா ஏற்பாடுகளும் தயார். திரியைப் பற்ற வைக்க வேண்டியதுதான், மெயின் லைனில் உள்ள அந்த பாலம் வெடித்துச் சிதற வேண்டியதுதான், வெள்ளை அரசாங்கம் ஆடிப்போகப் போகிறது. இளைஞர்கள் பாலத்தில் வெடிகுண்டுகளை வைத்து, திரிக்கு தீ வைக்க சரியான நேரம் பார்த்துக்கொண்டு, புதர்களுக்கிடையில் மறைந்து கொண்டனர்.

அந்த நேரம் பார்த்து ரயில் தண்டவாளங்களைப் பாதுகாக்கும் போலீஸ் பார்ட்டி அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தது. அப்போது பாலத்தடியில் வைக்கப்பட்டிருந்த குண்டும், அதன் திரி குடைக்கம்பியோடு நீட்டிக் கொண்டிருப்பதையும் பார்த்துவிட்டு உடனடியாக அவற்றை அங்கிருந்து அகற்றி விட்டு உயர் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்து விட்டார்கள். பாலத்துக்கு சேதம் இல்லாவிட்டாலும், இந்த நடவடிக்கை மிகப் பெரிய நிகழ்ச்சியாகச் சித்தரிக்கப்பட்டது.

சுப்பராயன், தினமணி என்.ராமரத்தினம், டி.வி.கணேசன் ஆகியோரையும், கணேசனின் அண்ணன் வி.சேஷு ஐயர், கிருஷ்ணய்யர், ஜே.வெங்கடேஸ்வரன் முதலியவர்களையும் கைது செய்து வழக்கு தொடுத்தனர். சுப்பராயனுக்கு ஐந்து வருஷம் சிறை, வெங்கட்டராமனுக்கும், வெங்கடேசன், சுப்பிரமணியனுக்கு தலா மூன்று ஆண்டு கடுங்காவல் தண்டனையும் வழங்கப்பட்டது. இவர்கள் பெல்லாரியில் அலிப்புரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.


5. மதுரை மாநகரத்தில் பெண்கள் இட்ட தீ!

காந்திஜி பம்பாய் ஆசாத் மைதானத்தில் எழுப்பிய “செய் அல்லது செத்து மடி” எனும் கோஷம் இந்தியாவின் நாலாபுறங்களிலும் எதிரொலிக்கத் தொடங்கியது. திரும்பிய இடங்களில் எல்லாம் போராட்டம்; இதுவரை காந்திய வழியில் நடந்த போர் இப்போது யாருடைய உயிருக்கும் ஆபத்தை விளைவிக்காமல் முக்கியமான தொலைதொடர்பு சாதனங்களை அழித்து ஆளும் ஆங்கிலேய வர்க்கத்துக்கு போர்க்காலத்தில் நெருக்கடி கொடுக்கும் போராக அமைந்திருந்தது.

காந்திஜி தன்னுடைய தீர்மானத்தில் இப்படித்தான் இந்தப் போராட்டம் இருக்கும் என்பதைச் சொல்லவில்லையாயினும், அவருடைய சீடரும் காந்தியவாதியுமான கிஷோரிலால் மஷ்ரூவாலா என்பவர் காந்தியின் ‘ஹரிஜன்’ பத்திரிகையில் எழுதிய வரிகள் இவ்வகை போராட்டத்தைக் கோடிட்டுக் காட்டுவதாக இருந்ததாக சிலர் கருதுகின்றனர். அதனால்தானோ என்னவோ இந்தியா மந்திரி அமெரி, ‘காந்தியே இப்படித் தான் இந்தப் போராட்டம் இருக்கும்’ என்கிற கருத்தை இங்கிலாந்தில் தெரிவித்திருக்கிறார்.

கிஷோரிலால் மஷ்ரூவாலா எழுதியது: “சதிச் செயல்களும்கூட சாத்வீகப் போராட்டத்தில் அடங்கும்; பாலங்களைத் தகர்ப்பது, தபால் தந்தித் தொடர்புகளைத் துண்டிப்பது போன்ற மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தாத செயல்களும் சாத்வீகப் போராட்டத்திற்கு உட்பட்ட செயல்கள்தான்”.

(‘சரித்திரத்தை மாற்றிய சதிவழக்குகள்’ நூலில் சிவலை இளமதி)

இந்தக் கருத்து இந்திய சுதந்திரப் போரின் தன்மை இதுகாறும் இருந்த அகிம்சை நிலைமையிலிருந்து சற்று மாறுபடுகிறதோ என எண்ணத் தோன்றுகிறது. பம்பாய் காங்கிரஸ் மகாநாட்டுக்கு முதல்நாள் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் காந்திஜி சொன்ன கருத்தும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

அதில் ஒருவர் காந்திஜியை, “இந்தத் தடவை நீங்கள் கைதாவீர்களா?” என்று கேட்டதற்கு, அவர் சொன்ன பதில்: “இல்லை, இம்முறை நானாகக் கைதாகும் பிரச்னையே எழவில்லை. அப்படியே கைது செய்யப்பட்டாலும் உண்ணாவிரதப் போராட்டம் போன்ற பழைய முறைகளைக் கையாளுவேனா இல்லையா என்பதையும் இப்போது கூற முடியாது”.

இந்தக் கருத்தோடு காந்திஜி முடித்துக் கொள்ளவில்லை, அவர் அடுத்ததாகச் சொன்ன கருத்தையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. அவர் சொன்னார்: “பிரிட்டிஷ் அரசாங்கம் முன்கூட்டியே என்னைக் கைது செய்தால் நான் கைதான இரண்டு வாரங்களுக்குள்ளேயே நாடு முழுக்க இறுதிப் போராட்டம் தொடங்கிவிடும். அந்தப் போராட்டம் தொடங்கியவுடனேயே பலாத்காரச் செயல்கள் நாடு தழுவிய அளவில் வெடித்தெழும். இம்முறை அப்படிப்பட்ட பலாத்கார புரட்சி ஏற்பட்டால் நான் அதைப் பொருட்படுத்த மாட்டேன்”

(சிவலை இளமதி ‘சரித்திரத்தை மாற்றிய சதி வழக்குகள்’ எனும் நூல் பக்கம் 369).

‘காங்கிரஸ் சரித்திரம்’ எழுதிய காந்திஜிக்கு மிக நெருக்கமான பட்டாபி சீத்தாராமையா என்பார் ஒரு சுற்றறிக்கையை எல்லா மாகாண காங்கிரஸ் தலைவர்களுக்கும் அனுப்பியிருந்தார். அது ‘ஆந்திரா சுற்றறிக்கை’ என்று குறிப்பிடப்படுகிறது. அந்த சுற்றறிக்கையில் கண்ட விஷயங்களும் மேலே குறிப்பிட்ட மஷ்ரூவாலாவின் கருத்தையொட்டியே அமைந்திருந்ததாகத் தெரிகிறது.

இப்படி நாடே அமளிதுமளிபட்டுக் கொண்டிருக்கும்போது தமிழ்நாடு என்ன தனித்தீவா? இங்கும்தான் அந்த அதிர்வலைகள் வீசத் தொடங்கியது.

கோவையில் நடந்தவை, தஞ்சை மாவட்டம் திருவையாறிலும், சீர்காழியிலும் நடந்தவற்றை முந்தைய பகுதியில் பார்த்தோமல்லவா? இப்போது மதுரையைச் சற்று பார்க்கலாம்.

மதுரையில் துப்பாக்கிச்சூடு

மதுரை- ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்திருந்த இடம். அங்கு இதன் தாக்கம் சற்று அதிகமாகத் தான் இருந்திருக்கும் என்பதில் ஒன்றும் வியப்பில்லை. மதுரையில் பிரபலமான காங்கிரஸ்காரர் ஆர்.சிதம்பர பாரதி கைதானார்.

திலகர் சதுக்கம் எனுமிடம் மக்கள் வெள்ளத்தால் சூழ்ந்திருந்தது. அந்தக் கூட்டத்தில் மதுரையின் மாபெரும் தலைவரும், ஆலயப் பிரவேசத்தை முன்னின்று நடத்தியவருமான ஏ.வைத்தியநாதையர் வீரமுழக்கம் செய்து கொண்டிருந்தார். அவர் சொன்னார்:

“எந்தப் போராட்டமாயிருந்தாலும் முன்னணியில் நின்று போராடுகின்ற மதுரை, சுதந்திரத்தை அடைந்தே தீருவோம் என உறுதிகொண்டு போராடும் இந்த இறுதிக்கட்டப் போராட்டத்தில் அனைத்தையும் தியாகம் செய்யத் தயாராகவே இருக்கிறோம்.

இந்தப் போராட்டத்தில் நாம் நிச்சயம் சுதந்திரத்தைப் பெறுவோம்; அல்லது நடக்கும் இந்த வேள்வியில் நம் நல்லுயிர்களை ஆஹூதியாக்கிக் கொள்வோம்”.

-இந்த வரிகளை அவர் குரலை உயர்த்தி உறுதியோடு சொன்னார்.

மக்கள் வெள்ளம் அவரது பேச்சை கரவொலி எழுப்பி அங்கீகரித்தது. அடுத்த நாள் மதுரை முடங்கியது; கடைகள் அடைக்கப்பட்டன; தொழிலாளர்கள் பணிக்குச் செல்லவில்லை. இதற்கு முன்பு இல்லாத வகையில் இம்முறை போராட்டமும் கடையடைப்பும் பூரண வெற்றி. அன்று மதுரை நகரம் முழுவதுமே மக்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. என்ன நடக்கும், என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள அத்தனை ஆர்வம் அவர்களுக்கு.

அன்று மாலை திலகர் சதுக்கத்துக்குள் மக்களை காவல்துறை உள்ளே அனுமதிக்க மறுத்தனர். மக்கள் ஜான்சி பார்க் அருகில் குவிந்தனர். வந்தேமாதரம் செட்டியார் என்பவரும் சீனிவாசவரதன் எனும் காங்கிரஸ் தலைவரும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தினர். மூன்று லாரிகளில் போலீசார் வந்து தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர். ரிசர்வ் போலீசார் மக்களை நோக்கித் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்; சிலர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். இளைஞர்கள் கண்ணில் கண்ட பொருட்களையெல்லாம் தூக்கி வந்து சாலையின் நடுவில் போட்டு போக்குவரத்தை முடக்கினர். மதுரை நகரம் ராணுவத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டது. காங்கிரசார் அனைவரும் பாதுகாப்புக் கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்டு விட்டனர்.

பெண்களின் கர்ஜனை


அந்த ஆண்டு அக்டோபர் 2-இல் காந்தி ஜெயந்தி கொண்டாட காங்கிரஸ் தலைவர்கள் யாருமே இல்லாததால், பெண்கள் மட்டும் கலந்துகொண்ட ஓர் ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. பல பெண்கள் அமைதியாக ‘ரகுபதி ராகவ ராஜாராம்’ பாடலையும் ‘வைஷ்ணவ ஜனதோ’ பாடலையும் பாடிக் கொண்டு காந்திஜியின் உருவப் படத்தை ஏந்திய வண்ணம் சென்று கொண்டிருந்தனர்.

தடை உத்தரவு அமலில் இருப்பதாகச் சொல்லி அந்தப் பெண்களை சர்க்கிள் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் நாயர் என்பார் கைது செய்தார். அவர்களில் சொர்ணம்மாள் என்பாரும், மதுரையில் வசித்து வந்த லட்சுமி பாய் எனும் மராத்தியப் பெண்ணையும் வேறு சிலரையும் கைது செய்து போலீஸ் வண்டியில் ஏற்றிக் கொண்டு போய் எட்டு கி.மீ. தூரத்தில் உள்ள அழகர்கோயில் சாலையில் ஒரு அடர்ந்த காட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டார்கள்.

அவர்களுடைய புடவைகளை போலீசார் கழற்றி விட்டு, ‘இதுதான் உங்களுக்குச் சுதந்திரப் பாதை’ என்று சொல்லி விரட்டிவிட்டனர். இரவு முழுக்க துணியில்லாமல் தவித்த அந்தப் பெண்களின் கூக்குரலைக் கேட்டு அக்கம் பக்கத்து கிராமப் பெண்கள் ஓடிவந்து இவர்கள் மானத்தைக் காக்க புடவைகளைக் கொடுத்து அணிந்து கொள்ளச் செய்தனர்.

மறுநாள் காலை அத்தனை பெண்களும் மதுரை நகருக்குள் வந்ததும், தங்களுக்கு நடந்த அவமானத்தைச் சொல்லி அரற்றினர். இதனைக் கேட்ட தேசபக்தர்களும், அவர்களில் குறிப்பாக இளைஞர்களும், பெண்களும் கண்ணீர்விட்டுக் கதறினர். இந்தக் கொடுமையைச் செய்த அந்த சர்க்கிள் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் நாயருக்குச் சரியான தண்டனை அளிக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்த விஸ்வநாதன் நாயருக்கு ‘தீச்சட்டி கோவிந்தன்’ எனும் பெயரை அவ்வூர் மக்கள் சூட்டியிருந்தனர். காரணம் அப்போதெல்லாம் அங்குள்ள சுடுகாடுகளில் சூதாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்குமாம். அந்த சூதாடிகளைப் பிடிப்பதற்காக போலீஸ் குழு ஒருவரை பாடையில் கிடத்தி, இவர் கையில் தீச்சட்டியை ஏந்தி அங்கு பிணம் எரிக்க வந்தவர்கள் போல நாடகமாடி அவர்களைப் பிடிப்பாராம். அந்த விஸ்வநாதன் நாயரின் நடவடிக்கைகளை சில இளைஞர்கள் கூர்ந்து கவனித்து வந்தனர்.

ஒருநாள் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து நாயர் வெளியே வந்தார். வெளியில் மக்கள் நடமாட்டம் அதிகமாயிருந்தது. திடீரென்று விஸ்வநாதன் நாயரை சில இளைஞர்கள் சூழ்ந்து கொண்டார்கள். ‘விஸ்வநாதன் நாயரே, எங்கள் சகோதரிகளை அவமானப் படுத்திய உன்னை சும்மா விட மாட்டோம்” என்று சத்தமிட்டுக் கொண்டு அவர் மீது அக்னி திராவகத்தை ஊற்றினார்கள். அவர் முகம், தலை, காது இவை திராவகத்தால் வழிக்கப்பட்டு, கதறக் கதற அவரை விட்டு விட்டுப் போய்விட்டார்கள்.

இந்தச் செயலை செய்தவர்கள் யார் என்பது தெரியவில்லை. பின்னர் சிலரைப் பிடித்து அவர்கள் மீது வழக்கு போட்டு மதுரை நீதிமன்றத்தில் கொண்டுபோய் நிறுத்தினார்கள். அந்த வீரர்களின் பெயர்கள் கே.பி.ராஜகோபால், டி.ராமகிருஷ்ணன் போன்ற சிலர். இவ்விரு வீரர்களுக்கும் தலா 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

இதில் கொடுமை என்னவென்றால், அந்த சர்க்கிள் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் நாயர் இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னும் போலீஸ் பணியில் மாவட்ட சூப்பிரண்டண்டாக இருந்திருக்கிறார். காங்கிரஸ் அரசு காமராஜ் தலைமையில் இருந்தபோதும் அவர் பதவியில் இருந்திருக்கிறார். ஆனால் பழைய நிகழ்ச்சிக்காக அவர் பழிவாங்கப்படவில்லை என்பது அன்றைய தலைவர்களின் பெருந்தன்மையைக் காட்டுகிறது.

மகாத்மா காந்திஜி உட்பட எந்த காங்கிரஸ் தலைவரும் வெளியில் இல்லாத நேரத்தில் நாட்டில் நடந்த வன்முறை வெறியாட்ட நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக தந்திக் கம்பியை அறுத்தல், தண்டவாளங்களைப் பெயர்த்தல், அரசாங்க அலுவலகங்களை எரித்தல் போன்றவை எப்படி நடக்க முடியும்? இதன் பின்னணி என்ன எனும் ஐயப்பாடு எழத்தானே செய்யும்?

ஒரு இடத்தில் நடக்கும் செயல்களைப் பார்த்து மற்ற இடங்களிலும் செய்திருப்பார்கள் என்று கருதலாம் என்றால், ஒரே நாளில் அல்லது அடுத்தடுத்த நாளில் அல்லவா நடந்தது. தொலைதொடர்பு இப்போது போல இல்லாத நேரம், மேலும் தொலைதொடர்புகள் துண்டிக்கப்பட்டிருக்கிற நேரம். அப்படியிருந்தும் நாடு முழுவதும் ஒரேமாதிரியிலான போராட்டம் நடந்து கொண்டிருந்தது என்பது வியப்பானது தான். மக்கள் ஒரு இறுதிப் போருக்குத் தயாராக இருந்திருக்கிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

ஆகஸ்ட் புரட்சி தீர்மானத்தின் சில பகுதிகளை இந்த கட்டத்தில் படித்துப் பார்ப்போம். அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பது மிக முக்கியமல்லவா?இதோ:

“… வருகின்ற போராட்டத்தில் அகிம்சைதான் இயக்கத்தின் அடிப்படைக் கோட்பாடு என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். தலைமை உத்தரவுகளைப் பிறப்பிப்பதும், அவை மாகாண கமிட்டிகளை அடைவதும், மாகாண கமிட்டிகளின் மூலம் அந்த உத்தரவுகள் மக்களைச் சென்றடைவதும், காங்கிரஸ் கமிட்டிகள் முறையாகச் செயல்படுவதும் சாத்தியமில்லாமல் போகக்கூடிய காலம் ஒன்று உருவாகலாம்.”

“அப்படிப்பட்ட நிலைமை தோன்றுமானால், அப்போது இந்த இயக்கத்தில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு ஆணும், பெண்ணும் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ள கட்டளைகளின் அடிப்படையில் அவற்றின் வரம்புக்கு உட்பட்டே நடந்து கொள்ள வேண்டும்.”

“சுதந்திரத்தை விரும்பி அதைப் பெறுவதற்காகப் பாடுபடும் ஒவ்வொரு இந்தியரும் தமக்குத் தாமே வழிகாட்டியாக மாறி, ஓய்வு கொள்ள இடமே அற்ற கரடுமுரடான பாதையில் இறுதி லட்சியமான இந்திய சுதந்திரத்திற்கும், விமோசனத்திற்கும் இட்டுச் செல்லும் பாதையில் பயணம் செய்யவும் மேலும் மேலும் முன்னேறவும் தமக்குத் தாமே உத்வேகமூட்டிக் கொள்ள வேண்டும்.”

-இதுதான் ஆகஸ்ட் போராட்டம் பற்றிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அதிகாரப்பூர்வமான தீர்மான வாசகங்களின் சாரமாகும்.

இதில் சொல்லப்படும் முக்கிய கருத்து ‘காங்கிரஸ் கட்சி தடை செய்யப்படுமானால், காங்கிரஸ்காரர் ஒவ்வொருவரும் தமக்குத் தாமே வழிகாட்டியாகி முடிவுகளை எடுத்துச் செயல்பட வேண்டும்’. இந்த வாசகங்களிலிருந்து ஒவ்வொருவரும் ஊகித்துக் கொள்ள வேண்டிய செய்திகள் ஏராளம். அதன் விளைவுகள் தான் நாட்டில் பிரிட்டிஷாருக்கு எதிரான கடுமையான இறுதிப் போராட்டம்.


மதுரையை அடுத்து வேறு பல இடங்களிலும் நடந்த வரலாற்றுச் செய்திகளைத் தொடர்ந்து அடுத்தடுத்த பகுதிகளில் பார்க்கலாம்.


6. குலசேகரப்பட்டினமும் ‘தூக்குமேடை’யும்


1942 ஆகஸ்ட் புரட்சியை தலைமையேற்று நடத்த காங்கிரசின் தலைமையில் யாருமே வெளியில் இல்லை; அனைவருமே சிறையில் அடைபட்டுவிட்டனர் என்றால், இதை பின் யார் தான் வழிநடத்தியிருக்க முடியும்?

காங்கிரஸ் தீர்மானத்தில் காணப்படுவதைப் போல அவரவர் தனக்குத் தானே தலைவராக ஆகியிருந்தால் ஒரேமாதிரியான போராட்டம் நாடு முழுவதும் எப்படி நடந்திருக்க முடியும்?

யாருமே சிந்திக்க வேண்டிய செய்தியல்லவா இது. ஆம்! சில தலைவர்கள் இருந்தார்கள். இந்த ஆகஸ்ட் புரட்சிக்குத் தலைமை வகித்தார்கள். வரலாற்று நாயகர்களான அவர்கள் யார் தெரியுமா?

இரண்டாம் ஜனநாயகப் புரட்சி செய்த ஜெயபிரகாஷ் நாராயண், ராம் மனோகர் லோகியா, அருணா ஆசப் அலி, அசோக் மேத்தா, அச்சுத் பட்டவர்தன் முதலான தேசபக்தர்களே அவர்கள்! அவர்களுடைய நினைவுக்கு அஞ்சலி செலுத்துவது நம் கடமை.

வட இந்தியத் தலைவர்கள் மனதில் தமிழ்நாடு எப்போதுமே எல்லா விஷயங்களிலும் பிந்தங்கிய பகுதி என்பது எண்ணம். ஆனால் முதல் சுதந்திர முழக்கமிட்ட பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன், நெல்கட்டான்சேவல் பூலித்தேவன், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை, மகாகவி பாரதி, செங்கோட்டை வாஞ்சிநாதன் போன்ற பலர் தோன்றிய தென் தமிழ்நாடு எதிலும் பின் தங்கியதில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், ஆகஸ்ட் போராட்டத்திலும் தங்கள் வீரமுழக்கத்தை உரக்க எழுப்பினர்.

மற்றவர்களைப் போல தாங்களும் நடந்து கொண்டால் தங்களுடைய வரலாற்றுக்கு என்ன பெருமை? ஆகவே அவர்கள் ‘திருநெல்வேலி மாவட்டத்தை மட்டுமாவது சுதந்திர பிரதேசம்’ என்று பிரகடனப்படுத்திவிட வேண்டுமென்று விரும்பினார்கள்.

குரும்பூர் சதி வழக்கு

நெல்லை தேசபக்தர்கள் ஓரிடத்தில் கூடினார்கள். கே.டி.கோசல்ராம், பி.எஸ்.ராஜகோபாலன், டி.வி.காசிராஜன், மங்களா பொன்னம்பலம், ஏ.எஸ்.பெஞ்சமின், எம்.எஸ்.செல்வராஜன், சுந்தரலிங்கம், தங்கவேல், நாராயணன், ஆர்.செல்லத்துரை ஆகியோர் சேர்ந்து ‘சுதந்திர சேனை’ எனும் ஒரு படையை உருவாக்கினார்கள். தேசபக்த இளைஞர்கள் பலரும் விரும்பி இதில் சேர்ந்தனர்.

1942 ஆகஸ்ட் 9-ஆம் தேதி ஆறுமுகநேரியில் ஒரு பள்ளிக்கூடத்தில் இவர்கள் கூடினார்கள். ஏராளமான மக்கள் அதில் பங்கு கொண்டார்கள். அதில் முதல்நாள் பம்பாயில் நிறைவேறிய காங்கிரஸ் தீர்மானத்தை தலைவர்கள் விளக்கிச் சொன்னார்கள். பின்னர் கே.டி.கோசல்ராம் ஒரு அறிவிப்பினைச் செய்தார்.

ஆகஸ்ட் 12-ஆம் தேதியன்று ஆறுமுகநேரி சந்தைத் திடலில் ஆயிரக் கணக்கான மக்கள் கூட வேண்டும். அப்போது நாம் என்ன செய்ய வேண்டுமென்பதை அப்போது தெரிவிக்கப்படும். மக்கள் ஏகோபித்து தங்கள் ஆதரவைத் தெரிவித்துவிட்டனர்.

முடிவுசெய்தபடி ஆகஸ்ட் 12-ஆம் தேதி திடல் நிரம்பி வழிந்தது. அவர்கள் மத்தியில் சில தலைவர்கள் பேசிவிட்டு அனைவரும் புறப்பட்டு உப்பளம் நோக்கிச் சென்றார்கள். உப்பளத்தில் தொண்டர்கள் ஆயிரக் கணக்கில் கூட அங்கு வேலைகள் நின்றுபோயின. உடனே போலீசார் அத்தனை தொண்டர்களையும் கைது செய்து திருச்செந்தூர் சப்ஜெயிலுக்குக் கொண்டு சென்று அடைத்தனர். அங்கு அவர்கள் போலீசாரால் துன்புறுத்தப் பட்டனர். எந்தவித குற்றச்சாட்டும் பதிவு செய்யாமல் 15 நாட்கள் ரிமாண்டுக்குப் பிறகு அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

விடுதலையான தொண்டர்கள் அனைவரும் மீண்டும் போலீசார் கையில் அகப்படாமல் கிராமம் கிராமமாகச் செல்லத் தொடங்கினர். வழியில் குரும்பூர் ரயில் நிலையம் இருந்தது. அதை வசப்படுத்திக் கொண்ட தொண்டர்கள் நிலைய அதிகாரியைத் துரத்திவிட்டனர்.

சாத்தாங்குளம் எனும் ஊருக்குச் சென்று அங்கிருந்த போலீஸ் நிலையத்தைப் பிடித்துக் கொண்டு அங்கிருந்த துப்பாக்கிகளைப் பறித்துக் கொண்டனர். காவல் நிலையத்தை ஆக்கிரமித்துக் கொண்ட செய்தி வெளிவராமலிருக்க தந்திக் கம்பிகளை அறுத்துவிட்டனர். எனினும் தகவல் கிடைத்து திருநெல்வேலியிலிருந்து மலபார் போலீஸ், தொண்டர்களைப் பிடிக்க வந்து சேர்ந்தது.

இதன் தலைவர்களைக் கண்ட இடத்தில் சுட்டுவிடும்படி கலெக்டர் உத்தரவு பிறப்பித்து விட்டார். இவர்கள் இப்படி பல நாட்கள் தலைமறைவாகச் சுற்றித் திரிந்துவிட்டு செப்டம்பர் மாதம் 29-ஆம் தேதி குலசேகரப்பட்டினம் உப்பளத்தில் கூடினர்.

அங்கு இவர்களைச் சுற்றிவளைத்த போலீசாரை தொண்டர்கள் பிடித்துக் கட்டிப் போட்டுவிட்டு அவர்களிடமிருந்து துப்பாக்கிகளைப் பிடுங்கிக் கொண்டனர்.

உப்பளத்திலிருந்து கூட்டமாக இவர்கள் ஊருக்குள் மறுநாள் விடியற்காலை இருள் பிரியாத நேரத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த முசாபரி பங்களா எனும் அதிகாரிகள் ஓய்வெடுத்துத் தங்கும் விடுதியில் லோன் எனும் ஆங்கிலேய போலீஸ் அதிகாரி மது அருந்திய போதையில், கையில் தன் ரிவால்வரை ஏந்திக் கொண்டு கூட்டத்தை நோக்கி வந்தான்.

தேசபக்தர்கள் கூட்டம் கூட்டமாக வருவதைப் பார்த்து அவனுக்குக் கோபம் தலைக்கேறியது. இவர்களை ஆங்கிலத்தில் கண்டபடி திட்டிக் கொண்டே துப்பாக்கியை அவர்களை நோக்கிச் சுட முயற்சி செய்தான். தொண்டர் ஒருவரின் மார்பில் அவன் ரிவால்வர் பதிந்தது.

எங்கே அவன் தொண்டரைச் சுட்டுவிடுவானோ என்ற அச்சத்தில் கூட்டத்தில் இருந்த தொண்டர் ஒருவர் தன் கையில் வைத்திருந்த வேல் கம்பை அந்த லோனின் மார்பில் செலுத்திவிட்டார். கூட இருந்தவர்களும் ஆளாளுக்குத் தங்கள் கையில் வைத்திருந்த ஆயுதத்தால் அவனைப் போட்டுத் தள்ளிவிட்டனர். அவன் உடலில் மொத்தம் 64 வெட்டுக் காயங்கள் இருந்ததாக பின்னால் போஸ்ட்மார்ட்டம் அறிக்கை கூறியது. அங்கேயே அலறி வீழ்ந்து லோன் இறந்து போனான்.

அன்று காலை அந்தப் பகுதி முழுவதும் ஒரே பரபரப்பு. இந்தக் கொலை பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்திவிட்டது. இவர்கள் பக்கத்து நியாயத்தை ஆங்கிலேயர்கள் அரசு உணர்ந்து கொள்ளவா போகிறது? லோன் துரையைக் கொன்ற குற்றத்துக்காக தூக்கு தண்டனை விதித்துவிடப் போகிறார்கள். இவர்கள் கையில் மாட்டாமல் எல்லோரும் தலைமறைவாகி விட்டனர்.

போலீஸ், காங்கிரஸ் தலைவர்கள் மீதும், தொண்டர்கள் மீதும் பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்தது. உப்பளத்தில் கூடி சதி செய்தது, குரும்பூர் ரயில் நிலையத்தைக் கைப்பற்றியது, தபால் நிலையம் எரிப்பு, தந்திக் கம்பிகள் அறுப்பு போன்ற பல குற்றச்சாட்டுகளோடு ‘குரும்பூர் சதி வழக்கு’ எனும் பெயரில் பதிவு செய்யப்பட்டது.

குலசேகரப்பட்டினம் கலவர வழக்கு

லோன் துரையின் கொலை சம்பந்தமாகத் தனியாக ‘குலசேகரப்பட்டினம் கலவர வழக்கு’ எனும் பெயரில் வேறொரு வழக்கு தொடுக்கப்பட்டது. முன்னதில் 500-க்கும் மேற்பட்ட தொண்டர்களும் தலைவர்களும் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர். லோன் கொலை வழக்கில் 64 தேசபக்தர்கள் மீது வழக்கு தொடர்ந்தனர், அதில் 61 பேர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது. முக்கியமான எதிரிகளாகச் சேர்க்கப்பட்டவர்கள் காசிராஜன், ராஜகோபாலன், பெஞ்சமின், மங்களபொன்னம்பலம், தங்கவேல் நாடார், சுந்தரலிங்கம் முதலான 26 பேர்.

இந்த வழக்கு, சிறப்பு அதிகாரங்கள் படைத்த தனி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதியாக இருந்தவர் டி.வி.பாலகிருஷ்ண ஐயர், ஐ.சி.எஸ். என்பார். குற்றவாளிகளின் சார்பாக டேனியல் தாமஸ், சிவசுப்பிரமணிய நாடார் முதலான ஐந்து வழக்கறிஞர்கள் ஆஜராயினர். 1942 அக்டோபர் மாதத்தில் தொடங்கிய இந்த வழக்கு 1943 பிப்ரவரி 6-ஆம் தேதி முடிவடைந்தது. பிப்ரவரி 8-ஆம் தேதி தீர்ப்பு வந்தது. குற்றவாளிகளாக நின்றவர்களுக்கு நீதிபதி டி.வி.பாலகிருஷ்ண ஐயர் மிகமிகக் கடுமையான தண்டனைகளை அறிவித்தார்:

1) குலசேகரப்பட்டினம் சதிவழக்கில் காசிராஜனுக்கும், ராஜகோபாலனுக்கும் தூக்கு தண்டனை. அது தவிர மூன்று ஜன்ம தண்டனையும் (மொத்தம் 60 ஆண்டுகால சிறை) 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்தார். அதாவது தூக்கு தவிர 74 ஆண்டுகால சிறைவாசம்.

2) ஏ.எஸ்.பெஞ்சமினுக்கு மொத்தம் 100 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை.

3) செல்லத்துரை, சுந்தரலிங்கம், தங்கவேல் நாடார் ஆகியோருக்கு ஜன்ம தண்டனை. ஏனையோருக்கு 5 முதல் 12 ஆண்டுகால சிறை தண்டனை.

-தீர்ப்பை வாசித்து முடித்து நிமிர்ந்தார் டி.வி.பாலகிருஷ்ண ஐயர், ஐ.சி.எஸ். அப்போது சிரித்துக் கொண்டே காசிராஜனும், ராஜகோபாலனும் நீதிபதியைப் பார்த்துக் கேட்டனர்: “ஐயா, நீதிபதி அவர்களே! எங்களுக்கு இருப்பதோ ஒரேயொரு ஜென்மம்தான். தாங்கள் அதைப் பறிக்கத் தூக்கு தண்டனை விதித்திருக்கிறீர்கள். மிக்க நன்றி. அதற்கு மேல் மூன்று ஜென்ம தண்டனை விதித்திருக்கிறீர்களே, அதை நாங்கள் எப்போது அனுபவிக்க வேண்டும்? தூக்கு தண்டனை நிறைவேறிய பிறகா, அல்லது முன்பா?”

தீர்ப்பைக் கேட்டு திடுக்கிட்டு நின்றிருந்த மக்கட்கூட்டம் இப்படி இவர்கள் கேட்டதும், கொல்லென்று சிரித்து நீதிமன்ற அறையே அல்லோலப் பட்டுவிட்டது. நீதிபதி பாலகிருஷ்ண ஐயர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. அப்போது இன்னொரு குற்றவாளி சொன்னார்: “இது தெரியாதா? இனி எத்தனை ஜென்மங்கள் உண்டோ அத்தனை ஜென்மங்களிலும் நீதிபதி ஐயா விதித்த மூன்று ஜென்ம தண்டனைகளை வரிசையாக அனுபவித்தே தீர வேண்டும். இல்லாவிட்டால் விட மாட்டார்” என்றார். மறுபடியும் ஒரே சிரிப்பு. அழுது துன்பப்பட்டு வருந்த வேண்டிய மக்கட்கூட்டம் இந்த எகத்தாள விமர்சனங்களைக் கேட்டு சிரித்து மகிழ்ந்தது.

தூக்கு தண்டனை பெற்ற காசிராஜனும் ராஜகோபாலனும் மதுரை சிறைக்குக் கொண்டு சென்றனர். இவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனையைக் கேட்டு ஆத்திரமடைந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், மதுரை சிறையை உடைத்து அவர்களை வெளிக் கொணர்வேன் என்று ஆத்திரப்பட்டார். அவர் சொன்னதைச் செய்துவிடுவார் என்பதை உணர்ந்து போலீஸ் அவர்களை அலிப்புரம் ஜெயிலுக்குக் கொண்டு சென்றுவிட்டனர்.

தூக்கு தண்டனை கைதிகளான காசிராஜன், ராஜகோபாலன் ஆகியோர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதற்காக அவர்கள் சென்னை சிறைக்குக் கொண்டு வரப்பட்டனர். அப்போது ராஜகோபாலன் கழுத்தில் ஒரு கட்டிக்கு வைத்தியம் செய்து கொள்ளவும், காசிராஜனின் காசநோய்க்கு சிகிச்சை பெறவும் இருவரும் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அந்தச் சமயம் காந்திஜி சென்னைக்கு வருகை புரிந்தார். ராஜாஜி கேட்டுக் கொண்டதன் பேரில் காந்திஜி மருத்துவமனைக்குச் சென்று இவ்விருவரையும் பார்த்து ஆறுதல் கூறினார். அப்போது காசிராஜன், ராஜகோபாலன் ஆகியோர் இருபது வயது நிரம்பிய இளைஞர்கள். இந்த இளம் வயதில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இவர்கள் மீது மக்களுக்கு அனுதாபம் ஏற்பட்டது.

தமிழ்நாட்டுப் பத்திரிகைகள் பலவும் இவர்கள் நிலைமையை விளக்கி எழுதி, இவர்களுக்கு ஆதரவாக கருத்தினை உருவாக்கினார்கள். மாகாணத்தின் பல இடங்களிலும் இவர்களை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. மக்கள் ஆயிரக் கணக்கில் கையெழுத்திட்டு மனுக்களை அரசாங்கத்துக்கு அனுப்பிய வண்ணம் இருந்தனர். ராஜாஜி என்ன பாடுபட்டேனும் இவ்விருவரின் விடுதலைக்குப் பாடுபடுவதென்று உறுதி பூண்டிருந்தார்.

இவ்விருவரின் அப்பீல் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. தொடர்ந்து ரிவிஷன் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதுவும் தள்ளுபடியானது. வழக்கு தில்லி உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றது. அங்கும் இவர்கள் மேல்முறையீடு தள்ளுபடி செய்து தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது.

இறுதி முயற்சியாக லண்டனில் உள்ள பிரிவி கவுன்சிலுக்கு அப்பீல் செய்யப்பட்டது. அங்கு திறமையான வழக்கறிஞர் ஒருவரை ராஜாஜி ஏற்பாடு செய்து கொடுத்தார். வழக்கு லண்டனில் நடந்தது. அந்த கோர்ட்டில் இருந்த ஆங்கிலேய நீதிபதிகளுக்குத் தங்கள் இனத்தான் லோனைக் கொன்ற இந்த இந்தியர்களிடம் கருணை காட்ட விருப்பம் இல்லை. அவர்களும் தூக்கு தண்டனையை உறுதி செய்தனர்.

இவ்வளவும் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் இந்திய அரசியல் வானில் சில மாற்றங்கள் உருவாகிக் கொண்டிருந்தன. இந்திய சுதந்திரம் கீழ்வானில் உதயமாகிக் கொண்டிருப்பதை எல்லாத் தரப்பினரும் உணரத் தலைப்பட்டனர். இவ்விருவர் சார்பில் அவர்களின் உறவினர்கள் வைஸ்ராய்க்கு கருணை மனுவொன்றை அனுப்பி வைத்தனர். இதற்காக ராஜாஜி வைஸ்ராயைச் சந்தித்து இவ்விரு இளைஞர்களுக்கும் கருணை காட்டவேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார். கருணை உள்ளம் கொண்டு வைஸ்ராய் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க ஒப்புக் கொண்டார்.

இந்த விஷயத்தில் ராஜாஜி காட்டிய அக்கறை போற்றி வணங்கத் தக்கது. இதைப் போல பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோருக்கும் நடந்திருந்தால் மகிழ்ச்சி அடைந்திருக்கலாம். என்ன செய்வது?

அதற்குள் இந்தியாவில் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன. 1946-ஆம் ஆண்டில் நடந்த மத்திய சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நடந்த தேர்தலில் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. ஆந்திரகேசரி டி.பிரகாசம் மாகாண முதன்மை மந்திரியாக பதவியேற்றார். அந்தப் பெருந்தகை பதவியேற்றதும் செய்த முதல் வேலை, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளப் பகுதிகளைச் சேர்ந்த அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டது தான்.

இந்த சந்தர்ப்பத்தில் திருவையாறு வழக்கு, சீர்காழி வழக்கு, கோவை வழக்கு ஆகியவற்றால் சிறையில் கிடந்துழன்ற பல தேசபக்தர்கள் விடுதலையானார்கள். இத்தனை களேபரத்துக்கு இடையில் மங்களா பொன்னம்பலம் எனும் இளைஞர் மட்டும் முதலில் இருந்தே போலீசாரிடம் அகப்படாமல் தலைமறைவாகவே இருந்தார் என்பதைக் குறிப்பிட வேண்டும்.

தூக்கு தண்டனையிலிருந்து தப்பிய ராஜகோபாலனுடைய பெயர் அதன்பின் ‘தூக்குமேடை ராஜகோபாலன்’ என்றே அழைக்கப்படலாயிற்று. தண்டனை அறிவித்த பின்னர் அவர் அத்தனை மனத்திண்மையோடு நீதிபதியைப் பார்த்து கேட்ட கேள்வியை இன்று நினைத்தாலும் பெருமையாக இருக்கிறது.

தேசபக்தி எனும் உணர்வு வேறு எதையும் காட்டிலும் வலிமையானது, உயர்வானது என்பதை உணர முடிகிறது. அந்த தேசபக்தச் சிங்கங்களை நம் மனத்தால் வணங்கி மகிழ்வோம்!


7. தேவகோட்டை தேசபக்தர்கள் கோட்டையாயிற்று!

“போராட்டம்! போராட்டம்! முடிவில்லாத போராட்டம். இதுவே பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு நமது பதிலாகும்” (Struggle! Struggle! Eternal struggle. This is my reply to the British Imperialism).

-இது ஜவஹர்லால் நேரு 1942 பம்பாய் காங்கிரசில் உதிர்த்த எழுச்சி உரையாகும். அங்கு தன்னுடைய உரையில் ஜவஹர்லால் நேரு சொன்ன கருத்து:

“இந்தியாவின் தன்மானம் பேரம் பேசப்படும் பொருள் அல்ல. இந்திய சுதந்திரத்தை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்து பேரம் பேசி வாங்க முடியும் என நம்மில் எவரும் கருதத் தேவையில்லை. போராட்டம், ஆம்! போராட்டம், அது ஒன்று தான் நமக்குச் சுதந்திரத்தை வாங்கித் தரமுடியும்”

-இப்படிச் சொன்னார் ஜவஹர்.

‘க்விட் இந்தியா’ தீர்மானமும் அதன் விளைவாக தலைவர்கள் கைதும் நாட்டைப் புரட்டிப் போட்டுவிட்டது. நாடு முழுவதுமே போராட்டக் களமாயின. தமிழகத்தில் ஆகஸ்ட் புரட்சியில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராமநாதபுரம் மாவட்டமும் ஒன்று. அதிலும் திருவாடனை, தேவகோட்டை ஆகிய இடங்கள் போராட்டத்தில் முனைப்போடு இருந்தன.

தேவகோட்டை தனவணிகர்களான நகரத்தார் வாழும் பகுதியல்லவா? அமைதியும், தங்கள் தொழிலில் அக்கறையும் கொண்டவர்கள் போர்க் குணமுடையவர்களாக மாறிய நிகழ்ச்சி நம் கவனத்தை ஈர்க்கத் தான் செய்யும்.

நகரத்தார் அதிகம் வசிக்கும் தேவகோட்டையின் அப்போதைய மக்கட்தொகை முப்பதாயிரம் இருக்கலாம். அந்த தேவகோட்டையில் நடந்த இந்த ஆகஸ்ட் புரட்சி விவரங்களை இப்போது பார்க்கலாம்.

தேவகோட்டை சிறை உடைப்பு

தேவகோட்டை சின்ன அண்ணாமலை ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். அவருக்காக இருபதாயிரம் மக்கள் ஒன்று சேர்ந்து 1942 ஆகஸ்ட் புரட்சியின் போது அவர் அடைக்கப் பட்டிருந்த திருவாடனை சப் ஜெயிலை உடைத்து அவரை வெளிக் கொணர்ந்திருக்கிறார்கள்.

“நாட்டுக்கு நமது சின்ன அண்ணாமலை செய்திருக்கும் சேவை மகத்தானது. அவருடைய பேச்சைக் கேட்டுப் பல இளைஞர்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டது எனக்குத் தெரியும். சின்ன அண்ணாமலையின் தலைக்கு விலை வைத்தது ஆங்கில அரசாங்கம். ஒரு மாதம் வெள்ளைக்கார அரசாங்கத்தை ஸ்தம்பிக்க வைத்தவர் சின்ன அண்ணாமலை”

-இப்படிச் சொன்னவர் பெருந்தலைவர் காமராஜ்.

ஆங்கில அரசாங்கம் 1942 ஆகஸ்டில் இவரைக் கைது செய்து திருவாடனை சிறையில் அடைத்தது. 24 மணி நேரத்தில் மக்கள் ஒன்று திரண்டு அச்சிறையைப் பட்டப் பகலில் உடைத்து இவரை விடுதலை செய்து விட்டார்கள். இப்படி மக்களே சிறையை உடைத்து விடுதலை செய்தது இந்திய விடுதலைப் போராட்ட சரித்திரத்திலேயே இது தான் முதல் தடவையாக இருக்கும்.

இனி திரு. சின்ன அண்ணாமலை அவர்களின் வாயால் 1942-இல் திருவாடனையில் என்ன நடந்தது என்பதைக் கேட்போம். நமக்காக அவர் எழுதி வைத்திருக்கிறார். நாம் தான் அதைப் படிக்கவோ, தெரிந்து கொள்ளவோ முயற்சி எடுத்துக் கொள்ளவில்லை. இப்போதாவது தெரிந்து கொள்வோம்:

“1942 ஆகஸ்ட் மாதம் 8-ஆம் தேதி அன்று இரவு 12 மணிக்கு போலீஸார் என்னைக் கைது செய்தனர். பகல் நேரத்தில் எப்போதும் பெரும் கூட்டம் என்னைச் சூழ்ந்து கொண்டிருந்தபடியால் ஒரு வார காலமாக முயற்சி செய்தும், கைது செய்தால் பெரும் கலகம் ஏற்படும் என்று போலீஸார் கைது செய்வதைத் தள்ளிப் போட்டுக் கொண்டு வந்தனர்.

ஆனால் அன்று 144 தடை உத்தரவை மக்கள் முன்னிலையில் நான் கிழித்தெறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டரை மக்கள் விரட்டி அடித்ததாலும் அதற்குமேல் என்னை வெளியில் வைத்திருப்பது பெருத்த அபாயம் என்று கருதி போலீஸார் அன்றிரவே என்னைக் கைது செய்வது என்று முடிவு செய்து விட்டனர்.

இரவில் அதிகம்பேர் என்னைச் சுற்றி இருக்க மாட்டார்கள், சில பேர் தான் இருப்பார்கள். இருப்பவர்களைச் சமாளித்துக் கொள்ளலாம் என்று போலீஸார் எண்ணி அன்றிரவு என்னைக் கைது செய்வதற்கு சுமார் பத்து லாரி ரிசர்வ் போலீசைக் கொண்டு வந்து நான் தங்கி இருந்த ஐக்கிய சங்கம் என்ற கட்டடத்தைச் சுற்றி வளைத்து நிறுத்திக் கொண்டு உள்ளே படபடவென்று குதித்தார்கள்.

அப்பொழுது இரவு மணி 12 இருக்கலாம். சப்தம் கேட்டதும் திடுக்கிட்டு விழித்துப் பார்த்தபோது என்னைச் சுற்றிப் பல ரிசர்வ் போலீஸ் நின்றது தெரிந்தது.

“உங்களைக் கைது செய்திருக்கிறோம்” என்று போலீசார் சொன்னார்கள். இன்ஸ்பெக்டர் என் கையில் விலங்கை மாட்டி, பல நூற்றுக் கணக்கான ரிசர்வ் போலீஸார் சூழ ‘ராமவிலாஸ்’ பஸ் ஒன்றில் என்னை ஏற்றிக் கொண்டு முன்னும் பின்னும் பல போலீஸ் வண்டிகள் தொடர தேவகோட்டையில் இருந்து 22 மைல் தொலைவில் உள்ள திருவாடனை என்ற ஊருக்குக் கொண்டு சென்றார்கள்.

திருவாடனையில் உள்ள சப்-ஜெயிலில் என்னைக் கொண்டுபோய் அடைத்தார்கள். மறுநாள் காலையில் என்னைக் கைது செய்த விஷயம் ஊர் முழுவதும் பரவி, மக்கள் கும்பல் கும்பலாகச் சேர்ந்து ஊரே ஒன்றாகத் திரண்டு என்னை விடுதலை செய்யும்படி போலீஸ் ஸ்டேஷனுக்கு முன்னால் சென்று ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள்.

கடைகள் அனைத்தையும் மூடும்படியும் செய்து போலீசைத் திக்குமுக்காட வைத்து விட்டார்கள். என்னை ஏற்றிக் கொண்டு சென்ற ராமவிலாஸ் பஸ்ஸை சூழ்ந்து கொண்டு தீ வைத்துக் கொளுத்தி மேற்படி பஸ்ஸைச் சாம்பலாக்கி விட்டார்கள்.

அதன் பின்னர் தேவகோட்டையில் உள்ள சப்-கோர்ட்டை நடத்தக் கூடாது என்று மக்கள் கோஷம் போட்டிருக்கிறார்கள். அதையும் மீறி கோர்ட்டை நடத்தியதால் மக்கள் கோபம் கொண்டு பக்கத்திலிருந்த பெட்ரோல் பங்கில் இருந்து பெட்ரோல் பிடித்து கோர்ட் கட்டடத்தின் மீது ஊற்றி தீ வைத்து விட்டார்கள்.

போலீஸ் துப்பாக்கிப் பிரயோகம் செய்தும் கூட்டம் கலையவில்லை. பல பேர் துப்பாக்கிப் பிரயோகத்தில் இறந்தார்கள். அங்கிருந்த கூட்டம் கோபங்கொண்டு புறப்பட்டு, திருவாடனையை நோக்கி வந்தது.

திருவாடனை வரும் வழியில் உள்ள கிராமங்களில் எல்லாம் இளைஞர்களும், பெரியோர்களும் உற்சாகமாக இக்கூட்டத்துடன் சேர்ந்து அவர்களும் திருவாடனையை நோக்கி வந்தார்கள்.

சுமார் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று சேர்ந்து திருவாடனை சப்-ஜெயிலுக்கு என்னை விடுதலை செய்ய வந்துகொண்டு இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டதும், சப்-ஜெயிலைச் சுற்றி இருந்த சர்க்கார் அலுவலகங்களான மாஜிஸ்திரேட் கோர்ட், தாசில்தார் காரியாலயம், கஜானா அதிகாரி, போலீஸ் ஸ்டேஷனில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் போலீஸ் கான்ஸ்டபிள்கள் அனைவரும் என்னை அடைத்து வைத்திருந்த சப்-ஜெயிலுக்கு முன்பு வந்தார்கள்.

எல்லோரும் என்னிடம் என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்டார்கள். நான் சொன்னேன்: ‘இருபதாயிரத்துக்கு மேற்பட்ட ஜனங்கள் வருவதால் அவர்களைத் தடுத்து நிறுத்துவதோ, வன்முறையை உபயோகிப்பதோ இப்போது உள்ள சூழ்நிலைக்குச் சரியாக இருக்காது. இது சுதந்திரப் போராட்ட வேகம். மக்களிடம் ஏற்பட்டிருக்கும் உணர்ச்சியை மதித்து அவர்களுக்கு வழிவிட்டு நில்லுங்கள். அனைவரும் ஒதுங்கிக் கொள்வது தான் இந்த நேரத்தில் செய்யக்கூடிய புத்திசாலித்தனமான காரியம்’ என்று அவர்களுக்கு ஆலோசனை கூறினேன்.

அவர்கள் சொன்னார்கள், ‘நாங்களும் எங்கள் குடும்பமும் குழந்தை குட்டிகள் அனைவரும் பக்கத்திலுள்ள லைனில் தான் குடியிருக்கிறோம். வருகின்ற கூட்டம் எங்களையும் எங்கள் குடும்பத்தாரையும் கோபப்பட்டுத் தாக்கினால் என்ன செய்வது?’ என்று கேட்டார்கள். ‘அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். அதற்கு நான் பொறுப்பு’ என்று சொன்னேன்.

அப்போது அங்கிருந்த சப் இன்ஸ்பெக்டரின் பெயர் ‘சூரப்புலி’ சுந்தரராஜ ஐயங்கார் என்பது ஆகும். என் ஆலோசனையை ஏற்றுக்கொண்டு நான் சொன்னபடி போலீசார் தங்கள் உடைகள் அனைத்தையும் கழற்றி நான் இருந்த சப்-ஜெயிலுக்கு முன்னால் போட்டார்கள். எல்லோரையும் அவரவர் வீட்டுக்குப் போய் நிம்மதியாக இருக்கும்படி கூறினேன். அதன்படி அவர்கள் அனைவரும் செய்தார்கள்.

இது நடந்த சிறிது நேரத்துக்கெல்லாம், பல ஆயிரக் கணக்கான மக்கள் கையில் கடப்பாரை, கோடாரி, அரிவாள், ஈட்டி முதலிய ஆயுதங்களுடன் பலத்த கோஷம் போட்டுக் கொண்டு சப்-ஜெயிலை நோக்கி வந்தார்கள். பலர் ‘ஜெயிலை உடை, கட்டடத்திற்கு தீ வை’ என்று பலவாறாகச் சத்தம் போட்டார்கள்.

கூட்டத்திற்குத் தலைமை வகித்து வந்தவர்களில் ஒருவரான எனது நண்பர் திருவேகம்பத்தூர் பாலபாரதி செல்லத்துரை, எல்லோரையும் அமைதிப்படுத்தி நான் இருந்த சிறைக்கு முன்னால் உட்கார வைத்தார்கள். அவர் சொற்படி அனைவரும் சப்-ஜெயிலுக்கு முன்னால் இருந்த மைதானத்தில் உட்கார்ந்தார்கள். பின்னர் செல்லத்துரை அவர்கள் என்னிடம் வந்து “இப்பொழுது நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.

“நீங்கள் என்ன முடிவுடன் வந்திருக்கிறீர்கள்?” என்று நான் திருப்பிக் கேட்டேன். “இந்தச் சிறையை உடைத்து உங்களை விடுதலை செய்ய வந்திருக்கிறோம்” என்று பதில் சொன்னார்.

“சரி, அப்படியே செய்யுங்கள்” என்று நான் சொன்னதும், அங்கு நின்ற சிறை வார்டன் ஓடிவந்து இதோ சாவி இருக்கிறது என்று சாவியைக் கொடுத்தார். சாவி வேண்டியதில்லை, உடைத்து தான் திறப்போம் என்று மக்கள் பெரும் முழக்கம் போட்டார்கள். அதன்படியே அவர்கள் கொண்டு வந்திருந்த கடப்பாரை முதலிய ஆயுதங்களால் என்னை அடைத்து வைத்திருந்த சப்-ஜெயில் பூட்டை உடைத்துத் தகர்த்து கதவைத் திறந்தார்கள்.

பட்டப்பகல் 12 மணிக்கு, பல ஆயிரக் கணக்கான மக்கள் சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் இம்மாதிரி சிறைக் கதவை உடைத்து ஒரு அரசியல் கைதியை விடுதலை செய்தது சரித்திரத்தில் அதுதான் முதல் தடவை. அந்தச் சரித்திரச் சம்பவத்துக்கு நான் காரணமாக இருந்தேன் என்று நினைக்கும்போது இன்றும் நான் பெருமைப் படுகிறேன். இந்தியாவில் வேறு யாருக்கும் கிடைக்காத பெருமை எளியேனுக்குக் கிடைத்தது.

மக்களுடைய மாபெரும் சுதந்திர எழுச்சியின் வேகத்தில் நடைபெற்ற சக்தி மிகுந்த இந்தத் திருவாடனை ஜெயில் உடைப்புச் சம்பவம், தமிழகத்தின் ஒரு கோடியில் ராமேஸ்வரம் அருகில் நடைபெற்றதால் இந்தியா முழுவதும் விளம்பரம் இல்லாமல் அமுங்கி விட்டது. தமிழ்நாட்டுத் தலைவர்களும், இச்சம்பவத்தின் பெருமையை உணரவில்லை.

மதிப்பிற்குரிய ஜெயபிரகாஷ் நாராயண் அவர்கள் 1942-இல் சிறையிலிருந்து தப்பியதே பெரிய வீரச்செயல் என்று நாடு போற்றிக் கொண்டிருந்தது. ஆனால் தமிழகத்தில் திருவாடனையில் மக்கள் திரண்டு வந்து சிறைச்சாலையை உடைத்து ஆங்கில ஏகாதிபத்தியம் கைது செய்து வைத்திருந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரனை விடுதலை செய்ததை நாடு முழுமையாக அறிந்து கொள்ளவுமில்லை; பாராட்டவும் இல்லை.

விடுதலை செய்யப்பட்ட என்னைச் சுற்றி இருந்த மக்கள் என்னைத் தோளில் தூக்கிக் கொண்டு ஆனந்தக் கூத்தாடினார்கள். சிலபேர் நான் இருந்த சப்-ஜெயிலுக்குத் தீ வைத்தார்கள். வேறு சிலர் மாஜிஸ்திரேட் கோர்ட்டிற்கும், தாசில்தார் அலுவலகத்திற்கும் தீ வைத்தார்கள்.

அதன் பின்னர் போலீஸ் லைனை நோக்கி ஓட ஆரம்பித்தார்கள். அப்போது நான் குறுக்கிட்டு, ‘அங்கு ஓடாதீர்கள். அவர்கள் அனைவரும் நமக்காக வேண்டிய ஒத்தாசை செய்திருக்கிறார்கள்” என்று அவர்களிடம் சொன்னேன்.

சில பேர் போலீஸ்காரர்களை சும்மாவிடக் கூடாது என்றும் அவர்கள் வீடுகளுக்குத் தீ வைக்க வேண்டும் என்றும் சத்தம் போட்டார்கள். நான் அவர்களைத் தடுத்து, ‘அவர்கள் அனைவரும் நமது சகோதரர்கள், நமது சுதந்திரப் போராட்டத்திற்கு உறுதுணையாக உள்ளவர்கள், அவர்களை ஒன்றும் செய்ய வேண்டாம். இதோ அவர்களது உடைகள்’ என்று கூறி, போலீஸ்காரர்களுடைய உடைகள் அனைத்தையும் மக்களுக்குக் காண்பித்தேன். அவர்கள் அந்த உடைகளை வாங்கித் தீயில் போட்டுப் பொசுக்கி, தங்கள் கோபத்தைத் தீர்த்துக் கொண்டார்கள்.

பின்னர் கூட்டத்தினர் அனைவரும் என்னைத் தூக்கிக் கொண்டு ஊர்வலமாகச் சென்றார்கள். அப்பொழுது என்னை அடைத்து வைத்திருந்த சப்-ஜெயிலும், அதைச் சுற்றி இருந்த சர்க்கார் அலுவலகங்களும் கொழுந்து விட்டு எரிந்தன. அச்சமயம் சிலர் போலீஸ் ஸ்டேஷனுக்கு உள்ளே புகுந்து அங்கிருந்த துப்பாக்கிகளை ஒருவரும், துப்பாக்கிக் குண்டுகளை இன்னொருவரும் தூக்கிக் கொண்டு வெளியே வந்தனர். சிலர் துப்பாக்கிகளை கையில் ஏந்திக் கொண்டு சிப்பாய்களைப் போல நடந்தனர்.

மக்கள் என்னை ஊர்வலமாக அழைத்துக் கொண்டு ஊருக்கு வெளியே செல்லும்போது தூரத்தில் போலீஸ் லாரிகள் வருவது தெரிந்தது. போலீஸ் லாரியைப் பார்த்து மக்கள் கோபாவேசப் பட்டார்கள். பலர் போலீஸ் லாரியை அடித்து நொறுக்க வேண்டும் என்று கூச்சல் போட்டார்கள். சிலர் போலீஸ் லாரியை நோக்கி அரிவாளை வீசிக் கொண்டு ஓடினார்கள்.

எல்லோரையும் சமாதானப் படுத்தி ரோட்டுக்கு பக்கமாக இருந்த பனங்காட்டுக்குள் இருக்கும்படி கேட்டுக் கொண்டேன். அதன்படி மக்கள் இரு கூறாகப் பிரிந்து ரோட்டின் இரு மருங்கிலும் உள்ள பனங்காட்டுக்குள் பதுங்கிக் கொண்டார்கள். போலீஸ் லாரிகள் மெதுவாக ஊர்ந்து கொண்டு வந்தன.

மக்கள் மறைந்திருப்பதை யூகித்தவர்கள் போல் போலீசார் சுடுவதற்குத் தயார் நிலையில் லாரியில் நின்றுகொண்டு இருந்தார்கள். ரோடு ஓரமாக மறைந்திருந்த ஒருவரை போலீசார் பார்த்து விட்டனர். உடனே அவரை நோக்கிச் சுட்டனர். அவர்கள் சுட்ட குண்டு மேற்படி நண்பரின் தொடையை தொட்டுக் கொண்டு சென்றுவிட்டது.

உடனே மேற்படி நண்பர் பெரும் கூச்சல் போட்டு “எல்லாம் வெத்து வேட்டு, வெளியே வாங்கடா” என்று கலவரப்படுத்தி விட்டார். மறைந்திருந்த மக்கள் அனைவரும் பெருங்கூச்சல் போட்டுக் கொண்டு வெளியே வந்து போலீசாரைத் தாக்க ஓடினார்கள். இச்சமயம் துப்பாக்கி வைத்திருந்தவர்கள் ஒரு பக்கமும் குண்டு வைத்திருந்தவர்கள் மறு பக்கமும் பிரிந்து இருந்தார்கள். அதனால் மக்களிடம் இருந்த துப்பாக்கியினால் போலீசாரைச் சுட இயலாமல் போய்விட்டது.

குண்டுகளைக் கையில் வைத்திருந்த கிராமவாசிகள் மட்டும், மேற்படி குண்டுகளை எறிந்தால் வெடிக்குமா, வெடிக்காதா என்று தெரியாததால் அவற்றை சரமாரியாக வீசிக் கொண்டு இருந்தார்கள்.

இந்நிலையில் போலீசார் தங்களைக் காத்துக் கொள்ளச் சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். குண்டுகளைப் பொழிந்து தள்ளினர். என் இடது கையில் ஒரு குண்டு பாய்ந்தது. மக்களின் முன்னால் நின்ற என் மீது மேலும் குண்டு படக்கூடாது என்று பலபேர் மாறி மாறி என் முன்னால் நின்று தங்கள் மார்பில் போலீசாரின் குண்டுகளை ஏற்று வீரமரணம் எய்தினார்கள்.

இம்மாதிரி தியாகம் செய்த பெரு வரலாற்றை நான் படித்ததும் இல்லை, கேட்டதும் இல்லை. இந்த மாபெரும் தியாகத்தை இன்று நினைத்தாலும் எனது மெய் சிலிர்த்து விடுகிறது. ஒரு தேசபக்தனைக் காப்பதற்காகப் பல பேர் உயிரைக் கொடுப்பது என்பது வீரகாவியமாகப் பாட வேண்டிய அத்தியாயமாகும்.

எவ்வித பிரதி பிரயோசனமும் கருதாமல் தங்கள் இன்னுயிரை ஈந்த அந்த மாபெரும் தியாகிகளுக்கு இந்த நாடு என்றும் தலை தாழ்த்தி வணங்கக் கடமைப் பட்டுள்ளது.

இப்படிப் பல பேரைச் சுட்டு வீழ்த்திவிட்டு போலீசார் தப்பி ஓடிவிட்டார்கள். சிலர் இறந்து வீழ்ந்ததும் பலர் உடம்பிலிருந்து ரத்தம் தெறித்தும், அங்கு கூடியிருந்த மக்கள் ஒரு நிமிடத்தில் எங்கே சென்றார்கள் என்று தெரியாமல் ஓடிவிட்டனர். நானும் எனது நண்பர் ராமநாதனும் பிணக்குவியலின் மத்தியில் நின்று கொண்டிருந்தோம்.

உயிர் போன பலரும், உயிர் போகும் தறுவாயில் சிலரும், கை, கால், கண் போன சிலரும் ஒரே ரத்தக்காடாக முனகலும், மரணக்கூச்சலும் நிறைந்திருந்த அந்த இடத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் திக்பிரமை பிடித்து பத்து நிமிடத்துக்கும் மேல் நின்று கொண்டிருந்தேன்.

இரவு மணி 7 ஆயிற்று. வெளிச்சம் மங்கி இருள் பரவிற்று. பனங்காடு, சலசலவெற சத்தம். மரத்தினுடன் மரங்கள் உராயும் போது ஏற்படும் பயங்கரமான ‘கிரீச்’ எனும் அச்சமூட்டும் சத்தம். இந்நிலையில் நரிகளின் ஊளை வேறு. சுற்றிலும் இறந்து கிடந்த தேசபக்த தியாகிகளைப் பார்த்து ஒரு முறை அவர்களின் பாதாரவிந்தங்களுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு நகர்ந்தேன்.

இருட்டில் மேடு பள்ளம் முள், கல், இவைகளில் தட்டுத் தடுமாறி நடந்தோம். காலெல்லாம் கிழிசல் ஏற்பட்டு ரத்தம் வடிந்து கொண்டே இருந்தது. கையில் குண்டு பாய்ந்த இடத்தில் ரத்தம் வழிந்தது. சுமார் நான்கு மைல் வந்ததும் தலை சுற்றியது. மயக்கமாக இருந்தது. அதே இடத்தில் கீழே ‘தடால்’ என்று விழுந்து விட்டேன். என் நண்பரும் மயங்கிப் படுத்து விட்டார்.

மயங்கிய நிலையில் நன்றாகத் தூங்கி விட்டோம். தூங்கிக் கொண்டிருந்த எங்களைச் சிலர் தட்டி எழுப்பினார்கள். சுமார் பத்து பேர் நின்று கொண்டிருந்தார்கள். போலீசார் என்று நினைத்து விட்டோம். ஆனால் அவர்கள் போலீசார் அல்ல. அதற்கு முன்தினம் இறந்து போன உறவினர் ஒருவருக்குப் பால் ஊற்றி அஸ்தி எடுத்துப் போக வந்தவர்கள். அது சரி! அவர்கள் ஏன் நாங்கள் படுத்திருந்த இடத்திற்கு வந்தார்கள்? எதற்காக எங்களை எழுப்பினார்கள்?

சொன்னால் நம்ப மாட்டீர்கள்! நாங்கள் அவர்கள் உறவினரைப் புதைத்திருந்த இடத்திற்கு மேல்தான் அவ்வளவு நேரம் அந்த இரவு முழுவதும் படுத்திருந்தோம். இதை அறிந்ததும் எங்கள் மனோநிலை எப்படி இருந்திருக்கும்?


(‘சொன்னால் நம்பமாட்டீர்கள்’ எனும் நூலில் சின்ன அண்ணாமலை)


8. தற்காலிக இந்திய சுதந்திர சர்க்கார் பிரகடனம்

முந்தைய சில பகுதிகளில் 1942 ஆகஸ்ட் புரட்சியின் போது தமிழகத்தில் நடந்த ஒருசில நிகழ்ச்சிகள் பற்றி பார்த்தோம். இவை இந்த நாடு முழுதும் நடந்த புரட்சி எப்படி நடந்தது என்பதை விளக்குவதற்காக நமக்குப் பழக்கமான ஊர்களில் நடந்தவற்றை மட்டும் எடுத்துக் காட்டினோம். இனி நாட்டின் நிலை என்ன, காங்கிரசின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன, பிரிட்டிஷ் பேரரசின் திட்டங்கள் என்ன என்பதைப் பற்றியும் சிறிது பார்க்கலாம்.

1942 ஆகஸ்ட் 9-ஆம் தேதி முதல் நாடு பற்றி எரிந்து கொண்டிருந்தது. முன்பு எப்போதும் இதுமாதிரியான கலவரங்கள் நடந்ததில்லை என்பதால் பிரிட்டிஷ் அரசு திணறிக் கொண்டிருந்தது.

1943-ஆம் வருஷம் பிறந்தது. ஆகாகான் மாளிகையில் சிறைவைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி அங்கு 21 நாள் உண்ணாவிரதத்தை பிப்ரவரி 10-ஆம் தேதி தொடங்கினார். நாட்டில் நிலவுகின்ற அசாதாரண நிலைமைகள் அனைத்துக்கும் பிரிட்டிஷ் அரசாங்கமே காரணம் என்று காந்திஜி தில்லி சர்க்கார் மீது குற்றம் சாட்டினார்.

காந்திஜியின் உண்ணாவிரதம் தொடர்ந்தது. வங்கத்தைச் சேர்ந்த தேசபக்தர் டாக்டர் பி.சி.ராய் காந்திஜியை ஒரு டாக்டர்கள் குழுவுடன் தினமும் கவனித்துக் கொண்டு வந்தார். நாளாக ஆக காந்திஜியின் உடல்நிலை மோசமடைந்து வந்தது என்பதை டாக்டர்கள் அறிவித்தார்கள்.

இந்திய சுதந்திரத்துக்காகப் பாடுபடும் தேசபக்தர்களுக்கு எதிராக பிரிட்டிஷ் அரசு கையாண்ட முறைகளைக் கண்டித்து வைசிராயின் நிர்வாக சபை உறுப்பினர்கள் சர் ஹெச்.பி.மோடி, என்.ஆர்.சர்க்கார் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டார்கள்.

பிப்ரவரி 18, உண்ணாவிரதத்தின் ஒன்பதாம் நாள் காந்திஜியின் உடல்நிலை மோசமடைந்தது. இன்னும் 12 நாட்கள் அவர் உண்ணாவிரதத்தைத் தொடரவேண்டும் எனும் நிலையில், அவரால் தாக்கு பிடிக்கமுடியுமா என்று டாக்டர்கள் கவலை அடைந்தனர்.

அப்படியேதும் காந்திஜியின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமானால் அதற்குப் பின் ஒரு நிமிஷம்கூட பிரிட்டிஷார் இந்த நாட்டில் இருக்க முடியாது. பிப்ரவரி 21-இல் அவர் நிலைமை மோசமடைந்து விட்டது. உண்ணாவிரதத்தைக் கைவிடாவிட்டால் அவர் உயிர் பிழைக்கமுடியாது என்று டாக்டர்கள் சொல்லிவிட்டனர்.

அரசாங்கமும் எதற்கும் இருக்கட்டும் என்று ராணுவத்தையும், போலீசையும் தயார் நிலையில் வைத்திருந்தது. ஒரு கேலிக்கூத்து, ஒருக்கால் காந்திஜி இறந்துவிட்டால் அவரை எரிக்க சந்தனக் கட்டைகளைக் கூட வாங்கி தயார்நிலையில் வைத்திருந்தார்களாம்.

74 வயதைக் கடந்த காந்திஜி தன்னுடைய மன உறுதியால் அந்த 21 நாள் உண்ணா நோன்பை முடித்து விட்டார். உலகமே ஆச்சரியத்துடன் பார்த்தது காந்திஜியின் உண்ணாவிரதத்தை. மிகுந்த எதிர்பார்ப்புடன் சந்தனக் கட்டைகளை வாங்கி வைத்துக் கொண்டு காத்திருந்த பிரிட்டிஷ் அரசுக்கு பெருத்த ஏமாற்றம்.

1944-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ஆம் தேதி அன்னை கஸ்தூரிபாய் ஆகாகான் அரண்மனையில் காந்திஜியின் மடியில் தலைவைத்து தன் கடைசி மூச்சை விட்டுவிட்டார். மறுநாள் காந்திஜியின் குமாரர் தேவதாஸ் காந்தி அன்னையின் சிதைக்கு தீமூட்டினார்.

1944 மே மாதம் 6-ஆம் தேதி காந்திஜி விடுதலையானார். அவர் ஆகாகான் மாளிகையில் சிறை வைக்கப்படும்போது அவருடன் மகாதேவ தேசாயும், கஸ்தூரிபாயும் இருந்தனர். விடுதலையாகி வெளியே வரும்போது அவ்விருவருடைய சமாதிகள் அந்த மாளிகையின் தோட்டத்தில் இருக்க, இவர் மட்டும் வெளியே வந்தார்.

பின் ஜூலை மாதத்தில் தேசபக்தர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். ‘தலைமறைவாக ஒளிந்து வாழும் தேசபக்தர்கள் வெளியில் வரவேண்டும், கைது செய்ய நேர்ந்தால் தைரியத்துடன் வழக்கை எதிர்கொள்ள வேண்டும்’ என்று அறிவுரை கூறியிருந்தார்.

அதே ஆண்டு செப்டம்பர் மாதத்தில் காந்திஜி முகமது அலி ஜின்னாவை பம்பாயில் மலபார் ஹில்ஸ் பகுதியில் இருந்த அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்தார். அந்த சந்திப்பில் ஜின்னா சொன்னார்:

“முஸ்லீம்களும் இந்துக்களும் வெவ்வேறு இனத்தவர்கள். தேசத்தை இரு கூறாகப் பிளப்பதே சமரசத்துக்கான வழியாகும். அதுவும் பிரிட்டிஷார் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு முன்பாகவே பாகிஸ்தான் உருவாகிவிட வேண்டும்.”

அதற்கு காந்திஜி சொன்ன மறுமொழி: “இந்த நாட்டில் மதம் மாறிய ஒரு கூட்டத்தாரும், அவர்களுடைய சந்ததியாரும் தாங்கள் வேறு வேறு தேசிய இனத்தவர்கள் என்று கூறிக்கொள்வது சரித்திரத்தில் தான் கண்டறியாத புதுமை” என்றார்.

இப்படியொரு பிரிவினை வாதம் இங்கு தோன்றி வேரோடி, நாட்டின் பிரிவினை வரை கொண்டு செல்லக் காரணமாய் இருந்தது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பிரித்தாளும் சூழ்ச்சிதான் என்பதை அனைவரும் அறிவர்.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தங்கள் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ளவும், அப்படி ஒருக்கால் இந்த நாட்டைவிட்டுப் போகும் நிலை ஏற்பட்டால் இங்கு வாழும் இவ்விரு பிரிவினரும் ஒற்றுமையின்றி அடித்துக் கொண்டு பிரிட்டிஷ் ஆட்சியே நல்ல ஆட்சி என்று நினைக்க வேண்டும் என்பதற்காக இப்படிப்பட்ட சூழ்ச்சி வலையைப் பின்னி வைத்தனர்.

***

இந்த இடத்தில் காந்திஜியையும் முகமது அலி ஜின்னாவையும் இப்படியே விட்டுவிட்டு, இந்திய தேசிய ராணுவம் அமைத்து ஜப்பானின் உதவியுடன் இந்தியா நோக்கி ‘தில்லி சலோ’ என்று வந்து கொண்டிருந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களைச் சிறிது பார்க்கலாம்.

உலக அரங்கில் யுத்த களத்தில் ஜப்பான் கிழக்காசிய பிரதேசத்தில் வெற்றிமேல் வெற்றி பெற்று முன்னேறிக் கொண்டிருந்தது. பிரிட்டிஷாரின் படைகளில் சேர்ந்து யுத்த களத்தில் பிரிட்டிஷாருக்காகப் போராடிய இந்திய போர் வீரர்கள் ஆங்காங்கே தனித்து விடப்பட்டு விட்டனர். இப்படி இந்திய வீரர்களை தவிக்க விட்டுவிட்டு பிரிட்டிஷ் படைகள் பின்வாங்கிப் போனதைக் கண்டு நேதாஜி வருந்தினார். அப்படி பிரிட்டிஷ் படையிலிருந்து அநாதைகளாகிப் போன இந்திய வீரர்களை ஒன்று திரட்டி அவர்களை இந்திய தேசிய ராணுவத்தில் அங்கம் வகிக்கச் செய்தார்.

நேதாஜியின் ஐ.என்.ஏ.வுக்கு ஜெர்மனியும், ஜப்பானும் ஒவ்வொரு நீர்மூழ்கிக் கப்பலை அளித்தனர். ஜெர்மனி சென்றிருந்த நேதாஜி அங்கிருந்து ஜப்பானில் டோக்கியோ வந்தார். அங்கு அவருக்கு கோலாகல வரவேற்பு கொடுக்கப்பட்டது. அங்கிருந்து மலேயா, பர்மா, சிங்கப்பூர் ஆகிய இடங்களுக்குச் சென்றார்.

சென்ற இடங்களில் எல்லாம் இவருக்கு பிரமாதமான வரவேற்பு கிடைத்தது. ஜப்பானியர்கள், சீனர்கள், மலேயாக்காரர்கள், பர்மியர்கள், இந்தியர்கள் என்று இவருக்குக் கூட்டம் அதிகரித்துக் கொண்டே போனது.

இந்தியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டு ஜப்பானில் வசித்து வந்த ராஷ் பிஹாரி கோஷ் என்பவரை இவர் சந்தித்து அவரிடமிருந்து ‘இந்தியா லீக்’ எனும் அமைப்பைத் தனதாக்கிக் கொண்டார். இப்படி பலதரப்பட்டவர்களையும் சேர்த்து ‘இந்திய தேசிய ராணுவம்’ ஒன்றை அமைத்து, அதில் காந்தி பிரிகேட், நேரு பிரிகேட், ஆசாத் பிரிகேட், ஜான்சிராணி பிரிவு என்று ராணுவ அமைப்புகளை உருவாக்கினார்.

ஜான்சிராணி பிரிகேட் பெண்களுக்கான படை, அதற்குச் சென்னையைச் சேர்ந்த கேப்டன் லக்ஷ்மி என்பார் தலைவராக இருந்தார். இவர் ஒரு மருத்துவர். பின்னாளில் ஷேகல் என்பவரை மணந்து லட்சுமி ஷேகல் என்று கான்பூரில் வாழ்ந்து, நமது அப்துல் கலாமை எதிர்த்து குடியரசுத் தலைவர் தேர்தலில் நின்று தோற்றுப் போனார். இவரது மகள் சுபாஷினி அலி என்பார் மார்க்சிஸ்ட் கட்சி பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.

1943-இல் அக்டோபர் மாதம் இந்தியாவை சுதந்திர நாடாக அன்னிய மண்ணில் பிரகடனப் படுத்தினார் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். அந்த அரசுக்கு நேதாஜி தான் பிரதம மந்திரி.

அப்படி அந்நிய மண்ணில் உருவான இந்திய சர்க்கார் பிரிட்டன் மீதும் அமெரிக்கா மீதும் யுத்தப் பிரகடனம் செய்தனர். அந்த சுதந்திர இந்திய சர்க்காரை ஜப்பான், பர்மா, பிலிப்பைன்ஸ், மங்கோலியா, சயாம், குரோஷியா, ஜெர்மனி, இத்தாலி, அயர்லாந்து ஆகிய நாடுகள் அங்கீகரித்தன. இந்த சர்க்காரின் தலைமை அலுவலகம் சிங்கப்பூரிலிருந்து பர்மாவுக்கு மாற்றப்பட்டது.

யுத்தத்தில் ஜப்பான் அந்தமான் நிக்கோபார் தீவுகளை வென்றது அவற்றை ஜப்பான் இந்திய சுதந்திர சர்க்காரிடம் ஒப்படைத்தது. 1943-ஆம் வருஷம் டிசம்பர் 30-ஆம் தேதி அந்தமான் தீவுக்கு விஜயம் செய்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அங்கு சுதந்திர இந்திய தேசிய கொடியை ஏற்றி, ராணுவ மரியாதையை ஏற்றுக் கொண்டு, இந்தியா இருக்கும் திசை நோக்கி நின்றுகொண்டு ஒரு சுதந்திர தின உரையாற்றினார். வரலாற்றில் சிறப்பாகப் பேசப்படும் உரை அது.

நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் ஐம்பதினாயிரத்துக்கு மேற்பட்ட சிப்பாய்களும் அதிகாரிகளுமாக இருந்தனர். ஆங்காங்கே ராணுவ முகாம்கள் ஜப்பானியர் வெற்றி கண்ட ஊர்களில் எல்லாம் அமைக்கப்பட்டன. செலவுக்கு நிதி தேவைப்பட்டது என்றதும் நேதாஜி ஒரு வேண்டுகோள் விடுத்தார். உலகளாவிய இந்திய மக்கள் அனைவரும் வாரிவாரி வழங்கினர்.

சொந்தமாக சுதந்திர இந்திய சர்க்கார் ஒரு வங்கியைத் தொடங்குவதற்காக ஒரு இஸ்லாமியர் ஐம்பது லட்சம் ரூபாயை நன்கொடை கொடுத்தார். இந்தியப் பெண்கள் மலேயா, சிங்கப்பூர், பர்மா ஆகிய இடங்களில் தங்க நகைகளை ஏராளமாக வாரி வழங்கினர்.

நேதாஜி செல்லுமிடங்களில் எல்லாம் உற்சாக வரவேற்பு கிடைத்தது. அவருக்குப் போடப்பட்ட மாலையொன்று பன்னிரெண்டு லட்ச ரூபாய்க்கு ஏலம் போனது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 1945-இல் இவர் ஆரம்பித்த வங்கியில் அப்போது முப்பத்தியாறு கோடிக்கும் மேல் இருந்தது. நேதாஜி சிங்கப்பூர், பர்மா ஆகிய இடங்களிலிருந்து ரேடியோ மூலம் இந்திய மக்களுக்கு உரையாற்றினார். ஐ.என்.ஏ.வுக்கு ஆயுதங்களை ஜப்பானிலிருந்து விலைக்கு வாங்கினார். ‘ஜெய் ஹிந்த்’ என்பது ஐ.என்.ஏ.வின் கோஷமாக இருந்தது.

ஐ.என்.ஏ, இந்தியாவின் இம்பால், மணிப்பூர், கொஹிமா ஆகிய இடங்களைக் கைப்பற்றிக் கொண்டு முன்னேறியது.

இதற்கிடையில் ஜப்பான் போரில் தொய்வு ஏற்பட நேதாஜி 1945-ஆம் வருஷம் ஆகஸ்ட் 16-ஆம் தேதி ஜப்பான் செல்வதற்காக விமானத்தில் பயணம் செய்தார். அந்த விமானம் 1945 ஆகஸ்ட் 18-இல் பார்மோசா தீவின் தலைநகருக்கு அருகில் நொருங்கி விழுந்து அவரை பலிவாங்கிவிட்டது. அவருடன் பயணம் செய்த ஐ.என்.ஏ.வின் தளபதி கர்னல் ஹபிபுர் ரஹ்மான் இந்த செய்தியை உறுதி செய்திருக்கிறார். என்றாலும் இந்தியாவில் ஒரு பகுதியினர் நேதாஜி உயிருடன் இருப்பதாக நம்புகின்றனர்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 1943 ஆகஸ்ட் 25ஆம் தேதி இந்திய தேசிய ராணுவத்தின் ஜெனரலாக பொறுப்பேற்றுக் கொண்டு தேசமக்களுக்கு ஆற்றிய உரை இது:

“தோழர்களே, ராணுவ அதிகாரிகளே, வீரர்களே! உங்களுடைய அயராத உழைப்பினாலும், ஆதரவினாலும், அசைக்கமுடியாத நம்பிக்கையினாலும், இந்திய தேசிய ராணுவம் இந்தியாவை சுதந்திர நாடாகப் பிரகடனப் படுத்துவதற்கான ஒரு ஆயுதமாக இன்று உருவெடுத்திருக்கிறது.

‘தில்லி சலோ’ (தில்லியை நோக்கி நட) எனும் மந்திரத்தை நம் உதடுகள் முணுமுணுக்க நாம் போராடி முன்னேறிச் சென்று டெல்லியிலுள்ள வைஸ்ராய் மாளிகையில் இந்திய தேசியக் கொடியைப் பறக்கவிட்டு, பழமை வாய்ந்த தலைநகராம் தில்லி செங்கோட்டையில் நமது இந்த இந்திய தேசிய ராணுவத்தின் அணிவகுப்பை நடத்துவோம்.”

தற்காலிக இந்திய சர்க்கார் ஆசாத் ஹிந்த் 1943 அக்டோபர் 21-இல் துவக்கப்பட்டது. இப்படி இந்த இந்திய தற்காலிக சுதந்திர சர்க்கார் ஸ்தாபிக்கப்படுகிறது என்பதை சிங்கப்பூரிலுள்ள சாத்தே சினிமா கட்டடத்தில் கிழக்காசிய நாடுகளின் பிரதிநிதிகள் மத்தியில் பிரகடனம் செய்யப்பட்டது. இதற்கான பிரகடனத்தில் இந்திய சுதந்திர சர்க்காரின் பிரதம மந்திரியாகவும், வெளியுறவுத்துறை அமைச்சராகவும் நேதாஜி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டு கையெழுத்திட்டார்.

அந்தப் பிரகடனத்தின் ஆங்கில வரிகளை அப்படியே இங்கே தருகிறோம்:

“In the name of God, I take this sacred oath that to liberate India and the thirty eight crores of my countrymen, I, Subash Chandra Bose, will continue this sacred War of Freedom until the last breath of my life.

I shall always remain a servant of India and look after the welfare of the 38 crores of Indian brothers and sisters. This shall be for me my highest duty.

Even afer winning freedom, I will always be prepared to shed the last drop of my blood for the preservation of India’s freedom.”



குறிப்பு:

அமரர் திரு. தஞ்சை வெ.கோபாலன் எழுதிய ‘ஸ்வதந்திர கர்ஜனை’ நூலில் இருந்து நன்றியுடன்...






No comments:

Post a Comment