பக்கங்கள்

மின்னிதழின் அங்கங்கள்

16/11/2021

இந்தியாவில் டிராகனின் காலடித் தடங்கள்

-திருநின்றவூர் இரவிக்குமார்



சீனா ஏராளமான பணத்தை இந்திய திரை உலகு, பல்கலைக்கழகங்கள், சமூக நிறுவனங்கள், ஆராய்ச்சி அமைப்புகள், சமூக ஊடகங்கள், தொழில்நுட்பத் துறை ஆகியவற்றில் அள்ளி வீசுகிறது. அதன்மூலம் இந்திய தேசப் பாதுகாப்புக்கும் ஜனநாயகத்திற்கும் ஏற்பட்டு வருகின்ற ஆபத்துக்கள் ஏராளம். 

இதனை ‘லா அண்ட் சொசைட்டி அலையன்ஸ்’ (Law and Society Alliance) என்ற அமைப்பு ஆய்வு செய்து 76 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கையை 2021 செப். 3-ஆம் தேதி வெளியிட்டுள்ளது. 

அதில், இந்தியாவில் சீனாவின் தாக்கம் எவ்வளவு ஆழமாகவும் விரிவாகவும் உள்ளது என்பதும் சீனாவின் உள் நோக்கம் என்ன என்பதும் தெளிவாகிறது. அது பற்றிய சில விவரங்கள்...

சினிமா துறையில்...

சில ஆண்டுகளுக்கு முன்பு சீனா கூட்டுத் தயாரிப்பாளர் என்ற வகையில் பாலிவுட்டில் நுழைந்தது. 2019-இல் பெய்ஜிங்கில் நடந்த சர்வதேசத் திரைப்பட விழாவை ஒட்டி சீனா- இந்தியா திரைப்பட கூட்டுத் தயாரிப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. அதில் பிரபல இந்திய நடிகர்களான ஷாருக்கான், கபீர் கான் போன்றவர்கள் கலந்து கொண்டனர்.

சீன கம்யூனிஸ்ட் கட்சி இந்திய திரை உலகுக்கென ஒரு லாபியை உருவாக்கி உள்ளது. அதன் தலைவராக ஓர் இந்தியரை நியமித்துள்ளது.

இந்திய திரை உலகில் சீனாவின் தாக்கம் மென்மையாக இருந்தாலும் அது திட்டமிட்ட ரீதியில் வளர்ந்து வருகிறது. பாலிவுட்டில் சீனாவை உயர்வானதாகச் சித்தரிப்பது அல்லது குறைந்தபட்சம் சீனாவின் நலன்களுக்கு எதிராகப் போகாமல் தடுப்பது என அதன் செயல்பாடுகள் உள்ளன.

எடுத்துக்காட்டாக ‘ராக்ஸ்டார்’ திரைப்படத்தில் வரும் பாடலில் ‘திபெத்தை விடுதலை செய்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட கொடி காட்டப்படும். சீன லாபியின் தலையிட்டால் அந்த காட்சியில் வாசகம் தெளிவாகத் தெரியாதபடி மங்கலாக்கப்பட்டது.

சிந்தனையாளர்களிடையே...

இந்தியத் திரையுலகில் மட்டுமல்ல, இந்தியர்களின் சிந்தனைப் போக்கையே கட்டுப்படுத்த சீன கம்யூனிச அரசு முயற்சித்து வருகிறது. இந்திய அறிஞர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வெகுமதி அளிப்பது, பல்கலைக்கழக மாணவர்களை சீன அரசுச் செலவில் அந்த நாட்டுக்கு அழைத்துச் சென்று சுற்றிக் காட்டி, அவர்கள் தரப்புக் கருத்துக்களை ஏற்க வைப்பதைச் செய்கிறது. அதற்காக அறிஞர்கள் குழுக்களையும் ஆலோசனை அமைப்புகளையும் இங்கு ஏற்படுத்தி உள்ளது.

சீன தூதரக- இந்திய கல்வி நிறுவன தொடர்பு...

சீன அமைப்புகள் இங்கு முளைத்து வருவது மட்டுமன்றி, பத்துக்கும் மேற்பட்ட இந்திய கல்வி நிறுவனங்களுடன் கூட்டணி வைத்துள்ளது சீன கம்யூனிச அரசு. இதன்மூலம் இந்திய கல்வி நிறுவனங்கள் சீன சார்பு நிலையை மேற்கொள்ள வைக்கப்படுகின்றன. மாணவர்களிடையே சீன ஆதரவு சிந்தனை வளர்க்கப்படுகிறது.

உதாரணமாக, இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஒரு பிரபல பல்கலைக்கழகத்தில்  ‘சீன- இந்திய வர்த்தக நிர்வாகம்’ என்ற முதுகலை பட்டப் படிப்பும் அதற்காக சீனாவுக்கு அழைத்துச் செல்வதும் நடக்கிறது. 2004 இல் சீன அரசு ஏற்படுத்திய கன்பியூசியஸ் இன்ஸ்டிட்யூட் மூலம் பல இந்திய கல்வி நிறுவனங்கள் தொடர்பு கொள்ளப்பட்டு, கல்வி மற்றும் அனுபவக் கல்வி என்ற பெயரில், சீனாவின் தாக்கமும் செல்வாக்கும் அதிகரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

கம்யூனிச சீனாவும் இந்திய ஊடகங்களும்...


இந்திய ஊடகங்களையும் பிரபல ஊடகவியலாளர்களையும் சீனா பயன்படுத்தி இந்தியர்களிடையே தன் சார்பு பிரசாரத்தை மேற்கொள்ள வைக்கிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் ராஜீவ் சர்மா என்ற ஊடகவியலாளரின் கைது. அவர் சீனாவுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டார். ஆனால் கருத்து சுதந்திரம் பறிக்கப்படுவதாக கூச்சல் எழுப்பப்பட்டு சீனாவின் உள்ளடி வேலையை மறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ராஜீவ் சர்மா எழுதியுள்ள பல கட்டுரைகள் இந்தியாவுக்கு எதிராகவும் சீனாவுக்கு ஆதரவாகவும் உள்ளன. எந்த அளவுக்கு என்றால், திபெத்திய புத்த மத குரு தலாய் லாமாவை இந்திய அரசு கைது செய்து சீனாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சர்மா வலியுறுத்தி உள்ளார். அந்த அளவுக்கு இந்திய ஊடகங்களில் சீனா தனது செல்வாக்கை வளர்த்துள்ளது.

சமுக ஊடகங்கள் மூலம் சீன பிரசாரம்...

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் ஆர்வம் கொண்ட இந்திய இளைஞர்கள் பல செல்போன் செயலிகளை தினசரியை பயன்படுத்துகின்றனர். புதிய செயலிகள் மூலமாகவும், ஏற்கனவே உள்ள பல செயலிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதன் மூலமாகவும், சமூக ஊடகத் துறையில் சீனா தனது தாக்கத்தை அதிகரித்து வருகிறது.

உதாரணமாக, இந்தியாவில் முன்னணியில் உள்ள டெய்லி ஹண்ட், நியூஸ் டாக், யூசி நியூஸ் என்ற மூன்று செயலி நிறுவனங்களில் சீன நிறுவனங்கள் பல லட்சம் கோடி டாலர்களை முதலீடு செய்துள்ளன. அது மட்டுமன்றி பல வீடியோ விளையாட்டுகள், சமூக ஊடக செயலிகள், மொபைல் செயலிகள் மூலம் சீனா இந்திய சமூகத்தில் தனது தாக்கத்தையும் செல்வாக்கையும் அதிகரித்து வருவதை மேலும் பல உதாரணங்கள் மூலம் அந்த ஆய்வறிக்கை அம்பலப்படுத்துகிறது.

தொழில்நுட்பத் துறையில்...

கம்ப்யூட்டர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் ஒரு நிறுவனம் மற்றொன்றைச் சார்ந்தே இருக்கின்றன; வளர்கின்றன. இந்தத் துறையில் 2015 முதலாகவே சீன அரசும் சீன நிறுவனங்களும் சுமார் 7 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளன; பல இந்திய நிறுவனங்களை முழுமையாக வாங்கி விட்டன; பல பெரிய நிறுவனங்களில் பெரும்பான்மை முதலீட்டாளர்களாக உள்ளன.

சீனாவின் ராட்சத தொழில்நுட்ப நிறுவனமான ‘ஹூவேய்’ தனது முதலீடுகளின் காரணமாக பல பெரிய இந்திய நிறுவனங்களில் கொள்கைகளையும் செயல்பாடுகளையும் தீர்மானிக்கும் நிலையில் உள்ளது. அந்நிறுவனம் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கையாளாக பலநாடுகளில் உளவு வேலை பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்து, சர்வதேச அளவில் அதற்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளதை யாவரும் அறிவர்.

அரசியல் களத்தில்...

ஒரு நாடு மற்றொரு நாட்டில் தன் செல்வாக்கை அதிகரிப்பதற்கு சுலபமான வழி, அதன் தலைவர்களை தன்வயமாக்குவது. இந்திய அரசியல் களத்தில் பன்னெடுங்காலமாக சீனா தனது தாக்கத்தைப் பெருக்கி உள்ளது.

இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐஎம்) அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. அக்கட்சி எப்போதும் சீனாவை எந்த விஷயத்திலும் விமர்சனம் செய்வதில்லை. சீனாவுக்குப் பணிந்து போகும் அக்கட்சி, இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கைகளை எதிர்த்து - குறிப்பாக சீனா தொடர்பான விஷயங்களில்- ஆவேசமாகக் கேள்வி எழுப்புகிறது. அமெரிக்காவின் நிர்பந்தத்துக்குப் பணிந்து போகிறது இந்திய அரசு என்று குற்றம் சாட்டுகிறது.

அரசியல் களத்தில் சீன ஊடுருவலுக்குச்   சான்றாக மார்க்சிஸ்டுகளின் மேற்சொன்ன செயல்பாடுகள் மட்டுமன்றி, அக்கட்சி பணமாகவும் இதர வகையிலும் சீனாவிடமிருந்து ஏராளமாகப் பெற்றுள்ளதற்கு ஆதாரங்கள் வெளிவந்துள்ளன.

அண்மையில் கொரானா தீநுண்மி தோற்றத்துக்கும் பரவலுக்கும் காரணம் சீனா என்று இந்திய ஊடகங்களும் அறிவியலாளர்களும் கூறியபோது, அவ்வாறு கூறியவர்களை மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் கடுமையாகச் சாடியதைக் கண்டோம்.

முடிவாக...

இந்த ஆய்வு நூலை, லா அண்ட் சொசைட்டி அலையன்ஸ் (Law and Society Alliance) களத்தில் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் தரவுகளைச் சேகரித்து, ஆராய்ந்து, தொகுத்து வெளியிட்டுள்ளது. எண்ணற்ற தளங்களின் மூலமாக சீனா இந்தியாவில் ஊடுருவி உள்ளதை தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது இந்த ஆய்வு நூல்.

சீனா இதுபோன்ற செயல்பாடுகளை, இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகளில் மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடுகளிலும் செயல்படுத்துகிறது.

அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற வளர்ந்த நாடுகள் கூட சீனாவின் செயல்பாடுகள் குறித்து எச்சரிக்கை அடைந்து, தங்கள் நாட்டில் சீனாவின் தாக்கத்தைத் தடுக்க, குறைக்க முறையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்தியாவில் உள்ள முக்கியமான துறைகளில் மறைமுகமாக தன் செல்வாக்கை அதிகரிக்கும் கம்யூனிச சீனா, வெளிப்படையாக ஓநாய்- போராளி என்ற தனது யுத்த- ராஜதந்திர நடவடிக்கைகளையும் தீவிரமாகப் பின்பற்றி வருகிறது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சதிகார யுத்திகளைப் புரிந்துகொள்வதும், அதற்கு எதிராக ஒன்றிணைந்து நிற்பதும், ஒட்டுமொத்த இந்தியர்களின் பொறுப்பு. இல்லையேல் அது ஒட்டுமொத்த இந்திய சமூகத்திற்கு பேராபத்தாக முடியும்.





No comments:

Post a Comment