பக்கங்கள்

மின்னிதழின் அங்கங்கள்

16/11/2021

ஜேம்ஸ் ஆலன் - சரித்திரச் சுருக்கம்

-வ.உ.சிதம்பரம் பிள்ளை


தமிழக விடுதலைப் போராட்ட வீரர்களுள் தலையாயவரான வ.உ.சிதம்பரம் பிள்ளை, கவிஞர், எழுத்தாளர், உரையாசிரியர், சுய முன்னேறப் பயிற்சியாளர், பதிப்பாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பல முகங்களைக் கொண்டவர் என்பது பலரும் அறியாதது.

மொழிபெயர்ப்புக் கலையில் அவர் அக்காலத்திலேயே சிறந்து விளங்கியுள்ளார். சுய முன்னேற்றம் தொடர்பான 4 ஆங்கில நூல்களை அவர் மொழிபெயர்த்துள்ளார். அவையனைத்தும்  ‘ஜேம்ஸ் ஆலன்’ என்பவரால் எழுதப்பட்டவை. இவை அனைத்துமே அறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடிய நூல்களாகும்.

மொழிபெயர்ப்புப் பணி அவ்வளவு எளிதானதல்ல. எளிதாகப் புரிந்து கொள்வதற்காக, சில வார்த்தைகளைச் சேர்த்தும் சில வார்த்தைகளைத் தவிர்த்தும் மொழிபெயர்த்துள்ளதாக வ.உ.சி.யே முன்னுரையில் கூறுகிறார்.
வ.உ.சி.யின் மொழிபெயர்ப்பு நிறைவானதாகவும் மதிப்பு மிக்கதாகவும் அவரது திறமையை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. கீழ்க்கண்ட 4ந்நூல்கள் அவர் மொழிபெயர்த்தவை

 

மனம் போல வாழ்வு-1909

ஜேம்ஸ் ஆலனின் ‘As a man Thinketh’ என்ற நூலை வ.உ.சி. ‘மனம் போல் வாழ்வு’ என்று மொழிபெயர்த்தார். மனிதர்களின் எண்ணங்களே அவர்களது வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன. எண்ணங்களே விதைகள். செயல்களே மலர்கள். இன்பங்களும் துன்பங்களும் கனிகள். எண்ணங்களே சொற்களாகவும் செயல்களாவும் பழக்கமாகவும் மாறுகின்றன. பழக்கமே ஒரு மனிதனின் ஒழுக்கமாக மாறுகிறது. (வ.உ.சி. நூல் திரட்டு / பக்க எண்: 615.)


அகமே புறம்- 1914

ஜேம்ஸ் ஆலனின் ‘Out from the heart’ என்ற நூலை வ.உ.சி. ‘அகமே புறம்’ என்று மொழிபெயர்த்தார். இந்நூல் மனோநிலைமையின் வலிமையை விளக்குகிறது. நம் மனம் அளவு கடந்த வலிமை உடையது. மனதால் ஒரு மனிதனை ஆக்கவும் முடியும். அழிக்கவும் முடியும். அதனால் மனிதன் நல்லவற்றைச் சிந்திக்கும்படி மனதைப் பழக்கப்படுத்த வேண்டும். அறச் செயல்களே செய்ய வேண்டும். நமது சொற்களைக் கட்டுப்படுத்த வேண்டும். நல்ல மன நிலையிலிருந்து சுகமும் தீய மன நிலையிலிருந்து துக்கமும் ஏற்படுகின்றன. நாம் அறிவுடையவர்களாக இருந்தால் தீய செயல்களைச் செய்யமாட்டோம். (வ.உ.சி. நூல் திரட்டு / பக்க எண்: 602.)


வலிமைக்கு மார்க்கம்- 1916

ஜேம்ஸ் ஆலன் எழுதிய ‘From Poverty to Power’ என்ற நூலின் முதல் பகுதி ‘The part of prosperity’ ஆகும். அதனை வ.உ.சி. ‘வலிமைக்கு மார்க்கம்’ என்று மொழிபெயர்த்தார். ஒவ்வொரு துன்பமும் ஒரு அனுபவத்தைக் கொடுத்துவிட்டு விரைவில் மறைந்துவிடுகிறது. ஆனால் அது ஒரு நல்ல ஆசிரியர். நாம் கற்றுக்கொள்ளத் தயாராக இருந்தால் அது நமக்கு நல்வழிகளைக் கற்பிக்கும். வலிமை என்பது மகிழ்ச்சி போன்று புற அனுபவம் இல்லை. அது ஓர் உள் அனுபவம். நாம் வாழ்க்கையில் வெற்றி பெற விரும்பினால் இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். நாம் நாமே எதையும் செய்யும் வலிமையுடையவர்களாக இருக்க வேண்டும். ஒருவன் தன்னைத் தானே கட்டுப்படுத்த முடிந்தால் அவனால் மற்றவர்களையும் கட்டுப்படுத்த முடியும். (வ.உ.சி. நூல் திரட்டு / பக்க எண்: 615; பக்க எண் 652-653.)

சாந்திக்கு மார்க்கம்- 1934

ஜேம்ஸ் ஆலன் எழுதிய ‘From Poverty to Power’ என்ற நூலின் இரண்டாம் பகுதி ‘The way to peace’ ஆகும். அதனை வ.உ.சி. ‘சாந்திக்கு மார்க்கம்’ என்று மொழிபெயர்த்தார். ஆத்ம தியானம் கடவுளை அடைவதற்குரிய வழியாகும். தியானமென்பது ஒரு கொள்கையை அல்லது ஒரு விஷயத்தை முற்றிலும் அறிய வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆழ்ந்து சிந்தித்தல் ஆகும். அன்பு எல்லாவற்றையும் ஆளக் கூடியது. அடக்கம் கடவுள் தன்மை ஆகும். எவன் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பொறுமையானவனாகவும், இனிமையானவனாகவும், அன்பானவனாகவும் மன்னிப்பவனாகவும் இருக்கிறானோ அவன் தான் மெய்ப்பொருளை உணர்கிறான். சுய நலத்தைத் துறத்தலும் இறை நம்பிக்கையும் கடவுள் தன்மையை அடைவதற்கு உரிய வழிகளாகும். அன்பே நிரந்தரமானது. (வ.உ.சி. நூல் திரட்டு / பக்க எண்: 715; 740; 760; 766.)

ஜேம்ஸ் ஆலன் எழுதிய ‘From Poverty to Power’ என்ற நூலின் முதல் பகுதியான ‘வலிமைக்கு மார்க்கம்’ நூலில், ஜேம்ஸ் ஆலன் குறித்த வ.உ.சி.யின் அறிமுக கட்டுரை இது…
-ஆசிரியர் குழு  

***
ஜேம்ஸ் ஆலன் - சரித்திரச் சுருக்கம்

ஜேம்ஸ் ஆலன் என்பவர் இங்கிலாந்து தேசத்தில் லீஸ்டர் என்னும் நகரத்தில் 1864-ஆம் வருஷம் நவம்பர் மாதம் 28-ஆம் தேதி பிறந்தார். அவர் இளமைப் பருவத்திலேயே கல்வியில் மிக்க அவாவுடையவர்; அடிக்கடி தனித்த இடத்திற்குச் சென்று நூல்களை வாசித்துச் சிந்தித்திருப்பவர்: அவர் தமது தந்தையாரிடம் ஜீவதத்துவங்களைப்பற்றி வினவுவர். அவரது தந்தையார் அவ்வினாக்களுக்கு விடைகள் கூற இயலாது தயங்குவர். அப்பொழுது அவரே தமது வினாக்களுக்கு விடைகள் கூறுவர். அவற்றைக் கேட்டு அவரது தந்தையார், “மகனே! இவ்வளவு அறிவு ஒரு பிறப்பில் கற்ற கல்வியால் வரத்தக்கதன்று; நீ முன் பல பிறப்புகளில் கற்றிருக்கின்றாய் போலும்” என்று கூறுவர்.

ஆலனது இளமைப் பருவத்தில் அவரது சரீரம் மிகத் துர்பலமாயிருந்தது. அப்படியிருந்தும் அவர் விஷயங்களை அதிகமாக ஆலோசனை செய்து ஆராய்ச்சி செய்வது வழக்கம். அதைப் பார்த்த பலர், “நீர் இவ்வளவு தூரம் ஆலோசனை செய்து ஆராய்ச்சி புரிவதால் உமது சரீரத்திற்குத் தீங்கு விளையக் கூடும்” என்று கூறுவதுண்டு. அவரது தந்தையாரும், “ஆலனே! நீ இவ்வளவு தூரம் உன் மனத்திற்கு வேலை கொடுப்பாயானால், நீ சீக்கிரம் மரணம் அடைவாய்” என்று பல முறை கூறினதுண்டு. இவரது இவ்வார்த்தைகள் பிற்காலத்தில் ஆலனது ஞாபகத்திற்கு வந்தபோதெல்லாம் அவர் புன்சிரிப்பாகச் சிரித்துக் கொள்வர்.

ஆலன் எதை எதை எந்த எந்த நேரத்திற் செய்ய வேண்டுமோ, அதை அதை அந்த அந்த நேரத்தில் தமது முழுமனத்தோடும் செய்து முடிப்பர். அவர் எதிலும் தமது மனத்தை அரைகுறையாகச் செலுத்துவதில்லை; எதையும் அறைகுறையாகச் செய்வதுமில்லை. அவர் எதைச் செய்தாலும் திருத்தமாகவும் பூர்த்தியாகவும் செய்வார். அரவது ஏகாக்கிரக சித்தமே அவர் அடைந்த உன்னதப் பதவிக்கெல்லாம் அடிப்படை. படித்தல், விளையாடல், உண்ணல், உறங்கல் முதலிய சகல செயல்களையும் அவர் கிரமமாகவும் ஒழுங்காகவும் செய்து முடிப்பர்.

அவர் வாலிபப் பருவத்தை அடைந்த பின்னர் தமது சிநேகிதரோடு நீண்ட தூரம் உலாவச் செல்வர். அவர் தமது மார்க்கத்தில் இயற்கைப் பொருள்களைப் பார்த்துக் களிப்புறுவர்; துஷ்டமிருகங்களையும் நெருங்கி, அவற்றின் குணாதிசயங்களைக் கவனித்து அவற்றினிடத்து அன்பு பாராட்டுவர். அத்துஷ்ட மிருகங்களும் அவரிடத்தில் நெருங்கி வந்து அவர் வார்த்தைக்குப் பணிந்து இணங்கி நிற்கும். அவருடைய பதினைந்தாவது வயதில் அவர் தந்தையாரின் ஐசுவரியமெல்லாம் போய் விட்டன. அவரது தந்தையார் தமது குடும்பத்தின் அன்ன வஸ்திராதிகளுக்குப் பணம் சம்பாதிக்கும் பொருட்டு அமெரிக்காவுக்குச் சென்றனர். அங்குப் போய்ச் சேர்ந்த இரண்டு தினங்களுள் நியூயார்க் நகர் ஆஸ்பத்திரியில் அவர் இறந்து போயினர். அவரிடமிருந்து நமது ஆலன் குடும்பத்திற்குக் கிடைத்த செல்வமெல்லாம்அவர் நெடுங்காலமாக வைத்திருந்த வெள்ளிக் கைக் கடிகாரம் ஒன்றே. அவரது மரணத்திற்குப் பின்னர் ஆலன் நாள்தோறும், பதினைந்து மணிநேரம் வேலை செய்து தமது தாயாரையும் தமது இரண்டு சகோதரரையும் பாதுகாத்து வந்தார். அக்காலத்தில் அவர் தினந்தோறும் மூன்று நான்கு மணி நேரம் நூல்களை வாசித்து வருவர். “கருமம்செய ஒருவன் கைதூவேன் என்னும், பெருமையிற்பீடுடையதில்” என்று நம் வள்ளுவர் கூறியதுபோல அவரும் “அதிகம் கஷ்டப்பட்டு வேலை செய்தல் அநேகம் பாஷைகளைக் கற்பதோ டொக்கும்” என்று அடிக்கடி கூறுவர்.

ஆலன் பதினேழாவது வயதில் ஆங்கில நாடகக் கவிசிரேஷ்டராகிய ஷேக்ஸ்பியரின் நாடக நூல்களைக் கற்கத் தொடங்கி, அவற்றில் பெரும் பாகங்களை மனப்பாடம் செய்து முடித்தார், அக்காலத்திலும் மற்றைக் காலத்திலும் அவரது லட்சியம் மெய்யுணர்தல் ஒன்றே. அவர் அதற்காகவே பல நூல்களைக் கற்றார், இவ்வுலகத்தில் மனிதர் அனுபவிக்கும் துன்பங்களே நரகமாகுமென்பதும், இன்பங்களே சுவர்க்கமாகுமென்பதும், இவ்வுலகத்திற்கு அந்நியமாகச் சுவர்க்க நரகங்கள் இல்லையென்பதும் அவரது துணிவு. அவர் ஒழுக்கத்தை ஓர் ஆபரணமாக எக்காலத்தும் கொண்டிருந்தார். அவர் ஜாதியில் ஆங்கிலேயராயிருந்தும் புலாலுண்ணல், மதுவுண்ணல், அந்நிய ஸ்திரீகளுடன் உலாவச் செல்லல் முதலிய கெட்ட பழக்கங்களை ஒருபோதும் கைகொண்டவரல்லர். அவர் வாக்கினின்று வரும் வார்த்தைகளெல்லாம் பொருள் நிறைந்தனவாயும் இன்பம் பயப்பனவாயும் இருக்கும். அவரைக் கண்ட தீயோரும் நல்லோராய் விடுவர். இதற்குப் பல சான்றுகள் உண்டு. அவற்றுள் ஒன்று;- அவர் ஒரு காலத்தில் வேலை பார்த்து வந்த ஓரிடத்தில் சதா காலமும் கெட்ட வார்த்தைகளைப் பேசிக் கொண்டிருந்த பல வேலைக்காரர்கள் அவர் அங்குப் போய்ச் சேர்ந்த சில நாட்களுள் அவ்வார்த்தைகளை அடியோடு நிறுத்தி விட்டார்கள்.

அவர் தமது இருபத்து நான்காம் வயதில், ‘ஆசிய தீபம்’ (The Light of Asia) என்னும் நூலை வாசித்தார். அந்நூலிருந்து அவருக்கு மெய்யுணர்வு உண்டாயிற்று. அது முதற்கொண்டு அவர் நமது நாட்டு நூல்களை மிகுதியாக வாசிக்கத் தொடங்கினர்ர். நமது நாட்டு நூல்களில் அவருக்கிருந்த விருப்பம் வேறு எந்த நாட்டு நூல்களிலும் இல்லை. அவர், “கீழ்நாட்டாரே மெய்ஞ்ஞானக் கருவூலம்” என்று அடிக்கடி கூறுவதுண்டு. அவர் வாக்கினின்று வந்த ஒவ்வொரு வார்த்தையிலும் நமது நாட்டு நீதியும் மதக் கோட்பாடும் கலந்திருக்கும். ஒழுக்கம் ஒன்றே மெய்யுணர்வுக்கும் மற்றைய சகல உயர்ந்த பதவிகளுக்கும் மார்க்கம் என்பது அவருடைய சித்தாந்தம். அதுபற்றி அவர் எஞ்ஞான்றும் ஒழுக்கத்தைத் தம் உயிரினும் அதிகமாக ஓம்பி வந்தார்.

அவர் தமது முப்பதாம் வயதில் லில்லி ஆலன் என்னும் ஓர் ஆங்கில மாதை மணம் புரிந்தார். அவ்வம்மையார் அவரது உடம்பு, மனம், ஆன்மா என்ற மூன்றிற்கும் ஓர் ஒப்பற்ற துணையாக அவரோடு கூடி வாழ்ந்து வந்தனர். அவரது முப்பதிரண்டாம் வயதில் அவருக்கு ஒரு பெண் பிறந்தாள். அவளுக்கு நோரா ஆலன் என்று பெயரிட்டனர். அவள் பிறந்த நாள், முதற்கொண்டு அவர் விஷய இச்சையை விட்டுவிட்டனர். அவர் காலை மூன்று மணிக்கு எழுந்திருந்து தியானத்தில் இருப்பர்; குன்றுகளின் மீது தனித்துச் சென்று ஆன்மா தத்துவங்களை சிந்திப்பர்; அவரை அடுத்தோர்களுக்கு ஆன்ம ஞானத்தை உபதேசிப்பர். “மனிதனது புற நிலைமைகளெல்லாம் அவனது அக நிலைமைகளிலிருந்தே வருகின்றன” என்பதும், “புற நிலைமைகைளத் திருத்த வேண்டும்” என்பதும் அவருடைய முக்கிய உபதேசங்கள்.

அவர் இயற்றியுள்ள பல நூல்கள் அவருடைய பெயர் இவ்வுலகில் என்றென்றும் நின்று நிலவும்படிக்கும் அவரது அறிவையும் ஆற்றலையும் சொல்வன்மையையும் எல்லாரும் புகழும்படிக்கும் செய்கின்றன. அவர், ‘புத்தி விளக்கம்’ (The Light of Reason) என்று ஒரு மாதாந்திரப் பத்திரிகை நடத்தி வந்தார். அதனை வேறொரு பெயருடன் அவரது மனைவியார் நடத்தி வந்தார்.

அவர் சரீர ஆரோக்கியம் குன்றிய காலத்தும் அவரது கடைசிக் காலத்தும், அவர் தமது தியானத்தையாவது, தெய்வ சிந்தனையையாவது, பரோபகார வேலையையாவது நிறுத்தியதுமில்லை; குறைத்ததுமில்லை. அவரது சரீர ஆரோக்கியத்தைக் கருதி அவரது மனைவியார் முதலியோர் அவரது வேலைகளைக் குறைக்கவேண்டுமென்று அவரிடத்திற் கூறிய பல சமயங்களிலும், “வேலை செய்வதற்காகவே யான் உடலோடு கூடிப்பிறந்தேன். வேலை செய்வதற்காகவே உடலோடு கூடி வாழ்கிறேன்; என் வேலை முடிந்தவுடனே இவ்வுடலை யான் விட்டுவிடுவேன்; நீங்கள் என் வேலையைத் தடுக்கவேண்டாம்” என்று கூறியிருக்கின்றனர். அவர் கடைசியாக 1912-ஆம் வருஷம் ஜனவரி மாதம் 12-ஆம் தேதி, “எனது வேலைகளையெல்லாம் செய்து முடித்து விட்டேன். யான் இது முதல் தந்தைபாற் செல்வதற்குச் சித்தமாகின்றேன்” என்று கூறித் தமது வேலைகளை விட்டு நீங்கித் தமது மனைவியார் முதலியோர் களிப்படையும்படி பல நல்ல காரியங்களைப்பற்றி அவருடன் சம்பாஷித்துக் கொண்டிருந்து, அம்மாதம் 24-ம் தேதி பரமபதம் அடைந்தார். அவரது சரீரம் நமது நாட்டு வழக்கப்படி காஷ்டத்தில் வைத்து எரிக்கப்பட்டது. அவரது ஆவி அறிவு வடிவமாக எங்கும் நிறைந்து விளங்குகிறது.

 

No comments:

Post a Comment