பக்கங்கள்

மின்னிதழின் அங்கங்கள்

16/11/2021

அரவிந்தர் கிறிஸ்தவரான கதை

 - திருநின்றவூர் இரவிக்குமார்

(அரவிந்தம்-150)

அரவிந்த மகரிஷியின் தந்தை கிருஷ்ண தன கோஷ்  ஒரு மருத்துவர். அவர் மருத்துவக் கல்லூரியில் படிக்கும்போதே ராஜ் நாராயண போஸ் என்பவரின் மகளான ஸ்வர்ணலதாவை திருமணம் செய்து கொண்டார். ராஜ் நாராயணன் பிரம்ம சமாஜத்தின் தலைவர்களில் ஒருவர்; மேற்கத்திய கலாச்சாரம் மற்றும் இந்தியப் பண்பாட்டின் சங்கமமாக இருந்தவர். மக்கள் அவரை ரிஷி ராஜ் நாராயணன் என்றே அழைத்தனர்.

கிருஷ்ண தன கோஷின் திருமணம் பிரம்ம சமாஜ முறையில் நடந்தது. இந்த முறையில் திருமணம் செய்வது என்பது அப்போது (இப்போதும்) வழக்கத்தில் இருந்த முறையிலிருந்து மாறுபட்டது. ஹோமம் வளர்ப்பது, அதை வலம் வருவது போன்ற சடங்குகள் கிடையாது. பிரம்ம சமாஜத்தின் தலைவர் ஒருவர் (ஆச்சார்யா என்று அவர் அழைக்கப்படுவார் ) மணமக்களின் வலது கரங்களை இணைத்து மல்லிகை மலர்ச் சரத்தால் கட்டிவிடுவார் . மணமக்களின்  அருகில் இருபுறமும் அவர்களின் பெற்றோர் இருப்பார்கள். மலர்ச்சரத்தால் இணைத்த பிறகு மணமக்கள் பெரியோர்களை விழுந்து வணங்குவார்கள். பிறகு அவர்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை நடைபெறும். திருமணம் (அரசு ஆவணங்களில்) பதிவு செய்யப்படும். மங்கல நாண் அணிவிப்பது நடக்கும். மொத்தச் சடங்கும் இவ்வளவுதான்.

பிரம்ம சமாஜம் 1828 ஆகஸ்ட் 20-ஆம் தேதி துவங்கப்பட்டது. ஹிந்து சமயத்தையும் ஹிந்து சமுக பழக்கவழக்கங்களையும் சீர்திருத்தம் செய்ய ஏற்படுத்தப்பட்ட இந்த அமைப்பு வேதத்தை ஏற்கவில்லை; இறைவனின் அவதாரங்களை ( அவதாரக் கொள்கை ) ஏற்கவில்லை; உருவ வழிபாட்டையும் பல கடவுள் கொள்கையையும் ஏற்கவில்லை. இந்து சமூகக் கட்டமைப்பான ஜாதி அமைப்பை அது ஏற்கவில்லை. வினைக் கொள்கை ( கர்மா ),  மறுபிறப்பு கொள்கைகளை ஏற்பதும் ஏற்காமல் இருப்பதும் சமாஜத்தின் உறுப்பினர்களின் விருப்பம் என்று சொல்லியது.

இறந்தவர்களைப் புதைப்பதோ  எரிப்பதோ அவரவர் விருப்பப்படிச் செய்யலாம். வெள்ளைத் துணியை சடலத்தின் மீது போர்த்தி, கட்டைகளின் மீது வைத்து எரிக்க வேண்டும். புதைப்பதாக  இருந்தால் சவப்பெட்டியில் வெள்ளை மெத்தை விரித்து அதன்மீது வெள்ளைத் துணியால் சடலத்தைச் சுற்றி வைத்து மூடி, புதைக்க வேண்டும். அதற்கான சடங்குகள் ஏதுமில்லை; புதைத்த பிறகும் சடங்குகள் இல்லை.

டாக்டர் கிருஷ்ண தன கோஷ் மருத்துவ மேற்படிப்புக்காக இங்கிலாந்து சென்றார். ஏற்கனவே இந்து சமயத்தின் மீது நன்மதிப்பு இல்லாமல் இருந்த அவர் இங்கிலாந்து சென்று வந்த பிறகு முற்றிலும் மாறி விட்டார். கருத்துக்களும் பழக்க வழக்கங்களும் முழுமையாக மாறிவிட்டன. ஆங்கில மோகம் கொண்டவராகவும் மேற்கத்திய நாகரிகத்தையும் கலாச்சாரத்தையும் மிகச் சிறந்தவை என போற்றுபவராகவும் நாஸ்திகராகவும் மாறி இருந்தார். 1891 இல் இந்தியாவுக்குத் திரும்பி வந்தபோது இதுதான் அவரது நிலை.

அரவிந்தர் 1892 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி அதிகாலை 4. 52 மணிக்குப் பிறந்தார். பெற்றோருக்கு அவர் மூன்றாவது குழந்தை. இரண்டு அண்ணன்கள்-  விநயபூசண், மன்மோகன்; சரோஜினி என்ற தங்கை; பரீந்தர் என்ற தம்பி என மொத்தம் ஐவர்.

அரசுப் பதிவேடுகள், பள்ளி , கல்லூரிப் பதிவுகளிலும் அரவிந்த் அக்ராய்ட் கோஷ் என்று அவரது பெயர் பதிவாகி உள்ளது. அக்ராய்ட் (Ackroyd) என்ற ஆங்கிலப் பெயர் அவர் கிறிஸ்தவர் ஆகி விட்டாரா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

அரவிந்தரின் பெயர் சூட்டு விழாவுக்கு டாக்டர் கிருஷ்ண தன கோஷின் நண்பர்கள் பலரும் வந்திருந்தனர். ஆங்கிலப் பித்தேறி இருந்த கிருஷ்ண தன கோஷ், நிகழ்ச்சிக்கு வந்திருந்த தனது நண்பரான மிஸ் அன்னெட் அக்ராய்ட் (Miss Annette Ackroyd ) என்ற பெண்மணியிடம் குழந்தைக்கு ஆங்கிலப் பெயர் சூட்டுமாறு கேட்டுக்கொண்டார். அந்தப் பெண்மணி தன் குடும்ப பெயரான அக்ராய்ட் என்பதை குழந்தைக்கு இரண்டாவது பெயராகச் சூட்டினார். இப்படி வந்ததுதான் அரவிந்த் அக்ராய்ட்  கோஷ்.

ஆனால் இங்கிலாந்திலிருந்து இந்தியா வரும் முன்ணமே அரவிந்தர் அந்தப் பெயரை விட்டுவிட்டார். பிறகு அவர் எந்த இடத்திலும்அக்ராய்ட் என்ற பெயரைப் பயன்படுத்தவில்லை.  ஹிந்து பிரகாஷ்பத்திரிகையில், அவர் கட்டுரை எழுதியபோது,  அரவிந்த கோஷ் என்றுதான் பதிப்பிட்டிருந்தது .

அவர் கிறிஸ்தவரா என்ற சந்தேகத்தை இங்கிலாந்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி ஏற்படுத்துகிறது. அது....

தன் பிள்ளைகளை இந்திய வாடையே இல்லாமல் வளர்க்க  நினைத்தார் டாக்டர் கிருஷ்ண தன கோஷ். தனது நண்பரான ரங்கபூரின் மாஜிஸ்திரேட் கிளேசியரின் மருமகனான  வில்லியம் ட்ரூவெட் என்ற பாதிரியாரிடம் அரவிந்தர்,  அவரது இரு அண்ணன்கள் என மூவரையும் இங்கிலாந்து சென்று நேரில் ஒப்படைத்தார். அப்படிச் சென்ற போது இங்கிலாந்தில்தான் அரவிந்தரின் தம்பி பரீந்தர் பிறந்தார். ஆவணங்களில் அவரது பெயர் இமானுவேல் கோஷ்.

கிருஷ்ண தன கோஷின் ஆங்கில மோகத்துக்கு இன்னொரு உதாரணம்

பாதிரியார் வில்லியம் ட்ரூவெட் குடும்பத்தினருக்கு ஆண்டுதோறும் 360 பவுன்ட் அனுப்ப அவர் ஒப்புக்கொண்டார். சரோஜினியும் பரீந்தரும்  இந்தியாவில் பெற்றோருடன் வளர்ந்தார்கள்.

பிள்ளைகள் மூவரும் இந்தியர்களுடன் பழகவும் இந்திய வாழ்க்கை முறையைப் பற்றி தெரிந்து கொள்ளவும் கூடாது என்று பாதிரியாரிடம் கூறிய டாக்டர் கிருஷ்ண தன கோஷ், மத விஷயங்களை பற்றி தன் பிள்ளைகள் வளர்ந்ததும் தாங்களே முடிவு செய்து கொள்ளட்டும் என்றும் கூறிவிட்டார். பாதிரியாரும் அதை ஏற்றுக்கொண்டார்.

இதனிடையே தான் பணிபுரிந்த சர்ச் நிர்வாகத்திற்கும் தனக்கும் ஏற்பட்ட கருத்து மோதலின் காரணமாக பாதிரி வில்லியம் ட்ரூவெட்  மனைவியுடன் ஆஸ்திரேலியா சென்று விட்டார். எனவே, கிருஷ்ண தன கோஷின் மூன்று பிள்ளைகளையும் தன் தாயார் திருமதி ட்ரூவெட்டிடம் விட்டுவிட்டுச் சென்றார். அந்தப் பெண்மணியோ  கிறிஸ்துவ சமயத்தில் மிகுந்த பற்று கொண்டவர். பிள்ளைகளை கிறிஸ்தவர்களாகி அவர்களது ஆன்மாவைக் காப்பாற்ற விரும்பினார். அவருக்கு வாய்ப்பும் கிடைத்துவிட்டது.

அதுபற்றி அரவிந்தரே கூறியிருப்பதைப் பார்ப்போம்:

 நாங்கள் இங்கிலாந்தில் இருந்தபோது ஒரு சமயம் ஆங்கில திருச்சபையின் கொள்கைகளை ஏற்காத (Non Conformist) மதகுருமார்களின் கூட்டம் கம்பர்லாந்தில்  (Cumberland) நடைபெற்றது. மூதாட்டி (திருமதி ட்ரூவெட்) என்னை அந்தக் கூட்டத்துக்கு அழைத்துச் சென்றார்.

பிரார்த்தனைகள் முடிந்து அநேகமாக எல்லோரும் போய் விட்டனர். அதிக மதப்பற்று கொண்ட சிலர் மட்டுமே மேலும் சிறிது நேரம் தங்கியிருந்தனர். அந்தச் சமயங்களில் தான் மதமாற்றம் நடப்பது வழக்கம்.

என் மனம் அப்போது அலுத்துப்போய் இருந்தது. அப்போது ஒரு பாதிரியார் என்னிடம் வந்து சில கேள்விகளைக் கேட்டார். நான் எந்தப் பதிலும் சொல்லவில்லை. உடனே அங்கிருந்த எல்லோரும் ‘அவன் ரட்சிக்கப்பட்டு விட்டான், அவன் ரட்சிக்கப்பட்டு விட்டான்’ என்று கத்தினார்கள். பிறகு எனக்காக ஜெபிக்கவும், நான் மனம் திரும்பி விட்டதற்காக கடவுளுக்கு நன்றி சொல்லவும் தொடங்கிவிட்டனர்.

அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. பிறகு பாதிரியார் என்னிடம் வந்து ஜபம் செய்யச் சொன்னார். எனக்கு பிரார்த்தனை செய்து பழக்கமில்லை. ஆனாலும் அவர்களுடைய மன திருப்திக்காக, குழந்தைகள் தூங்கப் போவதற்கு முன் ஏதோ ஒருவகை பிரார்த்தனை செய்வார்களே அதைப் போல செய்து வைத்தேன். நடந்தது அவ்வளவுதான். அதன் பிறகும் நான் சர்ச்சுக்கு போனதில்லை. அப்போது எனக்கு சுமார் பத்து வயது இருந்திருக்கும்”


-என்று கூறி உள்ளார்.

அந்த மூதாட்டியின்  மதவெறி வெளிப்பட்டது இன்னொரு சந்தர்ப்பத்தில். அவள் பிரார்த்தனை நேரத்தில் பைபிளில் இருந்து ஒரு பக்கத்தைப் படிக்க வேண்டுமென்றாள். பொதுவாக மூத்த பையனான  விநய பூஷண் தான் பிரார்த்தனை நேரத்தை முன்நின்று நடத்துவான். ஒருசமயம், அடுத்தவனான  மன்மோகன் ஏதோ மோசமான மனநிலையில் இருந்தான் போலிருக்கிறது,  கடைசியில் மோசஸுக்குக் கிடைத்தது பாலைவனம் தான் என்று சொல்லிவிட்டான்.

அந்த மூதாட்டிக்கு பயங்கரக் கோபம் வந்துவிட்டது. “நீங்கள் எல்லோரும்  நாஸ்திகர்கள். உங்களோடு நான் இருக்க மாட்டேன். (இந்தியாவில் இருந்து பணம் வருவதும் அப்போது குறைந்துவிட்டது ) உங்கள் தலையில் இந்த வீட்டுக் கூரை இடிந்து விழட்டும்என்று சாபமிட்டார். மூவரையும் நிராதரவாகக் கைவிட்டு, அவர் வெளியேறி, தன் உறவினர்களுடன் போய் சேர்ந்துகொண்டார்.

அரவிந்தர் யோக மார்க்கத்தில் பயணித்தபோது இறைவழிபாட்டில் ஈடுபட்டவர் அல்லர். துர்க்கை துதியை அவர் எழுதியிருந்தாலும், அது இறைவியைத் துதிப்பதற்காக  எழுதப்பட்டதல்ல; பாரத தேசம் விடுதலை பெற வேண்டும், அதற்கான சக்தியை பாரத மக்கள் பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக எழுதினார்.

அவர் வழிபடுவதற்காக கோயிலுக்குச் சென்றதில்லை; சடங்குகளைச் செய்தவர் அல்ல; மாறாக பகட்டான இறை பக்தியை கிண்டல் செய்தவர்.

காண்க: அன்பு மனைவிக்கு அரவிந்தரின் கடிதம் 

இறைசக்தியை அவர் நம்பினார் என்று சொல்வதைவிட அதை உணர்ந்தவர் என்பதுதான் சரியானது. அவர் அந்த சக்தியைப் பயன்படுத்தி பலருடைய பிரச்னைகளைத் தீர்த்து, அதன் இருப்பை நிரூபித்தார். அந்த சக்தியை மனிதர்கள் மீது இயக்குவதன் மூலம் மனித குலத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்குக் கொண்டு செல்வது என்பது அவருடைய  அதிமனம் என்ற கருத்தியல்.

1950 டிசம்பர் 5ஆம் நாள் அவர் உடலைத் துறந்தாலும், யோகசக்தி அந்த உடலில் தங்கி இருந்த காரணத்தால் அது சீக்கிரம் கெடவில்லை. எனவே டிசம்பர் ஒன்பதாம் தேதி தான் அந்த உடலை பள்ளிப்படுத்தினர்.

வெள்ளை பட்டுத் துணியில் அவரது உடல் போர்த்தப்பட்டது. பட்டு மெத்தை வைத்து தைக்கப்பட்ட பெட்டியில் உடலை வைத்தார்கள். கான்கிரீட் பள்ளத்தில் அந்தப் பெட்டியை இறக்கி, கான்கிரீட் பலகையால் அதை மூடினார்கள். அதன்மீது மண்ணைப் போட்டு மூடினார்கள்.

எந்தவிதமான பாடல்களோ, வேத கோஷங்களோ, பிரார்த்தனையோ அப்போது அங்கு -வேத ரிஷி மரபில் வந்தவருக்கு-  நடக்கவில்லை.  

பிரம்மத்தை அறிந்த ரிஷியின் உடலை நம் கண்களிலிருந்து மறைத்தது பிரம்ம சமாஜ முறையில் என்று கூற முடியும். அரசு விதிமுறைகளை மீறி அது ஆசிரம வளாகத்தில் இருந்த மரத்தடியில் நடந்தது. அதை மாடியில் இருந்து ஜன்னல் வழியாக ஸ்ரீ அன்னை பார்த்துக் கொண்டிருந்தார்.


காண்க: திருநின்றவூர் இரவிக்குமார்

No comments:

Post a Comment