16/08/2021

அன்பு மனைவிக்கு அரவிந்தரின் கடிதம்

-திருநின்றவூர் இரவிக்குமார்

(அரவிந்தம்- 150)

 

 “அவர் (அரவிந்தர்) தேசபக்த கவியாகவும் , தேசியத்தின் வருங்காலத்தை உணர்ந்து கூறிய தீர்க்கதரிசியாகவும், பாரத நாட்டின் மீது பேரன்பு கொண்டவராகவும் மதிக்கப்படுவார். அவர் இந்த உலகை விட்டு மறைந்த பல்லாண்டுகளுக்குப் பிறகும் அவரது பேச்சும் எழுத்தும் இந்த நாட்டில் மட்டுமல்ல கடல்கடந்த தேசங்களிலும் எதிரொலிக்கும்”
 
-சித்தரஞ்சன் தாஸ்

1893-இல் அரவிந்தர் இங்கிலாந்திலிருந்து பாரதம் வந்தார். பம்பாயில் வந்து இறங்கியவுடன் நேராக பரோடாவுக்குச் சென்று அந்த சமஸ்தானத்தின் நிர்வாக அதிகாரி ஆனார். சில காலம் கழித்து அங்கு உள்ள கல்லூரியில் பேராசிரியராகச் சேர்ந்தார்.

பாரதம் வந்த உடனேயே அவருக்கு இங்குள்ள அரசியல் நிலை முழுமையாகப் புரிந்தது. காங்கிரஸ் சில மிதவாத தலைவர்களின் பிடியில் இருந்தது. பெரிய, பரந்த பாரத சமுதாயத்திற்கு காங்கிரஸ் என்ற சிறு அமைப்பின் வழிகாட்டுதலும் பங்களிப்பும் போதுமானதாக இல்லை. ஆங்கில அரசுக்கு எதிராக அது எழுப்பிய குரல் வலிமையற்றதாகவும் அற்பமானதாகவும் இருந்தது. எனவே புதிய தலைமையை உருவாக்கவும், சமுதாயம் முழுமையையும் ஒருங்கிணைத்து போராடவும் தயார்ப்படுத்த வேண்டி இருந்தது.

அப்போது பம்பாயில் இருந்து வெளிவந்த ‘ஹிந்து பிரகாஷ்’ (ஹிந்து பேரொளி) என்ற பத்திரிகையில் ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்ற தலைப்பில் அரவிந்தர் தொடர்ந்து கட்டுரைகள் எழுதினார். அதில் காங்கிரசை கடுமையாகத் தாக்கி எழுதினார்.

 “காங்கிரஸின் நோக்கங்கள் தவறானவை. அதை நிறைவேற்றுவதில் கூட அவர்களுக்கு நேர்மையோ, முழுமையான ஈடுபாடோ இல்லை. அதன் தலைவர்களாக இருப்பவர்கள் முற்றிலும் தகுதியற்றவர்கள். குருடனால் குருடர்களை வழிநடத்த முடியாது. குறைந்தபட்சம் ஒற்றைக்கண் இருப்பவராவது வேண்டும்.”

-என்று அரவிந்தர் எழுதினார். 

சாய்வு நாற்காலிகளில் அமர்ந்து கொண்டு அரசியலைப் பற்றி ஓயாமல் பேசி பொழுதைக் கழித்த காங்கிரஸ் தலைவர்களுக்கு கோபம் ஏற்பட்டது. இது எதிர்பார்க்கக் கூடியதே. அப்போது காங்கிரசின் முன்னணித் தலைவராக இருந்த திரு. மகா கோவிந்த ரானடே பத்திரிகை அதிபர்களிடம் கூறி அரவிந்தரின் கட்டுரைகளை நிறுத்திவிட்டார்.

தாயையும் தம்பி தங்கையையும் பார்க்க அவ்வப்போது  கொல்கத்தா சென்று வந்தார் அரவிந்தர். 1901-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் இருந்த பூபால சந்திர போஸ் என்பவரின் மகளான மிருணாளினியை திருமணம் செய்து கொண்டார். அவள் அமைதியான, அழகான பெண். பொறுமையே வடிவெடுத்தவள் என்று அவளைத் தெரிந்தவர்கள் கூறியுள்ளனர்.

அரவிந்தருடன் அவளது திருமண வாழ்வு சிறிது காலம்தான் நீடித்தது. 1906-இல் அரவிந்தர் பரோடாவை விட்டு கொல்கத்தாவுக்கு வந்தார். 1908-இல் அலிப்பூர் சதி வழக்கில் கைது செய்யப்பட்டார். ஓராண்டு சிறையில் இருந்து, பின் விடுதலையானார். 1910-இல் யோக வாழ்க்கையை மேற்கொள்ள பாண்டிச்சேரி சென்றுவிட்டார். அவர்களது திருமண வாழ்வு இனிமையாக இருந்தது என்று சொல்ல முடியவில்லை. 

மனைவி மிருணாளினியுடன்
அரவிந்த கோஷ்

அரவிந்தர் இங்கிலாந்திலிருந்து பாரதம் வந்ததிலிருந்தே தீவிரமான கருத்துகளுடன் அரசியலில் ஈடுபட்டார். அதே வேளையில் யோக மார்க்கத்திலும் இணையாகப் பயணித்து வந்தார். மிருணாளினி நல்லவளாக , அழகியாக இருந்த போதிலும் சாதாரணப் பெண். அவருக்கு அறிவிலும் ஆன்மிகத்திலும் இணையானவள் இல்லை. இதனை பரோடாவில் இருந்து கொல்கத்தாவில் இருந்த தன் மனைவி மிருணாளினிக்கு அரவிந்தர் எழுதிய கடிதம் தெளிவாக்குகிறது. அது மட்டுமன்றி அவரது சிந்தனைகளையும் செயல்களையும் விளக்குகிறது.

1905 ஆகஸ்ட் 30 தேதியிட்ட கடிதத்தில் அரவிந்தர் எழுதுகிறார்:

 “விதிவசத்தால் ஒரு வித்தியாசமான மனிதனுடன் நீ திருமண உறவால் பிணைக்கப்பட்டு உள்ளாய். இது இந்நேரம் உனக்கு தெரிந்திருக்கும். என்னுடைய கருத்துக்கள், நோக்கங்கள், மனநிலை, செயல்கள், ஆகியவையெல்லாம் சமுதாயத்தில் சகஜமாக காணப்படுபவற்றில் இருந்து வேறுபட்டு இருக்கின்றன...

இப்படிப்பட்டவர்களை மக்கள் ‘பைத்தியம்’ என்று கூறுவார்கள். ஆனால் அப்படி பைத்தியம் பிடித்த ஒருவன் தன் லட்சியத்தில் வெற்றி பெற்று விட்டால் அவனை ‘மகான்’ என்று கொண்டாடுவார்கள். என்னுடைய முயற்சிகளில் இன்னும் வெற்றி கிட்டவில்லை. எனவே மக்கள் என்னை ‘பித்தன்’ என்று கூறுவார்கள். இப்படிப் பட்டவனை கணவனாகக் கொண்டவளுக்கு கஷ்டங்கள்தான் வரும்...

எனக்கு மூன்று பைத்தியங்கள் உள்ளன.

முதலாவது, இறைவன் எனக்களித்த அறிவாற்றல், நற்குணங்கள், உயர்கல்வி, செல்வம் ஆகியவை எல்லாம் அவனுக்கே உரியது. குடும்பம் நடத்துவதற்கு இன்றியமையாத தேவை எவ்வளவோ அதை மட்டுமே செலவு செய்ய எனக்கு உரிமை உண்டு. மீதம் எல்லாம் இறைவனுக்கே கொடுத்துவிட வேண்டும். தேவையைவிட அதிகமாக என் சுகவாழ்வுக்காகச் செலவிட்டால் திருடனாகக் கருதப்படுவேன். இதுவரை ஒரு சிறு பகுதிதான் இறைபணிக்கு அளித்துள்ளேன். சுமார் தொண்ணூறு சதவீதம் எனக்காகவும் குடும்பத்துக்காகவும் செலவிட்டு உள்ளேன்...

என் தங்கை சரோஜினிக்கோ உஷாவுக்கோ நான் கொடுத்த பணத்திற்காக வருந்தியதில்லை. தன்னைச் சார்ந்து இருப்பவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது பெரிய அறமாகும். ஆனால் சகோதர சகோதரிகளுக்கும், உறவினர்களுக்கும் அளிப்பதாலேயே கணக்குத் தீர்ந்து விடாது. இந்த பாரத நாட்டில் என்னுடன் பிறந்தவர்கள் முப்பது கோடி பேர்கள் உள்ளனர். அவர்களில் பலர் உணவின்றி பட்டினியால் சாகின்றனர். பலர் நோயினால் துன்பத்தில் வாடுகின்றனர். அவர்களுக்கு உதவி செய்வது என் கடமை...

என்னுடைய தர்மத்தில் பங்கெடுத்துக் கொள்ளும் தர்ம பத்தினியாக இருக்க நீ தயாரா? சாதாரண மக்களைப் போல உண்டும் உடுத்தும் சாவது கேவலமானது. இன்றியமையாததை மட்டும் வாங்கி மற்றதை மற்றவர்களுக்கு கொடுக்கும் இறைபணியைச் செய்வோம். இதுவே என் விருப்பம். நீயும் இதற்கு உடன்பட்டு தியாகம் செய்வாயானால் என் லட்சியம் எளிதில் நிறைவேறும்...

‘நான் வாழ்க்கையில் முன்னேறவில்லை’ என்று அடிக்கடி நீ புலம்பியுள்ளாய். முன்னேறுவதற்கு உரிய வழியை நான் உனக்குக் காட்டியுள்ளேன். அதை நீ ஏற்று கடைபிடிப்பாயா?...”

-இந்த இடத்தில் பரோடாவில் அரவிந்தருடன் நெருங்கிப் பழகியவரும், வங்கமொழி இலக்கியவாதியுமான திரு . துவிஜேந்திர குமார் ராய் எழுதியுள்ளது கவனிக்கத்தக்கது.

 “அரவிந்தர் தனது உணவு, தூக்கம் பற்றி அக்கறையற்று அலட்சியமாகவே இருந்தார். இரவில் தன்னைச் சூழ்ந்த கொசுக் கூட்டங்களை மறந்து வெகுநேரம் எழுதுவதிலும் படிப்பதிலும் யோக சாதனைகளில் ஈடுபடுபவராகவும் இருந்தார்...

ராஜாவுக்கு (கெய்க்வாட்) அரவிந்தரைப் பிடித்திருந்தது. அவருடன் பேசுவதையும் தன்னுடைய ஆவணங்கள் மற்றும் சொற்பொழிவுகளைத் தயாரிப்பதிலும் அரவிந்தரின் ஆலோசனைகளைப் பெறுவதையும் விரும்பினார். ஆனால் அரவிந்தர் ராஜா கூப்பிட்ட எல்லாத் தருணங்களிலும் போக மாட்டார். அதேபோல ராஜா நடத்தும் விருந்துகளிலும் கலந்து கொள்வதை அதிகம் விரும்பவில்லை. சமூகத்தில் முக்கியஸ்தர்களிடையே தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதிலும் ஆர்வம் காட்டவில்லை. நல்ல பண்புகளும் அறிவும் இருந்தும் ஏன் இதை செய்வதில்லை என்று கேட்டேன். இதில் எந்த மகிழ்ச்சியும் எனக்கு ஏற்படவில்லை. எனவே ஈடுபாடு இல்லை, என்று பதிலளித்தார்...

அவர் தனியாக இருந்த வேளைகளிலும் கூட பெண்ணின்பத்தைத் தேடியதில்லை. அப்படி ஒரு விஷயம் இருப்பதே தெரியாமல் இருந்தார். தவறான வழியில் ஒரு காசு கூட அவர் செலவழித்தது இல்லை. ஆனாலும் மாதக் கடைசியில் அவரிடம் ஒன்றும் இருக்காது”

-என்று ராய் பதிவு செய்துள்ளார்.

அப்படிப்பட்டவரிடம் சாதாரண விருப்பு- வெறுப்புகளைக் கொண்ட மிருணாளினியின் புலம்பல்கள் எடுபடுமா? மாறாக அவளை தன் வழிக்கு வருமாறும், தான் உதவி செய்வதாகவும் அவருடைய அடுத்து பித்து பற்றி எழுதும்போது குறிப்பிடுகிறார்.

 “என்னுடைய இரண்டாவது பைத்தியம்- இறை அனுபவத்தைப் பெறுவது. இக்காலத்தில் எடுத்ததற்கெல்லாம் கடவுள் பெயரைச் சொல்வது, உலகறிய பிரார்த்தனை செய்வது, பகட்டாக பக்தி செய்வதையே மக்கள் ஆன்மிகம் என்று கருதுகிறார்கள். எனக்கு அது வேண்டாம்...

இறைவன் இருப்பது உண்மையானால், அவனை அடைவதற்கு வழி இருக்க வேண்டும். அது எவ்வளவு கடினமானதாகவும் ஆபத்துக்கள் கொண்டதாகவும் இருந்தாலும் அதில் பயணிக்க நான் உறுதியாக உள்ளேன். நம்முடைய சமய நூல்கள் அந்த வழியையும் அதற்கான விதிமுறைகளையும் சொல்லி இருக்கின்றன. நான் அவற்றை ஏற்று, பின்பற்றி அதில் உண்மை உள்ளதைக் கண்டு கொண்டுள்ளேன். அவை கூறும் சில விஷயங்கள் எனக்கு அனுபவம் ஆகியுள்ளன...

அவ்வழியிலே உன்னையும் அழைத்துச் செல்ல விரும்புகிறேன். அதற்குத் தேவையான ஞானம் உன்னிடம் இல்லை. எனவே எனக்குச் சமமாக உன்னால் வர முடியாது. ஆனால் என்னைப் பின்தொடர்ந்து வருவது கடினமாக இருக்காது. உனக்கு சில சித்திகள் கிடைக்கும். அவையெல்லாம் உன்னுடைய ஆர்வத்தைப் பொருத்தே இருக்கிறது. எவரும் உன்னைக் கட்டாயப்படுத்தி இழுத்துச் செல்ல முடியாது. நீ என்னைப் பின்பற்றி ஆன்மிகப் பாதையில் வர சம்மதம் தெரிவித்தால் உனக்கு அதுபற்றி மேலும் விரிவாக எழுதுகிறேன்”.

அரவிந்தர் வழி காட்டுகிறேன், உதவி செய்கிறேன் என்று வெளிப்படையாகச் சொன்னார். ஆனால் அவரது மனைவியால் அவரைப் பின்பற்ற முடியவில்லை. மாறாக, பிரெஞ்சு நாட்டுக்காரர் ஒருவரின் மனைவியான பிரெஞ்சுப் பெண்மணி அரவிந்தரின் மகிமையைப் புரிந்து கொண்டு அவரைப் பின்பற்றினார். ஒரு கட்டத்தில் அவருக்கு இணையாக பயணிக்கத் தொடங்கினார். அவர்தான் மிர்ரா அல்பாசா என்ற பெயர் கொண்ட பாண்டிச்சேரி அன்னை. அரவிந்தரும் அன்னையும் சேர்ந்து பல பெண்களையும் அவர்கள் மூலம் அவர்களது குடும்பத்தையும் கரையேற்றியுள்ளனர்.

மூன்றாவது பித்து என்று அரவிந்தர் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது- இன்று மிகவும் தேவைப்படுகின்ற ஒன்று.

 “என்னுடைய மூன்றாவது பைத்தியம் இது: பலர் பாரத நாட்டை மலைகள், சமவெளிகள், வயல்கள், ஆறுகள், பள்ளத்தாக்குகள் அடங்கிய,  உயிரற்ற, வெறும் நிலப்பரப்பாகக் கருதுகின்றனர். நானோ பாரத நாட்டை அன்னையாகக் கருதி வழிபடுகிறேன். அன்னையின் மீது ஒரு அரக்கன் அமர்ந்து ரத்தத்தைக் குடிப்பதை, கண்டும் காணாமலும் அவள் மகன் தன் மனைவி பிள்ளைகளுடன் சுகமாக காலம் கழிப்பானா? அன்னையை காப்பாற்ற ஒரு வழியைத் தேடுவான் இல்லையா? அடிமைப்பட்டுக் கிடக்கும் இந்த நாட்டைக் காப்பாற்றும் வல்லமை எனக்குண்டு...

எனக்கு உடல் வலிமை இல்லை. வாளையோ, துப்பாக்கியையோ ஏந்தி நான் போரிடப் போவதில்லை. என் அறிவின் வலிமையை கொண்டு போரிடப் போகிறேன். படை பலத்தையும் ஆயுத பலத்தையும் தவிர வேறு பலம் இல்லை என்று நினைக்க வேண்டாம். அறிவை அடிப்படையாகக் கொண்ட ஆத்மசக்தி ஒன்று உண்டு. இதை புதிய விஷயம் என்று நினைக்க வேண்டாம். இது இயற்கையிலேயே என்னுள் ஊறி ஆழ்ந்து பதிந்து இருக்கின்ற ஒன்று. இவ்விஷயத்தில் எனக்கு அசைக்க முடியாத உறுதி ஏற்பட்டுள்ளது”.

பாரத நாட்டை வெறும் நிலப்பரப்பாக நினைத்தது காங்கிரஸ். இந்த எண்ணம் சீனா நம்நாட்டு நிலப்பரப்பை ஆக்கிரமித்த போது, அப்போதைய பிரதமர் நேரு,  “அது புல் கூட முளைக்காத பூமி. அதற்காகக் கவலைப்பட வேண்டாம்”  என்று நாடாளுமன்றத்தில் சொல்லியதில் மிக வெளிப்படையாகத் தெரிந்தது. பாரதத் திருநாட்டை அன்னை என்கிறார் அரவிந்தர்; சக்தியின் வடிவம் என்று வழிபடுகிறார் அரவிந்தர். 1894-இல் தேசம், தேசியம் பற்றிய காங்கிரசின் கருத்தியல் வறுமையை அரவிந்தர் சுட்டிக்காட்டி ‘ஹிந்து பிரகாஷ்’ பத்திரிகையில் எழுதியது எவ்வளவு தீர்க்க தரிசனமானது!

காங்கிரஸைப் பொருத்த வரையில், தேச விடுதலை என்பது ஒரு அரசியல் செயல்பாடு. ஆங்கிலேயர்களை அகற்றிவிட்டு அந்த இடத்தில் தாங்கள் அமர்வதுதான் காங்கிரஸ் தலைவர்களின் திட்டம். தாங்கள் உடனே பதவியில் அமர்வதற்காக தேசப் பிரிவினைக்கு ஒப்புக்கொண்டார்கள். ஆனால் எதற்காக பாரதம் சுதந்திரம் அடையவேண்டும் என்ற கேள்விக்கு அரவிந்தர் சொன்ன பதிலைப் பாருங்கள்:

 “மனிதகுலத்தின் அடுத்தகட்ட முன்னேற்றம் என்பது வெறும் பொருளாதார வளர்ச்சி, தொழில் நுட்ப வளர்ச்சி என்பதாக இருக்க முடியாது. மனிதகுலத்தின் அடுத்தகட்டப் பாய்ச்சல் ஆன்மிகத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும். உலகிற்கு அறத்தையும் ஆன்மிகத்தையும் தரவல்ல ஒரே நாடு பாரதம் தான். அதற்காக அது சுதந்திரம் அடைய வேண்டும். அரசியல் நலத்திற்காகவோ, பொருளாதார வளத்திற்காகவோ அல்ல. சுதந்திரமான மக்களாக இருந்தால் மட்டுமே உலக மக்களின் ஆன்மிக, அறவாழ்வுக்கு உழைக்க முடியும். அதற்காகத் தான் நமக்கு சுயராஜ்ஜியம் வேண்டும்”.

1947 ஆகஸ்ட் 15ஆம் நாள் அவர் விடுத்த அறிக்கையில், இந்தப் பிரிவினை போக வேண்டும். எந்தவிதத்திலாவது, எந்த வழியிலாவது இந்தப் பிரிவினை நீங்கி ஒற்றுமை (அகண்ட பாரதம்) ஏற்படவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.





No comments:

Post a Comment