16/08/2021

திருமுருகாற்றுப்படை காட்டும் திருமுருகன்

-சுந்தர்ராஜசோழன்



திருமுருகாற்றுப்படையில் ‘தெய்வானை’ என்ற பாத்திரமே இல்லை என்பதாக, முகநூலில் ஒரு பதிவைப் பார்த்தேன். அதன் விளைவே இந்தக் கட்டுரை...

திராவிட இனவாதம், தமிழ்த் தேசியம் பேசுபவர்களுக்கு தமிழின் அடிப்படையோடு பரிச்சயம் கிடையாது என்பதில் எனக்கு இருவேறு கருத்தே கிடையாது. என் குடும்பம் தொடங்கி நண்பர்கள், புதியவர்கள் என எல்லாத் தரப்பிலும் விரவிக் கிடக்கிறார்கள். எனக்கு பரிச்சயமான இவர்கள் ஒருவருக்கும் கூட எந்தத் தமிழ் மூல நூலோடும் அறிமுகம் இருந்ததில்லை.

இவர்களுடைய வாழ்நாள் எப்படி கழியும் என்றால், யாரோ ஒருவரின் மேடைப்பேச்சும், மேற்கோளும்தான். 

ஆய்வு என்பது, பலவற்றைக் கற்றவன் செய்ய வேண்டியது; ஆனால் இங்கே அதை ஒரு தற்குறி செய்கிறான். அதுதான் பிரச்னை.

தமிழிலக்கியத்தை ஆராய முதலில் சம்ஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும். ஏனென்றால், நமது இலக்கியங்கள் மகாபாரதம் துவங்கி, பல வடமொழி இலக்கிய மேற்கோள்களை விரவி வைத்துள்ளன தனக்குள்ளன.  வடமொழி இலக்கியங்களை ஆய்வு செய்பவனுக்கும் இந்திய மொழிகள் தெரிந்திருக்க வேண்டும். குறிப்பாக தமிழ். ஏனென்றால் அவற்றின் நீட்சி இங்கே உள்ளது.

ஆனால், தமிழ்நாட்டில் ‘மைக்’ பிடித்துவிட்டால் மானுடவியல், மொழியியல் அறிஞர்தான் எல்லோரும். திராவிடத்தால் ஏற்பட்ட மிகப் பெரிய கலாச்சாரச் சீரழிவுகளில் தலையாயது இதுதான் என்னை பொருத்த வரை. நிற்க.

திருமுருகாற்றுப்படையில் தெய்வானை இல்லை, சிவனுக்கு முருகன் மகனே இல்லை. இவையெல்லாம் ஆரியத்திணிப்பு என்பதுதான் திராவிட இனவாதம், தமிழ்த் தேசியம் பேசுபவர்களின் வாதம். அவற்றைப் பற்றி இங்கு பார்ப்போம்.

--------------------------------------------------------------------------------------------------------------------

பாம்பு பட புடைக்கும் பல் வரி கொடும் சிறை
புள் அணி நீள் கொடி செல்வனும் வெள் ஏறு
வல வயின் உயரிய பலர் புகழ் திணி தோள்
உமை அமர்ந்து விளங்கும் இமையா மு கண்
மூவெயில் முருக்கிய முரண் மிகு செல்வனும்
நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து நூறு பல்
வேள்வி முற்றிய வென்று அடு கொற்றத்து
ஈரிரண்டு ஏந்திய மருப்பின் எழில் நடை
தாழ் பெரும் தட கை உயர்த்த யானை
எருத்தம் ஏறிய திரு கிளர் செல்வனும்
 
(திருமுருகாற்றுப்படை 150- 159)

பொருள்: 

பாம்புகள் அழியும்படி அதை அடிக்கும் பல வரிகளிருக்கும் சிறகினையுடைய கருடக் கொடியினையுடைய திருமாலும்...

தூய வெண் காளையை வலப்பக்கத்தே வெற்றிக்கொடியாக உயர்த்தியவரும், பலரும் புகழ்கின்ற திண்ணிய தோள்களுடன், உமாதேவியை ஒரு பக்கம் இருத்தியவரும், இமையாத மூன்று கண்களையும் உடைய,
முப்புரத்தை எரித்த, வலிமையான ருத்ரனான சிவனும்...

ஆயிரம் கண்களையும், நூற்றுக்கணக்கான பலதரப்பட்ட வேள்விகளை செய்து முடித்த வெற்றியினையும் உடையனாய் ஐராவதத்தில் அமர்ந்திருக்கும் இந்திரனும்...

- மேலே உள்ள இந்த மூன்று கடவுளர்களோடு இணைந்து நாற்பெரும் தெய்வமாக நகரத்தில் முருகனும் நிறுவப்படுவதாக, நக்கீரர் சொல்கிறார். ஆக இந்தத் தெய்வங்கள் அத்தனையும் தமிழ் நகரங்களில் தமிழர்களால் வழிபடப்பட்டது என்பது உறுதி.

--------------------------------------------------------------------------------------------------------------------

அடுத்தது...

நெடும் பெரும் சிமையத்து நீல பைம் சுனை
ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப
அறுவர் பயந்த ஆறு அமர் செல்வ
ஆல் கெழு கடவுள் புதல்வ மால் வரை
மலைமகள் மகனே மாற்றோர் கூற்றே
வெற்றி வெல் போர் கொற்றவை சிறுவ
இழை அணி சிறப்பின் பழையோள் குழவி
வானோர் வணங்கு வில் தானை தலைவ

(திருமுருகாற்றுப்படை 253 -  260)
பொருள்:

இமயமலையில், நீலம் பூத்திருக்கும் சுனையாகிய சரவண பொய்கையில்,
ஐவருள் ஒருவராகிய அக்னி தன் உள்ளங்கையில் ஏற்றுக்கொள்ள,
முருகன் பிறந்தான். ஆறு கார்த்திகைப் பெண்களும் அவனைப் பெற்ற ஆறு தாய்மார் ஆயினர்.

அங்கு எழுந்தருளியுள்ள கடவுளாகிய ஆலமர் செல்வனாகிய சிவபெருமானின் புதல்வனே! மலைமகளின் மைந்தனே! பகைவர்களின் கூற்றுவனே! வெற்றி தரும் கொற்றவையின் சிறுவனே! அணிச் சிறப்பினைக் கொண்ட பழையோளின் குழந்தையே! வானோர் வணங்கும் விற்படையின் தலைவனே!

-அதாவது, முருகனின் பிறப்பைப் பற்றிய புராணங்கள் சொல்வது-  சிவபெருமான் மன்மதனை எரித்த அந்த ஆறு தீப்பொறிகள் சரவண பொய்கைக்கு அக்னி பகவானால் கொண்டு செல்லப்பட்டன‌. அங்கு அந்த ஆறு தீப்பொறிகளும் அழகிய ஆறு குழந்தைகளாக வடிவம் பெற்றிருந்தன. அந்த ஆறு குழந்தைகளும் ஆறு கார்த்திகைப் பெண்களின் பராமரிப்பில் வளர்க்கப்பட்டன என்பதே. அதையே மேற்கண்ட பாடலில் நக்கீரரும் சொல்கிறார்.

-இப்படியெல்லாம் முருகன் யாரென்று நக்கீரரே தெளிவாகச் சொல்லிவிட்டார். முருகன் சிவனின் மைந்தன், பார்வதியின் மகனென்று அட்சர சுத்தமாக சொன்னதோடுல்லாமல் கொற்றவை வேறு உமையவள் வேறு என்பதையும் அடித்து நொறுக்கிவிட்டார்.

--------------------------------------------------------------------------------------------------------------------

சூரனை வென்றழித்த பிறகு திருப்பரங்குன்றத்தில் இந்திரன் மகள் தெய்வயானையை மணமுடித்து வைத்தார்கள் முருகப் பெருமானுக்கு என்பதுதான் புராணம். திருமுருக்காற்றுப்படை திருப்பரங்குன்றத்தில் இருந்தே துவங்குகிறது.

அதில் நேரடியாக தெய்வயானையை குறிப்பிடவில்லை என்றாலும்,  “மறு இல் கற்பின் வாணுதல் கணவன்” என்கிறார். அதாவது, மாசற்ற கற்பினையும் ஒளி பொருந்திய நெற்றியையும் உடையவளின் கணவன் என்று முருகப் பெருமானைக் குறிப்பிடுகிறார்.

எல்லோருமே இதை ஏன் வள்ளியோடு இணைக்கக் கூடாது? அவளுக்கு கற்பில்லையா? என்கிறார்கள். இவர்களுக்கு தமிழறிவும் கிடையாது; புராண அறிவும் கிடையாது என்பதை நிறுவிட முடியும். தொல்காப்பிய விதியைக் கவனியுங்கள்...

கற்பெனப்படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபிற் கிழவன், கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே.

(தொல்காப்பியம்- கற்பியல்- 140)

முறைப்படி கன்னிகாதானம் அதாவது மகட்கொடையைச் செய்து கொடுத்து நடக்கும் திருமணத்தையே ‘கற்பு மணம்’ என்று வரையறுக்கிறார்கள்.

காமப் புணர்ச்சியும் இடந்தலைப் படலும்
பாங்கோடு தழாலும் தோழியிற் புணர்வுமென்று
ஆங்கநால் வகையினும் அடைந்த சார்போடு
மறையென மொழிதல் மறையோர் ஆறே.

(தொல்காப்பியம்- செய்யுளியல்- 178)

மணம் ஒத்த இரு திறத்தார் பெற்றோர் சம்மதமின்றிக் கூடுவதையே ‘களவு மணம்' என்று வரையறுக்கிறது தொல்காப்பியம். இப்படி சிலவகைப்பட்ட மண முறைகள் தெளிவாகவே பாரத தத்துவத்தில் உதித்தது. அதையே தொல்காப்பியரும் சொல்கிறார். ஆக கற்பு என்பதை வெறுமனே பலபேரிடம் காதல் கொள்ளாமை என்று மட்டும் சுருக்கிப் பார்க்க முடியாது. களவு மணமும் ஒழுக்கத்தின் அடிப்படையில் நிகழ்வதே.

இப்படி முருகனுக்கு தெய்வானையோடு நடந்தது கற்பு மணம். சூரனை அழித்ததால் தேவர்களின் தலைவன் இந்திரன் மகட்கொடைக்குரியவனாக ஆகி தெய்வானையை கற்புமணம் செய்து வைக்கிறான். வள்ளியோடு முருகனுக்கு நடந்தது களவு- காதல் மணமாகும். அதனால்தான் தன் ஆசை முகத்தில் ஒன்றை வள்ளியோடு பகிர்ந்துகொள்வதாக நக்கீரர் சொல்கிறார்.

--------------------------------------------------------------------------------------------------------------------

அடுத்தது, இந்திரன் மருதநில திணை தெய்வம். அவனுடைய மகள் தெய்வானையை குறிஞ்சி நிலத்தலைவன் முருகனுக்கு மணமுடித்து வைப்பதில் எப்படி வரும் ஆரியத் திணிப்பு? புரியவில்லை.

முருகனின் ஆறு முகத்தில் ஒன்றை பற்றி நக்கீரர் சொல்கிறார்.

ஒரு முகம்
மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே 

(திருமுருகாற்றுப்படை 95- 96)

வேத விதியின்படி சம்பிரதாயம் பிறழாமல் நடக்கும் அந்தணர்களுடைய வேள்வி சிறக்க வைக்கும் ஒரு முகம் என்கிறார். ‘ஸ்தோம ரட்சகன்’ என்ற வேள்விக்காவலன் என்றே நக்கீரரும் சொல்கிறார். ‘அந்தண்மறை வேள்வி காவற்கார’ என்று அருணகிரிநாதன் சொன்னதும் இதைத்தான்.

திருமுருகாற்றுப்படையில் நக்கீரரே முருகனின் ஒரு முகம் வேத வேள்வியைப் போற்றும் முகம் என்று சொன்ன பிறகு ஆரியத்திணிப்பு என்று பேசுவதெல்லாம் என்ன வாதம்?

சிவன்- பார்வதியின் புத்திரனே முருக ப்பெருமான். அவரை வளர்த்தது ஆறு கார்த்திகைப் பெண்கள். அவர்  ‘சூர் மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி
போர் மிகு பொருந குருசில்’ அதாவது, சூரபத்மனின் குலத்தை சர்வநாசமாக்கிய வலிமையுடைய, போர்வெறி பெற்ற தலைவன் என்று எல்லோரும் போற்றும் விதம் சூரசம்ஹாரம் செய்தவரே முருகன். இதுதான் நக்கீரரின் திருமுருகாற்றுப்படை சொல்வது.

எனவே, நாத்திகம் - வேத எதிர்ப்பு - சம்ஸ்கிருத எதிர்ப்பு - ஹிந்து வெறுப்பு இது போலப் பேச மொத்தமாக ஏற்கனவே ஈ.வெ.ரா. என்பவர் ஒரு கடையைத் திறந்து வைத்துள்ளாரே? அந்தக் கடையிலேயே நீங்கள் வியாபாரம் செய்தால் என்ன? தயவு செய்து தமிழையும், ஹிந்துக்களையும் விட்டுவிடுங்கள்-  புண்ணியமாகப் போகும்.



No comments:

Post a Comment