16/08/2021

சிவாவின் ஆன்மா அமைதி பெறுமா?

-முத்துவிஜயன்

பாப்பாரப்பட்டியில் திறக்கப்பட்டுள்ள
பாரத மாதா திருவுருவச் சிலை


சுதந்திரப் போராட்ட வீரரும் நெல்லைப் புரட்சியின் மும்மூர்த்திகளுள் ஒருவருமான ‘வீரமுரசு’ சுப்பிரமணிய சிவாவின் கனவு, பாரத அன்னைக்கு ஒரு கோயில் அமைக்க வேண்டும் என்பது. அந்தக் கனவு, அவரது நினைவிடத்தில் தமிழக அரசால் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. ஆனால், அந்தக் கனவு முழுமையாகப் பூர்த்தியாகவில்லை.

தியாகசீலர் சிவாவின் அருங்கனவான பாரத மாதா ஆலயத்தின் பின்புலத்தை அறிய, நாம் சுமார் நூறாண்டுகளுக்கு முந்தைய காலப்பயணம் மேற்கொள்ள வேண்டும்.
 
தியாகசீலர் சுப்பிரமணியசிவா

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவில் 1884 அக். 4-இல் பிறந்து, தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் 1925 ஜூலை 23-இல் மறைந்த சுப்பிரமணிய சிவாவின் வாழ்வே வேள்வி போன்றது. இளம் வயதிலேயே சுதந்திரப் போராட்டக் காலத்தில் ஊர் ஊராகச் சென்று சுதந்திரப் பிரசாரம் செய்த சிவா, துத்துக்குடியில் வ.உ.சிதம்பரம் பிள்ளையைச் சந்தித்ததே பெரும் மாற்றத்துக்கு வித்திட்டது. பிறகு மகாகவி பாரதியும் இவர்களுடன் இணைந்தார். இம்மூவரும் நெல்லை வட்டாரத்தில் சுதந்திரப் போராட்டம் உக்கிரமடையக் காரணமாகினர்.

1906 - சுதேசி கப்பல் இயக்கம், 1908 - நெல்லை கோரல் மில் தொழிலாளர்கள் போராட்டம் ஆகியவற்றைத் தொடர்ந்து, ராஜதுரோக வழக்கில் வ.உ.சி, சுப்பிரமணிய சிவா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அப்போது 1908 மார்ச் 12, 1908 முதல் 1912 நவ. 2 வரை சுப்பிரமணிய சிவா சிறைவாசம் அனுபவித்தார்.

விடுதலைக்குப் பிறகு, ‘ஞானபாநு’, ‘பிரபஞ்சமித்திரன்’ ஆகிய பத்திரிகைகளை நடத்தினார். அரசுக்கு எதிரான அவரது தொடர் செயல்பாடுகளால் 1921-இல் மீண்டும் ராஜதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். திருச்சி சிறையில் தொழுநோயாளிகளுடன் அடைக்கப்பட்ட சிவாவுக்கும் நோய் தொற்றியது. அவரது உடல்நிலை மோசமானதால் விடுவிக்கப்பட்டார். அச்சமயத்தில், 1921 நவ. 17 முதல் 1922 ஜன. 22 வரை சிறைவாசம் அனுபவித்தார்.

சிறையில் இருந்து விடுதலையான சுப்பிரமணிய சிவாவை தர்மபுரியைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் தீர்த்தகிரி முதலியார் தன்னுடன் அழைத்துவந்தார். தனது வாழ்நாள் இன்னும் சில காலமே என்று உணர்ந்த சுப்பிரமணிய சிவா, அதற்குள் பாரத அன்னைக்கு ஒரு கோயிலை அமைக்க வேண்டும் என்று விரும்பினார். அதற்காக, தீர்த்தகிரியாரின் நண்பரும் மற்றொரு சுதந்திரப் போராட்ட வீரருமான சின்னமுத்து முதலியாரின் நிதியுதவியுடன் பாப்பாரப்பட்டியில் 1923-இல் 6 ஏக்கர் நிலத்தை வாங்கினார். அந்த இடத்துக்கு ‘பாரதபுரம்’ என்று பெயரும் சூட்டினார்.

பாரத அன்னைக்கு கோயில் அமைப்பதற்காக தர்மபுரி, சேலம், கோவை போன்ற இடங்களுக்கு நடந்தே சென்று நன்கொடை வசூலித்தார். பிறகு, தான் வாங்கிய இடத்திலேயே வங்க சுதந்திரப் போராட்ட வீரரும் நேதாஜியின் குருவுமான சித்தரஞ்சன் தாஸைக் கொண்டு, பாரதமாதா ஆலயம் அமைக்க அடிக்கல் நாட்டினார். ஆயினும், கோயில் பணிகள் துவங்குவதற்கு முன், உடல்நலக் குறைவால் 1925-இல் இவ்வுலகை நீத்தார் சுப்பிரமணிய சிவா.

பாப்பாரப்பட்டியிலுள்ள சிவா மணிமண்டபம்

சுப்பிரமணிய சிவாவின் கனவு, பாப்பாரப்பட்டியில் பாரத அன்னைக்கு அழகியதொரு ஆலயம் அமைப்பது மட்டுமல்ல; ஜாதி, மத, மொழி வேறுபாடின்றி இந்திய மக்கள் அனைவரும் அங்கு குழுமி பாரத அன்னையை வழிபட வேண்டும் என்பதும் தான். மகாகவி பாரதி ‘பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி’யில் பாடியது போல, “தொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கு இங்குன் தொண்டர் பல்லாயிரம் சூழ்ந்து நிற்கின்றோம்” என்று பாடிப் பரவசம் அடைவதே சிவாவின் இறுதி விருப்பம். பாரத அன்னை மீதான பக்தியே நம்மிடையே உள்ள வேற்றுமைகளை அகற்றும் என்பதே அவரது இதயத் துடிப்பு.

இப்போது, இந்தக் கனவின் ஒரு பகுதி நிறைவேறி இருக்கிறது. சுப்பிரமணிய சிவாவின் பூத உடல், அவர் வாங்கிய பாப்பாரப்பட்டி-பாரதபுரம் நிலத்திலேயே நித்திரை கொண்டிருக்கிறது. அந்த இடத்தில், 2011ஆம் ஆண்டு சுப்பிரமணிய சிவா நினைவு மணிமண்டபம், மறைந்த முதல்வர் மு.கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டது.

முந்தைய அதிமுக ஆட்சியின்போது, தியாகசீலர் சிவாவின் கனவை நனவாக்க, 3 ஆண்டுகளுக்கு முன்னர் பாரத மாதா ஆலயத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. தமிழக அரசின் செய்தித் துறை சார்பில் ரூ. 1.50 கோடி மதிப்பீட்டில் பாரத மாதா ஆலயம், பாரத மாதா திருவுருவச் சிலை, நூலகம் ஆகியவை அமைக்கத் திட்டமிடப்பட்டது. அதன்படி பணிகள் நடந்துவந்த நிலையில், கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் பணிகள் முடங்கின. இல்லாவிடில், இப்பணிகள் ஓராண்டுக்கு முன்னமே நிறைவுற்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டிருக்கும்.

இப்போது பணிகள் முடிவடைந்த நிலையில், ‘பாரத மாதா நினைவாலயம்’ என்ற பெயரில் இந்தக் கட்டுமானம் திறக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆக. 1 ஆம் தேதி அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இதனத் திறந்து வைத்திருக்கிறார். அதாவது, சிவாவின் கனவான பாரத மாதா கோயிலுக்குப் பதிலாக ஒரு நினைவாலயம் திறக்கப்பட்டிருக்கிறது. இங்கு வழிபாடுகள் நடத்த ஏற்பாடுகள் ஏதும் இல்லை.

வாழும் மனிதர்கள் மறையும்போது அமைப்பதே நினைவாலயம் எனப்படும் ‘மெம்மோரியல்’. காலம் கடந்த, என்றும் இளமை குன்றாத பாரத அன்னைக்கு அமைக்கப்பட்ட திருக்கோயிலை ‘நினைவாலயம்’ என்று அழைக்க வேண்டிய கட்டாயம் என்ன? இங்குதான் திராவிட இயக்கப் பின்னணி கொண்ட திமுக அரசின் உள்நோக்கத்தை சந்தேகப்பட வேண்டியிருக்கிறது. இந்த அரசுக்கு பாரத அன்னை ஆலயத்தைத் திறக்க விருப்பமில்லை; ஆனால் கட்டப்பட்டுவிட்ட ஆலயத்தைத் திறக்காமலும் இருக்க முடியாது என்பதால், வேண்டா வெறுப்பாக திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.

திறக்கப்பட்டுள்ள பாரத மாதா  ‘நினைவாலயம்’
  
அதிமுக ஆட்சி தொடர்ந்திருந்தால், தமிழக முதல்வரே இந்தத் திறப்பு விழாவில் கலந்துகொண்டிருந்திருப்பார். அனேகமாக பாரதப் பிரதமரும் கூட அழைக்கப்பட்டிருக்கலாம். ஆனால், பாரத மாதா ஆலய திறப்பு விழாவை அவசரக் கோலத்தில், யாரும் அறியாத வகையில் நிகழ்த்தி இருக்கிறது இப்போதைய திமுக அரசு.

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தால்தானே அவர்களுக்கு அதன் வலியும் ரணமும் தெரியும்? சுதந்திரப் போராட்டத்தை எதிர்த்த நீதிக்கட்சியின் வழித்தோன்றல்களிடம், பாரத அன்னைக்கு திருக்கோயில் அமைப்பதன் பெருமிதத்தைக் காண முடியாதது வியப்பல்ல. எனவேதான், தமிழக முதல்வர் தர்மபுரி வருகைக்கு முன்னதாக, அவசரகதியில் செய்தித் துறை அமைச்சர் மூலம் திறக்கப்பட்டிருக்கிறது - ‘நினைவாலயம்’ என்று பெயர் சூட்டப்பட்ட திருக்கோயில். அரைக்கிணறு தாண்டுவதும் ஆபத்தானது தான் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டி இருக்கிறது.

எனவே, விடுதலைவீரர், ‘ஞானபானு’ சுப்பிரமணிய சிவாவின் கனவை முழுமையாக நிறைவேற்றும் வகையில், தமிழக அரசால் பாப்பாரப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள கட்டுமானத்தை பாரத அன்னைக்கான பூரண திருக்கோயிலாக்க தேசபக்தர்கள் முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் உத்தம தேசாபிமானியான சுப்பிரமணிய சிவாவின் ஆன்மா அமைதி பெறும்.


இது சாதாரண சிலையல்ல...
அமைச்சர் ‘போஸ்’ கொடுக்க!


காண்க: 









No comments:

Post a Comment